செவ்வாய், 28 ஜூலை, 2015

நான் ஒரு இந்து

நான் இந்து மதத்தை சேர்ந்தவன்... இந்து மத நம்பிக்கைகளை கொண்ட குடும்பத்தில் பிறந்ததால் நானும் அவ்வாறே அதை பின்பற்ற தொடங்கி எனது சிற்றறிவிற்கு எட்டிய வரையில் இந்து மதத்தில் இருக்கும் நம்பிக்கைகளை அறிவுப்பூர்வமாகவும், அறிவியல் பூர்வமாகவும் யோசித்து உணர முற்படுகிறேன்... புராண கதைகளை அப்படியே கண்ணை மூடிக்கொண்டு நம்பாமல் அதன் உள்ளீடாக சொல்லப்பட்டிருக்கும் செய்தி என்ன என்பதை யோசிக்க முற்படுகிறேன்...

எல்லாவற்றிற்கும் மேலாக, "இறைவன்" என்று எல்லோராலும் ஒப்புக்கொள்ளப்பட்டு, அவரவர் மதத்திற்கு ஏற்ப ஆளுக்கொரு பெயரோ, பல பெயர்களோ சொல்லி வணங்கும் சக்தியை நம்புகிறேன்...

இந்து மதத்தை பற்றி நான் படித்த, கேள்விப்பட்ட, உணர்ந்த, யோசித்த விஷயங்களை எழுத்துக்களாய் பதிவு செய்கிறேன்... இந்து மதத்தை பற்றி மட்டுமல்லாமல் இஸ்லாம், கிறிஸ்தவம், சீக்கியம், புத்தம் என பல்வேறு மதங்களை பற்றி நான் அறிந்த நல்ல தகவல்களை பற்றியும் எழுதுகிறேன்..

நான் சேர்ந்த மதத்தை பற்றியோ, மற்ற மதங்களை பற்றியோ தரக்குறைவான எழுத்துக்களை நான் எழுதுவது இல்லை... ஆனால் சில நண்பர்கள் தங்கள் அறியாமையின் காரணமாக தான் சார்ந்த மதத்தை பற்றியோ, மற்றவர்களின் மதங்களை பற்றியோ மிக தரக்குறைவான விமர்சனங்களை முன் வைக்கிறார்கள்... மேலும் அப்படியான தரக்குறைவான விமர்சனங்களை என்னுடைய நண்பர்கள் பட்டியலில் இருக்கும் சிலரும் வரவேற்று , மேலும் அவ்வாறு எழுத தூண்டுகிறார்கள்.. இது மிகவும் என் போன்ற பலரை காயப்படுத்துவதாக இருக்கிறது..

அவரவர் நம்பிக்கைகள் அவரவருக்கு... அடுத்தவர்களின் நம்பிக்கையை பழித்தும், அடுத்தவர்களின் மத நம்பிக்கையை தூற்றியும்தான் நம் மதத்தை பெருமைப்படுத்த வேண்டுமா??? 



நான் ஒரு "இஸ்லாமிய நாடு" என்று பிரகனபடுத்தப்பட்ட நாட்டில் பணி புரிகிறேன்... இங்கே முழுக்க முழுக்க இஸ்லாமியர்கள் தான் நிறைந்திருக்கிறார்கள்.. ஆனால் இந்த நாட்டை சேர்ந்த எவரும் என்னுடைய நம்பிக்கையை பழிக்கவோ, என் மதத்தை தூற்றவோ இல்லை... ஆனால் இந்து-முஸ்லிம்-கிருஸ்தவம்-சீக்கியம் என்ற பல மதங்களை கொண்ட ஜனநாயக நாடான இந்தியாவில் வசிக்கும் மனிதர்களுக்கு எப்படி வேறொரு மதத்தை தூற்ற வேண்டும் என்ற எண்ணம் வருகிறது????

உங்களது நம்பிக்கைகளை வெளிப்படுத்துங்கள்.. உங்கள் பெருமைகளை பறைசாற்றுங்கள்.. உங்கள் மத கோட்பாடுகளில் இருக்கும் நல்ல செய்திகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.. ஆனால் சொந்த மதத்தையோ, மற்றவரின் மதத்தையோ தரக்குறைவாக விமர்சிக்காதீர்கள்... அப்படி விமர்சிப்பவரை விலக்கி வையுங்கள்.. அவர்களை எக்காரணம் கொண்டும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஊக்குவிக்காதீர்கள்...

அடுத்த வீட்டுக்காரன் உங்களை பற்றி பெருமையாக நினைக்க வேண்டும் என்பதற்காக "உங்கள் மனைவிதான் பத்தினி.. என் மனைவி விபச்சாரி.." என்று சொல்வீர்களா??? "உங்கள் தந்தை நல்லவர்.. என்னுடைய தந்தை பல குடிகளை கெடுத்தவர்.. கொலை காரர்.. " என்று சொல்வீர்களா??

நற்பழக்கங்களை விதையுங்கள்... அதை உங்கள் தலைமுறைகள் அறுவடை செய்யும்... 

துவேஷங்களை விதைக்காதீர்கள்.. அது உங்கள் தலைமுறையை அறுவடை செய்யும்...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக