ஞாயிறு, 21 அக்டோபர், 2018

ஆயிர பூஜ


இந்த வார்த்தையின் அர்த்தம் ஆயிரம் முறை பூஜை என்றோ ... ஆயிரம் கோயில்களில் பூஜை என்பதோ அல்ல.... ஆயுத பூஜைதான் எனக்கு விபரம் தெரிய ஆரம்பித்த காலத்தில் "ஆயிர பூஜ" அறிமுகமாயிருந்தது...

பூஜை கொண்டாடப்படும் நாளிலோ, அதற்கு ஒருநாள் முன்னதாகவோ வீடுகளில் இருக்கும் அம்மாவோ, அம்மாச்சியோ, ஆயாவோ... குரல் கொடுத்துக்கொண்டிருப்பார்கள்.... "ஏள்ள (ஏ புள்ள)... இந்த சாமான எல்லாம் வெளில அள்ளிப்போட்டு கழுவு...."




வீட்டில் இருக்கும் படி-மரக்கால் முதல், மாட்டுக்கு கட்டும் சலங்கை, அறுவடை காலத்தில் பயன்படுத்தப்படும் கொக்காலி (வைக்கோல், கடலை கொடி, உளுந்து கொடி போன்றவற்றை கொத்தாக பற்றி அள்ள பயன்படுவது) , உழவாரம் (சமதரையில் படர்ந்திருக்கும் புற்களை செதுக்கி எடுக்க பயன்படுவது) , கருக்கருவாள் (கதிர் அறுக்க பயன்படுவது ) கோடாரி, பாரை, மண்வெட்டி , களவறி (களை எடுக்கவும், பயிர்களின் ஊடே நிலத்தை கீறிவிடவும் பயன்படுவது ) என எல்லா பொருட்களும் குடத்தடிக்கு வரும்... தேங்காய் நாறில் சாம்பல் ஒற்றி எடுத்தது துலக்கி கழுவி காயவைக்கப்பட்டு நடுவீட்டில் சுவரோரமாய் குடியேறும்...

வண்டி, கலப்பை, நுகத்தடி எல்லாம் கழுவி காயவைக்கப்பட்டு பத்தாயத்தில் (நெல் சேகரிப்பு கலன்) சாய்த்து வைக்கப்பட்டிருக்கும்... சில வருடங்கள் மழை தாமதத்தாலோ, ஆற்றுநீர் தாமதத்தாலோ ஆயுத பூஜை நாட்களில் நடவிற்கான உழவு வேலை நடக்கும்.. அந்நேரம் கலப்பை நுகத்தடி மட்டும் பூஜையில் கலந்துகொள்ளாமல் வயலில் தங்கிப்போகும்...

காலையில் ஊறவைத்த கொண்டைக்கடலையை அவித்து தாளித்து ஒரு பாத்திரத்தில் இருக்கும்.... பச்சை அரிசியில் வெல்லம் , நிலக்கடலை பருப்பு கலந்து கிண்டி ஒரு பாத்திரத்தில் இருக்கும்.... (சில வீடுகளில் வெல்லப்பாகு செய்து, இந்த பச்சரிசியை திருவையிலிட்டு குருணையாய் உடைத்து , நிலக்கடலை பருப்பை வறுத்து போட்டு பச்சரிசி கிண்டுவார்கள்....)
அவல், அரிசி பொறி, சர்க்கரை, பொட்டுக்கடலை கலந்து ஒரு பாத்திரத்திலிருக்கும்.... எல்லா வருடமும் ஆயுதபூஜைக்கு இந்த மூன்று பதார்த்தங்களும் மாண்டடரி ....

அப்பா எங்கிருந்தோ கொண்டுவந்த நாவல் கொழுந்து, இண்டங்கொழுந்து, அரளிக்கொழுந்து, ஆவாரம் கொழுந்து எல்லாம் பூஜை இடத்தினருகில் வைக்கப்பட்டிருக்கும்.... மாலை சூரியன் மறைந்து இருள் கவியத்தொடங்கும் நேரம் பூஜை தொடங்கும்..... ஒரு கிண்ணத்தில் சந்தனம் கரைக்கப்பட்டிருக்கும்... ஒரு கிண்ணத்தில் குங்குமம்... அம்மா ஊதுபத்தி கொளுத்தி, சாம்பிராணி புகைபோட்டு, வாழைப்பழம், வெற்றிலை-பாக்கு, தேங்காய், பூ (கதம்பம்) அத்துடன் ஒரு சிறிய அளவிலான புத்தகம் ஆகியவற்றை ஒரு தாம்பூலத்தட்டில் வைத்து பூஜைக்கான ஆயத்தங்களில் ஈடுபட்டிருக்க..... வீட்டிற்கு பின்னாலிருந்த பலாமரத்தில் இருந்து ஒடித்துக்கொண்டுவந்த இலைகளை வைத்து அப்பா தொன்னை தைத்துக்கொண்டிருப்பார்... இரண்டு அல்லது மூன்று இலைகளை இணைத்து அழகாக தொன்னை தைப்பார்...

பெரியக்கா கரைத்து வைத்த சந்தன கிண்ணத்தில் இருந்து சந்தனம் எடுத்து எல்லா பொருட்களுக்கும் சந்தன பொட்டு வைக்க... சின்னக்கா அந்த சந்தனப்பொட்டின் மேல் குங்குமம் வைத்துக்கொண்டிருப்பாள்... பத்தாயம், அம்மாவுக்கு சீர்வரிசையாய் வந்த பீரோ, கலப்பை, நுகத்தடி, கூனு, நிலைப்படி, கதவு என எல்லா இடங்களிலும் சந்தன-குங்கும பொட்டு வைத்து முடித்ததும் பூஜை தொடங்கும்...

(வயலில் தங்கிவிட்ட கலப்பை-நுகத்தடிக்கு அப்பா காலையில் சென்று பொட்டு வைத்து பூ சூட்டுவார் )

அப்பா தைத்த தொன்னைகளில் கொண்டக்கடலை, பச்சரிசி, அவல்-பொறி நிறைக்கப்பட்டு சாமிக்கு படையல் வைக்கப்பட்டிருக்கும்...

எல்லா பொருட்களுக்கும் பொட்டுவைத்துவிட்டு அக்காள்கள் பூஜை இடத்திற்கு வந்ததும் அம்மா மறக்காமல் கேட்பாள்...."ஏள்ள... பீரோலுக்கு பொட்டுவச்சியா...."

என்னதான் வீட்டில் ஆயிரம் பொருட்கள் இருந்தாலும், திருமணமாகி எத்தனை ஆண்டுகளானாலும் பெண்களை பொறுத்தவரை பிறந்தவீட்டு சீதனம் மட்டும் எல்லாவற்றிலும் உயர்வானதுதான்...

எங்களின் புத்தகப்பைகள் பூஜையில் முக்கிய இடம் பிடிக்கும்.... ஓரிரு புத்தகங்களுக்கும் கூட சந்தனம்-குங்குமம் வைக்கப்படும்...

இதுவரை சுவாரஸ்யமாய் போய்க்கொண்டிருந்த பூஜை... இப்போது லேசாக திணற ஆரம்பிக்கும்... "ஏம்பா.. எல்லோரும் ஒம்பொஸ்தவத்தை எடுத்து ஏதாவது படிங்க...."
நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள... சின்னக்கா மட்டும் உஷாராகி புத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பித்து விடுவாள்.... எனக்கும்-பெரியக்காவிற்கும் படிக்கிறதுன்னா பாழுங்கிணத்துல குதிக்கிற மாதிரி ஒரு பயம்....

இரண்டு மூன்றுமுறை சொல்லியும் நானும் பெரியக்காவும் கண்டுகொள்ள மாட்டோம்....

தாம்பூலத்தட்டில் இருக்கும் அந்த சிறிய புத்தகத்தை எடுத்து, அப்பா கணீர் குரலில் ராகமாய் வாசிக்கத்தொடங்குவார்....

சீதக் களபச் செந்தா மரைப்பூம்
பாதச் சிலம்பு பலவிசை பாடப்
பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்...

கொஞ்சம் கொஞ்சமாய் அப்பாவின் குரல் உயரும்...

"நாவக்கொழுந்தே.. நாமஷ்ட்டே
இண்டங்கொழுந்தே நாமஷ்ட்டே
அரளிக்கொழுந்தே நாமஷ்ட்டே
ஆவாரங்கொழுந்தே நாமஷ்ட்டே ....."
என்று முடிப்பார்....

அப்பா சொல்லும் நாமஷ்ட்டே என்பதற்கான சரியான உச்சரிப்பை தெரிந்துகொள்ளும்பொழுது அப்பா இறந்து சில வருடங்கள் கழிந்திருந்தது..... "நமஸ்தே" என்பதைத்தான் அப்பா அப்போது ராகமாய் நீட்டி "நாமஷ்ட்டே " என்று உச்சரித்திருக்கிறார்...

அப்பா வாசித்து முடித்ததும் ஆளுக்கு ஒரு தொண்ணையாக எடுத்துக்கொள்வோம்...

இந்த ஆயுதபூஜை சந்தன-குங்கும பொட்டு சில மாதங்களுக்கு பின்னாலும் கூட எப்போதாவது சட்டையில் ஒட்டிக்கொள்ளும்....

ம்ம்ம்.....................

காரில் படிந்திருந்த தூசியை ப்ரெஷால் துடைத்துவிட்டு அலுவலக மடிக்கணினியில் பேஸ்புக்கில் நண்பர்களுக்கும், அலைபேசியில் அக்காள்களுக்கும் வாழ்த்து சொல்லி கழிந்துகொண்டிருக்கிறது என் ஆயுதபூஜை...

இத்தனை பெரிய பதிவு எழுதுவதற்கான அனுபவத்தை கொடுத்தது என் குழந்தைகால ஆயுதபூஜை.... இன்னும் சில- வருடங்கள் கழித்து எழுதுவதற்கு அபிக்கும்-ஆதிக்கும் நான் ஏதாவது நினைவுகளை சேர்த்து வைத்திருக்கிறேனா??? தெரியவில்லை....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக