செவ்வாய், 28 ஜூலை, 2015

ரெண்டாம் சடங்கு

அடுப்புல கிடாக்கறி வெந்துகிட்டு இருந்துது... அந்த அடுப்ப தள்ளிவிடு.... சோறு வெந்துடுச்சா பார்.. அப்படி இப்படின்னு பொம்பளைங்க சமையக்காரன அதிகாரம் பண்ணிட்டு இருந்தாங்க...

ஆம்பளைங்க வழக்கம் போல புளியமரத்துக்கு கீழ படுதா விரிச்சு கொஞ்சம் பேரு அரசியல் பேசினாங்க.. கொஞ்சம் பேரு சீட்டு விளையாண்டாங்க... 

இப்போதான் பத்து பதினஞ்சு நாளைக்கு முன்னாடிதான் அந்த வீட்டுல கல்யாணம் நடந்துது.. பந்த பிரிச்சு மூணு நாளுதான் ஆவுது... இன்னிக்கு நடக்குற தடபுடல் சமையல், கூட்டம் எல்லாத்தையும் பாத்ததும் எனக்கு ஆச்சரியம்...

கல்யாணம் நடந்த வீட்டுல விருந்து நடக்குறதுல என்ன ஆச்சரியம்?? இது எல்லா இடத்துலயும் நடக்குறதுதான.... அப்படின்னு கேக்குறீங்களா??? சொல்றேன் இருங்க...

ஆச்சர்யத்துக்கு காரணம்... சமையல் நடந்த இடம்.. மாப்பிள்ளை வீடு... சமையக்காரங்கள வேலை வாங்கிட்டும், வரவங்க வரவேத்துகிட்டும் இருந்தவங்க எல்லாம் பொண்ணு வீட்டுக்காரங்க... நம்ம வீட்டுக்கு வர விருந்தாளிங்கள நாம்தான வரவேத்து விருந்து வைப்போம்.. இங்க என்ன பொண்ணு வீட்டுக்காரங்க வந்து எல்லோரையும் வரவேத்து விருந்து வைக்கிறாங்க... ?/ இப்போ எனக்கு வந்த அதே ஆச்சரியம் உங்களுக்கும் வந்திருக்கு தான...??

வாங்களேன்.. ஒரு எட்டு என்னன்னு விசாரிப்போம்...

என்னண்ணே விசேஷம்.. சமையல் எல்லாம் தடபுடலா இருக்கு...??

பொண்ணு ரெண்டாம் சடங்கு ஆயிருக்கு தம்பி...

ரெண்டாம் சடங்கா....? அப்படின்னா??



நம்மூருகள்ள ஒரு பொண்ணு சமைஞ்சதும் ஊருக்கெல்லாம் சொல்லி சடங்கு சுத்துவோம்... அது எதுக்குன்னா எங்க வீட்டுல ஒரு பொண்ணு கல்யாணத்துக்கு தயாரா இருக்குன்னு சொந்தம் சோலிக்கெல்லாம்சொல்றதுக்கு.. அதும்மாதிரி கல்யாணம் கட்டிக்கொடுத்த பொண்ணு, கல்யாணம் முடிஞ்சு வாக்கப்பட்ட வீட்டுக்கு வந்து மொத தடவையா வீட்டுக்கு விலக்காகறத இப்படி ஊரை எல்லாம் அழைச்சு விருந்து வச்சு கொண்டாடுவோம்... இது ஏன்னா... "என் பொண்ண நான் கற்போடதான் கட்டிக்கொடுத்திருக்கேன்.. என் பொண்ணு ரகசியமா வேற யார்கிட்டயோ கெட்டு போய் வயித்துல புள்ளையோட இங்க கட்டிக்கொடுக்கல.."ன்னு ஊருக்கு சொல்லத்தான்...

பொண்ணு வீட்டுக்காரங்களுக்கு இது ஒரு பெரிய கவுரவம்.. ஊர்ல ஒரு பய நாக்கு மேல பல்ல போட்டு பேச முடியாது பாருங்க... பொண்ணு வீட்டுக்காரங்களே மாப்பிள்ளை வீட்டுக்கு வந்து சமையல் செஞ்சு சொந்தம் சோலி எல்லாரையும் கூப்பிட்டு விருந்து வைப்போம்... அதான் இன்னிக்கு இங்க சமையல் நடக்குது...

அட.. உலை வாய மூடினாலும் ஊர் வாய மூட முடியாதுன்னு படிச்சிருக்கோம்....ஒரு உலை வாய மூடுறது மூலமா ஊர் வாய மூடுற புத்திசாலித்தனம் எப்படிய்யா உங்களுக்கு மட்டும் வாச்சுது..?? அந்த அறிவ நாங்க எங்க தொலைச்சோம்...??

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக