சனி, 7 மார்ச், 2015

விளம்பரப்படங்களில் நடுத்தர வர்க்கத்தை நையாண்டி செய்து அவர்கள் மீது வீசப்படும் வியாபார வலை...

இந்தியாவில் தயாராகும் நுகர்வோர் பொருட்களின் பெரும்பான்மை குறி சுமார் அறுபது சதவிகித்திற்கும் அதிகமாக இருக்கும் நடுத்தர வர்க்கம் தான்..  கிராமங்களில் கூட பரவாயில்லை.. நடுத்தர வர்க்கத்தினரில் பெரும்பான்மையானோருக்கு  சொந்த வீடு  இருக்கும்.. ஆனால் சிறு- பெரு நகரங்களில் வாழும் இந்த நடுத்தர வர்க்கம் படும் பாடு சொல்லி மாளாது.. கூடுமான வரை சொந்த வீடு இருப்பதில்லை.. வாடகைக்கு தான் குடி இருப்பார்கள்.. அதிலும் கீழ்தட்டு நடுத்தர வர்க்கம் இருக்கும் குடித்தனங்களை பற்றி சொல்லவே வேண்டாம்.. 

நீளமாய் ஒரு - அல்லது இரண்டு அடுக்குகளாக கட்டப்பட்ட புறாக்கூண்டு குடித்தனங்கள் , ஓரிரு பொது கழிவறைகளுடன்.. இந்த கழிவறைகளில் சவப்பெட்டியில் படுத்திருப்பது போல தான் உட்கார முடியும்..  அதிக வாடகைக்கு பயந்தோ - வேலை செய்யும் இடம் அருகில் இருப்பதாலோ இவர்கள் அந்த புறாக்கூண்டுகளில் வாழ பழகியவர்கள்..

அவர்கள் இருக்கும் தெருவை பற்றி அங்கு வசிப்பவர்களும் கவலை படுவதில்லை.. நகராட்சி- மாநகராட்சியும் கவலை படுவதில்லை.. அங்கே வசிப்பவர்கள் அவ்வப்போது உடைந்து வெளியேறும் சாக்கடை கண்டோ- ரோட்டில் இரைந்த குப்பை கண்டோ முகம் சுழிப்பதுடன்  லேசான முனுமுனுப்புடன் தங்களின் அன்றாட கடமைகளில் ஐக்கியமாகி விடுவார்கள்..
அப்படி பட்ட தெருக்களில் வசிக்கும் பள்ளிக்குழந்தைகளை குறிவைக்கிறது ஒரு விளம்பரம்.. " ஐயோ.. என் சட்டையெல்லாம் நாத்தமடிக்குதே.. " எனும் சோப்பு தூள் விளம்பரம்..

நம்மை எல்லாம் எவ்வளவு தூரம் அசிங்கப்படுத்த முடியுமோ அவ்வளவு தூரம் அசிங்கப்படுத்தும்  அவர்கள் பொருட்களை வாங்கி அவர்களை மில்லியன்களில்  புரளச்செய்வதை தவிர்ப்போம்.. அவர்களை நிராகரிப்போம்..
நமக்கு எது தேவையோ அதை மட்டும் வாங்குவோம்.. நல்ல பாம்பை பார்த்து நாக்கட்டாம்பாம்பு ஆடினதாம் என்றும்... புலிய பாத்து பூனை சூடு போட்டுகிட்டதாம் என்றும்... எம் கிராமத்து மனிதர்கள் பொழுது போக்காய் சொல்லவில்லை.. ஒவ்வொன்றையும் அனுபவித்து தான் சொல்லி இருக்கிறார்கள்...
இதை எல்லாம் வாங்கி  உபயோகித்தால் தான் நம்மை மதிப்பார்கள் என்றோ.. நாமும் விபரம் தெரிந்த அறிவாளி என்றோ நினைத்துக்கொண்டிருக்கும் முட்டாள் தனத்தை ஒழித்து இவர்களை புறக்கணிப்போம்..!!!

முழு தேங்காயும் ஒரு அப்பாவி நாயும்..

சுமார்  12 வருடங்களுக்கு முன்பு என்னுடைய மேலதிகாரி தன்னுடைய ATM கார்டை கொடுத்து ஒரு குறிப்பிட்ட தொகையை எடுத்துவரசொன்னார்.. நானும் என்னுடைய நண்பனும் சக ஊழியனுமான குமாரும் ஸ்டேட் பேங்க்   ATM க்கு சென்றோம்.. எனக்கு அப்போதெல்லாம் ATM மெஷின் என்பது  வெளியே இருந்து வேடிக்கை பார்க்கும் அளவிற்கு மட்டுமே அறிமுகமாயிருந்தது.. மற்ற ATM களில் கதவு திறந்தே இருக்கும்.. ஆனால் ஸ்டேட் பேங்க் ATM ல் கார்டை வைத்துதான் கதவை திறக்க வேண்டும்.. ஆனால் எனக்கோ- என் நண்பனுக்கோ அதை திறக்கும் வித்தை கனவில் கூட காணக்கிடைக்காத பாக்கியமாயிருந்ததால்.. பல்வேறு முயற்சிகள் செய்தும் திறக்கமுடியவில்லை.. அப்போது என் நண்பன் சொன்னான்...
"நாய்கிட்ட முழு தேங்காய் கிடைச்சமாதிரி போச்சே மச்சி நம்ம பொழப்பு.... "

( அப்புறம் இன்னொரு அலிபாபா வந்து   கதவை திறக்க.. அவர் வெளியேறும் வரை காத்திருந்து அந்த கதவு தானாக மூடும் முன்பே உள்ளே நுழைந்தது வேறு ஒரு வரலாற்று சம்பவம்..)

யார் முயல்கிறார்களோ

ஆல்பிரெட்  நோபெல் என்பவர் ஒரு விஞ்ஞானி.. அவர்  ஒரு வெடி பொருளை கண்டுபிடித்ததன் மூலம் மிக பெரிய கோடீஸ்வரனானார் . ஒரு முறை அவர் காரில் சென்ற போது அந்த கார் படு பயங்கர விபத்துக்குள்ளாகி மிகவும் அடிபட்டநிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தார்..  மறுநாள் செய்திதாளில் "அல்பிரெட் நோபெல் " இறந்துவிட்டதாகவும் , உலகை அழிவின் பாதையில் எடுத்துச்செல்லும் ஒரு பொருளை கண்டுபிடித்த இந்த நபர் இறந்ததை பற்றி வருத்தப்படுவதற்கு எதுவுமில்லை.. சந்தோசம் தான் படவேண்டும் என்றும் செய்தி வெளியாகி இருந்தது.
இதனை காண நேர்ந்த நோபேலுக்கு உரைத்தது.. தாம் இந்த மனிதகுலத்திற்கு எவ்வளவு பெரிய தீங்கிழைத்திருக்கிறோம் என்பது... உடனே தன்னுடைய சொத்துக்கள் அனைத்தையும் ஒரு டிரஸ்ட் ஆக அமைத்து உலகின் அமைதிக்காக பாடுபடுபவர்கள், மனிதகுலம் தழைக்க மருந்து கண்டு பிடிப்பவர்கள், மனித குல முன்னேற்றத்திற்கு தேவையான அறிவியல் கண்டுபிடிப்புகளை நிகழ்த்துபவர்களுக்காக பெரும் தொகையை பரிசாக வழங்குவதன் மூலம் தன்னுடைய பாவத்திற்கு பரிகாரம் தேட முற்பட்டார்.. இன்றுவரை அந்த பரிகார பயணம் தொடர்கிறது..
ஏதோ ஒரு சுய லாபத்திற்காக "வாழும் வள்ளுவரே.. காவிரி தாயே.." என்றெல்லாம் போஸ்டர் அடித்து நன்றாக இருப்பவரையும் பதவி வெறி பிடிக்க பழக்கி விடுவதில் வல்லவர்களான நம் மக்களில் ஒருவரோ / ஒரு கொள்ளை கும்பலோ  அத்தகைய நோபல் பரிசுக்கு திருமதி.சோனியாகாந்தி அவர்களின் பெயரை பரிந்துரை செய்வதாக அறிவித்திருக்கிறார்..

இந்தியாவில் ஓட்டு பிச்சை எடுத்து குப்பை கொட்ட வேண்டுமானால் மக்களுக்கு அறிமுகமான ஒரு ஆள் தேவை என்பதற்காக பழுத்த அரசியல் வாதிகள் எல்லாம் கூடி கணவனை பறிகொடுத்து பேரக்குழந்தைகளோடு விளையாட வேண்டிய திருமதி. சோனியா அவர்களை வலுக்கட்டாயமாய் முன்னிறுத்தி இப்போது நாட்டில் நடக்கும் எல்லா தவறுகளுக்கும் திருமதி. சோனியாகாந்தி தான் காரணம் என்ற மாயையை ஏற்படுத்தி இருக்கிறார்கள்..

மெத்த படித்த முகநூல் போராளிகளோ அந்த கருத்தை நிலை செய்யும் பெரு முயற்சியில் ஈடு பட்டுக்கொண்டிருக்கிறார்கள்..
இப்போது நோபல் பரிசு குபாரை கிளப்பி கும்மி அடிக்க யார் முயல்கிறார்களோ.. அந்த ஆல்பிரட் நோபெலுக்கே வெளிச்சம்..!!!

அத்தனைக்கும் ஆசைப்படு..

லண்டன் கேம்பிரிட்ஜ்  பல்கலை கழகத்தில் திரு. ஜவஹர்லால் நேரு அவர்கள் படிக்கும் போது நான்கு புறமும் இருக்கும் வாயில்களில் அவரை ஏற்றி செல்வதற்காக வாகனம் நிற்குமாம்.. ஒரு வாயிலில் காரை நிறுத்தினால் அவர் மற்றொரு வாயிலில் வெளிவந்து அங்கு வாகனம் இல்லாமல் நிற்க கூடாது என்பதற்காக அவரது தந்தை திரு. மோதிலால் நேரு அவர்களின் ஏற்பாடு இது.
திருவாரூரில் இருந்து உண்டியல் குலுக்கி கையெழுத்து பத்திரிகை நடத்தி அண்ணாவுடன் ஐக்கியமாகி ஆரம்பகாலத்தில் கட்சியில் இருந்தவர்களை அழித்து தலைவராக வளர்ந்தவரின் வாரிசுகளும்.....
தன்னுடைய திறமையான காபரே நடனத்தின் மூலம் திரைத்துறையில் கோலோச்சிய ஒருவரை வளைத்துப்போட்டு அதன் மூலம் தலைமை பதவிக்கு வந்தவர்களும்....
 மதுரையில் இருந்து சினிமா வாய்ப்பு தேடி சென்னைக்கு வந்து பலநாள் பட்டினி கிடந்தது வாய்ப்பு பெற்று அதன் மூலம் ஒரு முட்டாள் ரசிக கூட்டத்தை வளர்த்து அவர்களை பயன் படுத்தி தலைமை பதவிக்கு வந்தவரும்....
திண்டிவனம் வந்தவாசி சாலையில் ஒரு நாட்டு ஓடு போட்ட கட்டிடத்தில் ஐந்துக்கும் பத்துக்கும் வைத்தியம் பார்த்து இது நம் இலக்கு அல்ல என்று உணர்ந்து தன்னுடைய ஜாதியில் ஒவ்வொரு ஊரிலும் இருந்த பெரிய மனிதர்களின் கை கால்களில் விழுந்து சில பல சதுரங்க நகர்த்தல்கள் மூலம் தலைமை பதவிக்கு வந்தவர்களும் அவர்களின் வாரிசுகளும்.....  முதலமைச்சர்- மத்திய அமைச்சர்- பிரதமர் என்ற பதவிகளுக்கு ஆசைப்படும் போது... 
தம்முடைய குடும்பத்திற்கென்று ஒரு பெயர் இருக்கிறது.. அதனை பயன் படுத்தி யார் யாரோ பதவி- பணம்- அந்தஸ்த்து என்று அனுபவிப்பதை நாமே ஏன் அனுபவிக்க கூடாது என்று ராகுல் ஆசைப்படுவதில் எதுவும் தவறு இருப்பதாய் நினைத்தால் நீங்கள் அரசியல் வாதிகள்..!!!

கவிஞர் வைர முத்து மிக அழகாக இரண்டு வரியில் சொன்னதை நான்  இங்கே  கட்டுரையாக எழுதி இருக்கிறேன்.. அவர் சொன்னது இதுதான்.. "தலையே இல்லாதவன் கிரீடத்துக்கு ஆசை படும்போது... கிரீடம் வைத்திருப்பவன் தலையில் வைத்துக்கொள்ள ஆசைப்படுவதில் தவறில்லை.."

மாயன் காலண்டரோ- மாயி காலண்டரோ...

இந்த உலகம் அழியத்தான் போகிறது.. மாயன் காலண்டரோ- வெள்ளிக்கிழமைகளில் பாவமன்னிப்பு கோர கூப்பிடுபவர்கள் சொல்லும் படியா தெரியாது..ஆனால் செல்ஃபோனின் காரணமாய்  ஒரு நாள் நிச்சயம் இந்த உலகம் அழியத்தான் போகிறது.. எப்படி..??

அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்தில் அப்பு கமல் கதாபாத்திரம் வில்லன்களில் ஒருவரான அன்பரசு டெல்லிகணேஷ் கதாபாத்திரத்தை  கொலை செய்யும் காட்சியை நினைத்துப்பாருங்கள்.. "இது என்ன..." "கோலி.. ..." "நீ விளையாட்டா செஞ்ச வினை... இப்போ இந்த வினை செய்ற விளையாட்ட பார்க்கிறியா..?" என்பார்.. அந்த கோலிக்குண்டு பலூனை உடைத்து உருளைகளை உருட்டி அடுத்தடுத்து தொடர்வினையாய் விசையில் பொருத்தப்பட்ட அம்பை இலக்கு நோக்கி செலுத்தும்..
அந்த கோலி குண்டுதான் உங்கள் கையில்- என் கையில் இருக்கும் செல்ஃபோன் .. ஆனால் இந்த முறை இலக்கு... எதிரி இல்லை.. நாமே தான்...
உற்பத்தியை பெருக்குகிறேன் பேர்வழி என்று அதிக விளைச்சல் ஆசை காட்டி விவசாயியிடம் இருந்த விதை நெல்லை பிடுங்கியாயிற்று.. விவசாயம் செய்தாலும் கூட இன்றைய விவசாயியின் கையில் .. இல்லை  இல்லை... விவசாயிக்காக கடையில் இருப்பது  ஃபார்மேஷன் இரண்டு என்ற முறையில் ஆராய்ச்சிக்கூடங்களில் , மரபுப்பொறியியலை பயன்படுத்தி முளைப்புத் திறன்  நீக்கப்பட்ட விதைகள்.அதாவது கிராமத்தான் பாஷையில் சொன்னால் காயடிக்கப்பட்ட விதைகள்.. இவைகளை மறு தலை முறையை உருவாக்கவே இயலாது..
கோழிகளில் ஏற்கெனவே அப்படி செய்தாயிற்று.. முட்டைகோழிகள் இடும் முட்டையால் குஞ்சு பொரிக்க இயலாது... கறிக் கோழிகளால்  குஞ்சு உருவாக்க இயலாது.. 
மது- புகை- ரேடியேஷன் சமாச்சாரங்களால் மனிதனும் மறைமுகமாக அந்த இலக்கு நோக்கித்தான் தள்ளப்பட்டுக்கொண்டிருக்கிறான்..
இப்போது ஆபத்து இன்னும் அதி தீவிரமாய் தாக்குதலை தொடங்கி இருக்கிறது.. மௌனமாய்... மறை முகமாய்.. 
செல் ஃ போன் கதிர்வீச்சுக்களால்  சிட்டுக்குருவி இனத்தை அழித்தாயிற்று.. அடுத்தபடியாக அழிந்து கொண்டிருப்பவை பட்டாம் பூச்சிகளும் தேனீக்களும்.. இந்த பட்டாம் பூச்சிகளும் தேனீ க்களும்தான்  மகரந்த சேர்க்கை எனப்படும் தாவர உடலுறவை நடத்திவைத்து கருஊட்டும் ஜீவ அணுக்களை கடத்தும் வேலையை செய்பவர்கள்  .. இதற்காக இவைகளுக்கு மலர்கள் கொடுக்கும் கூலிதான் தேன்..
விவசாயி பயிரிடும்  செடி/கொடி/மர வகைகளின் விதைகளை ஃ பார்மேஷன் 2 கொண்டு அழித்தாயிற்று.. இயற்கையாய் முளைக்க கூடிய தாவர வகைகளின் இனப்பெருக்கம்  நடக்காமல் தடுக்கும் விதமாய் தேனீ- பட்டாம்பூச்சி வகைகளும் அழியத்தொடங்கிவிட்டன..  இன்னும் பத்து இருபதாண்டுகளில் என்ன ஆகும்??
காற்றில் மகரந்த சேர்க்கை நடத்தும் தாவரங்களை தவிர மற்ற தாவரங்களுக்கு மகரந்த சேர்க்கையே நடக்காமல் போகும்..  அதன் காரணமாய் அந்த தாவர இனங்கள் அழியும்.. ஒன்றை அடுத்து ஒன்றாக வாரிசு இல்லாத தாவர தலை முறைகள் முற்றிலும் காணாமல் போகும்.. தாவரம் இல்லாமல் மழை இல்லை.. மழை இல்லாமல் மனிதன் இல்லை..
மாயன் காலண்டர் நிஜமாக அணு உலைதான் வேண்டுமென்பதில்லை... உங்கள் கையில்.. என் கையில் இருக்கும் "நாம் செய்த வினை கோலிக்குண்டு" செல்ஃபோன் போதும்..!!!

எது தேவைன்னு மட்டும் நமக்கு தெரியல...

என்னுடைய சித்தப்பாவுக்கு..கிரிக்கெட் பற்றி  தெரிந்திருக்கவில்லை.. பிரதீபா பாட்டில் பரிசுப்பொருட்களை வீட்டிற்கு அள்ளி சென்றது பற்றியோ , ராபர்ட் வதேரா முன்னூறு கோடிக்கு மேல் சொத்து வாங்கியது பற்றியோ  தெரிந்திருக்கவில்லை.. ராஜூ முருகன் வட்டியும் முதலும் எழுதுவது பற்றி தெரிந்திருக்கவில்லை.. செந்தில் கே நடேசன் கவிதை என்ற பெயரில் தெரியாத்தனமாக அவனுடைய முகநூல் சுவருக்கு வருபவர்களை வதைப்பது பற்றியும் தெரிந்திருக்கவில்லை.. இணையம் பற்றி தெரியவில்லை..

ஆனால் அவருக்கு எப்போது நாற்று விட வேண்டுமென்பதும், வானத்தில் எந்த பக்கம் மின்னலடித்தால்  மழை பெய்யுமென்பதும். நாற்றங்காலில் எப்போது தண்ணீரை வடித்து காயவிட வேண்டுமென்பதும் தெரிந்திருந்தது.. யூரியாவை அதிகம் போட்டால் இலை சுருட்டு புழு உடனே பயிரை தாக்குமென்பது தெரிந்திருந்தது.. அவர்  கவலை அவரின், அவரை சார்ந்தவர்களின் பசியை தீர்ப்பதற்காகவும் , தேவைகளை தீர்ப்பதை பற்றியும் மட்டுமே இருக்கிறது..

ஆனால் நாம் ..????
எல்லாவற்றையும் தெரிந்துகொள்ள வேண்டும் என்று தீராத ஆரவத்தில் எல்லாவற்றிலும் கவனம் செலுத்துகிறோம் .. ஆனால் எதிலும் பூரணமாக முடியவில்லை... நமக்கு சோறுபோடும் வேலையை தவிர அனைத்தை பற்றியும் அதிகமாய் கவலை படுகிறோம்..

தி. ஜானகிராமனை படிப்பவர்கள் ராஜேஷ்குமாரை படிப்பவர்களை மட்டமாகவே பார்கிறார்கள்..  கிரிக்கெட் பற்றி தெரியவில்லை என்றால் வேற்று கிரக மனிதனைப்போலவே நினைக்கிறார்கள்..  நேற்றைய அனுபவமும் இல்லை.. நாளைய திட்டமிடலும் இல்லை.. வெறுமனே..இன்றைய சிந்தனை.. ஆனாலும் இவைகளில் எதோ ஒரு திருப்தி.. ஆனால் அது தனிமனித திருப்தி... இதற்காக மற்றவர் ரசனையை ஏன் குறை சொல்ல வேண்டும்... அவங்க அவங்களுக்கு பிடிச்சத அவங்க அவங்க ரசிக்கிறாங்க.. இது முற்றிலும் தனி மனித திருப்திதானே தவிர தி. ஜானகிராமனை நீங்கள் படிப்பதாலேயோ- ராஜேஷ்குமாரை இன்னொருவர் படிப்பதாலேயோ ஒரு துரும்பு கூட பயனில்லை.. படிப்பவரை தவிர்த்து மற்றவர்களுக்கு...!!!

அவன் தேவன் என்றாலும் பாவத்தின் சம்பளம் மரணம்

திரேதா யுகத்தில் நடந்த இராமாயணத்தில் மனிதனாய் இருந்த அவதார புருஷன் ஸ்ரீ ராம பிரான் தனுடைய நண்பனுக்கு உதவி செய்யும் பொருட்டு ஆராயாமல் மாவீரம் வாலியை மறைந்திருந்து தாக்கி கொன்று விடுகிறான்.. ஆனால் ஒரு அவதாரம் செய்தாலும் தவறுதானே.. அது சரி செய்யப்பட்டதா...?? 
ஒரு சாதாரண மனிதனாய் எனக்குள்ளும் இந்த கேள்வி... வாலிக்கு மோட்ஷம் கொடுக்கத்தான் ஸ்ரீ ராமபிரானின் பானம் வாலியை வதம் செய்தது.. ஆனாலும் அது மானுட அ
வதாரத்தில் செய்ததாகையால் அதனை சரி செய்கிறார் பகவான்.. எப்படி..??
கதைக்குள் போவோமா...
துவாபர யுகம் .. அதாவது மகா பாரத காலம்.....ஒரு முனிவர் தவமிருக்கையில் அவரை பரிகாசம் செய்யும் பொருட்டு ஒரு ஆண்மகனுக்கு வயிற்றில் கந்தல்துணி மூட்டையை வைத்து கட்டி .. ஸ்திரீ வேடமிட்டு.. "இந்த பெண்ணுக்கு என்ன குழந்தை பிறக்கும்.." என்று வினவுகிறார்கள் ஆயர் பாடியின் சில இளைஞர்கள்.
ஆணுக்கு வேடமிட்டுதான் அப்படி நம்மை பரிகாசம் செய்கிறார்கள் என்பதை உணர்ந்த முனிவர் சினம் கொண்டார்.. இந்த பெண்ணுக்கு உலக்கை தான் பிறக்கும்..அந்த உலக்கைதான் உங்கள் இனம் அழிந்து போக காரணமாகும் என்று சபித்துவிட்டு போய் விட்டார்..
அந்த இளைஞனுக்கு பிரசவ வலி கண்டு ஒரு உலக்கையும் பிறந்தது.. பயந்து போனார்கள்.. முனிவரின் சாபம் பாதி பலித்துவிட்டது.. மீதியும் பலிக்குமானால் நம் இனம் கூண்டோடு அழிந்து விடும் என பயந்தனர்.. அந்த உலக்கையை மாவாக உரைத்தனர்.. அதனை யமுனை நதியில் கரைத்தனர்.. ஒரு நீளமான குச்சி அளவு அந்த உலக்கை தேய்ந்த உடன் அதனையும் நதியில் வீசிவிட்டனர்.
அவ்வாறாக கரைக்கப்பட்ட அந்த உலக்கைதூளில் இருந்து தர்ப்பை புற்கள் முளைத்து வளர்ந்தன..அந்த குச்சி கரை ஒதுங்கி கிடந்தது.. யமுனையின் கரையில் அவ்வழியே ஒரு வேடன் வந்தான்.. கரை ஒதுங்கி இருந்த அந்த உலக்கையின் தேய்ந்த குச்சி ஒரு அம்பு போல் இருந்தது.. அதனை எடுத்து தன்னுடைய அம்பராவில் வைத்துக்கொண்டான்..
மகாபாரத யுத்தம் முடிந்த பின் அந்த வெற்றியை கொண்டாட துவாரகாபுரியில் கூடி மது அருந்திய யாதவர்கள் போதையின் மிகுதியில் அங்கு முளைத்திருந்த தர்ப்பை புற்களை பிடுங்கி ஒருவருக்கொருவர் அடித்துக்கொண்டு மாண்டனர்.. அந்த முனிவரின் சாபம் வேலை செய்ய துவங்கியது..
ஒரு புல் வெளியில் வான் பார்த்து படுத்திருந்தார் பகவான் கிருஷ்ணர்.. ஒரு காலை மடக்கி வைத்து இன்னொரு காலை மடக்கி வைத்த காலின் மேல் தூக்கி வைத்து ஆட்டிக்கொண்டிருந்தார்.. அதாவது தூரத்திலிருந்து பார்ப்பவர்களுக்கு புல் தரையில் படுத்திருக்கும் ஆள் தெரியாது.. மேலிருக்கும் காலின் கட்டை விரல் மட்டும் தெரியும்.. அப்போது அந்த வழியாக வேடன் வந்தான்.. நாம் முன்பே கண்ட உலக்கை அம்பை எடுத்த அதே வேடன்.. அவன் தூரத்திலிருந்து பார்த்தபோது பகவான் கிருஷ்ணரின் கால் கட்டை விரல் அசைவு மட்டும் தெரிய அதனை ஒரு மான் மேய்ந்துகிண்டிருப்பதாக நினைத்த வேடன் தன்னுடைய அம்பரா துணியிலிருந்து ஒரு அம்பை எடுத்து குறி பார்த்து அந்த கட்டை விரலின் மீது பாய்ச்சினான்..
அவன் எடுத்த அந்த அம்பு.. ஆம்.. 
 உலக்கையில் மிஞ்சிய கடைசி பகுதி..

அந்த வேடன்.. வாலி என்பதனை சொல்லவும் வேண்டுமோ...??!!!

சர்வம் கிருஷ்ணார்ப்பணம்..!!

திருவள்ளுவர் என்ற கற்பனைக்கு உருவம் கொடுத்தவர் - திரு.வேணுகோபால் ஷர்மா


உலகின் நிறைய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு தமிழனாய் பிறந்த ஒவ்வொருவரின் சட்டை காலரையும் ஒவ்வோர் அங்குலம் உயர்த்திய திருக்குறளை எழுதியது திரு வள்ளுவர் என்று படித்திருக்கிறோம்.. ஆனால் இதனை எழுதியவர் வள்ளுவர்தான் என்பதோ.. அவரது உருவம் இப்படித் தான் இருக்கும் என்பதோ தெரியாது.. பெயர், உருவம் எல்லாமே கற்பனையாய் உருவாக்கப்பட்டவைதான்..
மேலும் இவர் எழுதியதில் நமக்கு கிடைத்தது வெறும் 1330 பாடல்கள் தான்.. இன்னும் அதிகமாக எழுதி இருக்க கூடும்..


சரி.. இந்த திருவள்ளுவருக்கு உருவம் கொடுத்தது யார்.. எப்போது.. என்ற தகவல்கள் நம்மில் நிறைய பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.. அவர்...திரு அறிஞர் அண்ணா அவர்களால் "ஓவிய பெருந்தகை" என்று பாராட்டப்பட்ட கே ஆர் வேணுகோபால ஷர்மா.. 1950 ம ஆண்டு இதற்கான வேலைகளை துவங்கி முதலில் பென்சில் ஓவியமாக வரைந்தார்.. பிறகு அதற்கான வண்ணங்களை சேர்த்தார்.. 1953 ம ஆண்டில் இவரை சந்தித்த திரு பாரதி தாசன் அவர்கள் இவரை ஊக்குவித்து விரைவில் அந்த ஓவியத்தை வரைந்து முடிக்க கேட்டுக்கொண்டார்..
ஒருவழியாக 1957 ம ஆண்டில் வரைந்து முடித்த அந்த ஓவியத்தை அப்போதைய முதல்வர் திரு பக்தவத்சலம் அவர்களையும் , திரு அறிஞர் அண்ணா அவர்களையும் அழைத்து காண்பித்தார்.. அதனை பார்த்து வியந்த திரு அறிஞர் அண்ணா அவர்கள் அந்த படத்தை அங்கீகரிக்க திரு பக்தவத்சலம் அவர்களுக்கு பரிந்துரைத்தார். அதனை ஏற்ற முதல்வர் அவர்கள் அந்த படத்தை தபால் தலையாக வெளியிட்டு தமிழுக்கும், வள்ளுவருக்கும், அதனை வரைந்த கே ஆர் வேணுகோபால் ஷர்மா அவர்களையும் கௌரவிக்க பரிந்துரைத்தார்..
அவரது பரிந்துரையின் பேரில் மத்திய அரசு அஞ்சல் துறை 1960 ம ஆண்டு திருவள்ளுவர் படத்துடன் கூடிய தபால் தலையை வெளியிட்டது..


கூடுதல் தகவல் - எதிர்காலத்தை கணித்து சொல்லக்கூடியவர்களை நமது வழக்கத்தில் வள்ளுவர்கள் என்று அழைப்பதால் இவருக்கு வள்ளுவர் என்ற பெயரும்.. மரியாதை நிமித்தம் திரு என்றும் சேர்த்து பெயரிடப்பட்டது..

கூடுதல் தகவல் - கன்னியாகுமரியில் நிறுவப்பட்டிருக்கும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை வடிவமைத்தவர் திரு. கணபதி ஸ்தபதி.. அதற்கு மாடலாக நின்றவர்  பிரபல பரதநாட்டிய கலைஞர் திருமதி.பத்மா சுப்பிரமணியம் 

( இதில் ஏதேனும் தவறு இருப்பின் தெரிந்தவர் சுட்டிக்காட்டவும் - நன்றி )

காவிரி நாடகம்

கடைமடை விவசாயிகளே.. திரண்டு வாருங்கள் என்று பச்சை துண்டு அடையாளத்துடன் விவசாய அரசியல் வாதிகளும்... 
ஒரு சொட்டு தண்ணீர் கூட கொடுக்க மாட்டோம் என கன்னட தட்ஷின வேதிகே.. தெலுங்கு தட்சின அம்பிகே என்றெல்லாம் முளைக்கும் காளான்களும் இருபது பேர் நாற்பது பேர் கொண்ட மாபெரும் ஊர்வலம் நடத்தியும்..
வழக்கம் போல் "பிளீஸ் தண்ணிய தொறந்து விட சொல்லுங்க..." என்று தமிழக அரசும்... " சாரி.. எங்களுக்கே பத்தல .. தொறக்க கூடாதுன்னு சொல்லுங்க.." என்று கர்னாடக அரசும் மாற்றி மாற்றி உச்சநீதி மன்றத்தில் முறையீடு செய்தும்..
மத்திய குழு வறட்சியை பார்வையிட வருகிறது என்று ஊரை கூட்டி நாடகம் நடத்தியும்..

இந்த செஷனுக்கான காவிரி நாடகம் முடிவுக்கு வந்துவிட்டது...

மழை பெய்ய தொடங்கிவிட்டது.. "பலநாள் மூதேவியை தாங்கி விடலாம்.. ஒரு நாள் சீதேவியை தாங்க முடியாது.." என்ற கிராம சொல்வழக்கு மாதிரி.." இந்த சனியம்புடிச்ச மானம் என்னத்துக்கு இப்படி கொட்டுதுன்னு தெரியலையே..." என்ற புலம்பலுடன் விவசாய பெருங்குடி மக்கள்..

"எங்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு விட்டது.. இந்த மழையின் காரணமாக.. அரசு ஏதாவது செய்யணும்.." என்று மழையை நிறுத்த வருணபகவானுக்கு அரசு உத்தரவிட வேண்டும் என்று தனியார் தொலைகாட்சிகளில் அரசை குறை சொல்லும் நகர மாந்தர்கள்..
இப்படியாக மழைக்காலமும் முடிவுக்கு வந்துவிடும்..

மறுபடியும் அடுத்த கோடைக்கு தூசு தட்டப்படும் காவிரி நாடகம்..

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 16 % கூடுதல் மழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி நிலையம் அறிவித்திருக்கிறது.. அந்த மழை தண்ணீரை சேகரித்து வைக்க அரசு என்ன ஏற்பாடு செய்திருக்கிறது..? ஏற்கெனவே காணாமல் போயிருக்கின்றன ஏரி குளங்கள் எல்லாம்.. குட்டி குட்டியாய் ஏரி இருந்ததென அடையாளம் சொல்லும் கொஞ்ச நஞ்ச பரப்புகளோ புதர்கள் மண்டி கிடக்கிறது.. இந்த ஏரிகளின் ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூர்வாரி , காணாமல் போன குளங்களை கண்டு பிடித்து செப்பனிட்டு வைத்திருந்தாலே நமது வறட்சிகால தேவைக்கு கர்நாடகாவை கெஞ்சும் அவசியம் பாதியாய் குறையும்..
எந்த அரசும் இதை செய்யாது.. ஏனென்றால் அடுத்த காவிரி சீசன் அரசியல் எப்படி செய்வதாம்..??
வழக்கம் போல புலம்பலுடன் குவாட்டருக்கும் குண்டானுக்கும் ஒட்டு போடும் புத்திசாலி மக்களை பெற்றவர்கள் அல்லவா அவர்கள்..??

வழி விடுங்கப்பா..

பத்து பேர் சாப்பிடும் உணவு ஒரு பாத்திரத்தில் இருக்கிறது... பத்து ஆட்களும் இருக்கிறார்கள்.. முதலில் நிற்பவர் வயிறு முட்ட சாப்பிட்ட பின்பு "ஊரில் இருந்து என்னுடைய அண்ணன் வருவதாக சொல்லி இருக்கிறார்.. அவருக்கும் எடுத்துக்கொள்கிறேன்.." என்று ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்கிறார்.. இரண்டாமவரும் அதே போல் செய்கிறார்.. மூன்றாமவரும்  அப்படியே தொடர.. ஆறு பேரின் சாப்பாடு மூன்று பேரிடம் சென்று  விடுகிறது.. இதனை பார்க்கும் ஆறாவது ஏழாவது ....... பத்தாவது ஆட்கள் என்ன செய்வார்கள்..??
ஒன்று.. வரிசை முறையை மீறி முன்னே வர வன்முறையை கையிலெடுப்பார்... இல்லை ஊரில் இருபவருக்காக முன்னவர்கள் எடுத்து வைத்த பார்சலை களவாட முனைவார்..  ஒருவரிருவர் தலை எழுத்து என பட்டினியை சகித்துக்கொள்வார்..

ஒருவனை களவாடவும், வன்முறையை கையிலெடுக்கவும் தூண்டுவது யார்..? அல்லது எது...??
முன்னாள் வாய்ப்பு கிடைக்க பெற்றவர் தானே.. அப்போது குற்றவாளி முன்னால் இருப்பவர் தானே..?

தன்னுடைய தேவைக்கு மட்டும் எடுத்துக்கொண்டு மற்றவர்களுக்கு வழி விடும் போது இந்த உலகத்தில் இருக்கும் அறுநூறு கோடி மக்களுக்கும் தேவையான எல்லாமே இருக்கிறது... வாய்ப்பு கிடைத்தவர்கள் பதினேழு தலை முறைக்கும் சேர்த்து சம்பாதிக்க துடிக்கும் போது மட்டுமே சட்ட விரோத காரியங்கள் செய்ய தூண்டப்படுகிறார்கள் வாய்ப்பு கிடைக்காதவர்கள்..

இதுல இருந்து என்ன சொல்ல வரீங்க...??

உங்க ஆபீஸ்ல பதினஞ்சு இருபது வருஷமா சீட்ட தேச்சுகிட்டு ஒரு குரூப் உட்கார்ந்திருக்கும்ல.. பின்னாடி வந்தவங்களுக்கு வழி விடாம... போட்டு தள்ளுங்க சொல்றேன்.. ஹா ஹா ஹா..