ஞாயிறு, 8 மார்ச், 2015

ஓநாய் வர்க்கம்
பொதுமக்களின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு
வங்கிகள் தனியார் மயமாக்குவதை
கண்டித்து வங்கி ஊழியர் சம்மேளனம் வேலை நிறுத்தம்..


#சில நாட்களுக்கு முன்பு சென்னையின் அடுத்தடுத்த பகுதிகளில் நிகழ்ந்த
வங்கிக் கொள்ளைகள் அதனை தொடர்ந்த என்கவுண்டர் கொலைகள்
தமிழ்நாட்டை உலுக்கியது நினைவில் இருக்கலாம்..
அதனை தொடர்ந்த பாதுகாப்பு நடவடிக்கையாக அனைத்து வங்கிகளிலும் 
கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட வேண்டும் என்று 
காவல்துறையினர் அறிவுறுத்தினார்கள்...

ஆனால் வங்கி நிர்வாகங்கள் அதனை செயல் படுத்த அதிக ஆர்வம் 
காட்டவில்லை..
ஒருவேளை அந்த அறிவிப்பை வங்கிகள் கடை பிடித்திருக்குமானால்


என்னென்ன நன்மைகள் விளையும்..??


1 . தங்கள் முதலீடு செய்யும் பணம் வங்கிகளில் பாதுகாப்பாய்தான் இருக்கும்
என்ற பொதுமக்களின் நம்பிக்கை கூடி இருக்கும்..


2 . அப்படி ஒருவேளை அதற்கு பிறகு ஏதேனும் கொள்ளை முயற்சி
நடந்திருப்பின் அது முறியடிக்கப்படவோ, அப்படி வெற்றி பெற்றிருப்பின்
அது எளிதில் கண்டுபிடிக்கப்படவோ உதவி இருக்கும்.


3 .அப்படி ஏதேனும் கொள்ளை முயற்சி நடக்கும் பொது கொள்ளையர்கள்
பாதுக்காப்புக்காய் ஏதேனும் கொலை செய்யக்கூட வாய்ப்பு இருக்கிறது..
அது தவிர்க்கப்படும்..


4 . அப்படி கொள்ளை முயற்சி வெற்றி பெற்று பிறகு அதனை 
கண்டுபிடிக்கப்போய் அதன் மூலம் நிகழும் என்கவுண்டர் கொலைகளுக்கு
அவசியமற்று போயிருக்கும்.


5 . கண்காணிப்பு வளையத்தில் இருப்பதால் ஊழியர்கள் ஒழுங்காக
வேலை செய்தே ஆக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கும்..


6 . பொதுமக்களின் நம்பிக்கை அந்த வங்கியின் வியாபாரம் பெருக வழி
செய்திருக்கும்..


ஆனால் எந்த சம்மேளனமும் இதனை செய்ய சொல்லி எந்த வங்கி

நிர்வாகத்தையும் வற்புறுத்த வில்லை.. ஏனென்றால் இந்த காமிரா

பொருத்தப்படவில்லை என்றால் அவர்களின் பஞ்சப்படியோ-

பயனப்படியோ- அகவிலை- புறவிலை படியோ போனஸ்..

இத்யாதி சலுகைகளோ பறிக்கப்பட போவதில்லை..மாறாக வங்கிகள் தனியார் மயமானால் இவர்களின் வேலை திறன்

சோதிக்கப்பட்டு அது கட்டாயப்படுத்தப்படும்.. அப்படி வேலை செய்யாமல்

சம்பளம் பெரும் ஆவல் உள்ளோர் உடனடியாய் துரத்தப்படுவர்..

இப்போது தான் இவர்களுக்கு பொதுமக்கள் மீது ஆர்வம் கொப்பளிக்கிறது...

பொதுமக்கள் பணத்திற்கு உத்திரவாதமோ- பாதுகாப்போ இல்லாமல்

போய்விடுமென துடிக்கிறார்கள்..


அதற்காக வங்கிகளை தனியார் மயம்மாக்குவது சரிதான் என்று

சொல்லவில்லை.. ஆனால் இந்த சம்மேளனமும் அந்த

தனியார் வங்கிகளின் சுயநலத்தொடுதானே இருக்கிறது??

வங்கிகளின் பாதுகாப்பு மற்றும் பொதுமக்களின் பணத்தின் மீதான

உத்திரவாதமளிக்க வங்கிகள் உடனடியாய் கண்காணிப்பு காமிராக்கள்

பொருத்த வேண்டுமென ஏன் எந்த சம்மேளனமும் மூச்சு கூட விட வில்லை..

உங்களுக்கு லாபம் என்றால் பொது மக்கள் எல்லாம் வேலை வெட்டி

இல்லாதவர்கள்.. அவர்கள் வீடு பற்றி எறிந்தாலும் கவலைப்பட மாட்டீர்கள்..

அதே உங்களுக்கு ஒரு ஆப்பு செதுக்கி கொண்டு யாராவது வருகிறார்கள்

என்றால் உடனே பொதுமக்கள் என்ற போர்வைக்குள் வந்து விடுவீர்கள்..
ஆடு நனைகிறதே என்று கவலைப்படும் ஓநாய்களை ஒழித்தாலே

பொதுமக்கள் நிம்மதியாய் இருப்பார்கள்..!!!


இவர்கள் மட்டுமல்ல.. அனைத்து அரசு ஊழியர் சங்கங்களும்

இதே ஓநாய் வர்க்கம் தான்.. அவர்களின் வருமானத்திற்கு

ஒத்த ரூபாய்க்கு கூட ஆபத்து இல்லாத வரை அவர்கள் எல்லாம்

பொதுமக்கள் ஜாதி இல்லை..!!!
வளைகுடா நாடுகளில் அந்நிய நேரடி முதலீடு சில்லறை வணிகத்தில் கொட்டி விளையாடுகிறது.. கேரிஃ போர் , வால் மார்ட் , டெஸ்கோ போன்ற சர்வதேச நிறுவனங்களுடன் , வளைகுடாவில் பிரபலமான லூலூ என்ற இந்தியரின்  நிறுவனமும் பெரிய பெரிய ஷாப்பிங் மால்களை நிறுவி திறம்பட நிர்வகித்து வருகின்றன.. பண்டிகை காலங்களில் வியாபாரத்தை அதிகரிக்கும் பொருட்டு அந்த நிறுவனங்கள் 50 % முதல் 80 % வரை தள்ளுபடி செய்வதாகவும், ஒரு குறைந்த பட்ச தொகையை நிர்ணயித்து அந்த தொகைக்கு மேல் வாங்குபவர்களுக்கு கூப்பன்கள் வழங்கி லான்ட் க்ரூசர் / மெர்சிடிஸ் /பி எம் டபிள்யூ போன்ற விலை உயர்ந்த கார்களையும் வழங்குகின்றன.. ஆனால் இந்த குலுக்கல்கள் எல்லாம் முறையாக நடக்குமா.. என்ற சந்தேகம் எனக்கும் கூட இருந்தது.

இந்த தள்ளுபடி விலைகளை இவர்கள் அறிவிக்கும் முன் அந்த பொருட்களின் தயாரிப்பு விலை, தள்ளுபடிக்கு பிறகான விலை, காலாவதி தேதி ஆகியவற்றை இந்த நாடுகளின் மாநகராட்சி நிர்வாகம் மற்றும் வியாபார மேம்பாட்டு  ஆணையத்திடம் அங்கீகாரம் பெற்ற பிறகே  தள்ளுபடி அறிவிக்க முடியும். மேலும் இந்த தள்ளுபடி காலங்களில் இவைகள் சோதனைக்கு உட்பட்டும் இருக்கும்.
மேலும் பரிசுக்குலுக்கல் அரசு அலுவலர்களின் முன்னிலையிலேயே நடக்கும்.  இதற்கான விளம்பரங்களையும் சம்பந்தப்பட்ட அரசு துறையின் அனுமதி பெற்ற பின்புதான் வெளியிட இயலும்.

ஈமூ   வளர்த்து சம்பாதிப்பது முதல்...புரட்சி போராட்டம் வரை காசுக்காக விபச்சாரம் செய்யும் நடிக விளம்பரங்களை கண்டுகொள்ளாமல் இருந்து விட்டு அப்புறம் ஏமார்ந்தவர்களின் புகார்களுக்கு எப் ஐ ஆர் போட்டுக்கொண்டு திரியும் இந்திய அரசு துறைகளை நினைத்தால் வெட்கபடாமல் இருக்க முடியாது..

"எரியிறத புடிங்கினா கொதிக்கிறது தன்னால அடங்கும்"


சமீப காலமாக கிரானைட் குவாரி முறைகேடுகளை பற்றி விரிவான 
திடுக்கிடும் செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன.. 
இன்றைய தலைப்பு செய்தியாக விழுப்புரம் அருகில் இருந்த 
இருநூறு மீட்டர் உயர மலை காணாமல் போய் விட்டதாக சொல்லப்படுகிறது.
 நேற்று இரவு ஒரு விவசாயி அந்த மலையை பார்த்ததாகவும் 
இன்று காலையில் தான் அது காணமல் போய் விட்டது என்றும் தான் 
சொல்லவில்லை...ஒரு கொள்ளையோ, கொலையோ கூட 
கண்டு பிடிக்கப்பட தாமதமாகலாம்.. 
அவைகள் ரகசியமாய் நடத்தப்படுபவை.. ஆனால் இந்த கிரானைட் மலைகள் 
எல்லாம் ஒரு மணி நேரத்தில் அதிகாரிகள் கவனிக்காமல் இருந்த போது 
திருடப்பட்டதா..?

ஒருவன் ஆயிரம் ரூபாய் முதலீட்டில் ஒரு சிறு நகரத்தில் டீக்கடை 
வைத்தால் அவனிடம் ஓசி டி குடிக்க உடனே கிளம்பி வந்து லைசென்ஸ் 
வாங்கினாயா என்று மிரட்டும் அளவு அரசு இயந்திரம் விழிப்புடன் 
செயல் படுகிறது. ஆனால் இந்த மலைகளை கிரானைட் குவாரி முதலைகள் 
ஒரே இரவில் விழுங்கி ஏப்பம் விட்டது போல் சொல்வது வேடிக்கையிலும் 
வேடிக்கை.

"எரியிறத புடிங்கினா கொதிக்கிறது தன்னால அடங்கும்" என்று 
எங்கள் கிராமத்தில் சொல்வார்கள். இந்த பண முதலைகளுக்கு அவர்கள் 
போடும் பிச்சை காசுக்காக இந்த நாட்டின் கனிம வளங்களை சுரண்ட 
உதவி புரிந்த அரசு அதிகாரிகள் இந்த நாட்டை பிடித்த கேன்சர் வியாதிகள். 
அவர்கள் முதலில் தீய்க்கப்பட வேண்டியது அவசியம்.
கண் துடைப்புக்காக "இடை நீக்கம்" என்ற பூக்கூடையை வீசி விட்டு 
" செம அடி அடிச்சுட்டேன்" என்று சொல்வது போல் தான் இதுவும்.. 
இவர்கள் உடனே பணி நீக்கம் செய்யப்பட வேண்டும். 
இந்த சம்பவத்தில் பணி நீக்கம் செய்யப்பட்டு நூறு நாள் வேலைக்கு 
வரக்கூடிய அளவிற்கு அந்த அதிகாரியின் குடும்பத்தை கொண்டு 
வந்துவிட்டால் மற்ற அரசு இயந்திர பணியாளர்கள் ஐம்புலன்களையும் 
மூடிக்கொண்டு ஒழுங்காய் வேலை செய்வார்கள்..

அரசு ஊழியர்கள் அரசை மிரட்டி பணம் பறிக்க முயன்ற போது 
"டெஸ்மா" என்ற சட்டத்தின் மூலம் அவர்களுக்கு கடிவாளமிட்ட 
இந்நாள் முதல்வர் அவர்கள் இப்போதும் தன்னுடைய 
இரும்புக்கரத்தை பிரயோகிக்க வேண்டும். ஓட்டு பொறுக்குவதற்காக 
தர்ம நியாயங்களை புறம் தள்ளி போராடும் அரசியல் காளான்களும் 
புரையோடிப்போன புண்களாம் பெரிய கட்சிகளும் இந்த தேச நலனை 
கருத்தில் கொண்டு முதல்வரின் நடவடிக்கைகளுக்கு துணை நிற்க 
வேண்டும்.
ஹ்ம்ம்ம்... ஒரு காமன் மென் சொல்வது யார்காதுல என்னிக்குதான் 
விழுந்திருக்கு..??

நமக்காக நாமே

ஸ்தூரிபாய் காந்தி தாய் சேய் நல விடுதியின் ஒரு சம்பவம் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற கண்டனத்தை வாங்கி தந்திருக்கிறது.. இது முற்றிலும் வேதனையான ஒரு சம்பவம். 

இறந்த குழந்தையின் உடலை எலியோ- பெருச்சாளியோ கடித்து விட்டது என்று ஒரு ஊடகம் செய்தி சொல்கிறது.. பெருச்சாளி கடித்து குழந்தை உயிரிழந்தது என்று ஒரு ஊடகம் செய்தி சொல்கிறது.. 

குழந்தையின் உடலுக்கு நேர்ந்த கதி பற்றியோ.. இனிமேல் இந்த மாதிரி நிகழ்வுகள் நடக்கக்கூடாது என்ற அக்கறையோ துளிகூட இல்லாமல், செய்தியை காசாக்கும் வியாபார நரி தந்திரமும் ,அரசின் மீது புழுதி வாரி தூற்றும் அரசியல் நரி தந்திரமும் தான் முன் நிற்கிறது இந்த ஊடகங்களின் முக மூடிக்குள்..

மழைக்காக ஓடும்  பள்ளிச்சிறுவன் நோட்டு புத்தகங்களை தலையில்  வைத்து நனையாமல் இருக்க முயசிப்பது மாதிரி அரசும் எலி பிடிக்க கிளம்பி இருக்கிறது..

உங்கள் மனசை தொட்டு சொல்லுங்கள்.. எத்தனை பேர் வீட்டில் எலிகள் இல்லை.. இதனை முற்றிலும் ஒழிப்பது  எவ்வளவு தூரம் சாத்தியம்..?? அரசு மருத்துவமனைக்கு செல்லும் பார்வையாளர்கள் எத்தனை பேர் உணவுப்பொருட்களை உண்டபின் அந்த இடத்தை சுத்தமாக வைத்து விட்டு வருகிறோம்.. 

ஊழல் செய்கிறார்கள்.. லஞ்சம் வாங்குகிறார்கள் என்ற கோபம் உங்களைப்போலவே.. இன்னும் உங்களை விட அதிகமாகவே எனக்கும் இருக்கிறது.. அதே நேரம் அரசு என்பது சட்டங்களை இயற்றவும் நடைமுறை படுத்தவும் மட்டுமே நமக்காக நாமே ஏற்படுத்திய ஒரு விஷயம். அந்த சட்டங்களும் திட்டங்களும் வெற்றி பெறுவது என்பது நம் பங்களிப்பு இல்லாமல் சாத்தியமே இல்லை.. கொஞ்சம் சிந்திப்போம்.. இலவசமாய் என்ன கிடைக்கும் என்று காத்திருப்பதை தவிர்த்து நம் வரிப்பணத்தில் தான் அவை நமக்கு கிடைக்கின்றன.. அதனை நாம் முழுமையான பொறுப்புடனும்   பயன் படுத்த வேண்டும் என்று ஒவ்வொரு குடி மகனும் நினைப்பானாயின் நம் பிரச்சினைகளில் பாதி பளு குறையும், பாதி குறைந்தால் மீதில் அகற்றுவதில் எந்த சிரமமும் இருக்காது. 

பொதுமக்கள் யார்??

அரசுப்பதவியில் இருப்பவர்கள் ஒரே நேரத்தில் இரண்டு பதவிகளில் இருக்க கூடாது என்ற சட்டத்தை தவறாக புரிந்துகொண்ட அரசு அதிகாரிகள் தங்களுக்கு அரசு வேலை கிடைத்த உடன் பொதுமக்கள் என்ற பதவியை உடனே ராஜினாமா செய்து விடுகிறார்கள்.

அய்யா அரசு ஊழியர்களே.. இந்த பதவியை நீங்களாக ராஜினாமா செய்ய முடியாது.. நீங்கள் அனுமதி கொடுக்கும் "அது" போன்ற பேருந்தில் நாளை உங்கள் பேரக்குழந்தைகளே கூட விழலாம்.. 
இன்று மணல் மாபியாக்கள் திருடும் ஆறுகளால் பாதிக்கப்படப்போவோரில்  உங்கள் சந்ததியும் இருக்கும் . 

இன்று உங்களுக்கு கிடைக்கும் எலும்புத்துண்டுக்காக நீங்கள் திருடக்கொடுக்கும் கனிம வளங்களால் அரசுக்கு ஏற்படும் இழப்புகள் உங்கள் சந்ததியினரையும் பாதிக்கலாம்.. 

பொதுமக்கள் என்றால் யாரோ இல்லை.. நீங்கள்.. உங்கள் மனைவி மக்கள் பேரக்குழந்தைகள் உற்றார் உறவினர்கள் எல்லோரும்தான்... கொஞ்சம் புரிந்துகொள்ளுங்களேன்..!!!  

சனீஸ்வரனா- கொக்கா..???

ஒருமுறை பார்வதி தேவி ( w /o  பரமசிவன் ) அம்மையார் தன்னுடைய ரசனைகளை எல்லாம் உள்ளடக்கியதாக ஒரு மாளிகையை கட்டினார்.. அந்த மாளிகை திறப்பு விழாவிற்கு நாள் குறிக்க ஜோசியன் ஒருவனை அழைத்துவந்தார்கள். அந்த ஜோசியம் சில பல கட்டங்களை போட்டு கூட்டி கழித்து முகம் சுழித்தான்.. 
" என்ன  ஆயிற்று..?" 
 "நான் எப்படி சொல்வேன் தேவி.. இந்த மாளிகைக்கு நீங்கள் அஸ்திவாரம் தோண்ட ஆரம்பித்த நேரம் ஸ்ரீ சனி பகவான் உச்சத்தில் இருந்த நேரம்.. ஆதலால் இந்த மாளிகைக்கு ஆயுள் மிகவும் குறைந்த காலமே.." என்றான் . 
பார்வதி தேவியார் கவலையில் ஆழ்ந்தார். கணவனை நச்சரித்தாள்.. 
"நீங்கள் தான் ஈரேழு உலகத்திற்கும் வல்லவராயிற்றே,, அந்த சனியிடம் சொல்லி என்னுடைய மாளிகைக்கு எந்த ஆபத்தும் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்" என்றார்.. 
பரமனோ.. "தேவி.. இந்த ஒரு விஷயத்தில் சனி யார் சொன்னாலும் கேட்கமாட்டான்.. அதனால் தான் அவனை சனீஸ்வரன் என்று சொல்கிறார்கள்.." என்று சொல்லி பார்த்தார். 
ஆனால் பார்வதி தேவியார் விடாமல் நச்சரிக்க.. மனைவியை சமாளிக்க முடியாமத பரமன்..
" சரி.. நீ சொல்வதால் நான் சென்று  அவனிடம் பேசி பார்கிறேன்.. ஆனால் ஒன்று.. அவன் இதற்க்கு சம்மதித்தால் ஒன்றும் பிரச்சினை இல்லை.. சம்மதிக்கவில்லை என்றால் நான் அங்கிருந்து என்னுடைய உடுக்கை அடிப்பேன்.. சத்தம் கேட்ட உடன் நீயே அந்த மாளிகையை இடித்துவிடு.. யாரும் கேட்டால் இந்த டிசைன் எனக்கு பிடிக்கவில்லை.. வேறு கட்ட போகிறேன் என்று சொல்லி சமாளித்து விடலாம்.." என்றார்.. 
பார்வதிக்கும் இந்த யோசனை சரியாய் படவே.. ஒப்புக்கொண்டாள்..
சனீஸ்வரன் இருப்பிடம் சென்ற பரமன்.. விஷயத்தை சொல்ல..
" ஈசனே.. இதற்காக நீங்கள் இங்கே வர வேண்டுமா.. சொல்லி இருந்தால் நானே ஓடோடி வந்திருப்பேனே.. "என்று சொன்னார்.. மேலும் "நீங்கள் கேட்டு நான் மறுக்க முடியுமா.. தேவியாரின் மாளிகைக்கு என்னால் எந்த வில்லங்கமும் வராது..  ஒரே ஒரு விண்ணப்பம்.. உங்களது ஆனந்த தாண்டவத்தை பார்த்து வெகுநாட்கள் ஆகி விட்டது .. எனக்காக ஒரே ஒருமுறை இப்போது ஆடிக்காட்டுவீர்களா..?" என்றார்,
சனி தன்னுடைய பேச்சை கேட்ட சந்தோஷத்தில் பரமன் ஆட ஆரம்பித்தார்.. அவர் ஆட ஆட.. அவர் கையில் இருந்த உடுக்கை தன்னாலேயே அடிக்க தொடங்கியது.. இந்த சத்தம் பார்வதியின் காதுகளில் விழுந்தது.. 
" அந்த சனியன் ஒத்துக்கல போல... அவன இன்னொரு சந்தர்ப்பத்துல பார்த்துகிறேன் என்று கருவியபடி.. தன்னுடைய மாளிகையை தானே இடித்து விட்டாள்..." திரும்பி வந்த பரமன் பார்த்தான்.. "அடடா.. அவசரப்பட்டு விட்டாயே தேவி.. ஆனாலும் பார்த்தாயா.. அவன் ஒருமுறை பார்த்து விட்டால் அவன் வேலையை முடிக்காமல் விடவே மாட்டான்,..."

விளம்பர மோகத்தில் ஏழைகள் என்ன- பணக்காரர் என்ன...??

நேற்று : - எங்க சோப்பு தூள்ள   துணிய தொவச்சா வெள்ளையாவும்  வாசனையாவும் இருக்கும்..
இன்று : - சோப்பு தூள்ள துணிய தொவச்சு.. அப்புறம் பேஃப்ரிக் கண்டிசனர்ல ஊறவைக்கனும்...

நேற்று:- பால்லதான் கால்சியம் நிறைய இருக்கு.. சோ.. நிறைய பால் குடிக்கணும்..
இன்று :-பால்ல இருக்க கால்சியத்த உங்க உடம்பு எடுத்துக்கனும்னா.. நீங்க ஹார்லிக்ஸ் குடிக்கணும்..

நேற்று: -ஃ பேர் அண்ட் லவ்லி பூசினா நீங்க செவப்பாயிடுவீங்க..
இன்று :- ஃபேர் அண்ட் லவ்லி போட்டு செக்க செவேர்னு ஆகணும்னா அதுக்கு முன்னாடி நீங்க ஃ பேர் அண்ட் லவ்லி ஃபேஸ் வாஷ்ல முகம் கழுவோனும்...

டி வி ல விளம்பரம் வந்தா எத வேணும்னாலும் வாங்கற கூட்டம் இருக்கவரைக்கும் எத வேணா விக்கலாம் இந்தியால.. அத வாங்கற அளவு ஜனங்ககிட்ட காசு இருக்கத்தான் செய்யிது.. ஆனா இந்தியா ஒரு ஏழை நாடு..

சாணக்ய தந்திரம்

நவீன உலகின் மனிதர்களுக்கு எந்த ஒரு விஷயத்திலும் ரிசல்ட் உடனே தெரிய வேண்டும்.. முடிவுகளுக்காக காத்திருக்க இங்கே யாருக்கும் நேரமில்லை. இதன் வெளிப்பாடுதான் டெஸ்ட் கிரிக்கெட் தொடர்கள் ஐம்பது ஓவர் அடங்கிய ஒருநாள் போட்டிகளானது..
ஐம்பது ஓவர் வரை முடிவுக்காக காத்திருக்க யாருக்கும் நேரமில்லை.. இதனை இருபது ஓவர்களாக்கி வியாபார வெற்றி கண்டது .
இது விளையாட்டுக்கு மட்டுமில்லை.. எல்லாவற்றுக்குமே பொருந்தும்.. ஏனென்றால் தினசரி புது பது விஷயங்கள்.. அத்தனையும் தெரிந்துகொள்ளும் ஆர்வம்.. பழைய விஷயங்களை கிளறிக்கொண்டிருந்தாலோ அசைபோட்டுக்கொண்டிருந்தாலோ புதிய விஷயங்களை நம்மால்  தொடர முடியாமல் போய் விடும்.. இந்த பார்முலாவைத்தான் செய்திநிறுவனங்கள் முதல் ஃ பேஸ்புக் ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில்  பொழுது போக்குபவர்கள் வரை கடை பிடிக்கிறார்கள்.

மக்களின் மனநிலையை தெளிவாக புரிந்து வைத்திருக்கும் அரசு இயந்திரங்கள் மிக தந்திரமாய் இதே விஷயத்தை தமக்கு சாதகமாய் ரிவர்சில்  உபயோகித்து வெற்றி பெற்று இருக்கின்றன.. கூடங்குளம் பிரச்சினை, முல்லை பெரியாறு பிரச்சினை, 2 ஜி விவகாரம், லோக்பால் பிரச்சினை..., இப்போது நிலக்கரி ஊழல் பிரச்சினை.. இப்படி எல்லாவற்றிலும் காலம் தாழ்த்தி காலம் தாழ்த்தி மக்கள் அதன் மீது கொண்டிருக்கும் ஆர்வத்தை நீர்த்துப்போக செய்து மக்கள் புது விஷயங்களில் கவனம் செலுத்த பழைய விஷயங்கள் பரணுக்கு போய்விடும்..
ஊடகங்களுக்கு  புதிய  செய்திகளை பிடித்துக்கொண்டு பழைய செய்திகளை மறப்பது  வருமானம்,,  சமூக தளங்களில் பதிவிட்டு அன்றைய பொழுதை போக்குபவர்களுக்கு இது ஒரு விளையாட்டு,,

ஆனால் அரசுக்கு இன்றைய இந்த வெற்றிகள் பின்னாளில் பாதிக்கப்பட்டோர் ஆயுதப்போராட்டத்தை முன்னெடுக்கும் ஒரு அபாயகரமான கத்தி என்பதி அரசு புரிந்துகொள்ள வேண்டும். 
பொதுப்பிரச்சினைகளில் அரசு உடனே முடிவெடுக்கும் சக்தியை பெறவேண்டும்

அந்த "ஆண்டவனுக்கே" வெளிச்சம்..!!!

இன்றைய தமிழகத்தின் ஹாட் டாக் "சஹானா.."

ஐம்பது பேரை ஏமாற்றி திருமணம் செய்தார் என இவர் மீது புகார்.. இதில் இயல்பாகவே நம்மை போன்ற அப்பாவிகளுக்கு சில பல சந்தேகங்கள் எழுவதை தடுக்க முடியவில்லை.

1 ) அந்த ஐம்பது கணவர்களையும் கண்டு பிடித்து விட்டார்களா..??
2 ) ஒருவருடன் ஓரிரு நாட்கள் முதல் ஒருவருடன் ஆறு மாதங்கள் வரை இவர் வாழ்ந்ததாக "சரித்திரம்" சொல்கிறது. அவ்வாறு இவர் தேர்ந்தெடுத்த அவைவரையும் இவரே நேரடியாக தேர்வு செய்ததாகவும் அந்த கல்வெட்டுக்களில் குறிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. ஒரே நாள் பழக்கத்தில் இவர் அடுத்தநாள் திருமணம் செய்திருக்க முடியாது. பேசி, பழகி, காதலித்து ( நடித்து) திருமணம் வரை செல்ல குறைந்தபட்சம் மூன்று மாதங்களாவது  ஆகி இருக்கும். அப்படி என்றால் இவர் எத்தனை வருடங்கள் இந்த "தொழிலில் " இருக்கிறார்.
3 ) கடந்த ஆறு வருடங்களாக இவர் ஒரு சூப்பர் மார்க்கெட்டில் பனி புரிந்ததாக அந்த குறிப்பேடுகளின் வாயிலாக அறிய முடிகிறது. இந்த ஆறு வருடங்களில் இவர் எத்தனை திருமணம் செய்தார். ? திருமணத்திற்கு குறைந்தது மூன்று நாட்களாவது விடுப்பு எடுத்திருப்பார் இல்லையா.. உடன் வேலை செய்யும் ஒருவருக்கு கூடவா தெரியாமல் இவர் திருமணம் செய்துகொண்டார்..?? இவர் தரப்பிலிருந்து ஒரு "நெப்போலியனோ - ஜானி வாக்கரோ" கூடவா திருமணத்திற்கு செல்லவில்லை..??
4 ) கூடங்குளத்தை மறந்து முல்லை பெரியாறு பக்கம் தமிழ் செம்மெறிகளை திருப்பியது மாதிரி  கிரானைட்டுகளை  மறந்து இப்பொழுதும் கிளுகிளுப்பாய் திருப்பி விட ஏதும் சதுரங்க நகர்த்தலா..??

அந்த "ஆண்டவனுக்கே" வெளிச்சம்..!!!

ஈழ மக்களே..

இலங்கை தமிழர் விவகாரத்தில் தலையிடாமல்  இருந்தால் தமிழர்களால் புறக்கணிக்கப்படுவோம் எனவும், அதே நேரம் இதில் அதிரடியான எந்த முடிவையும் எடுத்தால் பேரன், மகள் என்ற சகலரையும் ஆயுள் முழுக்க கம்பிக்கு பின்னால் வைக்க நேர்ந்துவிடுமோ என்ற பயமும் மெல்லவும் முடியாமல் துப்பவும் முடியாமல் புலிவாலை பிடித்துக்கொண்டு திரிகிறது தி மு க.

மத்தியில் இருக்கும் காங்கிரஸ் அரசு மீது தமிழக மக்களுக்கு இருக்கும் வெறுப்பு நெருப்பை இன்னும் ஊதிவிட்டுக்கொண்டும் , இதன் மூலம் மத்திய அரசில் பங்கெடுத்திருக்கும் தி மு க விற்கு நெருக்கடி கொடுக்கவும் தாக்குதல் ஆட்டம் ஆடும் தந்திரம் தான் அ தி மு க அரசின் ஈழ பாச நாடகம்.

இந்தி எதிர்ப்பு , மண்ணாங்கட்டி, தெரு புழுதி எல்லாவற்றையும் வைத்து அரசியல் செய்தாகி விட்டது.. இப்போது உசுப்பி விட கிடைத்த ஒரே காரணம் எரியும் ஈழம் தான்.. இதை வைத்து அரசியல் நடத்தினால்தான் ஓரளவாவது நானும் ரவுடிதான் என்று சத்தம் போட்டுக்கொள்ள முடியும் என்ற நிலையில் மாவட்ட, ஒன்றிய, கிராமங்களை தலைமையாக கொண்டு "செயலாற்றி" புயல் கிளப்பும் உதிரி கட்சிகள்..

நிஜமாகவே ஈழத்தில் தமிழர்கள் பாதிக்கப்படுவதை கண்டு பொறுக்கமாட்டாமல் போராடுவோம் என்று எவன் கூப்பிட்டாலும் அவனின் நிஜமான நோக்கம்  என்ன என்று தெரியாமல் அவன் பின்னால் ஓடி அவனால் ஒரு கல்லை கூட நகர்த்தி விட முடியாது என்றும்.. அவன் சுயநலத்திற்கு நம்மை குனியவைத்து குதிரை ஏறுகிறான் என்பதை தெரிந்து கொண்ட பின் எதுவும் செய்ய முடியாமை கையை பிசைந்து கண்ணீர் வடிக்கும் ஒரு கூட்டம்..

என்னருமை ஈழ மக்களே.. அதிகாரம் இருக்கும் யாரும் உங்களுக்கு உதவி செய்வதை காட்டிலும் தங்களின் இருப்பிடத்தை அதிகார மையத்தை இன்னும் ஆழமாய் அமைத்துக்கொள்ளவும், உங்களுக்கு எதையாவது செய்யவேண்டும் என்று நினைப்பவர்கள் அதிகாரம் இல்லாமலும் தான் இருக்கிறோம்.. எங்களால் போஸ்ட் பாக்ஸில் நெருப்பு கொழுத்தி போட்டு தான் போராட்டம் நடத்த முடியும்.. இதை தவிர வேறொன்றும் செய்ய இயலாது..
ஆனால் உங்கள் பிரச்சனைகளை சர்வதேச அளவில் எடுத்துச்செல்லும் ஆற்றல் பெற்றிருக்கிறீர்கள்.. நிச்சயம் ஒருநாள் வெல்வீர்கள்.. ஆனால் தமிழ்நாடு உங்களுக்கு எவ்விதமும் உதவாது... இதை புரிந்துகொள்ளுங்கள்!!!

காவு கொடுக்கும் முன் கண்விழிப்போம்

நமது பகுதியில் நமது உறவினர்கள் வீட்டில் நல்ல விசேஷங்கள் நடந்தால் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளவும், துக்க நிகழ்ச்சிகள் நடக்கையில் அவர்களின் சோகத்தில் பங்கெடுத்து குறைக்கவும்  உறவுகள் அனைத்தும் சம்பந்தப்பட்ட வீடுகளை நோக்கி படையெடுப்பது நான் அனைவரும் அறிந்த ஒன்று தான்.. இது காலம்காலமாய் பின்பற்றப்பட்டு தற்போது வரை புழக்கத்தில் இருக்கும் ஒரு அற்புதமான நடவடிக்கை..
முன்னாளில் நடந்தும் பின் வண்டி வாகனங்களிலும் செல்லும் விஞ்ஞான மாறுதலுக்கு நாமும் நம்மை உட்படுத்திக்கொண்டு இருசக்கர - நான்கு சக்கர வாகனங்களை  உபயோகித்து அவ்வாறாக உறவினர்கள் வீடுகளுக்கு சென்று வர துவங்கினோம்..
விவசாய வேலைகளுக்கு பயன் படுத்தும் ட்ராக்டர்-டிரைலர்களை அவ்வாறு உபயோகித்து வந்த நாம்.. நமது பகுதியில் நன்றாக பராமரிக்கப்படாத சாலைகள் மற்றும் திறைமை குறைவான ஒட்டுனர்களையே நம்பி இருக்க வேண்டி உள்ளது..
சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன் காசாங்காடு கிராமத்தில் இருந்து ஆலம்பள்ளம் கிராமத்திற்கு அவ்வாறாக ஒரு துக்க நிகழ்ச்சிக்கு சென்ற ஒரு டிராக்டர் விபத்துக்குள்ளாகி ஓரிரு உயிர்களை பலி கொண்ட பின் டிராக்டர் பயணத்தின் மீது ஒரு பயம் தோன்ற ஆரம்பிக்க.. பின்னாளில் டிராக்டர் பயணம் முற்றிலும் கை விடப்பட்டதை யாரும் மறந்திருக்க முடியாது..
விஞ்ஞானத்தின்  அடுத்த கட்ட வளர்ச்சியாக குறைந்த விலையில் அறிமுகப்படுத்தப்பட்ட சரக்கு வாகனமான "குட்டி யானை" என்று செல்லமாக அழைக்கப்படும் வாகனங்கள் அந்த டிராக்டருக்கான இடைத்தை இன்னும் கூடுதலான ஆதரவோடு பிடித்திருக்கிறது..

இந்த குட்டியானை தான் இப்போதோ- எப்போதோ சில பல உயிர்களை காவு கொள்ள காத்திருக்கிறது..
எப்படி..?/
குட்டி யானையின் தயாரிப்பு நிறுவனமான டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அந்த வாகனத்தின் எடைதாங்கும் /இழுக்கும் சக்தியாக அறிவித்திருப்பது சுமார் 1000கிலோ மட்டுமே ( ஒரு டன்) ஆனால் இன்றைய நமது பயண பயன்பாட்டில் இருக்கும் வாகனங்களில் சுமார் 35 முதல் 40 பயணிகளை ஏற்றிக்கொண்டு நம் கிராமத்து சாலைகளில் விரைந்து கொண்டிருப்பதை நம் கண்கூடாக காண்கிறோம்.. நமது பகுதி பெண்களின் சராசரி எடைஅளவு  (பெரும்பாலும் பெண்களால் உபயோகிக்கப்படுவதால் இங்கே பெண் என்று குறிப்பிடப்படுகிறது) ஒரு பெண் 60 ௦ கிலோ என்று வைத்தால் கூட 40 பெண்கள் கூடி சுமார் 2400 கிலோ ( 2 .5 tonnes ) ஏற்றுகிறார்கள் . இது அந்த நிறுவனம் அறிவித்திருக்கும் எடை அளவை விட சுமார் 140 சதவிகிதம் அதிகமாகும். அவாறு ஏறக்கூடாது என்று அந்த ஓட்டுனர் தடுத்தால் கூட ஆட்கள் அதிகம் சேர்ந்தால் தமது பங்குத்தொகை குறையும் என்ற சிக்கன நடவடிக்கையை மட்டும் கருத்தில் கொள்ளும் பெண்கள் அந்த ஓட்டுனருடன் விவாதம் செய்ய தொடங்குகிறார்கள்..
""பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்.""
மயிலிறகு எவ்வளவு மென்மையானது என்ற போதும் அதனையும் அளவுக்கதிகமாக வண்டியில் ஏற்றும் பொது அதன் அச்சாணி உடைந்து விடும் என்று சொன்ன பொய்யா மொழி புலவன் வாக்கினை இச்சமயம் நினைவுகூர்தல் நலம்.
இது தற்போது மேலும் விரிவடைந்து திருவிழா காலங்களில் குழந்தை குட்டிகளுடன் இன்னும் கூடுதல் எடையுடன் பயணிக்கிறது.
ஒரு விபத்து நடந்த பின்தான் நாம் விழிக்க போகிறோமா..???
ஐந்து ரூபாய் மிச்சம் செய்ய ஆசை பட்டு ஆயுளை இழக்க போகிறார்களா..
சிந்திப்போம்- இது போன்ற பயணங்களை தடுப்போம்.

எட்டணா இருந்தா...ஈழத்தமிழர் விவகாரத்தில் இந்திய- மத்திய மாநில அரசுகள் மற்றும் கட்சிகளின் நிலைப்பாடு பற்றி என்னுடன் அறையில் தனி இருக்கும் அருப்புக்கோட்டையை சேர்ந்த நண்பர் ஒருவருடன் சிறு விவாதம் வந்தது. நான் சில கருத்துக்களை முன்வைத்தேன்.. அதற்கு அவர் சில மறுப்புக்களை கூறியதுடன்.. " உங்களுக்கு என்ன தெரியும்.. நான் பெரிய பெரிய ஆட்களுடன் பழக்கம் வைத்திருக்கிறேன்" என்றார்..
எனக்கு ஒன்றும் தெரியாது என்பதில் எனக்கு நூறு

விழுக்காடு உடன் பாடு இருந்தாலும் அவர் சொன்ன பெரிய ஆட்கள் யார் என்று தெரிந்துகொள்ளும் ஆர்வம் மேலிட.. அவரிடமே கேட்டேன்.. அவங்க எல்லாம் QP (கத்தார் பெட்ரோலியம்) , கத்தார் காஸ் ல் வேலை செய்பவர்கள்.. மாதம் 15000 -20000 ரியால் சம்பளம் வாங்குபவர்கள் என்று சொன்னார்..

இந்த நேரத்தில் அவர் மேற்கூறிய நிறுவனங்களில் அவர்கள் செய்யும் வேலையையும் குறிப்பிடுதல் சாலசிறந்தது என நினைக்கிறேன்.
அவர் சொன்ன ஆட்கள் வேலை செய்யும் இடம் கடலுக்குள் இருக்கிறது. உலங்கு வானூர்தி ( ஹெலிஹாப்டர்) மூலம் அவர்கள் வேலைக்கு சென்றால் ஒரு வாரம் முதல் ஒரு மாதம் வரை அவர்கள் அங்கேதான் வேலை செய்ய வேண்டும். எவ்வளவு காலம் அங்கு வேலை செய்கிறார்களோ அதே அளவு காலம் அவர்கள் தரை பகுதிக்கு வரலாம். அவ்வாறு தரை பகுதிக்கு வருபவர்களின் கால அளவை பொறுத்து அவர்கள் தாய் நாட்டிற்கு செல்லவும், இங்கேயே தனி இருக்கவும் அனுமதிக்கப்படும். இப்போது உங்களுக்கு தெரிந்திருக்கும்.

நான் அவருக்கு சொல்லவில்லை.. பணக்காரகள்தான் புத்திசாலிகள் என்று நினைக்கும் உங்களுடன் வாதம் செய்ய முயன்ற நான் நிச்சயமாய் ஒன்றும் தெரியாதவன் தான்.. எனக்கு நானே சொல்லிக்கொண்டேன்..
வேலைக்கும், புதிசாலிதனத்திற்கும், அறிவுக்கும் வித்தியாசம் தெரியாமலேயே அரை நூற்றாண்டுகளுக்கு மேல் (55 வயது அவருக்கு ) வாழ்ந்துவிட்ட அவரை திருத்தவா நான் கத்தார் வந்தேன்..?? என்னுடைய மனைவி மக்களுக்காக சம்பாதிக்க வேண்டும்... எனக்கு அலுவலகத்திற்கு நேரமாகி விட்டது..!!!

கார்பொரேட் குடும்பம்.

வீட்டில் அன்றாட பணிகளை செய்யும் மனைவிகளுக்கு ஒவ்வொரு மாதமும் நிலையான மாதச் சம்பளம் - கணவன் கொடுக்கவேண்டும்.

அரசு பெண்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்கிறதா.. குடும்ப பெண்களை விபச்சாரிகளாக்க முயல்கிறதா?? 

படுக்கையறை விஷயங்களிலும் கோர்ட் தலையிட தொடங்கிய நாளில் தான் திருமண கலாச்சாரம் சீரழிய தொடங்கி விவாக ரத்துகள் அதிகமாகி இருக்கிறது..
இப்போது கணவன், குழந்தைகள், தாய் தந்தை, மாமனார் மாமியார், நாத்தனார் என்ற உறவுப்பினைப்புக்கும் விலை நிர்ணயம் செய்து இந்திய கலாச்சாரத்தை கேள்விக்குறியாக்க மத்திய அரசு முயல்கிறது.

அரசின் ஊழல்களால் நாடு ஸ்தம்பிக்கும் வேளையில் அதனை தடுக்க திராணியில்லாத இந்த மானம் கெட்ட அரசு குடும்பத்திற்குள் குண்டு வைக்க முயல்வது எந்த விதத்தில் சரி..?? 

அன்பிற்கு இவர்கள் எந்த விதத்தில் விலை நிர்ணயம் செய்வார்கள்.. சம்பளம் கொடுக்கிறேன் என்று மனைவியை கணவன் சூபர்வைஸ் பண்ண முடியுமா.. இல்லை இரண்டாம் முறை உடலுறவுக்கு அழைத்தால் மனைவி ஓவர் டைம் செய்ததாக அர்த்தமா.. மானம்கெட்ட ஜென்மங்கள்..

வழி காட்டிகள்..

மரணத்திற்கு பின்பு சொர்க்கம் அடைந்த கர்ணனுக்கு பசி மட்டும் அடங்கவே இல்லை.. எதை சாப்பிட்டாலும் பசித்தது... அப்போது நாரத முனி அங்கு வந்தார். கர்ணன் அவரது பிரச்சினையை நாரதரிடம் சொன்னார். உன்னுடைய வலதுகள் ஆட்காட்டி விரலை உன்னுடைய வாயில் வைத்துக்கொள்.. பசி அடங்கி விடும் என்று சொன்னார் நாரதர். கர்ணனும் அவ்வாறே செய்ய பசி நொடியில் அடங்கியது. கர்ணனுக்கு ஒன்றும் புரியவில்லை.. எப்படி..இது.. வினவினான்.

நீ இதுவரை எல்லாவித தானங்களையும் செய்தாய்.. ஆனால் அண்ண தானம்  மட்டும் செய்யவில்லை.. எனவேதான் உனக்கு பசித்தது.. 

ஆட்காட்டி விரலை வைத்த உடன் பசி அடங்கி விட்டதே.. அது எப்படி..?? 

போர்காலத்தில் படி பிரிவினர் தங்கி இருந்த பொழுது நீ  அங்கு சென்றாய். அப்போது ஒரு வீரன் உன்னிடம் கேட்டான், உணவுக்கூடம் எங்கே இருக்கிறது என்று. அதோ இருக்கிறது என்று நீ சுட்டிக்காட்டினாய்.. அதனால் உன்னுடைய விரலுக்கு மட்டும் அந்த அன்னதானம் செய்த புண்ணியம் கிடைத்தது..

கர்ணனை விட அவனுடைய கரங்கள் கூடுதல் சிறப்பானது..

தானம் செய்துதான் புண்ணியம் தேடவேண்டுமேன்பது இல்லை..  ஒருவருக்கு அவரது தேவையை அடைய வழி காட்டுதலும் புண்ணிய காரியம் தான்.

மனம் வேண்டும்..!!!

நாங்களும் தான் தானம் செய்கிறோம்.. ஆனால் ஏன் கர்ணனை மட்டும் எல்லோரும் கொடை வள்ளல் என் புகழ்கிறீர்கள்.. என்று பகவான் ஸ்ரீ கிருஷ்ணனிடம் கேட்டார்கள் பாண்டவர்கள்..
அவர்களுக்கு செயல் விளக்கம் தரும் விதமாய்.. ஒரு பானை நிறைய பொற்காசுகளை தருவித்து இதை இன்று மாலைக்குள் நீங்கள் தானமாக கொடுத்துவிட வேண்டும்.. ஆனால் ஒரு நிபந்தனை.. நீங்கள் எவ்வளவு இதிலிருந்து எடுக்கிறீர்களோ அதே அளவு நிறைந்து விடும் என்றார்..


நாங்கள் ஐந்து பேர் இருக்கிறோம்,, நிச்சயம் இந்த பானையில் இருக்கும் பொற்காசுகளை மாலைக்குள் தானமாக கொடுத்து விடுவோம் என்று சொல்லிய படி அள்ளி அள்ளி கொடுக்க தொடங்கினர்.. மாலை வரை ஆயிற்று .. பானையில் பொற்காசுகளின் அளவு குறையவே இல்லை.. தங்களின் தோல்வியை ஒப்புக்கொண்டனர் பாண்டவர்கள்..


கர்ணனை அழைத்தார் கிருஷ்ணர். கர்ணனிடமும் இதே நிபந்தனையை சொன்னார்.. ஒப்புக்கொண்ட கர்ணன்.. பக்கத்தில் நின்ற ஒரு ஏழை வயோதிகனை அழைத்து அந்த பானையை அப்படியே தூக்கி தானமாய் கொடுத்தான்..


பாண்டவர்களுக்கு புரிந்தது..


தானம் கொடுக்க வசதி முக்கியமில்லை.. முதலில் மனம் வேண்டும்..!!!

சிவகாசி வெடி விபத்தும் திடீர் கடவுள்களும்

இன்று முகநூல் பத்திரிக்கையாளர்களுக்கு கிடைத்த அவல் திரு. மம்முட்டி அவர்கள் ரூ.3500000 ம் மதிப்பிலான மருந்துப்பொருட்களை சிவகாசி வெடி விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக வழங்கியது. 

எல்லோரை போலவே நாமும் மனசார வரவேற்கிறோம்.. அவரின் மனித நேயத்திற்கு தலை வணங்குகிறோம்.. ஆனால் இதனை சாக்காக பயன் படுத்தி சகட்டு மேனிக்கு தமிழ் நடிகர்களின் மீது சேறு வாரி இறைக்க முற்படும் "நன்றி மறவா" தமிழ் உள்ளங்களை  பாராட்ட தமிழின் மூன்று லட்சம் வார்த்தைகளிலும் ஒரு வார்த்தை கிடைக்கவில்லை.

இதற்கு முன்பு தமிழ் நாட்டில் வேறு எதுவும் துயர சம்பவங்கள் நடக்கவே இல்லையா.. அதற்கு தமிழ் நடிகர்கள் யாரும் உதவவே இல்லையா..?? இல்லை குஜராத் நிலா நடுக்கம் முதல் கார்கில் யுத்தம் வரை.. தமிழன் யாருக்கும் அள்ளிக்கொடுக்கவில்லையா..
உள்நாட்டிலோ வெளிநாட்டிலோ கலை நிகழ்ச்சிகள் நடத்தி பிச்சை எடுத்துதான் தமிழ் நடிகர்கள் உதவுவார்கள் என்று ஆதங்கப்படும் அன்பு நண்பர்களே... அந்த பிச்சை எடுக்கும் நிகழ்ச்சியை விளம்பரதாரர்களை பிடித்து இரண்டு மூன்று வாரங்களுக்கு பகுதி பகுதியை ஒளிபரப்பி காசு பார்க்கும் ஊடகங்களை குறை சொல்ல ஏன் யாருக்கும் தைரியமில்லை..
வயிற்று பசிக்காக விபச்சாரம் செய்பவளை படம்பிடித்து காசு சம்பாதிக்க நினைக்கும் ஊடகங்கள் அதனினும் கேவலம் இல்லையா?? இல்லை ஊடகங்கள் நடத்துபவர்கள் எல்லாம் அடுத்த வேளை சோற்றுக்கு வழி இல்லாதவர்களா..??

விபத்து என்பதோ இயற்க்கை சீற்றம் என்பதோ நாளை நடக்காது என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை.. அப்படி ஏதேனும் நிகழும் பட்சத்தில் இந்த நடிகர்கள் கொடுத்தால் வேண்டாம் என்று சொல்லி விடுவீர்களா..?? இல்லை இன்று அரக்கர்களாக சித்தரிப்பவர்களை நாளை காசுக்காக கடவுள் ஆக்குவீர்களா..?? 
கொடுத்தால் நல்லவன்.. இல்லை என்றால் கெட்டவன் என்பது விபச்சாரம் என்றால் ஒட்டு மொத்த தமிழினமும் அதை தான் செய்கிறதா,,,
பக்கத்து வீட்டுக்காரன் மனைவியை உயர்த்தி பேசுங்கள்.. பெருமையான விஷயம்.. அதற்காக உங்கள் மனைவியை விபச்சாரி என தாழ்த்திப்பேசித்தான் பக்கத்து வீட்டுக்காரியை பத்தினியாக்கும் எண்ணத்தை அறவே ஒழியுங்கள்..

ஒரு குழந்தையும் உனக்கு ஆசான்தான்...

அழுகையை தொடங்கும் போது மிக தீவிரமாய் வீறிடும் குழந்தைகள்/சிறுவர்கள்
( ஏதேனும் சொல்லத்தெரியாத வலியோ- பசியோ தவிர்த்து மற்ற காரணங்களுக்காக )  நேரம் ஆக ஆக கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்து பிறகு சில வினாடிகள் இடைவெளி விட்டு மீண்டும் "ம்ம்ம்ம்.... ம்ம்ம்...." என்று அழ தொடங்குவார்கள்..
இதற்கான மனோதத்துவ விளக்கம் தெரியுமா.. வேகமாய் அழ தொடங்கும் குழந்தையின் மூளையில் சிறிது நேரத்திலேயே அழுகைக்கான காரணம் மறைந்து விடும்.. சில வினாடிகளில் அழுகை நின்ற உடன் அவை மீண்டும் குழந்தையால் நினைவு கூறப்படும். மீண்டும் அழுகையை தொடங்கும்.. இப்படியே கண்டு கொள்ளாமல் விடப்படும் குழந்தையின் அழுகை அந்த குழந்தைக்கே " எதற்காக நாம் அழுகிறோம் " என்ற காரணம் தெரியாததால் அழுகையை முற்றிலுமாக நிறுத்தி விட்டு அடுத்த விளையாட்டில் கவனம் செலுத்த தொடங்கும்.

இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள என்ன இருக்கிறது..?

ஒருவரின் மீது அதீதமாய் வரும் கோபம் கண்டுகொள்ளப்படாமல் விடும்போது சில மணி நேரத்தில்- சில நாட்களில் வீரியம் குறைந்து விடும்.. சில மாதங்கள் கழித்து யோசித்தோமானால் அந்த காரணமே மறந்து போயிருக்கும்.. அப்படியே நினைவு கூர்ந்தால் கூட அது ஒரு நகைச்சுவையான காரணமாய் நமக்கே தோன்றும்.
அட..  இதுக்கா நாம சண்டை போட்டோம்.. என்று உங்களை நினைத்தே உங்களுக்கு சிரிப்பு வரும்.. அப்புறம் என்ன.. ஓரமாய் எட்டிப்பார்க்கும் "ஈகோ"வை முடியை பற்றி வெளியில் வீசிவிட்டு அந்த நண்பருடன் பேச தொடங்குங்கள்.. முன்னிலும் நெருக்கமாய் உணர்வீர்கள்.. 

நண்பர்களை தர்மச்சங்கடத்தில் ஆழ்த்தாதீர்கள்..

உங்களை ஒரு நண்பர் அழைக்கும் போது உங்கள் அருகில் இருவருக்கும் தெரிந்த இன்னொரு நபர் இருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம்.. அந்த நண்பர் உடனிருக்கிறார் என்று மட்டும் உங்களை அழைத்த நண்பருக்கு தெரிவியுங்கள்.. மாறாக.." அவர் இருக்கிறார்.. அவருடன் பேசுகிறாயா.." என கேட்காதீர்கள். 
உங்களை அழைத்த நபர் அவருடைய அலை பேசியில் மிக குறைவான தொகை வைத்திருக்க கூடும்.. நீங்கள் "பேசுகிறாயா.." என்று கேட்கும் போது அவரால் தவிர்க்க முடியாது.. அப்படி தவிர்த்தால் அந்த உடனிருக்கும் இன்னொரு நண்பர்  அழைத்தவர் மீது காழ்ப்புணர்ச்சி கொள்ள கூடும்.
 நீங்கள்  இன்னொரு நண்பர் உடனிருக்கும் விஷயத்தை மட்டும் தெரிவித்தால்  அழைத்தவர் அந்த இன்னொரு நண்பருடன் பேசும் அளவிற்கு நேரமோ- தொகையோ இருக்கும் பட்சத்தில் "அவர்கிட்ட கொடு" என்று தாமாகவே முன் வருவார்.. 
நீங்களே வலுக்கட்டாயமாக அவருடன் பேசுகிறாயா என கேட்டு அப்படி அவரும் மறுக்க இயலாமல் பேசும் போது அவரது அலை பேசி ஜீரோ பேலன்ஸ்  ஆகி விட்டால் கையில் பணமோ- ரீசார்ஜ் செய்யும் கடையோ அருகில் இல்லாத பட்சத்தில் அவரால் அவசர கால அழைப்புகள் கூட செய்ய இயலாமல் போய் விடும்..

அவதார புருஷர்கள்..உன்னைப்போல் ஒருவன் திரைப்படத்தில் ஒரு காட்சி.. வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாய் ஒரு ஊடகவியலாளருக்கு தகவல் வந்து கொண்டிருக்கும். காவல் துறை ஆணையர் அவர்கள் அந்த ஊடகவியலாளரை விசாரிப்பார். அவர் ஒரு பெண்.
நீங்கள் யார்"- காவல் துறை ஆணையர்.

"நான் ஒரு பெண் , அப்புறம் இந்தியன், அப்புறம் ஒரு பத்திரிக்கையாளர்.." என்று பதிலுரைப்பார்..

" நீங்க சொன்ன வரிசை முறை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு " என்று ஆங்கிலத்தில் சொல்வார் அந்த காவல்துறை ஆணையர்.

## சினிமா பாத்துட்டு எப்பிடி குறை சொல்லலாம் விமர்சனம் எழுதலாம் என்று மட்டும் யோசிக்காமல் ஒரு சராசரி மனிதனாய் அதில் கற்றுக்கொள்ளவேண்டிய விஷயங்களையும் கற்றுக்கொள்ளுங்கள் பத்திரிக்கையாளர்களே.. பேனா என்ற மிக வலிமையான ஆயுதம் உங்கள் கையில் இருக்கிறது உண்மைதான்.. அது மருத்துவரின் கையில் இருக்கும் கத்தி மாதிரி இருக்க வேண்டுமே தவிர கொலைகாரனின் கையில் இருக்கும் கத்தியாய் மாறக்கூடாது.


மருத்துவர் கையில் இருக்கும் கத்தி என்பது ஒரு நோயாளியை காப்பாற்ற மட்டுமே பயன் பட வேண்டும்.. ஒரு நாவிதரின் கையில் இருக்கும் கத்தி என்பது ஒருவரின் முகத்தை அழகு படுத்த மட்டுமே பயன் படுத்தப்பட வேண்டும்..
என்ன காரணத்திற்காக அவர்கள் கையில் கத்தி கொடுக்கப்பட்டிருக்கிறதோ அந்த காரணத்திற்காக மட்டுமே அவர்கள் அதை பயன் படுத்த வேண்டும்.. மாறாக என்னுடைய கையில் கத்தி இருக்கிறது என்பதற்காக அவர்கள் மற்றவரை காயப்படுத்த முனைந்தால்...????
ஜனநாயகம் என்பதும் அப்படித்தான்.. உங்கள் கையில் இருக்கும் ஜனநாயக- சுதந்திர கத்தியை அதற்குறிய முறையோடும் பயன் படுத்துங்கள்...

வதந் "தீ"மழையில் நனையாமல் உன் உடலால் மூடி குழந்தையை காப்பாற்றி விட்டாய்.. உன் கண்ணீரில் நனைகிறதே,.. என்ன செய்வாய்.. என்று கவிஞர் வைரமுத்து சொன்னது தான் நினைவில் வருகிறது..


பூமியின் அட்ச ரேகைகளிலும் தீர்க்க ரேகைகளிலும் கூட மனிதன் அனுக்கதிர்வீச்சை பாய்ச்சிவிட்டான் .. அணுக்கதிர் தாக்குதலை குறைக்கும் பாதுகாப்புநடவடிக்கை மட்டுமே இனி வரும் காலத்தில் சாத்தியம்..


அத்தகைய பாதுகாப்பு நடவடிக்கைகள் மிக அற்புதமாய்

தி ட்டமிடப்பட்டிருப்பதாக விபரம் தெரிந்த விஞ்ஞானிகள் சொல்லும் போது உதயகுமாரன் என்ன கடவுளா..??எதிர்கால சந்ததிகள் கதிர்வீச்சில் இருந்து அண்டார்டிகாவில் இருந்தாலும் தப்பிக்கவே முடியாது..தூரத்தில் இருப்பதால் தான் அதனை ஆதரிப்பதாகவும் பக்கத்தில் இருந்தால் தான் அதன் பாதிப்பை உணரமுடியும் என்று சொல்வது சற்றே நகைச்சுவையாகவும் அவர்களின் அறியாமையையுமே சொல்கிறது.
செல்போன் வடிவில் ஒரு அணு உலையை ஒவ்வொரு மனிதனும் சுமந்துகொண்டு திரிகிறான்.. சிலர் சுயலாபத்திற்காக கிளப்பி விடும் வதந்தியில் வெந்து போகாதீர்கள்.. வதந் "தீ" கொடியது..

எப்படிப்பா??ஒரு டிரான்சிஸ்டரோ , ட்யூப் லைட்டோ பழுதானால் கூட உள்ளூர் மெக்கானிக்குகள் சொல்வதை வேதவாக்காய் எடுத்துக்கொண்டவர்கள்..... அந்த டிரான்சிஸ்டரையும் டியூப் லைட்டையும் உருவாக்க கூடிய வல்லமை படைத்த விஞ்ஞானிகள் சொல்வதை.. " உனக்கு என்ன தெரியும்.." என்று மறுதலிக்கும் அளவிற்கு கல்வி அறிவும், உலக அறிவும் பெற்றிருக்கிறோம்...

மீன்கள் முட்டையிடும் காலத்தில் கடலில் மீன்பிடிக்க தடை விதித்தால் "எங்கள் குடும்பமே பட்டினி கிடக்கிறது.. அரசு உதவித்தொகையை உயர்த்த வேண்டும் " என்று போராடும் மீனவர்கள் ஒரு வருடத்திற்கும் மேலாக "அறவழி (?) " போராட்டம் நடத்துகிறார்கள்..
மீனவர்கள் இல்லாத செய்தி என்றாவது இருக்கிறதா?? எந்த விவசாயியும் கேட்கவில்லை.. "நான் நாற்று நட்டு கதிர் அறுக்க மூன்று முதல் நான்கு மாதங்கள் ஆகிறது.. எனக்கு உதவித்தொகை
கொடுங்கள் " என்று... அப்படியே கேட்டாலும் ஒன்றும் கிடைக்க போவதில்லை.. ஆனால் ஓரிரு நாளைக்கு மீன் பிடிக்க போகவில்லை என்றால் உதவித்தொகை வழங்கபடுகிறது...
தெரியாமல் தான் கேட்கிறேன்.. கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் அன்று ஒருநாள் மட்டும் அவர்கள் மனைவி மக்களுக்கு சாப்பாட்டுக்கும் அத்தியாவசிய தேவைக்கும் மீன் பிடித்துக்கொண்டு கரையேறி விடுகிறார்களா..??
ஒட்டு பொறுக்கி அரசுகள் இவர்களை புறக்கணித்தால் எல்லாம் சரி ஆகும்..

உங்களை எல்லாம் பேசவிட்டா...மத்திய அரசு மாநிலங்களை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைப்பதற்காகத்தான் இப்படி பெரு மதிப்பிலான மின் திட்டங்களை மட்டும் செயல் படுத்தி வருகிறதாம்.. அந்த அந்த மாவட்டங்களுக்கு தேவையான மின்சாரத்தை அந்த அந்த மாவட்டங்களே தயாரித்துக்கொள்ளும் அளவிற்கு குறுகிய மின் திட்டங்கள் இதனால் தான் நிறைவேற்றப்பட வில்லையாம்.-

## அட பதருங்களா.. மத்திய அரசு பாகிஸ்தானிலோ- பங்களாதேஷிலோவா இருக்கு.. மாநிலங்களில் இருந்து
தேர்ந்தெடுத்து அனுப்பப்படும் எம் பிக்களை கொண்டு தானே மத்திய அரசே உருவாக்கப்படுகிறது.. மாநிலத்திற்கு நன்மை இல்லாமல் அவர்களை அடக்க மற்ற மாநில பிரதி நிதிகள் ஒன்று கூடி முடிவு செய்தால் சம்பந்தப்பட்ட மாநில பிரதிநிதிகள் என்ன விரல் சூப்புவார்களா..??
உங்களை முட்டாளாக்கி குனிய வைத்து குதிரை ஏறும் கூட்டத்தையே நீங்கள் திரும்ப திரும்ப அனுப்புகிறீர்கள்.. அவர்கள் மகன்- மகள்- பேரன்- கொள்ளு பேரன் முதல் பேராதி பேரன் வரைக்கும் பதவி வாங்கவும் சொத்து சேர்க்கவும் மட்டுமே கனவோடு போகிறார்கள்..
தடி எடுத்தவன் தண்டல் காரன் என்பதுபோல் பேசத்தெரிந்தவன் எல்லாம் தலைவனாகி விட்டதால் தான் இன்று இந்த நிலைமை..
அஜ்மல் கசாப்பிடம் மைக்கை கொடுத்து உரையாற்ற சொன்னால் நான் நூற்று ஒரு சதவிகிதம் நிரபராதி என்றுதான் பேசுவான்..

இதுதான் நம் கலாச்சாரம்

ஒரு அழகான பெண் ஒருமுறை பெர்னாட்ஷா அவர்களை சந்தித்து தம்மை திருமணம் செய்துகொள்ளும் படி கேட்டார்.. பெர்னாட்ஷா காரணம் கேட்க.. "என்னுடைய அழகும் உங்களுடைய அறிவும் சேர்ந்து நமக்கு ஒரு குழந்தை பிறந்தால் அதுதான் இந்த உலகின் சிறந்த குழந்தையாக இருக்கும் " என்றார் அந்த பெண்..
"உன்னுடைய அறிவும் என்னுடைய அழகும் கொண்டு அந்த குழந்தை பிறந்துவிட்டால் அதுதான் இந்த உலகத்திலேயே மோசமான குழந்தையாய் இருக்குமே.. என்ன செய்வது .." என்று கேட்டாராம் பெர்னாட்ஷா..

ஒரு அழகான பெண் ஒருவர் சுவாமி விவேகானந்தரை சந்தித்து தம்மை திருமணம் செய்துகொள்ளும் படி கேட்டார்.. காரணம் கேட்க.. " உங்களை போல ஒரு குழந்தையை பெற்றுக்கொள்ள விரும்புகிறேன் " என்றார் அந்த பெண்..

"அதற்க்கு ஏன் தாயே அத்தனை காலம் காத்திருக்க வேண்டும்.. இப்போதே என்னை தத்து எடுத்து கொள்ளுங்கள்..உங்கள் மகனாக ஆகி விடுகிறேன் .." என்றாராம் சுவாமி விவே கானந்தர்..


வளர்ச்சி பெரும் சமூக வலைத்தளங்கள்... அசுரனாகவா..?? தேவனாகவா..?? - ஒரு அலசல்.

உலகின் பல நாடுகளில், இந்தியாவின் பல மாநிலங்களில், தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் பரவிக்கிடப்போரை எல்லாம் ஒன்று திரட்டி நண்பர்கள் என்ற ஒரு வட்டத்திற்குள் கொண்டுவரும் சமூக வலைத்தளங்கள் இரு புறமும் கூர்மையான கத்தியாய் மின்னுகின்றன..


ஒருவருடைய கருத்தை அவரது கோணத்தில் நெடிய விளக்கத்துடன் பதிவு செய்வதில் முகநூல் முன்னணியில் இருக்கிறது .
உலகில் எந்த ஒரு சம்பவம் நிகழ்ந்தாலும் உடனடியாய் அதற்கு ஒரு பாராட்டு/ நையாண்டி வர்ணனைகளுடன் பதிவுகள் போடுவதில் நேரடி ஒளிபரப்பு தொலைகாட்சி நிருபர்களையும் மிஞ்சி விடுகிறார்கள் முக நூல் பதிவர்கள்.
அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு கருத்துக்கள் அதி வேகமாய் பரப்ப படுகின்றன.. முல்லை பெரியாறு பிரச்சினை முதல் கூடங்குளம் பிரச்சினை வரை.... ஒரு காவல் துறை அதிகாரி நான்கு தோசை கேட்டு தன்னுடைய அரசாங்க முத்திரையுடன் உணவகத்திற்கு கடிதம் அனுப்பியது முதல்..... போக்குவரத்து காவலர் லஞ்சம் வாங்குவது வரை ஒவ்வொரு விஷயமும் உடனடியாய் உலகின் பார்வைக்கு கொண்டு வரப்படுகிறது..
இதில் பாதி உண்மையாகவும் பாதி கற்பனை கலந்தும் எழுதப்படுகிறது.. இணையத்தில் தேடி எடுத்த பழைய புகைப்படங்களை சமீபத்திய சம்பவங்களில் இணைத்து புதிய செய்தியாக்குவதும்.. போட்டோ ஷாப் யுக்திகளை பயன் படுத்தி சில பல அரசியல் தலைவர்களை அவர்களின் பதவி, வயது, சமூக அந்தஸ்த்து எதை பற்றியும் யோசிக்காமல் பதிவிடுவதும் அவரது நண்பர்கள் அதனை பகிர்வதும் இதன் மூலம் ஒருவரின் செய்தி.. நண்பர்கள்.. நண்பர்களுக்கு நண்பர்கள் என்ற பலரது பக்கங்களில் பரவுவதன் மூலமும் ஒரு வக்கிர கலாச்சாரமும் வளர்க்கப்படுகிறது..


மாறிவரும் கலாச்சாரத்தில் தனிக்குடித்தனம் இருப்போர், தம்பதிக்குள் சிற்சில மனக்கசப்புடன் இருப்போரை இந்த இணைய நட்புகள் வெகுவாக கவர்ந்து வைத்திருக்கின்றன.. தனிமையும் , ஒருவிதமான சலிப்பும் கொண்டிருக்கும் பெண்கள் இந்த சமூக வலைத்தளங்கள் தன்னுடைய மன பாரங்களை இறக்கி வைக்கும் ஒரு இடமாகவும், தன்னுடைய கணவரால் ,- பிள்ளைகளால் கண்டுகொள்ளப்படாத தம்முடைய எண்ணங்களை வெளிப்படுத்த ஒரு சிறந்த இடமாகவும் கருதுகின்றனர். இதுபோன்ற பெண்கள் இடும் பதிவுகளுக்கு பாராட்டுக்களும் ஆலோசனைகளும் அங்கீகாரமும் அவரது நண்பர்களால் உடனே கிடைக்கிறது..இதன் மூலம் இணைய இணைப்பில் வரும் அறிமுகம் இல்லாத பெண்களை - அதிலும் குறிப்பாக திருமணமான பெண்களை- அன்பாக பேசுவதுபோல் பேசி அவர்களை தன்வசப்படுத்தி அவர்களிடம் பணம் பறிப்பதிலும் , உடற்கூறியலான தொடர்பு ஏற்படுத்திக்கொள்வதிலும் ஒரு மிகப்பெரிய கூட்டமே சுற்றி திரிகிறது.. இந்த மாதிரி செயல்களில் ஈடு படுவோரில் பெரும்பாலானோர் போலி முகவரிகளில் போலி பெயர்களில், போலி புகைப்படங்களை வைத்துக்கொண்டு உலா வருவோர். முதலில் "ஹாய்" என்று சாட்டில் ஆரம்பிக்கும் தொடர்பு பின்னாளில் தொலைபேசி வாயிலாக வலுப்பெற்று பின் உல்லாச விடுதிகள் வரை செல்கிறது.. அப்புறம் அதுவே இவர்களை போன்ற அப்பாவி பெண்களுக்கு ஆபத்தாகி தற்கொலை வரை தூண்டுகிறது.


இப்படி கெட்ட விஷயங்கள் நிறைந்து கிடந்தாலும் நல்ல விஷயங்களும் நடக்காமல் இல்லை.. படிப்பு செலவுக்காக வசதி இல்லாமல் கஷ்டப்படுவோர், மருத்துவ உதவி தேவைப்படுவோர் , இரத்தம் தேவைப்படுவோர் போன்றோர் உலகின் பார்வைக்கு எடுத்து செல்லப்பட்டு உதவியும் செய்யப்படுகிறது.. அதிலும் இப்போது ஒரு சிக்கல்
அதே நேரம் சமீபமாய் நடந்த சிவகாசி வெடி விபத்து.. "சிவகாசி துயர் துடைப்பு குழு " என்று ஒரு குழு உருவாக்கப்பட்டு உதவி கோரப்பட்டது.. சுமார் ஒன்றரை லட்ச ரூபாய்க்கு மேல் வசூல் ஆக.. வசூலான பின் பொறுப்பெடுத்து வசூல் செய்த ஒரு நபர் பணத்தை பாதிக்கப்பட்ட மக்களுக்கு பயன் படுத்தாமல் கையாடல் செய்துவிட்டதாய் குற்றச்சாட்டு எழுகிறது.. உள்நாட்டில் இருந்தும் வெளிநாட்டில் இருந்தும் இரக்கத்தோடு பணம் அனுப்பியவர்கள்.."ஏமார்ந்து விட்டோமோ.." என்று நினைக்கும் படியாய் இந்த சம்பவம் அமைந்து விட்டதுடன்.. இதுநாள் வரையில் நிஜமாகவே மருத்துவ, படிப்பு காரியங்களுக்காக உதவிகள் கேட்டு செய்தோர் கூட இனிவரும் காலத்தில் செய்ய தயங்கும் சூழ்நிலையும் உருவாக்கி விட்டது..
மற்றபடி நகைச்சுவை, கவிதை, கட்டுரைகள், சினிமா-அரசியல் விமர்சனங்கள் என்று ஒரு நவரச பத்திரிகை போல் சிலரது பக்கங்களும் உண்டு..


முகநூல் பயன்படுத்த தொடங்குபவர்கள் சராசரியாக ஒரு நாளைக்கு எட்டுமணி நேரம் பயன் படுத்துவதாகவும், நாளுக்கு நாள் இதனை பயன்படுத்துவோர் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே வருவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றான்.


ஆக மொத்தம் வதந்திகள் பரப்புவதிலும், குடும்ப கலாச்சாரத்தை சீரழிப்பதிலும் , அரசியல்- சினிமா பிரபலங்களை போலி முகவரியில் இருந்துகொண்டு தரம் தாழ்ந்து விமர்சிப்பதிலும் ஒரு அசுரனாய் மாபெரும் வளர்ச்சி அடைகிறது சமூக வலை தளங்கள்.
நிறைய பேரின் எழுத்து திறமையை வெளிக்கொண்டு வருவதிலும், யாரும் அறியாமல் ஏதோ ஒரு மூலையில் நடக்கும் குற்றங்களை வெளிக்கொண்டு வருவதிலும், நல்ல விஷயங்களுக்காக சிதறிக்கிடப்போரை ஒருங்கிணைப்பதிலும் ஒரு தேவனாய் வளர்ச்சி அடைகிறது..
பார்க்கலாம்.. தேவனை அசுரன் வெல்லப் போகிறாரா .. அசுரனை தேவன் வெல்ல போகிறாதா..??
எனக்கென்னவோ அசுரனின் கை ஓங்கி இருப்பதாகவே படுகிறது...!!!

சனி, 7 மார்ச், 2015

நம்மில் தொடங்கட்டும்.

எல்லாவற்றையும் கண்மூடித்தனமாக எதிர்ப்பதென்பது இப்போது ஒரு வியாதியாகவே ஆகிவிட்டது.. இது அறியாமையோ  / புகழ் தேடியோ / எதிர்த்தால் தான் நம்மையும் உணர்வாளர்கள் பட்டியலில் மற்றவர்கள் வைப்பார்கள் என்ற நம்பிக்கையோ காரணமாயிருக்கிறது..
அணு உலை முதல் அந்நிய முதலீடு வரை... பால்- பஸ் கட்டண உயர்வு முதல் பெட்ரோல் விலை உயர்வு வரை..எல்லாவற்றிலும் இதே அதிமேதாவித்தனம் தான் நிகழ்கிறது..
எந்த ஒரு விஷயமும் மாற்றங்களை சந்தித்தே வந்திருக்கிறது..உலகமயமாக்களில் அனைத்து நாடுகளுமே ஒரு குடையின் கீழ் வந்துவிட்ட படியால்.. உலகின் எந்த ஒரு மூலையில் நடக்கும் நிகழ்வுகளும் மற்ற நாடுகளின் மீது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியே தீரும். இதனை சமாளித்து நாமும் மற்ற நாட்டவரை போல் இருக்க வேண்டுமானால் சில பல மாற்றங்களை நாம் முன்னெடுத்தே ஆகவேண்டிய கட்டாயம் தவிர்க்க முடியாததாகி விடும்..
எதையும் நம்மால் தடுக்க முடியாது.. ஏனென்றால் உலகம் ஒருவருக்கொருவரை சார்ந்தே வாழவேண்டிய கட்டாயம்.. தடுக்கத்தான் முடியாதே தவிர அதனை முறைப்படுத்தலாம்.. அதற்கு  நிலையான/ நாட்டு நலனை முன்னெடுக்க கூடிய ஸ்திரத்தன்மை உள்ள அரசும் ஆட்சியாளர்களும், அடுத்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற குறிக்கோள் தவிர்த்த மக்கள் நலனிலும் நாட்டின் வளர்ச்சியிலும் அக்கறையுடைய எதிர்கட்சிகளும் அமைய வேண்டும்..

அது இந்த நாட்டில் சாத்தியமா என்றால் ஒரு பெரிய கேள்விக்குறிதான் நம் கண் முன்னே நமக்கும் உயரமாய் வளைந்து நின்று நம்மை பார்த்து கேலியாய் சிரிக்கிறது..

ஏனென்றால் இன்றைய கிராம / நகர வார்டு  உறுப்பினர்கள் கூட குற்றப்பின்னனியும் சுயநலமும் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள்.. இவர்கள் தான் நாளை நம்மை ஆளப்போகும் சட்டமன்ற/நாடாளுமன்ற உறுப்பினர்களாக, மந்திரிகளாக வலம் வரப்போகிறார்கள்.. இன்றைய மந்திரிகளில் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் பழைய வரலாற்றை தோண்டி எடுத்து துடைத்துப்பார்த்தால் அவர் ஒரு வார்டு மெம்பராகவோ/ ஊராட்சி / ஒன்றிய /நகராட்சி தலைவர்களாகவோ இருந்திருப்பார்கள்.. அவர்களின் அன்றைய அந்த பதவிக்கு ஒரு குற்ற பின்னணியும் / பணபலமும் காரணமாய் இருந்திருக்கும்.. அவர்கள் எல்லோரும் இப்போது விருட்சமாய் வளர்ந்து நிற்கிறார்கள்.. அவர்களை அவ்வளவு எளிதில் அழித்து விட முடியாது...
ஆனால் இப்போது முளைக்க ஆரம்பித்திருக்கும் களைகளை மிக எளிதாய் பிடுங்கலாம்.. ஆம்.. உங்கள் ஊரில் வார்டு மெம்பருக்கோ / ஊராட்சி- நகராட்சி தலைவருக்கோ போட்டியிடுபவர் நிச்சயம் உங்களுக்கு நேரடியாய் அறிமுகமானவராய் தான் இருப்பார்.. இவரின் பூர்வீகம், தகுதி திறமை நிச்சயமாய் உங்களுக்கு தெரிந்திருக்கும்.. குற்றப்பின்னணி கொண்டவரை புறக்கணியுங்கள்.. இன்றைய உங்கள் புறக்கணிப்பின் பயன் இப்போதே தெரியாது. அதற்கு இருபது வருடங்களுக்கு மேல் ஆகலாம்... ஆகட்டுமே..

மரத்த வச்சவன்தான் பழம் சாப்பிட்றானா என்ன??

எங்கள் பகுதி கிராம சொலவடைகள்..

பொதுவாக கிராமங்களில் சொல்லப்படும் பழமொழிகள் அர்த்தம் நிறைந்தவை.. 
இவை யாவும் ஒரு நாளில் சொல்லப்பட்டவை அல்ல.. 
காலம் காலமாய் அனுபவித்த விஷயத்தை ஓரிரு வரிகளுள் அடக்கி விடும் 
சாமர்த்தியம் அது.. 

நவநாகரீக மக்கள் யாரும் உபயோக்கிக்காமல்/தெரிந்துகொள்ள கூட 
ஆர்வமில்லாமல் படிப்படிவில்லாமல் பட்டறிவுடன் 
வாழ்க்கையை அனுபவித்து வாழ்ந்த பெரியோர்களுடனேயே சேர்ந்து 
மரணித்துக்கொண்டிருக்கிறது.. 
அவைகளை நான் அறிந்தவரையில் நேரடி/ மறைமுக அர்த்தங்களுடன் 
தொகுத்திருக்கிறேன்..
இவைகள் எங்கள் பகுதியில் தஞ்சாவூர்- திருச்சி பகுதிகளில் 
இன்றளவும் கிராமங்களில் 
உபயோகத்தில் உள்ளவை.


"பரம யோக்கியர் பந்தலுக்கு வந்தாராம் .... 
இருந்த யோக்கியர் எழுந்திரிச்சு போனாராம்... "

நேரடி அர்த்தம் :- ஒரு வீட்டின் விசேஷத்தில் பந்தலில் ஒரு நேர்மையற்ற நபர் 
உட்கார்ந்திருக்கிறார்.. இன்னொரு நேர்மையற்ற நபர் அங்கு வருகிறார். 
அதனை கண்ட ஏற்கெனவே அமர்ந்திருப்பவர்..
"ம்ம்க்கூம்.. யோக்கியர் வரார்.. நான் கிளம்புகிறேன்.." என்று சொல்லிவிட்டு 
எழுந்து போனாராம்.

உள் கருத்து :- தம்முடைய நிஜமான முகத்தை மறைத்து 
மற்றவர்களை குறை சொல்லி திரிவோரை குட்டுவதாய் இந்த பழமொழி..


"யோக்கியர் வரார்.... சொம்ப எடுத்து உள்ள வைங்கன்னு சொன்னானாம்"

நேரடி அர்த்தம்:- திருடும் குணமுடைய ஒருவர் வீட்டிற்கு வருகிறார். 
அவர் திண்ணையில் இருக்கும் சொம்பை திருடி சென்று விடுவார்.. 
அதனால் அதனை எடுத்து பாதுகாப்பாய் உள்ளே வைக்கும்படி 
வீட்டுக்காரர் சொல்வதாய் அமைந்த சொல் வழக்கு

மறைமுக அர்த்தம் : - ஒருவரை பற்றி முன்கூட்டியே தெரிந்திருக்கும் 
பட்சத்தில் நம்முடைய பொருட்களை நாம் தான் பாதுகாத்துக்கொள்ள 
வேண்டும். அப்புறம் களவு கொடுத்த பின் பதறி பிரயோஜனமில்லை 
என்பதே இதன் உள்கருத்து


"பாத்திரமறிஞ்சு பிச்சையிடு..
கோத்திரமறிஞ்சு பொண்ண கொடு... " 

நேரடி அர்த்தம் :- ஒரு பிச்சைக்காரர் யாசிக்கும்போது அவர் நிஜமாகவே 
பிச்சை எடுக்கும் நிலையில்தான் இருக்கிறாரா என்பதை தெரிந்து 
பிச்சை இட வேண்டும். அதே போல் தம்முடைய வீட்டு பெண்ணை 
திருமணம் செய்து கொடுக்கும் பொது அவர்களின் பாரம்பரியம் தெரிந்தபின் 
மணமுடித்து கொடுக்க வேண்டும்

"எரியுறத புடுங்குனா கொதிக்கிறது அடங்கிடும்..." 


நேரடி அர்த்தம்:- அடுப்பில் எரிந்துகொண்டிருக்கும் விறகை 
வெளியே எடுத்துவிட்டால் பானையில் கொதிப்பது தன்னால் அடங்கி விடும்.

மறைமுக அர்த்தம் :- ஒரு நியாயமற்ற போராட்டமோ, அல்லது 
கலவரமோ நடக்கும் பொது அதற்கான உதவிகள் எங்கிருந்து வருகிறது 
என்று கண்டுபிடித்து அதனை நிறுத்திவிட்டால் 
அந்த போராட்டம் -கலவரம். தானாகவே முடிவுக்கு வரும். 
அதாவது பிரச்சினையின் ஆணிவேரை கண்டு பிடித்து களையவேண்டும்.

"கொட கூழுக்கு அழுவுதாம்.. கொண்ட வாடாமல்லி பூ கேட்டுச்சாம் .."

நேரடி அர்த்தம் :- உயிர்வாழ பசிக்கு உணவு கிடைக்காமல் வயிறு 
தவிக்கும்போது அலங்காரம் செய்துகொள்ள பூ இல்லை 
என்று கூந்தல் அழுததாம்


மறைமுக அர்த்தம் : - அத்தியாவசிய தேவைகள் பூர்த்தி செய்யாமல் 
மற்றவர்கள் நம்மை மதிக்க வேண்டும் என்பதற்காக வறட்டு 
கவுரவத்திற்காக மற்ற ஆடம்பரங்களில் கவனம் செலுத்த கூடாது.

"ஆடுற மாட்ட ஆடித்தான் கறக்கணும்.. 
பாடுற மாட்ட பாடித்தான் கறக்கணும்..."

ஒரு விஷயத்தில் எதிர்ப்பு கிளம்பும் போது அவர்களின் போக்கிலேயே போய் 
காரியம் சாதிக்க வேண்டும்.

"நண்டுக்கு ஜீவன் போகையிலே.. நரிக்கு கொண்டாட்டமாம்... "

நேரடி அர்த்தம் :- நரி விரும்பி சாப்பிடும் உணவு வயல் காடுகளில் 
இருக்கும் நண்டு. அதனை பிடித்து உணவுக்காக கொல்லும்போது உணவு
கிடைத்த மகிழ்ச்சி நரிக்கு ஏற்படும்

மறைமுக அர்த்தம்:- ஒரு விஷயம் ஒருவருக்கு நலமாகவும் ஒருவருக்கு 
கேடாகவும் தான் இருக்கும். சாதகமாய் இருப்பவர் சந்தோஷப்படுவது 
உலக இயல்பு. 

"நரிக்கு நாட்டாமை கொடுத்தா கெடைக்கு ரெண்டு ஆடு கேக்குமாம்-"

ஒரு விஷயத்தில் சம்பந்தமே இல்லாத மூன்றாம் நபர் ஒருவரை 
ஆலோசனை/ தீர்ப்பு சொல்ல அழைக்கும்போது அவர் தனக்கு எதுவும் 
இந்த விஷயத்தில் ஆதாயம் கிடைக்குமா என்றுதான் பார்ப்பார். 
எனவே சம்பந்தப்பட்டவர்களே 
அமைதியாய் பேசி தீர்த்தல் நலம்.

"நா மட்டும் தாங்கி புடிக்கலன்னா இந்நேரத்துக்கு 
இந்த கோபுரம் சாஞ்சே போயிருக்கும் "- 


கோயில் கோபுரங்களின் நான்கு பக்கமும் கைகளை மேலே தூக்கி கோபுரத்தை 
தாங்கி பிடிப்பது போல் பொம்மைகள் வடிவமைக்கப்பட்டிருக்கும். 
அந்த பொம்மைகள் நாம்தான் இந்த கோபுரத்தை தாங்கி கொண்டிருக்கிறோம்.. 
நாம் விட்டு விட்டால் இந்த கோபுரம் சாய்ந்து விடும் என்று 
எண்ணிக்கொள்ளுமாம்.


ஒரு விஷயம் தானாகவோ அல்லது சரியாக திட்டமிட்டோ மிக சரியாய் 
நடக்கும் வேளையில் சம்பந்தமே இல்லாமல் ஒருவர் வந்து 
என்னால் தான் இந்த காரியம் வெற்றியாய் முடிந்தது என்றும், 
நான் இல்லாவிட்டால் இது நடந்தே இருக்காது 
என்றும் சொல்லுவார். அப்படிப்பட்ட நபரை இழித்து கூறவே இப்பழமொழி.

"பூனை கண்ண மூடிகிட்டா பூலோகம் இருண்டு போயிடுமாம..."

தமக்கு ஒரு விஷயம் தெரியாமல் இருந்தால் அதை தெரிந்துகொள்ளும் 
ஆர்வமில்லாமல் அப்படி இருக்கவே முடியாது என்றும்.. 
நிர்வாக பதவிகளில் இருப்போர். தாமில்லாவிட்டால் இதனை நெறிப்படுத்த 
வேறொரு தகுதியான ஆள் இல்லவே இல்லை என்றும் எண்ணிக்கொண்டு 
மற்றவர்களை மிரட்டிக்கொண்டும், 
வேறு யாருக்கும் வாய்ப்பு கொடுக்காமலும் இருப்பார்கள் சிலர். 
அவர்களை சுட்டுவது இந்த சொல்வழக்கு 

"ஓஞ்சுச்சாம் பாலை... ஒக்காந்தாளாம் சாணாத்தி..."

சாணாத்தி என்ற பெண்பால் பெயர் பனை மரத்தில் கள் இறக்குபவர்களை 
குறிப்பதாகும்.  அவர்களிடம் கள் வாங்கி குடிப்பதற்காக வருவோரிடம் 
மிகவும் அதிகார தோரணையாய் பேசுவார் கள் விற்பனை செய்யும் பெண்மணி
பனை மரத்தில் கள் வடியும் பாலை சீசன் முடிவுக்கு வந்த உடன் 
அவர் மற்ற வேலைகளுக்கு செல்வார். மற்றவர்களின் மீது அதிகாரம் 
செலுத்த முடியாது.பதவியில் இருப்போர் அந்த பதவி இருக்கும் வரைதான் 
அதிகாரமாய் மற்றவர்களை அடக்கி ஆள நினைப்பார்கள். 
அந்த பதவி போய் விட்டால் மற்றவர்கள் 
அவர்களுக்கு பயப்பட மாட்டார்கள் என்பதே இதன் கருத்து 

"ஒலக்கை ஒரக்குழிய நக்குதாம்.. லிங்கம் பஞ்சாமிர்தம் கேட்டுச்சாம்..." 


கோயிலில் லிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய பஞ்சாமிர்தம் ஒரு உரலில் 
பழங்களை இட்டு உலக்கையால் இடித்து தயார் செய்வார்கள். 
முதலில் அந்த பஞ்சாமிர்தத்தை ருசிப்பது உரல் மற்றும் உலக்கை தான். 
அதன் பிறகே சிவ லிங்கத்திற்கு அபிஷேகம். 
பஞ்சாமிர்தம் இடிக்கப்படாத  காலங்களில் , முதலில் சுவைத்துப்பார்க்கும் 
உலக்கை  அதற்கு வழி இல்லாமல் இருக்கும் போது, 
லிங்கம் "எனக்கு எங்கே பஞ்சாமிர்த அபிஷேகம் நடத்தவில்லை" என்று 
கேட்குமாம்...


ஒரு திட்டம் நிறைவேறும்போது அந்த திட்டமிடலில் 
பங்குகொண்டவர்கள்தான் முதலில் பலன் அனுபவிப்பார்கள். 
அதன் பிறகே மற்றவர்களுக்கு.. 
 அப்படி திட்டமிடலோ- உருவாக்கமோ இல்லாத காலத்தில் 
பயனாளிகள் கொஞ்சம் காத்திருக்க வேண்டும்

""ஆமை சுடுறது மல்லாக்க.. அத சொன்னாலும் பொல்லாப்பு..""

கிராமத்தில் வசிக்கும் ஒரு தம்பதிகளுக்குள் புரிந்து கொள்ளாமை காரணமாக 
எப்போதும் பிரச்சினை வந்து கொண்டே இருக்கும்.. 
கணவன் எதையாவது சொல்லிவிட்டால் அதில் குறை கண்டு பிடித்து 
மனைவி சண்டையை துவங்குவாள்...
மனைவி எதையாவது சொன்னாலோ கணவன் அதில் குறை கண்டு பிடித்து 
சண்டையை துவங்குவான்..

ஒரு நாள் கணவன் ஒரு ஆமையை பிடித்துக்கொண்டு வந்து நெருப்பில் 
போட்டு சுட்டான்.. ஆமையை நேராக போட்டு நெருப்பில் சுடும் போது 
அது நெருப்பை விட்டு வெளியில் ஓடிக்கொண்டே இருக்கும் .. 
அதனை மல்லாக்க திருப்பி போட்டு சுட்டால் ஆமையால் ஓட முடியாது..
கணவன் நேராக நெருப்பில் போட்டு சுட.. ஆமை ஓடிக்கொண்டே 
இருந்தது.. இதனை மனைவி பார்த்துக்கொண்டிருந்தாள்.. 
அவளால் "மல்லாக்க போட்டு சுடனும் " என்று 
சொல்லாமல் இருக்க முடியவில்லை... 
ஆனால் சொன்னால் சண்டை தொடங்கி விடும்.. 
ஆகவே.. தனக்குத்தானே பேசிக்கொள்வது 
போல் சொன்னாள்... "ஆமை சுடறது மல்லாக்க .. அத சொன்னாலும் 
பொல்லாப்பு... என்று சொன்னாளாம்..

அதுபோல... ஒருவர் ஒரு வேலையை தவறாக செய்யும் போது அந்த 
வேலையை நன்றாக செய்யத்தெரிந்தவரால் அதனை பார்த்துக்கொண்டிருக்க 
முடியாது.. ஆனால் அதை சொல்லும்போது, தவறாக செய்பவர் அதனை 
திருத்திகொண்டால் வேலை நன்றாக முடியும் என்பதே இதன் உட்கருத்து

உருவாகும் நவீன ஜாதிகள்.

மனச்சாட்சியை தொட்டு பதில் சொல்லுங்கள்... இட ஒதுக்கீட்டில் கல்வியோ - வேலை வாய்ப்போ பெற்ற ஒரு நபர் தான் இட ஒதுக்கீடு பெற எந்த வகுப்பில் பிறந்திருந்தாரோ அந்த வகுப்பில் இன்னும் முன்னேறும் வாய்ப்பு கிடைக்காமல் இருக்கும் எத்தனை பேருக்கு உதவி இருக்கிறார்...??

தந்தை- மகன் என்று இரண்டாவது தலைமுறையும் இட ஒதுக்கீட்டில் மருத்துவ/பொறியாளர் படிப்பிற்கு இடம் கிடைத்த பின் அவர்களால் பணம் செலவு செய்து படிக்கும் அ
ளவிற்கு வசதி வாய்ய்ப்புகள் இருந்த போதும் தாம் எந்த வகுப்பில் பிறந்ததற்காய் அந்த இட ஒதுக்கீடு பெற்றோமோ அந்த வகுப்பில் பிறந்த இதுவரை அந்த வாய்ப்பு கிடைக்காமல் இருக்கும் ஒருவருக்கு அந்த ஒதுக்கீடு கிடைக்கட்டுமே என்று யார் வழி விட்டிருக்கிறார்,,,??
நம்முடைய உறவினருக்கு, சகோதரர்களுக்கு, நம்மைப்போலவே கஷ்டப்பட்ட ஒருவருக்கு நாம் உதவவோ - வழி விடவோ தயாராயில்ல போது மற்றவர்கள் வழிவிடவில்லை என்று குறை சொல்ல என்ன தகுதி இருக்கிறது நமக்கு ???

ஒரு பேருந்தில் ஒரு கர்ப்பிணி பெண் ஏறும்போது தாம் எழுந்து இடம் கொடுக்காமல் பக்கத்தில் இருப்பவர் இடம் கொடுக்கவில்லை என்று சண்டை போடுவதும் இதுவும் ஒன்றுதான்..


அரசு திட்டங்களை குறை சொல்வதோடு  நமது கடமை முடிந்துவிடுவதில்லை.. இதற்கான தீர்வுகள் எதுவும் இருக்கிறதா..??

நமக்கு கிடைத்த இட ஒதுக்கீட்டை நாம் முறையாக பகிர்ந்தளிக்க  வேண்டும். அப்படி கிடைத்த இட ஒதுக்கீட்டின் பயனை நாம் அனுபவித்து ஓரளவு முன்னேற்றம் கண்ட உடன் நமக்கு பொருளாதார- கல்வி பலம் ஓரளவு வந்த உடன் நமது முன்னேற்றத்தை நாமே சுயமாக எற்படுத்திக்கொள்வோம் என்று நினைக்க வேண்டும்.
நமது இனத்தில் இன்னும் முன்னேறாமல் எத்தனையோ மக்கள் இருப்பார்கள். நாம் போட்டியிலிருந்து விலகும் பட்சத்தில் அந்த வாய்ப்பு அவருக்கு கிடைக்கும். 
ஓரிரு தலை முறைகளை இட ஒதுக்கீட்டின் பலநாள் நாம் பெற்ற பலனை இன்னொருவர் அனுபவிக்க நமக்கு மனம் இல்லை என்றால் எப்படி காலம் காலமாய் உங்களை அடக்கி ( உங்கள் பாஷையில் ) சுகம் கண்டவர்கள் விட்டுக்கொடுக்க சம்மதிப்பார்கள்..??? 

அரசு இட ஒதுக்கீடு என்பது ஒரு குடும்பத்தின் பொருளாதார நிலை / அந்த குடும்ப உறுப்பினர்களின் கல்வி நிலை / அவர்கள் அரசு மற்றும் தனியார் துறைகளில் பெற்றிருக்கும் வேலை வாய்ப்புகள் எல்லாவற்றையும் கணக்கிட்டு வழங்கப்பட்டால் மட்டுமே இன்னும் ஐம்பது ஆண்டுகள் கழித்தாவது ஓரளவு சமத்துவம் ஏற்படும்.
இப்போதுள்ள ஜாதீய அடிப்படியிலான இட ஒதுக்கீட்டு முறையை பின்பற்றினால் இரு வேறு ஜாதிகளுக்குள் இருக்கும் ஏற்றத்தாழ்வுகளோடு சேர்ந்து ஒரே ஜாதிக்குள்ளேயே பணக்காரன்- ஏழை என்ற வேறுபாடும் நெடிந்து வளரும்..

இது அரசியல் வாதிகளின்/ ஆளும் வர்க்கத்தினரின்/ பணக்காரர்களின் ( இவர்கள் எந்த ஜாதி என்பது முக்கியமில்லை ) பிரித்தாளும் சூழ்ச்சி..