மரவேலை செய்யும் ஆசாரிகள், கல் வேலை செய்யும் கல் தச்சர்கள்.. உலோகங்களில் பல்வேறு கருவிகள் செய்யும் கொல்லர்கள்... தங்கத்தில் ஆபரணங்கள் செய்யும் பொற்கொல்லர்கள்.. எல்லோருமே விஸ்வகர்மா பட்டியலில் வருவார்கள்.. விஸ்வகர்மா என்ற வார்த்தைக்கு படைப்பாளி என்று அர்த்தம்...
உலகில் இருக்கும் கலை பொக்கிஷங்கள் முதல் நாம் வீட்டில் அன்றாடம் உபயோகிக்கும் சிறு சிறு பொருட்கள் வரையில் இவர்கள் கைவண்ணம் தான்...
விஸ்வபிராமனர்கள் என்று அழைக்கப்பட்டு பின்னாளில் விஸ்வகர்மா என்ற மருவினாலும் இவர்களும் பூணூல் அணியும் பழக்கத்தை கடை பிடிப்பவர்கள்..
உலகில் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள் என்றால் அது இவர்கள் தான்... இவர்கள் படைக்கலன் உருவாக்குபவர்களே தவிர படை பலன் மிக்கவர்கள் அல்ல... மன்னர்கள் காலத்தில் அழகிய கோயில்கள் கட்டினாலும் சரி.. மகாராணிகளுக்கு நகைகள் செய்தாலும் சரி.. அந்த மன்னர்கள் குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் வரை பிரச்சினை இல்லை.. வெளியில் சென்று விடுவாரோ என்று சந்தேகிக்கப்பட்டால் இவர்களின் கட்டை விரல் முதல் சமயங்களில் தலை வரை துண்டிக்கப்படும்..
ஏனென்றால் அவர் முன்பு உருவாக்கியதை போலவோ, அதை விட சிறப்பாகவோ வேறு ஒன்றை அவர்கள் உருவாக்கி விட கூடாது என்ற எண்ணம் தான்... (தாஜ்மஹாலை கட்டிய கலைஞர்களின் கட்டை விரல் துண்டிக்கப்பட்டதாக எங்கோ படித்த ஞாபகம்)
இதெல்லாம் பழைய கதை... இதை விட கூடுதலாக உங்களுக்கு தெரிந்திருக்கும்... எனக்கு தெரிந்த எங்களூர் விஸ்வகர்மா , எங்களால் கைப்புள்ளை என்று செல்லமாக அழைக்கப்பட்ட திரு.ராமசாமி அவர்களை பற்றி எனக்கு தெரிந்ததை இங்கே பதிவிடுகிறேன்.. இவர் மரப்பலகைகளில் பூ வேலை செய்வதில் வல்லவர்.. கதவு , பீரோ போன்றவற்றிக்கு பூவேலை செய்வார்... இவரது உளியும் சுத்தியும் பலகைகளில் நாட்டியமாடும்... நாட்டியத்தின் முடிவில் அவரது மனதில் நின்று ஆடிய மயில் தத்ரூபமாய் நம் கண்முன்னே தோகை விரிக்கும்.. இவர் மனதில் கற்பனை செய்த பூ நம்கன்முன்னே கதவில் மலர்ந்து இதழ் விரித்து சிரிக்கும்... அப்படிப்பட்ட கலைஞனிடம் ஒரு ச(ர)றுக்கல்... தினசரி வேலை முடிந்ததும் குடித்துக் கொண்டிருந்தவர்.. நாளடைவில் வேலையை மறந்து குடிக்க தொடங்கி... இறுதியில் அது அவர் உயிர் குடித்தது... அந்த கலைஞனின் திறமை, ஆற்றல் , கலையை வாரிசுகளுக்கு கற்றுக்கொடுக்கும் முன்பே வாரி சுருட்டியது மரணம் .
இவர் ஒரு உதாரணம் மட்டுமே... இவரை போல பல விஸ்வகர்மாக்கள் இப்போதெலாம் தங்கள் திறமையை இந்த குடியால் தொலைத்துக்கொண்டிருக்கிறார்கள்.. அன்று மன்னராட்சியில் இவர்களின் திறமை வெளியில் போய் விடக்கூடாதென விரல்கள் வெட்டப்பட்டது...... இன்று மக்களாட்சியில் மதுக்குடுவைகளால் இவர்கள் திறமை வெளியில் தெரியாமல் மறைக்கப்படுகிறது..
மன்னராட்சியோ.. மக்களாட்சியோ.... விஸ்வகர்மாக்கள் தான் அதிகம் பாதிப்புக்குள்ளானவர்கள்...
(குறிப்பு: ஒருவேளை விஸ்வகர்மா சமூகத்தை சார்ந்தவர்கள் யாரும் இருப்பினும் "வேறு சமூகத்தில் யாருமே குடிப்பதிலையா" என சண்டைக்கு வரமாட்டார்கள் என நினைக்கிறன்.. ஒரு படைப்பாளி என்பவன் சமகால கலாச்சாரத்தை நூற்றாண்டுகளுக்கு அப்பால் நகர்த்தும் வித்தை கற்றவன்.. அந்த வித்தை முடக்கப்பட்டதும், முடங்கியதன் மீதான வருத்தமே இந்த பதிவு)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக