புதன், 7 செப்டம்பர், 2016

இன்னொருத்தன் பொழப்புல மண்ணள்ளி போடலாமா??




சினிமா விமர்சனம் எழுதும் என்னுடைய அன்பான நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்..
பணம் எத்தனை கோடிகள் புழங்குகிறதோ அத்தனை கோடி சென்டிமென்ட்களும் புழங்கும் ஒரு மாபெரும் கனவுத்தொழிற்சாலைதான் சினிமா என்பது. வருடத்திற்கு சுமார் முன்னூறு படங்களுக்கு பூஜை போடப்படுகிறதென்று வைத்துக்கொண்டோமானால் அதில் சுமார் இருநூறு படங்களே படப்பிடிப்பு வரை செல்கின்றன .. அந்த இருநூறில் கால்- அரை- முக்கால் வீதம் படப்பிடிப்பு முடிந்து பல்வேறு காரணங்களுக்காய் முடங்கிப்போபவை சுமார் நூறு படங்கள்..
படப்பிடிப்பு முழுவதும் முடிந்து வெளியட முடியாமல் முடங்குபவை சுமார் இருபத்தைந்து முதல் முப்பது படங்கள்..
ஆக முன்னூறு படங்கள் தொடங்கியதில் சுமார் எழுபது அல்லது அதற்கும் குறைவான படங்களே நமது பார்வைக்கு வருகிறது..

இந்த படங்களில் சம்பளம், கால்ஷீட் பிரச்சினைகளில் இருந்து தப்பிக்க புதுமுக நடிகர்கள்.. நடிகைகள்.. தொழில் நுட்ப கலைஞர்கள் ஆகியோர்களை வைத்து தொடங்கப்படும் படங்கள் தான் முடங்கிப்போவதில் முதலிடம்..
சுமார் பத்து முதல் இருபது ஆண்டு காலம் கூட போராடி ஒருவர் அவரின் கனவுகளை திரட்டி வெள்ளித்திரையில் கொண்டு வர அவர் படும் பாடு சொல்லி மாளாது.. எந்த காரணத்தால் ஒரு புதுமுகம் (அவர் திரைக்கு முன்னாலோ- பின்னிருந்தோ இயங்குபவராக இருக்கலாம்) அறிமுகமாக கூடிய திரைப்படம் வெளிவர முடியாமல் போனாலோ அல்லது வெளிவந்து தோல்வியை தழுவினாலோ முதலில் "ராசி இல்லாதவன்/ள்" என்று முத்திரை குத்தப்படுபவர்கள் இந்த புது முகங்களே...

இன்றைய தினம் காட்சி ஊடகங்களும், அச்சு ஊடகங்களும் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களிலிருந்து செய்திகளை சேகரிக்கும் அளவு சமூக வலைத்தளங்கள் மாபெரும் வளர்ச்சியடைந்திருக்கின்றன.. அந்த வளர்ச்சி பெற்ற வலைத்தளத்தில் பங்கெடுத்து நம்முடைய கருத்துக்களையும் நண்பர்கள்- நண்பர்களின் நண்பர்கள் என பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பை நாமும் பெற்றிருக்கிறோம்..
திரைப்படத்திற்கு மதிப்பெண் போட்டு ரேங்க் கொடுக்கும் ஊடகங்கள் எதோ ஒரு வருமானத்திற்காக இப்படி செய்கின்றன.. ஆனால் எந்த லாபமுமின்றி நம் மனதில் பட்டதை எல்லாம் இதில் பதிவு செய்கிறோம்..
அப்படி பதிவு செய்யும் விஷயங்களில் சினிமா விமர்சனமும் ஒன்று.

பல்லாயிரக்கணக்கானோரின் உழைப்பில் சில பல புது முகங்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் கோடிகள் கொட்டி எடுக்கப்படும் ஒரு படத்தை அது வெளி வந்த அன்றே பார்க்கும் நண்பர்கள் ( இதில் ஓசியில் ஆன் லைனில் பார்ப்பவர்களே அதிகம் ) படம்.. "மொக்கை" "குப்பை " என்றெல்லாம் பொத்தாம் பொதுவாக பதிவிடுகிறார்கள்..
சமூக வலைத்தளங்களின் வளர்ச்சி எப்படி பல்கி பெருகி சமூக தாக்கங்களை ஏற்படுத்துமென்பதை கண்கூடாக காண்பவர்கள் நாம்..

இதில் நம்முடைய ரசனையை வெளிப்படுத்தும் நோக்கமோ- நானெல்லாம் "உலக சினிமாவை அலசி ஆராய்ஞ்சவனாக்கும் " என்று சொல்லிக்கொள்ளும் அதி மேதாவித்தனமும் தான் இருக்கிறதே தவிர வேறொன்றும் இல்லை..
நம்முடைய இந்த அதிமேதாவித்தனம் எத்தனை பேருடைய எதிர்காலத்தில் நெருப்பு வைக்கும் தெரியுமா..??

என் அன்பு நண்பர்களே.. நீங்கள் திரைப்படம் பார்த்துவிட்டு உங்களுக்கு பிடித்திருக்குமெனில் அதனை பார்க்க பரிந்துரை செய்யுங்கள்.. உங்களுக்கு பிடிக்கவில்லை எனில் அதற்கென ஒரு ரசிக வட்டம் இருக்கும்.. அவர்கள் பார்த்து முடிவு செய்து கொள்ளட்டும் என விட்டு விடுங்கள்..
இன்னொருத்தன் சோத்துல மண்ணள்ளிப்போட்ற வேலைய நாம செய்யனுமா????
என்னமோ மனசுல பட்டுச்சு.. சொல்லிட்டேன்... அப்புறம் உங்க இஷ்டம்..!!!

முடிந்ததை சேமிக்கலாம்



எங்க வீட்ல அவரைக்கா கொடி நடுவாங்க... ரெண்டு மூணு முருங்கை மரம்,,, அப்புறம் மாமரம்... காய்க்கிற சீசன் வந்ததும் எல்லாமே நல்லா காய்க்கும்... அப்போ குழம்பு, கூட்டு, பொரியல் ன்னு எல்லா ஐட்டத்துலையும் ஒரு நாள் கூட விடாம அந்த காய்களை போட்டு செய்வாங்க....

நமக்கு அந்த காய்கள் மேல ஒரு வெறுப்பே வந்திடும்.... ஐயோ...... இந்த கொடிய/மரத்த வெட்டி போட்டுடலாமான்னு கூட ஆத்திரம் வரும்... ஆனா சீசன் முடிஞ்சதும் மேற்சொன்ன காய்கள் எதையும் நம்ம வீட்டு சமையல்ல கண்ணுல கூட பார்க்க முடியாது..... ஏதாவது கல்யாண வீட்டுலயோ- ஹோட்டல்லையோ சாப்பிட போகும் போது முருங்கைக்காய் சாம்பாரோ- மீன்குழம்புல மாங்காயோ தென்பட்டா ரொம்ப ரொம்ப விரும்பி சாப்பிடுவோம்...

வீட்ல இருக்கவங்கள சொல்லி குத்தமில்ல.. ஏன்னா விளையுறப்போ அறுவடை செய்து அப்பவே சமைக்கணும். இல்லன்னா வீணாத்தான் போகும்... அத சேமிக்க வசதி இல்ல நம்மகிட்ட....

அது மாதிரி தான் இப்போ பெய்யுற அடைமழையும்..... இந்தமழை ஏண்டா பெய்யுதுன்னு வெறுப்படைகிற அளவுக்கு பெய்யுது... ஆனா இந்த மழை நீர சேமிக்க வசதி இருக்கு.... தனி மனிதர்கள் ( குடும்பங்கள்) வீடுகள்ல மழை நீர் தொட்டி அமைச்சும் , அரசாங்கம் ஏரி- குளங்கள ஆழப்படுத்தியும் வச்சிருந்தா இந்தமழை நீரை சேமிச்சு, சீசன் முடிஞ்ச பிறகும் கூட நிதானமா அனுபவிச்சுக்கலாம்....

இந்த முறை மிஸ் பண்ணி இருந்தா கூட அடுத்த மழைக்காலத்துக்குள்ளயாச்சும் செய்வாங்களா????

கேள்வி:- ஆமா.. இதுக்கும்.. இந்த படத்துக்கும் என்ன சம்பந்தம்???

பதில் 1. ஒரு சம்மந்தமும் இல்லங்க..... நம்ம தொடர் வாசகர்கள் எவ்ளோ பெரிசா எழுதினாலும் நிதானமா படிப்பாங்க.. ஏன்னா அவங்க பெரும்பாலும் நமக்கு நண்பராகவோ, அண்ணன்- தம்பி- மாமன்- மச்சி- அக்கா- தங்கோ என அன்பு வளையத்துக்குள்ள அடைபட்டவங்களாகவோ இருப்பாங்க.. இல்லன்னா நம்ம சிந்தனைகள்/ எழுத்துக்கள்ள இருக்க நியாயத்தை உணர்ந்தவங்களா இருப்பாங்க... சோ.. அவங்களுக்காக இல்ல இது....... இதுல போட்டிருக்க படம்.. ஜஸ்ட் ஸ்க்ரோல் பண்ணி லைக் தட்டிகிட்டே போறவங்கள கொஞ்சம் இழுத்து நிறுத்த தான்...

பதில் 2. கஷாயம் கொடுக்கும் போது கூட கொஞ்சம் சர்க்கரை கொடுக்குறது இல்லையா.. அப்படி தான் இதுவும்...

பதில் 3. அனுஷ்கா போட்டோ போட காரணம் எல்லாம் தேவையா...

மாற்றத்திற்கான விதை



எல்லாவற்றையும் கண்மூடித்தனமாக எதிர்ப்பதென்பது இப்போது ஒரு வியாதியாகவே ஆகிவிட்டது.. இது அறியாமையோ / புகழ் தேடியோ / எதிர்த்தால் தான் நம்மையும் உணர்வாளர்கள் பட்டியலில் மற்றவர்கள் வைப்பார்கள் என்ற நம்பிக்கையோ காரணமாயிருக்கிறது..
அணு உலை முதல் அந்நிய முதலீடு வரை... பால்- பஸ் கட்டண உயர்வு முதல் பெட்ரோல் விலை உயர்வு வரை..எல்லாவற்றிலும் இதே அதிமேதாவித்தனம் தான் நிகழ்கிறது..
எந்த ஒரு விஷயமும் மாற்றங்களை சந்தித்தே வந்திருக்கிறது..உலகமயமாக்களில் அனைத்து நாடுகளுமே ஒரு குடையின் கீழ் வந்துவிட்ட படியால்.. உலகின் எந்த ஒரு மூலையில் நடக்கும் நிகழ்வுகளும் மற்ற நாடுகளின் மீது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியே தீரும். இதனை சமாளித்து நாமும் மற்ற நாட்டவரை போல் இருக்க வேண்டுமானால் சில பல மாற்றங்களை நாம் முன்னெடுத்தே ஆகவேண்டிய கட்டாயம் தவிர்க்க முடியாததாகி விடும்..
எதையும் நம்மால் தடுக்க முடியாது.. ஏனென்றால் உலகம் ஒருவருக்கொருவரை சார்ந்தே வாழவேண்டிய கட்டாயம்.. தடுக்கத்தான் முடியாதே தவிர அதனை முறைப்படுத்தலாம்.. அதற்கு நிலையான/ நாட்டு நலனை முன்னெடுக்க கூடிய ஸ்திரத்தன்மை உள்ள அரசும் ஆட்சியாளர்களும், அடுத்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற குறிக்கோள் தவிர்த்த மக்கள் நலனிலும் நாட்டின் வளர்ச்சியிலும் அக்கறையுடைய எதிர்கட்சிகளும் அமைய வேண்டும்..

அது இந்த நாட்டில் சாத்தியமா என்றால் ஒரு பெரிய கேள்விக்குறிதான் நம் கண் முன்னே நமக்கும் உயரமாய் வளைந்து நின்று நம்மை பார்த்து கேலியாய் சிரிக்கிறது..

ஏனென்றால் இன்றைய கிராம / நகர வார்டு உறுப்பினர்கள் கூட குற்றப்பின்னனியும் சுயநலமும் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள்.. இவர்கள் தான் நாளை நம்மை ஆளப்போகும் சட்டமன்ற/நாடாளுமன்ற உறுப்பினர்களாக, மந்திரிகளாக வலம் வரப்போகிறார்கள்..

இன்றைய மந்திரிகளின் , சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் பழைய வரலாற்றை தோண்டி எடுத்து துடைத்துப்பார்த்தால் ஒரு காலத்தில் லோக்கல் ரவுடியாக இருந்து பிறகு ஏதாவது ஒரு கட்சியில் சேர்ந்து செயலாளர், வட்ட செயலாளர், மாவட்ட செயலாளர் என படி படியாக வளர்ந்து, இதற்கு இடைப்பட்ட காலத்தில் அவர் ஒரு வார்டு மெம்பர் / ஊராட்சி / ஒன்றிய /நகராட்சி தலைவர்களாகவோ தேர்தலிலும் கலந்துகொண்டு அராஜகத்தின் மூலம் பதவிகளில் இருந்திருப்பார்கள்.. அவர்களின் அன்றைய அந்த பதவிக்கு ஒரு குற்ற பின்னணியும் / பணபலமும் காரணமாய் இருந்திருக்கும்.. அவர்கள் எல்லோரும் இப்போது விருட்சமாய் வளர்ந்து நிற்கிறார்கள்.. அவர்களை அவ்வளவு எளிதில் அழித்து விட முடியாது...

ஆனால் இப்போது முளைக்க ஆரம்பித்திருக்கும் களைகளை மிக எளிதாய் பிடுங்கலாம்.. ஆம்.. உங்கள் ஊரில் வார்டு மெம்பருக்கோ / ஊராட்சி- நகராட்சி தலைவருக்கோ போட்டியிடுபவர் நிச்சயம் உங்களுக்கு நேரடியாய் அறிமுகமானவராய் தான் இருப்பார்.. இவரின் பூர்வீகம், தகுதி திறமை நிச்சயமாய் உங்களுக்கு தெரிந்திருக்கும்.. குற்றப்பின்னணி கொண்டவரை புறக்கணியுங்கள்.. இன்றைய உங்கள் புறக்கணிப்பின் பயன் இப்போதே தெரியாது. அதற்கு இருபது வருடங்களுக்கு மேல் ஆகலாம்... ஆகட்டுமே..

மரத்த வச்சவன்தான் பழம் சாப்பிட்றானா என்ன??

அபி கேள்வி



"அப்பா... என்னப்பா இது...."
"இவங்க எல்லாம் ஏஞ்சல்ஸ் டா...."
"ஏஞ்சல்ஸ்ன்னா யாருப்பா.."
"அவங்க எல்லாம் தேவதைங்கடா .. அவங்க மானத்துல (வானத்துல) இருந்து வருவாங்கடா...."
"எப்படி வருவாங்க....?"
"பறந்து வருவாங்க...."
"எதுக்கு.."
"நம்மளை எல்லாம் பார்த்துட்டு போக..."

பக்ரீத் விடுமுறை தினத்தில் கத்தார் - ஈரானி மார்கெட் பகுதியில் நடந்த கலை நிகழ்ச்சிகளை பார்க்க அபிநயாவை அழைத்து சென்ற போது , அங்கே தேவதை வேடத்தில் நான்கைந்து பெண்கள் அங்குமிங்குமாக உலாவ... அப்போது எனக்கும் அபிக்குமிடையே நடந்த உரையாடல் தான் மேற்சொன்னது...

அப்போது அவளுக்கு என்ன புரிந்ததோ தெரியவில்லை.... அமைதியாகி விட்டாள் ..

இதற்கு பிறகு ஒரு வாரம் கழித்து நேற்று, மங்கல்யான் செவ்வாய் கிரஹத்தின் நிலாவை படம் பிடித்து அனுப்பிய செய்தியை தொலைக்காட்சியில் பார்க்க நேர்ந்தது....

"மங்கல்யான்னா என்னப்பா..."
"அது ஒரு செயற்கை கோள்டா .. மேல மானத்துல ( வானத்துல) போயிருக்கு...."
"எப்படி மானத்துக்கு போச்சு..?"
"அது ராக்கெட்ல போச்சுடா...."
"ராக்கெட்னா என்னப்பா....?"
"நீ பிளேன்ல வந்த இல்ல.... அது மாதிரி தான் இதுவும்...."
"அப்போ ராக்கெட்ல யாரு போவாங்க...."
"அதுல யாரும் போக மாட்டாங்க... வெறும் மெஷின் மட்டும் தான் போகும்...."
"அப்படின்னா அந்த ஏஞ்சல்ஸ்ஸ அதுல போக சொல்லலாம்ல....?? அவங்களும் வானத்துக்கு தான போகணும்...??"

இப்போது எனக்கு எதுவுமே புரியவில்லை.... அமைதியாகிவிட்டேன்...!!!

உறவை பேணுங்கள்



"அடக்கம் செய்ய வழி இல்லாமல் மகனின் உடலை தானமாக கொடுத்த பெண்"

நண்பர் ஒருவர் இந்த பத்திரிகை செய்தியை பதிந்து "மனிதம் செத்து விட்டதா...?" என்று ஒரு நெருப்புக்கேள்வியை வீசி இருந்தார்... தகவலை மேலோட்டமாக பார்த்துவிட்டு "வருந்த தக்க நிகழ்வு" என்று அந்நேரத்தில் பின்னூட்டமிட்டு நகர்ந்து விட்டாலும் அந்த கேள்வி மனதில் ஆழமாய் தைத்து ஊவாமுளாய் உறுத்திக்கொண்டே இருந்தது..

நிஜமாகவே மனிதம் செத்து விட்டதா???அப்படியானால்..... இரத்தம் வேண்டிய தகவல்கள் பதிந்த உடன் ஓடிச்சென்று உதவுகிறார்களே.... கண் தானம்- உடலுறுப்பு தானம் செய்கிறார்களே....( உடலுறுப்பு தானத்தில் நடக்கும் வஞ்சகம் பற்றி நாம் ஏற்கெனவே பதிந்திருக்கிறோம்) எத்தனையோ பேர் ஏமாற்றுவது தெரிந்தும் கூட மருத்துவ / கல்வி உதவி என்றால் கையில் கிடைத்த பணத்தை அனுப்புகிறார்களே....

அப்புறம் எப்படி மனிதம் மரித்ததாய் ஆகும்??? என்னுள் சில கேள்விகள் எழ... அந்த தகவலை மீண்டும் தேடி பிடித்து முழுதாய் படித்தேன்... .அட.... இயல்பான மனிதனுக்குள் இருக்கும் சாதாரண இரக்க உணர்ச்சி தான் அந்த தகவலுக்கு வருந்த வைத்திருக்கிறது..... சற்றே உள் நோக்கி கவனித்து பார்த்தால் மற்ற சில கேள்விகள் எழுகிறது...

அந்த பெண்ணால் பணம் சேர்க்க முடியாமல் போயிருக்கலாம்... ஆனால் இறந்த மகனின் உடலை தூக்கிப்போட நான்கு மனிதர்களை கூடவா சேர்த்திருக்க முடியாது ???

இந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கும் வனிதா என்ற அந்த பெண்ணின் கணவர், அவர்களின் குழந்தைக்கு (தற்போது இறந்துவிட்ட) 4 வயதாக இருக்கும் போதே அவர்களை விட்டு பிரிந்து சென்றிருக்கிறார்... உறவினர்கள் யாரும் இவருடன் சேர வில்லை.... அக்கம் பக்கம் குடியிருந்தவர்கள் கூட இவருடன் சேர வில்லை எனில்... அந்த பெண்ணின் குண நலன்களை நம்மால் உணர முடிகிறது தானே????

இது ஒரு எச்சரிக்கை மணி....

நம்மோடு இருப்பவர்களை புறக்கணிப்பதோ... அவர்களுடன் ஒட்டாமல் துண்டித்துக்கொள்வதோ நம்மை எப்படி இந்த உலகத்தில் தனிமைப்படுத்தி தண்டிக்கும் என்பதற்கு இது ஒரு உதாரணம்... அக்கம் பக்கம் இருக்கும் நண்பர்களை- உறவினர்களை புறக்கணித்து உலகின் பல்வேறு பகுதிகளில் சிதறி க்கிடப்பவர்களை நண்பனாக வரித்து அவர்களுடன் மட்டுமே பொழுதை போக்காமல் அக்கம் பக்கத்தவருடன்,உறவினர்களுடன் இணைந்திருக்க முயலுங்கள்... காசு பணம் இல்லா விட்டாலும் தூக்கி போட நாலு பேர் வேண்டுமல்லவா?????

இந்த புத்திசாலித்தனம் உங்கள...



"சுதர்சன் கெமிக்கல்ஸ் " அப்படின்ற ஒரு தனியார் சுதேசி கம்பெனில மார்க்கெட்டிங் மேனேஜரா வேலை பண்ணிகிட்டிருந்த நேரம்... ஹா ஹா ஹா... இத படிச்ச உடனே உங்க முகத்துல லேசா ஒரு புன்முறுவலும்... கூடவே மனசுக்குள்ள.. "என்னமா புளுகுறான் பாரு..". அப்படின்ற நினைப்பும் வருமே.... மன்னிக்கணும்.. பழக்கதோஷம்.... பொண்ணு கொடுக்க மாட்டாங்கன்னு கல்யாணத்துக்கு முன்னாடி எல்லா இடத்துலயும் பீலா விடற மாதிரி இங்கயும் விட்டுட்டேன்.... சேல்ஸ் ஆபீசரா வேலை பண்ண நேரம்... ( அட... நம்புங்கப்பா.. இது நிஜம்) நமக்கு காஞ்சிபுரம் மாவட்ட சேல்ஸ் பார்க்கிற வேலை....

நம்ம டீலருங்க எல்லோரும் ரொம்ப ரொம்ப நல்லவங்க... போன்ல பேசினாலே ஆர்டர் அனுப்பிடுவாங்க... பேமேண்டும் கரெக்டா கொடுத்திடுவாங்க.... அதனால பிரச்சினை இல்லாம பொழப்பு ஓடிகிட்டிருந்துச்சு.... அந்த கம்பெனியோட தமிழ்நாடு தலைமை அலுவலகத்துல இருக்க மேனேஜருக்கு டெய்லி எந்த ஏரியால நாம குப்பை கொட்றோம்னு ரிப்போர்ட் கொடுக்கணும்... மொபைல் போன் ல இருந்து டெய்லி அவருக்கு கால் பண்றது... நான் மதுராந்தகத்துல இருக்கேன்.. செய்யூர்ல இருக்கேன்.. வந்தவாசில இருக்கேன்னு பொய்ய சொல்லிட்டு காஞ்சிபுரத்துல வீட்டுல படுத்து தூங்குறது.... இப்படியே நம்ம பொழப்பு நல்லா போச்சு.... ஒரு நாள் எங்க பாஸுக்கு நம்ம மேல சந்தேகம் வந்துடுச்சு... இந்த பய மெய்யாலுமே அங்க இருக்கானா.. இல்ல.. பொய் சொல்றானான்னு... திடீர்னு ஒரு ரூலு போட்டார்.... அதாவது,... "நீ எந்த ஏரியால இருக்கியோ.. அங்க இருந்து லேண்ட் லைன் ல கால் பண்ணு."ன்னு.... அந்த ஆளோட ஐடியா என்னன்னா.... செங்கல்பட்டுல இருக்கேன்னு சொன்னா.. லேன்ட் லைன் ல கால் பண்ணினா STD கோடு வரும்... பையன் நிஜமாவே ஏரியால தான் இருக்கான்னு கன்பார்ம் பண்ணிக்கலாம்ன்னு...

யோவ்.. போயா.... நீ கொடுக்கிற சம்பளத்துக்கு பெட்ரோல் விக்கிற விலைல நிஜமாவே நான் எல்லா ஏரியாவுக்கும் போய் ஆர்டர் எடுத்தா வெளங்கிடும் ன்னு மனசுக்குள்ள நினைச்சுகிட்டே.... ஒரு திட்டம் போட்டேன்.... அதாவது.. செங்கல் பட்டுக்கு போறேன்னு சொல்ற அன்னிக்கு காஞ்சிபுரத்துல இருந்து பைக் ல செங்கல்பட்டு கிளம்புவேன்.... வாலாஜா பாத் தாண்டி அப்புறம் வர ஒவ்வொரு இடத்துலயும் இருக்க STD பூத் ல இருந்து என்னோட மொபைல் க்கு கால் பண்ணி பார்ப்பேன்.. எந்த இடத்துல கால் பண்றப்போ STD கோடு மாறுதோ.. அதுதான் நம்ம வொர்க் பாயின்ட்,, இப்படி எல்லா இடத்துக்கும் செட் பண்ணிகிட்டேன்... அதுக்கப்புறம் நான் எந்த ஏரியாவுக்கு போறேன்னு சொல்றேனோ.. அந்த ஏரியாவோட STD கோடு எந்த இடத்துல ஆரம்பிக்குதோ அந்த இடத்துல இருந்து அவருக்கு ஒரு போன் பண்ணி... "அய்யா.. நான் இன்ன மாதிரி இந்த இடத்துல இருக்கேன்"ன்னு சொல்லிட்டு நேரா கிளம்பி வீட்டுக்கு வந்துடுவேன்... அதுக்கப்புறம் மறுநாள் தான் வேலை....

நியாயமா இந்த புத்திசாலித்தனத்துக்கு நான் எங்கயோ போயிருந்திருக்கணும்.... ஆனா போகல..... இங்கயே தான் இருக்கேன்.. ஏன்னா.. உங்கள எல்லாம் விட்டு போக மனசு வரல....!!!

கேள்விக்கேற்ற பதில்



திருவாவடுதுறை ஆதீனத்தின் மடாதிபதி ஒரு நாள் மடத்தின் கணக்குகளை பார்த்துக்கொண்டு இருந்தாராம்... அப்போது அங்கிருந்த கணக்காளர் மிகவும் நேர்மையானவர்.... ( அப்படியானால் இப்போது இருப்பவர் நேர்மையற்றவரா என்று கேட்க கூடாது... அது பற்றி நமக்கு தெரியாது)

கணக்குகளை பார்த்து முடித்த மடாதிபதி கடைசியாக சொன்னாராம்... "இந்த கணக்குகளில் தவறு இருக்கிறது.... "

மிகவும் நேர்மையாளரான கணக்காளர் பதறிப்போனாராம்.... மடாதிபதியே தம்மை சந்தேகப்படிகிறாரே.. சிவ சிவா... என் நேர்மைக்கு என்ன சோதனை என்று மருவியபடியே... "என்ன தவறு சுவாமி.." என்று நடுக்கத்துடன் கேட்டாராம்...

மடாதிபதி " கடந்த ஒரு வருடத்தில் மடத்தில் விளக்கு எரிப்பதற்காக இத்தனை லிட்டர் எண்ணெய் வாங்கி இருப்பதாக எழுதி இருக்கிறீர்கள்... ஆனால் ஒரு இடத்தில் கூட தீப்பெட்டி வாங்கியதாக எழுத வில்லையே...."

அதற்கு அந்த கணக்காளர் சொன்னாராம்... சுவாமி... நமது மடத்தில் தீபங்கள் அணைவதே இல்லை.... திரி கருகிவிட்டாள் வேறு திரி போட்டு வேறொரு விளக்கின் நெருப்பில் இருந்து பற்றவைத்துக்கொள்வோம்... அதனால் தீப்பெட்டி வாங்க வேண்டிய அவசியம் இல்லை..."

ஒரு லாஜிக்கான கேள்வி... அதற்கு தகுந்த பதில்....

புகைப்படம்:- திருவாவடுதுறை ஆதீன மடம் - இணையத்தில் இருந்து ..

கொடும்பாவி...



சோறு படைத்த சோழநாட்டோட கடைமடை பகுதி எங்க பூர்வீகம்... மண்ணையும் மழையையும் சார்ந்து வாழற மருத நிலத்துக்கு சொந்தக்காரங்க நாங்க.... காவிரித்தாயோட மார்ல சுரந்து வர பால முன்னாடி இருக்க குழந்தைங்க எல்லாம் உறிஞ்சி குடிச்சுட்டு விட்டப்புறம் மிச்சமிருந்தாதான் எங்களுக்கு கிடைக்கும்... 

எங்க விவசாயத்துக்கு முக்கியமான நீராதாரம் மழையும்.. அப்படி பெயர மழைல நிறைஞ்சு கெடக்கும் ஏரி குளங்களும் , வற்றாமல் சுரக்கும் கேணிகளும் தான்...

ஐப்பசி மாசம் மின்னல் வெட்டி, இடியோட பொனுபொனுன்னு தூற ஆரம்பிச்சு.. கொஞ்சம் கொஞ்சமா வலுக்கும் மழை.... ஐப்பசி முடிஞ்சு கார்த்திகை முச்சூடும் அடை மழையா பெய்யும்.... இந்த சுழற்சி வருஷா வருஷம் நடக்குறது தான.... பருவகால மாற்றத்துல எல்லா ஊர்லயும் இப்படித்தான நடக்கும்... ?? ஆமாம்.. நீங்க .சொல்றதும் சரிதான்....

இந்த சுழற்சி எப்போதும் போல இந்த கட்டுரைக்கு வேலையே இல்லாம .போயிருக்கும்..

திடீர்னு ஏதாவது ஒரு வருஷ காலத்துக்கு சுத்தமா மழையே பெய்யாது... வறட்சி தாண்டவமாடும்.. ஏரி குளமெல்லாம் வறண்டு போய் பாளம் பாளமா பொருக்கு வெடிச்சு கெடக்கும்... மாடு கண்ணுகளுக்கு குடிக்க தண்ணி கெடைக்காது... கேணில எல்லாம் தண்ணி வத்தி போய்டும்... மர மட்ட எல்லாம் காஞ்சு சருவா தொங்கும்... அனல்காத்தா அடிக்கும்.......

அந்த மாதிரி நேரத்துல எங்க ஊரு பக்கம் , ஊருல இருக்க முச்சந்தில வைக்கோல் பிரிய சுத்தி அதுல , களிமண்ணை பூசி ஒரு ஆள் மாதிரி செஞ்சு படுக்க வச்சிருப்பாங்க...

இதுதான் வருண பகவான வம்புக்கிழுக்கிற வேலை...

எங்கூரு நம்பிக்கை படி அது வருணபகவானோட பொணம்.... வருண பகவான் செத்து போயிட்டார்.. அதனால தான் மழ தண்ணி இல்லாம போச்சுன்னு ஒரு மாயையை ஏற்படுத்துறது... எங்கூர்ல இருக்க எல்லோரும் ராத்திரி சாப்பாட்ட ஏழு எட்டு மணிக்கெல்லாம் முடிச்சுட்டு, அந்த பொணம் கிடக்குற இடத்துக்கு வந்திடுவாங்க.... வந்த ஆம்பளைங்க எல்லாம் ஒரு பக்கமா உக்காந்து ஏதாவது கதை பேசுவாங்க.... பொம்பளைங்க எல்லாம் அந்த களிமண் பொணத்த சுத்தி உக்கார்ந்து ஒப்பாரி வைப்பாங்க....

நெஞ்சுல அடிச்சுகிட்டு சுத்தி சுத்தி அழுவாங்க....

ஏ.... மானத்து ராசாவே....
மழபேயும் மந்திரியே....
கொட்டந்தரையில.....
நா.. கோலத்த போட்டுவச்சேன்....
என்கோலம் அழியலையே...
ஒரு கொள்ள மழ பேயலையே....

இப்படியா அடுத்தடுத்த பல்லவியோட நீளும் அந்த ஒப்பாரி பாட்டு.... அந்த ஒப்பாரில ஒரு ஆத்மார்த்தம் இருக்கும்.. தார தாரயா கண்ணீரு பெருக பெருக அழுது ஒப்பாரி வைப்பாங்க.... அப்படி அங்க அழும்போது, எங்க அம்மா அழுவுதேன்னு நானும் சேர்ந்து அழுத கதையெல்லாம் கூட உண்டு.... சரி அத விடுங்க....

இப்படி ஒரு வாரம் ஒப்பாரி வச்சு அழுவாங்க.... ஏழாம் நாள் ராத்திரி அழுது, ஊரு ஒறவு மொறைல இருக்க மாமன் மச்சினன் எல்லாம் சம்மந்த கொட்டு கொட்டிகிட்டு சேலை, நெல்லு எல்லாம் கொண்டு வந்து போடுவாங்க.... எட்டாம் நாள் காலைல அந்த வருண பகவானோட பொணத்த ( கொடும்பாவிய) இழுத்து கொண்டு போய் வறண்டு கெடக்குற ஏரில போட்டுட்டு வந்திடுவோம்....சொன்னா நம்ப மாட்டீங்க... அதிக பட்சம், அழுவ ஆரம்பிச்ச நாலாம் நாளே மழை வந்துடும்... தவறி போனா... ஏரில கொண்டு போய் போட்டுட்டு வந்தன்னிக்கு ராத்திரி மழை பின்னி எடுக்கும்.. கொட்டோ கொட்டுன்னு கொட்டி தீத்துடும்...

அதாவது.." நான் இன்னும் செத்துப்போகல....உயிரோடதான்இருக்கேன்.. இது என்னோட பொணம் இல்ல.." னு வருண பகவானே மழையா இறங்கி வந்து , .. அந்த பொம்மைய (கொடும்பாவிய) கரைச்சு விட்டுடுவாராம்.....

வானம்பாத்து விவசாயம் பண்ணி உலகத்துக்கே சோறு போடுற விவசாயிங்களோட நம்பிக்கை அந்த கொடும்பாவி.... இப்போ மழையும் இல்ல.. ஏரியும் இல்லாம போச்சு.... விவசாயமே இல்லாம போச்சே...நாங்க எங்க இருந்து வருண பகவான வம்புக்கு இழுக்க???

வருணனையே சீண்டிப்பாத்த எங்க நம்பிக்கைக்கு இப்போ வேலையிலாம போயி, நாங்க வேணாம்னு விட்டுட்டோம்.....இப்போ உள்ளவிங்க தனக்கு புடிக்காத கட்சிக்காரங்களையும் ஆட்சியாளர்களையும் அவமானப்படுத்த கொடும்பாவி கொளுத்துறாங்க....

புகைப்படம் - வழக்கம் போல இணையத்தில் இருந்து

சதுரங்க ஆட்டை...



நம்மூர்ல இருக்க அம்மா- அக்கா- அத்தை- அத்தாச்சிங்க எல்லாம் நம்மள "அவன் ஒரு முட்டாப்பய... பேச்சு மட்டும் உலகமே தெரிஞ்ச மாதிரி பேசுவான்... ஆனா ஒரு மண்ணும் இருக்காது... சும்மா வாய்ல தான் பிரியாணி போடுவான்... " அப்படின்னு புகழ்றாங்களாம் ...

இப்போ ஒரு சுவாரஸ்யம் வந்திருக்குமே.. கொஞ்சம் பெரிய பதிவுதான்.. இதே சுவாரஸ்யத்தோட தொடர்ந்து படிங்க...

கிராமங்கள்ல சீட்டுக்காரங்கன்னு ஒரு குரூப்பு வாடகை சைக்கிள்லையோ , டி வி எஸ் எக்செல்லையோ சுத்திகிட்டு திரிவாய்ங்க... தவணை முறைல கட்டில், பீரோ, காத்தாடி, நாற்காலி, மேஜை, ஃபிரிட்ஜ் எல்லாம் கொடுப்பாங்க...

வாரம் ஒரு முறை வசூலுக்கு வருவாங்க... நம்ம மக்கள் நூறுநாள் வேலைல மிச்சம் பண்ண காசுலையோ- புருஷன் பாக்கெட்ல ஆட்டைய போட்ட காசுலையோ ( இவனுக்கு எங்கள சீண்டலன்னா பொழுது போகாது ..# மைன்ட் வாய்ஸ் படிச்சுட்டேன் அக்காக்களே ) அம்பதோ- நூறோ கட்டுவாங்க...

பொருளோட மதிப்புல பாதி அளவு கட்டினதும் பொருளை கொண்டு வந்து கொடுப்பாங்க... ஒரு டெம்போவுலையோ, குட்டியானைலையோ கிரைண்டர், பீரோ, பிளாஸ்டிக் நாற்காலி எல்லாம் எடுத்து போட்டுக்கிட்டு அவங்க வசூல் பண்ற எல்லா ஊருக்குள்ளயும் வலம் வருவாங்க... இதுவும் ஒரு விளம்பர தந்திரம் தான் ஒவ்வொரு ஊருக்கும் ஒரு மூணு பேருக்கோ, நாலு பேருக்கோ பொருளை கொடுப்பாங்க...இதுதான் தூண்டில்ல புழு கோக்குற தந்திரம்...

அட... அவங்க ஏமாத்த மாட்டாங்கப்பா.... கரெக்டா கொடுக்கிறாங்கலாம்னு செய்தி காட்டு தீ போல பரவும்... இதுல முக்கியமான விஷயம் என்னன்னா.... முதல்ல பணம் கட்டி பொருள் வாங்கினவங்க எல்லாம் வசதிக்காரங்களா இருப்பாங்க... அவங்களுக்கு ஒரு நாற்காலியோ, ஒரு ஸ்டீல் பீரோவோ கொண்டு போய் கரெக்டா டெலிவரி கொடுத்திடுவாங்க....

"அதோ... அந்த முக்குல இருக்குள்ள பச்ச கலர் மாடி வீடு... அவங்க வீட்ல இப்போ தான் அக்கா ஒரு பீரோ கொடுத்துட்டு வரோம்... வேணும்னா கேட்டு பாருங்க..." என்று அந்த மாடி வீட்டுக்காரரையும் துணைக்கழைத்து கொள்வார்கள்...

அப்புறம் என்ன... அவங்க வாங்கிட்டாங்க... அப்படின்னு ஒரு எண்ணம் மண்டைக்குள்ள குடையும்.. நாமளும் வாங்கனும்னு ஒரு ஆர்வம் கிளம்பும்... அப்படின்னு ஊரே திரண்டு பணம் கட்டும்.. ஒரு குறிப்பிட்ட தொகை வசூல் ஆகற வரைக்கும் தான் இவங்க வாரம் வாரம் வருவாங்க.. இந்த டார்கெட் ரீச் ஆக சிலருக்கு ஆறுமாசமோ.. சிலருக்கு ஒரு வருஷமோ.. சில கம்பெனிக்கு நாலஞ்சு வருஷமோ கூட ஆகும்... ஆனா ஓடு மீன் ஓட உறுமீன் வரும் வரையில் அந்த கொக்கு காத்திருக்கும்...

அப்புறம் சொய்ங் ன்னு பறந்து போய்டும்.. கடை இருந்ததுக்கான தடயமே இருக்காது..... 

நான் ஊர்ல இருந்தப்போ ராதா அத்தான் டீக்கடைல உட்கார்ந்திருந்தேன்... நம்மள எப்படித்தான் கரெக்டா கண்டு பிடிக்கிறாய்ங்களோ தெரியல... நம்மகிட்ட வந்து ஒரு ஆள் இந்த மாதிரி விஷயம் னு சொன்னார்.... நமக்கு இந்த மாதிரி சமாச்சாரம் எல்லாம் அரசல் புரசலா காதுல விழுந்திருந்ததால.. ரொம்ப கெட்டிக்காரத்தனமா..... "எனக்கு ஒரு ஃபிரிட்ஜ் வேணும்... எவ்ளோ அமவுண்ட்ட சொல்லுங்க.. அதுல பாதிய நான் இப்போவே கட்டிட்டு பொருள எடுத்துக்கிறேன்" அப்படின்னு சொன்னேன்...

"ஓ.. தாராளமா சார்.... எல்லா பிராண்டும் இருக்கு.. சாம்சங், எல் ஜி, வேர்ல்பூல்... எது வேணுமோ எடுத்துக்குங்க ...அடுத்த திங்கக்கிழமை வந்து எடுத்துக்குங்க.. ஆனா இப்போ நீங்க நூறு ரூபா கட்டி உங்க பெற ரிஜிஸ்டர் பண்ணிக்குங்க சார்..."ன்னு ஒரு வாரம் அப்புறம் வர போற திங்கக் கிழமையை குறிப்பிட்டான் அந்த ஆள்...

நான் ஏன் அப்படி கேட்டேன்??? அவன் ஏன் அப்படி சொன்னான்...???

"எப்படியும் இவனுங்க ஏமாத்திட்டு ஓடிடுவானுங்க,... முதல்ல பாதி பணம் கட்டி பொருள கைப்பத்திட்டோம்னா.... தொடர்ந்து வந்தா மிச்ச பணத்தை கட்டுவோம்... ஒருவேளை ஓடிட்டான்னா நமக்கு பொருள் வந்திடுச்சு.... மிச்ச பணத்தை வசூல் பண்ண வரமாட்டான்.. நமக்கு மிச்சம்..." # இது என்னோட யோசனை...

"அட பக்கி பயலே.... நாங்க எம்புட்டு பெரிய களவானிப்பயலுங்கள எல்லாம் பார்த்தவிங்க.. நீ என்னடா பிஸ்கோத்து..." அப்படின்னு மனசுக்குள்ள சொல்லிட்ட அந்த ஆள் என் கிட்ட நூறு ரூபா வாங்கிகிட்டு, அவனோட ரசீது புத்தகத்துல தெளிவா என்னோட பேர எழுதி கையெழுத்தும் வாங்கி கிட்டான்... ஆனா அத காட்டி காட்டி... "நம்ம செந்திலண்ணன் இல்ல.... வெளிநாட்டுல இருந்து வந்திருக்காருல்லம்மா.... அவரு கூட கட்டி இருக்கார் பாருங்க..."ன்னு சொல்லி சொல்லி ஊரெல்லாம் வசூல் பண்ணிட்டான்...

"அந்த தம்பி ரொம்ப வெவரமா பேசும்.... அந்த தம்பியே பணம் கட்டி இருக்குனா நாமளும் கட்டலாம்"ன்னு ஊருல இருக்க அம்மாங்க, அக்காங்க, அத்தாச்சிங்க, அத்தைங்க எல்லாம் கடுகு டப்பா, மிளகு டப்பால கிடந்த நூறு அம்பது எல்லாம் கொண்டு வந்து கட்டிட்டாங்க....

அவன் குறிப்பிட்ட திங்கக்கிழமையும் வந்துது... நானும் கிளம்பி அவன் சொன்ன இடத்துக்கு போனேன்... கடை புதுசா செட்டப் பண்ணி இருந்தான்... நமக்கு நம்ம எண்ணம் உறுதியாயிடுச்சு... இவன் எப்படியும் ஓடிருவான்.. நாம வாங்க போற பிரிட்ஜ்க்கு கட்டப்போற தவணைல 1000 ரூபா மிச்சம் நின்னாலும் நமக்கு ஆதாயம் தான்...

(இதுவரைக்கும் செந்தில் கெட்டிக்காரத்தனமா தான யோசிச்சு இருக்கான்.. இவனை ஏன் ஊர்ல இருக்க பொம்பளைங்க திட்டனும்...??? கேள்வி வருது தான... )

நான் அவன் கடைக்கு போனப்போ என்கிட்ட வசூல் பண்ணவன் இல்ல.... நான் சீட்ட காட்டி விஷயத்த கேட்டப்போ... அங்க இருந்த ஆள் சொன்னான்... "ஆமா சார்.. இது நம்ம கடைதான்.. அவர் நம்ம ஏஜென்ட் தான்... இருங்க ஹெட் ஆபீஸ்ல கேக்கிறேன்... " அப்படின்னு சொல்லிட்டு எங்கயோ ஃபோன் பண்ணான்... அப்புறம்.." சார்... இப்போதைக்கு சின்ன சின்ன பொருள் மட்டும் தான் வந்திருக்கு... டி வி, வாஷிங் மெஷின், ஃபிரிட்ஜ் எல்லாம் அடுத்த வாரம் தான் வருது... நீங்க வேணும்னா இப்போ பணம் கட்டிட்டு போங்க... பொருள் வந்ததும் அனுப்பிட்றோம்"ன்னான்..

அட.... இவன் நமக்கு அல்வா கொடுக்க ப்ளான் பண்றான்னு, எனக்கு இபோ கொடுக்க முடியும்னா கொடு.. நீ கேக்கிற தொகைய நான் கற்றேன்.. இல்லன்னா என் நூறு ரூபாய திரும்ப கொடு.." அப்படின்னு கேட்டேன்.. எதுவும் பேசாம அந்த நூறு ரூபாய கொடுத்துட்டான்...

"அந்த மாடி வீட்டுக்காரங்க பீரோ வாங்கினாங்க"ன்னு சொல்லி ஆள் செர்த்தப்போ அட்லீஸ்ட் அந்த மாடி வீட்டுக்காரங்களுக்கு மார்கெட் விலையை விட நூறு இருநூறு கம்மியா ஒரு பொருள் கிடைச்சுது.. ஆனா நம்ம பேர அவன் இலவசமாவே பயன் படுத்தி அவன் டார்கெட்ட ரீச் பண்ணிட்டான்....

அட.. ஆமாப்பா .. ஆமா..... ஒரு ராத்திரியோட ராத்திரியா எல்லாத்தையும் அள்ளி வண்டில போட்டுக்கிட்டு ஓடிட்டாய்ங்களாம்.. கடை இருந்த தடயமே இல்லையாம்...

இப்போ மறுபடியும் முதல்ல இருக்க பாராவ படிங்க....

# இதனால் சகலமானவருக்கும் தெரிவிப்பது என்னவென்றால்... இந்த மாதிரி களவானிப்பயலுக உங்க ஊருக்குள்ளயும் வருவாய்ங்க... என்னை மாதிரி ஒரு கெட்டிக்கார ஏமாளியும் இருப்பான்.. அவன் உஷாராயிடுவான்... போய்டுவீங்க.... சூதனமா பொழச்சுக்குங்க....

உனது எல்லைக்குள் நில்...




பாதுகாப்பு விதிமுறைகளை கடை பிடிக்க சொன்னால் அதை மீறுவதை பெருமையாகவும் சந்தோஷமாகவும் நினைக்கும் நாம், அதனால் பாதிப்பு ஏற்பட்ட உடன் அரசை குறை சொல்கிறோம்...

பண்டிகை காலங்களில் கடற்கரையில் காவல் துறை தடுப்பு வேலி அமைத்தால் அதை மீறிக்கொண்டு கடலுக்குள் இறங்குவது.. காவல் துறை தடுத்தால் "எங்கள் உரிமையை தடுக்கிறீர்கள்.. எங்கள் கொண்டாட்டத்தை குலைக்கிறீர்கள்" என்று கோஷம் போடுவது.. அதேநேரம் யாரையாவது அலை இழுத்துச்சென்றால்.. உடனே.. "காவல்துறை கடமையை செய்யவில்லை என்று கூவுவது....

ஆட்கொல்லி விலங்குகள் இருக்கும் மிருக காட்சி சாலைகளில் பாதுகாப்பு வேலிகள் அமைத்திருப்பார்கள்... டெல்லி மிருக காட்சி சாலையில் அதை மீறி சென்ற ஒருவர் நேற்று புலியால் இழுத்து செல்லப்பட்டார்...

தடுப்பு வேலியின் உயரம் குறைவு என்று இப்போது அரசை குறை சொல்கிறார்கள்... புலி அந்த வேலியை தாண்டி வெளியே வந்திருந்தால் மட்டுமே வேலியின் உயரம் குறைவு என்பதை பற்றி பேச முடியும்.. இவன் சாகசத்தை காட்ட வேலியை தாண்டி உள்ளே குதித்தால் யார் பொறுப்பாக முடியும்.. இதனால் போனது இவன் உயிர்.. இதனால் பாதிக்கப்பட்டது இவன் குடும்பம்...

எதெற்கெடுத்தாலும் அரசை குறை சொல்வதை கை விட்டுவிட்டு, தனி மனித ஒழுக்கத்தையும், அரசின் கட்டுப்பாடுகளை கடை பிடித்தலையும் எப்போது நாம் முன்னேடுகிறோமோ.. அப்போதுதான் இது போன்ற செயல்களை கண்டிக்கும் உரிமை நமக்கு வருகிறது....

அப்படி கடை பிடிக்க தயாராக இல்லை எனில்...

என்னுடைய பாஷையில் சொல்வதென்றால்.... "சாவட்டும் விடு சனியன...."