செவ்வாய், 28 ஜூலை, 2015

டிரஸ் கோட்

வயது மற்றும் இடத்திற்கேற்ற டிரஸ் கோட் என்பது அந்த வயது மற்றும் இடத்திற்கு ஏற்ற சரியான மரியாதையை ஈட்டித்தரும்.

குழந்தை பிறந்த உடன் (New Born Baby) வாங்கப்படும் உடைகளில் ஆண் குழந்தை உடை- பெண்குழந்தை உடை என வித்தியாசம் இருக்காது.. அதன் பிறகு ஒரு வருடம் முதல் ஆண்குழந்தைகளுக்கு- பெண்குழந்தைகளுக்கு என ஆடைகள் வித்தியாசப்படுத்தப்படும். 

குழந்தைகளுக்கான ஆடைகளில் அதிகமான பூ வேலைபாடுகள், மணி வேலைபாடுகள், ஜிமிக்கி வேலைபாடுகள் உடன் கூடிய கண்களை கவரும் வண்ணங்களில் ஃபிரில் வேலைகளும் செய்யப்பட்டிருக்கும்.. ஒருவயது முதல் ஏழெட்டு வயதுவரையில் அம்மாதிரியான ஆடைகளை அணியும் போது குழந்தைகளுக்கும், அணிவிக்கும் போது நமக்கும் மிக மகிழ்ச்சியாக இருக்கும்...
அந்த குழந்தைகளுக்கு பத்து வயதான பிறகு அணியும் ஆடைகளில் அந்த வேலைபாடுகள் குறைந்து கண்கவர் வண்ணங்கள் மட்டும் மிச்சமிருக்கும்.. சில வேளைகளில் அந்த வண்ணங்களின் ஆதிக்கம் கூட குறைவாயிருக்கும்..

கல்லூரிகளுக்கு செல்ல தொடங்கிய பின் அணியும் ஆடைகள் சமகாலத்திற்கு ஏற்றது போலவோ, சினிமாவில் சமகால கதாநாயக/கதாநாயகிகளின் ஆடைகளின் தாக்கமோ அதிகமிருக்கும்...

திருமணம் முடிந்து சுமார் முப்பது வயதை கடந்தபின் ஆடைகளில் ஒரு வித நேர்த்தி வரும்... வயது ஏற ஏற இந்த நேர்த்தி கூடும்... பல்வேறு வண்ணங்களால் நிரம்பி அங்கே அங்கே கிழித்துவிட்டு அணியப்படுவதை எல்லாம் தவிர்த்து, பார்த்த உடனே மதிக்கப்படும் தோற்றத்திற்கான ஆடைகளை அணிய மனம் விரும்பும்... இப்போது குழந்தைகள் அணிவது போல ஜமிக்கி வேலைபாடுகளோ, மணி வேலைபாடுகளோ நிரம்பிய ஆடைகளை அணிய முடியாது... அப்படி அணிந்தால் மற்றவரின் ஏளனப்பார்வைக்கு ஆளாக நேரும்...

(சினிமாக்களில் வரும் நாயக நாயகிகள் குறிப்பிட்ட உடல் உறுப்புகளை ஹை -லைட் செய்து காட்டும் படியாக அந்த உறுப்புகள் இருக்கும் பகுதியில் மட்டும் சிறப்பு கவன ஈர்ப்பு வேலைகளை செய்திருப்பார்கள்.. சினிமாவிற்கு அது சரி.. நடைமுறை வாழ்க்கையில் அப்படி யாரும் செய்வதில்லை)




எங்கள் பகுதி கிராமங்களில் பெண் குழந்தை தாவணி போடும் அளவிற்கு வளர்ந்துவிட்டால்..( இப்போது தாவணி என்பது அரிய உடை ஆகி விட்டாலும் கூட அந்த பருவம் இருக்கத்தானே செய்கிறது..) தாயார் கொலுசு அணிவதையோ, ஜடை பிண்ணி தொங்க விடுவதையோ தவிர்த்து விடுவார்கள்.. உடைகளில் ஒரு மாற்றம் கொண்டு வருவார்கள்... அது அவர்களின் அழகையும் மரியாதையையும் கூட்டுமே தவிர அதனால் அவர்களின் ரசனை குறையாது... நமக்கு இந்த வயதில் மகன் இருக்கிறான்.. மகள் இருக்கிறார்.. நாம் இருக்கும் மரியாதையை வைத்து தான் அவர்களின் எதிர்கால மரியாதை நிர்ணயிக்கப்படும் என்பதை உணர்ந்தவர்கள் அவர்கள்...

இப்போது நகர பின்னணி கொண்டவர்கள் தாயும் மகளும் ஒரே மாதிரி ஆடைகளை அணிந்து கொள்வதன் மூலம்.. யாரோ சிலர் "உங்களை பார்த்தா அக்கா-தங்கை போலவே இருக்கிறது " என்றோ.... "ரொம்ப சின்ன பொண்ணா இருக்கீங்க" என்றோ சொல்வதை கேட்டு புளகாங்கிதமடைவதை குறிகோளாக வைத்திருக்கிறார்கள் சில பெண்கள்..

நேரில் இப்படி சொல்பவர்கள் நகர்ந்த உடன்.. "இதுக்கு இப்போதான் பதினாறு வயசுன்னு நெனப்பு.. மானம் கெட்டது.. ஆள் புடிக்க அலையுது பாரு.." என்றோ.... கெழவனுக்கு இப்போதான் டீன் ஏஜ் ன்னு நினைப்பு... விட்டா கல்யாணத்துக்கு பொண்ணு பார்ப்பான் போல.." என்றோ ஏளன பேச்சு பேச வழி வகுக்கும்...

(இப்படி ஊருக்கெல்லாம் பயந்தா நம்ம வாழமுடியாது என்று பேசலாம்.. ஆனால் ஊர் உலகத்தை சார்ந்து வாழும்படிதான் நமது கலாச்சாரமும் சமூகமும் கட்டமைக்கப்பட்டிருக்கிறது) 

உடைகள் என்பது உடலை மறைக்க மட்டுமல்ல... அது ஒரு சமூக அந்தஸ்த்தையும் , அவரவர் வயதிற்கான மரியாதையையும் , நமது குடும்பத்தை பற்றிய கௌரவத்தையும் பாதுகாக்க வல்லது..

உடைகளில் கவனமாக இருங்கள்... உங்கள் வயதிற்கு தகுந்த உடைகளை தேர்ந்தெடுங்கள்..!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக