வெள்ளி, 18 செப்டம்பர், 2015

சூப்பர் கடுதாசி....

வலைப்பதிவர் திருவிழா-2015புதுக்கோட்டை- நிகழ்ச்சியில் நடைபெறும் கட்டுரை போட்டிக்கான  பதிவு 

போட்டி பிரிவு: சுற்றுச் சூழல் விழிப்புணர்வு 


எங்க ஊர்ல மாபெரும் பணக்காரங்ககிட்டதான் மழைக்கோட்டு இருக்கும்.. இத வச்சிருக்கும்  அந்த மாபெரும் பணக்கார வீட்டு படிச்ச  புள்ளைங்க அத  "ரெயின் கோட்டு " என்று சொல்வதே பெரிய ஆச்சர்யமா இருக்கும் .  பணக்காரங்க  வீட்ல தான் குடை இருக்கும்... அந்த வீட்டு வயசான மனுஷங்களோட பாதுகாப்புல நீளமா கருப்பு துணில வளைஞ்ச கைப்புடியோட இருக்கும்.. விரிச்சு புடிச்சா மூணு ஆளு நனையாம போவலாம் 


அப்போ எல்லாம் மழை பெய்யுறப்போ  மாட்ட அவுத்து கொட்டாயில கட்டவோ, கோழி கொடப்பு மூடவோ நமக்கெல்லாம் சணல்  சாக்குதான்... சமயத்துல வயலுக்கு யூரியா வாங்கிட்டு வந்த வெள்ள சாக்கு.. அந்த சாக்க தலைகீழா திருப்பி ஒரு முக்கத்த அப்படியே உள்ள அமுக்கி மறு முக்கத்துக்குள்ள நுழச்சுட்டா இப்போ அது பாதி சாக்கு மாதிரி ஆயிடும்.... அந்த பாதி சாக்க தலைல கவுத்துகிட்டா குடை ரெடியாயிடும்...


அதுலயும் எங்க  நடைய்யா இருக்காரே... தென்னங்கீத்துலையே ஒரு பெரிய  படப்பு செய்வாரு .. அது ஒரு தொன்னை மாதிரி  ஒருபக்கம் நீளமாவும் மேல் பக்கம் வளைவாவும் இருக்கும்.. கட்டைலேயே செஞ்ச செருப்பு  இருக்கும்.. அத மிரிலி கட்டை ன்னு சொல்லுவோம் எங்க ஊர்ல.. அந்த மிரிலி கட்டைல துளை அடிச்சிருக்கும்.. அதுல பனை நாருல  காது கட்டி வச்சிருப்பாரு.. அது ரெண்டையும் பொக்கிஷம் மாதிரி வச்சிருப்பாரு...மழை காலத்துல அந்த கீத்து படப்ப தலைல மாட்டிகிட்டு மிரிலி கட்டைய கால்ல மாட்டிகிட்டு வயலுக்கு போனா காத்து மழை, சேத்து புண்ணு  எல்லாத்துல இருந்தும் பாதுகாத்துக்கலாம்...


அந்த மாதிரி சமயத்துலதான் மதுக்கூரு  மரைக்காயர் கடைல சூப்பர் கடுதாசிய செவப்பு பச்சை மஞ்ச ஊதான்னு கலர்கலரா தொங்க விட்டு வித்தாங்க.பாக்க நல்ல அழகா.. இருக்கும்... அப்படியே கைக்குள்ள அடங்கற மாதிரி மடிச்சு அழகா எடுத்துட்டு போலாம்...


அப்போ வயலுக்கு நடவு நட போற  பொம்பளைங்க எல்லாம் ஆளுக்கொரு சணல் சாக்கோ வெள்ள சாக்கோதான் எடுத்துட்டு போவாங்க... அவங்களுக்காகவே வந்துச்சு இந்த கலர்கலரா வந்த சூப்பர் கடுதாசி.. இத ஊரு வழக்குல மழை காயிதம்னு சொல்லுவாங்க 


பெரட்டாசி(புரட்டாசி ) வந்தாலே மானம் முனுமுனுன்னு தூற  ஆரம்பிச்சிடும்..  வெய்யிலுக்கு கூட செத்த நேரம் வீட்டுல சாயலாம்.. மழைல ஓஞ்சு உக்கார முடியுமா... அப்போ ஒக்காந்துட்டா குடும்பமேல்ல ஒக்காந்துடும்...மழையோட மழையா நட்டாத்தான் ஆச்சு..


நடவுக்கு வார சனமெல்லாம் ஆளுக்கு ஒண்ணா தலைல மாட்டிகிட்டு வரும்.. "ஏ  பொன்னம்மா... அடியே ராக்கு... ஏட்டி நாழியாச்சு வாங்கடி...."  கூப்பிடுவா கங்காணி பொம்பள.. (கங்காணி - கண்காணிப்பாளர்- சூபர்வைசர்) கங்காணித்தான் அந்த குழு தலைவி... அவருக்கு கங்காணி சம்பளம் ரெண்டு ரூபா கூடுதலா கிடைக்கும்...


இன்னாருக்கு நடவு நட இத்தன ஆள் போங்கன்னு ஆள் பிரிச்சு விடறதும்.. சம்பளத்த வேளாமூட்டுவல்ல ( வேளாமூடு- வேளாண்மை  செய்பவர் வீடு  ) வாங்கி பங்கு பிரிச்சு தறதும் அவரோட வேலை... இந்த மேனேசுமெண்டு சோலி  பாக்குறதால  அவரு கொஞ்சம் வெரப்பாத்தான் இருப்பார்..


"ஏ .. பொன்னம்மா..." ன்னு கூப்புடுறப்போ அந்த அதிகாரம் கொஞ்சம் தெரியும்.. ஆளுக்கொரு மழைக்காகிதத்த தலைல கவுத்துகிட்டு ஒரு வாழ நாரையோ.. சணல் கயித்தையோ சுத்தி இடுப்போட சேத்து கட்டிபுட்டா  அந்திக்கு வீட்டுல வந்து அவுக்கலாம்.. அப்படியே இருக்கும்...


அதுக்கு பொறவு.. எல்லாத்துலையும் கொஞ்சம் கொஞ்சமா வந்துட்டு சூப்பர கடுதாசி... தாழ மட்டைல கூடு மாதிரி பின்னி இருக்க உமல் பொட்டி எடுத்துகிட்டுதான் சந்தைக்கு மீனு வாங்க போவாங்க... துணிக்கடைல கொடுக்குற மஞ்ச பை எடுத்துகிட்டுதான் சந்தைக்கு சாமான் வாங்க போவாங்க...இப்போ எல்லாம் காச மட்டும் எடுத்துகிட்டு கைய வீசிக்கிட்டு  கடத்தெருவுக்கு போனா அங்க இருந்து கேரிபேக்குலையே எல்லாத்தையும் வாங்கிகிட்டு வீட்டுக்கு வந்துடலாம்...கொஞ்சம் கொஞ்சமா எல்லாத்துலையும் நொழஞ்சிடுச்சு இந்த சூப்பர் கடுதாசி... 


நம்ம ஊருபக்கம் எதுக்காக மொதல்ல நொழஞ்சுச்சோ அந்த சூப்பர் கடுதாசி.. அந்த காரணமெல்லாம் காணாம போச்சு.. ஆனா சூப்பர் கடுதாசி மட்டும் தங்கிடிச்சு..இப்போ விவசாயம் பண்ண ஆள் இல்ல.. வேலை செய்ய கூலி ஆள் கிடைக்கல... மழை சரியான நேரத்துல பெய்யிரதில்ல ..   அடுத்த தலைமொறைல பொறந்த புள்ளைங்க எல்லாம் சேத்துல மட்டுமில்ல.. நாங்க சோத்துல கூட கைவைக்க மாட்டோம்னு என்னமோ பீசாவாமே.. அதையும் கே எப்பு சியையும் கரண்டில சாப்பிடுற நாகரிகத்த கத்துகிட்டாங்க...வயக்காடெல்லாம் தருசுக்காடா கெடக்கு..

ஆனா மழைக்காகிதமா உள்ள வந்த சூப்பரு கடுதாசி மட்டும்.. அந்த தரிசுலயும் கெடக்கு.. ரோட்டுலயும் கெடக்கு.. வீட்டுல கண்ட இடமெல்லாம் கெடக்கு..ஏ பொன்னம்மான்னு அடுத்த தெருவுல இருக்குற பொன்னம்மாவ சத்தம் போட்டு நடவுக்கு கூப்புட்டவங்க இப்போ  குனு குனுன்னு செல்லுல பேச தொடங்கிட்டாங்க..

அப்போ  எல்லாம் அழகா  பூ  பூவா  பின்னின  வயர் கூடை வச்சிருப்பாங்க.. கட-கன்னிக்கு போகனும்னா  அந்த கூடையத்தான் எடுத்துட்டு  போவாங்க.. அஞ்சாறு வருஷம் ஒரே கூடை பைதான்... மீன் வாங்கன்னு  தாழம் ஓலைல பின்னின  ஒரு பை வச்சிருப்பாங்க...அதுக்கு உமலு பொட்டின்னு பேரு..அதை எடுத்துகிட்டுதான்  மீன் வாங்க  போவாங்க... ஆட்டுக்கறி வாங்கினா  பச்சையா  வெட்டி வெயில்ல வதங்க போட்ட பனை மட்டை ல கட்டி தருவாங்க... 

ஆனா இப்போ  ஜனங்க என்ன வாங்க போனாலும் காசும், செல்போனும்  மட்டும் இருந்தா போதும்னு முடிவுபண்ணிட்டாங்க ... உமல் பொட்டி எடுத்துகிட்டு  மீன் வாங்க  போனா  கடைக்காரன் வேற்று கிரகத்துல  இருந்த வந்தவன  பார்க்கிற மாதிரி பார்க்கிறான்... காய்கறிக்கடைக்கு பை எடுத்துகிட்டு காய்கறி வாங்க  போனா   எங்க பக்கத்து  ஊரான லண்டன்ல (அட... அந்த எலிசபெத் ராணி  இருப்பாங்களே... அதே லண்டன்தான்) இருந்து காய்கறி வாங்க வந்தவன் நம்மள நக்கலா  பார்க்கிறான்..

மீன் வாங்கிட்டு வர வச்சிருந்த உமலு பொட்டியோ , கறி கட்டி வாங்கிட்டு வந்த பனை ஓலையோ கொஞ்ச நாள்லயே  கரையான் அரிச்சோ, மக்கியோ மண்ணோட மண்ணா  போய்டும்... ஆனா  பத்து வருஷத்துக்கு முன்னாடி வாங்கின பிளாஸ்டிக் கேரி பேக்கும், பிளாஸ்டிக் கொடமும்  இன்னமும் மக்காம அப்படியே கெடக்கு..

காய்கறி கழிவுகளையும், மாட்டு சாணத்தையும், வைக்கோலையும் போட்டு நிரப்பி இருந்த குப்பைக்குழில  இப்போ கலரு கலரா  கேரிபேக்குதான்  கெடக்கு... குப்பை குழில  தூண்டில் பொட்டு மீனு புடிக்க ஏரிக்கு போக குப்பை குழில மம்பட்டி எடுத்து ஒரு கொட்டு வெட்டினா  மம்புழுவா (மண்புழு) நெளியும்... இப்போ  மம்புழுவை பார்க்கிறதே  அரிதாகிப்போச்சு...

உமலு பொட்டிய  காணோம்..
முதலியார் ஜவளி கடைல கொடுக்கிற  மஞ்ச துணிப்பைய காணோம்..
பனை ஓலைய  காணோம்..
விசிறி மட்டைய  காணோம்..
மிரிலி கட்டைய  காணோம்..
கொடலை மட்டைய  காணோம்..
மண்புழுவ காணோம்... 
பாப்பா பூச்சிய  காணோம்..

இப்படி எத்தனை எத்தனை காணோம்கள்... ஆனா அத்தனையோட  இடத்துலயும் ஒரே ஒரு விஷயம் தான் நீக்கமற நிறைஞ்சி கெடக்கு..
எங்க  பாத்தாலும்  எதுல  பாத்தாலும்  கலரு கலரா  பிளாஸ்டிக் தான் தெரியுது..


ரோட்டுல காலைல அவுத்து விட்டா மேயப்போற மாடுங்க ரோட்டுல சாணி போட்டு வைச்சு அத கால்ல மிதிச்சுடோம்னு ஓடிப்போய் கழுவுன புள்ளைங்க நவீனமா கொண்டு வந்த சூப்பரு கடுதாசி மச்சும் போவாம மண்ணாவும் போவாம எங்க பாத்தாலும் கலர் கலரா எறஞ்சு கிடக்கு...

இயற்கையா  கிடைச்ச பொருட்களை  தினசரி உபயோகத்துக்கு  தேவையான பொருட்களா  மாற்றி  இயற்கையோடு இணைஞ்சு வாழ்ந்த  மக்களை.. நாகரீகம்னு நம்பவச்சு  மனித லுலத்தையும் இயற்கையையும் சீரழிக்கிற பிளாஸ்டிக் எமன பயன்படுத்த வச்சுட்டாங்க... அப்பாவி ஜனங்களும் அதோட அழிக்கும் சக்தி தெரியாம பயன்படுத்திகிட்டிருக்காங்க.. அதாவது  தன்னோட  விரலால  தன்னோட  கண்ண குத்திகிட்ட்டிருகாங்க.....

 சூப்பருன்னு பேரூ வச்சாலே நம்மூரு சனத்தோட மனசுல ஒட்டிக்கிடலாம்.. ஆனா சூப்பருன்னு பேருவச்ச எதாலையும் நமக்கு ஒரு புண்ணியமும் இல்ல...


மரைக்காயர் கடைல கலர் கலரா தொங்கவிட்டப்போ இருந்த ஆசை இல்ல இப்போ எல்லாம்.. அந்த கலார எங்க பாத்தாலும் பத்திகிட்டு வருது.... 






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக