திங்கள், 14 ஆகஸ்ட், 2017

பொதுஜனத்தின் கடமைசமீப கால ஊடகத்தீனி கமல்.... ஆகவே சமூக ஊடகவியலாளர் ஆகிய சாமான்யனாலும் கமலை தவிர்த்துவிட முடியாது... அதே நேரம் கமர்ஷியல் ஊடகங்களுக்கு அறவே இல்லாமல் போன பத்திரிகை தர்மம் , லாபநோக்கமில்லாத நமக்கு இருக்கிறது... ஆகவே சாமான்யனுடைய பார்வை சற்று வேறுவிதமாய் இருக்கிறது..
முதலில் , கமல் தரப்பின் நியாயங்களை எடுத்துக்கொண்டால்... ஒரு பொது மனிதனாக அவர் தமிழக அரசின் மீது வைக்கும் விமர்சனங்களுக்கு தகுந்த பதில் சொல்ல வேண்டியது ஆட்சியாளர்களின் கடமை... அதை தவிர்த்து "நீ முதலில் அரசியலுக்கு வா... பிறகு கேள்வி கேட்கலாம்" என்றும்.. அவர் நடிகர்... இந்திப்படங்களில் நடித்தவர்... திருமணமாகாமல் ஒரு பெண்ணுடன் சேர்ந்து வாழ்ந்தவர் என்பது போன்றெல்லாம் அவரின் தொழில் மற்றும் தனி மனித வாழ்க்கையை விமர்சிப்பது மிகவும் மோசமான நடவடிக்கை...
Image may contain: 1 person
ஜனநாயக நாட்டில் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் அதிகாரம் இருக்கிறது.. கேள்விகள் கேட்கும் உரிமை இருக்கிறது... நம்மை போல சாமான்யனாக இல்லாமல் வெகு ஜனங்களுக்கு தெரிந்த முகமாக இருப்பதனால் கமலஹாசன் என்ற பொதுஜனத்தின் கேள்வி சற்று உரக்க ஒலிக்கிறது.... அந்த கேள்வி ஊடகங்களால் பரப்பப்பட்டு வெகுஜனங்களுக்கு தெரிய வைக்கப்படுகிறது... நீங்களும், நானும் ஏற்கெனவே பலஆயிரம் முறை கேட்ட விஷயங்கள்தான் என்றாலும் அது நம் அருகில் இருப்பவரையோ- நம் நண்பர்கள் பட்டியலில் இருப்பவர்களையோ தாண்டி வேறெங்கும் கேட்கவில்லை... ஆனால் இந்த பிரபல முகமூடியை அணிந்திருப்பதால் கமல் என்ற பொதுஜனத்தின் கேள்வி ஆட்சியாளர்களை அசைக்கிறது...

கமலின் தனிமனித வாழ்க்கையை விமர்சிக்கும் இவர்களில் எத்தனை பேரின் தனிமனித வாழ்க்கை ஒழுக்கமாக இருக்கிறது என்று அவர்களுக்கே தெரியும்... அவர் இந்திப்படத்தில் நடித்தவர் என்று சொல்கிறார் தமிழக நிதி அமைச்சர்... இந்த கேள்வி ஆரம்ப பள்ளியை தாண்டாத ஒரு மாடு மேய்ப்பவனின் கேள்வியை விட மோசமாக இருக்கிறது... தொழில்முறையில் அவர் இந்திப்படங்களில் நடித்தார்... தமிழக அரசு பல வெளிநாட்டு நிவனங்களுடன் ஒப்பந்தம் செய்கிறதே... அதுபோலத்தான்...
நம்மை பொறுத்தவரை கமலஹாசன் என்பவர் நம்மை போன்ற ஓட்டுரிமை உடைய, வரி கட்டுகிற ஒரு பொதுஜனம்.. ஆட்சியாளர்களை கேள்வி கேட்கும் உரிமை இவருக்கு இருக்கிறது... பதில் சொல்லியே ஆக வேண்டும்...

அடுத்தது... நிகழ்வில் இருக்கும் மற்ற அரசியல்வாதிகள்...

