செவ்வாய், 28 ஜூலை, 2015

தஞ்சை மாவட்டத்தின் நெல் சேமிப்பு கலன்கள்..


பத்தாயம்:- 

ஒன்று அல்லது ஒன்றரை அடி அகலமும் நான்கு அல்லது ஐந்து அடி நீளமும் உள்ள பலகைகளை சதுரமாகவோ, செவ்வகமாகவோ பெட்டிபோல இணைத்து (இதற்கு சட்டி என்று பெயர்) , அந்த சதுர பெட்டிகளை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி இணைத்து (நான்கு அல்லது ஐந்து சட்டிகள்) ஒரு உயரமான கொள்கலன் செய்வார்கள்.. இதில் கொள்ளளவிற்கேற்ப இருபத்தைந்து மூட்டைகளோ.. ஐம்பது மூட்டைகளோ வரை சேமிக்கலாம்.. ( ஒரு மூட்டை என்பது 70 கிலோ) அவரவர்களின் விளைநிலங்களின் அளவை பொறுத்து ஒன்று, இரண்டு, மூன்று நான்கு கூட வைத்திருப்பார்கள்..

கோட்டை:-

வைக்கோலை கயிறுபோல திரித்து (இதன் பெயர் பிரி)அதனை ஒரு நட்சத்திரம் வரைவதுபோல குறுக்கும் நெடுக்குமாக தரையில் விரித்து அதன் மீது உதிரி வைக்கோலை பரப்பி அதில் நெல்லை கொட்டி ஒரு பந்துபோல உருட்டி வைக்கோல் பிரிகளால் இறுக்க கட்டி விடுவார்கள்.. பிறகு இதன் மீது மாட்டு சாணத்தால் மெழுகி காயவைத்து விடுவார்கள்.. இதில் சுமார் ஒரு மூட்டை அளவு நெல்லை பாதுகாக்கலாம்... மறுபடியும் அடுத்த பருவத்திற்கு பயிரிட தேவையான விதை நெல்லை இப்படி பாதுகாப்பார்கள்.. இப்படி பாதுகாப்பதால் அந்த விதை பூச்சி புழுக்கள் அண்டாமல் ஒரு குறிப்பிட்ட சீதோஷ்ண நிலையிலேயே இருக்கும்.. இதனால் விதை நெல் முளைப்புத்திறன் குறையாமல் பாதுகாக்கப்படும் ..

சேர் (சேரு) :-

முதலில் வைக்கோலை மிக நீண்ட பிரியாக திரித்துக்கொள்வார்கள் .. வீட்டின் வாசலில் குறைந்தது ஆறு அடி விட்டமுள்ள அரை அடி(அ) ஒரு அடி உயரமுள்ள மண் மேடு அமைத்து அதில் உதிரி வைக்கோலை பரப்பி பிறகு அதில் நெல்லை கொட்டி.. திரித்து வைத்த வைக்கோல் பிரியால் சுற்றி சுற்றி சுவர் போல் உயர்த்துவார்கள்.. இப்படி உயர்த்தி உயர்த்து சுமார் ஆறு முதல் எட்டு அடி உயரம் கொண்டு செல்வார்கள்.. பிறகு மேற்புறம் வைக்கோலால் கூரை வேய்ந்து மூடி விடுவார்கள்.. இது ஒரு தேர் போல காட்சியளிக்கும்.. இதில் குறைந்த பட்சம் இருபது மூட்டைகள் வரை சேமிக்கலாம்..

குதிர்:-

களிமண் மற்றும் வைக்கோலை கொண்டு உறைகள் என்று சொல்லப்படும் வளையங்கள் செய்து, அதனை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி ஒரு பெரிய கொள்கலன் செய்யப்படும்... இதன் கடைசி உறையின் கீழ் புறம் பக்கவாட்டில் நெல் எடுப்பதற்காக ஒரு துவாரம் அமைக்கப்பட்டிருக்கும்.. இதனை வைக்கோலை அடைத்து களிமண்ணால் பூசி விடுவார்கள். தேவைப்படும் போது இதை திறந்து நெல்லை எடுக்கலாம்..இதில் சுமார் பத்து மூடைகள் வரை சேமிக்கலாம்...

கூன்:-

இது குயவர்களால் செய்யப்படும்.. முதுமக்கள் தாழி என்று சொல்லப்படுவது போல இருக்கும் சுட்ட களிமண்ணால் ஆனது... இதில் குறைந்தது ஒரு கலம் (ஒரு கலம் என்பது பன்னிரண்டு மரக்கால்) அளவு சேமிக்கலாம்.. இதில் நெல், அரிசி, இன்னும் மற்ற சிறு தானியங்களையும் சேமிப்பார்கள்...

# அரிசி எந்த மரத்தில் காய்க்கும் என்று கேட்கப்போகும் எதிர்வரும் கால நவீன தலைமுறைக்கான அறிமுகப்பதிவு..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக