புதன், 7 செப்டம்பர், 2016

எது கல்வி..... எதற்காக கல்வி??பெண்கள் இயல்பாகவே நேர்மையும், கடமையுணர்ச்சியும் மிக்கவர்கள்... ஒரு வேளை சமூகம் அவர்களுக்குள் திணித்து வைத்த பயம் கூட இதற்கு காரணமாக இருக்கலாம்...

ஒரு அரசு/தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் பெண் அலுவலரை ஏதேனும் ஒரு வேலைக்காக அணுகும் போது , அவருக்கு கொடுக்கப்பட்ட வழிகாட்டும் கையேடு என்ன சொல்கிறதோ அதை மட்டுமே செய்வார்... அதில் ஏதேனும் ஒன்று குறைந்தால் கூட நிராகரித்து விடுவார்...

சில சமயம் "அவர் வேலையை மிகச்சரியாக செய்கிறார்" என்று வாதிட்டாலும் கூட நடைமுறை சிக்கல்களை பற்றி அவர் யோசிக்க மாட்டார்.. அவருக்கு யோசிக்கவும் தெரியாது...

அதே வேலையை, அதே ஆவணங்களுடன் வேறொரு ஆண் அலுவலரிடம் ஒப்படைக்கும் போது கட்டாயமாக தேவைப்படும் ஆவணங்களை தவிர கூடுதல் பலத்திற்காக (Supporting Documents) இணைக்க வேண்டிய ஆவணங்கள் இல்லை என்றாலும் கூட வேலையை முடித்துக்கொடுப்பார்... (இது லஞ்சம் சம்பத்தப்பட்ட விஷயம் இல்லை)

உதாரணமாக ஒரே மாதிரியான இரண்டு செட் ஆவணங்கள் தேவைப்படும் போது, ஒன்றில் இருக்கும் கூடுதல் இணைப்பு மற்றொன்றில் இல்லை என்றால் கூட ஆண் அலுவலர் அதை ஏற்றுக்கொள்வார்.. ஆனால் பெண் அலுவலரோ.. நீங்கள் போய் இன்னொரு காப்பி எடுத்து வாருங்கள் என்று திருப்பி அனுப்பி விடுவார்... ஆனால் காப்பி எடுக்கும் இயந்திரம் மூன்று கிலோமீட்டர் சுற்றளவிற்கு எங்குமே இருக்காது...

இதற்கு காரணம் நமது கல்வி முறை... அதை பெண்கள் கற்கும் விதம்... நமது கல்வி முறை நடைமுறை வாழ்க்கையை கற்றுக்கொடுப்பதில்லை.. பாட புத்தகங்களில் இருப்பவற்றை படித்து எழுதிவிட்டால் அவர் தேர்ச்சி பெற்று விடுவதாக இருக்கிறது... சுய சிந்தனையுடன் எடுக்கும் (எழுதும்) முடிவை விட, பாடப் புத்தகத்தில் இருக்கும் விஷயத்தை அப்படியே மனப்பாடம் செய்து பேப்பரில் எழுதிவிட்டால் முழு மதிப்பெண் கிடைக்கும்... அந்த விஷயத்தை கெட்டியாக பிடித்துக்கொள்ளும் பெண்கள் ஒரு எழுத்து கூட மாறாமல் அப்படியே ஞாபகத்தில் பதிவேற்றம் செய்து.. அதனை தேர்வறையில் பதிவிறக்கம் செய்வார்கள்... கூடுதல் மதிப்பெண்ணுடன் தேர்ச்சியும் பெறுவார்கள்...

பெரும்பாலான பெண்கள் (கவனிக்கவும்.. எல்லா பெண்களும் அல்ல) பொது ஞானம் என்பதே அற்று போயிருப்பார்கள்.. சூழ்நிலை-வாழ்க்கை பற்றிய சரியான கணிப்போ.., அணுகு முறையோ.., சமயோசித ஆற்றலோ அவர்களுக்கு கிடையாது...இருக்காது..... ஆனால் அவர்கள் இந்திய கல்வி முறையில் பல பட்டங்களை வாங்கி இருப்பார்கள்.. சீனம் கட்டிய குதிரை மாதிரி நேர் பார்வை மட்டுமே பார்ப்பார்கள்....கிட்டத்தட்ட ஒரு புரோக்கிராம் செய்யப்பட்ட ரோபோ மாதிரி...

அதனால் தான் நடைமுறை சிக்கல்கள் பற்றி அவர்களால் யோசித்து ஒரு தெளிவான முடிவு எடுக்க முடிவதில்லை...

# இங்கே எழுத்துத் தமிழில் எழுதிய விஷயத்தை நான் என் மனைவியிடம் பேச்சுத்தமிழில் சொல்லிக்கொண்டிருந்தேன்.... அப்போது அவள் கேட்டாள்....

"நீங்க ரொம்ப பொது அறிவு உள்ளவரு.. உள்ளூர் அரசியல் முதல் உலக அரசியல் வரைக்கும் பேசுவீங்க.. அமெரிக்க பொருளாதாரம், ஐரோப்பிய நாகரீகம் பத்தி பேசுவீங்க.. கிரேக்க வரலாறு... சங்ககால மன்னர்கள் கதை எல்லாம் சொல்வீங்க... ஆனா இதுவரை கிழிச்சது என்ன...?????

எங்க பக்கத்து வீட்டு பொண்ணு MCA ல காலேஜ் பர்ஸ்ட் வந்தா.. உங்களுக்கு தெரிஞ்ச எதுவும் அவளுக்கு தெரியாதுதான்.. ஆனா அவ சென்னைல ஒரு ஐ டி கம்பெனில மாசம் நாலு லட்சம் சம்பாதிக்கிறா.... நீங்க சொன்ன வாழ்க்கை கல்வி படிச்சிருந்தா அவளும் உங்கள மாதிரி வியாக்கியானம் பேசிகிட்டு ஃபேஸ்புக்ல ஸ்டேடஸ் தான் போட்டிருப்பா...."

ஷ்ஷ்ஷ்ஷ்... இவ்ளோ நேரம் உயிரை கொடுத்து பேசினேனே டி.. இப்படி ஒரு நிமிஷத்துல பீச புடுங்கிட்டியே....
மாத்துறேன்... எல்லாத்தையும் மாத்துறேன்... இந்திய கல்வி முறைய மாத்துறேன்...

யப்பா.. புண்ணியவானே... புள்ளைங்களையும் கெடுக்காம அந்த பக்கம் போறியளா.....

புகைப்படம்:- இணையத்திலிருந்து

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக