புதன், 28 ஜூன், 2017

மொழி

Image may contain: ocean, sky, cloud, outdoor, nature and water

தமிழை அலட்சியம் பண்றவன் மூடன். பல நாகரீகம் பார்த்த பாஷை அது . பெரிய கோயிலின் விமானத்தை பார்த்திருக்கிறீர்களா... சரியான கணித அளவீடுகள் இல்லாமல் இவ்வளவு பெரிய கோபுரம் கட்டி இருக்க முடியுமா??ஒரு இழை பிசகி இருந்தாலும் கோபுரத்தின் சமநிலை பாதிக்கப்பட்டு கோபுரம் கோணலாகி இருந்திருக்கும்.. ஆயிரமாண்டுகள் நிலைக்க முடியாமல் சரிந்திருக்கும்..

தமிழில் கணக்கு இருந்திருக்கிறது.. அதுவும் மிகத்துல்லியமான கணக்கு இருந்திருக்கிறது... கணக்கும் காவியமும் நிறைந்த ஒரு மொழியை புறக்கணிக்க முடியுமா?? அந்த மொழியை கேலி செய்ய முடியுமா?? இந்த மொழி பெரிசு.. அந்த மொழி சிறுசுன்னு சொல்றவன் தற்குறி...

சக்கரம் கண்டுபிடிச்சது சிறுசு .. மின்சாரம் கண்டுபிடிச்சது பெரிசுன்னு சொல்ல முடியுமா??கண்டுபிடிப்புகள்ள வித்தியாசம் உண்டா... மொழி மனுஷனோட கண்டுபிடிப்பு.. எத்தனை தலைமுறையோ தொடர்ந்து மாறுதல்கள் செஞ்சு உருவாக்கின சக்கரத்தை ஓட வச்சு யாரோ ஒருவர் மின்சாரம் கண்டு பிடிக்கலையா..?? அந்த சக்கரத்தை மின்சாரத்தால ஓட வச்சு வேறொரு கண்டுபிடிப்பு வரலையா...?? அப்படித்தான் மொழியும்...

ஒரு மொழிய வச்சு இன்னொரு மொழி உருவாகும்... இரண்டும் சேர்ந்து வேறொரு மொழி உருவாகும்..மொழியை மாறக்கூடாதுன்னு சொல்றவன் துரோகி...

யாருக்கு மாற்றங்கள் செஞ்சா ஆத்திரம் வரும்?? தன் மொழிதான் பெருசுன்னு பேசுற வேறு எதுவுமே தெரியாத மூடனுக்குதான் ஆத்திரம் வரும்..மொழி மேல காதல் இருக்கலாம்.. ஆனா காமம் இருக்க கூடாது.. காமம்ங்கிற வார்த்தைக்கு பேராசைன்னு அர்த்தம்... பேராசையுள்ளவன் தனக்கும், தான் சார்ந்த எல்லாவற்றிற்கும் கூட எதிரி...

("கடலோரக் குருவிகளி"ல் பால குமாரன்)

"கேரளாந்தகன்"

No automatic alt text available.
தஞ்சை பெரியகோயிலின் முதல் நுழைவாயிலுக்கு பெயர் "கேரளாந்தகன்" நுழைவு வாயில்... கேரளத்தவருக்கு அந்தகன் ... அந்தகன் என்பது எமனின் இன்னொரு பெயர்.... கேரளத்தவருக்கு ..அதாவது சேரநாட்டு அரசுகளுக்கு எமனாக விளங்கிய சோழ மன்னன் கேரளாந்தகன் என்று அழைப்பட்டான்.. அவனது பெயரில் அந்த நுழைவு வாயில்...

இன்னொரு விஷயம்.... அந்தகன் என்றால் குருடன் என்று பொருள்... அப்படியானால் எமன் குருடனா....??

ஆம்... குருடன் தான்... அவன் அழகு, அசிங்கம், வசதி, ஏழை, குழந்தை,இளைஞன், முதியவர் என்று எந்த பாகுபாட்டையும் பார்க்காத குருடன்.... இவர் மிகப்பெரிய அறிவாளி.. இவர் இன்னும் சில நூறு ஆண்டுகள் வாழட்டும் என அனுமதிப்பதில்லை... இவள் உலகிலேயே அழகிய பெண்... என்று அழகில் மயங்கி உயிர் பறிக்காமல் விடுவதில்லை.... ஒரு குழந்தையில் சிரிப்பில் கொள்ளை போய் கடமை தவறுவதில்லை....ஆகவே எமனுக்கு குருடன்- அந்தகன் என்று பெயர்.....


வேண்டுகோள்:- இந்த கேரளாந்தகன் இயற் பெயர் என்ன என்பதற்கான தகவல்கள் எனக்கு தெரியவில்லை... நிச்சயமாக ராஜராஜன் இல்லை... ஏனென்றால் பெரிய கோயிலின் இரண்டாவது நுழைவாயில் ராஜராஜன் நுழைவாயில்..ஆக.. கேரளாந்தகன் வேறு யாரோ...
தெரிந்தவர்கள் பகிரவும்...


சமூக வலைத்தளங்களில்...குடும்பத்தலைவிகள்!!


அக்கம்பக்கத்தில் பேச்சை குறைத்து மக்களை.. குறிப்பாய் பெண்களை வீட்டுக்குள்ளயே முடக்கின காட்சி ஊடகங்கள் , இதன் அடுத்த கட்டம்..இப்பொழுது படித்தவர்கள் மத்தியில பிரபலமாகிகொண்டு வரும் சமூக வலைத்தளங்கள்... எத்தனயோ நல்ல விஷயங்கள் இருந்தாலும்.. ஒரு குடம் பாலில் விழுந்த விஷம் மொத்த நல்லதையும் நாசம் பண்ணுவது மாதிரி..சில விஷயங்கள்...


இந்த காட்சி ஊடகங்களுக்கு பிறகு மனிதர்கள் வீட்டில் பேசிக்கொள்வதே குறைந்து போய் விட்டது..... யாரும் மனசு விட்டு பேசிக்கொள்வதில்லை .. கணவனோ- மனைவியோ தங்களின் இணையுடன் பேசுவதில்லை.. பெற்றோர்கள் பிள்ளைகளிடமோ.. பிள்ளைகள் பெற்றோரிடமோ பேசுவதில்லை... ஆனால் பேசாமல் இருந்தால்தான் நாமெல்லாம் செத்துப்போவோமே..வாராது வந்த மாமணியாய் நம்ம கம்ப்யூட்டர் மூலமாகவோ...மொபைல் மூலமாவோ பக்கத்து வீட்டுக்காரன்/வீட்டுக்காரிய..பக்கத்து ஊரு காரன் / ஊருக்காரிய... பக்கத்து நாட்டுக்காரன் / நாட்டுக்காரிய யாருக்கும் தெரியாம ரகசியமா படுக்கை அறை வரை கூட்டிக்கொண்டு வர ஒரு வாசல் கதவு திறந்து வைத்து விட்டோம்.

பெரும்பாலானவர்கள் அதிலும் குறிப்பாக குடும்பத்தலைவிகள்.. இதில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள் அவர்களை சொல்லியும் தப்பு இல்ல... பிள்ளைகள் தலை முறை இடைவெளின்னு ஒதுங்கி விடுகிறார்கள்.புருஷனோ.. இந்த உலகமே தன்னுடைய தலை மேலதான் நின்று சுற்றுவது மாதிரி ஒரு நினைப்புடனே இருக்கிறார்..... இவர்கள் யாரிடம் பேசுவார்கள்...???

சுவருடன் பேச முடியாது... பக்கத்து வீட்டுக்காரர்களுக்கும் பேச நேரமில்லை ... அவர்களுடைய எண்ணங்களையும்.. அவர்களின் இருப்பையும் அங்கீகரிக்க சமூக வலைத்தள நட்புகள் தான் சரி என்று நினைக்க தொடங்குகிறார்கள்.. அதற்கு தூபம் போடுவது போல இந்த வலைதளங்களில் வலை விரித்து காத்திருக்கும் தந்திர நரிகள் "காலை வணக்கம்" என்று ஒரு நிலை தகவலை பதிந்தால் பலாப்பழத்தில் மொய்க்கும் ஈக்களாய் ஓடி வந்து பதில் வணக்கம் பதிகிறார்கள். கண்டுகொள்ளாத கணவன்.... தலைமுறை இடைவெளியில் விலகும் பிள்ளைகள்.. இப்படிப்பட்ட ஒரு மன உளைச்சல் பின்னணியில் உழன்றவர்களுக்கு இது மாபெரும் அங்கீகாரமாக தெரிகிறது...

அந்த குடும்பத்தலைவிகளை பொறுத்த வரை இது ரகசியமானது... தான் முன் பின் பார்த்திராத ஒரு ஆணுடன் பேசிக்கொண்டிருப்பது பக்கத்து வீட்டுக்கு கூட தெரியாது.. இதில் தொடுகையோ- வேறெந்த பாலியல் இடற்பாடுகளோ இல்லை... தேவை இல்லை என்றால் விலகி விடலாம் என்றும் நினைக்கிறார்கள்.. அதில் சிலர் இந்த நிலையையும் தாண்டி நேரடி சந்திப்பு.. தனிமை சந்திப்பு என்ற அடுத்த கட்ட நடவடிக்கைக்கு செல்லும் போது சிக்கலில் தாமே போய் மாட்டிக்கொண்டு மீள முடியாமல் போகிறார்கள்.. அப்படி மீள முடியாமல் சிலர் காவல் துறைக்கும்.. சிலர் தற்கொலைக்கும் போகிறார்கள்..

சமூக வலைத்தளங்களில் நண்பர்களை தேர்ந்தெடுப்பவர்கள் மிக கவனமாய் இருத்தல் அவசியம்... எதிராளியின் நோக்கம் என்ன என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.. குறிப்பாக பெண்கள் ஒன்றை மிக தெளிவாய் புரிந்துகொள்ள வேண்டும்... தனக்கு தெரிந்த ராக்கெட் தொழில் நுட்பத்தை உங்களுக்கு கற்றுக்கொடுப்பதற்காகவோ..... உலகம் அமைதி பெற உங்களிடம் யோசனை கேட்பதற்காகவோ உங்கள் நட்பை யாரும் தேடவில்லை அவர்களின் நோக்கம்... ..................... சொல்லித்தெரிய வேண்டிய விஷயமில்லை

உங்கள் கணவரோ பிள்ளைகளோ உங்களை அங்கீகரிக்க வில்லை என்று நினைப்பவர்கள் தான் பாதுகாப்பாய் அமர்ந்திருக்கும் வீடு... தன்னுடைய அடிப்படை தேவைகள்... வண்டி வாகனங்கள் .. நகை நட்டுக்கள்.... இதோ.. இந்த கட்டுரையை படிக்க உங்கள் எதிரிலோ கையிலோ இருக்கும் இணைய சாதனங்கள்.. எல்லாம் தந்தது அவர்கள் என்பதை மறக்க வேண்டாம்... உங்களுக்கு காலையில் கலை வணக்கம் சொல்வதையோ... உங்களை தினசரி பாராட்டுவதையோ.. உங்கள் எண்ணங்களுக்கு செவி சாய்ப்பதையோ அவர்கள் ஒரு சாதாரண நிகழ்வாய் எடுத்துக்கொண்டு தவிர்த்திருக்கலாம் ஆனால் நீங்கள் இல்லை எனில் அவர்கள் ஒரு பூஜ்ஜியம்... அது அவர்களுக்கு தெரியும்... அங்கீகரிக்க வில்லை என்று கவலை படாதீர்கள்.. நான் இல்லை என்றால் என் கணவனோ மக்களோ.. ஒரு நாள் கூட நிம்மதியாய் வாழ மாட்டார்கள் என்று கர்வப்படுங்கள்..


உங்களை அங்கீகரிக்கவில்லை என்று ஆதங்கப்படும் உங்கள் கணவனோ பிள்ளைகளோ... உங்களுக்கு அரணானவர்கள்.. உங்களை ஆஹா ஓஹோ... என்று புகழ்ந்தும் நீங்க அழகோ அழகு என்றும் அறிவோ அறிவு என்றும் புழுக்களை வைத்து தூண்டிலுடன் காத்திருப்பவர்கள் உங்கள் வாழ்க்கையை சிதைக்குமளவு முரணானவர்கள்..

சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதில் தவறில்லை.. அதனை ஆக்க பூர்வமான வேலைகளுக்கும் தகவல் தெரிந்து கொள்ளவும்... தங்களின் மன ஓட்டங்களை பகிர்ந்துகொள்ளவும் உபயோகிப்பதை வரவேற்கிறேன்.. ஆனால் அதை ஒரு செருப்பு மாதிரி அதன் எல்லையோடு நிறுத்த வேண்டும் இல்லை எனில் வீடு நாற்றமெடுக்கும்.

ப்ரா..

Brassier என்பதன் சுருக்கமே Bra.. இப்படி ஒரு தலைப்பை பார்த்ததும் நிறைய பேர் முகம் சுழிக்கக் கூடும்... ஏனென்றால் நான் சார்ந்த தமிழ் சமூகம் நம்மை அப்படித்தான் சித்திக்க வைத்திருக்கிறது...



ஒரு சாதாரண உள்ளாடை என்பதை தாண்டி அதை அணிந்திருக்கும் இடத்தையும் கற்பனை செய்ய வைத்து அந்த துணிக்கும் உயிர் கொடுத்து வைத்திருக்கிறது ,, ஆண்களின் உள்ளாடைகளான பனியன்-ஜட்டி என்னும் போது இல்லாத ஆர்வம் ப்ரா என்னும்போது எங்கிருந்தோ ஓடி வந்து ஒட்டிக்கொள்கிறது...

ஒரு ஆணாக இது எனக்கும் பொருந்தும் .
நான் உள்ளாடைகள் விற்பனை செய்யும் ஒரு நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாய் பணிபுரிந்த காலத்தில் பெண்களுக்கென்ற பிரத்யோக உள்ளாடைக்கடைகளுக்கு போக வேண்டிய அவசியம் இருந்தது... ஆரம்ப காலத்தில் எல்லோரை போலவே எனக்கும் அதன் வடிவமைப்பு-வேலைப்பாடுகள் ஆகியவற்றை பார்க்கும் ஆர்வம் இருந்தததை பதிவு செய்ய வெட்கப்படவில்லை நான்.


ஒரு ஆணிற்கான உள்ளாடையை ஒரு பெண்ணால் எந்த சலனமும் இன்றி தேர்வு செய்ய முடிகிறது.. துவைக்க முடிகிறது... மடித்து வைக்க முடிகிறது ஆனால் மனைவிக்கே கூட ஒரு உள்ளாடையை ஒரு ஆணால் எளிதாக வாங்க முடிவதில்லை..


இதற்கான காரணத்தை உற்றுநோக்கினால் .. இதற்கு காரணம் பெண்கள் தான்... இதனால் பாதிப்புக்குள்ளாவதும் பெண்கள் தான்... நம் தாய், சகோதரி முதல் பக்கத்து வீட்டு கொடிக்கயிறு வரை..... பத்திரிகைகள் முதல், டி வி சீரியல், திரைப்படம் வரை அதை மறைத்து மறைத்து, அதற்கு உயிரூட்டி இருக்கிறது..


யாருக்கும் நம் மீது இல்லாத நெருக்கம் உள்ளாடைகளுக்கு உண்டு. வியர்வை துளைகள் வழியாக வெளியேறும் கழிவுகளை உறிஞ்சி கிருமிகளின் மொத்த குடியிருப்பாக மாறும் அந்த உள்ளாடைகளை நன்கு துவைத்து வெய்யிலில் உலர்த்த வேண்டும் என்பது அடிப்படை உண்மை... எத்தனை பெண்களுக்கு தங்கள் உள்ளாடைகளை வெய்யிலில் உலர்த்தும் வாய்ப்பு கிடைக்கிறது....??

ஆண்களே... பெண்களே... இந்த சமூகம் கற்பித்தபடி அது ஒன்றும் அவ்வளவு பெரிய விஷயம் இல்லை.. வெற்றுத் துணி... அவ்வளவுதான்....


தலைப்பை பார்த்ததும் ஏதோ கிளுகிளு சமாச்சாரம் இருக்குமோன்னு நினைச்ச ஆண்களுக்கும்.... அட வெக்கங்கெட்டவனே... இதை எல்லாமாடா எழுதுவ... என்று நினைத்த பெண்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.... அது உங்க தப்பு இல்ல... உங்கள அப்படி யோசிக்க வச்ச சமூகத்தோட தப்பு...

பாலகுமாரனின் இரும்புக்குதிரைகளை படித்தபோது இரண்டு பாத்திரங்கள் உரையாடிக்கொள்ளும் வரிகளில் இது பற்றி நான்கு வரிகள் எழுதி இருந்தது எனக்குள் இந்த சிந்தனைக்கு வித்திட்டது...
   
ஊருக்கு ஊரு பள்ளிக்கொடம், காலேசுன்னு தொறந்ததாலையும் , ஜனங்களுக்கு விழிப்புணர்ச்சி (!!???) வந்துட்டதாளையும் பொம்பளை புள்ளைங்க இப்போல்லாம் படிக்க/ வேலைக்கு போய்டுதுங்க.....


முன்னாடி எல்லாம் பொம்பளை புள்ளைங்கள பத்தாப்பு, பன்னெண்டாப்போட படிப்ப நிறுத்திட்டு வீட்டு வேலைக்கு போட்டுடுவாங்க.... சும்மாங்காட்டியும் ஊர் வம்பு பேசி திரியுரவுங்க.... என்னப்பா.. பொண்ணுக்கு கல்யாணம் பண்ணலையா... பண்ணலையான்னு கேட்டு கேட்டு சாவடிப்பானுங்க...


பதினாலு வயசுல வயசுக்கு வந்தா அதிக பட்சம் நாலஞ்சு வருஷம் வீட்டுல வச்சிருந்தாலே ஊர்ல கேக்குறவனுக்கு பதில் சொல்ல முடியாது....


ஆனா இப்போ பொண்ணுங்க படிக்கிறதாலையும் , வேலை-வெட்டின்னு வெளியூருகளுக்கு போயி தங்குறதாலையும் இந்த மாதிரி கேள்விங்க இப்போ கொறைஞ்சுடுச்சு .... அப்படியே கேட்டாலும் பொண்ணு படிச்சுகிட்டிருக்குப்பா.... இப்போ ஒன்னும் கல்யாணம் பண்ற ரோசனைல இல்லன்னு ஈசியா சொல்லிடலாம்...

ஆனா இதுல ஒரு விஷயம் கவனிச்சியளா....?? அப்போ பதினாலு வயசுல வயசுக்கு வந்தாங்க... நாலஞ்சு வருஷம்னா பதினெட்டோ- பத்தொம்போதுலையோ கல்யாணம் பண்ணுவாங்க...

இப்போ ஏழு வயசுலயும், எட்டு வயசுலயும் வயசுக்கு வருதுங்களே.... முன்ன மாதிரி இப்போவும் வீட்டுல இருந்தா பதிமூனு- பதினாலு வயசுல கட்டிக்கொடுத்திடுவாய்ங்களோ...


என்னமோ போங்க... அட ஆக்கங்கெட்ட கூவைங்களா... பிராய்லர் கோழிய சீக்கிரம் வளர்க்க அதுக்கு ஸ்டீராய்டு இன்ஜெக்ஷன் போட்டு போட்டு வளப்பாய்ங்க.... அத வாங்கிட்டு வந்து வாரா வாரம் வக்கனையா வழிச்சு திண்ணா அதுல இருக்க மருந்தோட வீரியம் எங்கிட்டு போகும்?? சாப்பிட்றவங்களும்ல்லா சீக்கிரம் வளர்வாங்க.... அப்புறம் ஏழுவயசுலையும் , எட்டு வயசுலயும் தான் வயசுக்கு வரும்.... கொழந்தைங்களுக்கு என்னன்னு தெரியாத வயசுலேயே இப்படி ஒரு பயங்காட்டி மனசளவுல ஒடைச்சுட்றீங்க ..

அது மட்டுமா.... ப்ராய்லர் கோழி மாதிரியே போதபொதன்னு வளைந்து பத்து வயசுலேயே பெரிய பொண்ணாட்டம் நின்னா ஊர்ல இருக்க நாதாரிப்பயமக்க எல்லாம் காதல் கத்திரிகான்னு சுத்தி அந்த பொண்ணோட மொத்த எதிர்காலத்தையும் நாசமாக்கிட்டுதான் ஒய்வானுங்க...

நூடுல்ஸ் நூடுல்ஸ் ன்னு கூவுறீங்களே,,, இத எல்லாம் எப்போதான் உணர்வீங்க...???

லயன் ஷேர்

பெண்சிங்கம் வேட்டையாடி முடித்து , இரையை உண்ணத் தொடங்கும் முன்பு அங்கு வரும் ஆண் சிங்கம் , அந்த பெண் சிங்கத்தை விரட்டிவிட்டு, தான் உண்ணத் தொடங்குமாம்...

பசி அடங்கிய பின்பு மிச்சமிருப்பதுதான் வேட்டையாடிய பெண் சிங்கங்களுக்கு கிடைக்குமாம்...
(நீ பார்த்தியான்னு கேக்க கூடாதுன்னுதான் "மாம்" "மாம்"ன்னு போட்டிருக்கேன்..)

உழைக்காமல் பலனை அனுபவிப்பது ஆண் சிங்கம்... இதற்கு ஆங்கிலத்தில் லயன் ஷேர் என்பார்கள்.. பல நிறுவனங்களில், தொழில்களில் கூட இப்படியான ஆட்கள் உண்டு...


தங்களுக்கு ஆண்குழந்தை பிறந்தால் "சிங்கக்குட்டி"பொறந்திருக்கு என்று பெருமையாக சொல்லிக்கொள்வார்கள்... உள்ளபடியே பார்த்தால் இது ஒரு ஏமாற்று வார்த்தை....வஞ்சப்புகழ்ச்சி...


நியாயமாய் சிங்கக்குட்டியாக இருந்தால் (அதாவது ஆண் சிங்கம்) உழைக்காமல், பெண்கள் கொண்டுவரும் சம்பாத்தியத்தில் முதலில் தனன் தேவையை பூர்த்தி செய்த பின்புதானே மற்றவர்களுக்கு விட்டு வைக்கக் வேண்டும்???

ஆனால்.. நிகழ்வில் இருப்பது அதற்கு முற்றிலும் எதிரானதுதானே???

ஆண்குழந்தை பிறந்த உடனே இப்படி ஒரு வார்த்தையை மட்டும் கேட்டு சந்தோஷப்பட்டுக்க வேண்டியது தான்....

ஏ...... ஆண் வர்க்கமே.... இன்னும் எத்தனை காலம் இப்படி வெறும் வார்த்தை புகழ்ச்சிக்கு மயங்கப்போகிறாய்????

காலாவதி தேதி



கடைகளில் வாங்கும் உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் மீதும் தயாரிப்பு தேதி மற்றும் காலாவதி தேதி அச்சிடப்பட்டிருக்கும்...


என்போன்ற புத்திசாலிகள்(??!!) அந்த பொருட்களை வாங்கும்போதே காலாவதி தேதியையும் கவனிப்பார்கள்... வாங்கிக்கொண்டு வந்து உபயோகிக்கத் தொடங்கியதும் சில பல நாட்கள், மாதங்கள் கழிந்த பின்னும் கூட காலாவதி தேதியை சரி பார்த்து திருப்தியாய் தொடர்ந்து உபயோகிப்பார்கள்...
இங்குதான் அந்த புத்திசாலிகள் சறுக்கி விடுகிறார்கள்...

ஆம்.. அந்த பொருகள் , நிறுவன பேக்கிங் பிரிக்காமல், குறிப்பிட்டுள்ள சீதோஷ்ண நிலையில் வைக்கப்பட்டிருந்தால் மட்டுமே அந்த காலாவதி தேதி சரியாக இருக்கும்....பிரித்து உபயோகிக்கத்தொடங்கி விட்டாலோ, குறிப்பிட்ட சீதோஷ்ண நிலையில் பாதுகாக்காமல் விட்டாலோ கூடிய சீக்கிரமே கெட்டுவிடும்.

ஆகவே அரை புத்திசாலிகளே...(இது எனக்கு சொல்லிக்கிறது.. உங்களுக்கும் பொருந்தினால்.... நாம ஒரே ஜாதின்னு வச்சுக்கலாம்) காலாவதி தேதியை வைத்து, சீல் பிரிக்கப்பட்ட, பாதி உபயோகிக்கப்பட்ட, குறிப்பிட்ட சீதோஷ்ணத்தில் வைக்க முடியாத பொருட்களை எவ்வளவு சீக்கிரம் உபயோகிக்க முடியுமோ உபயோகித்து விடுங்கள்....

கூடுமான வரை, உங்கள் தேவைக்கு தகுந்த அளவில் வாங்குங்கள்.... அதையும் சீக்கிரம் தீர்க்க முடியவில்லை என்றால்... மிச்சமிருப்பதை யாருக்காவது கொடுத்துவிடுங்கள்.... இல்லை குப்பையில் வீசி விடுங்கள்...

காசுகொடுத்து வாங்கிவிட்டோமே என்று விஷத்தை உட்கொள்ள முயற்சிக்காதீர்கள்...!!!

யோசிங்க.. புரியும்...



வாழ்க்கை இருக்குதே வாழ்க்கை... அது ஒரு முப்பது ப்ளோர் பில்டிங் மாதிரி.... படிக்கட்டு-லிப்ட் ரெண்டுமே இருக்க பில்டிங்...

அதுல முப்பதாவது ப்ளோர் தான் "பணக்காரன்"

இந்த முப்பதாவது ப்ளோருக்கு நீங்க போகணும்னா , நேர்மையா உழைக்கிறது படிக்கட்டுல போறது.... இந்த வழிய தேர்ந்தெடுக்கிற நிறைய பேர் முப்பதாவது ப்ளோர் வரைக்கும் போறதே இல்ல...


கோல்மால் பண்ணி சீக்கிரமே அந்த முப்பதாவது ப்ளோருக்கு போகலாம்... அதுதான் லிப்டுல போறது....

அப்போ குருக்குவழில போறவன் தான சீக்கிரம் "பணக்காரன்" ப்ளோருக்கு போவான்....??

அங்கதான் அந்த பில்டிங்க கட்டுன இன்ஜினியர் வச்சான் ஒரு ட்விஸ்ட்...

படிக்கட்டு வழியா மேல ஏறி முப்பதாவது ப்ளோருக்கு போனப்புறம் நீங்க அந்த ப்ளோர்ல கால் வைக்கிற இடத்துல ஒரு கன்வேயர்... அந்த கன்வேயர் நேரா லிப்ட் வாசலுக்கு கனெக்ட் பண்ணும்.... முப்பதாவது ப்ளோருக்கு போனப்புறமும் நீங்க நிக்காம திரும்பி நின்னு நடந்துகிட்டே இருந்தா... நீங்க அங்கேயே நிக்கலாம்.....
அப்பாடா..... ன்னு உட்கார்ந்துட்டா... உங்கள நேரா லிப்ட் உள்ள கொண்டுபோய் தள்ளிடும்.. லிப்ட் உடனே கீழ இறங்கிடும்....

சரி....
அப்போ லிப்ட் ல ஏறி சீக்கிரமே முப்பதாவது ப்ளோருக்கு போனவன்???


அங்க தான் அடுத்த ட்விஸ்ட்...

அவன் லிப்ட் ல இருந்து வெளில கால் வைக்கிற இடத்துல ஒரு கன்வேயர்... அது நேரா திறந்து கிடக்கிற ஜன்னல கனெக்ட் பண்ணும்.... வெளிய கால வச்சதும் நேரா கொண்டுபோய் ஜன்னல் வழியா வெளில தள்ளிடும்.... இங்க திரும்பி நின்னு நடக்கிற ஆப்ஷன் கிடையாது....

ஏதாவது புரிஞ்சுதா... யோசிங்க.. புரியும்...

இப்படிக்கு:- குண்டக்க மண்டக்க தத்துவம் சொல்லி பீதிய கிளப்புவோர் சங்கம்....

ஒரு சாமான்ய விவசாயியின் மரணகால செய்தி...

நிகழ்வில் இருந்து மறைந்து போன பல விஷயங்களை சினிமா-தொலைக்காட்சி வழியாக பார்க்கும்போது அந்த நாள் ஞாபகங்கள் வரும்...

உதாரணமாக, சேரன் ஆட்டோகிராஃப் படம் எடுத்தபோது அதை பார்த்த இள வயதுகாரர்களை விட நடுத்தர மற்றும் முதிர்ந்த வயதுடையவர்களே அதிகம்.... அதற்கு காரணம் அந்த ஆட்டோகிராஃப் ஒவ்வொருவரின் வாழ்விலும் பல வருடங்கள் முன்பு நடந்த , திரும்ப அனுபவிக்கவே முடியாத விஷயங்களை கிளறி விட்டது... தங்கர் பச்சானின்"அழகி"யும் அப்படித்தான்....

அதாவது பழைய நினைவுகளை கிளரறிவிடக்கூடியவை வெற்றி பெரும் என்ற சித்தாந்தம் தான் பாரதம பிரதமரின் "விவசாயிகளுக்கான தனி தொலைக்காட்சி சேனல்" அறிவிப்பும்...

பாதி பேரை அழித்து விட்டோம்.. மீதி பேர் தாமாகவே ஓடும்படி செய்தாயிற்று.... எஞ்சி இருக்கும் கொஞ்ச நஞ்சமும் கூடிய சீக்கிரம் தற்கொலை செய்துகொள்வார்கள்.... அப்புறம் விவசாயம் என்பது பழைய நினைவுகளை கிளறிவிடும் விஷயமாகபோய்விடுமல்லவா???.

இதில் இன்னொரு விஷயம்.... சேரனுக்கோ- தங்கர் பச்சானுக்கோ வெற்றியின் சதவிகிதம் குறைய வாய்ப்பு இருந்தது.. ஏனென்றால் அவர்கள் கிளறிய காதல் சமாச்சாரத்தை சமகால இளைஞர்கள் அனுபவ பூர்வமாய் உணர்ந்திருந்தார்கள்.. அல்லது இனிமேல் கண்டிப்பாய் அந்த அனுபவத்திற்கு ஆட்படுவார்கள்...

ஆனால் மோடி அவர்களின் திட்டமோ... இளைஞர்களையும் சேர்த்தே வசப்படுத்தும்.... இப்போதுள்ள இளைஞர்களுக்கு எக்காலத்திலும் விவசாயிகளை பார்க்கும் அனுபவம் தான் கிடைக்கவே கிடைக்காதபடி மொத்தமாய் அழித்துவிட்டோமே....

ஒரு சாமான்ய விவசாயியின் மரணகால செய்தி....
"வாழ்க வளமுடன்....!!!!"

பிளாஸ்டிக்-அந்நியன்



அஞ்சு பேர் அஞ்சு பைசா திருடினா தப்பா...

தப்பு மாதிரி தாங்க தெரியுது...

அஞ்சு பேர் அஞ்சு தடவை அஞ்சு பைசா திருடினா தப்பா...

ஆமாங்க.. தப்புதாங்க....

இதன் மருவலாய் ஒரு சமூக சிந்தனை...

ஒரு வாட்டர் பாட்டில் வாங்கி தண்ணி குடிச்சிட்டு அந்த பெட் பாட்டிலை
ரோட்டுல வீசினா தப்பா...??

இல்லீங்க...

அஞ்சு பேர் அப்படி வீசினா...??

தப்பு மாதிரிதாங்க தெரியுது,,,

அஞ்சு பேர் அஞ்சுதடவை வீசினா ??

தப்புதாங்க...

ஒரு நாளைக்கு அஞ்சு லட்சம் பேர் அஞ்சு தடவை வீசுறாங்க... அந்த குப்பை எப்படி அழியும்..???

திரும்ப திரும்ப உபயோகிக்க கூடிய BPA FREE பாட்டில்கள் கிடைகின்றன.. அதை வாங்கி வீட்டுலையே தண்ணி புடிச்சுகிட்டு வெளில போகலாமே..... உடல் நலத்திற்கும்.. இயற்கைக்கும் , எதிர்கால சந்ததிகளுக்கும் நல்லது...

நான் அந்நியன் இல்ல.... ஆனா.. நீங்க அந்த காண்ட்ராக்டர் ஆகாம இருங்களேன்.. ப்ளீஸ்....