செவ்வாய், 28 ஜூலை, 2015

நம்பிக்கை



காலையில் அறையை பூட்டிவிட்டு அலுவலகம் வந்துவிட்டு திரும்ப அறைக்கு போய் பார்க்கும் போது அறை திறந்து இருந்தது... 

என்னை தவிர மதிப்பு மிக்க வேறு ஒரு பொருள் என்னிடம் இல்லை என்றாலும் கூட.... சில்லரை சாமான்கள் வாங்க வேண்டுமென்றால் கூட இந்த பாழாப்போன பணம் வேண்டுமே என்பதால் சற்றே பதட்டம் எட்டிப்பார்த்தது...

அறைக்குள் நுழைந்ததும் அங்கே அமர்ந்திருந்த நண்பரை பார்த்ததும் சற்றே நிம்மதி வந்தாலும் அடுத்த கேள்வி உடனே எட்டிப்பார்த்தது...

"எப்படி தல உள்ள வந்தீங்க.. சாவி ஏது,,? "

"வந்தேன்.. உங்கள காணல... பூட்ட இழுத்து பார்த்தேன்.. திறந்துடுச்சு.."

என்னை பொறுத்தவரை ஒருவரை நம்பி ஒரு பொறுப்பை கொடுத்துவிட்டால் அவரை சந்தேகப்பட கூடாது.. எனவே கதவை பூட்டிய பின் நான் அதனை சோதிக்க வில்லை... நான் என்னுடைய நிலையில் உறுதியாய் இருந்ததை போல, அந்த பூட்டும் என் நம்பிக்கையை காப்பாற்றி இருக்க வேண்டுமல்லவா ???? அதுதானே பரஸ்பர நம்பிக்கை...

(அந்த பூட்டை பிடித்து இழுத்தால் திறந்துகொள்ளும் என்ற விஷயம் எனக்கு தெரியாது.. நான் தினசரி அதற்கென தயாரிக்கப்பட்ட சாவியை கொண்டுதான் திறப்பேன்)

என்னுடைய நம்பிக்கையை காப்பாற்றாத அந்த பூட்டை மறுநாள் அந்த பூட்டை குப்பை தொட்டியில் வீசி விட்டு வேறு ஒரு பூட்டு வாங்கினேன்...

நீதி 1 :- யாரையும் யோசிக்காமல் நம்ப கூடாது..

நீதி 2 :- நமது நம்பிக்கைக்கு பாத்திரமானவர்களாக அவர்கள் இல்லை என்பது தெரிந்த உடனே அவர்களை தூக்கி எரிய தயங்க கூடாது..

மயில்



மயில் பற்றி என்ன நினைகிறீர்கள்??

இந்தியாவின் தேசிய பறவை... தமிழ் கடவுள் முருகனின் வாகனம்... பார்க்க அழகாய் இருக்கும்.. மேகம் கருத்து மழை வரும் சூழல் நிலவினால் தோகை விரித்து ஆடும்... சமீப காலமாய் பரவலாய் கண்ணில் படுகிறது...

எல்லாம் சரிதான்.... ஆனால் இது, ஏற்கெனவே இடுபொருள் விலையேற்றம், மழையின்மை, மின்சார தட்டுப்பாடு , உற்பத்தி செலவு அதிகரிப்பு, விற்பனை விலை குறைவு, ரியல் எஸ்டேட் முதலைகள் என பல பல பிரச்சினைகளில் சிக்கி சீரழிந்து கொஞ்சமாய் எஞ்சி இருக்கும் விவசாயிகளுக்கு கொஞ்சம் கொஞ்சமாய் பூதாகரமாய் வளர்ந்து வரும் சவாலான பிரச்சினை என்பதை எப்போதாவது யோசித்து இருகிறீர்களா???

ஆஸ்திரேலியாவில் பசுமை சூழ்ந்த ஆள் நடமாட்டமிலாத தீவில் ஒருமுறை சில முயல்கள் விடப்பட்டது... அங்கே முயல்களுக்கு தேவையான உணவுப்பொருட்கள் தாராளமாய் கிடைத்தன... அங்கே அந்த முயல்களுக்கு எதிரிகளே இல்லை...
இந்த சூழ்நிலையில் வளர்ந்த முயல்கள்.. இனவிருத்தி செய்து செய்து பல்கி பெருகின... ஆரம்ப காலத்தில் அவைகள் குறைவாக இருந்த காலத்தில் போதுமான அளவு உணவு கிடைத்தது.. முயல்களின் எண்ணிக்கை பெருக பெருக அவைகளின் உணவின் அளவு குறைந்தது.. நாளடைவில் தாவரங்களும் அழிந்து உணவில்லாமல் முயல்களும் அழிந்தன...

(இதற்கு ஆதாரம் கொடு என கேட்காதீர்கள்.. நான் எங்கோ படித்தது)

இது முயல்களுக்கு மட்டுமல்ல.. எல்லாவற்றிற்கும் பொருந்தும்.. இதனாலேயே பூமியின் இயக்கத்தை சமநிலைப்படுத்த இயற்கை பல்வேறு உபாயங்களை கையாள்கிறது... தாவரங்கள்- தாவர உண்ணிகள்- மாமிச உண்ணிகள் என்பவை சீராக அமையப்பெற்ற உணவுச்சங்கிலி ஒரு முக்கோண வடிவில் அமைந்திருக்கிறது...

முருகநுண் வாகனமென்பதாலோ, தேசியப்பறவை என்பதாலோ, வன உயிரின சட்டம் பாயும் என பயந்தோ யாரும் மயில்களை வேட்டையாடுவதில்லை... அதனாலேயே சமீப காலமாய் மயில்களின் எண்ணிக்கை பல்கி பெருகி வருகிறது

பல்வேறு இயற்கை சவால்களையும், கார்பொரேட் கம்பெனிகளின் திட்டமிட்ட தடங்கல்களையும் எதிர்த்து போராடி விவசாயிகள் பயிரிடும் தானியங்களை இந்த மயில்கள் கூட்டமாய் வந்து கபளீகரம் செய்கின்றன.. மயில்களின் எண்ணிக்கை பெருக பெருக இது விவசாயிகளுக்கு மாபெரும் சவாலாக அமையும்...

பார்க்கலாம்... இயற்கை எப்படியாவது சமன் செய்ய போகிறதா...?? இல்லை.. விவசாயிகளுக்கு சங்கூத இயற்கையும் உடந்தையாயிருக்க போகிறதா..??

சூர்யா சென்... - SURYA ZEN



சுஸ்மிதா சென் தெரியும்... ரியா சென் தெரியும்... ரியா சென்னோட அம்மா மூன் மூன் சென் கூட தெரியும்... இன்னும் கொஞ்ச பேருக்கு கூடுதலா அமர்த்தியா சென் தெரியும்....

சூர்யா சென் யாருன்னு தெரியுமா???

இன்னிக்கு நாம எல்லோருமே கொண்டாடுற அன்றைய தீவிரவாதி (???- ஆங்கிலேய அரசாங்கம் அப்படித்தான் சொன்னுச்சு) சுபாஷ் சந்திரபோஸ் "இந்திய தேசிய ராணுவம் " (INA) ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே "இந்தியன் ரிபப்ளிகன் ஆர்மி" அப்படின்ற சுதந்திர போராட்ட குழுவ அமைச்சவர்தான் இந்த சூர்யா சென்...

சூர்யா சென் ஒரு வாத்தியார்.. அதனால அவர எல்லோரும் "மாஸ்டர்தா"ன்னு சொல்வாங்க... காந்தியடிகளோட அமைதி வழி போராட்டத்தால் சுதந்திரம் வாங்க முடியாது.. வெள்ளைக்காரங்கள அடிச்சு தான் தொரத்தனும்.. அப்படின்னு ஒரு நோக்கத்தோட தன்னிடம் படிச்ச மாணவர்களை தேர்ந்தெடுத்து ஒரு ஆயுத போராட்ட குழுவ ஆரம்பிச்சார்.. அதுக்கு ஆளுங்கள எப்படி தேர்ந்தெடுத்தார் தெரியுமா??

ஒரு நாள் நடு ராத்திரி ஒரு சுடுகாட்டுக்கு வந்து தன்னை சந்திக்க சொன்னார்.. அப்படி யாருக்கேலாம் நடுராத்திரில சுடுகாட்டுக்கு வர தைரியம் இருந்துதோ.. அவங்கள எல்லாம் சேர்த்தார்.. மொத்தம் 63 பேர் சேர்ந்தாங்க.. ஓரிரு பெண்கள் உட்பட...

வெள்ளைகாரன அடிச்சு துரத்த நம்மூர்ல இருந்த போர்கருவிகளான ஈட்டி, வாள் எல்லாம் ஒத்துவராது... நமக்கும் துப்பாக்கி வெடி மருந்து எல்லாம் வேணும்னு முடிவு பண்ணி , வெள்ளைக்காரங்களோட ஆயுதக்கிடங்க கொளையடிக்க திட்டம் போட்டாங்க...

ஒரு லீவு நாள்ல அந்த கொல்லைக்கு நாள் குறிச்சு சிட்டகாங் அப்படின்ற இடத்துல இருந்த ஆயுத கிடங்குமேல தாக்குதல் நடத்தினாங்க... ஆனா துரதிஷ்டவசமா அந்த தாக்குதல்ல எதிர்பார்த்த வெற்றி கிடைக்கல..

அப்புறம் சிலபல ஒளிவு மறைவு யுத்தங்களுக்கு பிறகு சூர்யா சென் அப்படின்ற அந்த மாபெரும் போராளிய ஆங்கிலேய அரசாங்கம் கைது பண்ணி நகத்தை எல்லாம் புடுங்கி, பல்ல எல்லாம் புடுங்கி வங்காளத்துல இருந்த சௌலியாகஞ்ஜ் ஜெயில அடைச்சு வச்சு 1934- ஜனவரி மாதம் 12 ம் தேதி தூக்குல போட்டுட்டாங்க... அப்படி தூக்குல போட்ட உடம்ப கூட வங்காள விரிகுடா கடல் ல வீசிட்டாங்க.

மார்பக புற்றுநோய் - Breast Cancer



ஒரு சர்ச்சைக்குரிய பதிவு.... இதை படித்துவிட்டு நானூறு பேர் என்னை காறி துப்பலாம்... ஆனால் நாலு பேர் கொஞ்சம் யோசித்து செயல்படுத்தினால் கூட என் பதிவு வெற்றியடைந்ததாய் அர்த்தம்...

தம்முடைய உடம்பை தாமே உற்று கவனிப்பவர்கள் மிக மிக குறைவு... ஆனால் நமது பாலியல் துணையின் உடம்பை ஒவ்வொரு அங்குலமாக தடவி தடவி ரசிப்போம்... அந்த வகையில் பெண்களின் மார்பகங்கள் மீது ஆண்களுக்கு எப்போதுமே ஒரு தீராத மோகம் உண்டு....

காதலனோ- கணவனோ... உங்கள் இணையின் மார்பகங்களை காமத்தோடு அணுகும் போது கூட கொஞ்சம் கவனமாய் அணுகுங்கள்.. ஏதேனும் இயல்பை மீறிய கட்டிகள், வளர்ச்சிகள் தெரிந்தால் உடனடியாக மருத்துவரை அணுக பரிந்துரை செய்யுங்கள்...

ஏனென்றால் 2030 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் சுமார் 30% பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுவார்கள் என்று சென்னை அடையாறு புற்றுநோய் மைய இயக்குனர் திருமதி சாந்தா அவர்கள் சொல்கிறார்... முறையான விழிப்புணர்ச்சியும் , சோதனைகளும் சரியான நேரத்தில் கொடுக்கப்படும் சிகிச்சைக்களுமே அவர்களை காக்கும்...

அந்த 30 % த்தில் நம் வீட்டு பெண்களும் இருந்துவிட கூடாது...

எம் மூதாதையர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை...!!!



கல் நெஞ்சுக்காரர்களையும் கலங்கடித்துவிட்டது அந்த மரணம்.. அழக்கூட திராணியற்று வதங்கிப்போய் அந்த சவப்பெட்டியின் தலைப்பகுதியில் அமர்ந்திருந்தார் அந்த பெண்.. இறந்தவரின் மனைவியாயிருக்கும்...

கல்யாணமான ஐந்தாவது மாதம் விபத்தில் மரணமடைந்த இளைஞனின் சடலம் மாலைபோட்டு கிடத்தப்பட்டிருந்தது... 

ஒரு வயதான மூதாட்டி கையில் ஒரு சொம்புடன் வந்தார்.. கூட்டத்தினர் முன்னிலையில் அந்த சொம்பை உயர்த்திக்காட்ட கூட்டம் அழுகை நிறுத்தி உற்றுப்பார்க்க.. அந்த சொம்பை உயர்த்திய மூதாட்டி இன்னொரு கையில் இருந்து வெள்ளை நிறத்தில் மூன்று பூக்களை அந்த சொம்பினுள் போட்டார்...
கதறல் அதிகமானது...

எதற்காக அவர் அப்படி செய்தார்..?? விசாரித்ததில் கிடைத்த விளக்கம்...

மரணமடைந்தவரின் மனைவி மூன்று மாத கர்ப்பம்.. கணவன் இறந்த பின் குழந்தை பிறந்தால் அந்த பெண்ணை பற்றி, அவளின் நடத்தை பற்றி அறியாமல் கூட எவரும் தவறாக பேசி விட கூடாதென கூட்டத்தின் முன்னிலையில் தெரிவிக்கப்பட்ட தகவல் அது...

# ஒவ்வொரு சடங்கும் ஒரு காரணத்துடன்... எம் மூதாதையர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை...!!!

ரெண்டாம் சடங்கு

அடுப்புல கிடாக்கறி வெந்துகிட்டு இருந்துது... அந்த அடுப்ப தள்ளிவிடு.... சோறு வெந்துடுச்சா பார்.. அப்படி இப்படின்னு பொம்பளைங்க சமையக்காரன அதிகாரம் பண்ணிட்டு இருந்தாங்க...

ஆம்பளைங்க வழக்கம் போல புளியமரத்துக்கு கீழ படுதா விரிச்சு கொஞ்சம் பேரு அரசியல் பேசினாங்க.. கொஞ்சம் பேரு சீட்டு விளையாண்டாங்க... 

இப்போதான் பத்து பதினஞ்சு நாளைக்கு முன்னாடிதான் அந்த வீட்டுல கல்யாணம் நடந்துது.. பந்த பிரிச்சு மூணு நாளுதான் ஆவுது... இன்னிக்கு நடக்குற தடபுடல் சமையல், கூட்டம் எல்லாத்தையும் பாத்ததும் எனக்கு ஆச்சரியம்...

கல்யாணம் நடந்த வீட்டுல விருந்து நடக்குறதுல என்ன ஆச்சரியம்?? இது எல்லா இடத்துலயும் நடக்குறதுதான.... அப்படின்னு கேக்குறீங்களா??? சொல்றேன் இருங்க...

ஆச்சர்யத்துக்கு காரணம்... சமையல் நடந்த இடம்.. மாப்பிள்ளை வீடு... சமையக்காரங்கள வேலை வாங்கிட்டும், வரவங்க வரவேத்துகிட்டும் இருந்தவங்க எல்லாம் பொண்ணு வீட்டுக்காரங்க... நம்ம வீட்டுக்கு வர விருந்தாளிங்கள நாம்தான வரவேத்து விருந்து வைப்போம்.. இங்க என்ன பொண்ணு வீட்டுக்காரங்க வந்து எல்லோரையும் வரவேத்து விருந்து வைக்கிறாங்க... ?/ இப்போ எனக்கு வந்த அதே ஆச்சரியம் உங்களுக்கும் வந்திருக்கு தான...??

வாங்களேன்.. ஒரு எட்டு என்னன்னு விசாரிப்போம்...

என்னண்ணே விசேஷம்.. சமையல் எல்லாம் தடபுடலா இருக்கு...??

பொண்ணு ரெண்டாம் சடங்கு ஆயிருக்கு தம்பி...

ரெண்டாம் சடங்கா....? அப்படின்னா??



நம்மூருகள்ள ஒரு பொண்ணு சமைஞ்சதும் ஊருக்கெல்லாம் சொல்லி சடங்கு சுத்துவோம்... அது எதுக்குன்னா எங்க வீட்டுல ஒரு பொண்ணு கல்யாணத்துக்கு தயாரா இருக்குன்னு சொந்தம் சோலிக்கெல்லாம்சொல்றதுக்கு.. அதும்மாதிரி கல்யாணம் கட்டிக்கொடுத்த பொண்ணு, கல்யாணம் முடிஞ்சு வாக்கப்பட்ட வீட்டுக்கு வந்து மொத தடவையா வீட்டுக்கு விலக்காகறத இப்படி ஊரை எல்லாம் அழைச்சு விருந்து வச்சு கொண்டாடுவோம்... இது ஏன்னா... "என் பொண்ண நான் கற்போடதான் கட்டிக்கொடுத்திருக்கேன்.. என் பொண்ணு ரகசியமா வேற யார்கிட்டயோ கெட்டு போய் வயித்துல புள்ளையோட இங்க கட்டிக்கொடுக்கல.."ன்னு ஊருக்கு சொல்லத்தான்...

பொண்ணு வீட்டுக்காரங்களுக்கு இது ஒரு பெரிய கவுரவம்.. ஊர்ல ஒரு பய நாக்கு மேல பல்ல போட்டு பேச முடியாது பாருங்க... பொண்ணு வீட்டுக்காரங்களே மாப்பிள்ளை வீட்டுக்கு வந்து சமையல் செஞ்சு சொந்தம் சோலி எல்லாரையும் கூப்பிட்டு விருந்து வைப்போம்... அதான் இன்னிக்கு இங்க சமையல் நடக்குது...

அட.. உலை வாய மூடினாலும் ஊர் வாய மூட முடியாதுன்னு படிச்சிருக்கோம்....ஒரு உலை வாய மூடுறது மூலமா ஊர் வாய மூடுற புத்திசாலித்தனம் எப்படிய்யா உங்களுக்கு மட்டும் வாச்சுது..?? அந்த அறிவ நாங்க எங்க தொலைச்சோம்...??

தர்மம் கொடுக்கப்படும் நட்பு



மகா பாரதத்தில் குருஷேத்திர யுத்தத்தில் அர்ஜுனனின் பாணத்தால் அடிபட்ட கர்ணன் தேர்க்காலில் சாய்ந்தபடி படுத்திருப்பான்... அப்போது மாறுவேடத்தில் வரும் கிருஷ்ணன், கர்ணனிடம் தானம் கேட்பான்... "இப்போது கொடுக்க எதுவும் இல்லையே... " என கர்ணன் வருந்த..
கண்ணனோ.."கர்ணா உன்னுடைய செய்புண்ணியத்தை தானமாக கொடு" என கேட்பார்...

இதுவரை செய்த புண்ணியங்களை எல்லாம் தானமாக கொடுத்தால் அதுவே பெரிய புண்ணியமாகி விடுமே.. அப்புறம் எப்படி கர்ணனின் உயிர் போகும்?? எனவே தான் "செய்புண்ணியம்" என்ற வார்த்தையை பயன் படுத்தினார்... அதாவது.. இதுவரை செய்த புண்ணியங்கள், இனிமேல் செய்யப்போகும் புண்ணியங்கள்" என எக்காலத்திற்கும் பொருந்தும் வார்த்தை விளையாட்டு அது...

இன்னும் எளிமையாய் சொல்லப்போனால்.... "ஊறுகாய்"... அதாவது ஊறிய காய்.... ஊறும் காய்.... ஊறப்போகும் காய்.. என்று முக்காலத்திற்கும் பொருந்த கூடிய வார்த்தை போல... "செய்புண்ணியம் " என்பது முக்காலமும் பொருந்தக்கூடிய வார்த்தை ...



திருமண மேடையில் நிற்கும் மணப்பெண் தன்னை சந்திக்க வரும் நண்பனிடம் எதிர்பார்க்கும் அன்பளிப்பு (பரிசு) நட்பு தான்...

அதாவது இதுவரை இருந்த நமது நட்பு... இனிமேல் வரப்போகும் காலத்திற்கான நமது நட்பு எல்லாவற்றையும் எனக்கு பரிசாக கொடு என்பதாய் பார்வையில் கேட்க...

கையில் வண்ணக்காகிதம் சுற்றப்பட்ட பொருளுடன் நட்பையும் பரிசாக கொடுக்கும் நண்பன் கர்ணனாய் வெளியே வருகிறான்...

திருமணத்திற்கு பிறகான கல்லூரிகால ஆண் பெண் நட்பு என்பது இன்றளவும் இந்த நிலையில் தான் இருக்கிறது...


இதுவாவது பரவாயில்லை... நண்பனிடம் நட்பை தான் தானமாக கேட்டாள்.. ஆனால் கணவனிடமோ.. உறவுகளையோ தானமாக கேட்டு விடுகிறாள்...

ஆம்..... திருமணமான உடன் பெண்களின் நட்பு துண்டிக்கப்படுகிறது.. ஆண்களுக்கோ.. உறவுகளே துண்டிக்கப்படுகிறது...

நான் ஒரு இந்து

நான் இந்து மதத்தை சேர்ந்தவன்... இந்து மத நம்பிக்கைகளை கொண்ட குடும்பத்தில் பிறந்ததால் நானும் அவ்வாறே அதை பின்பற்ற தொடங்கி எனது சிற்றறிவிற்கு எட்டிய வரையில் இந்து மதத்தில் இருக்கும் நம்பிக்கைகளை அறிவுப்பூர்வமாகவும், அறிவியல் பூர்வமாகவும் யோசித்து உணர முற்படுகிறேன்... புராண கதைகளை அப்படியே கண்ணை மூடிக்கொண்டு நம்பாமல் அதன் உள்ளீடாக சொல்லப்பட்டிருக்கும் செய்தி என்ன என்பதை யோசிக்க முற்படுகிறேன்...

எல்லாவற்றிற்கும் மேலாக, "இறைவன்" என்று எல்லோராலும் ஒப்புக்கொள்ளப்பட்டு, அவரவர் மதத்திற்கு ஏற்ப ஆளுக்கொரு பெயரோ, பல பெயர்களோ சொல்லி வணங்கும் சக்தியை நம்புகிறேன்...

இந்து மதத்தை பற்றி நான் படித்த, கேள்விப்பட்ட, உணர்ந்த, யோசித்த விஷயங்களை எழுத்துக்களாய் பதிவு செய்கிறேன்... இந்து மதத்தை பற்றி மட்டுமல்லாமல் இஸ்லாம், கிறிஸ்தவம், சீக்கியம், புத்தம் என பல்வேறு மதங்களை பற்றி நான் அறிந்த நல்ல தகவல்களை பற்றியும் எழுதுகிறேன்..

நான் சேர்ந்த மதத்தை பற்றியோ, மற்ற மதங்களை பற்றியோ தரக்குறைவான எழுத்துக்களை நான் எழுதுவது இல்லை... ஆனால் சில நண்பர்கள் தங்கள் அறியாமையின் காரணமாக தான் சார்ந்த மதத்தை பற்றியோ, மற்றவர்களின் மதங்களை பற்றியோ மிக தரக்குறைவான விமர்சனங்களை முன் வைக்கிறார்கள்... மேலும் அப்படியான தரக்குறைவான விமர்சனங்களை என்னுடைய நண்பர்கள் பட்டியலில் இருக்கும் சிலரும் வரவேற்று , மேலும் அவ்வாறு எழுத தூண்டுகிறார்கள்.. இது மிகவும் என் போன்ற பலரை காயப்படுத்துவதாக இருக்கிறது..

அவரவர் நம்பிக்கைகள் அவரவருக்கு... அடுத்தவர்களின் நம்பிக்கையை பழித்தும், அடுத்தவர்களின் மத நம்பிக்கையை தூற்றியும்தான் நம் மதத்தை பெருமைப்படுத்த வேண்டுமா??? 



நான் ஒரு "இஸ்லாமிய நாடு" என்று பிரகனபடுத்தப்பட்ட நாட்டில் பணி புரிகிறேன்... இங்கே முழுக்க முழுக்க இஸ்லாமியர்கள் தான் நிறைந்திருக்கிறார்கள்.. ஆனால் இந்த நாட்டை சேர்ந்த எவரும் என்னுடைய நம்பிக்கையை பழிக்கவோ, என் மதத்தை தூற்றவோ இல்லை... ஆனால் இந்து-முஸ்லிம்-கிருஸ்தவம்-சீக்கியம் என்ற பல மதங்களை கொண்ட ஜனநாயக நாடான இந்தியாவில் வசிக்கும் மனிதர்களுக்கு எப்படி வேறொரு மதத்தை தூற்ற வேண்டும் என்ற எண்ணம் வருகிறது????

உங்களது நம்பிக்கைகளை வெளிப்படுத்துங்கள்.. உங்கள் பெருமைகளை பறைசாற்றுங்கள்.. உங்கள் மத கோட்பாடுகளில் இருக்கும் நல்ல செய்திகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.. ஆனால் சொந்த மதத்தையோ, மற்றவரின் மதத்தையோ தரக்குறைவாக விமர்சிக்காதீர்கள்... அப்படி விமர்சிப்பவரை விலக்கி வையுங்கள்.. அவர்களை எக்காரணம் கொண்டும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஊக்குவிக்காதீர்கள்...

அடுத்த வீட்டுக்காரன் உங்களை பற்றி பெருமையாக நினைக்க வேண்டும் என்பதற்காக "உங்கள் மனைவிதான் பத்தினி.. என் மனைவி விபச்சாரி.." என்று சொல்வீர்களா??? "உங்கள் தந்தை நல்லவர்.. என்னுடைய தந்தை பல குடிகளை கெடுத்தவர்.. கொலை காரர்.. " என்று சொல்வீர்களா??

நற்பழக்கங்களை விதையுங்கள்... அதை உங்கள் தலைமுறைகள் அறுவடை செய்யும்... 

துவேஷங்களை விதைக்காதீர்கள்.. அது உங்கள் தலைமுறையை அறுவடை செய்யும்...!!!

தஞ்சை மாவட்டத்தின் நெல் சேமிப்பு கலன்கள்..


பத்தாயம்:- 

ஒன்று அல்லது ஒன்றரை அடி அகலமும் நான்கு அல்லது ஐந்து அடி நீளமும் உள்ள பலகைகளை சதுரமாகவோ, செவ்வகமாகவோ பெட்டிபோல இணைத்து (இதற்கு சட்டி என்று பெயர்) , அந்த சதுர பெட்டிகளை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி இணைத்து (நான்கு அல்லது ஐந்து சட்டிகள்) ஒரு உயரமான கொள்கலன் செய்வார்கள்.. இதில் கொள்ளளவிற்கேற்ப இருபத்தைந்து மூட்டைகளோ.. ஐம்பது மூட்டைகளோ வரை சேமிக்கலாம்.. ( ஒரு மூட்டை என்பது 70 கிலோ) அவரவர்களின் விளைநிலங்களின் அளவை பொறுத்து ஒன்று, இரண்டு, மூன்று நான்கு கூட வைத்திருப்பார்கள்..

கோட்டை:-

வைக்கோலை கயிறுபோல திரித்து (இதன் பெயர் பிரி)அதனை ஒரு நட்சத்திரம் வரைவதுபோல குறுக்கும் நெடுக்குமாக தரையில் விரித்து அதன் மீது உதிரி வைக்கோலை பரப்பி அதில் நெல்லை கொட்டி ஒரு பந்துபோல உருட்டி வைக்கோல் பிரிகளால் இறுக்க கட்டி விடுவார்கள்.. பிறகு இதன் மீது மாட்டு சாணத்தால் மெழுகி காயவைத்து விடுவார்கள்.. இதில் சுமார் ஒரு மூட்டை அளவு நெல்லை பாதுகாக்கலாம்... மறுபடியும் அடுத்த பருவத்திற்கு பயிரிட தேவையான விதை நெல்லை இப்படி பாதுகாப்பார்கள்.. இப்படி பாதுகாப்பதால் அந்த விதை பூச்சி புழுக்கள் அண்டாமல் ஒரு குறிப்பிட்ட சீதோஷ்ண நிலையிலேயே இருக்கும்.. இதனால் விதை நெல் முளைப்புத்திறன் குறையாமல் பாதுகாக்கப்படும் ..

சேர் (சேரு) :-

முதலில் வைக்கோலை மிக நீண்ட பிரியாக திரித்துக்கொள்வார்கள் .. வீட்டின் வாசலில் குறைந்தது ஆறு அடி விட்டமுள்ள அரை அடி(அ) ஒரு அடி உயரமுள்ள மண் மேடு அமைத்து அதில் உதிரி வைக்கோலை பரப்பி பிறகு அதில் நெல்லை கொட்டி.. திரித்து வைத்த வைக்கோல் பிரியால் சுற்றி சுற்றி சுவர் போல் உயர்த்துவார்கள்.. இப்படி உயர்த்தி உயர்த்து சுமார் ஆறு முதல் எட்டு அடி உயரம் கொண்டு செல்வார்கள்.. பிறகு மேற்புறம் வைக்கோலால் கூரை வேய்ந்து மூடி விடுவார்கள்.. இது ஒரு தேர் போல காட்சியளிக்கும்.. இதில் குறைந்த பட்சம் இருபது மூட்டைகள் வரை சேமிக்கலாம்..

குதிர்:-

களிமண் மற்றும் வைக்கோலை கொண்டு உறைகள் என்று சொல்லப்படும் வளையங்கள் செய்து, அதனை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி ஒரு பெரிய கொள்கலன் செய்யப்படும்... இதன் கடைசி உறையின் கீழ் புறம் பக்கவாட்டில் நெல் எடுப்பதற்காக ஒரு துவாரம் அமைக்கப்பட்டிருக்கும்.. இதனை வைக்கோலை அடைத்து களிமண்ணால் பூசி விடுவார்கள். தேவைப்படும் போது இதை திறந்து நெல்லை எடுக்கலாம்..இதில் சுமார் பத்து மூடைகள் வரை சேமிக்கலாம்...

கூன்:-

இது குயவர்களால் செய்யப்படும்.. முதுமக்கள் தாழி என்று சொல்லப்படுவது போல இருக்கும் சுட்ட களிமண்ணால் ஆனது... இதில் குறைந்தது ஒரு கலம் (ஒரு கலம் என்பது பன்னிரண்டு மரக்கால்) அளவு சேமிக்கலாம்.. இதில் நெல், அரிசி, இன்னும் மற்ற சிறு தானியங்களையும் சேமிப்பார்கள்...

# அரிசி எந்த மரத்தில் காய்க்கும் என்று கேட்கப்போகும் எதிர்வரும் கால நவீன தலைமுறைக்கான அறிமுகப்பதிவு..

மனைவியின் கடமை



ராமனின் மனைவியை கேள்விப்பட்டிருக்கிறோம்... தர்மனின் மனைவி பற்றி அறிந்திருக்கிறோம்... ராவணன் மனைவி பற்றியோ, துரியோதனன் மனைவி பற்றியோ என்றைக்காவது சிந்தித்திருக்கிறோமா...??

நல்வாழ்க்கை வாழ்ந்தவர்களின் மனைவியும் நல்வாழ்க்கை தான் வாழ்ந்திருப்பார்.. ஆனால் கெட்டவர்களாக சித்தரிக்கப்படும் அவர்களின் மனைவியர்??? அவர்களும் கெட்டவர்களா என்ன...??? 
இல்லை... மாறாக.. ராமன், தர்மன் மனைவியரை விட உயர்ந்தவர்கள் , போற்றத்தக்கவர்கள் ராவணன் மனைவியும், துரியோதனின் மனையும்தான்...

தம்முடைய கணவன் தர்மத்திற்கு புறம்பாக, நீதிக்கு புறம்பாக நடக்கிறான் என்பது அவர்களுக்கு நன்கு தெரியும்... ஆனாலும் அவர்கள் தங்கள் கணவனை விட்டு விலகவில்லை.. ஏன் தெரியுமா?? நான் இவனின் மனைவி.. இவனுக்கான பணிவிடைகள் செய்வது ஒன்றுதான் எனது தர்மம்... இவன் செய்யும் தீமைகளுக்கான பலனை இறைவன் கொடுக்கட்டும்.. அதை பற்றி யோசிப்பது கூட எனது வேலை இல்லை... என் கடமையை நான் செய்வேன் என்று கடைசி வரை அவர்களுடனே இருந்தவர்கள்..

ஆனால் துரதிஷ்டவசமாக, நல்லவர்களுடன் இருக்க மனைவிகளுக்கு பிடிப்பதில்லை...

(சொல்லி திருத்தி இருக்கலாமே.. என்ற சந்தேகம் வரலாம்... எடுபடாத இடங்களில் ஆலோசனை சொல்வதோ, அறிவுரை சொல்வதோ எந்த பயனையும் விளைவிக்காது )