செவ்வாய், 28 ஜூலை, 2015

தமிழக அரசின் டக்கு

நவீன மதுபான விடுதிகளில் நடக்கும் சிறப்பு கொண்டாட்டங்களில் கலந்துகொள்ள பெண் துணை இல்லாமல் தனியாக வரும் ஆண்களை அனுமதிப்பதில்லை...
(ஆனால் தனியாக வரும் பெண்களை அனுமதிப்பார்கள்)

அதற்கு அவர்கள் சொல்லும் காரணம்...

ஒரு ஆண் ஒரு பெண்ணுடன் வரும்போது அந்த ஆணின் கவனம் அவனுடன் வந்த பெண் மீது மட்டுமே இருக்கும்... இதனால் வேறொரு பெண்ணுக்கு தொல்லை இருக்காது....

ஆக.... மதுபான விடுதிகளில் வந்து குடிக்கும் ஒரு குடிகாரியின் பாதுகாப்புக்காக இன்னொரு குடிகாரியை உருவாக்குகிறார்கள்... ஆடைகளை அரை குறையாக அவிழ்த்துக்காட்டியும், அக்குளை காட்ட சொல்லியும் எலிப்பொறியில் வைக்கும் மசால் வடை போல பெண்களை சித்தரித்து வியாபாரம் செய்யும் அதே வழக்கம்... இந்த மதுபான விடுதிகளிலும் செயல்படுத்தப்படுகிறது...

அதற்கு அவர்கள் சொல்லும் காரணம்.. பாதுகாப்பு.... அந்த முதல் குடிகாரியை உள்ளே வராமல் தடுத்தால் பெண்களின் பாதுகாப்பு பற்றிய கவலை இவர்களுக்கு எதற்கு??? பெண்கள் வந்தால்தான் அவர்களுக்காக ஆண்கள் வருவார்கள் என்ற வியாபார யுக்திக்கு இவர்கள் கட்டும் சப்பை கட்டு.. பெண்களுக்கான பாதுகாப்பு.


நீதிபதிகளை கிரிக்கெட் கிளப்பிற்குள் வேட்டி கட்டி அனுமதிக்காததால் தமிழக கலாச்சாரமே சீரழிந்து போய் விட்டதாக பொங்கி எழும் மக்களே.... சட்ட திருத்தம் கொண்டுவரப்படும் என்று அறிவித்த முதல்வரே... 

பப்புகளில் ஒரு ஆண் குடிப்பதென்றால் ஒரு பெண்ணும் அங்கே வரவேண்டும் என்று கட்டாயப்படுத்தி நாகரீகம் என்ற பெயரில் குடும்பத்தோடு குடிகாரர்கள் ஆக்கும் இந்த கலாச்சார சீரழிவை கண்டுகொள்ளாத நீங்கள் எல்லோரும் கிரிகெட் கிளப்பில் வேட்டி கட்டியவர்களை விடாமல் தடுத்ததை தட்டிக்கேட்டுத்தான் கலாச்சாரத்தை காக்க போகிறார்களா???

அட போங்கய்யா... நீங்களும் உங்க டக்கும்...!!! 

புகைப்படம்: - சென்னையில் இருக்கும் ஒரு மதுபான விடுதி

காமராஜர் - சில நினைவலைகள்



காமராஜர் சேரன்மாதேவியில் சுற்றுப்பயணம் சென்ற போது சாலை ஓரம் மாடுமேய்த்துக்கொண்டிருந்த ஒரு சிறுவனை பார்த்து காரை நிறுத்த சொன்னார்.. இறங்கி அந்த பையனிடம் சென்று "ஏம்பா பள்ளிக்கூடம் போகாம மாடு மேய்க்கிறியே.." என்று கேட்டார்.. அந்த சிறுவன் "பள்ளிக்கூடம் போனா சோறு யாரு போடுவாங்க.. மாடு மெய்ச்சாதான் சோறு" என்றானாம்... "சோறுபோட்டா பள்ளிக்கூடம் போவியா..." என்றிருக்கிறார்... "ஓ .. போவேனே.." என்றானாம்... சென்னை திரும்பியதும் பொதுக்கல்வி இயக்குனராக
இருந்த திரு என் டி சுந்தரவடிவேல் அவர்களை அழைத்து பள்ளிக்கூடத்தில் மதியம் சாப்பாடு போடுவதற்கு ஒரு திட்டம் கேட்டிருக்கிறார்... ஒரு குழந்தைக்கு இரண்டு அனா செலவில் என் டி சுந்தரவடிவேல் அவர்கள் ஒரு திட்டத்தை வரையறை செய்து கொடுத்தாராம்.. அதுதான் மதியஉணவு திட்டம்...

அவர்தான் காமராஜர்..!!!


