சனி, 20 ஜூன், 2015

மக்களை திசை திருப்பும் யுக்தி- 100 நாள் வேலை

எங்க ஊர் கலுங்கடில (ஏரியின் வடிகால் பகுதிக்கு கலுங்கு என்று பெயர்) நாங்க தூண்டில் போட்டு மீன் பிடிக்க போவோம்... கொஞ்சம் ஆழமான பகுதிகள்ல தான் பெரிய மீன் இருக்கும்... மேல் பகுதியில கெண்டைகுஞ்சுகளும் புருட்டி மீனுமா சுத்திகிட்டிருக்கும்.... தூண்டில் முள்ளுல மண் புழுவ கோர்த்து வீசினா அந்த தூண்டில் முள் கீழ போறதுக்கு முன்னாடியே இந்த கெண்டை குஞ்சுகளும் புருட்டி மீனும் அந்த புழுவ கடிச்சு சாப்பிட்டுடும்.... ரொம்ப சின்ன குஞ்சுகளா இருக்கறதால தூண்டில்லையும் இந்த குஞ்சுங்க மாட்டாது... பெரிய தொல்லை பண்ணும்...

அப்போ கொஞ்சம் மண்புழுவ எடுத்து கொஞ்சம் தூரமா தண்ணில வீசினா அந்த குஞ்சு குலுவானெல்லாம் அத கடிக்க ஓடும்... அந்த நேரத்துல தூண்டில் முள்ள தண்ணில போட்டுட்டா அது நீரோட அடிப்பகுதிக்கு, பெரிய மீன்கள் இருக்க பகுதிக்கு போயிடும்... அப்புறம் என்ன... பெரிய மீனு புழுவ தின்ன வரும்... நெட்டி முழுந்தினா இழுத்துட வேண்டியது தான்....

100௦௦ நாள் வேலை அதுதான்.... இந்த குஞ்சு மீனுங்களுக்கு புழுவ போட்டு திசை திருப்பி பெரிய மீனபுடிச்சது மாதிரி... ஜனங்க வாங்கற சம்பளத்துக்கு ஒழுங்கா வேலை செய்ரதில்லன்னு தெரிஞ்சும் அரசாங்கம் தலைக்கு 12௦ ரூபா கொடுக்குதுன்னா சும்மா இல்ல..... உங்கள இப்போதைக்கு திசை திருப்பி பெரிசா எதையோ ஆட்டைய போட போறானுங்க... 
காக்காணி அரக்காணி வச்சிருக்கவனை எல்லாம் தண்ணி கொடுக்காம, உரம் கொடுக்காம, கரண்டு கொடுக்காம அழிச்சவனுங்க இப்போ உங்கள வச்சு வேலைக்கு ஆள் கிடைக்காமையும் அழிக்கிரானுங்க.... தரிசு போட்டு வைக்கிறத விட வித்துபுடலாம்னு எங்களையே நினைக்க வைப்பாய்ங்க... அப்போ தான் இவனுங்க சுய ரூபம் தெரியும்.... பெரிய பெரிய கம்பெனி காரன் எல்லாம் உள்ள வந்து அந்த நிலத்தை எல்லாம் மொத்தமா வாங்கி வேலி போட்டு விவசாயம் பண்ணுவான்.... இன்னிக்கு நாங்க விளைய வைக்கிறதுக்கு எவனோ விலை வைப்பான்... ஆனா அது பெரிய கம்பெனி காரன் கைல போச்சுன்னா அவன் சொல்றதுதான் விலை...

இன்னிக்கு வேலை செய்யாம ஓசில கெடைக்குதுன்னு எங்கள மாதிரி சின்ன சின்ன விவசாயிங்க பொழப்புல மண்ணள்ளி போட துணை போனீங்க..... அப்புறம் நாம ரெண்டு பேருமே சேர்ந்து எவன்கிட்டயோ கூலிக்கு தான் போகணுமே தவிர.... நீங்க முதலாளி ஆகவே முடியாது....

என்னிக்கும் கூலிக்கு மாரடிச்சவன் உனக்கு அது பெருமையா இருக்கும்.... நட்டம் கிடையாது... ஆனா நாங்க அப்படி இல்ல.... அதே நேரம் பெரிய கம்பெனிகாரன்கிட்ட கூலிக்கு போனா உங்கள சார புழிஞ்சுகிட்டு சக்கயத்தான் துப்புவான்....
ஆனா எங்கள மாதிரி சிறு குறு விவசாயிங்க அப்படி இல்ல.. பொன் முட்டை இடுற வாத்து மாதிரி... அவனுங்களோட சேர்ந்துகிட்டு எங்க கழுத்த அறுகாத.... அப்புறம் வந்து..."தெரியாம கெட்டுபோயிட்டோம்"ன்னு கதற வேண்டி வரும்...

மத்திய அரசின் தந்திரம்... 100 நாள் வேலை..

மொகலாயர்களிடம் தோல்வியுற்று தலை மறைவாக இருந்துகொண்டு ஒவ்வொரு முறையும் தலை நகரத்தை தாக்கி கைப்பற்ற நினைத்து மீண்டும் மீண்டும் தோல்வியை தழுவிய மன்னன் சிவாஜி ஒரு நாள் பசியோடு சுற்றினாராம்... ஆப்பம் சுட்டு விற்றுக்கொண்டிருந்த ஒரு மூதாட்டியை கண்ட அவர் தன்னுடைய பசிக்கு ஆப்பம் சுட்டு தர கேட்டாராம்... மூதாட்டியும் சுட்டு தந்தாராம்.. பசியோடிருந்த சிவாஜி அந்த ஆப்பத்தை அதி வேகமாய் நடுவில் பிய்த்து தின்ன முயன்று சூடு தாங்காமல் துப்பினாராம்...

அதனை கண்ட அந்த மூதாட்டி "நீ அந்த சிவாஜி போல முட்டாளாக இருக்கிறாயே..." என்றாராம்...(சாப்பிட வந்தவர் தான் சிவாஜி என்பது அவருக்கு தெரியாது ) குழப்பமடைந்த சிவாஜி.." என்ன பாட்டி சொல்கிறாய்... புரியவிலையே.." என்று கேட்க..

"ஆமாம் மகனே... ஆப்பத்தின் நடுப்பகுதி தடிமனாக இருக்கும்.. அந்த இடத்தில் சூடு அதிகமாக இருக்கும்.. மெலிதான ஓரத்தில் சூடு குறைவாக இருக்கும்.. நீ முதலில் மெலிதான ஓரத்தை பிய்த்து சாப்பிட்டால் அதற்குள் தடிமனான நடுப்பகுதியும் ஆறி விடும்... அந்த சிவாஜி பாதுகாப்பு குறைவாக உள்ள பகுதிகளை தாக்கி தன்வசப்படுத்திக் கொள்ளாமல் நேரடியாக தலை நகரத்தையே கைப்பற்ற நினைத்து ஒவ்வொரு முறையும் தோற்கிறான்.." என்றாராம்....

அப்போதுதான் சிவாஜிக்கு உரைத்தது.. அதன் பின்னர் தம்முடன் இருந்த சிறு படையின் உதவியோடு சிறு சிறு நகரங்களை தாக்கி கைப்பற்றி தன்னுடைய பலத்தை பெருக்கிக்கொண்ட சிவாஜி.. பின்னாளில் பெரும் பலம் பெற்று தலை நகரத்தையும் கைப்பற்றி ஒரு மாபெரும் சாம்ராஜ்யத்தை உருவாக்கி சத்ரபதி சிவாஜியானார் என்பது வரலாறு...

பன்னாட்டு பண முதலைகள், கார்பொரேட் கம்பெனிகள் இந்தியாவை ஒட்டு மொத்தமாய் தங்கள் ஆதிக்கத்தின் கீழ் எடுக்க அந்த பாட்டியின் உபதேசத்தை கையிலெடுத்திருக்கிறார்கள்...


ஆம்... அந்த பாட்டி சுட்ட ஆப்பத்தின் ஓரங்கள் போல் இருப்பவர்கள் தான் இன்றைய சிறு குறு விவசாயிகள்... சிறுதொழில் செய்பவர்கள் முதலில் அவர்களை ஒழிக்க வேண்டும்... 


அதற்கான வேலைகளை மத்திய / மாநில அரசுகள் மூலமாகவே செயல்படுத்தவும் தொடங்கி இருக்கிறார்கள்...

தண்ணீர், இடுபொருட்கள், விதைகள், மின்சாரம் எல்லாவற்றிலும் பிரச்சனைகளை உருவாக்கி வ்விசாயிகளையும், சிறுதொழில் செய்பவர்களையும் ஒழிக்கும் முயற்சியில் பன்னாட்டு பணமுதலைகளின் கூலிப்படையாய் செயல்படும் மத்திய மாநில அரசுகள் , கடைசியாய் கையிலெடுத்திருப்பது வேலைக்கு ஆள் கிடைக்காமல் செய்யும் தந்திரம்... 

அதுதான் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம்...

ஏற்கெனவே பல பிரச்சினைகள் மூலம் ஓரளவுக்கு வியசாயிகள்- சிறு குறு தொழில் செய்தவர்களை ஒழித்தவர்கள் இப்போது இதன் மூலம் ஆட்கள் கிடைக்காத பிரச்சினையை உருவாக்கி எஞ்சி இருப்போரையும் ஒழிக்க பார்கிறார்கள்...

விவசாயமோ சிறு தொழில்களோ செய்ய முடியாது என்ற நிலை வரும்போது அவர்கள் தங்களிடம் இருக்கும் காக்காணி அரைக்காணி நிலங்களை விற்க முன்வருவார்கள்...

அப்போது தங்களிடம் இருக்கும் பணபலத்தை பயன் படுத்தி இந்த நிலங்களை முதலில் கைப்பற்றுவார்கள்... பின்னாளில் கொஞ்சம் கொஞ்சமாய் விஸ்தரித்து மொத்த இந்தியாவையும் அவர்கள் கட்டுக்குள் கொண்டு வந்து கார்பொரேட் பண்ணைகள் அமைத்து விவசாயம் செய்வார்கள்... 

விவசாயம் இருக்கும்... ஆனால் அது பண முதலைகளின் பிடியில் இருக்கும் 

நவீன கருவிகளின் மூலம் நாட்டின் மொத்த உணவு உற்பத்தியையும் அவர்களே கையிலெடுத்துக்கொள்வார்கள்.. இன்றைய சிறு குறு விவசாயிகள்- தொழிலாளிகள் அவர்களிடம் கூலிக்கு வேலை செய்ய வேண்டி வரும். அவர்களுக்கு சம்பளம் வேண்டுமானால் ATM அட்டைகளின் மூலம் கிடைக்கலாம்... அதை வைத்து பசி தீர்க்க முடியாதே.... கொடுப்பதுபோல் கொடுத்து சேமிக்க வழி இல்லாமல் மொத்தத்தையும் உணவுத்தேவைகாகவே செலவழிக்கவும் வைப்பார்கள்...அவர்களுக்கு எதிராக உணவு பாதுகாப்பு சட்டமோ.... நில உச்சவரம்பு சட்டமோ வேலை செய்யாது... கோடிகளை கொட்டிக்கொடுத்து அவற்றை செயல்படவிடாமல் முடக்கி உணவுப்பொருட்களுக்கான விலையை அவர்கள் மட்டுமே நிர்ணயிப்பார்கள்....

அவர்களுக்கு தான் நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக அரசுகள் பம்பரமாய் சுழன்று வேலை செய்கின்றன...

இன்று வேலை செய்யாமல், வலிக்காமல் 120 ரூபாய் கிடைக்கிறது என்று அரசு வீசும் எலும்பு துண்டுகளை பொறுக்கிக்கொண்டு அவர்களுடன் கூட்டு சேர்ந்து சிறு குறு விவசாயிகளை அழிக்கும் எல்லோருடைய சந்ததியும் அடிமைகளாய் அழியும்..

அக்கா

பக்கத்து வீடுகளில் வசிக்கும் சித்தப்பா பெரியப்பா குடும்பத்துடன் பங்காளி தகராறு இருந்தபடியால் அவர்களோடு பேசுவதில்லை... சித்தப்பா- பெரியப்பா மகன்களான அண்ணன் தம்பிகள் சிறுவயது முதலே பங்காளிகளாகவே வளர்ந்தார்கள்...

விளையாட எனக்கு இருந்த இரு உறவுகள் என் பெரிய அக்கா சுமதியும்.. சின்ன அக்கா ராஜகுமாரியும் தான்... பெரிய அக்கா உள்ளூர் பள்ளிக்கூடத்திற்கு போக ஆரம்பித்த பிறகு ஒரே துணை சின்ன அக்கா மட்டும்...
அடுத்த வருடத்தில் அவளும் பள்ளிக்கு செல்ல தனிமரமானேன்.... 
விவசாய குடும்பமாகையால் அப்பாவும் அம்மாவும் கருக்கலில் வயற் காட்டுக்கு சென்று அந்தியில் தான் திரும்புவார்கள்... துணையற்று போன நான் பட்டுக்கோட்டை மகாராணி சில்க்ஸில் கொடுத்த ஒரு காது அறுந்து போன மஞ்சள் பையில் ஒரு சிலேட்டு பலகையை எடுத்துக்கொண்டு சின்ன அக்காவுடன் பள்ளிக்கு செல்ல தொடங்கினேன்..எனக்கும் அவளுக்கும் இரண்டு வயது வித்தியாசம்...ஒன்றாம் வகுப்பு தரையிலிருந்து மூன்றங்குல உயரம் உள்ள பலகை போட்டிருப்பார்கள்.. அமர்வதற்காக... முறையான அட்மிஷன் இல்லாததால் எனக்கு அந்த பலகையில் அமரும் வாய்ப்பு நிராகரிக்கப்பட்டது.. எல்லோருக்கும் கடைசியில் சுவர் ஓரமாய் அமர்ந்திருப்பேன்.. இப்படியாக ஓராண்டுகள் கழிந்தது...

கோடை விடுமுறை கழிந்த பின் ஒன்றாம் வகுப்பில் படித்த சின்னக்கா இரண்டாம் வகுப்புக்கு சென்றாள் ... இரண்டாம் வகுப்பு சோமு வாத்தியார் ஒன்றாம் வகுப்பு தங்கவேல் வாத்தியார் போல .இல்லை.. அங்கே சுவர் ஓரம் அமர்வதற்கு கூட அவர் அனுமதிக்கவில்லை...

காதறுந்த மஞ்சள் பையை ஒரு கையிலும் நழுவ துடிக்கும் கால்சட்டையை மறுகையிலும் பிடித்தபடி, கண்ணீரும் கம்பலையுமாய் சிலம்பேந்தி மதுரைக்கு வந்த கண்ணகி மாதிரி நான் என் பெற்றோர் உளுந்து அறுவடை செய்து கொண்டிருந்த வயல் நோக்கி படை எடுத்தேன்... 

வெய்யிலில் வியர்வையும் உளுந்தஞ்செடியின் சுனை அரிப்புமாய் அறுவடை செய்து கொண்டிருந்த எடுத்துக்கொண்டிருந்த அப்பாவுக்கு அந்த எரிச்சலை விட அதிக எரிச்சலை தந்திருக்க வேண்டும் எனது அழுகை...

என்னை அழைத்துக்கொண்டு உள்ளூர் பள்ளிக்கூடத்திற்கு வந்தார்.. அங்கு தலைமை ஆசிரியர் பொறுப்பில் இருந்த திரு அய்யாவு வாத்தியாரிடம் (உள்ளூர் காரர்... மாமா முறை... அப்பா அவரை 'வாத்தியாரே..' என்றே அழைப்பார்) "என்ன வாத்தியாரே... இந்த பய ஒரு வேலை செய்யாவிட மாட்டேன்றான்.. இவனையும் சேர்த்துக்குங்க..." என்றார்...
அப்போது பர்த் சர்டிபிகேட் கேட்டு எல்லாம் அட்மிஷன் தருவதில்லை.. கையை தலைக்கு மேலாக உயர்த்தி மறுபுறம் காதை தொடுவதே பள்ளி அட்மிஷன் பெரும் தகுதி... அப்படி மறுபுறம் இருக்கும் காதை தொட ஐந்து வயது நிரம்பியவர்களாலும் நெருக்கத்தில் இருப்பவர்களாலும் தான் முடியும்.. ஆனால் நான்கு வயது மட்டுமே ஆகி இருந்த என்னால் மறுபுறம் உள்ள காதை தொட முடியவில்லை....

அப்பா விடவில்லை.... உள்ளூர் தலைமை ஆசிரியர் என்பதால் தன்னுடைய இன்ஃப்ளூயன்சை (???) பயன் படுத்தி என்னை ஒன்றாம் வகுப்பில் சேர்த்துவிட்டார்...

அன்று தொடங்கியது என் அறிவுக்கான தேடல்.. (??) 

(சரி சரி... இதுக்ககெல்லாமா டென்ஷன் ஆவாங்க... மேல படிங்க... மேல படிங்கண்ணா ஸ்க்ரோல் பண்ணி மேல படிக்க போயிடாதீங்க.. தொடர்ந்து படிங்க )

பள்ளிக்கூடம் போக என்றுமே அழுததாய் ஞாபகம் இல்லை.. 
எனக்கான புத்தக பை முதல் நான் உயர்நிலை பள்ளி சென்றடையும் வரை சாப்பாட்டு கூடையையும் சேர்த்து சுமந்தது என் சகோதரிகள் தான்...
சகோதர பாசத்தை வாழ்த்தும், நினைவு கூறும் இந்த நன்னாளில் அந்த சகோதரிகளை நினைவுகூர்வதில் நெஞ்சம் நெகிழ்கிறது...

ராஜீவ் காந்தி

1984 ம் ஆண்டு மெய் காப்பாளர்களாலேயே அந்த இரும்பு மனுஷி சுட்டுக்கொல்லப்பட தேசம் சற்றே தடுமாறித்தான் போனது... 
கேம்ப்ரிட்ஜ் பல்கலை கழகத்தில் பயின்றபோது, இத்தாலியில் இருந்து அங்கு வந்து பயின்றபடி ஒரு உணவகத்தில் பணி செய்த சோனியாவின் மீது காதல்வயப்பட்டு திருமணம் செய்து இரண்டு குழந்தைகளுக்கு தந்தையாகி குடும்ப நிர்வாகத்தை மனைவியின் கையில் கொடுத்துவிட்டு, தமது தாய், தாத்தா போன்றவர்கள் கோலோச்சிய அரசியலில் ஆர்வமின்றி விமான ஓட்டியாக பணி செய்துகொண்டு பறந்து திரிந்த அந்த இளைஞனை தன்னுடைய அடுத்த தலைவனாக இந்த தேசம் அடையாளம் கண்டுகொண்டது...

அரசியலில் ஆரவிமில்லாமல் இருந்தாலும் கூட மரபணுவில் ஊறிய அரசியல் அறிவு உன்னதமாய் பிரகாசிக்க இடையிடையே சில தவறுகள் இருந்தபோதும் ஒரு ஸ்திரமான தலைவனாக தன்னுடைய பணியை தொடர்ந்தான் அந்த இளைஞன்..


என் தேசத்தை உலகின் முன்னணி வரிசையில் நிறுத்த வேண்டுமென்றால் தொழில்நுட்ப அறிவில் நமக்கு முக்கியம் வேண்டும் என்ற எண்ணத்தில் , தொலை தொடர்பு கட்டுமானத்தை ஊக்குவிக்கவும் வளர்க்கவும் செயற்கை கோள் தொழில்நுட்பத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்தான்...

வெற்றி.. வெற்றி.... இந்திய செயற்கை கோள் தொழில்நுட்பம் விண்வெளியின் முக்கிய பங்குதாரகளில் ஒருவரானது... விண்வெளியில் அதுவரை ஆதிக்கம் செலுத்திய வல்லரசு நாடுகள் இந்த இளைஞனை வளர விட்டால் இந்தியாவிற்கு எல்லாவற்றிலும் பங்கு கொடுத்தே ஆகவேண்டும் என்று கவலை கொண்டன...

"இவர்களால் ஆபத்து எதுவும் இல்லை... நம் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறார்கள்" என்று தன்னுடைய தாயாரால் அடையாளம் காணப்பட்ட இலங்கையில் (ராணுவ தளவாட உற்பத்தி மையங்கள், விண்வெளி ஆராய்ச்சி மையங்கள், அணு உலைகள் போன்றவை தென் இந்தியாவில் நிறுவப்பட இதுவே காரணம்) இந்திய பூர்வீக குடிகளான தமிழ் மக்கள் அழிவுக்குள்ளாகிறார்கள் என்பதால் அவர்களை காக்கும் பொருட்டு ஒரு மாலை வேளையில் இந்திய விமானப்படை விமானங்களின் பாதுகாப்போடு இலங்கை விண்வெளிக்குள் ஊடுருவிய இந்திய விமானங்கள் உணவுப்பொட்டலங்களை இலங்கை தமிழர் பகுதியில் போட்ட போது உலகம் ஸ்தம்பித்து தான் போனது...

மற்றொரு நாட்டின் வான் பகுதியில் அந்த நாட்டின் அனுமதியின்றி அத்து மீறி நுழைந்து இந்திய பெருங்கடல் பகுதியில் தன்னுடைய ஆதிக்கத்தை இந்தியா காட்டியதும் , அதுவரையில் இலங்கையின் இனக்கலவரத்தை பயன்படுத்தி அங்கு காலூன்ற முயன்ற சக்திகள் ( இங்கு இருக்கும் இயற்கை துறைமுகங்கள் எண்ணெய் சேமிப்புக்கும் அதை உலகநாடுகளுக்கு விநியோகிக்கவும் மிக பெரிய வரபிரசாதமாய் அமைந்தவை) இந்தியாவின் இந்த ஆதிக்கத்தை விரும்பவில்லை...

அதோடு அமைதிப்படை என்ற பெயரில் தன்னுடைய படைகளை இலங்கை மண்ணில் நிலைகொள்ள செய்தது...

(ஒரு ராணுவம் என்பது கட்டுப்பாடுகள் நிறைந்தது என்றாலும் மற்றொரு நாட்டில் ஊடுருவும் போது அவை சில அத்துமீறல்களில் ஈடுபடுவது போர் மரபு... இது தவறென்றாலும் தடுக்கமுடியாதது...)

ஏற்கெனவே விண்வெளியில் தன்னுடைய ஆதிகத்தை நிலை நிறுத்திய இந்தியாவின் மீது கோபத்தில் இருந்த வல்லரசுகள், இலங்கையில் காலூன்றதுடித்த மற்ற நாடுகளோடு சேர்ந்து இப்படி ஆதிக்க சக்தியாக வளரும் இந்தியாவின் இளம் ரத்த தலைமையை தீர்த்துக்கட்ட திட்டமிட்டனர்..

சில பல கசப்புகளோடு இருந்த புலிகளை அவர்கள் பயன்படுத்திக்கொள்ள, 1991 ல் ஒரு கருப்பு நாளில் அந்த இளம் புயல் இரத்த பிண்டங்களாய் சிதறி போனான்...

ஒரு தேசம் தலைவனை இழந்தது... ஒரு மகனும் மகளும் தந்தையை இழந்தனர்.. ஒரு காதல் மனைவி கணவனை இழந்தாள் ... சதி தீட்டிய சக்திகள் உண்மைகளை புதைத்து விட்டன...
தேசத்திற்காக கனவுகண்டு அதனை நிறைவேற்றும் முயற்சியில் இருந்தபோது சிதறடிக்கப்பட்ட ராஜீவ் காந்தியின் பிறந்ததினம் இன்று...!!

(குறிப்பு... அவர் இறந்ததற்கு பிறகு பிறந்து யூ டியூப்பில் தமிழுணர்வு வளர்த்து இன்று ராஜீவை பற்றி தெரியாமல் விமர்சிக்கும் விபரமும் அனுபவமும் இல்லாதவர்கள் நகர்ந்து விடவும்... இங்கு விமர்சிப்பதை நான் விரும்பவில்லை)

தேவலோகத்திலிருந்து அசுரலோகம் நோக்கி தமிழ் சினிமா...

சமீப கால திரைப்படங்களில் எதிர்மறை பாத்திரங்கள், சமூக விரோதிகள் கதாநாயகனாக சித்தரிக்கப்படுகிறார்கள்.... கதாநாயகன் ஒரு காவல்துறை அதிகாரியாக இருந்தாலும் கூட அவரும் ஒரு ரவுடி போல செயல்படுவதாகவே காட்டப்படுகிறது... அப்படியும் அந்த கதாநாயகன் நல்லவராக மட்டுமே இருந்தால் அந்த படத்தில் வரும் வில்லன் கதாபாத்திரம் சகல சமூக விரோத செயல்களையும் செய்தாலும் ஒரு பெரிய மனிதனாக, சமூக அந்தஸ்துள்ள வசதியான மனிதனாகவே காட்டப்படுகிறது...தேவலோகம், அரண்மனைகள் என்று மிதந்துகொண்டிருந்த தமிழ் சினிமாவை கட்டி இழுத்து பூமிக்கு கொண்டுவந்தவர் கடந்த தலைமுறை இயக்குனர் திரு.பாரதி ராஜா அவர்கள்... அவரை தொடர்ந்தே நிறைய திரைப்படங்கள் நகரத்து / கிராமத்து பின்னணி நோக்கி நகர்ந்தன... "நாராயண நாராயண" என்று சொல்லிக்கொண்டு ரம்பை - ஊர்வசிகள் புடைசூழ மேகங்களில் மிதந்தபடி பாற்கடலில் பாம்பின் மேல படுத்திருக்கும் ஸ்ரீமன் நாராயணனை பார்க்க நுழையும் நாரதமணி முதல்.... "யாரங்கே.. முரசு ஒலிக்கட்டும்...பரணி பாடட்டும்..எதிரிகளின் தலையை கொய்ய வாளெடு .. புறப்பட்டு போர்க்களம் நோக்கி.." என்று கர்ஜித்த அரசன் வரையிலான கண்ணில் காணாமல் கற்பனையிலும் வரலாற்றிலும் கண்ட கதாப்பாத்திரங்கள் மட்டுமே நடமாடிய தமிழ் சினிமாவில் நமது ஊரை, நமது தெருவை, நமது வயற்காடுகளை , நமது மனிதர்களை, நம் வீட்டு சமையலடுப்பை, சுள்ளி பொருக்கும் சிறுமியை, தொட்டில் கட்டும் தாய்மாரை, ஏர் ஓட்டும் அண்ணனை, சுற்றித்திரியும் தம்பியை.. என எதார்த்த மனிதர்களை கண்னுக்கு முன்னால் செல்லுலாய்டு பிம்பங்களாய் பார்த்ததும் பரவசப்பட்டோம்...

இப்போது இயக்குனர்களாயிருகும் நிறைய பேர் அப்போது கண்ட கனவுகள் தான் இன்று அவர்களை இயக்குனர்களாய் நம் முன் நிறுத்தி இருக்கிறது... இவர்கள் இன்னும் ஒருபடி மேலே போய் எதிர்மறை பாத்திரங்களை கதாநாயகர்களாய் சித்தரிக்க தொடங்கி இருக்கிறார்கள்... இதற்கு இவர்கள் சொல்லும் காரணம்... "நாங்கள் சமூகத்தில் நடப்பதை தான் சொல்கிறோம் நிஜத்தில் இதைவிட இன்னும் மோசமாகவெல்லாம் நடக்கிறது.."
ஒப்புக்கொள்கிறோம் அய்யன்மீர்.... நீங்கள் புதிதாக எதையும் கற்பனை செய்யவில்லைதான்.... ஆனால் சமூகத்தின் எங்கோ ஒரு இருட்டு மூலையில் அல்லது அந்த பகுதிகளில் வசிப்பவர்களில் கால்வாசி பேருக்கு மட்டுமே தெரிந்த அந்த விஷயத்தை ஜிகினா கனவுகளாய் மாற்றி உலகத்திற்கே கொண்டு போயல்லவா சேர்கிறீர்கள்...?? இதை ஏன் நீங்கள் யோசிப்பதில்லை....??
நேற்று நீங்கள் எல்லாம் சிறுவர்களாய்.. இளைஞர்களாய் இருந்தபோது எப்படி சினிமா உங்களுக்குள் கனவை விதைத்ததோ.... அதே போல் இன்றைய சிறுவர்களுக்கும் விதைக்குமல்லவா...?? நேற்று உங்களுக்குள் கனவை விதைத்த சினிமாவில் மகா விஷ்ணு இருந்தார்... நாரதமுனி இருந்தார்.. பார்வதி தேவியாரும் விஷ்வாமித்திரரும்... அடுத்ததாக நம்மூர் மனிதர்களும், இலந்தை முட்களும் , இண்டம் புதர்களும், ஊருக்குள் வரும் ஒற்றை அரசாங்க பேருந்தும் இருந்தது.... ஆனால் இன்று உங்களால் உருவாக்கப்பட்டு இன்றைய சிறுவர்களின்- இளைஞர்களின் மனதில் கனவை விதைக்கும் திரைப்படங்களில் என்ன இருக்கிறது..?? அரிவாள், ரத்தம், துப்பாக்கி, சுமோ-குவாலிஸ் கார்கள்...
இந்த கனவு நாளைய சமுதாயத்தில் நிஜமாகும்... 

அப்போது பாதிக்கப்படுபவர்களில் உங்கள் வாரிசுகளும் இருக்கலாம்...!!!

இணையத்தில் கொட்டிக்கிடக்கும் பெண்களின் நிர்வாண/ அரை நிர்வாண புகைப்படங்கள்...


இணையத்தில் உலாவும் பெண்களின் நிர்வாண/அரை நிர்வாண பெண்களின் புகைப்படங்களை மூன்று பிரிவுகளாக பிரிக்கலாம்....
1. விருப்பப்பட்டு போஸ் கொடுத்தவை... 
2. சம்பந்தப்பட்டவருக்கே தெரியாமல் எடுக்கப்பட்டவை..
3. வெட்டி ஒட்டிய -மார்ஃபிங் - வகை புகை படங்கள்....


இந்த மூன்று வகைகளில் முதலாவது "விருப்பப்பட்டு போஸ் கொடுக்கப்பட்ட புகைப்பட"வகையினரை பற்றி நாம் பேச தேவை ..இல்லை.... அது அவர்களின் விருப்பம்.....இரண்டாவது வகையான "சம்பந்தப்பட்டவருக்கே தெரியாமல் எடுக்கப்பட்டவை" பெரும்பாலும் செல்போன் கேமராக்களாலேயே எடுக்கப்படுகின்றன..... கிராமங்களில் வீடுகளில் வேலை செய்யும் பெண்கள், கோயில் குளங்களில், கடற்கரையில், அருவிகளில் குளிக்கும் பெண்கள், சாலைகளில் நடக்கும் பெண்கள், காய்கறி வாங்கும் பெண்கள் என்று எந்த பெண்களையும் விடுவதில்லை..... ஆடைகள் விலகும் அசாதாரண சந்தர்ப்பத்திற்காக கையில் செல்போன் கேமராவுடன் காத்துக்கிடக்கும் அற்ப ஜீவிகள் அதனை உடனே இணையத்திலும் பகிர்கிறார்கள்.....இத்தகைய காட்சியாகும் பெண்களில் ஒருவருக்கு கூட தெரிவதில்லை இணையத்தின் வழியாக எத்தனையோ காமக்கண்கள் தமது அங்கங்களை ரசிக்கின்றன என்பது....


மூன்றாவது வெட்டி ஓட்டிய புகைப்படங்கள்....


சமூக வலைத்தளங்கள் (Facebook ,Twitter , Google + ) , பிக்காசா வெப் ஆல்பம் போன்றவற்றில் பதிவேற்றம் செய்யப்படும் பெண்களின் புகைப்படங்கள் தரவிறக்கம் செய்யப்பட்டு ஏற்கெனவே நிர்வாண போஸ் கொடுத்த புகைப்படங்களின் வேற்று உடம்பில் இந்த பெண்களின் முகம் மட்டும் இணைக்கப்படுகிறது.... போட்டோ ஷாப்.. இமேஜ் ரெடி போன்ற வரைகலை மென்பொருட் கருவிகள் மூலம் இந்த முக இணைப்பு மிக தத்ரூபமாக செய்கிறார்கள்....

பொதுவாக பெண்கள் இம்மாதிரியான புகைப்படங்கள் இருக்கும் பக்கங்களை பார்ப்பதை தவிர்கிறார்கள்..... ஆனால் உண்மையாய் சொன்னால் ஆண்கள் தேடிப்போய் பார்க்கிறார்கள்..... அப்படியாக உங்களுக்கே தெரியாமல் இணையத்தில் உலாவும் உங்களது அசல் (அ ) போலியான நிர்வாண புகைப்படத்தை உங்களின் தந்தையோ, மகனோ, சகோதரனோ, கணவனோ, காதலனோ பார்க்க கூடும்... 


இவற்றை தடுக்க ஏதேனும் வழி இருக்கிறதா என்றால்.... சுய கட்டுப்பாடு , எச்சரிக்கை உணர்வை தவிர வேறு வழியே இல்லை எனலாம்.. ஏனென்றால் கைக்குள் அடக்கமாயிருகும் செல்போனில் புகைப்படம் எடுக்கப்படுவதை எப்படி கண்டுபிடித்து தடுக்க முடியும்...??? ஆனால் பொது இடங்களில் குளிக்கும் போது (கோயில் குளம், அருவிகள், கடற்கரைகள் )  அடர் நிறை ஆடைகளை உடுத்தலாம்..., அனாவசியமான நபர்கள் கையில் செல்போனுடன் சுத்தினால் அவர்கள் மீது ஒரு கண் வைத்து கவனித்த படியும் எச்சரிக்கையாய் இருக்கலாம்.


சமூக வலைத்தளங்கள், வெப் ஆல்பங்கள் போன்றவற்றில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்யும் போது நன்கு அறிமுகமானவர்களுக்கு மட்டும் தெரியும் படி வைக்கலாம்.... கூடுமான வரையில் அப்படி சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்வதை தவிர்க்கலாம்....

யுத்தத்திற்கு கேடயத்தொடு போவது பயந்தாங்கொள்ளித்தனமோ  அவமானமோ இல்லை.... அது புத்திசாலித்தனம்...


"அதெல்லாம் இல்ல..... என்னை நாலுபேர் பார்த்து அழகா இருக்கீங்கன்னு சொல்லணும்.... என் போட்டோவுக்கு "லைக்" போடணும்.... என்னை பாராட்டனும்.. "அப்படின்னு போட்டோ போடறவங்களை நான் எதுவும் சொல்ல முடியாது... வேண்டுமானால் ஒரு ஆணாக.... அல்ப புத்தி உடைய சராசரி ஆணாக காத்திருக்கலாம்... வரும்... என்றைகாவது நம்ம பார்வைக்கும் வரும்.....

ஆண்மையை பறிக்கும் வளைகுடா வாழ்க்கை... ஒரு அதிர்ச்சியூட்டும் எச்சரிக்கை...!!!

பொதுவாகவே தற்போதைய காலகட்டத்தில் இருபாலினத்தவரும் சந்திக்கும் மிக தீவிரமான பிரச்சினைகளில் ஒன்று பாலியல் குறை பாடு... 
இதில் அதிகம் பாதிக்கப்படுவது ஆண்கள் சமூகமே....தகவல் தொடர்பு சாதனங்களை இணைத்திருக்கும் கதிர் அலைகற்றைகளின் தொடர்ந்த தாக்குதல்... நச்சுப்பொருட்களாகி விட்ட உணவுப்பொருட்கள், மாறிவரும் சுற்று சூழல், மன உளைச்சல், புகை-குடி பழக்கம் என பல்வேறு காரணிகளால் இப்படியான ஒரு நிலைமைக்கு கிட்டத்தட்ட எல்லோருமே வந்துகொண்டிருகிறார்கள்...ஆனால் துரதிஷ்டவசமாக இதை யாரும் வெளியில் சொல்வதில்லை ... ஒரு தலை வலி, காய்ச்சல் போன்ற சாதாரண வியாதியாக இருந்தாலும் சரி.. கேன்சர், சர்க்கரை, சிறுநீரக செயலிழப்பு போன்ற உயிர்குடிக்கும் வியாதியானாலும் சரி... தைரியமாக சொல்பவர்கள் இந்த பாலியல் குறைபாடுகளை மட்டும் விழியில் சொல்வதில்.... ஏனென்றால் இது பற்றிய விழிப்புணர்ச்சி இல்லாததும்... இது சமூக மரியாதை சார்ந்த விஷயமாகவும் இருப்பதால் இதை வெளியில் சொல்வதை தவிர்கிறார்கள்....


வளைகுடா நாடுகளில் பிழைப்புக்காக வந்து இரண்டிரண்டு ஆண்டுகளாக விசா நீட்டிப்பு செய்து வாழ்க்கையின் ஒரு பிரச்சினையை தீர்க்க்கும் முன்பே மறு பிரச்சினையில்  சிக்கி பொருளாதார சிறையில் கைதியாய் அடைபட்டு கிடக்கும் லட்சோப லட்சம் பேர்களில் சுமார் 80% பேர்கள் இப்படியான ஒரு பிரச்சினையில் சிக்கி கிடக்கிறார்கள்...ஆனால் அவர்கள் இதை வெளியில் சொல்வதில்லை...


நமது பகுதியில் உங்களுக்கு தெரிந்தவரை கணக்கிட்டு பார்த்தால் குழந்தை இல்லாதவர்களில் 80% பேர் வளைகுடா நாடுகளில் சுமார் 10 ஆண்டுகளுக்கும் குறையாமல் வசித்தவர்கள்தான் என்பதை கண்கூடாக அறியலாம்.... மேலும் அப்படி 10 ஆண்டுகளுக்கு மேல் இங்கு தொடர்ந்து வசித்தவர்களில் பெரும்பாலானோ நிறைய மருத்துவ சிகிச்சை மேற்கொண்டும், பண விரயம் செய்த பின்னுமே குழந்தையை கொஞ்சும் வாய்ப்பை பெற்றவர்கள் என்பது மறுக்க முடியாத உண்மை...வளைகுடா நாடுகளில் வசிப்பவர்களுக்கு மட்டும் இந்த பிரச்சினை அதிகம் வர என்ன காரணம்...???

1. வெப்பநிலை : -மனித உடம்பு ஒரு ஆச்சர்யத்தின் உச்சகட்டம்... இனவிருத்திக்கான உயிரணுக்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையான விதை பைகள் உடம்பை விட்டு தனித்து இருக்கின்றன.. இதற்கு காரணம் உடலின் சாதாரண வெப்ப நிலையை விட அந்த விதை பைகள் குறைவான வெப்பநிலையில் இருக்கவேண்டும் என்பதே ஆகும்.. மேலும் அவ்வாறு குறைவான வெப்பநிலையில் இருந்தால் மட்டுமே அவைகள் உயிரணுகளை வீரியத்துடன் உருவாக இயலும்.. ஆனால் வளைகுடா நாடுகள் வெய்யில் மட்டுமே நிறைந்த வெப்ப நாடுகள்.. இங்கே சாதாரண தண்ணீர் கோடா சூடான நிலையிலேயே கிடைகிறது.. வெப்ப காலங்களில் குழாய்களில், குளியலறைகளில் வரும் தண்ணீரி சுமார் 30 முதல் 40 டிகிரி வெப் நிலையிலேயே கிடைக்கிறது.. பெரும்பாலானோர் அதில் தான் குளிக்க வேண்டிய கட்டாயம்.. குளிர் காலத்திலோ தண்ணீர் ஐஸ் போல இருப்பதால் அவர்கள் வெந்நீரில் குளிக்க வேண்டிய கட்டாயம்... ஆகவே தொடர்ந்து வெந்நீரை மட்டுமே உபயோகிப்பதால் அவர்களின் உயிரணு உற்பத்தியில் குறைபாடு ஏற்படுகிறது....


2.உணவுப்பழக்கம் :- நமது நாட்டில், நமது வயல்களில் விளைவிக்கின்ற பொருட்கள் கூட மரபணு மாற்று உணவாகவும், பூச்சிக்கொல்லிகள் கலந்த விஷத்தன்மை உடையதாகவும் மாறிப்போய் விட்டிருக்கிறது... அதிலும் வளைகுடா நாடுகளில் இருப்போர் அதிகம் உபயோகிப்பது இவ்வாறு மரபணு மாற்றம் செய்யப்பட இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்பே சாகடிக்கப்பட்டு பதப்படுத்தப்பட்ட கோழிகள் மற்றும் இறைச்சிகள்.. (frozen food ) இந்த பதப்படுத்தப்பட்ட உணவுகளை தொடர்ந்து உண்பது இவர்களின் ஆண்மையை கபளீகரம் செய்கிறது...3. மது- புகை பழக்கங்கள் :- கையில் தொடர்ந்த பணப் புழக்கம், வேலையில் கஷ்டம், தனிமை சுதந்திரம், மலிவான விலையில் கிடைக்கும் மது. (அதுவும் டோர் டெலிவரி) இப்படி கவலையும், கட்டுப்பாடற்ற, கண்டிக்க ஆட்களற்ற தனிமையும் சேர்ந்து பெரும்பாலானோர் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகிறார்கள்... அந்த மதுவோடு தொடர்ச்சியாக கொண்ட உறவு இவர்களின் தொப்புழ்கொடி உறவையே துண்டிக்கபோவது தெரிவதில்லை இவர்களுக்கு.....


4. சுய பழக்கம் :- மலிவாக கிடைக்கின்ற நீலப்பட குறுந்தகடுகள்.... அரை நிர்வாணமாக திரியும் பன்னாட்டு அழகிகள்... உடல் சூடு... பாலியல் இச்சைகளை தணித்துக்கொள்ள மனைவி இல்லாத தனிமை.. கொழுப்பு நிறைந்த உணவுகள்.. இப்படியான ஒரு சூழலில் வாழும் வளைகுடா இளைஞன் அதற்கு மாற்று வழியாக கையிலெடுக்கும் ஆயுதம் சுய இன்ப பழக்கம்....தொடர்ந்து 7 முதல் பத்தாண்டுகளுக்கு மேலாக இப்பழக்கத்தை கையாள்பவர்கள் நாளடைவில் ஒரு குழந்தைக்கு தந்தையாகும் வாய்ப்பையும் , உடலுறவிற்கே தகுதி இல்லாத நிலையையும் அடைகிறார்கள்...


இப்படியாக பல்வேறு காரணிகளால் தங்களது சந்ததியை வளர்க்கும் வாய்ப்பை இழக்கும் இவர்கள் தங்களின் கடைசி காலம் வரையில் வளைகுடாவிலேயே வாழ்க்கையை தொலைத்துவிட்டு ஒரு நடைபிணமாய் தங்களது வாழ்க்கையை முடித்துக்கொள்கிறார்கள்....


ஒரு வகையில் இவர்களும் காயடிக்கப்பட்ட காளை மாடுகள் தான்....
எனதருமை இளைஞர்களே.... வளைகுடாவில் 7-8 ஆண்டுகள் தங்குவதென்பது ஆபத்தின் உச்சகட்டம்... குடும்பத்தோடு இருப்பவர்கள் பரவாயில்லை... இங்கே பேச்சிலர் வாழ்க்கை வாழ்பவர்கள் கூடுமான வரையில் அதற்கு முன்பாகவே நாடு திரும்புதல் நலம்.. குறிப்பாக திருமணமாகாத இளைஞர்கள் வளைகுடாவிற்கு வந்து அதிக பட்சம் நான்காண்டுகளுக்குள் திருமணத்தை முடித்துவிடுங்கள்.... அப்புறம் குழந்தைகள் பிறந்த பின்பு அவர்களின் எதிர்கால தேவைக்காக வேண்டுமானால் வளைகுடாவில் முகாமிடுங்கள்.... 
பிரச்சினை எந்த காலத்திலும் ஓயப்போவதில்லை... கடன் கடன் என்றோ.. அதை செய்யவேண்டும் இதை செய்ய வேண்டும் என்றோ தேவைகளுக்காகவோ- பேராசைகாகவோ நீங்கள் வளைகுடாவில் உங்கள் இளமையை அடகு வைத்து சம்பாதிக்கும் காசை அனுபவிக்க நாளை வாரிசுகள் இல்லாமல் போக கூடும்...

பிரச்சினைகளை பற்றி அலசிவிட்டோம்... இந்த பிரச்சினைகள் வளைகுடாவில் வசிக்கும் இளைஞர்களுக்கு மட்டும் தான என்றால்... இல்லை... பொதுவாகவே இந்த பிரச்சினை இருப்பதை அறிய முடிகிறது.... தமிழ்நாட்டை பொருத்தவரை, மலிவாக கிடைக்கும் மது... புகை.. ஒவ்வொரு இளைஞனின் கையிலும் இருக்கும் நவீன அலைபேசிகளில் சேமிக்கப்பட்ட நீல பட காட்சிகளின் தாக்கத்தால் செய்யும் சுய இன்ப பழக்கம், உலகின் எந்த பகுதியிலும் காற்று போல் நிறைந்துவிட்ட அலைகற்றைகளின் தொடர் தாக்குதல்... போன்றவற்றால் இந்த பாதிப்பு உள்ளூர் இளைஞர்களுக்கும் இருக்கத்தான் செய்கிறது....


மேலும் இன்னொரு விஷயத்தையும் நாம் கணக்கில் எடுக்க வேண்டும்.... உடற்கூரியலாக பெண்களின் பாலியல் தேவைகள் சுமார் 30 வயது தொடங்கி 45 வயது வரை அதிகமாக இருக்கும் என்று உடலியல் வல்லுனர்கள் கூறுகிறார்கள்.... (மெனோபாஸ் என்று சொல்லப்படும் மாதவிலக்கு நிற்கும் காலம் வரையில் )
இந்த நேரத்தில் அவர்களின் உடல் தேவைகளை கணவனால் நிறைவேற்றமுடியாத போது அவர்களின் தேவைகளை அடக்குகிறார்கள்... இதனால் அவர்கள் மனோ ரீதியான பாதிப்புகளுக்கு ஆளாகிறார்கள்... இதனை நேரடியாக வெளிப்படுத்த முடியாதவர்கள் கோபம், எரிச்சல் போன்ற முறைகளில் அந்த வெறுப்பை உமிழ்வதால் குடும்பத்தில் தொடர்ந்த சண்டை சச்சரவுகள் ஏற்படுவதால் நிம்மதி தொலைகிறது... அப்படி இல்லையென்றால் அவர்கள் தங்களது தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள வேறொரு இளைஞனை அதிலும் வயது குறைவான இளைஞனை தேடிக்கொள்கிறார்கள்....
பிரச்சினை பிரச்சினை என்று மட்டும் சொன்னால் போதுமா... அதற்கான தீர்வு....???


பொதுவாக தமிழகத்தில் திருமண முறை என்பது ஆணுக்கு அதிகமாகவும்.. பெண்ணுக்கு வயது குறைவாகவும் இருப்பது போல் நடத்தப்படுகிறது.... இந்த வித்தியாசம் 5 முதல் 12 வயது வரை ஆணை விட பெண்ணுக்கு குறைவாகவே இருக்கிறது.... ஆண்களுக்கு 18 முதல் 24 வயதிலும் ஆண்களுக்கு 30 முதல் 35 வயதிலும் திருமணம் செய்து வைக்கப்படுகிறது..
இந்த முறை முற்றிலும் மாற வேண்டும்....

ஆண்களுக்கு முன்கூட்டியே திருமண திட்டமிடுதலும்.. பெண்களுக்கு சற்று தாமதப்படுத்தி திருமண திட்டமிடுதலும் செய்யப்பட வேண்டும்.... அதாவது ஆண்களுக்கும் பெண்களுக்குமான வயது இடைவெளி அதிக பட்சம் இரண்டு வயதிற்கு மேல் இருக்கவே கூடாது.... இன்னும் முற்போக்காய் சிந்தித்தால் ஆணை விட பெண்ணுக்கு ஓரிரு வயது அதிகமாக இருந்தால் கூட இன்னும் நலம்....


இதன் மூலம் ஆண் /பெண்களின் உடல் தேவைகள் அவர்களுக்கு தேவைப்படும் காலம் வரையில் கிடைக்கும் வாய்ப்புகள் அதிகம்.. இந்த உடல் தேவைகள் பூர்த்தி அடைவதன் மூலம் அவர்கள் மனோ ரீதியான நிம்மதியுடன் மற்ற விஷயங்களில் கவனம் செலுத்தி சமூகத்தின் உயர்ந்த இடத்திற்கு வரமுடியும்...

தரவரிசை- ஒரு வியாபார யுக்தி

பொறியியல் கல்லூரிகளுக்கான தரவரிசை பட்டியலை நீதிமன்ற உத்தரவுக்கேற்ப அண்ணா பல்கலை கழகம் வெளியிட்டிருப்பது வரவேற்க தக்க விஷயமே....

அதேநேரம் என் போன்ற சாமானியனுக்கு சில சந்தேகம் எழுவதை தடுக்கவே முடியவில்லை..


கல்வி என்பதே கார்பொரேட் கம்பெனிகள் போன்ற வியாபாரமாகிப்போன இந்த காலத்தில் இந்த தரவரிசை எவ்வளவு நியாயமாக இருக்கும்.. எதிர்காலத்தில் இந்த தரவரிசை பட்டியலின் முன்னனியில் வர கல்வி குழுமங்கள் என்னவெல்லாம் தகிடு தத்தங்கள் செய்யும்??
நாமக்கல் பகுதியில் 12 ம் வகுப்பு பொது தேர்வில் மாநில இடங்களை கைப்பற்றுவதன் மூலம் "இங்கே படித்தால் ஸ்டேட் ரேங்க் நிச்சயம்" என்ற மாயையை ஏற்படுத்துவதற்காக மாநிலம் முழுவதும் பத்தாம் வகுப்பில் 450 க்கு மேல் மதிப்பெண் வாங்கிய மாணவர்களை விலைக்கு வாங்கி அவர்களை ஆலையில் இடும் கரும்பாக பிழிந்து இன்று அந்த மாயையை ஏற்படுத்துவதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள்... மேலும் அங்கு பயிலும் மாணவர்கள் தேர்வெழுதும் போது அவர்கள் காப்பி அடிக்கவும் புத்தகத்தை பார்த்து எழுதவும் அந்த பள்ளி நிர்வாகமே உதவியதையும் கடந்தகால செய்திகள் தெளிவாக சொல்கின்றன..


இதே போல இன்று பொறியியல் கல்லூரிகளின் தர வரிசையில் முதலிடம் வருவதற்காக.. அதன் மூலம் கல்வி வியாபாரத்தில் சீட்டுகளின் விலையை உயர்த்தும் நோக்கில் அப்படியான ஒரு செயலில் கல்லூரி நிர்வாகம் ஈடுபடாது என்பதற்கான எந்த உத்திரவாதமும் இல்லை....
மேலும் இந்த தரவரிசைக்கு அவர்கள் பரிசீலித்த விஷயங்கள் - கல்லூரியில் தேர்வெழுதியவர்கள்- அதில் தேர்ச்சி பெற்றவர்கள்- தேர்ச்சி சதவிகிதம் -மதிப்பெண் விகிதம் , இத்துடன் கட்டிட வாகன, உறைவிட வசதிகள்... 
மழைக்கால புற்று போல் முளைக்கும் பொறியியல் கல்லூரிகளை புற்றீசல் போல் பயின்று வெளிவரும் மாணவர்கள் தகுந்த திறமையோடு வெளிவருகிறார்களா?? இவர்களுக்கான வேலை வாய்ப்புகள் எப்படி இருக்கிறது.. அப்படி வேலை கிடைத்து சேர்ந்தவர்களில் எத்தனை பேர் ஜொலிக்கிறார்கள். திறமையான நிபுணர்களாக திகழ்கிறார்கள் என்பதை எல்லாம் கணக்கில் எடுக்கவே இல்லை...


இன்று எத்தனையோ பொறியாளர்கள் "டிகிரி" வாங்கி கையில் வைத்துக்கொண்டு அடிப்படை செயல் திறன் இல்லாமல், சுய சிந்தனை இல்லாமல் இருக்கிறார்கள் என்பதை சொல்லித்தான் தெரிய வேண்டுமென்பதில்லை....


வெறும் தேர்ச்சி விகிதத்தை மட்டும் கணக்கில் எடுத்துக்கொண்டு கொடுக்கப்படும் தர மதிப்பீடு மேலும் அவர்களின் வியாபாரத்தை பெருக்கவும் , பெயரளவில் மட்டும் பொறியாளர்களை உருவாக்கவும் மட்டுமே பயன்படுமே தவிர உலக தரமிக்க , நிபுணத்துவம் பெற்ற பொறியாளர்களை உருவாக்க எந்த விதத்திலும் பயன் படாது....

எங்களூர் சாலையின் சரித்திரம் !!!!

பச்சை கம்பளத்தில் படுத்து நெளியும் கருப்பு மலைப்பாம்பாய் வளைந்திருக்கும் இந்த தார்சாலையில் என்ன இருக்கிறது....??? தார்.... கருங்கல் சரளைகற்கள்... செங்கப்பி.... மண்தரை..... அதற்கும் கீழே.. 

உயிர் இருக்கிறது... இருபது பேரின் இளமை இருக்கிறது.. அவர்களின் இந்திரியம் இருக்கிறது.. அவர்கள் தொலைத்த அடுத்த தலைமுறை  இருக்கிறது... 
ஆம்.. இந்த சாலையின் அடித்தளம் இருபது பேரின் இளமையை காவுகொடுத்து கட்டப்பட்டிருக்கிறது....

அதெப்படி.....??? . இந்த சாலையின் சரித்திரம் தெரிந்ததும் என் கண்களில் நீர் பூ பூத்தது.... நிச்சயம் அந்த நினைவலைகளை மீட்டெடுத்தால் உங்கள் கண்களிலும் பூக்கும்...

 


எங்களூரின் வரலாற்று பக்கங்களில் கனமாய் பதிவு செய்யப்பட வேண்டிய அவர்களின் தியாகம் எங்கும் பதிவு செய்யப்படாமல் போனது வருத்தமான விஷயமே....


நாற்புறமும் ஏரி சூழ் கிராமம் எங்களுடையது... எல்லோருக்குமே சொந்தமாய் விவசாயம் உண்டு... பருவம் தவறாமல் பொழியும் வானம்.... நிரம்பி வழியும் ஏரி -குளங்கள்... முப்போகம் விவசாயம்.... சற்றே பள்ளக்கால் பகுதியான எங்களூர் தான் மேட்டு நிலங்களின் வடிகால்.... பன்னிரெண்டு மாதங்களும் மேட்டுநில வடிகால் நீர் எங்களூரை நனைத்துக்கொண்டோடும்.... இன்றைய தார்சாலை அன்றைய சேறு சாலையாக எப்போதுமிருக்கும்...

ஊரை சுற்றி இருக்கும் விளை நிலங்களில் விளைந்தவற்றை வீட்டிக்கு கொண்டுவரவும்... இடுபொருட்களை வயல்களுக்கு சேர்ப்பிக்கவும், விற்பனைக்கு அருகில் இருக்கும் சிறு நகரமான மதுக்கூர் கொண்டு செல்லவும் இந்த சேறு சாலையே பிரதான வழி....
காளை மாடுகள் பூட்டிய கட்டை வண்டிகள் இந்த செற்றுப்பாதையில் சிக்கிக்கொள்வதால் போக்கு வரத்து என்பது பெரிய போராட்டமாய் இருந்தது....


எங்களூருக்கு அப்போது எங்கள் பகுதியில் "ஈழ வெளி செலமங்காடு " என்றே வழக்கு மொழி செல்லப்பெயர்... (ஈழை - நீர்பிடிப்பும் சகதியும் நிறைந்த பகுதி....ஈழம் என்ற வார்த்தை கூட இவ்வாறான நிலப்பரப்பின் காரணமாய் வந்திருக்கலாம்)
இந்த சேறு சாலையை கப்பி சாலையாக மாற்ற அரசாங்கத்தை அணுகினார்கள்....

அது அறுபதுகளின் இறுதி...
"முப்பதுகோடி முகமுடையாள் அறுபது-எழுபது கோடி முகமுடையாளாக மாறி மக்கள் தொகை பெருக்கத்தால் திணற... அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை அரசு முன்னெடுத்த நேரம் அது... அப்போது எங்களூர் சாலையை மாற்ற அரசு ஒரு நிபந்தனை விதித்தது.......அந்த நிபந்தனை எங்களூர் மக்களை உறைய செய்தது...


இருபது பேர் குடும்பக்கட்டுப்பாடு செய்ய சம்மதித்தால் இந்த நிதியாண்டிலேயே இந்த சாலையை மாற்றி தர சம்மதிக்கிறோம்...

குடும்பக்கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை என்பது.. விஞ்ஞான வளர்ச்சியில் இன்று வேண்டுமானால் எளிதாய் போயிருக்கிறது.... ஆனால் அன்றைய நிலையில் அது உயிருக்கு உலை வைக்கும் விஷயமென்ற நம்பிக்கை ஆல மரமாய் வேரூன்றி இருந்த காலம்... சாலை அவசியம் தான்.. ஆனால் உயிரை பணயம் வைக்க முடியுமா..... 


சாலை அவசியம் தான்... எம் தலைமுறை செழிக்க.... எம் ஊர் உயர.... எங்களை பணயம் வைக்கிறோம் என்று முன்வந்தார்கள் 20 பேர்... 

அவர்களின் இளமையை காவு கொடுத்து குடும்பக்கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை முடிந்த பின் தான் அரசு அதற்கு நிதி ஒதுக்கியது.... அந்த சேறு சாலை காப்பி சாலையாய் புது அவதாரமெடுத்தது.. பின்நாளில் காட்சிகள் மாறி.. ஆட்சிகள் மாறி.. அந்த கப்பிசாலை தார் சாலையாய் பச்சைக்கம்பளதிற்கு மத்தியில் நெளிகிறது..

அந்த தியாகிகள் பெயர்கள் பின்வருமாறு....

1.திரு.பொன்னன் ஆசாரி..
2.திரு.சீனு மாதுராயர்.
3.திரு.ராமசாமி வேளாளர் (புது வீடு)
4.திரு.அண்ணாமலை வேளாளர் ( அய்யாவேளாமூடு )
5.திரு.கோவிந்தராஜ் (மணியார் வீடு)
6.திரு.மாவட்டம் என்கிற பன்னீர் செல்வம்
7.திரு.சொக்கன்.
8.திரு.பொதியப்ப கண்டியர்
9.திரு.நடேச வேளாளர் ( கீழ வீடு)
10.திரு.ரெங்கசாமி வேளாளர்(காத்தாயி வீடு )
11.திரு.சின்னு வேளாளர் (மணியார் வீடு)
12.திரு.வேலாயுத வேளாளர் ( அடைக்கல வேளாமூடு )
13.திரு.சின்ன வீரப்ப வேளாளர் ( அருணாசல வேளாமூடு )
14.திரு.வேலாயுத வேளாளர் (கருத்தண்டியாமூடு)
15.திரு.சந்திரேசன் ஆசாரி..
16.திரு.ராமன் முத்தரையர்..
17.திரு.கிருஷ்ண சாமி செட்டியார்
18.திரு காத்தமுத்து வேளாளர் (அய்யாவேளாமூடு)
19.திரு.ப சொ .அப்பாவு வேளாளர் (புது வீடு)
20.திரு.வேலாயுதம் கண்டியர்

இந்த பட்டியலில் அவர்கள் சார்ந்த சமூகத்தின் பெயரும் குறிப்பிடப்பட்டிருபதன் முக்கிய காரணம்... எங்கள் ஊரில் அனைத்து சமூகத்தினரும் சேர்ந்து வாழ்கிறார்கள் என்பதை சுட்டிக்காட்டவும்... எல்லோருடைய பங்களிப்புனும் அந்த சாலை உருவாகி இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டவும் மட்டுமே....


பொது நலனுகாய் இன்னொரு தலைமுறை உருவாக்கும் இளமையை தொலைத்த இவர்களில் இருந்து உருவான சமுதாயம் எப்படி உருவாகாத மூன்றாவது தலைமுறைக்காக எடுத்து வைத்துக்கொண்டு மிச்சமிருக்கும் பணத்தில் சாலை அமைக்கும் சுயநலமாய் மாறிப்போனது....??


எங்கு தொலைத்தோம் நம் மனிதாபிமானத்தை....?????

வாங்க ஜெயிக்கலாம் - 6

மாத்தி யோசிங்க.... 

ந்த ஒரு விசயத்தையும் முடிவு செய்யும் முன் அதனை பல கோணங்களில் 
ஆராய்ந்து அதில் வெற்றிக்கான சரியானதை தேர்வு செய்பவர்களே 
வெற்றி பெறுகிறார்கள்.

ஒரு உற்பத்தி தொழிலில் இருப்பவர்கள் அதற்கான சந்தைபடுத்தும் வாய்ப்புகளை 
நன்கு அலசி ஆராய வேண்டும். உபயோகிப்பாளரின் விருப்பங்கள், 
விற்பனையாளரின் விருப்பங்கள், அவர்களின் தேவைகள் ஆகியவற்றை 
கணக்கில் கொண்டு உற்பத்தி செய்யப்படும் போது அது எளிதில் விற்பனையாகிறது.


உலகின் புகழ்பெற்ற ஜப்பானிய மின்னணு உற்பத்தி நிறுவனமான 
சோனி நிறுவனம் 1978 ல் தனி மனித உபயோகத்திற்காக முதன் முதலில் 
வாக் மென் (WALK MEN ) தயாரிப்பில் இறங்கியது. ஏற்கெனவே பல்வேறு 
ரகமான பொழுதுபோக்கு சாதனங்களான தொலைகாட்சிகள், 
டேப் ரெகார்டர்கள்,புகைப்பட கருவிகள் என்று சந்தையில் நன்கு 
அறிமுகமாகி இருந்த சோனி நிறுவனத்தின் வாக்மேன்கள் நிர்ணயித்த விற்பனை 
இலக்கை எட்டவில்லை.


அப்போது நிறுவன தலைவர் பொறுப்பில் இருந்த திரு.நோரியோ ஓஹா ( Norio Ohga ) 
நிறுவனர் திரு.அகியோ மோரிட்டா (Akio Morita) ஆகியோர் மிக தீவிர 
ஆலோசனையில் இறங்கினார்கள்.. 


எவ்வித தொழில் நுட்ப கோளாறும் இல்லை... 
வெளிப்புற தோற்றத்திலும் குறை இல்லை.. விளம்பரத்திற்கும் குறை இல்லை.. 
ஆனாலும் விற்பனை இலக்கை எட்டமுடியவில்லை... 
மிக தீவிரமாய் அலசி பார்த்ததில் கடைசியாக கண்டுபிடித்தார்கள்.. 
சோனி நிறுவன வாக்மேனின் சிறிய அளவை குறிக்கும் விதத்தில் சட்டை 
பாக்கெட்டில் எடுத்து செல்லலாம் என்று விளம்பரம் செய்யப்பட்டது... 
ஆனால் அப்போது சந்தையில் இருந்த எந்த சட்டையின் பாக்கெட்டிலும் 
அந்த வாக்மேன் கொள்ளுமளவு இல்லை... சட்டை பாக்கெட்டை விட 
வாக்மேனின் அளவு பெரிதாக இருந்தது... 
இதன் அளவை சிறிதாக்க இன்னும் தொழில்நுட்ப ஆய்வுகள், 
உற்பத்திகள் .செய்யவேண்டும்.அதே நேரம் உற்பத்தி செய்யப்பட 
வாக்மேன்களை எப்படி விற்பது..?? 
அப்போதுதான் அவர்கள் மாற்றி யோசித்தார்கள்.. ஆம்.. 
சந்தையில் விற்பனையில் முக்கிய இடம்பெற்றிருந்த சட்டை தயாரிப்பு 
நிறுவனங்களை அணுகினார்கள்.. அவர்கள் உற்பத்தி செய்யும் 
சட்டைகளின் பாக்கெட் அளவை பெரிதாக்க அவர்களுடன் ஒப்பந்தம் போட்டார்கள்...
பிறகென்ன.... சந்தையில் இருந்த வாக்மேன்கள் விற்பனை 
இலக்கை எளிதில் எட்டியது...


மாற்று சிந்தனைக்கு இன்னுமொரு உதாரணம்... 
நமது நாட்டில் ஒரு உற்பத்தி நிறுவனத்தில் வேலை செய்யும் தொழிலாளர்கள் 
தங்களது கோரிக்கையை நிறைவேற்ற வேலை நிறுத்தம் செய்வது வாடிக்கை... 
சிலநேரம் அது நியாயமான காரணமாகவும் இருக்கலாம்.. 
சில நேரம் நியாயமில்லாத காரணமாகவும் இருக்கலாம்... 
ஆனால் வேலை நிறுத்தம் என்ற பெயரில் தொழிற்சாலையின் வெளியே 
அமர்ந்து வேலை நிறுத்தம் செய்வார்கள்... இதனால் உற்பத்தி இழப்பு ஏற்படும்..
 இந்த உற்பத்தி இழப்பு பெரிய அளவில் நஷ்டத்தை ஏற்படுத்தி கடைசியில் 
அந்த நிறுவனத்தையே மூடவேண்டிய நிலை ஏற்படும்... 
அதனால் முதலாளிக்கும் நஷ்டம்.. தொழிலாளிக்கும் நஷ்டம்...
ஸ்டாண்டர்ட் மோட்டார்ஸ்... பின்னி போன்ற பெருநிறுவனங்கள் மூடப்பட்டதும்.. 
அதில் பணி செய்த தொழிலாளர்களில் சிலர் தற்கொலை கூட 
செய்துகொண்டதும் எல்லோரும் அறிந்த விஷயம்...


ஆனால் ஜப்பான் நாட்டில் ஒருசில நிறுவனங்களில் கூட இப்படி தங்கள் 
கோரிக்கையை வலியுறுத்தி வேலை நிறுத்தம் செய்கிறார்கள்.. 
ஆனால் இவர்கள் உற்பத்தியை முழுமையாக நிறுத்திவிட்டு தெருவில் 
அமர்வது இல்லை.. மாறாக அவர்கள் ஒரு மாற்று யுக்தியை கையாள்கிறார்கள்..


உதாரணமாக ஒரு ஆயத்த ஆடை தயாரிக்கும் நிறுவனமென்றால், 
ஒரு சட்டை தயாரிப்பில் ஈடுபடும்போது அவர்கள் சட்டையின் எல்லா 
பாகங்களையும் இணைத்து 80 சதவிகித வேலையை நிறைவு செய்கிறார்கள்.. 
ஒரு காலரையோ.. ஒரு கை பகுதியையோ தைக்காமல் வைத்து விடுகிறார்கள்.. 
ஆக உற்பத்தி நடக்கும்.. ஆனால் அதனை விற்பனை செய்ய முடியாது.. 
அவர்களது கோரிக்கை தொடர்பான ஒரு சுமூகமான முடிவை எட்டிய 
உடன் அவர்கள் நிலுவையில் வைத்திருந்த பகுதியை இணைத்து 
முழுமை செய்கிறார்கள்... அப்போது அவர்களின் உற்பத்தி இலக்கு நிறைவடையும்... 
அவர்கள் செய்த வேலை நிறுத்தம் உற்பத்தியை எந்த விதத்திலும் 
பாதிப்பை ஏற்படுத்தி இருக்காது.. நிறுவனம் நஷடத்தை சந்திக்க 
வேண்டிய அவசியம் இருக்காது...

ஒரு போராட்டத்தில் கூட மாற்று சிந்தனையை கையாள்வதால் 
இழப்பில்லாமல் வெற்றி கிட்டும்.. எதையாவது இழந்த பின் கிடைக்கும் 
வெற்றியில் முழுமை இருக்காது...

வாழ்க்கையை எல்லோருமே வாழ்கிறார்கள்... 
அதில் ஒரு சரியான மாற்று சிந்தனையை கையாண்டு வெற்றி பெறுபவர் 
மட்டுமே வாழ்க்கையை ஜெயிக்கிறார்கள்...


நீங்களும் வாழ்க்கையை ஜெயிக்க வேண்டும்...
என்ன நண்பர்களே... ஜெயிக்கலாம் தானே....???

வாங்க ஜெயிக்கலாம் - 5

பணியாளர்கள்.
****************
 ஒருவர் ராணுவத்தில் பணியாற்றினார்.. ஐந்து ஆண்டுகள்.. 
அவர் பணியாற்றிய காலத்தில் யுத்தம் எதுவும் இல்லை என்றாலும் 
அவர் பல்வேறிடங்களில் பணி புரிந்திருக்கிறார்... மீட்பு பணியில் ஈடுபட்டிருக்கிறார்.. 
பின் ஏதோ தனிப்பட்ட காரணங்களால் விருப்ப ஒய்வு பெற்று திரும்பிவிட்டார்..
இது நடந்து இருபதாண்டுகள் உருண்டோடி விட்டது... 
வந்தவர் வீட்டில் சும்மா இருக்கவில்லை.. முன்னால் ராணுவத்தினர் என்ற 
அடிப்படையில் ஒரு பிரபலமான நிறுவனத்தில் 
பாதுகாப்பு அலுவலராக பணியில் சேர்ந்தார்.. சுமார் 18 ஆண்டுகால அனுபவம்...
ஆனால் இன்றும் கூட அவர் ராணுவத்தில் பணியாற்றிய காலத்தில் 
மேற்கொண்ட பயிற்சியை பற்றியும் , ஈடுபட்ட மீட்புப்பணிகளை பற்றியும் 
பேசிக்கொண்டிருகிறார்... கேட்க தயாராக இருந்தால் நாள் முழுவதும் கூட பேசுவார்... 
ஒவ்வொரு சம்பவத்தையும் பற்றி விவரிக்கும் போதும் 
அவரது கண்களில் அந்த சம்பவம் இப்போது நிகழ்வது போல ஒரு ஆர்வம் தெரியும்...

18 ஆண்டுகாலம் மேற்கொண்டிருக்கும் பாதுகாப்பு பணியை பற்றி அவர் எப்போதும் , 
எங்கும் பேசுவதே இல்லை... தன்னுடைய கடமையை சரியாக செய்தாலும் கூட 
அவருக்கு 20 ஆண்டுகளுக்கு முன்பு பணியாற்றிய ராணுவ பணியை பற்றி விவரிக்கும் 
ஆர்வம் இப்போதுள்ள பணியில் இல்லை..
ஏன் அப்படி..??
காரணம் இருக்கிறது.. அவர் பணியாற்றிய அந்த ராணுவ பணியை 
அவர் நேசித்த விதம் அப்படி.. ஒவ்வொரு நொடியையும் வாழ்ந்திருக்கிறார்.. 
அவரது மூளையின் ஞாபக அடுக்களை அந்த நாட்களால் நிறைத்து வைத்திருக்கிறார்.. 
ஆனால் இப்பொது தொடரும் பணியை ஒரு கடமையாக செய்துகொண்டிருக்கிறார்.. 
அதனால் தான் அவரால் 25 வருடங்கள் கடந்த பின்னும் கூட ராணுவத்தின் பயிற்சி
 நாட்களை பற்றி பசுமையாய் நினைவில் கொண்டிருக்க முடிகிறது..

       துபாய் நாட்டில் இந்தியாவை சேர்ந்த ஒரு துப்புரவு தொழிலாளி துப்புரவு பணியில்
 ஈடு பட்டுக்கொண்டிருந்தார்.. அந்த நாட்டின் மன்னரும் யூ ஏ ஈ நாட்டின் 
துணை பிரதமருமான திரு ஷேக் முகமது ரஷீது பின் அல் மக்தூம் அவர்கள் 
வழக்கமாக போய் வரும் பகுதி அது... நமது நாட்டில் இருப்பது போல மூன்று 
நாட்களுக்கு முன்பிருந்தே பாதுகாப்பு போலீசார் வரிசையில் நின்று காவல் 
காக்க வேண்டிய அவசியமோ, முன்னும் பின்னும் நூறு வாகனகள் தொடரும் 
ஆடம்பரமோ இல்லாத தேசம் அது.... மன்னர் எங்கு சென்றாலும் ஓரிரு 
வாகனங்கள் மட்டுமே உடன் செல்லும்.. சில நேரம் அது கூட இல்லாமல் 
தனித்தே வருவார் அவர்..அந்த துப்புரவு தொழிலாளி வேலை செய்யும் பகுதியை 
ஒவ்வொருமுறை கடக்கும் போதும் அவரை கவனித்தபடி செல்வார் மன்னர். 
யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தன்னுடைய கடமையை செய்துகொண்டிருப்பார் 
அந்த தொழிலாளி.. மிகவும் கவனமாக, பொறுப்புடன், கவனிக்கத்தான் ஆள் இல்லையே 
என்று நிழலில் அமராமல் தன்னுடைய கடமையை செய்வார் அந்த தொழிலாளி..
ஏறக்குறைய ஐந்தாறு ஆண்டுகள் தொடர்ந்து கவனித்தார்... 
அந்த தொழிலாளியின் வேலையில் எந்த வித மாற்றமும் இல்லை.. 
பொதுவாக வேலையில் சேரும் போது கடினமாக உழைக்கும் பலபேர் ஓரிரு 
ஆண்டுகள் அனுபவம் பெற்றபின், வேலை செய்யும் இடம் பழகிய பின் வேலையில் 
சற்றே மெத்தனம் காட்டுவது வழக்கம்.. ஆனால் இந்த தொழிலாளியிடம் 
அப்படியான மாற்றம் எதுவும் இல்லை.. அதே பொறுப்புணர்ச்சி.. அதே கடமை.. 
அதே வேகம்.. ஒரு நாள் அவர் வேலை செய்த பகுதியில் ஒரு வாகனம் நிற்க 
ஒரு போலீஸ் அதிகாரி இறங்கி வந்து அந்த தொழிலாளியை மன்னர் 
அழைப்பதாக கூறினார்.. தொழிலாளி சற்று .அல்ல. நிறையவே வெலவெலத்து போனார்..
 நடுங்கியபடி மன்னர் இருந்த காரின் அருகில் சென்றார்.மன்னர் அவரை பாராட்டி 
சுமார் ஐம்பதாயிரம் திராம்ஸ்களை (இந்திய மதிப்பில் அப்போது ஐந்து லட்ச ரூபாய் ) 
பரிசாக கொடுத்தார்.. இந்த செய்தி அன்றைய நாளிதழ்களிலும் வெளியானது.. 
அனைத்து மாநகராட்சி அலுவலகத்திலும் அந்த தொழிலாளியின் 
புகைப்படம் ஒட்டப்பட்டது...

ரு தொழிலதிபர் வீட்டில் ஒரு காவலாளி வாயில் காக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்... 
ஒரு நாள் அந்த தொழிலதிபர் அதிகாலையில் வெளியூர் பயணம் செல்ல 
விமான நிலையம் புறப்படும் போது இரவுப்பணியில் ஈடுபட்டிருந்த 
அந்த காவலர் தொழிலதிபரிடம் வந்து, இரவு தாமொரு கனவு கண்டதாகவும், 
அந்த கனவில் அந்த தொழிலதிபர் செல்லவிருக்கும் விமானம் விபத்துக்குள்ளாவதாகவும் , 
அவர் பயணத்தை தள்ளி போட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.. 
தொழிலதிபர் இந்த மாதிரி சென்டிமென்ட் விஷயங்களில் நம்பிக்கை உடையவர்... 
ஆகவே பயணத்தை தள்ளிப்போட்டார்... அந்த காவலர் சொன்னது போலவே 
தொழிலதிபர் பயணிக்க இருந்த விமானம் விபத்துக்குள்ளானது.. 
தொழிலதிபர் அந்த காவலாளியை கூப்பிட்டு பரிசு கொடுத்தார்.. 
அதோடு மட்டுமல்லாமல் அந்த காவலாளியை வேலையை விட்டு நீக்கினார்... 
ஏனென்றால் அந்த காவலாளி கனவு கண்டது பணியில் இருந்த போது ... 
காவல் செய்யும் கடமையில் இருக்கும் ஒருவன், கடமையை செய்யாமல் தூங்கி 
கனவு கண்டிருக்கிறான் என்றால் அவனுடைய வேலையை 
அவன் ஒழுங்காக செய்ய வில்லை என்று தானே அர்த்தம்... 
ஆகவேதான் அவனை பணிநீக்கம் செய்தார்..
மேற்கண்ட மூன்று சம்பவங்கள் நமக்கு சொல்வதென்ன...??
நீங்கள் ஒரு நிறுவனத்தில் பணியாளராய் இருக்கும்பட்சத்தில் 
உங்கள் கடமையை சரி வர செய்யுங்கள்... உடனே பலன் கிடைக்கவில்லை என்று 
ஆதங்கப்படாதீர்கள்.. பலன் கிடைக்கவில்லை என்பதற்காக உங்கள் 
வேலையை வெறும் கடமையாக நினைத்து செய்யாமல் ரசித்து செய்யுங்கள்.. 
நிச்சயம் அதற்கான சன்மானம் உங்களுக்கு நிச்சயமாய் கிடைக்கும்...