செவ்வாய், 28 ஜூலை, 2015

உங்கள் முகமூடிக்கு பின் இருக்கும் முகம் எது?

"நாராயணன் கிருஷ்ணன்"

2010 ஆம் ஆண்டு ஊடகங்கள்-பத்திரிகைகள்- சமூக வலைத்தளங்களில் இந்த பெயர் தீ போல பரவியது...1981ல் பிறந்து வெளிநாட்டில் வேலை கிடைத்த பின்பும் கூட மதுரையில் இருக்கும் மனநலம் குன்றியோர்-ஆதரவற்றோருக்கு சேவை செய்யும் நோக்கில் வெளிநாட்டு வேலையை புறக்கணித்த இளைஞர்... உலகின் தலைசிறந்த பத்து மனிதர்களுள் ஒருவராக சி என் என் தொலைக்காட்சி இவரையும் தேர்ந்தெடுத்து கவுரவித்தது... அப்படி தேர்வு செய்ய இணையதளங்களில் வாக்கெடுப்பு நடத்தியது...


ஒரு இளைஞன்.. அதுவும் தமிழன்.. அதுவும் தமிழ்நாட்டிலேயே இருந்துகொண்டு உலகப்புகழ் பெற போகிறார் என்ற உடன்.. வெளிநாட்டில் கூலிக்கு வேலைக்கு வந்த தமிழனான எனக்கு வெட்கமாக இருந்தாலும்... அவன் நம்மூர்காரன் என்ற பெருமையோடு நிறைய நிறைய நண்பர்களை இணையத்தில் வாக்களிக்க சொல்லி நேரடியாகவும், ஃ பேஸ்புக் மூலமாகவும் வேண்டுகோள் விடுத்தேன்.. சிலர் என் கண் முன்னாலேயே வாக்களித்தனர்.. பலர் எனக்கு தெரியாமல் வாக்களித்திருக்கலாம்...

பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் என்பதை போல.. மனநலம் குன்றியோரையும்-ஆதரவற்றோரையும் இவன் தனது வலைக்குள் கொண்டு வரும் தந்திரமே அப்படி தேடி தேடி போய் சோறு ஊட்டியது என்றும்.. அப்படி தன்னுடைய கட்டுக்குள் கொண்டுவந்தவர்களின் உயிரை பறித்து உடல் உறுப்புகளை விற்று வருகிறான் என்று தகவல் கேள்விப்பட்டதும்.. அடைந்த அதிர்ச்சிக்கு அளவே இல்லை...

எவன நம்புறதுன்னே தெரியலையே... கடவுளே.. என்று என்னை நானே நொந்துகொண்டேன்...

அந்த நாராயணன் கிருஷ்ணனை பற்றி செய்தி தாள்களில்தான் படித்தோம்...

இங்கே ஃபேஸ்புக்கில் சிலர் மிகவும் மரியாதைக்குரியவர்கள் என்று நான் நம்பிக்கிடந்தேன்... நல்லவர்கள் என்று நினைத்தேன்... ஆனால் சமீப காலமாக அவரிடம் பணம் வாங்கிக்கொண்டு ஏமாற்றிவிட்டார்.. இவரிடம் பொருள் வாங்கிக்கொண்டு ஏமாற்றிவிட்டார் என்று கேள்விப்படும்போது ஏற்படும் அதிர்ச்சியை தவிர்க்கவே முடியவில்லை...

நீங்களா...??????? நீங்களா இப்படி.. ?????????????/ நீங்களுமா இப்படி...????????????????

எப்படிப்பா.. நல்லவன்ற முகமூடிக்குள்ள இருக்க உங்க உண்மை முகத்த கண்டுபிடிக்கறது???

கடவுளே.... யாரை நம்புறது... யாரை சந்தேகப்படுறது?? இதுக்கு ஒரு தீர்வே இல்லையா.... cry emoticon


கிராம நீதிபதி...- திரு விஸ்வநாதன் அவர்கள்

சீவாடிக்கும் (ஒரு குளத்தின் பெயர்) , மெயின் ரோட்டுக்கும் நடுவுல ஒரு ரெண்டு கிலோமீட்டர் இருக்கும்... எடப்பட்ட எடமெல்லாம் வெவசாய நெலங்க..

கோட நாள்ல ஒன்னும் பெரச்சினை இருக்காது.. ஆனா மழ காலத்துல எல்லோரும் நெல்லு பயிர் வெவசாயம் செய்வாங்க.. ஒருத்தர் முன்னாடி நடுவார்.. ஒருத்தர் லேட்டா நடுவார்... அப்போ வெதைக்க போறதுக்கோ, நடவு நட போறதுக்கோ வெளஞ்சத அறுத்து கொண்டு வரவோ ரொம்ப கஷ்டம்...
சேறடிச்ச வயலுக்குள்ள மாடுங்க ரொம்ப கஷ்டப்படும்..





அப்போதான் அந்த பக்கம் இருக்க வயகாரங்க எல்லாம் ஒண்ணா பேசி பெரசரெண்டு (PRESIDENT - பஞ்சாயத்து தலைவர்) கிட்ட போய் சொன்னாங்க...

"அந்த பக்கம் புதுசா ஒரு ரோடு எடுக்கனுங்கய்யா... மழைகாலத்துல ரொம்ப கஷ்டமா இருக்கு... "

பெரசரண்டும் சரின்னு சொல்லிட்டாரு... எல்லோரும் கூடி எந்தப்பக்கம் புதுசா ரோடு எடுக்கலாம்னு முடிவு பண்ணி வேலைய ஆரம்பிச்சுட்டாங்க... சீவாடில ஆரம்பிச்சு வரப்புகள எல்லாம் தட்டி தட்டி ரோடா நெரவிகிட்டு போறாங்க...

எல்லா இடத்துலயும் ஒரு வில்லன் இருக்கணுமே... இங்கனயும் ஒருத்தர் இருந்தார்...

"அதெப்படிடா என்னோட வயல்ல நீங்க ரோடு போடுவீங்க... எனக்கு ரோடும் வேண்டாம்,.. ஒன்னும் வேண்டாம்... நீங்க ஒங்க சோலிய பாத்துகிட்டு போங்க.."ன்னு தாண்டி தலைகுப்புற குதிக்கிறார்...

பெரசரண்டு நிக்கும்போது மத்த ஆளுங்களுக்கு என்ன பேச்சு.. எல்லோரும் ஒருத்தர ஒருத்தர் பாத்துகிட்டு பேசாம நிக்கிறாங்க....

"சரிப்பா... ஒனக்கு ரோடு வேண்டாமா.. சரி... வேணும்னா மட்டும் வந்து சொல்லு... இப்போ இதுல ரோடு போட வேண்டாம்"ன்னு சொல்லிட்டு.. மத்தவங்கள பாத்து.... "நீங்க ஏம்பா நிக்கிறீங்க... இந்த வயல மட்டும் விட்டுட்டு அடுத்த வயல்ல இருந்து வேலைய ஆரம்பிங்க"ன்னுட்டு போய்ட்டார்...

இப்போ சீவாடில இருந்தும், மெயின் ரோட்டுல இருந்தும் ரோடு போட்டாச்சு.. விடமாட்டேன்னு சொன்னவரோட வயல் மட்டும் நடுவுல கெடக்கு... ஒருவாரம்.. பத்து நா ஆச்சு.. போற வர ஆளுங்க எல்லாம் விடமாட்டேன்னு சொன்னவற திட்ட ஆரம்பிச்சுட்டாங்க... ஊரு வாசாப்ப வாங்கினா அது தலைமொறைக்கும் பாதிக்குமில்லையா.....

வேற வழியே இல்லாம... விடமாட்டேன்னு சொன்னவர் பெரசரண்டு கிட்ட போய் .. "அய்யா.. தெரியாம செஞ்சுட்டேன்யா.. மன்னிச்சுக்குங்க... நீங்க சொல்லி ரொட்ட முழுசா போட சொல்லுங்கா.."ன்னு கதறிட்டார்...

அப்புறம் என்ன... ரோடு முழுசா ஆச்சு.. இப்போ அதுல தார் எல்லாம் போட்டு பெரிய ரோடா பெரசரண்டு பேரையும், இந்த கதையையும் சொல்லிகிட்டே கண்ணங்கரேர்னு படுத்துக்கெடக்கு....

எத்தன பஞ்சாயத்து.. எத்தன தீர்ப்பு.... இப்போ இதெல்லாம் கோர்ட்டுக்கு போனா மூணு தலமொற ஆனாலும் தீராது... இங்க அப்பீலும் இல்ல.. வாய்தாவும் இல்ல... அநியாயமும் இல்ல.. தீர்ப்புன்னா அது காலத்துக்கும் யாருக்கும் கெடுதல் இல்லாம நறுக்குன்னு சொல்லிடுவாரு... எழுத ஆரம்பிச்சா எத்தனையோ புத்தகம் எழுதலாம்....

அந்த பெரெசரெண்டு பேரு - அய்யா விஸ்வநாதன்..

அந்த ஊரு -காசாங்காடு (பட்டுக்கோட்டை-தஞ்சாவூர் மாவட்டம்)

பெயர் வைத்தால் போதாது





சரித்திர புதினங்களை ஆர்வமுடன் படிப்பவர்கள் அவற்றில் வரும் சம்பவங்கள், சாகசங்களால் கவரப்பட்டு, அதில் ஏதேனும் ஒரு பாத்திரத்தின்பால் ஈர்க்கப்பட்டு தங்கள் குழந்தைகளுக்கு அந்த பெயரை சூட்டி மகிழ்வார்கள்...

வந்திய தேவன்... ராஜராஜ சோழன்.. ராஜேந்திர சோழன்... அருண்மொழி... இப்படியாக....

ஆனால் துரதிஷ்டவசமாக , அந்த பெயரை சூட்டியவர்கள் அந்த பாத்திரத்தின் குணநலன்களை ஊட்ட தவறி விடுகிறார்கள்.. இது அவர்கள் குற்றமல்ல.. சமயங்களில் காலம் ஒத்து வருவதில்லை... சில சமயங்களில் பிள்ளைகள் ஒத்துவருவதில்லை...

எல்லாம் கனவாகிப்போய் விடும்...

# பெயர் - மனுநீதி சோழன்..
# பதவி - நிறுவனங்களின் பதிவாளர்
# சமீபத்திய சாதனை - தொழிலதிபர் எம் ஏ எம் ராமசாமி செட்டியார் அவர்களிடம் 10 லட்சம் கையூட்டு பெற்று தற்போது மத்திய குற்றப்புலனாய்வுத் துறையின் பிடியில்....

நிச்சயம் அவரது அப்பாவும் கனவுகண்டிருப்பார்... frown emoticon

ஏ.டி.எம். ல் கள்ளநோட்டு வந்தால் யார் பொறுப்பு?


ஒரு மிக மிக முக்கியமான தகவல்... படித்து பயன் பெறுங்கள்... பகிர்ந்து பரப்புங்கள்...!!!

ஏ.டி.எம். ல் கள்ளநோட்டு வந்தால் யார் பொறுப்பு?அப்படி கள்ள நோட்டு வரும் பட்சத்தில் நாம் என்ன செய்ய வேண்டும்?

ஏ.டி.எம்-ல் பணம் எடுக்கும்போது அதில் ஒன்றிரண்டு கள்ள நோட்டு வந்துவிட்டால் என்ன செய்வது என்று தெரியாமல் பலரும் கிழித்துப் போட்டுவிட்டு, சும்மா இருந்து விடுகிறார்கள்.இதனால் நஷ்டம் நமக்குத்தான்.அப்படி இல்லாமல் ஏ.டி.எம்.-ல் கள்ள நோட்டு வந்தால் நாம் என்ன செய்யவேண்டும்? யாரை அணுகவேண்டும்? இந்தக் கள்ள நோட்டுக்கு வங்கி பொறுப்பேற்குமா?இதுதொடர்பான வங்கியின் விதிமுறைகள் என்ன?

வாடிக்கையாளர்கள் ஏ.டி.எம்.-ல் பணம் எடுக்கும்போது அதில் கள்ள நோட்டு இருப்பதாகச் சந்தேகித்தால், வங்கிக்குத் தெரியப் படுத்துவதற்கு முன்னர், ஏ.டி.எம். சென்டருக்குள் இருக்கும் சி.வி.வி. கேமராவில் சந்தேகத்திற்குரிய ரூபாய் தாள்களில் உள்ள நம்பர்களைக் காட்டுவது அவசியம்.ஏனெனில், ஏ.டி.எம். மெஷினுக்குள் போடப்படும் ரூபாய் தாள்களில் இருக்கும் எண்கள் ஸ்டோர் ஆகாது. அதனால் சந்தேகத்திற்குரிய தாள்களை கேமராவில் காண்பிப்பதன் மூலம், வங்கியானது உங்களைப் பற்றி விசாரிக்கும்போது உங்களின் மீதானநம்பகத்தன்மையை அதிகரிக்கும்.பின்னர் ஏ.டி.எம். லிங்டு பேங்க் (ATM Linked Bank) அதாவது, அந்த ஏ.டி.எம். எந்த வங்கியுடன் தொடர்பில் இருக்கிறதோ, அந்த வங்கிக்கு உடனே தெரியப்படுத்த வேண்டும்.ஏ.டி.எம். சென்டருக்கு உள்ளேயே ஒட்டப்பட்டிருக்கும் பிரசுரங்களில் இந்த ஏ.டி.எம். தொடர்பான பிரச்னைகளை இந்த வங்கியில் மட்டுமே தெரியப்படுத்தவேண்டும் என்று சொல்லி தொடர்பு எண்களைத் தந்திருப்பார்கள். அதை பயன்படுத்தி தொலைபேசி மூலம் தெரியப்படுத்திவிட்டு, நேரில் சென்று உறுதிப்படுத்திக்கொள்ளலாம்.


அது கள்ள நோட்டு இல்லை எனில், அந்தப் பணத்தை அவர்களே ஏற்றுக்கொள்வார்கள். கள்ள நோட்டுதான் என்று தெரியவந்தால் அந்தப் பணத்தை வாங்கிக் கொண்டு, அந்த ரூபாய் தாளில் இருந்த எண்ணைக் குறிப்பிட்டு ரசீது ஒன்றை தருவார்கள்.உங்களிடம் பெறப்பட்ட ரூபாய்த் தாள் அந்த வங்கியின் ஏ.டி.எம்-ல் இருந்து எடுக்கப்பட்டதுதான் என்று விசாரித்து தெரிந்துகொண்டு(நீங்கள் குறிப்பிட்ட தேதியில் நீங்கள் பணம் எடுத்ததாகச் சொல்லும் ஏ.டி.எம்.-ல் இருந்து சி.வி.வி. கேமராவில் பதிவாகியிருக்கும் வீடியோவைப் பார்ப்பதன் மூலமும், உங்களின் பின்புலன்களை விசாரிப்பதன் மூலமும் நீங்கள் உண்மையானவர் என்பதை ஊர்ஜிதப்படுத்திக்கொண்டு) அந்தக் கள்ள நோட்டின் மதிப்புக்கு இணையான உண்மையான ரூபாய்த் தாளை தருவார்கள்

நன்றி - திரு ரவிக்குமார் அவர்கள்..

தனியார் தொலைகாட்சி "கட்டபஞ்சாயத்து







தனியார் தொலைகாட்சிகளில் நடக்கும் "கட்டபஞ்சாயத்து" நிகழ்ச்சிகளில் (சொல்வதெலாம் உண்மை, நித்ய தர்மம் -வாய்மையே வெல்லும் போன்றவை) கலந்துகொள்பவர்கள் பெரும்பாலும் சமூகத்தின் அடித்தட்டு மக்களே...

பணக்காரவர்க்கத்தில் இதை விட கேவலங்கள் எல்லாம் நடக்கின்றன.. ஆனால் அவர்களிடம் இருக்கும் பணம் அதை மறைத்துவிடும்... அல்லது.. அந்த பணவசதியை பயன் படுத்தி அதையே கௌரவமான விஷயமாக மாற்றி விடுவார்கள்..

ஆனால் ஏழை வர்க்கத்தை பொறுத்தவரை "குடும்ப மானம்" என்பது தான் பெரிய மூலதனம்.. இதனாலேயே பல கௌரவ கொலைகள்-தற்கொலைகள் என்ற அளவிற்கு கூட அவர்கள் துணிவார்கள்.

அப்படி மானத்திற்காக கொலை/தற்கொலைக்கு கூட தயங்காத அடித்தட்டு வர்க்கம் இப்படி குடும்ப மானத்தை ஊரறிய சிரிக்க வைக்க எப்படி சம்மதிக்கிறது??? அவர்கள் அழுவதை-அடித்துக்கொள்வதை ரகசிய கேமரா மூலம் படம் பிடிக்கிறார்கள் என சப்பை கட்டு கட்ட முடியாது... ஏனென்றால் தொடர்ந்து ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளில் அப்படி நடப்பதை பார்த்துவிட்டுத்தான் புதிது புதிதாய் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள செல்கிறார்கள்.. அவர்களுக்கு தெரியாதா என்ன.. நம்மையும் இப்படி எல்லோரும் பார்ப்பார்கள் என்று???

இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால்.. விளம்பர மோகம் மானம் மரியாதையை விட அதிக முக்கியத்துவம் பெற தொடங்கிவிட்டது... கலாச்சார சீரழிவின் மற்றொரு கோர முகம் இது...!!!

ஒரு ஆலோசனை...


டெக்னிகலாக எனக்கு அவ்வளவு விபரம் தெரியாது.. ஆனால் அனுபவ அறிவு கொஞ்சம் இருப்பதால் சொல்கிறேன்.. இதனை எவ்வளவு டெவலப் செய்து உபயோகத்திற்கு கொண்டுவரலாம் என்பதை சம்மந்தப்பட்ட துறையில் இருக்கும் நண்பர்கள் சொல்லலாம்...

நமது மொபைல் போன், கேமரா, டார்ச் லைட், எமர்ஜென்சி லைட் போன்ற ரீசார்ச் செய்யும் சாதனங்களின் பேட்டரி மிக விரைவில் பழுதடைந்து விடுகின்றன.. இதற்கு காரணம் தமிழகத்தில் மின்வாரிய கோளாறுகள் என்பதை நான் ஏற்கெனவே ஒரு பதிவில் சொல்லி இருந்தேன்... மாறுபட்ட மின்னூட்ட அளவுகளால் (LOW VOLTAGE & HI VOLTAGE ) திடீர் திடீரென மின்னழுத்தம் (AMPS) ஏறி இறங்குவதால் அந்த மின்சாதனங்கள் எளிதில் பாதிப்புக்குள்ளாகின்றன...

வீட்டில் உபயோகிக்கும் பெரிய மின் சாதனங்களுக்கு (டி வி , பிரிட்ஜ், வாஷிங் மெஷின் , ஓவன் ) நாம் ஸ்டெப்லைசர் எனப்படும் மின் சீராக்கிகளை உபயோகிப்போம்.. ஆனால் சிறிய சாதனைகளுக்கு ( மேற் குறிப்பிட்ட றீ சார்ஜ் செய்யும் உபகரணங்கள்) அவ்வாறு செய்வதில்லை..

இப்போது பெரும்பாலும் எல்லா வீடுகளிலும் இன்வெட்டர் என்று சொல்ல கூடிய பின் சேமிப்பு கலங்களை உபயோகிக்கிறார்கள்... அதில் இருந்து கிடைக்கும் மின்சாரமானது சீராக கிடைக்கும்.. (அது நன்றாக சார்ஜ் ஆகி இருக்க வேண்டும்) எனவே அப்படி ரீ சார்ஜ் செய்யும் உபகரணங்களை ஒரு தனி பிளக் பாயின்ட் வைத்து அந்த இன்வெர்டர் மின்சாரத்தில் சார்ஜ் செய்யும் போது பேட்டரி ஆயுள் கூடும்...

பெரிய அளவில் இல்லாமல் சிறிய கார் பேட்டரிகளை உபயோகித்து சார்ஜ் செய்வதற்கான உபகரணங்களை வியாபார முறையில் கூட உற்பத்தி செய்யலாம்...

படித்த முட்டாள்கள்



நமது முந்தைய தலைமுறைகளை விட, நவீன விஞ்ஞான, கல்வி அறிவு பெற்ற இளைய தலைமுறையினருக்கு தான் ஜாதி வெறியும் , மத வெறியும் அதிகமாக இருக்கிறது... இதற்கு காரணம் என்ன???

சுதந்திரமடைந்த காலத்தில் வெள்ளைக்காரர்களிடம் இருந்து ஆட்சி கைமாறின சமயத்தில் பெரிதாய் மதக்கலவரம் வெடித்தது... அதற்கு காரணம் சுதந்திர போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மூலமாக தகவல்கள் உடனுக்குடன் பரவின.. மக்கள் அனைவரும் உணர்ச்சியின் பிடியில் சிக்கி இருந்த நேரம்.. தலைவர்களின் உணர்ச்சிகரமான உரை வீச்சால் ஏற்கெனவே உணர்ச்சி வயப்பட்டிருந்தவர்கள் அறிவை அடகு வைத்து மதக்கலவரங்களில் ஈடுபட்டனர்... அப்புறம் சுதந்திர இந்தியாவில் அவரவர் , அவரவர் வேலையை பார்க்க போய் விட்டனர்... ராவுத்தரும் , முத்துசாமியும் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ வேண்டிய கட்டாயம்.. தினசரி ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளும் நிலை.. அவர்களுக்குள் மதங்களை மீறிய நட்பு குடும்ப நட்பாக உறவு முறை சொல்லி பேசிக்கொள்ளும் அளவிற்கு வந்தது...

அதே போல, இந்து மதத்தின் ஜாதீய கட்டமைப்புகளும் அப்படித்தான்.. ஒரு குறிப்பிட்ட ஜாதியை சேர்ந்தவர்கள் குறிப்பிட்ட வேலைகளை தொடர்ந்து செய்தார்கள்.. ஒவ்வொரு ஜாதியினரும் ஒவ்வொரு வேலையை செய்தாலும் ஒன்றை ஒன்று சார்ந்தே இருந்தது... இவரது வேலை அவருக்கும், அவரது வேலை இவருக்கும் அவசியமாக இருந்தது...

இடையில் எப்படியாவது தலைவனாகி விட வேண்டும் என்ற எண்ணம் கொண்ட சிலர் அதற்காக கையிலெடுத்த யுக்திதான் மதப்பற்று, ஜாதிப்பற்று... இவர்கள் வருவதற்கு முன்பும் முஸ்லிம்கள் முஸ்லிம்கள் தான்.. இந்துக்கள் இந்துக்கள் தான், கிருஸ்துவர்கள் கிருஸ்துவர்கள் தான்.... அதே போல , முதலியார் முதலியார் தான், வன்னியர் வன்னியர்தான்.. செட்டியார் செட்டியார் தான்... ஆனால் அப்படி இந்துவாகவோ, முஸ்லிமாகவோ, முதலியாராகவோ, செட்டியாராகவோ இருந்த யாரும் "நாம் இன்ன மதம்.. இன்ன ஜாதி.." என்பதை பற்றி சிந்திக்கவே இல்லை.. அவர்கள் கடவுளை தொழும் போது மட்டும் அவர்கள் மதங்களை பற்றி நினைத்தார்கள்... திருமண பந்தங்களை ஏற்படுத்தும் போது மட்டும் தான் ஜாதி பற்றி யோசித்தார்கள்.. அப்படி இல்லாத நேரத்தில் மனிதர்களாக மட்டுமே இருந்தார்கள்...

ஆனால், இப்படி தலைமை வெறி கொண்ட மனிதர்கள் ( சாத்தான்கள்) தலையெடுக்க தொடங்கிய பிறகுதான் ஒவ்வொருவரும் எப்போதும் மதம் பற்றியும், ஜாதி பற்றியும் யோசிக்க ஆரம்பித்தார்கள்.. இப்படி மதம்-ஜாதி என்ற பெயரை சொல்லி சிலர் தலைவராகி விட, இந்த இரண்டிலும் வாய்ப்பு கிடைக்காத சாத்தான்கள் "கடவுள் இல்லை" என்றும், பகுத்தறிவாளர்கள் என்றும், மதச்சார்பற்றவர்கள் என்றும் மூன்றாவதாய் ஒரு வழியை தேர்ந்தெடுத்தார்கள்... மதத்தலைவன், ஜாதித்தலைவன் என்று சொல்லும் சாத்தான்களுக்கு சற்றும் குறைந்தவனல்ல.. இந்த மதச்சார்பற்ற, பகுத்தறிவு சாத்தான்களும்....

எங்கோ ஒரு மூலையில் கிளம்பிய இந்த சாத்தான்கள் ஒட்டு மொத்த இந்தியாவிலும் ஆட்சி செய்ய காரணமாய் அமைந்தது ஊடகங்கள்தான்... மதுக்கூரில் அரிசி கடை வைத்திருக்கும் மீரான் பாயும், மீன் கடை வைத்திருக்கும் யூசுப் பாயும், உரக்கடை வைத்திருக்கும் கனக சபை தேவரும், மளிகை கடை வைத்திருக்கும் சுந்தரம் செட்டியாரும் சிலம்பவேளாங்காட்டில் இருந்த நடேச வேளாளருக்கு உளப்பூர்வமான நண்பராக இருக்க முடிந்தது.. ஆனால்... மீரான் பாயின் மகனோ, யூசுப் பாயின் மகனோ, கனக சபை தேவரின் மகனோ, சுந்தரம் செட்டியாரின் மகனோ , நடேச வேளாளரின் மகனுக்கு உளப்பூர்வமான நண்பனாக இருக்க முடியவில்லை... அப்படி இருந்தாலும் கூட அது உதட்டளவில் மட்டுமே இருக்கிறது...

குஜராத்தில் மதக்கலவரம் என்றால் மதுக்கூரில் இருக்கும் மீரான் பாயின் மகன் நடேச வேளாளரின் மகன் மீது ஆத்திரப்படுகிறான் ... ராமநாத புரத்தில் நடந்த கலவரத்திற்கு மதுக்கூரில் கடை வைத்திருக்கும் கனகசபை தேவரின் மகன் அதே ஊரில் இருக்கும் முனியாண்டி பள்ளரின் மகனை முறைக்கிறான்...

ஏன்....?? ஏன் இப்படி..?? எங்கோ நடக்கும் சில முட்டாள்களின் செயல் எங்கோ உணர்வு பூர்வமாய் இணைந்திருந்த நண்பர்களை எப்படி பிரித்தது??? காரணம் ஊடகங்கள்...

எங்கோ ஒரு முஸ்லிம் தீவிரவாதி வெடிகுண்டு வைத்தால்.... அடுத்து வரும் திரைப்படங்களில் வரும் எல்லா கற்பனை தீவிரவாதிகளும் முஸ்லிம்களாகவே காட்டப்படுகிறார்கள்... எங்கோ ஒரு காலனி ஆள் முதலியார் வீட்டு பெண்ணுடன் காதல் கொண்டு ஊரை விட்டு ஓடினால்... அந்த காலனி ஆள் ஏதோ உலக சாதனை செய்து விட்டதை போல சித்தரிக்கப்படுகிறார்... இப்படி ஒருவரை தொடர்ந்து மட்டப்படுத்தியோ, உயர்த்தியோ பேசும் போது, அதை கேட்கும், பார்க்கும் அமைதியானவருக்கும் கூட மெல்ல மெல்ல மனதில் இருக்கும் சாத்தான் விழித்தெழுந்து அந்த நல்லொழுக்கமுள்ள மனிதனையும் முழுமையாய் ஆட்கொள்கிறது...

ஒரு வதந்தி தொடர்ந்து பரப்பப்படும் போது, எதிர் தரப்பு அதை நம்ப தொடங்குகிறது... சம்மந்தப்பட்ட தரப்பு அதை பெருமையாகவோ, இழிவாகவோ நினைக்கிறது... பெருமையாக நினைக்கும் குழு, அதை சாதகமாக்கி மேலும் மேலும் அந்த தப்பை தொடர்ந்து செய்கிறது.. இழிவாக நினைக்கும் குழு மேலும் மேலும் இழிவு படுத்தப்படுவதாய் எண்ணம் வரும் போது பொங்கி எழுகிறது.....இந்த வதந்திகளால் பாதிக்கப்பட்டது... மீரான் பாய்க்கும், யூசுப் பாய்க்கும் சுந்தரம் செட்டியாருக்கும் நடேச வேளாளருக்கும் இருந்த அன்பால் பிணைக்கப்பட்ட நட்பு....

இந்த வதந்திகளால் ஆதாயம் அடைவது.... மதம் என்றும், ஜாதி என்றும், மதச்சாற்பற்றவன் என்றும், பகுத்தறிவாளன் என்றும் அவரவர் வசதிக்கு மக்களை தூண்டிவிட்ட அரசியல் வாதிகளும், அவர்களுக்கு பலமாய் நின்ற்கும் ஊடகங்களும்...

கல்வி அறிவு என்பது சிந்திக்க வைப்பதற்குத்தான்.. மாறாக கல்வி அறிவும், தகவல் தொழில்நுட்பமும் இளைஞர்கள் மனதில் ஜாதி வெறியையும், மத வெறியையும் தூண்டுவதற்குத்தான் பயன் பட்டுக்கொண்டிருகிறது....

படித்த இளைஞர்கள் எப்போது இந்த சூழ்ச்சி வலையின் பிடியில் இருந்து மீளப்போகிறார்கள்?????

திப்பு சுல்தான்




"எதிரி வீழ்ந்தான்.. இனி இந்தியா நம்முடையது" என்று கொண்டாடினான் ஆங்கிலேய ஜெனரல் ஹாரிஸ் 

"கிழக்கிந்திய கம்பெனிக்கு சிம்ம சொப்பனம்" என்று வர்ணித்தன ஆங்கில பத்திரிகைகள்..

"இவர் தலைமையில் சுதந்திரப்போர் நடந்திருந்தால் இந்தியா எப்போதோ சுதந்திரமடைந்திருக்கும்... நாமெல்லாம் போராட வேண்டி இருந்திருக்காது" என்று தன்னுடைய "யங் இந்தியா" என்ற பத்திரிகையில் குறிப்பிட்டார் காந்தியடிகள்...

"இந்தியாவின் முதல் பிரதமரான பண்டிட் ஜவஹர்லால் நேரு அவர்கள் தமது டிஸ்கவரி ஆஃப் இந்தியா என்ற நூலில் ”ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாகவும், பெரும் சவாலாகவும் இருந்தவர்கள் ஹைதர் அலியும், இவரும் (இதில் பெயரை குறிப்பிட்டிருக்கிறார்) . பிரிட்டீஷாருக்கு கடுமையான தோல்வியின் மூலம் வேதனைமிக்க அனுபவத்தை ஏற்படுத்தினார்கள். கிழக்கிந்திய கம்பெனியின் அதிகாரத்தை உடைத்தெறியும் அளவுக்கு அவர்கள் நெருங்கினார்கள்” எனக் குறிப்பிடுகிறார்"

பிரெஞ்சு மன்னன் பதினாறாம் லூயியுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு அவர்களுடன் இணைந்து 1794 ல் ஆங்கிலேயருக்கு எதிராக நடத்திய யுத்தத்தில் வென்று 4000 ஆங்கிலேய சிப்பாய்களை சிறை பிடித்து, பிறகு அவர்களை விடுவித்து ஆங்கிலேய அரசை அவமானப்படுத்துகிறார்.."

’30 நாட்கள் முற்றுகையிட்டும் எங்களால் அந்தக் கோட்டையையும், தீவையும் தூரத்திலிருந்துக் கொண்டு தரிசிக்கத்தான் முடிந்தது’. என்று குறிப்பிடுகிறான் ஆங்கிலேய தளபதி மன்றோ

குண்டடி பட்டு கோட்டை வாசலில் வீரர்களின் பிணங்களுக்கு நடுவே குற்றுயிராய் கிடந்த போது பாதுகாப்பாளன் வந்து "அரசே.. யாராவது ஒரு ஆங்கிலேய அதிகாரியை அழைத்து உதவி கோரட்டுமா.. சரணடைந்து விடலாமா " என்று கேட்ட போது ..."முட்டாளே... ஆடு போல 200 வருடம் வாழ்வதை காட்டிலும் 2 நாள் புலியாக வாழ்ந்து மடிவதுதான் வீரம்" என்று சொல்லி மரணத்தை தழுவியவர்...

மேற்கட்ட அத்துணை பெருமைக்கும் சொந்தக்காரர்.. மாவீரன் , மைசூர் புலி திப்பு சுல்தான்...

தன்னுடைய ஆளுகைக்குட்பட்ட பகுதியில் இஸ்லாமியர்களுக்கு ஷரியத் சட்டப்படியும், மற்றவர்களுக்கு பொது சட்டப்படியும் ஆட்சி நடத்தியவர்... ஹைதர் அலி- ஃபஹ்ருன்னிசா தம்பதியருக்கு பிறந்து மாவீரனாக வளர்க்கப்பட்ட திப்பு சுல்தான்...

ஆங்கிலேயர்களுடன் ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டு அடிமையாய் ஜீவித்த திருவிதாங்கூர் தர்மராஜா, ஹைதராபாத் நவாப், ஆற்காடு நவாப், தொண்டைமான், பாளையக்காரர்கள் ஆகியோரின் உதவியாலும், பணத்திற்கு விலை போன கூட இருந்த துரோகிகளாலும், தக்க சமையத்தில் நண்பர்களின் உதவி வந்தடையாததாலும் தானே தளபதியாய் நின்று போரிட்டு மரணத்தை தழுவியவர்...

இவரது மரணத்திற்கு பிறகு மைசூர் கோட்டைக்குள் புகுந்த ஆங்கிலேயர்கள் அங்கே இருந்த ஒரு புதிய பொருளை கண்டு ஆச்சர்யமடைந்து, அதனை கவர்ந்து சென்று ஆராய்ந்ததின் விளைவே இன்றைய நவீன ஏவுகணை தொழில் நுட்பம்... ஆம்.. இன்றைய ஏவுகணையின் முன்னோடி திப்பு சுல்தான்..!!

கமலா நேரு



வசதியான குடும்பத்தில் பிறந்து தன்னுடைய 17 வது வயதில், மனசு நிறைந்த கனவுகளுடன் இந்தியாவின் குறிப்பிடத்தகுந்த பணக்காரர்களுள் ஒருவரான , இந்திய அரசியலில் ஒரு முக்கிய சக்தியாக விளங்கிய , லண்டனில் பயின்றுவந்த ஒரு இளைஞனை மனம் புரிந்துகொண்டபோது வாழ்க்கை இவ்வளவு பெரிய போராட்டமாய் இருக்கும் என அவர் நினைக்கவே இல்லை...

ஒரு பெரிய குடும்பத்தின் மருமகளாக வாழ்வை துவங்கிய அவர்.. கணவரை பார்க்க வருபவர்கள், கணவரின் நண்பர்கள் என தேசபக்தர்களின் தொடர்புகள் கிடைக்கவும், கணவர் அடிக்கடி கைதாகி சிறைக்கு சென்று விடுவதாலும் தம்முடைய கவனத்தையும் தேச விடுதலை போராட்டத்தின் பால் திருப்பினார்... இதற்கிடையில் திருமணமான முதல் வருடத்திலேயே ஒரு பெண் குழந்தைக்கு தாயானார்... அடுத்த குழந்தை ஏழு வருட இடைவெளியில்... ஆண் குழந்தை.. துரதிஷ்டவசமாக அந்த ஆண் குழந்தை பிறந்த ஒரே வாரத்தில் இறந்துவிட... நெகிழ்ந்த மனதை கல்லாக்க தன்னுடைய முழு கவனத்தையும் சுதந்திர போராட்டத்தின் பக்கம் திருப்ப... கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்...

பிற்பாடு விடுதலையாகி காந்தியடிகளின் சபர்மதி ஆஸ்ரமத்தில் அன்னை கஸ்தூரிபாய் அவர்களுடன் இணைந்து ஆசிரம பணிகளை மேற்கொண்டார்... காசநோயால் பாதிக்கப்பட்டு இருந்தவர் நோய் முற்றி மேலும் பலவீனமடைய சுவிட்சர்லாந்து நாட்டில் சிகிச்சைக்காக சென்றார்.. சென்றவர் மீளவே இல்லை... தன்னுடைய 36 வது வயதில் மரணம் அவரை ஆட்கொண்டது...

அவர்...?? ஜவஹர்லால் நேருவின் மனைவி என்று மட்டுமே மக்களுக்கு அறிமுகமான கமலா நேரு..!!! 

பகத் சிங்




பகத் சிங் பத்தி பல வரலாறுகள் படிச்சிருப்போம்... லாலா லஜூபதி ராய் நடத்தின ஊர்வலத்துல பயங்கரமான வன்முறை நடத்தி , லஜூபதி ராய் மரணத்திற்கு காரணமான ஸ்காட் அப்படின்ற வெள்ளைகார கமாண்டர கொலை செய்ய திட்டம் போட்டாங்க பகத்சிங், ராஜகுரு, சுகதேவ்.. ஆகிய மூணு பேரும் ,,,

ஆனா துரதிஷ்டவசமா அந்த திட்டத்துல சறுக்கல் ஏற்பட்டு ஸ்காட்டுக்கு பதிலா சாண்டர்ஸ் அப்படின்ற உதவி கமாண்டர பகத் சிங் சுட்டு கொன்னுட்டார்...

அப்புறம் அவர கைதுபன்னி தூக்கு தண்டனை கொடுத்துட்டாங்க... அப்போ பகத் சிங் அப்பா வெள்ளைகார அரசாங்கத்துக்கு "என் பையன் தெரியாம பண்ணிட்டான்.. தப்புதான்.. மன்னிச்சுக்குங்க.... அவன் இனிமே இப்படி எந்த செயலும் செய்யாம, எந்த போராட்டத்துலயும் ஈடுபடாம நான் பார்த்துக்கிறேன்.. அவன் தூக்கு தண்டனைய ரத்து பண்ணிடுங்க"ன்னு ஒரு மன்னிப்பு கடிதம் எழுதிட்டார்...

இத கேள்விப்பட்ட பகத் சிங் தன்னோட அப்பாவுக்கு ஒரு கடிதம் எழுதுறார்... "உங்கள அப்பான்னு சொல்லிக்கவே வெட்கப்படுறேன்... உங்க ஒரு மகனோட உயிருக்காக நாட்டோட கவுரவத்த அடகு வச்சுட்டீங்களே.. இனி நான் உங்களுக்கு புள்ளையும் இல்ல.. நீங்க எனக்கு அப்பாவும் இல்ல.." அப்படின்னு எழுதினர்...

கடைசியா தூக்கு தண்டனை நிறைவேத்துற நாள்ல முகத்த மூட போனாங்க... அப்போ அதை தடுத்த பகத் சிங் , அவருக்கு தூக்கு தண்டனை கொடுத்து அதை நிறைவேத்த வந்திருந்த ஜட்ஜ பார்த்து சொன்னார்....
"உலகத்துலேயே பெரிய அதிஷ்டசாலி நீங்கதான்... கண்ண தொறந்துகிட்டே சாகப்போற ஒரு வீரன பார்க்கப்போற முதல் ஆள்..."

இதுல எல்லோருக்குமே ஒரு வருத்தமான விஷயம் என்னன்னா... பகத் சிங்க தூக்குல போட்டுக்குங்க.. ன்னு காந்தியடிகள் ஒப்புதல் கையெழுத்து போட்டதுதான்... (காந்தி - இரவின் ஒப்பந்தம்)