ஒருமுறை திருநெல்வேலியில் சுற்றுப்பயணம் செய்தபோது ஒரு ரெயில்வே கிராசிங்கை சென்றடைந்தது முதல்வர் காமராஜரின் வாகனம்... சற்று நேரத்தில் ரயில் கடக்கவேண்டியதாகையால் ரயில்வே கேட் மூடப்பட்டிருந்தது.... ஒரு அதிகாரி வேகமாக கேட் கீப்பரிடம் போய் முதல்வர் வாகனம் வருகிறது.. கேட்டை திறந்துவிடு என்று சொன்னார்.. இதை கவனித்த காமராஜர்.. அந்த அதிகாரியை கூப்பிட்டு... "ஏன்யா... நான் ரயில்ல அடிபட்டு சாகனுமா.... ரயில் வரப்போ அதுல யாரும் மாட்டிக்க கூடாதுன்னுதானே ஒரு கேட்டும் போட்டு அதுக்கு ஒரு ஆளும் போட்டிருக்கோம்... அப்புறம் ரயில் வர நேரத்துல நீ கேட்ட தொறக்க சொன்னா என்ன அர்த்தம்னேன்.." என்று கேட்டாராம்...
ரயில் கடந்ததும் காரில் இருந்து இறங்கி அந்த கேட்கீப்பரிடம் செல்ல.. அந்த கேட்கீப்பர் வெலவெலத்துப்போனாராம் .. நீ செஞ்சதுதான் சரின்னேன்... இந்த இடத்துக்கு நீதான் எஜமான்... உன் வேலைய நீ கரெக்டா தான் பன்னேன்னேன்.." என்றாராம்...

அவர்தான் காமராஜர்...!!!

1967 ல் தேர்தலில் திமுக வை சேர்ந்த சீனிவாசன் என்ற வேட்பாளரிடம் வெற்றிவாய்ப்பை இழந்த காமராஜர் வீட்டில் அமர்ந்திருந்தாராம்.. காங்கிரஸ் தொண்டர்கள் அவரை சந்தித்து வருத்தத்தை தெரிவித்தார்களாம்.. அப்போது காமராஜர் சொன்னாராம்... இதுக்குத்தானய்யா சுதந்திரம் வாங்கினோம்னேன் .. ஜனநாயகம் கொண்டுவந்தோம்னேன் .. அப்புறம் ஏன்யா வருத்தப்படனும்?? நான் தோத்துப்போனதுலையே தெரியுதுல்ல.. நாம தேர்தல ஒழுங்கா நடத்தி இருக்கோம்னு.. அப்புறம் ஏன் வருத்தப்படனும்னேன்..."

அவர்தான் காமராஜர்..!!!.

திண்டுக்கல் நகரத்தில் இருந்து உள்ளடங்கிய பகுதியில் ஒரு பஞ்சு மில் திறக்க அனுமதியளைத்தாராம் காமராஜர்.. அவ்வளவு தூரம் உள்ளடங்கி இருக்குங்கைய்யா... அதுக்கு அனுமதி கொடுக்க சொல்றீங்களே.. என அதிகாரி ஒருவர் கேட்டாராம்... அதெல்லாம் நான் பேசிட்டேன்... திண்டுக்கல் ல இருந்து அவன் செலவுலேயே கரெண்டு எடுத்துக்கிறேன்னு சொல்றான்.. அந்த வழில இருக்க அறுபது கிராமத்துக்கும் கரெண்டு எடுத்துக்கலாம்னேன்.. என்றாராம் காமராஜர்...

அவர்தான் காமராஜர்..!!!

முதல்வராக இருந்த காலத்தில் காமராஜரின் தாயார் முதல்வரின் இல்லத்தில் தங்க ஆசைப்பட்டிருக்கிறார்.... "அம்மா என் கூட தங்கணும்னு ஆசைப்படும்தான்... ஆனா அது வந்து இங்க தங்கினா அத பார்க்கிற சாக்குல தங்கச்சி வரும்.. அப்புறம் தங்கச்சி புள்ளைங்க வருவாங்க... ஒவ்வொருத்தரா வந்து தங்குவாங்க.. அப்புறம் ஏதாவது பிரச்சினை வரும்.. வேனாம்னேன்.." என்றாராம்...

அவர்தான் காமராஜர்..!!!

காமராஜர் ஒருமுறை கட்சியினர் ஏற்பாடு செய்திருந்த விருந்தில் கலந்துகொண்டாராம்.. சாப்பிட்டு முடித்த பிறகு வெளியில் வந்து தன்னுடன் வந்தவரிடம்.. "எல்லோரும் அரை கண்ணப்பனாவே இருக்காங்க" என்றாராம்...

அதென்ன அரை கண்ணப்பன்..??

பெரியபுராணத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் கண்ணப்பநாயனார் கதை கேள்விப்பட்டிருக்கிறீர்கள் தானே..??

அந்த கதையில் சிவபெருமானுக்கு பிடிக்குமா- பிடிக்காதா என்பதைப்பற்றி எல்லாம் கண்ணப்பன் கவலைப்படவில்லை... அவனுக்கு பிடித்ததை மட்டுமேதான் சிவனுக்கு படைத்தான்...
ஆனால்.. கண்ணப்பனுக்கு சிவபெருமானிடம் எந்த எதிர்பார்ப்பும் இல்லை...

அதே போல காமராஜருக்கு விருந்தளித்தவர்கள் அவர்களுக்கு பிடித்ததை தான் பரிமாறினார்கள்... ஆனால் அவர்களின் கவனிப்பில் ஒரு எதிர்பார்ப்பு இருந்தது என்பதைத்தான்.. "அரை கண்ணப்பன்" என்று சொன்னாராம்...


சொத்து சுகம் நாடார்
சொந்தந்தனை நாடார்
பொன்னென்றும் நாடார்
பொருள் நாடார்
தான்பிறந்த அன்னையையும் நாடார்
ஆசைதனை நாடார்
நாடொன்றே நாடித் – தன்
நலமொன்றும் நாடாத
நாடாரை நாடென்றார்...!!

- கவியரசு கண்ணதாசன்...

ராமசாமி ஆசாரி (விஸ்வகர்மா)



மரவேலை செய்யும் ஆசாரிகள், கல் வேலை செய்யும் கல் தச்சர்கள்.. உலோகங்களில் பல்வேறு கருவிகள் செய்யும் கொல்லர்கள்... தங்கத்தில் ஆபரணங்கள் செய்யும் பொற்கொல்லர்கள்.. எல்லோருமே விஸ்வகர்மா பட்டியலில் வருவார்கள்.. விஸ்வகர்மா என்ற வார்த்தைக்கு படைப்பாளி என்று அர்த்தம்...

உலகில் இருக்கும் கலை பொக்கிஷங்கள் முதல் நாம் வீட்டில் அன்றாடம் உபயோகிக்கும் சிறு சிறு பொருட்கள் வரையில் இவர்கள் கைவண்ணம் தான்...
விஸ்வபிராமனர்கள் என்று அழைக்கப்பட்டு பின்னாளில் விஸ்வகர்மா என்ற மருவினாலும் இவர்களும் பூணூல் அணியும் பழக்கத்தை கடை பிடிப்பவர்கள்..

உலகில் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள் என்றால் அது இவர்கள் தான்... இவர்கள் படைக்கலன் உருவாக்குபவர்களே தவிர படை பலன் மிக்கவர்கள் அல்ல... மன்னர்கள் காலத்தில் அழகிய கோயில்கள் கட்டினாலும் சரி.. மகாராணிகளுக்கு நகைகள் செய்தாலும் சரி.. அந்த மன்னர்கள் குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் வரை பிரச்சினை இல்லை.. வெளியில் சென்று விடுவாரோ என்று சந்தேகிக்கப்பட்டால் இவர்களின் கட்டை விரல் முதல் சமயங்களில் தலை வரை துண்டிக்கப்படும்..
ஏனென்றால் அவர் முன்பு உருவாக்கியதை போலவோ, அதை விட சிறப்பாகவோ வேறு ஒன்றை அவர்கள் உருவாக்கி விட கூடாது என்ற எண்ணம் தான்... (தாஜ்மஹாலை கட்டிய கலைஞர்களின் கட்டை விரல் துண்டிக்கப்பட்டதாக எங்கோ படித்த ஞாபகம்)

இதெல்லாம் பழைய கதை... இதை விட கூடுதலாக உங்களுக்கு தெரிந்திருக்கும்... எனக்கு தெரிந்த எங்களூர் விஸ்வகர்மா , எங்களால் கைப்புள்ளை என்று செல்லமாக அழைக்கப்பட்ட திரு.ராமசாமி அவர்களை பற்றி எனக்கு தெரிந்ததை இங்கே பதிவிடுகிறேன்.. இவர் மரப்பலகைகளில் பூ வேலை செய்வதில் வல்லவர்.. கதவு , பீரோ போன்றவற்றிக்கு பூவேலை செய்வார்... இவரது உளியும் சுத்தியும் பலகைகளில் நாட்டியமாடும்... நாட்டியத்தின் முடிவில் அவரது மனதில் நின்று ஆடிய மயில் தத்ரூபமாய் நம் கண்முன்னே தோகை விரிக்கும்.. இவர் மனதில் கற்பனை செய்த பூ நம்கன்முன்னே கதவில் மலர்ந்து இதழ் விரித்து சிரிக்கும்... அப்படிப்பட்ட கலைஞனிடம் ஒரு ச(ர)றுக்கல்... தினசரி வேலை முடிந்ததும் குடித்துக் கொண்டிருந்தவர்.. நாளடைவில் வேலையை மறந்து குடிக்க தொடங்கி... இறுதியில் அது அவர் உயிர் குடித்தது... அந்த கலைஞனின் திறமை, ஆற்றல் , கலையை வாரிசுகளுக்கு கற்றுக்கொடுக்கும் முன்பே வாரி சுருட்டியது மரணம் .

இவர் ஒரு உதாரணம் மட்டுமே... இவரை போல பல விஸ்வகர்மாக்கள் இப்போதெலாம் தங்கள் திறமையை இந்த குடியால் தொலைத்துக்கொண்டிருக்கிறார்கள்.. அன்று மன்னராட்சியில் இவர்களின் திறமை வெளியில் போய் விடக்கூடாதென விரல்கள் வெட்டப்பட்டது...... இன்று மக்களாட்சியில் மதுக்குடுவைகளால் இவர்கள் திறமை வெளியில் தெரியாமல் மறைக்கப்படுகிறது..

மன்னராட்சியோ.. மக்களாட்சியோ.... விஸ்வகர்மாக்கள் தான் அதிகம் பாதிப்புக்குள்ளானவர்கள்...

(குறிப்பு: ஒருவேளை விஸ்வகர்மா சமூகத்தை சார்ந்தவர்கள் யாரும் இருப்பினும் "வேறு சமூகத்தில் யாருமே குடிப்பதிலையா" என சண்டைக்கு வரமாட்டார்கள் என நினைக்கிறன்.. ஒரு படைப்பாளி என்பவன் சமகால கலாச்சாரத்தை நூற்றாண்டுகளுக்கு அப்பால் நகர்த்தும் வித்தை கற்றவன்.. அந்த வித்தை முடக்கப்பட்டதும், முடங்கியதன் மீதான வருத்தமே இந்த பதிவு)

கீதாரி



எங்கள் தஞ்சை மாவட்டத்திற்கு இவர்கள் இராமநாதபுரம் பகுதியில் இருந்து விவசாயம் தொடங்கும் சில காலம் முன்பு வருவார்கள்.. ஒரு டெம்போவில்/லாரியில் பனை ஓலைகளால் வேயப்பட்ட படப்பு ( குப்புற கவிழ்த்து வைக்கப்பட்ட பரிசலை சற்று பெரிய அளவில் கற்பனை செய்து கொள்ளவும்) தட்டுமுட்டு சாமான்கள், கயிற்று கட்டில், வலை போன்றவற்றுடன் சுமார் இருநூறு முதல் ஐநூறு செம்மெறி ஆடுகள் வரையில் ஏற்றிக்கொண்டு வருவார்கள்..
பகலில் அந்த ஆடுகள் பல இடங்களில் மேய்ச்சலுக்கு செல்லும்.. ஒரு தூக்கு வாளி (முன்பெல்லாம் அலுமினிய தூக்கு.. இப்போதெல்லாம் எவர்சில்வர் தூக்கு) வைத்திருப்பார்கள்.. அதில் பகல் பொழுதுக்கு தேவையான கஞ்சி இருக்கும்.. கையில் ஒரு நீளமான மூங்கில் கம்பும், தேய் ........ந்து வளைந்த செருப்புகளும் இவர்களின் அடையாளம்...
கதிர் அறுவடை முடிந்து அடுத்த சாகுபடி தொடங்கும் முன்போ, தென்னை தோப்புகளிலோ நில உரிமையாளரின் வேண்டுகோளுக்கிணங்க இரவில் அந்த ஆடுகளை ஓய்வெடுக்க வைப்பார்கள்... இதற்கு "கிடை மடக்குதல்" என்று பெயர்..
இரவில் ஆடுகள் கழிக்கும் புளுக்கை , சிறுநீர் போன்றவை பயிருக்கு மிகவும் உகந்த சக்தி மிகுந்த இயற்கை உரம்.. மேலும்.. ஆடுகளுக்கு அதிகமாய் வளர்ந்த முடியை நறுக்கியும் போடுவார்கள்..

அந்த வயலை /தோப்பை சுற்றிலும் இரும்பு கம்பிகளை நட்டு அதனை கொண்டு வந்திருக்கும் வலையால் சுற்றி பாதுகாப்பு வேலி அமைப்பார்கள்... கயிற்றுக்கட்டிலில் உறங்குவார்கள்.. அதிகாலை கத்திரி பூ கலரிலோ, சிவப்பு கலரிலோ ஒரு சால்வையை தலையில் முண்டாசு கட்டிக்கொண்டும் போர்த்திக்கொண்டும் கிராம டீக்கடைகளுக்கு வருவார்கள்.. அந்த நேரத்தில் கடைக்கு டீ குடிக்க வரும் மற்ற விவசாயிகள் "நாளைக்கு நம்ம வயல்ல கிடை மடக்குப்பா" என்று ஆர்டர் கொடுப்பார்கள்.. ஒரு நாள் இரவு கிடை மடக்க ஆடுகளின் எண்ணிக்கையை பொறுத்து முன்னூறு முதல் அறுநூறு ரூபாய் வரை வாங்குவார்கள்..

வருடா வருடம் கிடை மடக்குவோரும் உண்டு.. நாலைந்து வருடம் ஒருமுறை கிடை மடக்குவோரும் உண்டு.. சுமார் ஒரு மாதமோ, பதினைந்து நாளோ ஒரு ஊரில் தங்கி அதன் சுற்று வட்டார பகுதிகளில் கிடை மடக்கிய பிறகு வேறு பகுதிகளுக்கு செல்வார்கள்.. அப்புறம் மீண்டும் அடுத்த வருடம்.. இப்படி தொடர்ந்து வருவதால் ஊரில் அனைவருக்குமே மிகவும் பழக்கமானவர்களாக இருப்பார்கள்..

இந்த கீதாரிகள் அனைவரும் சிலம்பம் என்று சொல்லப்படும் கம்பு சுழற்றுவதில் தேர்ந்தவர்களாக இருப்பார்கள்... இரவில் யாரேனும் களவாணிகள் ஆடு திருட வந்தால் கையில் வைத்திருக்கும் கம்பால் சுழற்றி அடித்து துரத்தும் வல்லமை படைத்தவர்கள்.. இந்த கீதாரியை மீறி கிடையில் இருந்து ஒரு ஆட்டை கூட திருட முடியாது என்பது களவாணிகள் மட்டுமல்ல.. எல்லோரும் அறிந்த விஷயம்..
இவர்கள் இடையர்கள் என்று சொல்லப்படும் யாதவ சமூகத்தை சேர்ந்தவர்கள்..

மார்கெட்டிங் தந்திரம்- தொடர் மின்வெட்டு




கோகுலத்தில் சீதை படத்தில் ஒரு காட்சி வரும்... திரு.மணிவண்ணன்/கார்த்திக் வைத்திருக்கும் குழந்தைகளுக்கான பால் பவுடர் தயாரிக்கும் நிறுவனத்தின் விற்பனையை கூட்ட செல்வி. சுவலட்சுமி ஒரு யோசனை சொல்வார்... அதாவது பால் டின்னுடன் கொடுக்கும் கரண்டியின் அளவை சற்று பெரிதாக ஆக்க சொல்லுவார்.. அப்படி பெரிதாக்குவதன் மூலம் தினசரி உபயோக அளவு அதிகமாகும் என்றும்.. அதனால் ஒரு மாதம் வர கூடிய பால் பவுடர் 25 நாட்களிலேயே முடிந்து விடும் என்றும் , இதனால் விற்பனையின் அளவு கூடும் என்றும் சொல்வார்...

இதுதான் மார்க்கெட்டிங் யுக்தி...

கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக பற்பசை உபயோகிப்பவர்கள் இதை நன்கு உணர்ந்திருப்பார்கள்.. பற்பசை வெளிவரும் துவாரத்தின் விட்டம் இப்போது அதிகமாக்கப்பட்டிருப்பது தெரியும்.. இதனால் உபயோகிக்கப்படும் பற்பசை அளவு அதிகமாகும்... பற்பசை எவ்வளவு அதிகம் உபயோகித்து விட போகிறோம் என்று நினைக்கலாம்.. அஞ்சு பேரு அஞ்சு அஞ்சு காசா அஞ்சு வருஷம் திருடினா என்ற அந்நியன் வசனத்தை நினைவில் கொள்ளவும்..
சரி... விஷயத்திற்கு வருவோம்... ( அப்படியானால் இன்னும் விஷயத்திற்கு வரவே இல்லையா.. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்... அப்பா... இவன் மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும்ல முடிச்சு போடுவான்... என்று சலித்துக்கொள்வதை தவிர்த்து மேலே படிக்கவும்.. மேலே என்றால்.. மறுபடியும் முதலில் இருந்து அல்ல.. தொடர்ந்து படிக்கவும் )

கலந்த சில வருடங்களாகவே நம் நாட்டில் டி வி , வாஷிங் மெஷின், மிக்சி, கம்ப்யூட்டர் போன்ற மின்சார பொருட்கள்/மின்னணு சாதனங்களின் விற்பனை சக்கை போடு போடுகிறது.. இந்த மின் பொருள் தயாரிக்கும் நிறுவனகள் எல்லாம் பில்லியன்-ட்ரில்லியன் டாலர்களில் வர்த்தகம் செய்யும் மாபெரும் பன்னாட்டு நிறுவனங்கள்... நான்கைந்து தம்பதிகள் ஒன்றாக கூட்டுக்குடும்பமாக வசித்தால் ஒரு டி வி, ஒரு மிக்சி, ஒரு வாஷிங் மெஷின், ஒரு கிரைண்டர், ஒரு ஃபிரிட்ஜ் போதுமானது... இந்த கூட்டு குடும்பத்தை பிரித்து நான்கு-ஐந்து தனித்தனி குடும்பமாக்கினால் நான்கு டி வி, நான்கு வாஷிங் மெஷின் என்று ஒவ்வொரு பொருளும் நான்கு நான்காக விற்பனை ஆகும்...
விளம்பரங்கள், சீரியல்கள் மூலம் மக்கள் மனதில் "நாகரீகம்" என்ற மாயையை உற்பத்தி செய்து ஒருவரோடு ஒருவரை பேச விடாமல் செய்து பொறாமை உணர்ச்சியையும், சுயநலத்தையும் வளர்த்து.. இன்றளவில் பெற்றோர்கள் (மாமனார் -மாமியார்) உடனிருப்பதையே பாரம் என நினைக்க வைத்து எல்லா குடும்பங்களையும் பிரிக்கும் செயலில் வெற்றி கண்டிருக்கின்றன அந்த நிறுவனங்கள்...

நம் வீட்டு பொருளை திருடுகிறான் என்று தெரியாமல் சாக்லெட்டிற்கு ஆசை பட்டு திருடனுக்கு துணை போகும் குழந்தைகள் மாதிரி நவ நாகரீக நங்கைகள் நான் திருமணம் செய்துகொல்வதென்றால் (எழுத்துப்பிழை அல்ல) மாமனார்- மாமியார் இருக்க கூடாது என்று கண்டிஷன் போடும் அளவிற்கு வளர்ந்திருப்பது கண்கூடு...

சரி.. கூட்டுக்குடும்பங்களை பிரித்து நான்கு டி வி, நான்கு வாஷிங் மெஷின் விற்பனை செய்தாயிற்று... அடுத்து என்ன செய்வது?? விற்பனை எப்படி பெருகும்... இது அடுத்த கட்டம்... ஆட்சியாளர்களுக்கும், மின்வாரிய அதிகாரிகளுக்கும் பணத்தை அள்ளி இறைத்தால் அவர்கள் மக்களுக்காக வழங்கும் மின் சேவையில் குளறுபடி செய்வார்கள்... ஒரு மின் சாதனம் 220-240 வோல்ட் என்ற மின்னூட்ட அளவில் தயாரிக்கப்படதென்றால் அதே அளவில் சீரான மின்னூட்டம் கிடைத்தால் மட்டுமே சரிவர நீடித்து இயங்கும்... இந்த மின்னூட்ட அளவை திடீரென 140V அளவிலோ... திடீரென 240V அளவிலோ மாற்றி மாற்றி கொடுக்கும் போது அந்த மின் சாதணங்கள் எளிதில் பழுதாகும்... வேறு வழி இல்லாமல் உபயோகித்து பழக்கப்பட்டவர் மீண்டும் மீண்டும் வாங்கித்தான் ஆக வேண்டும்..

இப்போது புரிகிறதா மார்கெட்டிங் யுக்தி...??

நாம் வழக்கம் போல ஏமாறுவோம்... இந்த உலகம் பணக்காரர்களுக்காக மட்டுமே சுற்றும்..!!!

கற்பனை ஆடை



ஒரு மன்னரின் அரண்மனைக்கு ஒரு துணி நெய்பவன் இரண்டு மூன்று அடிபொடிகளுடன் வந்தான்... மன்னரை சந்திக்க அனுமதி கேட்டான்... உடன் வந்த அடிபொடிகள் "உலகிலேயே அழகான ஆடைகளை நெய்வதில் இவர்தான் வல்லவர் என்றும்... உலக பேரரசர்கள் எல்லாம் இவர் நெய்த ஆடைகளைத்தான் அணிந்திருகிறார்கள் என்றும்... பற்பல கோயில் மூலவர்களுக்கும், உற்சவர்களுக்கும் இவர் நெய்யும் ஆடையை அணிவித்து பூஜை செய்தால்தான் அந்த பூஜையே நிறைவடைகிறது என்றும் இன்னும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு புகழுரைகளை சொன்னார்கள்...

அரசனுக்கும் கொஞ்சம் கொஞ்சமாய் ஆசை எட்டிப்பார்த்தது.. ஒருவேளை இந்த ஆள் நெய்த ஆடையை அணியவில்லை என்றால் நாம் பேரரசர் இல்லையோ.. என்ற சந்தேகம் வர தனக்கும் ஒரு ஆடையை நெய்து தர சொல்லி கேட்டார்... பல லட்சங்கள் ஆகும் என்று சொன்ன அந்த நெசவாளி கஜானாவில் இருந்து பணத்தை வாங்கிக்கொண்டான்... ஒரு மாதம் கழித்து அரண்மனைக்கு வெறும் கையேடு வந்தான்...

ஆடை எங்கே.. என்று அரசர் கேட்டார்... இதோ கொண்டு வந்திருக்கிறேன் அரசே.. என்று வெறும்கையை தூக்கி காட்டினான்... அரசருக்கு கோபம் வந்தது.. என்ன விளையாடுகிறாயா.. வெறும் கையை காட்டி ஆடை இருக்கிறது என்கிறாயே....?? என்றார்..
இல்லை அரசே.. இதில் ஒரு சூட்சுமம் இருக்கிறது... முட்டாள்களின் கண்ணுக்கு இந்த ஆடை தெரியாது.. என்று சொன்னான்... அரசரும், சபையில் இருந்தோரும்.. அடடா.. ஆடை நம் கண்ணுக்கு தெரியவில்லை என்று சொன்னால் நம்மை முட்டாளாக்கி விடுவார்களே.. என்று பயந்து ஒவ்வொருவரும் "இல்லாத" ஆடையை புகழ்ந்து பேச ஆரம்பித்தார்கள்... ஆஹா ஆஹா.. பட்டு ஜரிகை வேலை எவ்வளவு அற்புதமாக வந்திருகிறது.. என்றார் ஒருவர்.. பலே,, பலே... அதில் செய்யப்பட்டிருக்கும் முத்து வேலைகளும் ஜரிகை ஓவியங்களும் கண்ணை கவர்கின்றன.. என்றார் ஒருவர்... அட அட.. இதுபோன்ற நவரத்தின வேலைப்பாட்டை இதற்கு முன் பார்த்ததே இல்லை என்றார் ஒருவர்... இன்னொருவர்.. இதை மட்டும் அணிந்துகொண்டால் நீங்கள்தான் உலகில் மிகச்சிறந்த ஆடையை அணிந்த அரசர் ஆவீர்கள் என்றார்..

எல்லோரும் சொல்ல சொல்ல.. கடைசியில் வேறு வழி இல்லாமல் மன்னரும் ஒப்புக்கொண்டார்.. ஆமாம் ஆமாம் .. ஆடை அழகாகத்தான் இருக்கிறது... என்றார்.. உடனே நெசவாளி.. இந்த உடையை இப்போதே நான் உங்களுக்கு அணிவித்து அழகு பார்க்க வேண்டும் மகா ராஜா என்றான்... வேறு வழி இல்லாத மன்னரும் உடுத்தி இருந்த ஆடையை அவிழ்த்துவிட்டு கற்பனையான ஒரு ஆடையை அணிவதுபோல பாவனை செய்து சபையில் நிர்வாணமாக நின்றார்...

நான்காம் வகுப்பிலோ,ஐந்தாம் வகுப்பிலோ படித்த ஒரு கதை இது... இப்போது இந்த கதைக்கு என்ன அவசியம்????

அந்த மன்னர்... ஈழ தமிழ் மக்கள்..
அந்த நெசவாளி - புலம் பெயர்ந்து வெளிநாடுகளில் குடியேறி வசதியான வாழ்க்கை வாழ்ந்துகொண்டு "நாடுகடந்த அரசு" நடத்தும் பெரும் பணக்கார இலங்கை தமிழர்கள்.. மற்றும் சீமான், நெடுமாறன் போன்ற ஈழ வியாபாரிகள்

அந்த "இல்லாத" ஆடை - ஈழம்

அந்த அடிபொடிகள் - சீமான், வைக்கோ,நெடுமாறன் போன்றோரின் தமிழக தொண்டர்கள்

எதுவுமே புரியாமல் மலங்க மலங்க விழித்தவர்கள் - நம்மூர் தமிழர்கள்..

அட அப் பாவிங்களா... இல்லாத ஆடையை கற்பனை செய்து அணிந்து நிர்வாணமாக நின்ற அந்த மன்னனுக்கும்.. உருவாகாத ஒரு நாட்டை "ஈழம் ஈழம்" என்று சொல்லி அதில் அரசியல் பிழைப்பு நடத்தும் நெடுமாறன், சீமான் போன்ற அல்லைகைகளை நம்பி நிர்வாணமாக திரியும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்...???

அதிகாரிகளின் நேர்மை




பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் முதல்வராக இருந்தபோது நாங்குநேரி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திரு சங்கையா ரெட்டியார் அவர்களுக்கு சொந்தமான திருநெல்வேலி நகரில் அமைந்திருந்த ஒரு திரையரங்க திறப்பு விழாவிற்கு சென்றாராம்... ஆனால் அன்றைய தினம் அந்த திரையரங்கம் திறப்புவிழாவிற்கு தயாராக இல்லை... என்ன காரணம் என்று கேட்க.. வேலைகள் சரிவர முடியாத காரணத்தான் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அவர்கள் அனுமதிகொடுக்கவில்லை என்று தகவல் சொல்லப்பட்டதாம்...

கூடவே... " முதல்வர் திறந்துவைக்கப்போவதாக நாங்கள் சொல்லியும் கூட அந்த கலெக்டர் அனுமதி தரவில்லை அய்யா... அதுமட்டுமல்லாமல் "நான் நினைத்தால் முதல்வர் ஆகி விடுவேன்... ஆனால் உங்கள் முதல்வர் நினைத்தாலும் கலெக்டர் ஆக முடியாது... எனவே என்னுடைய வேலையை முதல்வருக்காக நான் சமரசம் செய்துகொள்ள முடியாது " என்று அந்த கலெக்டர் சொல்கிறார்" என்றும் தகவல் சொன்னார்களாம்...

மிக சத்தமாய் சிரித்த காமராசர்.. "அவர் சரியாகத்தானே சொல்லி இருக்கிறார்... நான் எப்படி கலெக்டர் ஆக முடியும்.. அவர் நினைத்தால் ஒரு கட்சியில் சேர்ந்து முதல்வர் ஆக வாய்ப்பு இருக்கிறது.. அவர் சரியாகத்தான் சொல்லி இருக்கிறார்.. என்று சொன்னாராம்...

அதோடு மட்டுமல்லாமல் மறுநாள் நேரடியாக அந்த கலெக்டரின் வீட்டிற்கே சென்று "நீங்க எல்லாம் இப்படி நேர்மையா இருந்தாதான் நாடு நல்லா இருக்கும்.. உங்கள மாதிரி ஆளுங்க வரணும்னுதான் நாங்க எல்லாம் கஷ்டப்பட்டோம்" என்று சொல்லி பாராட்டிவிட்டு, கலெக்டர் மனதில் எதுவும் சலனம்/பயம் வந்துவிட கூடாது என்பதற்காக ஒரு காப்பி கொடுங்கள் என்று கேட்டு வாங்கி குடித்துவிட்டு வந்தாராம்...

மேற்கண்ட செய்தியை படித்துக்கொண்டிருந்தபோது தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளர் சொல்லிக்கொண்டிருந்தார்... வட்டச்செயலாலரின் மச்சானிடம் லைசென்ஸ் கேட்ட போக்குவரத்து துறை காவல் அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டார்....

கடந்த நாற்பது ஆண்டுகளில் நாடு எதை நோக்கி நகர்ந்திருக்கிறது என்பது இப்போது நன்றாக புரியுமே...!!!

தாழம்பூ



மலர்கள் மலரும் காலத்தை வைத்து நேரம், பருவகால மாற்றம் ஆகியவற்றை நம் முன்னோர்கள் தெரிந்து வைத்திருந்தார்கள்... மல்லிகை, பாகல் போன்ற மலர்கள் மாலை சரியாக 6 மணிக்கு மலரும்.. அல்லி சந்திரனை கண்ட உடன் மலரும்... தாமரை சூரியனை கண்ட உடன் மலரும்..

அந்த வகையில் தாழம்பூ மின்னலை கண்டு மலரும் என்று தெரிந்து வைத்திருந்திருக்கிறார்கள்..... 

மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டையார் திரு எம் ஜி ஆர் அவர்கள் நடிப்பில் உருவான நாடோடி மன்னன் திரைப்படத்திற்காக 1958 ம் ஆண்டு எழுதிய

"கண்ணில் வந்து மின்னல் போல் காணுதே - இன்பகாவியக் கலையே ஓவியமே" என்ற பாடலில் இந்த தகவலை பயன்படுத்தி இருக்கிறார்...

"சுடர் மின்னல் கண்டு தாழை மலர்வது போலே
உனைக் கண்டு உள்ளமே மகிழ்ந்தேனே..." என்று வரும் அந்த வரிகள்...

சமகாலத்தில் திரு சேரன் அவர்கள் நடிப்பில் வெளியான "ராமன் தேடிய சீதை" என்ற படத்தில் கவிஞர் திரு விவேகா அவர்கள் இந்த தகவலை மீண்டும் பயன்படுத்தி இருக்கிறார்கள்..

"இப்பவே இப்பவே பார்க்கணும் இப்பவே
இப்பவே இப்பவே பேசணும் இப்பவே.. என்ற பாடலில்

"சொல்லித் தீரா இன்பம் கண்டு
எந்தன் நெஞ்சு கூத்தாட
மின்னல் கண்ட தாழை போல
உன்னால் நானும் பூத்தாட ..." என வரும்..

திசைக்காட்டி



சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ராஜேந்திர சோழனிடம் கடற்படைகள் இருந்தது எனவும், அப்போது தமிழர்கள் கலிங்கம், ஓட்டம், சீனம், ஈழம் போன்ற பகுதிகளுக்கு கடல் வணிகம் செய்தார்கள் என்றும் வரலாறு நமக்கு சொல்லி இருக்கிறது...

சமகாலத்தில் கடற்பயனத்திற்கென திசை காட்டும் கருவிகள், ரேடார் போன்ற தொலைதொடர்பு சாதனங்கள் இருக்கின்றன. ஆனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அப்படி எந்த கருவியும் இல்லாதகாலத்தில் அவர்கள் எப்படி கடலில் சரியாக திசை அறிந்து பயணித்தார்கள்...??

தேவாங்கு என்ற ஒரு விலங்கை அவர்கள் திசை அறிய பயன் படுத்தி இருக்கிறார்கள்... ஆம்.. தேவாங்கை அமர வைத்தால் அது மேற்கு திசை நோக்கித்தான் அமருமாம்...


சித்தர்கள்



உலகின் பல கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய தாமஸ் ஆல்வா எடிசன் அவர்களின் மூளையே சுமார் 25% தான் உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறதாம்... அப்படியானால் ஒரு சாதாரண மனிதனின் மூளை சுமார் 4 அல்லது 5 % தான் உபயோகப்படுத்தப்படுகிறது...

மனித மூளையை 100% உபயோகிக்க தெரிந்தால் நிச்சயம் அவனால் பறக்க முடியும், நீரில் நடக்க முடியும், உலகின் பார்வையில் இருந்து மறைய முடியும், இந்த பூமியை சுற்றாமல் நிறுத்தி வைக்க முடியும்.. 

என்னை பொருத்தவரை நம்முடைய முன்னோர்கள் மூளையை சுமார் 70- 80% உபயோகிக்கத் தெரிந்து வைத்திருக்கிறார்கள்.. அதனால் தான் அவர்களால் எந்த தொலைநோக்கியோ, ராக்கெட்டோ இல்லாமல் மற்ற கிரகங்களை பார்த்து அதன் நகர்வுகள், தூரம் ஆகியவற்றை கூட துல்லியமாய் எழுதி வைக்க முடிந்தது... நவீன விஞ்ஞானம் திணறும் பல விஷயங்களை துக்கியமாய் குறிப்பிட முடிந்தது..

சாவித்திரியால் பொழுது விடியாமல் நிறுத்தி வைக்க முடிந்தது, கயிலாயத்தில் நடந்த சிவபெருமான் திருமணத்தை அகத்தியரால் தென்முனையில் இருந்து பார்க்க முடிந்தது...

சொர்க்கம்-நரகம் என்பதை யார் பார்த்துவிட்டு வந்து சொன்னார்கள் என்று நவீன பகுத்தறிவு கேள்விதான் கேட்கிறது... இந்த பகுத்தறிவு வாதிகளும் தங்கள் மூளையை 4-5% மட்டுமே உபயோகிக்கத்தெரிந்த சமகாலத்தவர்கள் தான்.. 75-80% மூளையை உபயொகிக்கத்தெரிந்து வைத்திருந்த நம் முன்னோர்கள் அதையும் கூட நேரில் போய் பார்த்துவிட்டு வரும் அளவு சக்தி பெற்று இருந்திருக்கலாம்... யார் கண்டது...??? ஒருவேளை நம்முடைய மூளை 100% முழுதாய் உபயோகப்படுத்தப்படுகிறது என்ற நிலை வந்தால் மட்டுமே நம் முன்னோர்கள் சொன்னது தவறு என்று நம்மால் சொல்ல முடியும்..

ஆனால்.. அதை கற்றுக்கொள்ளாதே.. இதை கற்றுக்கொள்ளாதே என்று முடக்கி முடக்கி நம்முடைய மூளை மழுங்கடிக்கப்பட்டு விட்டது... அதனால் தான் இன்று வெறும் 5-6% மூளையை மட்டுமே பயன்படுத்த தெரிந்து மற்றவர் கண்டுபிடித்த பொருட்களுக்கு மொழிபெயர்ப்பு செய்துகொண்டு இருக்கிறோம்..

மனித மூளையை ஓரளவு உபயோகிக்கத்தெரிந்தாலே , சுமார் 40 மொழிகளை பேச, எழுத, படிக்க கற்க முடியுமாம்...
உபயோகிக்காத எந்த பொருளும் நாளடைவில் பரிணாம வளர்ச்சியில் காணாமல் போகும்... அந்த வகையில் தான் இப்படியாக முடக்கி முடக்கி நம்முடைய மூளையும் உபயோகமற்று கிடக்கிறது...