இவர்கள் எல்லாம் அரசியல் நடத்தவும், ஆட்சி செய்யவும் அவதரித்தவர்கள் போலவும்... மற்றவர்கள் எலாம் வேறொன்றும் தெரியாமல் இவர்கள் கொடுக்கும் ஆயிரத்திற்கும், ஐநூறுக்கும், இலவச பொருட்களுக்காகவும் ஓட்டுப்போட மட்டுமே பிறந்தவர்கள் என்பது போலவும் கொதிக்கிறார்கள்...?? நிகழ்வில் இருக்கும் பல அரசியல்வாதிகளை விடவும், அமைச்சர்களை விடவும் சட்டமன்ற உறுப்பினர்களை விடவும் அறிவார்ந்து சிந்திக்கக்கூடிய, திட்டமிட கூடிய, செயல்பட கூடிய பொதுஜனங்கள் லட்சங்களை தாண்டி உள்ளனர்... தமிழிசையாக இருக்கட்டும், பொன் ராதாகிருஷ்ணனாக இருக்கட்டும், எடப்பாடி பழனிச்சாமி, ஜெயக்குமார், தங்கமணி, சி வி சண்முகம் என யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும்... இவர்கள் எல்லாம் பல்கலை கழகங்களில் அரசியலை கற்றுத்தேர்ந்து தமிழக/இந்திய அரசியலை காப்பாற்ற வர வில்லை....

நிகழ்வில் இருக்கும் பெரும்பாலான அரசியல்வாதிகளின் பின்னணியை தோண்டிப்பார்த்தால் ரவுடியிசம், கட்டபஞ்சாயத்து, கள்ளச்சாராயம், வெட்டு-குத்து, விபச்சாரம் போன்ற விஷயங்கள்தான் இருக்கும்... இவர்கள் கமலை பார்த்து கேள்விகேட்கிறார்கள்... "இவருக்கு என்ன தகுதி இருக்கிறது.." என்று.... ஒருவேளை இவர்கள் "தகுதி" என நினைப்பது அவர்களின் பின்னனியை தான் போலும்...

கேள்விகள் கேட்கவும் ... .... வாய்ப்பு கிடைத்தால் ஆட்சிக்கட்டிலில் அமரவும் கூட கமலஹாசனுக்கு உரிமை இருக்கிறது... அதற்கான தகுதியும் இருக்கிறது.... இதை அவர் ஒரு சினிமா கதாநாயகன் என்பதற்காக சொல்லவில்லை... ஒரு விபரமறிந்த பொதுஜனம் என்பதற்காக சொல்கிறோம்..

அதே நேரம்... கமலஹாசன் ஒரு பொதுமனிதன் என்பதை தாண்டி .. பலருக்கு அறிமுகமான சினிமா கதாநாயகன் என்ற தோரணையில் அவரது அறிக்கைகள் மற்றும் ட்வீட்களில் "நான்" என்று முடிக்கிறார்.. என் துறையில் இருக்கும் ஊழலை நான் சொல்கிறேன் என்கிறார்... தைரியமான சினிமாக்காரர்கள் என்னோடு சேர்ந்து சொல்லட்டும் என்கிறார்... இப்போதும் கூட அவர் சினிமாவிற்கான தணிக்கை துறை, கேளிக்கை வரிவிலக்கு போன்ற அரசு அனுமதிக்கான இடங்களில் நிகழும் கையூட்டு பற்றி மட்டுமே பேசுகிறாரே தவிர.... "தமிழில் பெயர் வைத்தால் கேளிக்கை வரி விலக்கு " என்ற ஒற்றை அரசாணையை முன்னிறுத்தி எத்தனை தயாரிப்பாளர்கள் பலனடைந்தார்கள்..?? தியேட்டர்களில் திரைப்படங்கள் வெளியான ஒரே நாளில் இத்தனை கோடி வசூல் என்று விளம்பரம் செய்தார்களே.... அரசு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தில் டிக்கெட் விற்றுத்தான் அந்த கோடிகள் வசூலானதா?? நடிகர் சங்க கட்டிடம் கட்ட ஒரு தெருவே ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது.. என்று வழக்கு தொடுத்தார்களே.. அந்த பகுதிவாசிகள்... இப்படி திரைத்துறை அத்துமீறல்களின் போதும் கமலஹாசனுக்கும் இருக்கும் "பொதுஜனம்" வெளிப்பட்டிருக்கலாமே... என்பதுதான் என் போன்ற சாமான்யனின் ஆதங்கம்...

இப்போதும் ஒன்றும் கெட்டுப்போய் விட வில்லை... கமல் வெறும் நடிகனாக "நான் உண்டு.. என் வேலை உண்டு" என்று நினைத்தால் அவர் சினிமாவோடு நிறுத்திக்கொள்ளட்டும்.... சினிமாக்காரன் என்ற முகமூடி களைந்து நானும் ஒரு பொதுஜனம் என்ற உரிமையில் ஆட்சியாளர்களை கேள்வி கேட்க முனைந்தால்.... அந்த கேள்வி சாட்டை எல்லாபக்கமும் சுழலட்டும்... எங்களின் பிரதிநிதியாக கொண்டாடி நாங்களும் உடனிருக்கிறோம்....

அவ்வளவுதான்... அவ்வளவே தான்...

குறிப்பு:- எங்களுக்கும் இருக்கு.... நாங்களும் முறுக்குவோம்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக