செவ்வாய், 28 ஜூலை, 2015

கடவுள் ஒரு யானை- மதங்கள் குருடர்கள்



கடவுள் என்பவர் யானை மாதிரி... ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு பிறவிக் குருடர்கள்... அந்த பிறவிக்குருடர்கள் கடவுள் என்னும் யானையை தடவிப்பார்த்து தங்கள் பார்த்தது மட்டும்தான் உண்மை என சாதிக்க நினைக்கின்றன...

அவர்கள் சொல்வதில் உண்மை இல்லாமல் இல்லை.. அதே நேரம் அவர்கள் சொல்வது மட்டுமே உண்மை அல்ல... யானை எப்போதும் யானையாகவே இருக்கிறது... அந்த யானையை முழுமையாய் பார்க்க ஞானக்கண் வேண்டும்.. அந்த ஞானக்கண் பெற்றவர்கள் மதங்களின் கூற்றுகளை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்வதில்லை.. புன்னகையோடு கடந்துவிடுகிறார்கள்...

வாழ்க்கை- ஒவ்வொரு துளியும் சுவை



நாக்கில் சுவை முகிழ்ப்புகள் நிறைந்துள்ளன.. இவைகளே கசப்பு, இனிப்பு, புளிப்பு, காரம் என வகை வகையான சுவைகளை நமக்கு உணர்த்துகின்றன... 

ஒரு ஜூஸ், குளிர்பானம், காஃபி என எதை குடித்தாலும் மிக கொஞ்சமான அளவில் உறிஞ்சி குடிக்க வேண்டும்.. ஒரு வாய் நிறைய ஊற்றிக்கொண்டால் அது நாக்கோடு தொடர்புடைய அளவில் மட்டுமே சுவை தெரியும்.. நாக்கில் தொடாத பகுதியின் சுவையை அறிய முடியாமல் அது வயிறை மட்டுமே நிறைக்கும்...

இதனால்தான் மேலை நாட்டினர், அப்படி அருந்தும் பானத்தின் ஒவ்வவொரு துளியும் நாக்கில் உள்ள சுவை முகிழ்ப்புகளில் உரசிச்செல்லும் படியாக "ஸ்ட்ரா" என்ற ஒன்றை கண்டுபிடித்தனர்...

ஆனால் அப்படி ஸ்ட்ரா போட்டுக்கொடுத்தால் கூட அதை எடுத்து வீசிவிட்டு அண்ணார்ந்து கடகடவென ஒரே கல்பில் அடிப்பவர்கள் நாம்...

வாழ்க்கை.. ஒவ்வொரு துளியும் சுவை நிறைந்தது.. நாம் நம் ரசனையை வளர்த்து அதை துளித்துளியாய் பருகி ஒவ்வொரு துளியின் சுவையையும் அறியவேண்டும்

J .C ,குமரப்பா



ஜோசப் கொர்னலியஸ் செல்லதுரை குமரப்பா
சுருக்கமாக... J .C ,குமரப்பா..

காந்தியடிகளின் சபர்மதி ஆசிரமத்தில் கணக்காளராக இருந்தவர் இந்த குமரப்பா.. ஆசிரம தலைவர் என்ற முறையில் காந்தியடிகளின் விருந்தினர் உபசரிப்பு செலவிற்காக மாதம் இரண்டு அணா கொடுக்கப்படுவது வழக்கமாம்... 
ஒரு மாதம் காந்தியடிகளின் செலவு இரண்டேகால் அணா ஆகிவிட, கணக்காளர் திரு ஜே சி குமரப்பா அவர்கள் ஆசிரம தலைவர் காந்தியடிகளுக்கு கடிதம் எழுதிவிளக்கம் கேட்கிறார்...

இந்தமாதம் விருந்தினர்கள் எண்ணிக்கை அதிகமாகிவிட்டபடியால் செலவு அதிகமாகி விட்டதாக காந்தியடிகள் பதில் கடிதம் எழுதுகிறார்...

"உங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகையை விட கூடுதலாய் செலவு செய்து இருக்கிறீர்கள்.. இந்த தொகை உங்களுக்கு போதுமானதாக இல்லை எனில் அடுத்தமுறை ஆசிரம நிர்வாக குழு கூடும்போது அந்த நிதியை உயர்த்தி தர சொல்லி நீங்கள் நிர்வாக குழுவிடம் முறையிடுங்கள்.. அந்த கூடுதல் தொகையான காலணாவை நான் உங்களுக்கு ஒதுக்கப்படும் இந்த மாத தொகையான இரண்டு அணாவில் இருந்து பிடித்து விடுவேன்" என்று பதில் எழுதினாராம்...

அந்த ஜே சி குமரப்பா கடைசி காலத்தில் மதுரை அருகில் காந்தி நிகேதன் என்ற பெயரில் ஆசிரமம் அமைத்து அதன் தலைவராக இருந்து 1960ல் மறைந்தார்...

இவர் எங்கள் மாவட்டத்தை (தஞ்சாவூர்) சேர்ந்தவர் என்பது கூடுதல் தகவல்..

நேர்மை




சுதந்திர போராட்ட விஷயமாக திருச்சியில் ஒருவரது வீட்டில் மகாத்மா காந்தி அவர்கள் தங்கி இருந்தார்... அப்போது அங்கு வந்த தேச பக்தர்கள் சுதந்திர போராட்டத்திற்கென நிதி கொடுத்தனர்....

அவர் தங்கி இருந்த வீட்டில் வேலை செய்துகொண்டிருந்த பெண் ஒருவர் தயங்கி தயங்கி மகாத்மா அருகில் வந்து ஒரு அணா நாணயத்தை கொடுத்திருக்கிறார்...

இது எதற்காக அம்மா.. ஏன் கொடுக்கிறாய்.. என்று காந்தி மகான் கேட்க... "நீங்க எல்லோர்கிட்டயும் நிதி வாங்குறீங்க... என்கிட்டே இதுதான்யா இருக்கு.. குழந்தைக்கு பால் வாங்க வச்சிருந்தேன்.." என்றாராம்...
கண்ணில் நீர் துளிர்க்க அந்த காசை வாங்கி பத்திரப்படுத்திய காந்தியடிகள் அன்று மாலை திருச்சியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசும்போது பொதுமக்கள் முன்னிலையில் அந்த ஒரு அணாவை காட்டி, ஒரு ஏழை தாய் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை காக்கவும், இந்த நிதி எல்லாம் தேசத்திற்கு செலவிடப்பட வேண்டும் என்பதை எனக்கு நினைவு படுத்திக்கொண்டே இருக்கவும் நான் இந்த ஒரு அணாவை என்னுடைய ஆடையில் முடிந்து வைத்துக்கொள்கிறேன் என்றாராம்...

இது கதையல்ல.. நிஜம்...



பட்டுக்கோட்டையில் பிரபலமானவர் திரு விஸ்வநாதன் அவர்கள்.. நகரமன்ற தலைவராகவும் , தி மு க, ம தி மு க ஆகிய கட்சிகளின் முக்கிய பதவிகளிலும் இருந்தவர்.. தொழிலதிபர்.

தி மு க வில் இருந்து திரு வை கோ அவர்கள் பிரிந்து தனிக்கட்சி தொடங்கியபோது திரு விஸ்வநாதன் அவர்களும் வை கோ அவர்களை தொடந்து எங்கள் பகுதிகளில் பல்வேறு இடங்களில் ம தி மு க கட்சியின் கிளைகள் அமைப்பதில் ஈடுபட்டார்..

அந்த வகையில் எங்கள் ஊர் அருகில் இருக்கும் மற்றொரு ஊரில் கிளைக்கழகம் அமைப்பது தொடர்பாக ஒரு இளைஞருக்கு இரண்டொரு நாட்கள் திரு விஸ்வநாதன் அவர்களுடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது...

சில நாட்கள் கழிந்தபிறகு ஒருநாள் பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தின் அருகில் திரு விஸ்வநாதன் தன்னுடைய கட்சி பிரமுகர்களுடன் நின்றுகொண்டிருந்திருகிறார்... அந்த சமயம் அவரை அணுகிய அந்த இளைஞர் ( கிளைக்கழகம் அமைப்பதில் தொடர்பானவர்)

"வணக்கம்ணே.."
"வணக்கம் தம்பி.. சொல்லுங்க.."
"நான் ........... இந்த ஊர் அண்ணே... நீங்க கொடி ஏத்த வந்தப்போ நாம பேசி இருக்கோம் அண்ணே..."

"அடடே.. அப்படியா... சொல்லுங்க தம்பி.. என்ன செய்யணும்...?"

"மெட்ராஸ் போகணும்னே.. பஸ்ல டிக்கெட் இல்லைன்றான்.. நீங்க சொல்லி ஒரு டிக்கெட் வாங்கி கொடுங்கண்ணே..."

பெரிய பெரிய பஞ்சாயத்துக்கள், உதவிகள் என்றே வந்தவர்களை பார்த்தவருக்கு இந்த இளைஞரின் கோரிக்கையை கேட்டதும் சிரிப்பதா அழுவதா என்றே தெரியவில்லையாம்...

"என்ன தம்பி.. இதுக்கெல்லாமா.. நான் வரணும்.." என்று தம்மை தாமே நொந்து கொண்டு , உடனிருந்தவரிடம் சொல்லி அனுப்பி இந்த பையனுக்கு ஒரு சீட் தர சொல்லுங்க என்றாராம்...

நீதி :- தகுதியற்றவர்களுக்கு தரத்தின் உயரம் தெரியாது...

டிரஸ் கோட்

வயது மற்றும் இடத்திற்கேற்ற டிரஸ் கோட் என்பது அந்த வயது மற்றும் இடத்திற்கு ஏற்ற சரியான மரியாதையை ஈட்டித்தரும்.

குழந்தை பிறந்த உடன் (New Born Baby) வாங்கப்படும் உடைகளில் ஆண் குழந்தை உடை- பெண்குழந்தை உடை என வித்தியாசம் இருக்காது.. அதன் பிறகு ஒரு வருடம் முதல் ஆண்குழந்தைகளுக்கு- பெண்குழந்தைகளுக்கு என ஆடைகள் வித்தியாசப்படுத்தப்படும். 

குழந்தைகளுக்கான ஆடைகளில் அதிகமான பூ வேலைபாடுகள், மணி வேலைபாடுகள், ஜிமிக்கி வேலைபாடுகள் உடன் கூடிய கண்களை கவரும் வண்ணங்களில் ஃபிரில் வேலைகளும் செய்யப்பட்டிருக்கும்.. ஒருவயது முதல் ஏழெட்டு வயதுவரையில் அம்மாதிரியான ஆடைகளை அணியும் போது குழந்தைகளுக்கும், அணிவிக்கும் போது நமக்கும் மிக மகிழ்ச்சியாக இருக்கும்...
அந்த குழந்தைகளுக்கு பத்து வயதான பிறகு அணியும் ஆடைகளில் அந்த வேலைபாடுகள் குறைந்து கண்கவர் வண்ணங்கள் மட்டும் மிச்சமிருக்கும்.. சில வேளைகளில் அந்த வண்ணங்களின் ஆதிக்கம் கூட குறைவாயிருக்கும்..

கல்லூரிகளுக்கு செல்ல தொடங்கிய பின் அணியும் ஆடைகள் சமகாலத்திற்கு ஏற்றது போலவோ, சினிமாவில் சமகால கதாநாயக/கதாநாயகிகளின் ஆடைகளின் தாக்கமோ அதிகமிருக்கும்...

திருமணம் முடிந்து சுமார் முப்பது வயதை கடந்தபின் ஆடைகளில் ஒரு வித நேர்த்தி வரும்... வயது ஏற ஏற இந்த நேர்த்தி கூடும்... பல்வேறு வண்ணங்களால் நிரம்பி அங்கே அங்கே கிழித்துவிட்டு அணியப்படுவதை எல்லாம் தவிர்த்து, பார்த்த உடனே மதிக்கப்படும் தோற்றத்திற்கான ஆடைகளை அணிய மனம் விரும்பும்... இப்போது குழந்தைகள் அணிவது போல ஜமிக்கி வேலைபாடுகளோ, மணி வேலைபாடுகளோ நிரம்பிய ஆடைகளை அணிய முடியாது... அப்படி அணிந்தால் மற்றவரின் ஏளனப்பார்வைக்கு ஆளாக நேரும்...

(சினிமாக்களில் வரும் நாயக நாயகிகள் குறிப்பிட்ட உடல் உறுப்புகளை ஹை -லைட் செய்து காட்டும் படியாக அந்த உறுப்புகள் இருக்கும் பகுதியில் மட்டும் சிறப்பு கவன ஈர்ப்பு வேலைகளை செய்திருப்பார்கள்.. சினிமாவிற்கு அது சரி.. நடைமுறை வாழ்க்கையில் அப்படி யாரும் செய்வதில்லை)




எங்கள் பகுதி கிராமங்களில் பெண் குழந்தை தாவணி போடும் அளவிற்கு வளர்ந்துவிட்டால்..( இப்போது தாவணி என்பது அரிய உடை ஆகி விட்டாலும் கூட அந்த பருவம் இருக்கத்தானே செய்கிறது..) தாயார் கொலுசு அணிவதையோ, ஜடை பிண்ணி தொங்க விடுவதையோ தவிர்த்து விடுவார்கள்.. உடைகளில் ஒரு மாற்றம் கொண்டு வருவார்கள்... அது அவர்களின் அழகையும் மரியாதையையும் கூட்டுமே தவிர அதனால் அவர்களின் ரசனை குறையாது... நமக்கு இந்த வயதில் மகன் இருக்கிறான்.. மகள் இருக்கிறார்.. நாம் இருக்கும் மரியாதையை வைத்து தான் அவர்களின் எதிர்கால மரியாதை நிர்ணயிக்கப்படும் என்பதை உணர்ந்தவர்கள் அவர்கள்...

இப்போது நகர பின்னணி கொண்டவர்கள் தாயும் மகளும் ஒரே மாதிரி ஆடைகளை அணிந்து கொள்வதன் மூலம்.. யாரோ சிலர் "உங்களை பார்த்தா அக்கா-தங்கை போலவே இருக்கிறது " என்றோ.... "ரொம்ப சின்ன பொண்ணா இருக்கீங்க" என்றோ சொல்வதை கேட்டு புளகாங்கிதமடைவதை குறிகோளாக வைத்திருக்கிறார்கள் சில பெண்கள்..

நேரில் இப்படி சொல்பவர்கள் நகர்ந்த உடன்.. "இதுக்கு இப்போதான் பதினாறு வயசுன்னு நெனப்பு.. மானம் கெட்டது.. ஆள் புடிக்க அலையுது பாரு.." என்றோ.... கெழவனுக்கு இப்போதான் டீன் ஏஜ் ன்னு நினைப்பு... விட்டா கல்யாணத்துக்கு பொண்ணு பார்ப்பான் போல.." என்றோ ஏளன பேச்சு பேச வழி வகுக்கும்...

(இப்படி ஊருக்கெல்லாம் பயந்தா நம்ம வாழமுடியாது என்று பேசலாம்.. ஆனால் ஊர் உலகத்தை சார்ந்து வாழும்படிதான் நமது கலாச்சாரமும் சமூகமும் கட்டமைக்கப்பட்டிருக்கிறது) 

உடைகள் என்பது உடலை மறைக்க மட்டுமல்ல... அது ஒரு சமூக அந்தஸ்த்தையும் , அவரவர் வயதிற்கான மரியாதையையும் , நமது குடும்பத்தை பற்றிய கௌரவத்தையும் பாதுகாக்க வல்லது..

உடைகளில் கவனமாக இருங்கள்... உங்கள் வயதிற்கு தகுந்த உடைகளை தேர்ந்தெடுங்கள்..!!!

தமிழக அரசின் டக்கு

நவீன மதுபான விடுதிகளில் நடக்கும் சிறப்பு கொண்டாட்டங்களில் கலந்துகொள்ள பெண் துணை இல்லாமல் தனியாக வரும் ஆண்களை அனுமதிப்பதில்லை...
(ஆனால் தனியாக வரும் பெண்களை அனுமதிப்பார்கள்)

அதற்கு அவர்கள் சொல்லும் காரணம்...

ஒரு ஆண் ஒரு பெண்ணுடன் வரும்போது அந்த ஆணின் கவனம் அவனுடன் வந்த பெண் மீது மட்டுமே இருக்கும்... இதனால் வேறொரு பெண்ணுக்கு தொல்லை இருக்காது....

ஆக.... மதுபான விடுதிகளில் வந்து குடிக்கும் ஒரு குடிகாரியின் பாதுகாப்புக்காக இன்னொரு குடிகாரியை உருவாக்குகிறார்கள்... ஆடைகளை அரை குறையாக அவிழ்த்துக்காட்டியும், அக்குளை காட்ட சொல்லியும் எலிப்பொறியில் வைக்கும் மசால் வடை போல பெண்களை சித்தரித்து வியாபாரம் செய்யும் அதே வழக்கம்... இந்த மதுபான விடுதிகளிலும் செயல்படுத்தப்படுகிறது...

அதற்கு அவர்கள் சொல்லும் காரணம்.. பாதுகாப்பு.... அந்த முதல் குடிகாரியை உள்ளே வராமல் தடுத்தால் பெண்களின் பாதுகாப்பு பற்றிய கவலை இவர்களுக்கு எதற்கு??? பெண்கள் வந்தால்தான் அவர்களுக்காக ஆண்கள் வருவார்கள் என்ற வியாபார யுக்திக்கு இவர்கள் கட்டும் சப்பை கட்டு.. பெண்களுக்கான பாதுகாப்பு.


நீதிபதிகளை கிரிக்கெட் கிளப்பிற்குள் வேட்டி கட்டி அனுமதிக்காததால் தமிழக கலாச்சாரமே சீரழிந்து போய் விட்டதாக பொங்கி எழும் மக்களே.... சட்ட திருத்தம் கொண்டுவரப்படும் என்று அறிவித்த முதல்வரே... 

பப்புகளில் ஒரு ஆண் குடிப்பதென்றால் ஒரு பெண்ணும் அங்கே வரவேண்டும் என்று கட்டாயப்படுத்தி நாகரீகம் என்ற பெயரில் குடும்பத்தோடு குடிகாரர்கள் ஆக்கும் இந்த கலாச்சார சீரழிவை கண்டுகொள்ளாத நீங்கள் எல்லோரும் கிரிகெட் கிளப்பில் வேட்டி கட்டியவர்களை விடாமல் தடுத்ததை தட்டிக்கேட்டுத்தான் கலாச்சாரத்தை காக்க போகிறார்களா???

அட போங்கய்யா... நீங்களும் உங்க டக்கும்...!!! 

புகைப்படம்: - சென்னையில் இருக்கும் ஒரு மதுபான விடுதி

காமராஜர் - சில நினைவலைகள்



காமராஜர் சேரன்மாதேவியில் சுற்றுப்பயணம் சென்ற போது சாலை ஓரம் மாடுமேய்த்துக்கொண்டிருந்த ஒரு சிறுவனை பார்த்து காரை நிறுத்த சொன்னார்.. இறங்கி அந்த பையனிடம் சென்று "ஏம்பா பள்ளிக்கூடம் போகாம மாடு மேய்க்கிறியே.." என்று கேட்டார்.. அந்த சிறுவன் "பள்ளிக்கூடம் போனா சோறு யாரு போடுவாங்க.. மாடு மெய்ச்சாதான் சோறு" என்றானாம்... "சோறுபோட்டா பள்ளிக்கூடம் போவியா..." என்றிருக்கிறார்... "ஓ .. போவேனே.." என்றானாம்... சென்னை திரும்பியதும் பொதுக்கல்வி இயக்குனராக
இருந்த திரு என் டி சுந்தரவடிவேல் அவர்களை அழைத்து பள்ளிக்கூடத்தில் மதியம் சாப்பாடு போடுவதற்கு ஒரு திட்டம் கேட்டிருக்கிறார்... ஒரு குழந்தைக்கு இரண்டு அனா செலவில் என் டி சுந்தரவடிவேல் அவர்கள் ஒரு திட்டத்தை வரையறை செய்து கொடுத்தாராம்.. அதுதான் மதியஉணவு திட்டம்...

அவர்தான் காமராஜர்..!!!


ஒருமுறை திருநெல்வேலியில் சுற்றுப்பயணம் செய்தபோது ஒரு ரெயில்வே கிராசிங்கை சென்றடைந்தது முதல்வர் காமராஜரின் வாகனம்... சற்று நேரத்தில் ரயில் கடக்கவேண்டியதாகையால் ரயில்வே கேட் மூடப்பட்டிருந்தது.... ஒரு அதிகாரி வேகமாக கேட் கீப்பரிடம் போய் முதல்வர் வாகனம் வருகிறது.. கேட்டை திறந்துவிடு என்று சொன்னார்.. இதை கவனித்த காமராஜர்.. அந்த அதிகாரியை கூப்பிட்டு... "ஏன்யா... நான் ரயில்ல அடிபட்டு சாகனுமா.... ரயில் வரப்போ அதுல யாரும் மாட்டிக்க கூடாதுன்னுதானே ஒரு கேட்டும் போட்டு அதுக்கு ஒரு ஆளும் போட்டிருக்கோம்... அப்புறம் ரயில் வர நேரத்துல நீ கேட்ட தொறக்க சொன்னா என்ன அர்த்தம்னேன்.." என்று கேட்டாராம்...
ரயில் கடந்ததும் காரில் இருந்து இறங்கி அந்த கேட்கீப்பரிடம் செல்ல.. அந்த கேட்கீப்பர் வெலவெலத்துப்போனாராம் .. நீ செஞ்சதுதான் சரின்னேன்... இந்த இடத்துக்கு நீதான் எஜமான்... உன் வேலைய நீ கரெக்டா தான் பன்னேன்னேன்.." என்றாராம்...

அவர்தான் காமராஜர்...!!!

1967 ல் தேர்தலில் திமுக வை சேர்ந்த சீனிவாசன் என்ற வேட்பாளரிடம் வெற்றிவாய்ப்பை இழந்த காமராஜர் வீட்டில் அமர்ந்திருந்தாராம்.. காங்கிரஸ் தொண்டர்கள் அவரை சந்தித்து வருத்தத்தை தெரிவித்தார்களாம்.. அப்போது காமராஜர் சொன்னாராம்... இதுக்குத்தானய்யா சுதந்திரம் வாங்கினோம்னேன் .. ஜனநாயகம் கொண்டுவந்தோம்னேன் .. அப்புறம் ஏன்யா வருத்தப்படனும்?? நான் தோத்துப்போனதுலையே தெரியுதுல்ல.. நாம தேர்தல ஒழுங்கா நடத்தி இருக்கோம்னு.. அப்புறம் ஏன் வருத்தப்படனும்னேன்..."

அவர்தான் காமராஜர்..!!!.

திண்டுக்கல் நகரத்தில் இருந்து உள்ளடங்கிய பகுதியில் ஒரு பஞ்சு மில் திறக்க அனுமதியளைத்தாராம் காமராஜர்.. அவ்வளவு தூரம் உள்ளடங்கி இருக்குங்கைய்யா... அதுக்கு அனுமதி கொடுக்க சொல்றீங்களே.. என அதிகாரி ஒருவர் கேட்டாராம்... அதெல்லாம் நான் பேசிட்டேன்... திண்டுக்கல் ல இருந்து அவன் செலவுலேயே கரெண்டு எடுத்துக்கிறேன்னு சொல்றான்.. அந்த வழில இருக்க அறுபது கிராமத்துக்கும் கரெண்டு எடுத்துக்கலாம்னேன்.. என்றாராம் காமராஜர்...

அவர்தான் காமராஜர்..!!!

முதல்வராக இருந்த காலத்தில் காமராஜரின் தாயார் முதல்வரின் இல்லத்தில் தங்க ஆசைப்பட்டிருக்கிறார்.... "அம்மா என் கூட தங்கணும்னு ஆசைப்படும்தான்... ஆனா அது வந்து இங்க தங்கினா அத பார்க்கிற சாக்குல தங்கச்சி வரும்.. அப்புறம் தங்கச்சி புள்ளைங்க வருவாங்க... ஒவ்வொருத்தரா வந்து தங்குவாங்க.. அப்புறம் ஏதாவது பிரச்சினை வரும்.. வேனாம்னேன்.." என்றாராம்...

அவர்தான் காமராஜர்..!!!

காமராஜர் ஒருமுறை கட்சியினர் ஏற்பாடு செய்திருந்த விருந்தில் கலந்துகொண்டாராம்.. சாப்பிட்டு முடித்த பிறகு வெளியில் வந்து தன்னுடன் வந்தவரிடம்.. "எல்லோரும் அரை கண்ணப்பனாவே இருக்காங்க" என்றாராம்...

அதென்ன அரை கண்ணப்பன்..??

பெரியபுராணத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் கண்ணப்பநாயனார் கதை கேள்விப்பட்டிருக்கிறீர்கள் தானே..??

அந்த கதையில் சிவபெருமானுக்கு பிடிக்குமா- பிடிக்காதா என்பதைப்பற்றி எல்லாம் கண்ணப்பன் கவலைப்படவில்லை... அவனுக்கு பிடித்ததை மட்டுமேதான் சிவனுக்கு படைத்தான்...
ஆனால்.. கண்ணப்பனுக்கு சிவபெருமானிடம் எந்த எதிர்பார்ப்பும் இல்லை...

அதே போல காமராஜருக்கு விருந்தளித்தவர்கள் அவர்களுக்கு பிடித்ததை தான் பரிமாறினார்கள்... ஆனால் அவர்களின் கவனிப்பில் ஒரு எதிர்பார்ப்பு இருந்தது என்பதைத்தான்.. "அரை கண்ணப்பன்" என்று சொன்னாராம்...


சொத்து சுகம் நாடார்
சொந்தந்தனை நாடார்
பொன்னென்றும் நாடார்
பொருள் நாடார்
தான்பிறந்த அன்னையையும் நாடார்
ஆசைதனை நாடார்
நாடொன்றே நாடித் – தன்
நலமொன்றும் நாடாத
நாடாரை நாடென்றார்...!!

- கவியரசு கண்ணதாசன்...

ராமசாமி ஆசாரி (விஸ்வகர்மா)



மரவேலை செய்யும் ஆசாரிகள், கல் வேலை செய்யும் கல் தச்சர்கள்.. உலோகங்களில் பல்வேறு கருவிகள் செய்யும் கொல்லர்கள்... தங்கத்தில் ஆபரணங்கள் செய்யும் பொற்கொல்லர்கள்.. எல்லோருமே விஸ்வகர்மா பட்டியலில் வருவார்கள்.. விஸ்வகர்மா என்ற வார்த்தைக்கு படைப்பாளி என்று அர்த்தம்...

உலகில் இருக்கும் கலை பொக்கிஷங்கள் முதல் நாம் வீட்டில் அன்றாடம் உபயோகிக்கும் சிறு சிறு பொருட்கள் வரையில் இவர்கள் கைவண்ணம் தான்...
விஸ்வபிராமனர்கள் என்று அழைக்கப்பட்டு பின்னாளில் விஸ்வகர்மா என்ற மருவினாலும் இவர்களும் பூணூல் அணியும் பழக்கத்தை கடை பிடிப்பவர்கள்..

உலகில் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள் என்றால் அது இவர்கள் தான்... இவர்கள் படைக்கலன் உருவாக்குபவர்களே தவிர படை பலன் மிக்கவர்கள் அல்ல... மன்னர்கள் காலத்தில் அழகிய கோயில்கள் கட்டினாலும் சரி.. மகாராணிகளுக்கு நகைகள் செய்தாலும் சரி.. அந்த மன்னர்கள் குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் வரை பிரச்சினை இல்லை.. வெளியில் சென்று விடுவாரோ என்று சந்தேகிக்கப்பட்டால் இவர்களின் கட்டை விரல் முதல் சமயங்களில் தலை வரை துண்டிக்கப்படும்..
ஏனென்றால் அவர் முன்பு உருவாக்கியதை போலவோ, அதை விட சிறப்பாகவோ வேறு ஒன்றை அவர்கள் உருவாக்கி விட கூடாது என்ற எண்ணம் தான்... (தாஜ்மஹாலை கட்டிய கலைஞர்களின் கட்டை விரல் துண்டிக்கப்பட்டதாக எங்கோ படித்த ஞாபகம்)

இதெல்லாம் பழைய கதை... இதை விட கூடுதலாக உங்களுக்கு தெரிந்திருக்கும்... எனக்கு தெரிந்த எங்களூர் விஸ்வகர்மா , எங்களால் கைப்புள்ளை என்று செல்லமாக அழைக்கப்பட்ட திரு.ராமசாமி அவர்களை பற்றி எனக்கு தெரிந்ததை இங்கே பதிவிடுகிறேன்.. இவர் மரப்பலகைகளில் பூ வேலை செய்வதில் வல்லவர்.. கதவு , பீரோ போன்றவற்றிக்கு பூவேலை செய்வார்... இவரது உளியும் சுத்தியும் பலகைகளில் நாட்டியமாடும்... நாட்டியத்தின் முடிவில் அவரது மனதில் நின்று ஆடிய மயில் தத்ரூபமாய் நம் கண்முன்னே தோகை விரிக்கும்.. இவர் மனதில் கற்பனை செய்த பூ நம்கன்முன்னே கதவில் மலர்ந்து இதழ் விரித்து சிரிக்கும்... அப்படிப்பட்ட கலைஞனிடம் ஒரு ச(ர)றுக்கல்... தினசரி வேலை முடிந்ததும் குடித்துக் கொண்டிருந்தவர்.. நாளடைவில் வேலையை மறந்து குடிக்க தொடங்கி... இறுதியில் அது அவர் உயிர் குடித்தது... அந்த கலைஞனின் திறமை, ஆற்றல் , கலையை வாரிசுகளுக்கு கற்றுக்கொடுக்கும் முன்பே வாரி சுருட்டியது மரணம் .

இவர் ஒரு உதாரணம் மட்டுமே... இவரை போல பல விஸ்வகர்மாக்கள் இப்போதெலாம் தங்கள் திறமையை இந்த குடியால் தொலைத்துக்கொண்டிருக்கிறார்கள்.. அன்று மன்னராட்சியில் இவர்களின் திறமை வெளியில் போய் விடக்கூடாதென விரல்கள் வெட்டப்பட்டது...... இன்று மக்களாட்சியில் மதுக்குடுவைகளால் இவர்கள் திறமை வெளியில் தெரியாமல் மறைக்கப்படுகிறது..

மன்னராட்சியோ.. மக்களாட்சியோ.... விஸ்வகர்மாக்கள் தான் அதிகம் பாதிப்புக்குள்ளானவர்கள்...

(குறிப்பு: ஒருவேளை விஸ்வகர்மா சமூகத்தை சார்ந்தவர்கள் யாரும் இருப்பினும் "வேறு சமூகத்தில் யாருமே குடிப்பதிலையா" என சண்டைக்கு வரமாட்டார்கள் என நினைக்கிறன்.. ஒரு படைப்பாளி என்பவன் சமகால கலாச்சாரத்தை நூற்றாண்டுகளுக்கு அப்பால் நகர்த்தும் வித்தை கற்றவன்.. அந்த வித்தை முடக்கப்பட்டதும், முடங்கியதன் மீதான வருத்தமே இந்த பதிவு)

கீதாரி



எங்கள் தஞ்சை மாவட்டத்திற்கு இவர்கள் இராமநாதபுரம் பகுதியில் இருந்து விவசாயம் தொடங்கும் சில காலம் முன்பு வருவார்கள்.. ஒரு டெம்போவில்/லாரியில் பனை ஓலைகளால் வேயப்பட்ட படப்பு ( குப்புற கவிழ்த்து வைக்கப்பட்ட பரிசலை சற்று பெரிய அளவில் கற்பனை செய்து கொள்ளவும்) தட்டுமுட்டு சாமான்கள், கயிற்று கட்டில், வலை போன்றவற்றுடன் சுமார் இருநூறு முதல் ஐநூறு செம்மெறி ஆடுகள் வரையில் ஏற்றிக்கொண்டு வருவார்கள்..
பகலில் அந்த ஆடுகள் பல இடங்களில் மேய்ச்சலுக்கு செல்லும்.. ஒரு தூக்கு வாளி (முன்பெல்லாம் அலுமினிய தூக்கு.. இப்போதெல்லாம் எவர்சில்வர் தூக்கு) வைத்திருப்பார்கள்.. அதில் பகல் பொழுதுக்கு தேவையான கஞ்சி இருக்கும்.. கையில் ஒரு நீளமான மூங்கில் கம்பும், தேய் ........ந்து வளைந்த செருப்புகளும் இவர்களின் அடையாளம்...
கதிர் அறுவடை முடிந்து அடுத்த சாகுபடி தொடங்கும் முன்போ, தென்னை தோப்புகளிலோ நில உரிமையாளரின் வேண்டுகோளுக்கிணங்க இரவில் அந்த ஆடுகளை ஓய்வெடுக்க வைப்பார்கள்... இதற்கு "கிடை மடக்குதல்" என்று பெயர்..
இரவில் ஆடுகள் கழிக்கும் புளுக்கை , சிறுநீர் போன்றவை பயிருக்கு மிகவும் உகந்த சக்தி மிகுந்த இயற்கை உரம்.. மேலும்.. ஆடுகளுக்கு அதிகமாய் வளர்ந்த முடியை நறுக்கியும் போடுவார்கள்..

அந்த வயலை /தோப்பை சுற்றிலும் இரும்பு கம்பிகளை நட்டு அதனை கொண்டு வந்திருக்கும் வலையால் சுற்றி பாதுகாப்பு வேலி அமைப்பார்கள்... கயிற்றுக்கட்டிலில் உறங்குவார்கள்.. அதிகாலை கத்திரி பூ கலரிலோ, சிவப்பு கலரிலோ ஒரு சால்வையை தலையில் முண்டாசு கட்டிக்கொண்டும் போர்த்திக்கொண்டும் கிராம டீக்கடைகளுக்கு வருவார்கள்.. அந்த நேரத்தில் கடைக்கு டீ குடிக்க வரும் மற்ற விவசாயிகள் "நாளைக்கு நம்ம வயல்ல கிடை மடக்குப்பா" என்று ஆர்டர் கொடுப்பார்கள்.. ஒரு நாள் இரவு கிடை மடக்க ஆடுகளின் எண்ணிக்கையை பொறுத்து முன்னூறு முதல் அறுநூறு ரூபாய் வரை வாங்குவார்கள்..

வருடா வருடம் கிடை மடக்குவோரும் உண்டு.. நாலைந்து வருடம் ஒருமுறை கிடை மடக்குவோரும் உண்டு.. சுமார் ஒரு மாதமோ, பதினைந்து நாளோ ஒரு ஊரில் தங்கி அதன் சுற்று வட்டார பகுதிகளில் கிடை மடக்கிய பிறகு வேறு பகுதிகளுக்கு செல்வார்கள்.. அப்புறம் மீண்டும் அடுத்த வருடம்.. இப்படி தொடர்ந்து வருவதால் ஊரில் அனைவருக்குமே மிகவும் பழக்கமானவர்களாக இருப்பார்கள்..

இந்த கீதாரிகள் அனைவரும் சிலம்பம் என்று சொல்லப்படும் கம்பு சுழற்றுவதில் தேர்ந்தவர்களாக இருப்பார்கள்... இரவில் யாரேனும் களவாணிகள் ஆடு திருட வந்தால் கையில் வைத்திருக்கும் கம்பால் சுழற்றி அடித்து துரத்தும் வல்லமை படைத்தவர்கள்.. இந்த கீதாரியை மீறி கிடையில் இருந்து ஒரு ஆட்டை கூட திருட முடியாது என்பது களவாணிகள் மட்டுமல்ல.. எல்லோரும் அறிந்த விஷயம்..
இவர்கள் இடையர்கள் என்று சொல்லப்படும் யாதவ சமூகத்தை சேர்ந்தவர்கள்..