வெள்ளி, 18 செப்டம்பர், 2015

சூப்பர் கடுதாசி....

வலைப்பதிவர் திருவிழா-2015புதுக்கோட்டை- நிகழ்ச்சியில் நடைபெறும் கட்டுரை போட்டிக்கான  பதிவு 

போட்டி பிரிவு: சுற்றுச் சூழல் விழிப்புணர்வு 


எங்க ஊர்ல மாபெரும் பணக்காரங்ககிட்டதான் மழைக்கோட்டு இருக்கும்.. இத வச்சிருக்கும்  அந்த மாபெரும் பணக்கார வீட்டு படிச்ச  புள்ளைங்க அத  "ரெயின் கோட்டு " என்று சொல்வதே பெரிய ஆச்சர்யமா இருக்கும் .  பணக்காரங்க  வீட்ல தான் குடை இருக்கும்... அந்த வீட்டு வயசான மனுஷங்களோட பாதுகாப்புல நீளமா கருப்பு துணில வளைஞ்ச கைப்புடியோட இருக்கும்.. விரிச்சு புடிச்சா மூணு ஆளு நனையாம போவலாம் 


அப்போ எல்லாம் மழை பெய்யுறப்போ  மாட்ட அவுத்து கொட்டாயில கட்டவோ, கோழி கொடப்பு மூடவோ நமக்கெல்லாம் சணல்  சாக்குதான்... சமயத்துல வயலுக்கு யூரியா வாங்கிட்டு வந்த வெள்ள சாக்கு.. அந்த சாக்க தலைகீழா திருப்பி ஒரு முக்கத்த அப்படியே உள்ள அமுக்கி மறு முக்கத்துக்குள்ள நுழச்சுட்டா இப்போ அது பாதி சாக்கு மாதிரி ஆயிடும்.... அந்த பாதி சாக்க தலைல கவுத்துகிட்டா குடை ரெடியாயிடும்...


அதுலயும் எங்க  நடைய்யா இருக்காரே... தென்னங்கீத்துலையே ஒரு பெரிய  படப்பு செய்வாரு .. அது ஒரு தொன்னை மாதிரி  ஒருபக்கம் நீளமாவும் மேல் பக்கம் வளைவாவும் இருக்கும்.. கட்டைலேயே செஞ்ச செருப்பு  இருக்கும்.. அத மிரிலி கட்டை ன்னு சொல்லுவோம் எங்க ஊர்ல.. அந்த மிரிலி கட்டைல துளை அடிச்சிருக்கும்.. அதுல பனை நாருல  காது கட்டி வச்சிருப்பாரு.. அது ரெண்டையும் பொக்கிஷம் மாதிரி வச்சிருப்பாரு...மழை காலத்துல அந்த கீத்து படப்ப தலைல மாட்டிகிட்டு மிரிலி கட்டைய கால்ல மாட்டிகிட்டு வயலுக்கு போனா காத்து மழை, சேத்து புண்ணு  எல்லாத்துல இருந்தும் பாதுகாத்துக்கலாம்...


அந்த மாதிரி சமயத்துலதான் மதுக்கூரு  மரைக்காயர் கடைல சூப்பர் கடுதாசிய செவப்பு பச்சை மஞ்ச ஊதான்னு கலர்கலரா தொங்க விட்டு வித்தாங்க.பாக்க நல்ல அழகா.. இருக்கும்... அப்படியே கைக்குள்ள அடங்கற மாதிரி மடிச்சு அழகா எடுத்துட்டு போலாம்...


அப்போ வயலுக்கு நடவு நட போற  பொம்பளைங்க எல்லாம் ஆளுக்கொரு சணல் சாக்கோ வெள்ள சாக்கோதான் எடுத்துட்டு போவாங்க... அவங்களுக்காகவே வந்துச்சு இந்த கலர்கலரா வந்த சூப்பர் கடுதாசி.. இத ஊரு வழக்குல மழை காயிதம்னு சொல்லுவாங்க 


பெரட்டாசி(புரட்டாசி ) வந்தாலே மானம் முனுமுனுன்னு தூற  ஆரம்பிச்சிடும்..  வெய்யிலுக்கு கூட செத்த நேரம் வீட்டுல சாயலாம்.. மழைல ஓஞ்சு உக்கார முடியுமா... அப்போ ஒக்காந்துட்டா குடும்பமேல்ல ஒக்காந்துடும்...மழையோட மழையா நட்டாத்தான் ஆச்சு..


நடவுக்கு வார சனமெல்லாம் ஆளுக்கு ஒண்ணா தலைல மாட்டிகிட்டு வரும்.. "ஏ  பொன்னம்மா... அடியே ராக்கு... ஏட்டி நாழியாச்சு வாங்கடி...."  கூப்பிடுவா கங்காணி பொம்பள.. (கங்காணி - கண்காணிப்பாளர்- சூபர்வைசர்) கங்காணித்தான் அந்த குழு தலைவி... அவருக்கு கங்காணி சம்பளம் ரெண்டு ரூபா கூடுதலா கிடைக்கும்...


இன்னாருக்கு நடவு நட இத்தன ஆள் போங்கன்னு ஆள் பிரிச்சு விடறதும்.. சம்பளத்த வேளாமூட்டுவல்ல ( வேளாமூடு- வேளாண்மை  செய்பவர் வீடு  ) வாங்கி பங்கு பிரிச்சு தறதும் அவரோட வேலை... இந்த மேனேசுமெண்டு சோலி  பாக்குறதால  அவரு கொஞ்சம் வெரப்பாத்தான் இருப்பார்..


"ஏ .. பொன்னம்மா..." ன்னு கூப்புடுறப்போ அந்த அதிகாரம் கொஞ்சம் தெரியும்.. ஆளுக்கொரு மழைக்காகிதத்த தலைல கவுத்துகிட்டு ஒரு வாழ நாரையோ.. சணல் கயித்தையோ சுத்தி இடுப்போட சேத்து கட்டிபுட்டா  அந்திக்கு வீட்டுல வந்து அவுக்கலாம்.. அப்படியே இருக்கும்...


அதுக்கு பொறவு.. எல்லாத்துலையும் கொஞ்சம் கொஞ்சமா வந்துட்டு சூப்பர கடுதாசி... தாழ மட்டைல கூடு மாதிரி பின்னி இருக்க உமல் பொட்டி எடுத்துகிட்டுதான் சந்தைக்கு மீனு வாங்க போவாங்க... துணிக்கடைல கொடுக்குற மஞ்ச பை எடுத்துகிட்டுதான் சந்தைக்கு சாமான் வாங்க போவாங்க...இப்போ எல்லாம் காச மட்டும் எடுத்துகிட்டு கைய வீசிக்கிட்டு  கடத்தெருவுக்கு போனா அங்க இருந்து கேரிபேக்குலையே எல்லாத்தையும் வாங்கிகிட்டு வீட்டுக்கு வந்துடலாம்...கொஞ்சம் கொஞ்சமா எல்லாத்துலையும் நொழஞ்சிடுச்சு இந்த சூப்பர் கடுதாசி... 


நம்ம ஊருபக்கம் எதுக்காக மொதல்ல நொழஞ்சுச்சோ அந்த சூப்பர் கடுதாசி.. அந்த காரணமெல்லாம் காணாம போச்சு.. ஆனா சூப்பர் கடுதாசி மட்டும் தங்கிடிச்சு..இப்போ விவசாயம் பண்ண ஆள் இல்ல.. வேலை செய்ய கூலி ஆள் கிடைக்கல... மழை சரியான நேரத்துல பெய்யிரதில்ல ..   அடுத்த தலைமொறைல பொறந்த புள்ளைங்க எல்லாம் சேத்துல மட்டுமில்ல.. நாங்க சோத்துல கூட கைவைக்க மாட்டோம்னு என்னமோ பீசாவாமே.. அதையும் கே எப்பு சியையும் கரண்டில சாப்பிடுற நாகரிகத்த கத்துகிட்டாங்க...வயக்காடெல்லாம் தருசுக்காடா கெடக்கு..

ஆனா மழைக்காகிதமா உள்ள வந்த சூப்பரு கடுதாசி மட்டும்.. அந்த தரிசுலயும் கெடக்கு.. ரோட்டுலயும் கெடக்கு.. வீட்டுல கண்ட இடமெல்லாம் கெடக்கு..ஏ பொன்னம்மான்னு அடுத்த தெருவுல இருக்குற பொன்னம்மாவ சத்தம் போட்டு நடவுக்கு கூப்புட்டவங்க இப்போ  குனு குனுன்னு செல்லுல பேச தொடங்கிட்டாங்க..

அப்போ  எல்லாம் அழகா  பூ  பூவா  பின்னின  வயர் கூடை வச்சிருப்பாங்க.. கட-கன்னிக்கு போகனும்னா  அந்த கூடையத்தான் எடுத்துட்டு  போவாங்க.. அஞ்சாறு வருஷம் ஒரே கூடை பைதான்... மீன் வாங்கன்னு  தாழம் ஓலைல பின்னின  ஒரு பை வச்சிருப்பாங்க...அதுக்கு உமலு பொட்டின்னு பேரு..அதை எடுத்துகிட்டுதான்  மீன் வாங்க  போவாங்க... ஆட்டுக்கறி வாங்கினா  பச்சையா  வெட்டி வெயில்ல வதங்க போட்ட பனை மட்டை ல கட்டி தருவாங்க... 

ஆனா இப்போ  ஜனங்க என்ன வாங்க போனாலும் காசும், செல்போனும்  மட்டும் இருந்தா போதும்னு முடிவுபண்ணிட்டாங்க ... உமல் பொட்டி எடுத்துகிட்டு  மீன் வாங்க  போனா  கடைக்காரன் வேற்று கிரகத்துல  இருந்த வந்தவன  பார்க்கிற மாதிரி பார்க்கிறான்... காய்கறிக்கடைக்கு பை எடுத்துகிட்டு காய்கறி வாங்க  போனா   எங்க பக்கத்து  ஊரான லண்டன்ல (அட... அந்த எலிசபெத் ராணி  இருப்பாங்களே... அதே லண்டன்தான்) இருந்து காய்கறி வாங்க வந்தவன் நம்மள நக்கலா  பார்க்கிறான்..

மீன் வாங்கிட்டு வர வச்சிருந்த உமலு பொட்டியோ , கறி கட்டி வாங்கிட்டு வந்த பனை ஓலையோ கொஞ்ச நாள்லயே  கரையான் அரிச்சோ, மக்கியோ மண்ணோட மண்ணா  போய்டும்... ஆனா  பத்து வருஷத்துக்கு முன்னாடி வாங்கின பிளாஸ்டிக் கேரி பேக்கும், பிளாஸ்டிக் கொடமும்  இன்னமும் மக்காம அப்படியே கெடக்கு..

காய்கறி கழிவுகளையும், மாட்டு சாணத்தையும், வைக்கோலையும் போட்டு நிரப்பி இருந்த குப்பைக்குழில  இப்போ கலரு கலரா  கேரிபேக்குதான்  கெடக்கு... குப்பை குழில  தூண்டில் பொட்டு மீனு புடிக்க ஏரிக்கு போக குப்பை குழில மம்பட்டி எடுத்து ஒரு கொட்டு வெட்டினா  மம்புழுவா (மண்புழு) நெளியும்... இப்போ  மம்புழுவை பார்க்கிறதே  அரிதாகிப்போச்சு...

உமலு பொட்டிய  காணோம்..
முதலியார் ஜவளி கடைல கொடுக்கிற  மஞ்ச துணிப்பைய காணோம்..
பனை ஓலைய  காணோம்..
விசிறி மட்டைய  காணோம்..
மிரிலி கட்டைய  காணோம்..
கொடலை மட்டைய  காணோம்..
மண்புழுவ காணோம்... 
பாப்பா பூச்சிய  காணோம்..

இப்படி எத்தனை எத்தனை காணோம்கள்... ஆனா அத்தனையோட  இடத்துலயும் ஒரே ஒரு விஷயம் தான் நீக்கமற நிறைஞ்சி கெடக்கு..
எங்க  பாத்தாலும்  எதுல  பாத்தாலும்  கலரு கலரா  பிளாஸ்டிக் தான் தெரியுது..


ரோட்டுல காலைல அவுத்து விட்டா மேயப்போற மாடுங்க ரோட்டுல சாணி போட்டு வைச்சு அத கால்ல மிதிச்சுடோம்னு ஓடிப்போய் கழுவுன புள்ளைங்க நவீனமா கொண்டு வந்த சூப்பரு கடுதாசி மச்சும் போவாம மண்ணாவும் போவாம எங்க பாத்தாலும் கலர் கலரா எறஞ்சு கிடக்கு...

இயற்கையா  கிடைச்ச பொருட்களை  தினசரி உபயோகத்துக்கு  தேவையான பொருட்களா  மாற்றி  இயற்கையோடு இணைஞ்சு வாழ்ந்த  மக்களை.. நாகரீகம்னு நம்பவச்சு  மனித லுலத்தையும் இயற்கையையும் சீரழிக்கிற பிளாஸ்டிக் எமன பயன்படுத்த வச்சுட்டாங்க... அப்பாவி ஜனங்களும் அதோட அழிக்கும் சக்தி தெரியாம பயன்படுத்திகிட்டிருக்காங்க.. அதாவது  தன்னோட  விரலால  தன்னோட  கண்ண குத்திகிட்ட்டிருகாங்க.....

 சூப்பருன்னு பேரூ வச்சாலே நம்மூரு சனத்தோட மனசுல ஒட்டிக்கிடலாம்.. ஆனா சூப்பருன்னு பேருவச்ச எதாலையும் நமக்கு ஒரு புண்ணியமும் இல்ல...


மரைக்காயர் கடைல கலர் கலரா தொங்கவிட்டப்போ இருந்த ஆசை இல்ல இப்போ எல்லாம்.. அந்த கலார எங்க பாத்தாலும் பத்திகிட்டு வருது.... 


செவ்வாய், 28 ஜூலை, 2015

உனக்காகவும் கொஞ்சம் வாழ்ந்து பாரேன்

இப்போ நீங்க கஷ்டப்படவே இல்லையா.. சத்தியமா கொஞ்சம் கூட கஷ்டப்படாம சந்தோஷமா இருக்கீங்களா...?? உங்க மனச்சாட்சிய தொட்டு சொல்லுங்க...??

இல்லை தானே.. உங்களுக்கும் பணக்கஷ்டம். மனக்கஷ்டம் இருக்கத்தானே செய்யுது....?? ஆனா உங்க அப்பா நீங்க கஷ்டப்படனும்னா நினைச்சார்....?? நான் எவ்ளோ கஷ்டப்பட்டாலும் பரவாயில்ல.. எம்புள்ளயாச்சும் சந்தோஷமா இருக்கணும்னுதானே ஆசைப்பட்டார்.. அதுக்காக அவர் எவ்ளோ தியாகம் பண்ணார்... ?? ஆனாலும் உங்களால கஷ்டம் இல்லாம வாழமுடியலையே.. ஏன்...??
எப்போவாச்சும் யோசிச்சு பாத்தோமா....??

உங்க அப்பா கால் நடையா போயிருப்பார்... கொஞ்சம் கொஞ்சமா கஷ்டப்பட்டு சைக்கிள் வாங்கி ஒட்டி இருப்பார்.. ஆனா அந்த நேரத்துல ஊர்ல ஒரு நாலைஞ்சு பேராச்சும் பைக் வாங்கி வச்சிருந்திருப்பாங்க... அப்போ உங்க அப்பா என்ன நினைச்சிருப்பார்...??

எனக்குதான் சைக்கிள் வாங்குறதுக்குள்ள நாக்கு தள்ளிடுச்சு.. ஆனா எம்புள்ளையாச்சும் பைக் வாங்கி ஓட்டனும்... அதுக்காக நாம பட்டினி கெடந்தாச்சும் நம்ம புள்ளைய நல்லா படிக்க வைக்கணும்னு நினைச்சிருப்பார்... எல்லோரும் போட்டுட்டு போற மாதிரி எம்புள்ளையும் நல்ல துணி மணியா போட்டுட்டு போகணும்னு ஆசை பட்டிருப்பார்.. அதுக்காக அவர் கிழிஞ்ச வேட்டி சட்டையோட கஷ்டப்பட்டிருப்பார்...

அவர் ஆசைப்பட்ட மாதிரி இன்னிக்கு நீங்க வந்திருப்பீங்க.. ஆனாலும் உங்களால சந்தோஷமா வாழ முடியல... ஏன்னா உங்க பக்கத்து வீட்டுக்காரனோ.... தெருக்காரனோ கார் வாங்கி இருப்பான்... இப்போ நீங்க என்ன நினைகிறீங்க...?? நான் கஷ்டப்பட்டாலும் பரவாயில்ல.. எம்புள்ளைய ஒரு பெரிய பள்ளிக்கொடத்துல சேத்து பெரிய படிப்பு படிக்க வச்சு அவனும் கார் பங்களான்னு வாழனும்... அதுக்காக நாம தியாகம் பண்ணுவோம்னு ஓடி ஓடி உழைகிறீங்க....

அப்போ அவன் சந்தோஷமா இருப்பனா...?? அதுதான் இல்ல....
அவன் காலத்துல அவனோட இலக்கு வேறயா இருக்கும்.. அவன் வேற யாரோடையோ போட்டி போட்டு.. அவன் புள்ளை வாழணும்னு அவனும் பல தியாகங்கள செஞ்சுகிட்டிருப்பான்... அவனும் சந்தோஷமா வாழ மாட்டான்.. இது ஒரு தலைமுறைல முடியிற நூறு மீட்டர் ஓட்டம் இல்ல... தலை முறை தலைமுறையா தொடர்ந்து ஓடுற முடிவே இல்லாத ..மாரத்தான் ரிலே ஓட்டம்...

சோ.... உங்க புள்ளை சந்தோஷமா வாழனும்தான்.. அதே நேரம் அதுக்காக உங்க வாழ்க்கைய தொலைக்காதீங்க.... அடிப்படை தேவைக்கு என்ன வேணுமோ அத சேர்த்து வைங்க.. அதுக்காக இருக்கறது எல்லாத்தையும் கொண்டாடி அனுபவிச்சுட்டு பையன மொட்டையா விட்டுட்டு போகாம அவனுக்கு அடிப்படை தேவைக்கு சேர்த்து வைங்க.. அதே நேரம்.. உங்க வாழ்க்கையையும் வாழுங்க....

வாழும்போதே திட்டமிடு

ஒரு நாடு இருந்துச்சு... அந்த நாட்ட ஒட்டி ஒரு பெரிய ஆறு.. அந்த ஆத்துக்கு அதுத்த கரைல பயங்கரமான மிருகங்கள் இருக்க ஒரு பெரிய காடு...

அந்த நாட்டுல ஒரு சட்டம்.. என்னன்னா... அந்த நாட்டுக்கு யாரு வேணும்னாலும் ராசாவா இருக்கலாம்... ரெண்டு வருஷம் மட்டும் தான்.. ரெண்டு வருஷம் முடிஞ்சதும் அந்த நாட்டு மக்கள் எல்லாம் கூடி அந்த ராசாவா இருந்த ஆள கட்டி தூக்கி கொண்டு போய் ஆத்துக்கு அடுத்தபக்கம் இருக்க கட்டுலவிட்டுடுவாங்க... அப்படி காட்டுக்கு போய்ட்டா திரும்ப வரக்கூடாது.. வரவும் முடியாது... 
இப்படி ரெண்டு வருஷ ராச வாழ்க்கைக்கு ஆசை பட்டு மிச்சமிருக்க காலத்த இழக்க யாருக்கும் ஆசை இல்லாததால எப்போதுமே ராச பதவி காலியாவே இருக்கும்... அப்படியும் பதவிக்கு ஆசைப்பட்ட யாராவது ராசாவா போய் உக்காருவாங்க... அவங்களால ஒரு ஆறுமாசம் கூட அந்த வசதிகள அனுபவிக்க முடியாது.. நாள் ஆக ஆக.. இன்னும் ஒன்னரை வருஷம்.. இன்னும் ஒருவருஷம்.. இன்னும் ஆறுமாசம்னு அவங்கள பயம் உலுக்க ஆரம்பிக்கும்... இதுல பகுதி பேரு கடைசி நாள் வரதுக்கு முன்னாடியே மன நோய்லையே செத்து போய்டுவாங்க...

இப்படி இருக்கும் போது ஒருத்தன் அந்த ராசா பதவிக்கு ஆசைப்பட்டு அரியணை ஏறினான்... எந்த சண்டை சச்சரவுக்கும் போகாத நாடுங்கிறதால மத்த எத பத்தியும் கவலை படாம நல்லா சந்தோஷமா ராச போக சுகத்த அனுபவிச்சான்... இதுக்கு முன்னாடி அந்த பதவிக்கு வந்தவங்க எல்லோருக்குமே ஆறு மாசத்துலயே மூஞ்சில ஒரு சவக்களை வந்திடும்.. எதையோ பறிகொடுத்த மாதிரியே திரிவாங்க.. ஆனா நம்ம ஆள் மட்டும் சந்தோஷமாவே இருக்கான்... ரெண்டு வருஷமும் முடிஞ்சு போச்சு.. கடைசி நாள்... அண்ணிக்கு கூட நம்ம ராசா ரொம்ப ரொம்ப குஷியா இருக்கான்....
பதவி காலத்தோட கடைசி நாள்....எல்லோரும் கூடி அந்த ராசாவ கூட்டிகிட்டு போக வந்தாங்க.... உடனே ராசா.. நீங்க யாரும் என்னை கட்டி எல்லாம் தூக்க கூடாது.. நான் இந்த நிமிஷம் வரை ராசாதான்.. எல்லாரும் என் பின்னாடிதான் வரணும்.. நானே ஆத்துக்கு போவேன்னு சொல்லி பெரிய தேர் எல்லாம் ஏற்பாடு பண்ணி அதுல உட்கார்ந்து போனான்.. மக்கள் எல்லோரும் அவன் தேர் பின்னாடி நடந்து போனாங்க.....
ஆத்துல படகு தயாரா இருந்துது.... அந்த படகையும் நல்லா அலங்காரம் பண்ணச்சொல்லி உத்தரவு போட்டான்.... அதையும் செஞ்சாங்க..... ஒருத்தர் மட்டும் துணிச்சலா கேட்டுட்டாரு....
"ஏன் ராசா.... உங்களுக்கு கொஞ்சம் கூட வருத்தமோ.. பயமோ இல்லையா....?"
அதுக்கு ராசா சொன்னாரு....
"அட முட்டாப்பசங்களா..... நான் ராசாவா இருந்த பதவி ஏத்த அன்னிக்கே பக்கத்து நாட்டுல இருந்த ஆளுங்கள ரெடி பண்ணி எதிர் கரைல இருக்க காட்டுல ஒரு பகுதிய சரி பண்ணி எங்க எல்லா வசதிகளையும் பண்ணி வச்சுட்டேன்.... விருப்பப்பட்ட மக்களையும் அங்க குடியேற சொல்லிட்டேன்.... அது மட்டுமில்ல... அப்படி புதுசா உருவாக்குன ஊருக்கு நானும் என் தலைமுறையும் தான் ராசாவா இருக்குற மாதிரி சட்டம் எல்லாம் போட்டுட்டேன்.... இப்போ நான் அந்த கரைல போய் இறங்கினதும் எனக்கு பெரிய வரவேற்பு கொடுக்க என் நாட்டு மக்கள் அங்க காத்துகிட்டிருப்பாங்க.."ன்னானாம்....
# இப்படித்தாங்க..... நம்மள்ள பல பேரு வாழும்போதே திட்டம் போட்டு செயல் படுத்தாம .. தும்ப விட்டுட்டு வால புடிச்ச கதையா... வயசானப்புறம் பல நோய்கள வாங்கி அத நினைச்சு நினைச்சே செத்துப்போறோம்...........!!!

உங்கள் முகமூடிக்கு பின் இருக்கும் முகம் எது?

"நாராயணன் கிருஷ்ணன்"

2010 ஆம் ஆண்டு ஊடகங்கள்-பத்திரிகைகள்- சமூக வலைத்தளங்களில் இந்த பெயர் தீ போல பரவியது...1981ல் பிறந்து வெளிநாட்டில் வேலை கிடைத்த பின்பும் கூட மதுரையில் இருக்கும் மனநலம் குன்றியோர்-ஆதரவற்றோருக்கு சேவை செய்யும் நோக்கில் வெளிநாட்டு வேலையை புறக்கணித்த இளைஞர்... உலகின் தலைசிறந்த பத்து மனிதர்களுள் ஒருவராக சி என் என் தொலைக்காட்சி இவரையும் தேர்ந்தெடுத்து கவுரவித்தது... அப்படி தேர்வு செய்ய இணையதளங்களில் வாக்கெடுப்பு நடத்தியது...


ஒரு இளைஞன்.. அதுவும் தமிழன்.. அதுவும் தமிழ்நாட்டிலேயே இருந்துகொண்டு உலகப்புகழ் பெற போகிறார் என்ற உடன்.. வெளிநாட்டில் கூலிக்கு வேலைக்கு வந்த தமிழனான எனக்கு வெட்கமாக இருந்தாலும்... அவன் நம்மூர்காரன் என்ற பெருமையோடு நிறைய நிறைய நண்பர்களை இணையத்தில் வாக்களிக்க சொல்லி நேரடியாகவும், ஃ பேஸ்புக் மூலமாகவும் வேண்டுகோள் விடுத்தேன்.. சிலர் என் கண் முன்னாலேயே வாக்களித்தனர்.. பலர் எனக்கு தெரியாமல் வாக்களித்திருக்கலாம்...

பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் என்பதை போல.. மனநலம் குன்றியோரையும்-ஆதரவற்றோரையும் இவன் தனது வலைக்குள் கொண்டு வரும் தந்திரமே அப்படி தேடி தேடி போய் சோறு ஊட்டியது என்றும்.. அப்படி தன்னுடைய கட்டுக்குள் கொண்டுவந்தவர்களின் உயிரை பறித்து உடல் உறுப்புகளை விற்று வருகிறான் என்று தகவல் கேள்விப்பட்டதும்.. அடைந்த அதிர்ச்சிக்கு அளவே இல்லை...

எவன நம்புறதுன்னே தெரியலையே... கடவுளே.. என்று என்னை நானே நொந்துகொண்டேன்...

அந்த நாராயணன் கிருஷ்ணனை பற்றி செய்தி தாள்களில்தான் படித்தோம்...

இங்கே ஃபேஸ்புக்கில் சிலர் மிகவும் மரியாதைக்குரியவர்கள் என்று நான் நம்பிக்கிடந்தேன்... நல்லவர்கள் என்று நினைத்தேன்... ஆனால் சமீப காலமாக அவரிடம் பணம் வாங்கிக்கொண்டு ஏமாற்றிவிட்டார்.. இவரிடம் பொருள் வாங்கிக்கொண்டு ஏமாற்றிவிட்டார் என்று கேள்விப்படும்போது ஏற்படும் அதிர்ச்சியை தவிர்க்கவே முடியவில்லை...

நீங்களா...??????? நீங்களா இப்படி.. ?????????????/ நீங்களுமா இப்படி...????????????????

எப்படிப்பா.. நல்லவன்ற முகமூடிக்குள்ள இருக்க உங்க உண்மை முகத்த கண்டுபிடிக்கறது???

கடவுளே.... யாரை நம்புறது... யாரை சந்தேகப்படுறது?? இதுக்கு ஒரு தீர்வே இல்லையா.... cry emoticon


கிராம நீதிபதி...- திரு விஸ்வநாதன் அவர்கள்

சீவாடிக்கும் (ஒரு குளத்தின் பெயர்) , மெயின் ரோட்டுக்கும் நடுவுல ஒரு ரெண்டு கிலோமீட்டர் இருக்கும்... எடப்பட்ட எடமெல்லாம் வெவசாய நெலங்க..

கோட நாள்ல ஒன்னும் பெரச்சினை இருக்காது.. ஆனா மழ காலத்துல எல்லோரும் நெல்லு பயிர் வெவசாயம் செய்வாங்க.. ஒருத்தர் முன்னாடி நடுவார்.. ஒருத்தர் லேட்டா நடுவார்... அப்போ வெதைக்க போறதுக்கோ, நடவு நட போறதுக்கோ வெளஞ்சத அறுத்து கொண்டு வரவோ ரொம்ப கஷ்டம்...
சேறடிச்ச வயலுக்குள்ள மாடுங்க ரொம்ப கஷ்டப்படும்..

அப்போதான் அந்த பக்கம் இருக்க வயகாரங்க எல்லாம் ஒண்ணா பேசி பெரசரெண்டு (PRESIDENT - பஞ்சாயத்து தலைவர்) கிட்ட போய் சொன்னாங்க...

"அந்த பக்கம் புதுசா ஒரு ரோடு எடுக்கனுங்கய்யா... மழைகாலத்துல ரொம்ப கஷ்டமா இருக்கு... "

பெரசரண்டும் சரின்னு சொல்லிட்டாரு... எல்லோரும் கூடி எந்தப்பக்கம் புதுசா ரோடு எடுக்கலாம்னு முடிவு பண்ணி வேலைய ஆரம்பிச்சுட்டாங்க... சீவாடில ஆரம்பிச்சு வரப்புகள எல்லாம் தட்டி தட்டி ரோடா நெரவிகிட்டு போறாங்க...

எல்லா இடத்துலயும் ஒரு வில்லன் இருக்கணுமே... இங்கனயும் ஒருத்தர் இருந்தார்...

"அதெப்படிடா என்னோட வயல்ல நீங்க ரோடு போடுவீங்க... எனக்கு ரோடும் வேண்டாம்,.. ஒன்னும் வேண்டாம்... நீங்க ஒங்க சோலிய பாத்துகிட்டு போங்க.."ன்னு தாண்டி தலைகுப்புற குதிக்கிறார்...

பெரசரண்டு நிக்கும்போது மத்த ஆளுங்களுக்கு என்ன பேச்சு.. எல்லோரும் ஒருத்தர ஒருத்தர் பாத்துகிட்டு பேசாம நிக்கிறாங்க....

"சரிப்பா... ஒனக்கு ரோடு வேண்டாமா.. சரி... வேணும்னா மட்டும் வந்து சொல்லு... இப்போ இதுல ரோடு போட வேண்டாம்"ன்னு சொல்லிட்டு.. மத்தவங்கள பாத்து.... "நீங்க ஏம்பா நிக்கிறீங்க... இந்த வயல மட்டும் விட்டுட்டு அடுத்த வயல்ல இருந்து வேலைய ஆரம்பிங்க"ன்னுட்டு போய்ட்டார்...

இப்போ சீவாடில இருந்தும், மெயின் ரோட்டுல இருந்தும் ரோடு போட்டாச்சு.. விடமாட்டேன்னு சொன்னவரோட வயல் மட்டும் நடுவுல கெடக்கு... ஒருவாரம்.. பத்து நா ஆச்சு.. போற வர ஆளுங்க எல்லாம் விடமாட்டேன்னு சொன்னவற திட்ட ஆரம்பிச்சுட்டாங்க... ஊரு வாசாப்ப வாங்கினா அது தலைமொறைக்கும் பாதிக்குமில்லையா.....

வேற வழியே இல்லாம... விடமாட்டேன்னு சொன்னவர் பெரசரண்டு கிட்ட போய் .. "அய்யா.. தெரியாம செஞ்சுட்டேன்யா.. மன்னிச்சுக்குங்க... நீங்க சொல்லி ரொட்ட முழுசா போட சொல்லுங்கா.."ன்னு கதறிட்டார்...

அப்புறம் என்ன... ரோடு முழுசா ஆச்சு.. இப்போ அதுல தார் எல்லாம் போட்டு பெரிய ரோடா பெரசரண்டு பேரையும், இந்த கதையையும் சொல்லிகிட்டே கண்ணங்கரேர்னு படுத்துக்கெடக்கு....

எத்தன பஞ்சாயத்து.. எத்தன தீர்ப்பு.... இப்போ இதெல்லாம் கோர்ட்டுக்கு போனா மூணு தலமொற ஆனாலும் தீராது... இங்க அப்பீலும் இல்ல.. வாய்தாவும் இல்ல... அநியாயமும் இல்ல.. தீர்ப்புன்னா அது காலத்துக்கும் யாருக்கும் கெடுதல் இல்லாம நறுக்குன்னு சொல்லிடுவாரு... எழுத ஆரம்பிச்சா எத்தனையோ புத்தகம் எழுதலாம்....

அந்த பெரெசரெண்டு பேரு - அய்யா விஸ்வநாதன்..

அந்த ஊரு -காசாங்காடு (பட்டுக்கோட்டை-தஞ்சாவூர் மாவட்டம்)

பெயர் வைத்தால் போதாது

சரித்திர புதினங்களை ஆர்வமுடன் படிப்பவர்கள் அவற்றில் வரும் சம்பவங்கள், சாகசங்களால் கவரப்பட்டு, அதில் ஏதேனும் ஒரு பாத்திரத்தின்பால் ஈர்க்கப்பட்டு தங்கள் குழந்தைகளுக்கு அந்த பெயரை சூட்டி மகிழ்வார்கள்...

வந்திய தேவன்... ராஜராஜ சோழன்.. ராஜேந்திர சோழன்... அருண்மொழி... இப்படியாக....

ஆனால் துரதிஷ்டவசமாக , அந்த பெயரை சூட்டியவர்கள் அந்த பாத்திரத்தின் குணநலன்களை ஊட்ட தவறி விடுகிறார்கள்.. இது அவர்கள் குற்றமல்ல.. சமயங்களில் காலம் ஒத்து வருவதில்லை... சில சமயங்களில் பிள்ளைகள் ஒத்துவருவதில்லை...

எல்லாம் கனவாகிப்போய் விடும்...

# பெயர் - மனுநீதி சோழன்..
# பதவி - நிறுவனங்களின் பதிவாளர்
# சமீபத்திய சாதனை - தொழிலதிபர் எம் ஏ எம் ராமசாமி செட்டியார் அவர்களிடம் 10 லட்சம் கையூட்டு பெற்று தற்போது மத்திய குற்றப்புலனாய்வுத் துறையின் பிடியில்....

நிச்சயம் அவரது அப்பாவும் கனவுகண்டிருப்பார்... frown emoticon

ஏ.டி.எம். ல் கள்ளநோட்டு வந்தால் யார் பொறுப்பு?


ஒரு மிக மிக முக்கியமான தகவல்... படித்து பயன் பெறுங்கள்... பகிர்ந்து பரப்புங்கள்...!!!

ஏ.டி.எம். ல் கள்ளநோட்டு வந்தால் யார் பொறுப்பு?அப்படி கள்ள நோட்டு வரும் பட்சத்தில் நாம் என்ன செய்ய வேண்டும்?

ஏ.டி.எம்-ல் பணம் எடுக்கும்போது அதில் ஒன்றிரண்டு கள்ள நோட்டு வந்துவிட்டால் என்ன செய்வது என்று தெரியாமல் பலரும் கிழித்துப் போட்டுவிட்டு, சும்மா இருந்து விடுகிறார்கள்.இதனால் நஷ்டம் நமக்குத்தான்.அப்படி இல்லாமல் ஏ.டி.எம்.-ல் கள்ள நோட்டு வந்தால் நாம் என்ன செய்யவேண்டும்? யாரை அணுகவேண்டும்? இந்தக் கள்ள நோட்டுக்கு வங்கி பொறுப்பேற்குமா?இதுதொடர்பான வங்கியின் விதிமுறைகள் என்ன?

வாடிக்கையாளர்கள் ஏ.டி.எம்.-ல் பணம் எடுக்கும்போது அதில் கள்ள நோட்டு இருப்பதாகச் சந்தேகித்தால், வங்கிக்குத் தெரியப் படுத்துவதற்கு முன்னர், ஏ.டி.எம். சென்டருக்குள் இருக்கும் சி.வி.வி. கேமராவில் சந்தேகத்திற்குரிய ரூபாய் தாள்களில் உள்ள நம்பர்களைக் காட்டுவது அவசியம்.ஏனெனில், ஏ.டி.எம். மெஷினுக்குள் போடப்படும் ரூபாய் தாள்களில் இருக்கும் எண்கள் ஸ்டோர் ஆகாது. அதனால் சந்தேகத்திற்குரிய தாள்களை கேமராவில் காண்பிப்பதன் மூலம், வங்கியானது உங்களைப் பற்றி விசாரிக்கும்போது உங்களின் மீதானநம்பகத்தன்மையை அதிகரிக்கும்.பின்னர் ஏ.டி.எம். லிங்டு பேங்க் (ATM Linked Bank) அதாவது, அந்த ஏ.டி.எம். எந்த வங்கியுடன் தொடர்பில் இருக்கிறதோ, அந்த வங்கிக்கு உடனே தெரியப்படுத்த வேண்டும்.ஏ.டி.எம். சென்டருக்கு உள்ளேயே ஒட்டப்பட்டிருக்கும் பிரசுரங்களில் இந்த ஏ.டி.எம். தொடர்பான பிரச்னைகளை இந்த வங்கியில் மட்டுமே தெரியப்படுத்தவேண்டும் என்று சொல்லி தொடர்பு எண்களைத் தந்திருப்பார்கள். அதை பயன்படுத்தி தொலைபேசி மூலம் தெரியப்படுத்திவிட்டு, நேரில் சென்று உறுதிப்படுத்திக்கொள்ளலாம்.


அது கள்ள நோட்டு இல்லை எனில், அந்தப் பணத்தை அவர்களே ஏற்றுக்கொள்வார்கள். கள்ள நோட்டுதான் என்று தெரியவந்தால் அந்தப் பணத்தை வாங்கிக் கொண்டு, அந்த ரூபாய் தாளில் இருந்த எண்ணைக் குறிப்பிட்டு ரசீது ஒன்றை தருவார்கள்.உங்களிடம் பெறப்பட்ட ரூபாய்த் தாள் அந்த வங்கியின் ஏ.டி.எம்-ல் இருந்து எடுக்கப்பட்டதுதான் என்று விசாரித்து தெரிந்துகொண்டு(நீங்கள் குறிப்பிட்ட தேதியில் நீங்கள் பணம் எடுத்ததாகச் சொல்லும் ஏ.டி.எம்.-ல் இருந்து சி.வி.வி. கேமராவில் பதிவாகியிருக்கும் வீடியோவைப் பார்ப்பதன் மூலமும், உங்களின் பின்புலன்களை விசாரிப்பதன் மூலமும் நீங்கள் உண்மையானவர் என்பதை ஊர்ஜிதப்படுத்திக்கொண்டு) அந்தக் கள்ள நோட்டின் மதிப்புக்கு இணையான உண்மையான ரூபாய்த் தாளை தருவார்கள்

நன்றி - திரு ரவிக்குமார் அவர்கள்..

தனியார் தொலைகாட்சி "கட்டபஞ்சாயத்துதனியார் தொலைகாட்சிகளில் நடக்கும் "கட்டபஞ்சாயத்து" நிகழ்ச்சிகளில் (சொல்வதெலாம் உண்மை, நித்ய தர்மம் -வாய்மையே வெல்லும் போன்றவை) கலந்துகொள்பவர்கள் பெரும்பாலும் சமூகத்தின் அடித்தட்டு மக்களே...

பணக்காரவர்க்கத்தில் இதை விட கேவலங்கள் எல்லாம் நடக்கின்றன.. ஆனால் அவர்களிடம் இருக்கும் பணம் அதை மறைத்துவிடும்... அல்லது.. அந்த பணவசதியை பயன் படுத்தி அதையே கௌரவமான விஷயமாக மாற்றி விடுவார்கள்..

ஆனால் ஏழை வர்க்கத்தை பொறுத்தவரை "குடும்ப மானம்" என்பது தான் பெரிய மூலதனம்.. இதனாலேயே பல கௌரவ கொலைகள்-தற்கொலைகள் என்ற அளவிற்கு கூட அவர்கள் துணிவார்கள்.

அப்படி மானத்திற்காக கொலை/தற்கொலைக்கு கூட தயங்காத அடித்தட்டு வர்க்கம் இப்படி குடும்ப மானத்தை ஊரறிய சிரிக்க வைக்க எப்படி சம்மதிக்கிறது??? அவர்கள் அழுவதை-அடித்துக்கொள்வதை ரகசிய கேமரா மூலம் படம் பிடிக்கிறார்கள் என சப்பை கட்டு கட்ட முடியாது... ஏனென்றால் தொடர்ந்து ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளில் அப்படி நடப்பதை பார்த்துவிட்டுத்தான் புதிது புதிதாய் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள செல்கிறார்கள்.. அவர்களுக்கு தெரியாதா என்ன.. நம்மையும் இப்படி எல்லோரும் பார்ப்பார்கள் என்று???

இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால்.. விளம்பர மோகம் மானம் மரியாதையை விட அதிக முக்கியத்துவம் பெற தொடங்கிவிட்டது... கலாச்சார சீரழிவின் மற்றொரு கோர முகம் இது...!!!

ஒரு ஆலோசனை...


டெக்னிகலாக எனக்கு அவ்வளவு விபரம் தெரியாது.. ஆனால் அனுபவ அறிவு கொஞ்சம் இருப்பதால் சொல்கிறேன்.. இதனை எவ்வளவு டெவலப் செய்து உபயோகத்திற்கு கொண்டுவரலாம் என்பதை சம்மந்தப்பட்ட துறையில் இருக்கும் நண்பர்கள் சொல்லலாம்...

நமது மொபைல் போன், கேமரா, டார்ச் லைட், எமர்ஜென்சி லைட் போன்ற ரீசார்ச் செய்யும் சாதனங்களின் பேட்டரி மிக விரைவில் பழுதடைந்து விடுகின்றன.. இதற்கு காரணம் தமிழகத்தில் மின்வாரிய கோளாறுகள் என்பதை நான் ஏற்கெனவே ஒரு பதிவில் சொல்லி இருந்தேன்... மாறுபட்ட மின்னூட்ட அளவுகளால் (LOW VOLTAGE & HI VOLTAGE ) திடீர் திடீரென மின்னழுத்தம் (AMPS) ஏறி இறங்குவதால் அந்த மின்சாதனங்கள் எளிதில் பாதிப்புக்குள்ளாகின்றன...

வீட்டில் உபயோகிக்கும் பெரிய மின் சாதனங்களுக்கு (டி வி , பிரிட்ஜ், வாஷிங் மெஷின் , ஓவன் ) நாம் ஸ்டெப்லைசர் எனப்படும் மின் சீராக்கிகளை உபயோகிப்போம்.. ஆனால் சிறிய சாதனைகளுக்கு ( மேற் குறிப்பிட்ட றீ சார்ஜ் செய்யும் உபகரணங்கள்) அவ்வாறு செய்வதில்லை..

இப்போது பெரும்பாலும் எல்லா வீடுகளிலும் இன்வெட்டர் என்று சொல்ல கூடிய பின் சேமிப்பு கலங்களை உபயோகிக்கிறார்கள்... அதில் இருந்து கிடைக்கும் மின்சாரமானது சீராக கிடைக்கும்.. (அது நன்றாக சார்ஜ் ஆகி இருக்க வேண்டும்) எனவே அப்படி ரீ சார்ஜ் செய்யும் உபகரணங்களை ஒரு தனி பிளக் பாயின்ட் வைத்து அந்த இன்வெர்டர் மின்சாரத்தில் சார்ஜ் செய்யும் போது பேட்டரி ஆயுள் கூடும்...

பெரிய அளவில் இல்லாமல் சிறிய கார் பேட்டரிகளை உபயோகித்து சார்ஜ் செய்வதற்கான உபகரணங்களை வியாபார முறையில் கூட உற்பத்தி செய்யலாம்...

படித்த முட்டாள்கள்நமது முந்தைய தலைமுறைகளை விட, நவீன விஞ்ஞான, கல்வி அறிவு பெற்ற இளைய தலைமுறையினருக்கு தான் ஜாதி வெறியும் , மத வெறியும் அதிகமாக இருக்கிறது... இதற்கு காரணம் என்ன???

சுதந்திரமடைந்த காலத்தில் வெள்ளைக்காரர்களிடம் இருந்து ஆட்சி கைமாறின சமயத்தில் பெரிதாய் மதக்கலவரம் வெடித்தது... அதற்கு காரணம் சுதந்திர போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மூலமாக தகவல்கள் உடனுக்குடன் பரவின.. மக்கள் அனைவரும் உணர்ச்சியின் பிடியில் சிக்கி இருந்த நேரம்.. தலைவர்களின் உணர்ச்சிகரமான உரை வீச்சால் ஏற்கெனவே உணர்ச்சி வயப்பட்டிருந்தவர்கள் அறிவை அடகு வைத்து மதக்கலவரங்களில் ஈடுபட்டனர்... அப்புறம் சுதந்திர இந்தியாவில் அவரவர் , அவரவர் வேலையை பார்க்க போய் விட்டனர்... ராவுத்தரும் , முத்துசாமியும் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ வேண்டிய கட்டாயம்.. தினசரி ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளும் நிலை.. அவர்களுக்குள் மதங்களை மீறிய நட்பு குடும்ப நட்பாக உறவு முறை சொல்லி பேசிக்கொள்ளும் அளவிற்கு வந்தது...

அதே போல, இந்து மதத்தின் ஜாதீய கட்டமைப்புகளும் அப்படித்தான்.. ஒரு குறிப்பிட்ட ஜாதியை சேர்ந்தவர்கள் குறிப்பிட்ட வேலைகளை தொடர்ந்து செய்தார்கள்.. ஒவ்வொரு ஜாதியினரும் ஒவ்வொரு வேலையை செய்தாலும் ஒன்றை ஒன்று சார்ந்தே இருந்தது... இவரது வேலை அவருக்கும், அவரது வேலை இவருக்கும் அவசியமாக இருந்தது...

இடையில் எப்படியாவது தலைவனாகி விட வேண்டும் என்ற எண்ணம் கொண்ட சிலர் அதற்காக கையிலெடுத்த யுக்திதான் மதப்பற்று, ஜாதிப்பற்று... இவர்கள் வருவதற்கு முன்பும் முஸ்லிம்கள் முஸ்லிம்கள் தான்.. இந்துக்கள் இந்துக்கள் தான், கிருஸ்துவர்கள் கிருஸ்துவர்கள் தான்.... அதே போல , முதலியார் முதலியார் தான், வன்னியர் வன்னியர்தான்.. செட்டியார் செட்டியார் தான்... ஆனால் அப்படி இந்துவாகவோ, முஸ்லிமாகவோ, முதலியாராகவோ, செட்டியாராகவோ இருந்த யாரும் "நாம் இன்ன மதம்.. இன்ன ஜாதி.." என்பதை பற்றி சிந்திக்கவே இல்லை.. அவர்கள் கடவுளை தொழும் போது மட்டும் அவர்கள் மதங்களை பற்றி நினைத்தார்கள்... திருமண பந்தங்களை ஏற்படுத்தும் போது மட்டும் தான் ஜாதி பற்றி யோசித்தார்கள்.. அப்படி இல்லாத நேரத்தில் மனிதர்களாக மட்டுமே இருந்தார்கள்...

ஆனால், இப்படி தலைமை வெறி கொண்ட மனிதர்கள் ( சாத்தான்கள்) தலையெடுக்க தொடங்கிய பிறகுதான் ஒவ்வொருவரும் எப்போதும் மதம் பற்றியும், ஜாதி பற்றியும் யோசிக்க ஆரம்பித்தார்கள்.. இப்படி மதம்-ஜாதி என்ற பெயரை சொல்லி சிலர் தலைவராகி விட, இந்த இரண்டிலும் வாய்ப்பு கிடைக்காத சாத்தான்கள் "கடவுள் இல்லை" என்றும், பகுத்தறிவாளர்கள் என்றும், மதச்சார்பற்றவர்கள் என்றும் மூன்றாவதாய் ஒரு வழியை தேர்ந்தெடுத்தார்கள்... மதத்தலைவன், ஜாதித்தலைவன் என்று சொல்லும் சாத்தான்களுக்கு சற்றும் குறைந்தவனல்ல.. இந்த மதச்சார்பற்ற, பகுத்தறிவு சாத்தான்களும்....

எங்கோ ஒரு மூலையில் கிளம்பிய இந்த சாத்தான்கள் ஒட்டு மொத்த இந்தியாவிலும் ஆட்சி செய்ய காரணமாய் அமைந்தது ஊடகங்கள்தான்... மதுக்கூரில் அரிசி கடை வைத்திருக்கும் மீரான் பாயும், மீன் கடை வைத்திருக்கும் யூசுப் பாயும், உரக்கடை வைத்திருக்கும் கனக சபை தேவரும், மளிகை கடை வைத்திருக்கும் சுந்தரம் செட்டியாரும் சிலம்பவேளாங்காட்டில் இருந்த நடேச வேளாளருக்கு உளப்பூர்வமான நண்பராக இருக்க முடிந்தது.. ஆனால்... மீரான் பாயின் மகனோ, யூசுப் பாயின் மகனோ, கனக சபை தேவரின் மகனோ, சுந்தரம் செட்டியாரின் மகனோ , நடேச வேளாளரின் மகனுக்கு உளப்பூர்வமான நண்பனாக இருக்க முடியவில்லை... அப்படி இருந்தாலும் கூட அது உதட்டளவில் மட்டுமே இருக்கிறது...

குஜராத்தில் மதக்கலவரம் என்றால் மதுக்கூரில் இருக்கும் மீரான் பாயின் மகன் நடேச வேளாளரின் மகன் மீது ஆத்திரப்படுகிறான் ... ராமநாத புரத்தில் நடந்த கலவரத்திற்கு மதுக்கூரில் கடை வைத்திருக்கும் கனகசபை தேவரின் மகன் அதே ஊரில் இருக்கும் முனியாண்டி பள்ளரின் மகனை முறைக்கிறான்...

ஏன்....?? ஏன் இப்படி..?? எங்கோ நடக்கும் சில முட்டாள்களின் செயல் எங்கோ உணர்வு பூர்வமாய் இணைந்திருந்த நண்பர்களை எப்படி பிரித்தது??? காரணம் ஊடகங்கள்...

எங்கோ ஒரு முஸ்லிம் தீவிரவாதி வெடிகுண்டு வைத்தால்.... அடுத்து வரும் திரைப்படங்களில் வரும் எல்லா கற்பனை தீவிரவாதிகளும் முஸ்லிம்களாகவே காட்டப்படுகிறார்கள்... எங்கோ ஒரு காலனி ஆள் முதலியார் வீட்டு பெண்ணுடன் காதல் கொண்டு ஊரை விட்டு ஓடினால்... அந்த காலனி ஆள் ஏதோ உலக சாதனை செய்து விட்டதை போல சித்தரிக்கப்படுகிறார்... இப்படி ஒருவரை தொடர்ந்து மட்டப்படுத்தியோ, உயர்த்தியோ பேசும் போது, அதை கேட்கும், பார்க்கும் அமைதியானவருக்கும் கூட மெல்ல மெல்ல மனதில் இருக்கும் சாத்தான் விழித்தெழுந்து அந்த நல்லொழுக்கமுள்ள மனிதனையும் முழுமையாய் ஆட்கொள்கிறது...

ஒரு வதந்தி தொடர்ந்து பரப்பப்படும் போது, எதிர் தரப்பு அதை நம்ப தொடங்குகிறது... சம்மந்தப்பட்ட தரப்பு அதை பெருமையாகவோ, இழிவாகவோ நினைக்கிறது... பெருமையாக நினைக்கும் குழு, அதை சாதகமாக்கி மேலும் மேலும் அந்த தப்பை தொடர்ந்து செய்கிறது.. இழிவாக நினைக்கும் குழு மேலும் மேலும் இழிவு படுத்தப்படுவதாய் எண்ணம் வரும் போது பொங்கி எழுகிறது.....இந்த வதந்திகளால் பாதிக்கப்பட்டது... மீரான் பாய்க்கும், யூசுப் பாய்க்கும் சுந்தரம் செட்டியாருக்கும் நடேச வேளாளருக்கும் இருந்த அன்பால் பிணைக்கப்பட்ட நட்பு....

இந்த வதந்திகளால் ஆதாயம் அடைவது.... மதம் என்றும், ஜாதி என்றும், மதச்சாற்பற்றவன் என்றும், பகுத்தறிவாளன் என்றும் அவரவர் வசதிக்கு மக்களை தூண்டிவிட்ட அரசியல் வாதிகளும், அவர்களுக்கு பலமாய் நின்ற்கும் ஊடகங்களும்...

கல்வி அறிவு என்பது சிந்திக்க வைப்பதற்குத்தான்.. மாறாக கல்வி அறிவும், தகவல் தொழில்நுட்பமும் இளைஞர்கள் மனதில் ஜாதி வெறியையும், மத வெறியையும் தூண்டுவதற்குத்தான் பயன் பட்டுக்கொண்டிருகிறது....

படித்த இளைஞர்கள் எப்போது இந்த சூழ்ச்சி வலையின் பிடியில் இருந்து மீளப்போகிறார்கள்?????

திப்பு சுல்தான்
"எதிரி வீழ்ந்தான்.. இனி இந்தியா நம்முடையது" என்று கொண்டாடினான் ஆங்கிலேய ஜெனரல் ஹாரிஸ் 

"கிழக்கிந்திய கம்பெனிக்கு சிம்ம சொப்பனம்" என்று வர்ணித்தன ஆங்கில பத்திரிகைகள்..

"இவர் தலைமையில் சுதந்திரப்போர் நடந்திருந்தால் இந்தியா எப்போதோ சுதந்திரமடைந்திருக்கும்... நாமெல்லாம் போராட வேண்டி இருந்திருக்காது" என்று தன்னுடைய "யங் இந்தியா" என்ற பத்திரிகையில் குறிப்பிட்டார் காந்தியடிகள்...

"இந்தியாவின் முதல் பிரதமரான பண்டிட் ஜவஹர்லால் நேரு அவர்கள் தமது டிஸ்கவரி ஆஃப் இந்தியா என்ற நூலில் ”ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாகவும், பெரும் சவாலாகவும் இருந்தவர்கள் ஹைதர் அலியும், இவரும் (இதில் பெயரை குறிப்பிட்டிருக்கிறார்) . பிரிட்டீஷாருக்கு கடுமையான தோல்வியின் மூலம் வேதனைமிக்க அனுபவத்தை ஏற்படுத்தினார்கள். கிழக்கிந்திய கம்பெனியின் அதிகாரத்தை உடைத்தெறியும் அளவுக்கு அவர்கள் நெருங்கினார்கள்” எனக் குறிப்பிடுகிறார்"

பிரெஞ்சு மன்னன் பதினாறாம் லூயியுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு அவர்களுடன் இணைந்து 1794 ல் ஆங்கிலேயருக்கு எதிராக நடத்திய யுத்தத்தில் வென்று 4000 ஆங்கிலேய சிப்பாய்களை சிறை பிடித்து, பிறகு அவர்களை விடுவித்து ஆங்கிலேய அரசை அவமானப்படுத்துகிறார்.."

’30 நாட்கள் முற்றுகையிட்டும் எங்களால் அந்தக் கோட்டையையும், தீவையும் தூரத்திலிருந்துக் கொண்டு தரிசிக்கத்தான் முடிந்தது’. என்று குறிப்பிடுகிறான் ஆங்கிலேய தளபதி மன்றோ

குண்டடி பட்டு கோட்டை வாசலில் வீரர்களின் பிணங்களுக்கு நடுவே குற்றுயிராய் கிடந்த போது பாதுகாப்பாளன் வந்து "அரசே.. யாராவது ஒரு ஆங்கிலேய அதிகாரியை அழைத்து உதவி கோரட்டுமா.. சரணடைந்து விடலாமா " என்று கேட்ட போது ..."முட்டாளே... ஆடு போல 200 வருடம் வாழ்வதை காட்டிலும் 2 நாள் புலியாக வாழ்ந்து மடிவதுதான் வீரம்" என்று சொல்லி மரணத்தை தழுவியவர்...

மேற்கட்ட அத்துணை பெருமைக்கும் சொந்தக்காரர்.. மாவீரன் , மைசூர் புலி திப்பு சுல்தான்...

தன்னுடைய ஆளுகைக்குட்பட்ட பகுதியில் இஸ்லாமியர்களுக்கு ஷரியத் சட்டப்படியும், மற்றவர்களுக்கு பொது சட்டப்படியும் ஆட்சி நடத்தியவர்... ஹைதர் அலி- ஃபஹ்ருன்னிசா தம்பதியருக்கு பிறந்து மாவீரனாக வளர்க்கப்பட்ட திப்பு சுல்தான்...

ஆங்கிலேயர்களுடன் ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டு அடிமையாய் ஜீவித்த திருவிதாங்கூர் தர்மராஜா, ஹைதராபாத் நவாப், ஆற்காடு நவாப், தொண்டைமான், பாளையக்காரர்கள் ஆகியோரின் உதவியாலும், பணத்திற்கு விலை போன கூட இருந்த துரோகிகளாலும், தக்க சமையத்தில் நண்பர்களின் உதவி வந்தடையாததாலும் தானே தளபதியாய் நின்று போரிட்டு மரணத்தை தழுவியவர்...

இவரது மரணத்திற்கு பிறகு மைசூர் கோட்டைக்குள் புகுந்த ஆங்கிலேயர்கள் அங்கே இருந்த ஒரு புதிய பொருளை கண்டு ஆச்சர்யமடைந்து, அதனை கவர்ந்து சென்று ஆராய்ந்ததின் விளைவே இன்றைய நவீன ஏவுகணை தொழில் நுட்பம்... ஆம்.. இன்றைய ஏவுகணையின் முன்னோடி திப்பு சுல்தான்..!!

கமலா நேருவசதியான குடும்பத்தில் பிறந்து தன்னுடைய 17 வது வயதில், மனசு நிறைந்த கனவுகளுடன் இந்தியாவின் குறிப்பிடத்தகுந்த பணக்காரர்களுள் ஒருவரான , இந்திய அரசியலில் ஒரு முக்கிய சக்தியாக விளங்கிய , லண்டனில் பயின்றுவந்த ஒரு இளைஞனை மனம் புரிந்துகொண்டபோது வாழ்க்கை இவ்வளவு பெரிய போராட்டமாய் இருக்கும் என அவர் நினைக்கவே இல்லை...

ஒரு பெரிய குடும்பத்தின் மருமகளாக வாழ்வை துவங்கிய அவர்.. கணவரை பார்க்க வருபவர்கள், கணவரின் நண்பர்கள் என தேசபக்தர்களின் தொடர்புகள் கிடைக்கவும், கணவர் அடிக்கடி கைதாகி சிறைக்கு சென்று விடுவதாலும் தம்முடைய கவனத்தையும் தேச விடுதலை போராட்டத்தின் பால் திருப்பினார்... இதற்கிடையில் திருமணமான முதல் வருடத்திலேயே ஒரு பெண் குழந்தைக்கு தாயானார்... அடுத்த குழந்தை ஏழு வருட இடைவெளியில்... ஆண் குழந்தை.. துரதிஷ்டவசமாக அந்த ஆண் குழந்தை பிறந்த ஒரே வாரத்தில் இறந்துவிட... நெகிழ்ந்த மனதை கல்லாக்க தன்னுடைய முழு கவனத்தையும் சுதந்திர போராட்டத்தின் பக்கம் திருப்ப... கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்...

பிற்பாடு விடுதலையாகி காந்தியடிகளின் சபர்மதி ஆஸ்ரமத்தில் அன்னை கஸ்தூரிபாய் அவர்களுடன் இணைந்து ஆசிரம பணிகளை மேற்கொண்டார்... காசநோயால் பாதிக்கப்பட்டு இருந்தவர் நோய் முற்றி மேலும் பலவீனமடைய சுவிட்சர்லாந்து நாட்டில் சிகிச்சைக்காக சென்றார்.. சென்றவர் மீளவே இல்லை... தன்னுடைய 36 வது வயதில் மரணம் அவரை ஆட்கொண்டது...

அவர்...?? ஜவஹர்லால் நேருவின் மனைவி என்று மட்டுமே மக்களுக்கு அறிமுகமான கமலா நேரு..!!! 

பகத் சிங்
பகத் சிங் பத்தி பல வரலாறுகள் படிச்சிருப்போம்... லாலா லஜூபதி ராய் நடத்தின ஊர்வலத்துல பயங்கரமான வன்முறை நடத்தி , லஜூபதி ராய் மரணத்திற்கு காரணமான ஸ்காட் அப்படின்ற வெள்ளைகார கமாண்டர கொலை செய்ய திட்டம் போட்டாங்க பகத்சிங், ராஜகுரு, சுகதேவ்.. ஆகிய மூணு பேரும் ,,,

ஆனா துரதிஷ்டவசமா அந்த திட்டத்துல சறுக்கல் ஏற்பட்டு ஸ்காட்டுக்கு பதிலா சாண்டர்ஸ் அப்படின்ற உதவி கமாண்டர பகத் சிங் சுட்டு கொன்னுட்டார்...

அப்புறம் அவர கைதுபன்னி தூக்கு தண்டனை கொடுத்துட்டாங்க... அப்போ பகத் சிங் அப்பா வெள்ளைகார அரசாங்கத்துக்கு "என் பையன் தெரியாம பண்ணிட்டான்.. தப்புதான்.. மன்னிச்சுக்குங்க.... அவன் இனிமே இப்படி எந்த செயலும் செய்யாம, எந்த போராட்டத்துலயும் ஈடுபடாம நான் பார்த்துக்கிறேன்.. அவன் தூக்கு தண்டனைய ரத்து பண்ணிடுங்க"ன்னு ஒரு மன்னிப்பு கடிதம் எழுதிட்டார்...

இத கேள்விப்பட்ட பகத் சிங் தன்னோட அப்பாவுக்கு ஒரு கடிதம் எழுதுறார்... "உங்கள அப்பான்னு சொல்லிக்கவே வெட்கப்படுறேன்... உங்க ஒரு மகனோட உயிருக்காக நாட்டோட கவுரவத்த அடகு வச்சுட்டீங்களே.. இனி நான் உங்களுக்கு புள்ளையும் இல்ல.. நீங்க எனக்கு அப்பாவும் இல்ல.." அப்படின்னு எழுதினர்...

கடைசியா தூக்கு தண்டனை நிறைவேத்துற நாள்ல முகத்த மூட போனாங்க... அப்போ அதை தடுத்த பகத் சிங் , அவருக்கு தூக்கு தண்டனை கொடுத்து அதை நிறைவேத்த வந்திருந்த ஜட்ஜ பார்த்து சொன்னார்....
"உலகத்துலேயே பெரிய அதிஷ்டசாலி நீங்கதான்... கண்ண தொறந்துகிட்டே சாகப்போற ஒரு வீரன பார்க்கப்போற முதல் ஆள்..."

இதுல எல்லோருக்குமே ஒரு வருத்தமான விஷயம் என்னன்னா... பகத் சிங்க தூக்குல போட்டுக்குங்க.. ன்னு காந்தியடிகள் ஒப்புதல் கையெழுத்து போட்டதுதான்... (காந்தி - இரவின் ஒப்பந்தம்)

நம்பிக்கைகாலையில் அறையை பூட்டிவிட்டு அலுவலகம் வந்துவிட்டு திரும்ப அறைக்கு போய் பார்க்கும் போது அறை திறந்து இருந்தது... 

என்னை தவிர மதிப்பு மிக்க வேறு ஒரு பொருள் என்னிடம் இல்லை என்றாலும் கூட.... சில்லரை சாமான்கள் வாங்க வேண்டுமென்றால் கூட இந்த பாழாப்போன பணம் வேண்டுமே என்பதால் சற்றே பதட்டம் எட்டிப்பார்த்தது...

அறைக்குள் நுழைந்ததும் அங்கே அமர்ந்திருந்த நண்பரை பார்த்ததும் சற்றே நிம்மதி வந்தாலும் அடுத்த கேள்வி உடனே எட்டிப்பார்த்தது...

"எப்படி தல உள்ள வந்தீங்க.. சாவி ஏது,,? "

"வந்தேன்.. உங்கள காணல... பூட்ட இழுத்து பார்த்தேன்.. திறந்துடுச்சு.."

என்னை பொறுத்தவரை ஒருவரை நம்பி ஒரு பொறுப்பை கொடுத்துவிட்டால் அவரை சந்தேகப்பட கூடாது.. எனவே கதவை பூட்டிய பின் நான் அதனை சோதிக்க வில்லை... நான் என்னுடைய நிலையில் உறுதியாய் இருந்ததை போல, அந்த பூட்டும் என் நம்பிக்கையை காப்பாற்றி இருக்க வேண்டுமல்லவா ???? அதுதானே பரஸ்பர நம்பிக்கை...

(அந்த பூட்டை பிடித்து இழுத்தால் திறந்துகொள்ளும் என்ற விஷயம் எனக்கு தெரியாது.. நான் தினசரி அதற்கென தயாரிக்கப்பட்ட சாவியை கொண்டுதான் திறப்பேன்)

என்னுடைய நம்பிக்கையை காப்பாற்றாத அந்த பூட்டை மறுநாள் அந்த பூட்டை குப்பை தொட்டியில் வீசி விட்டு வேறு ஒரு பூட்டு வாங்கினேன்...

நீதி 1 :- யாரையும் யோசிக்காமல் நம்ப கூடாது..

நீதி 2 :- நமது நம்பிக்கைக்கு பாத்திரமானவர்களாக அவர்கள் இல்லை என்பது தெரிந்த உடனே அவர்களை தூக்கி எரிய தயங்க கூடாது..

மயில்மயில் பற்றி என்ன நினைகிறீர்கள்??

இந்தியாவின் தேசிய பறவை... தமிழ் கடவுள் முருகனின் வாகனம்... பார்க்க அழகாய் இருக்கும்.. மேகம் கருத்து மழை வரும் சூழல் நிலவினால் தோகை விரித்து ஆடும்... சமீப காலமாய் பரவலாய் கண்ணில் படுகிறது...

எல்லாம் சரிதான்.... ஆனால் இது, ஏற்கெனவே இடுபொருள் விலையேற்றம், மழையின்மை, மின்சார தட்டுப்பாடு , உற்பத்தி செலவு அதிகரிப்பு, விற்பனை விலை குறைவு, ரியல் எஸ்டேட் முதலைகள் என பல பல பிரச்சினைகளில் சிக்கி சீரழிந்து கொஞ்சமாய் எஞ்சி இருக்கும் விவசாயிகளுக்கு கொஞ்சம் கொஞ்சமாய் பூதாகரமாய் வளர்ந்து வரும் சவாலான பிரச்சினை என்பதை எப்போதாவது யோசித்து இருகிறீர்களா???

ஆஸ்திரேலியாவில் பசுமை சூழ்ந்த ஆள் நடமாட்டமிலாத தீவில் ஒருமுறை சில முயல்கள் விடப்பட்டது... அங்கே முயல்களுக்கு தேவையான உணவுப்பொருட்கள் தாராளமாய் கிடைத்தன... அங்கே அந்த முயல்களுக்கு எதிரிகளே இல்லை...
இந்த சூழ்நிலையில் வளர்ந்த முயல்கள்.. இனவிருத்தி செய்து செய்து பல்கி பெருகின... ஆரம்ப காலத்தில் அவைகள் குறைவாக இருந்த காலத்தில் போதுமான அளவு உணவு கிடைத்தது.. முயல்களின் எண்ணிக்கை பெருக பெருக அவைகளின் உணவின் அளவு குறைந்தது.. நாளடைவில் தாவரங்களும் அழிந்து உணவில்லாமல் முயல்களும் அழிந்தன...

(இதற்கு ஆதாரம் கொடு என கேட்காதீர்கள்.. நான் எங்கோ படித்தது)

இது முயல்களுக்கு மட்டுமல்ல.. எல்லாவற்றிற்கும் பொருந்தும்.. இதனாலேயே பூமியின் இயக்கத்தை சமநிலைப்படுத்த இயற்கை பல்வேறு உபாயங்களை கையாள்கிறது... தாவரங்கள்- தாவர உண்ணிகள்- மாமிச உண்ணிகள் என்பவை சீராக அமையப்பெற்ற உணவுச்சங்கிலி ஒரு முக்கோண வடிவில் அமைந்திருக்கிறது...

முருகநுண் வாகனமென்பதாலோ, தேசியப்பறவை என்பதாலோ, வன உயிரின சட்டம் பாயும் என பயந்தோ யாரும் மயில்களை வேட்டையாடுவதில்லை... அதனாலேயே சமீப காலமாய் மயில்களின் எண்ணிக்கை பல்கி பெருகி வருகிறது

பல்வேறு இயற்கை சவால்களையும், கார்பொரேட் கம்பெனிகளின் திட்டமிட்ட தடங்கல்களையும் எதிர்த்து போராடி விவசாயிகள் பயிரிடும் தானியங்களை இந்த மயில்கள் கூட்டமாய் வந்து கபளீகரம் செய்கின்றன.. மயில்களின் எண்ணிக்கை பெருக பெருக இது விவசாயிகளுக்கு மாபெரும் சவாலாக அமையும்...

பார்க்கலாம்... இயற்கை எப்படியாவது சமன் செய்ய போகிறதா...?? இல்லை.. விவசாயிகளுக்கு சங்கூத இயற்கையும் உடந்தையாயிருக்க போகிறதா..??

சூர்யா சென்... - SURYA ZENசுஸ்மிதா சென் தெரியும்... ரியா சென் தெரியும்... ரியா சென்னோட அம்மா மூன் மூன் சென் கூட தெரியும்... இன்னும் கொஞ்ச பேருக்கு கூடுதலா அமர்த்தியா சென் தெரியும்....

சூர்யா சென் யாருன்னு தெரியுமா???

இன்னிக்கு நாம எல்லோருமே கொண்டாடுற அன்றைய தீவிரவாதி (???- ஆங்கிலேய அரசாங்கம் அப்படித்தான் சொன்னுச்சு) சுபாஷ் சந்திரபோஸ் "இந்திய தேசிய ராணுவம் " (INA) ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே "இந்தியன் ரிபப்ளிகன் ஆர்மி" அப்படின்ற சுதந்திர போராட்ட குழுவ அமைச்சவர்தான் இந்த சூர்யா சென்...

சூர்யா சென் ஒரு வாத்தியார்.. அதனால அவர எல்லோரும் "மாஸ்டர்தா"ன்னு சொல்வாங்க... காந்தியடிகளோட அமைதி வழி போராட்டத்தால் சுதந்திரம் வாங்க முடியாது.. வெள்ளைக்காரங்கள அடிச்சு தான் தொரத்தனும்.. அப்படின்னு ஒரு நோக்கத்தோட தன்னிடம் படிச்ச மாணவர்களை தேர்ந்தெடுத்து ஒரு ஆயுத போராட்ட குழுவ ஆரம்பிச்சார்.. அதுக்கு ஆளுங்கள எப்படி தேர்ந்தெடுத்தார் தெரியுமா??

ஒரு நாள் நடு ராத்திரி ஒரு சுடுகாட்டுக்கு வந்து தன்னை சந்திக்க சொன்னார்.. அப்படி யாருக்கேலாம் நடுராத்திரில சுடுகாட்டுக்கு வர தைரியம் இருந்துதோ.. அவங்கள எல்லாம் சேர்த்தார்.. மொத்தம் 63 பேர் சேர்ந்தாங்க.. ஓரிரு பெண்கள் உட்பட...

வெள்ளைகாரன அடிச்சு துரத்த நம்மூர்ல இருந்த போர்கருவிகளான ஈட்டி, வாள் எல்லாம் ஒத்துவராது... நமக்கும் துப்பாக்கி வெடி மருந்து எல்லாம் வேணும்னு முடிவு பண்ணி , வெள்ளைக்காரங்களோட ஆயுதக்கிடங்க கொளையடிக்க திட்டம் போட்டாங்க...

ஒரு லீவு நாள்ல அந்த கொல்லைக்கு நாள் குறிச்சு சிட்டகாங் அப்படின்ற இடத்துல இருந்த ஆயுத கிடங்குமேல தாக்குதல் நடத்தினாங்க... ஆனா துரதிஷ்டவசமா அந்த தாக்குதல்ல எதிர்பார்த்த வெற்றி கிடைக்கல..

அப்புறம் சிலபல ஒளிவு மறைவு யுத்தங்களுக்கு பிறகு சூர்யா சென் அப்படின்ற அந்த மாபெரும் போராளிய ஆங்கிலேய அரசாங்கம் கைது பண்ணி நகத்தை எல்லாம் புடுங்கி, பல்ல எல்லாம் புடுங்கி வங்காளத்துல இருந்த சௌலியாகஞ்ஜ் ஜெயில அடைச்சு வச்சு 1934- ஜனவரி மாதம் 12 ம் தேதி தூக்குல போட்டுட்டாங்க... அப்படி தூக்குல போட்ட உடம்ப கூட வங்காள விரிகுடா கடல் ல வீசிட்டாங்க.

மார்பக புற்றுநோய் - Breast Cancerஒரு சர்ச்சைக்குரிய பதிவு.... இதை படித்துவிட்டு நானூறு பேர் என்னை காறி துப்பலாம்... ஆனால் நாலு பேர் கொஞ்சம் யோசித்து செயல்படுத்தினால் கூட என் பதிவு வெற்றியடைந்ததாய் அர்த்தம்...

தம்முடைய உடம்பை தாமே உற்று கவனிப்பவர்கள் மிக மிக குறைவு... ஆனால் நமது பாலியல் துணையின் உடம்பை ஒவ்வொரு அங்குலமாக தடவி தடவி ரசிப்போம்... அந்த வகையில் பெண்களின் மார்பகங்கள் மீது ஆண்களுக்கு எப்போதுமே ஒரு தீராத மோகம் உண்டு....

காதலனோ- கணவனோ... உங்கள் இணையின் மார்பகங்களை காமத்தோடு அணுகும் போது கூட கொஞ்சம் கவனமாய் அணுகுங்கள்.. ஏதேனும் இயல்பை மீறிய கட்டிகள், வளர்ச்சிகள் தெரிந்தால் உடனடியாக மருத்துவரை அணுக பரிந்துரை செய்யுங்கள்...

ஏனென்றால் 2030 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் சுமார் 30% பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுவார்கள் என்று சென்னை அடையாறு புற்றுநோய் மைய இயக்குனர் திருமதி சாந்தா அவர்கள் சொல்கிறார்... முறையான விழிப்புணர்ச்சியும் , சோதனைகளும் சரியான நேரத்தில் கொடுக்கப்படும் சிகிச்சைக்களுமே அவர்களை காக்கும்...

அந்த 30 % த்தில் நம் வீட்டு பெண்களும் இருந்துவிட கூடாது...

எம் மூதாதையர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை...!!!கல் நெஞ்சுக்காரர்களையும் கலங்கடித்துவிட்டது அந்த மரணம்.. அழக்கூட திராணியற்று வதங்கிப்போய் அந்த சவப்பெட்டியின் தலைப்பகுதியில் அமர்ந்திருந்தார் அந்த பெண்.. இறந்தவரின் மனைவியாயிருக்கும்...

கல்யாணமான ஐந்தாவது மாதம் விபத்தில் மரணமடைந்த இளைஞனின் சடலம் மாலைபோட்டு கிடத்தப்பட்டிருந்தது... 

ஒரு வயதான மூதாட்டி கையில் ஒரு சொம்புடன் வந்தார்.. கூட்டத்தினர் முன்னிலையில் அந்த சொம்பை உயர்த்திக்காட்ட கூட்டம் அழுகை நிறுத்தி உற்றுப்பார்க்க.. அந்த சொம்பை உயர்த்திய மூதாட்டி இன்னொரு கையில் இருந்து வெள்ளை நிறத்தில் மூன்று பூக்களை அந்த சொம்பினுள் போட்டார்...
கதறல் அதிகமானது...

எதற்காக அவர் அப்படி செய்தார்..?? விசாரித்ததில் கிடைத்த விளக்கம்...

மரணமடைந்தவரின் மனைவி மூன்று மாத கர்ப்பம்.. கணவன் இறந்த பின் குழந்தை பிறந்தால் அந்த பெண்ணை பற்றி, அவளின் நடத்தை பற்றி அறியாமல் கூட எவரும் தவறாக பேசி விட கூடாதென கூட்டத்தின் முன்னிலையில் தெரிவிக்கப்பட்ட தகவல் அது...

# ஒவ்வொரு சடங்கும் ஒரு காரணத்துடன்... எம் மூதாதையர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை...!!!

ரெண்டாம் சடங்கு

அடுப்புல கிடாக்கறி வெந்துகிட்டு இருந்துது... அந்த அடுப்ப தள்ளிவிடு.... சோறு வெந்துடுச்சா பார்.. அப்படி இப்படின்னு பொம்பளைங்க சமையக்காரன அதிகாரம் பண்ணிட்டு இருந்தாங்க...

ஆம்பளைங்க வழக்கம் போல புளியமரத்துக்கு கீழ படுதா விரிச்சு கொஞ்சம் பேரு அரசியல் பேசினாங்க.. கொஞ்சம் பேரு சீட்டு விளையாண்டாங்க... 

இப்போதான் பத்து பதினஞ்சு நாளைக்கு முன்னாடிதான் அந்த வீட்டுல கல்யாணம் நடந்துது.. பந்த பிரிச்சு மூணு நாளுதான் ஆவுது... இன்னிக்கு நடக்குற தடபுடல் சமையல், கூட்டம் எல்லாத்தையும் பாத்ததும் எனக்கு ஆச்சரியம்...

கல்யாணம் நடந்த வீட்டுல விருந்து நடக்குறதுல என்ன ஆச்சரியம்?? இது எல்லா இடத்துலயும் நடக்குறதுதான.... அப்படின்னு கேக்குறீங்களா??? சொல்றேன் இருங்க...

ஆச்சர்யத்துக்கு காரணம்... சமையல் நடந்த இடம்.. மாப்பிள்ளை வீடு... சமையக்காரங்கள வேலை வாங்கிட்டும், வரவங்க வரவேத்துகிட்டும் இருந்தவங்க எல்லாம் பொண்ணு வீட்டுக்காரங்க... நம்ம வீட்டுக்கு வர விருந்தாளிங்கள நாம்தான வரவேத்து விருந்து வைப்போம்.. இங்க என்ன பொண்ணு வீட்டுக்காரங்க வந்து எல்லோரையும் வரவேத்து விருந்து வைக்கிறாங்க... ?/ இப்போ எனக்கு வந்த அதே ஆச்சரியம் உங்களுக்கும் வந்திருக்கு தான...??

வாங்களேன்.. ஒரு எட்டு என்னன்னு விசாரிப்போம்...

என்னண்ணே விசேஷம்.. சமையல் எல்லாம் தடபுடலா இருக்கு...??

பொண்ணு ரெண்டாம் சடங்கு ஆயிருக்கு தம்பி...

ரெண்டாம் சடங்கா....? அப்படின்னா??நம்மூருகள்ள ஒரு பொண்ணு சமைஞ்சதும் ஊருக்கெல்லாம் சொல்லி சடங்கு சுத்துவோம்... அது எதுக்குன்னா எங்க வீட்டுல ஒரு பொண்ணு கல்யாணத்துக்கு தயாரா இருக்குன்னு சொந்தம் சோலிக்கெல்லாம்சொல்றதுக்கு.. அதும்மாதிரி கல்யாணம் கட்டிக்கொடுத்த பொண்ணு, கல்யாணம் முடிஞ்சு வாக்கப்பட்ட வீட்டுக்கு வந்து மொத தடவையா வீட்டுக்கு விலக்காகறத இப்படி ஊரை எல்லாம் அழைச்சு விருந்து வச்சு கொண்டாடுவோம்... இது ஏன்னா... "என் பொண்ண நான் கற்போடதான் கட்டிக்கொடுத்திருக்கேன்.. என் பொண்ணு ரகசியமா வேற யார்கிட்டயோ கெட்டு போய் வயித்துல புள்ளையோட இங்க கட்டிக்கொடுக்கல.."ன்னு ஊருக்கு சொல்லத்தான்...

பொண்ணு வீட்டுக்காரங்களுக்கு இது ஒரு பெரிய கவுரவம்.. ஊர்ல ஒரு பய நாக்கு மேல பல்ல போட்டு பேச முடியாது பாருங்க... பொண்ணு வீட்டுக்காரங்களே மாப்பிள்ளை வீட்டுக்கு வந்து சமையல் செஞ்சு சொந்தம் சோலி எல்லாரையும் கூப்பிட்டு விருந்து வைப்போம்... அதான் இன்னிக்கு இங்க சமையல் நடக்குது...

அட.. உலை வாய மூடினாலும் ஊர் வாய மூட முடியாதுன்னு படிச்சிருக்கோம்....ஒரு உலை வாய மூடுறது மூலமா ஊர் வாய மூடுற புத்திசாலித்தனம் எப்படிய்யா உங்களுக்கு மட்டும் வாச்சுது..?? அந்த அறிவ நாங்க எங்க தொலைச்சோம்...??

தர்மம் கொடுக்கப்படும் நட்புமகா பாரதத்தில் குருஷேத்திர யுத்தத்தில் அர்ஜுனனின் பாணத்தால் அடிபட்ட கர்ணன் தேர்க்காலில் சாய்ந்தபடி படுத்திருப்பான்... அப்போது மாறுவேடத்தில் வரும் கிருஷ்ணன், கர்ணனிடம் தானம் கேட்பான்... "இப்போது கொடுக்க எதுவும் இல்லையே... " என கர்ணன் வருந்த..
கண்ணனோ.."கர்ணா உன்னுடைய செய்புண்ணியத்தை தானமாக கொடு" என கேட்பார்...

இதுவரை செய்த புண்ணியங்களை எல்லாம் தானமாக கொடுத்தால் அதுவே பெரிய புண்ணியமாகி விடுமே.. அப்புறம் எப்படி கர்ணனின் உயிர் போகும்?? எனவே தான் "செய்புண்ணியம்" என்ற வார்த்தையை பயன் படுத்தினார்... அதாவது.. இதுவரை செய்த புண்ணியங்கள், இனிமேல் செய்யப்போகும் புண்ணியங்கள்" என எக்காலத்திற்கும் பொருந்தும் வார்த்தை விளையாட்டு அது...

இன்னும் எளிமையாய் சொல்லப்போனால்.... "ஊறுகாய்"... அதாவது ஊறிய காய்.... ஊறும் காய்.... ஊறப்போகும் காய்.. என்று முக்காலத்திற்கும் பொருந்த கூடிய வார்த்தை போல... "செய்புண்ணியம் " என்பது முக்காலமும் பொருந்தக்கூடிய வார்த்தை ...திருமண மேடையில் நிற்கும் மணப்பெண் தன்னை சந்திக்க வரும் நண்பனிடம் எதிர்பார்க்கும் அன்பளிப்பு (பரிசு) நட்பு தான்...

அதாவது இதுவரை இருந்த நமது நட்பு... இனிமேல் வரப்போகும் காலத்திற்கான நமது நட்பு எல்லாவற்றையும் எனக்கு பரிசாக கொடு என்பதாய் பார்வையில் கேட்க...

கையில் வண்ணக்காகிதம் சுற்றப்பட்ட பொருளுடன் நட்பையும் பரிசாக கொடுக்கும் நண்பன் கர்ணனாய் வெளியே வருகிறான்...

திருமணத்திற்கு பிறகான கல்லூரிகால ஆண் பெண் நட்பு என்பது இன்றளவும் இந்த நிலையில் தான் இருக்கிறது...


இதுவாவது பரவாயில்லை... நண்பனிடம் நட்பை தான் தானமாக கேட்டாள்.. ஆனால் கணவனிடமோ.. உறவுகளையோ தானமாக கேட்டு விடுகிறாள்...

ஆம்..... திருமணமான உடன் பெண்களின் நட்பு துண்டிக்கப்படுகிறது.. ஆண்களுக்கோ.. உறவுகளே துண்டிக்கப்படுகிறது...

நான் ஒரு இந்து

நான் இந்து மதத்தை சேர்ந்தவன்... இந்து மத நம்பிக்கைகளை கொண்ட குடும்பத்தில் பிறந்ததால் நானும் அவ்வாறே அதை பின்பற்ற தொடங்கி எனது சிற்றறிவிற்கு எட்டிய வரையில் இந்து மதத்தில் இருக்கும் நம்பிக்கைகளை அறிவுப்பூர்வமாகவும், அறிவியல் பூர்வமாகவும் யோசித்து உணர முற்படுகிறேன்... புராண கதைகளை அப்படியே கண்ணை மூடிக்கொண்டு நம்பாமல் அதன் உள்ளீடாக சொல்லப்பட்டிருக்கும் செய்தி என்ன என்பதை யோசிக்க முற்படுகிறேன்...

எல்லாவற்றிற்கும் மேலாக, "இறைவன்" என்று எல்லோராலும் ஒப்புக்கொள்ளப்பட்டு, அவரவர் மதத்திற்கு ஏற்ப ஆளுக்கொரு பெயரோ, பல பெயர்களோ சொல்லி வணங்கும் சக்தியை நம்புகிறேன்...

இந்து மதத்தை பற்றி நான் படித்த, கேள்விப்பட்ட, உணர்ந்த, யோசித்த விஷயங்களை எழுத்துக்களாய் பதிவு செய்கிறேன்... இந்து மதத்தை பற்றி மட்டுமல்லாமல் இஸ்லாம், கிறிஸ்தவம், சீக்கியம், புத்தம் என பல்வேறு மதங்களை பற்றி நான் அறிந்த நல்ல தகவல்களை பற்றியும் எழுதுகிறேன்..

நான் சேர்ந்த மதத்தை பற்றியோ, மற்ற மதங்களை பற்றியோ தரக்குறைவான எழுத்துக்களை நான் எழுதுவது இல்லை... ஆனால் சில நண்பர்கள் தங்கள் அறியாமையின் காரணமாக தான் சார்ந்த மதத்தை பற்றியோ, மற்றவர்களின் மதங்களை பற்றியோ மிக தரக்குறைவான விமர்சனங்களை முன் வைக்கிறார்கள்... மேலும் அப்படியான தரக்குறைவான விமர்சனங்களை என்னுடைய நண்பர்கள் பட்டியலில் இருக்கும் சிலரும் வரவேற்று , மேலும் அவ்வாறு எழுத தூண்டுகிறார்கள்.. இது மிகவும் என் போன்ற பலரை காயப்படுத்துவதாக இருக்கிறது..

அவரவர் நம்பிக்கைகள் அவரவருக்கு... அடுத்தவர்களின் நம்பிக்கையை பழித்தும், அடுத்தவர்களின் மத நம்பிக்கையை தூற்றியும்தான் நம் மதத்தை பெருமைப்படுத்த வேண்டுமா??? நான் ஒரு "இஸ்லாமிய நாடு" என்று பிரகனபடுத்தப்பட்ட நாட்டில் பணி புரிகிறேன்... இங்கே முழுக்க முழுக்க இஸ்லாமியர்கள் தான் நிறைந்திருக்கிறார்கள்.. ஆனால் இந்த நாட்டை சேர்ந்த எவரும் என்னுடைய நம்பிக்கையை பழிக்கவோ, என் மதத்தை தூற்றவோ இல்லை... ஆனால் இந்து-முஸ்லிம்-கிருஸ்தவம்-சீக்கியம் என்ற பல மதங்களை கொண்ட ஜனநாயக நாடான இந்தியாவில் வசிக்கும் மனிதர்களுக்கு எப்படி வேறொரு மதத்தை தூற்ற வேண்டும் என்ற எண்ணம் வருகிறது????

உங்களது நம்பிக்கைகளை வெளிப்படுத்துங்கள்.. உங்கள் பெருமைகளை பறைசாற்றுங்கள்.. உங்கள் மத கோட்பாடுகளில் இருக்கும் நல்ல செய்திகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.. ஆனால் சொந்த மதத்தையோ, மற்றவரின் மதத்தையோ தரக்குறைவாக விமர்சிக்காதீர்கள்... அப்படி விமர்சிப்பவரை விலக்கி வையுங்கள்.. அவர்களை எக்காரணம் கொண்டும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஊக்குவிக்காதீர்கள்...

அடுத்த வீட்டுக்காரன் உங்களை பற்றி பெருமையாக நினைக்க வேண்டும் என்பதற்காக "உங்கள் மனைவிதான் பத்தினி.. என் மனைவி விபச்சாரி.." என்று சொல்வீர்களா??? "உங்கள் தந்தை நல்லவர்.. என்னுடைய தந்தை பல குடிகளை கெடுத்தவர்.. கொலை காரர்.. " என்று சொல்வீர்களா??

நற்பழக்கங்களை விதையுங்கள்... அதை உங்கள் தலைமுறைகள் அறுவடை செய்யும்... 

துவேஷங்களை விதைக்காதீர்கள்.. அது உங்கள் தலைமுறையை அறுவடை செய்யும்...!!!

தஞ்சை மாவட்டத்தின் நெல் சேமிப்பு கலன்கள்..


பத்தாயம்:- 

ஒன்று அல்லது ஒன்றரை அடி அகலமும் நான்கு அல்லது ஐந்து அடி நீளமும் உள்ள பலகைகளை சதுரமாகவோ, செவ்வகமாகவோ பெட்டிபோல இணைத்து (இதற்கு சட்டி என்று பெயர்) , அந்த சதுர பெட்டிகளை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி இணைத்து (நான்கு அல்லது ஐந்து சட்டிகள்) ஒரு உயரமான கொள்கலன் செய்வார்கள்.. இதில் கொள்ளளவிற்கேற்ப இருபத்தைந்து மூட்டைகளோ.. ஐம்பது மூட்டைகளோ வரை சேமிக்கலாம்.. ( ஒரு மூட்டை என்பது 70 கிலோ) அவரவர்களின் விளைநிலங்களின் அளவை பொறுத்து ஒன்று, இரண்டு, மூன்று நான்கு கூட வைத்திருப்பார்கள்..

கோட்டை:-

வைக்கோலை கயிறுபோல திரித்து (இதன் பெயர் பிரி)அதனை ஒரு நட்சத்திரம் வரைவதுபோல குறுக்கும் நெடுக்குமாக தரையில் விரித்து அதன் மீது உதிரி வைக்கோலை பரப்பி அதில் நெல்லை கொட்டி ஒரு பந்துபோல உருட்டி வைக்கோல் பிரிகளால் இறுக்க கட்டி விடுவார்கள்.. பிறகு இதன் மீது மாட்டு சாணத்தால் மெழுகி காயவைத்து விடுவார்கள்.. இதில் சுமார் ஒரு மூட்டை அளவு நெல்லை பாதுகாக்கலாம்... மறுபடியும் அடுத்த பருவத்திற்கு பயிரிட தேவையான விதை நெல்லை இப்படி பாதுகாப்பார்கள்.. இப்படி பாதுகாப்பதால் அந்த விதை பூச்சி புழுக்கள் அண்டாமல் ஒரு குறிப்பிட்ட சீதோஷ்ண நிலையிலேயே இருக்கும்.. இதனால் விதை நெல் முளைப்புத்திறன் குறையாமல் பாதுகாக்கப்படும் ..

சேர் (சேரு) :-

முதலில் வைக்கோலை மிக நீண்ட பிரியாக திரித்துக்கொள்வார்கள் .. வீட்டின் வாசலில் குறைந்தது ஆறு அடி விட்டமுள்ள அரை அடி(அ) ஒரு அடி உயரமுள்ள மண் மேடு அமைத்து அதில் உதிரி வைக்கோலை பரப்பி பிறகு அதில் நெல்லை கொட்டி.. திரித்து வைத்த வைக்கோல் பிரியால் சுற்றி சுற்றி சுவர் போல் உயர்த்துவார்கள்.. இப்படி உயர்த்தி உயர்த்து சுமார் ஆறு முதல் எட்டு அடி உயரம் கொண்டு செல்வார்கள்.. பிறகு மேற்புறம் வைக்கோலால் கூரை வேய்ந்து மூடி விடுவார்கள்.. இது ஒரு தேர் போல காட்சியளிக்கும்.. இதில் குறைந்த பட்சம் இருபது மூட்டைகள் வரை சேமிக்கலாம்..

குதிர்:-

களிமண் மற்றும் வைக்கோலை கொண்டு உறைகள் என்று சொல்லப்படும் வளையங்கள் செய்து, அதனை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி ஒரு பெரிய கொள்கலன் செய்யப்படும்... இதன் கடைசி உறையின் கீழ் புறம் பக்கவாட்டில் நெல் எடுப்பதற்காக ஒரு துவாரம் அமைக்கப்பட்டிருக்கும்.. இதனை வைக்கோலை அடைத்து களிமண்ணால் பூசி விடுவார்கள். தேவைப்படும் போது இதை திறந்து நெல்லை எடுக்கலாம்..இதில் சுமார் பத்து மூடைகள் வரை சேமிக்கலாம்...

கூன்:-

இது குயவர்களால் செய்யப்படும்.. முதுமக்கள் தாழி என்று சொல்லப்படுவது போல இருக்கும் சுட்ட களிமண்ணால் ஆனது... இதில் குறைந்தது ஒரு கலம் (ஒரு கலம் என்பது பன்னிரண்டு மரக்கால்) அளவு சேமிக்கலாம்.. இதில் நெல், அரிசி, இன்னும் மற்ற சிறு தானியங்களையும் சேமிப்பார்கள்...

# அரிசி எந்த மரத்தில் காய்க்கும் என்று கேட்கப்போகும் எதிர்வரும் கால நவீன தலைமுறைக்கான அறிமுகப்பதிவு..

மனைவியின் கடமைராமனின் மனைவியை கேள்விப்பட்டிருக்கிறோம்... தர்மனின் மனைவி பற்றி அறிந்திருக்கிறோம்... ராவணன் மனைவி பற்றியோ, துரியோதனன் மனைவி பற்றியோ என்றைக்காவது சிந்தித்திருக்கிறோமா...??

நல்வாழ்க்கை வாழ்ந்தவர்களின் மனைவியும் நல்வாழ்க்கை தான் வாழ்ந்திருப்பார்.. ஆனால் கெட்டவர்களாக சித்தரிக்கப்படும் அவர்களின் மனைவியர்??? அவர்களும் கெட்டவர்களா என்ன...??? 
இல்லை... மாறாக.. ராமன், தர்மன் மனைவியரை விட உயர்ந்தவர்கள் , போற்றத்தக்கவர்கள் ராவணன் மனைவியும், துரியோதனின் மனையும்தான்...

தம்முடைய கணவன் தர்மத்திற்கு புறம்பாக, நீதிக்கு புறம்பாக நடக்கிறான் என்பது அவர்களுக்கு நன்கு தெரியும்... ஆனாலும் அவர்கள் தங்கள் கணவனை விட்டு விலகவில்லை.. ஏன் தெரியுமா?? நான் இவனின் மனைவி.. இவனுக்கான பணிவிடைகள் செய்வது ஒன்றுதான் எனது தர்மம்... இவன் செய்யும் தீமைகளுக்கான பலனை இறைவன் கொடுக்கட்டும்.. அதை பற்றி யோசிப்பது கூட எனது வேலை இல்லை... என் கடமையை நான் செய்வேன் என்று கடைசி வரை அவர்களுடனே இருந்தவர்கள்..

ஆனால் துரதிஷ்டவசமாக, நல்லவர்களுடன் இருக்க மனைவிகளுக்கு பிடிப்பதில்லை...

(சொல்லி திருத்தி இருக்கலாமே.. என்ற சந்தேகம் வரலாம்... எடுபடாத இடங்களில் ஆலோசனை சொல்வதோ, அறிவுரை சொல்வதோ எந்த பயனையும் விளைவிக்காது )