செவ்வாய், 28 ஜூலை, 2015

கிராம நீதிபதி...- திரு விஸ்வநாதன் அவர்கள்

சீவாடிக்கும் (ஒரு குளத்தின் பெயர்) , மெயின் ரோட்டுக்கும் நடுவுல ஒரு ரெண்டு கிலோமீட்டர் இருக்கும்... எடப்பட்ட எடமெல்லாம் வெவசாய நெலங்க..

கோட நாள்ல ஒன்னும் பெரச்சினை இருக்காது.. ஆனா மழ காலத்துல எல்லோரும் நெல்லு பயிர் வெவசாயம் செய்வாங்க.. ஒருத்தர் முன்னாடி நடுவார்.. ஒருத்தர் லேட்டா நடுவார்... அப்போ வெதைக்க போறதுக்கோ, நடவு நட போறதுக்கோ வெளஞ்சத அறுத்து கொண்டு வரவோ ரொம்ப கஷ்டம்...
சேறடிச்ச வயலுக்குள்ள மாடுங்க ரொம்ப கஷ்டப்படும்..





அப்போதான் அந்த பக்கம் இருக்க வயகாரங்க எல்லாம் ஒண்ணா பேசி பெரசரெண்டு (PRESIDENT - பஞ்சாயத்து தலைவர்) கிட்ட போய் சொன்னாங்க...

"அந்த பக்கம் புதுசா ஒரு ரோடு எடுக்கனுங்கய்யா... மழைகாலத்துல ரொம்ப கஷ்டமா இருக்கு... "

பெரசரண்டும் சரின்னு சொல்லிட்டாரு... எல்லோரும் கூடி எந்தப்பக்கம் புதுசா ரோடு எடுக்கலாம்னு முடிவு பண்ணி வேலைய ஆரம்பிச்சுட்டாங்க... சீவாடில ஆரம்பிச்சு வரப்புகள எல்லாம் தட்டி தட்டி ரோடா நெரவிகிட்டு போறாங்க...

எல்லா இடத்துலயும் ஒரு வில்லன் இருக்கணுமே... இங்கனயும் ஒருத்தர் இருந்தார்...

"அதெப்படிடா என்னோட வயல்ல நீங்க ரோடு போடுவீங்க... எனக்கு ரோடும் வேண்டாம்,.. ஒன்னும் வேண்டாம்... நீங்க ஒங்க சோலிய பாத்துகிட்டு போங்க.."ன்னு தாண்டி தலைகுப்புற குதிக்கிறார்...

பெரசரண்டு நிக்கும்போது மத்த ஆளுங்களுக்கு என்ன பேச்சு.. எல்லோரும் ஒருத்தர ஒருத்தர் பாத்துகிட்டு பேசாம நிக்கிறாங்க....

"சரிப்பா... ஒனக்கு ரோடு வேண்டாமா.. சரி... வேணும்னா மட்டும் வந்து சொல்லு... இப்போ இதுல ரோடு போட வேண்டாம்"ன்னு சொல்லிட்டு.. மத்தவங்கள பாத்து.... "நீங்க ஏம்பா நிக்கிறீங்க... இந்த வயல மட்டும் விட்டுட்டு அடுத்த வயல்ல இருந்து வேலைய ஆரம்பிங்க"ன்னுட்டு போய்ட்டார்...

இப்போ சீவாடில இருந்தும், மெயின் ரோட்டுல இருந்தும் ரோடு போட்டாச்சு.. விடமாட்டேன்னு சொன்னவரோட வயல் மட்டும் நடுவுல கெடக்கு... ஒருவாரம்.. பத்து நா ஆச்சு.. போற வர ஆளுங்க எல்லாம் விடமாட்டேன்னு சொன்னவற திட்ட ஆரம்பிச்சுட்டாங்க... ஊரு வாசாப்ப வாங்கினா அது தலைமொறைக்கும் பாதிக்குமில்லையா.....

வேற வழியே இல்லாம... விடமாட்டேன்னு சொன்னவர் பெரசரண்டு கிட்ட போய் .. "அய்யா.. தெரியாம செஞ்சுட்டேன்யா.. மன்னிச்சுக்குங்க... நீங்க சொல்லி ரொட்ட முழுசா போட சொல்லுங்கா.."ன்னு கதறிட்டார்...

அப்புறம் என்ன... ரோடு முழுசா ஆச்சு.. இப்போ அதுல தார் எல்லாம் போட்டு பெரிய ரோடா பெரசரண்டு பேரையும், இந்த கதையையும் சொல்லிகிட்டே கண்ணங்கரேர்னு படுத்துக்கெடக்கு....

எத்தன பஞ்சாயத்து.. எத்தன தீர்ப்பு.... இப்போ இதெல்லாம் கோர்ட்டுக்கு போனா மூணு தலமொற ஆனாலும் தீராது... இங்க அப்பீலும் இல்ல.. வாய்தாவும் இல்ல... அநியாயமும் இல்ல.. தீர்ப்புன்னா அது காலத்துக்கும் யாருக்கும் கெடுதல் இல்லாம நறுக்குன்னு சொல்லிடுவாரு... எழுத ஆரம்பிச்சா எத்தனையோ புத்தகம் எழுதலாம்....

அந்த பெரெசரெண்டு பேரு - அய்யா விஸ்வநாதன்..

அந்த ஊரு -காசாங்காடு (பட்டுக்கோட்டை-தஞ்சாவூர் மாவட்டம்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக