புதன், 27 செப்டம்பர், 2017

அப்பா.... அனாவசியம் அல்ல... அத்தியாவசியம்

ஒரு மனநல மருத்துவரின் பேட்டியை எதார்த்தமாக பார்க்க நேர்ந்தது.... நியாயமாக நாம் அதுமாதிரி பேட்டிகளில் எல்லாம் ஈடுபாடு காட்டுவதில்லை என்றாலும்... அந்த மருத்துவரின் அழகு என்னை சேனல் மாற்ற விடாமல் நிறுத்தியது... என்பதுதான் உண்மை...

ஆனால்.... அந்த பேட்டியின் ஊடாக அவர் சொன்ன ஒரு விஷயம் நிச்சயம் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.... தன்னுடைய தந்தையின் செல்போனில் எட்டுவயது குழந்தை ஒன்று ப்ளூ வேல் கேம் டவுன்லோட் செய்து வைத்திருப்பதை பார்த்த அவரது தாயார்.. கவுன்சலிங் கொடுக்க சொல்லி இந்த மருத்துவரிடம் கூட்டி வந்திருக்கிறார்...

முதலில்.... அந்த குழந்தை விபரம் (விபரீதம்)புரியாமல் செய்திருக்கும் என்று நினைத்த மருத்துவர் மெதுவாக பேச்சுக்கொடுக்க... கிடைத்த விஷயம் அப்படி ஒரு அதிர்ச்சி தர கூடியது...
Image may contain: 1 person, closeup

குழந்தையின் தாயும் தந்தையும் அடிக்கடி சண்டை போட்டுக்கொள்ள... தாய் மீது கூடுதல் ஒட்டுதலுடன் இருக்கும் அந்த குழந்தை தந்தையை பழிவாங்க ப்ளூ வேல் கேமை டவுன்லோட் செய்து வைத்திருக்கிறது.... என்ன முடிவு என்பது தெரிந்தே....

இத்தனைக்கும் அந்த குழந்தையை அவர் திட்டியதோ- அடித்ததோ இல்லையாம்.... குழந்தைக்கு அவர் எப்போதுமே நல்ல தந்தையாகத்தான் இருந்திருக்கிறார்.... ஆனாலும்... அந்த குழந்தையின் சிந்தனை தாய்க்கு ஆதரவாக.... தந்தைக்கு தற்கொலைக்கு வழிகாட்டும் காரியத்தை செய்ய தூண்டி இருக்கிறது...

பெரும்பாலான அறிஞர்களும், ஆலோசகர்களும் சொல்லும் விஷயம்.... குழந்தைகளுக்கு முன்பாக சண்டை போடாதீர்கள்.... இது நல்ல விஷயம்தான் என்றாலும்... இதனை செயல்படுத்துவதில் இருக்கும் சிக்கல் நிறைய....

குழந்தைகள் தாயுடன் செலவழிக்கும் நேரம் தான் அதிகம் என்பதால்.. இயல்பில் தந்தையை விட தாயின் மீதே கூடுதல் ஈர்ப்புடன் இருக்கும்... நிறைய குழந்தைகள் தந்தை வாங்கி வரும் சாக்லேட்-சிப்ஸ் போன்றவற்றிற்காக மட்டுமே தந்தையை தேடும் நிலையும் உள்ளது... (இதில் தந்தைக்கும் பங்குண்டு... அதை சாவகாசமாக வேறொரு கட்டுரையில் கூடுதல் விரிவாக பார்க்கலாம் )

இப்படியான நிலையில் குழந்தைகள் தந்தையை விட்டு நிரந்தரமாக விலகாமல் இருக்கவும், ஒட்டுதல் ஏற்படுத்தவும் தாய்மார்கள் முனைய வேண்டும்.... குடும்பத்திற்கென தந்தை செய்யும் தியாகங்கள்.. அனுபவிக்கும் கஷ்டங்கள்... வருமானம் ஈட்ட படும் துயரங்கள்.. ஆகியவற்றை குழந்தைகளுக்கு புரிய வைக்க வேண்டும்...

என்ன பிரச்சினை இருந்தாலும் கூடுமானவரை குழந்தைகளை வைத்துக்கொண்டு கணவனிடம் குறுக்கு விசாரணை செய்வதையோ- உறவுகளை பற்றி விமர்சிப்பதையோ... குறை கூறுவதையோ தவிர்க்க வேண்டும்... இதை பின்பற்றினாலே தொண்ணூறு சதவிகிதம்கு ழந்தைகளுக்கு முன்னான சண்டைகளை தவிர்த்து விடலாம்...

இதை கடைபிடித்தாலே நீங்கள் ஓரளவு நல்ல வளர்ப்பை கொடுக்கிறீர்கள் என்று அர்த்தம்...

ஆனால்.. இவைகளை நீங்கள் கடை பிடிக்க வேண்டுமானால் முதலில் நீங்கள் உங்கள் கணவனை புரிந்துகொள்ள வேண்டும்...

இல்லை என்றால்.... உங்கள் குழந்தைகளே உங்களை விதவை ஆக்கும் விபரீதம் நிகழலாம்...

( நான் சம்பாதிக்கிறேன்.... விதவை வேஷம் எல்லாம் எனக்கெதற்கு என்பவர்கள் இதை படித்ததையே மறந்து விடலாம்... இது உங்களுக்கான கட்டுரை அல்ல )

பாதுகாப்புக்காக ஒரு உறவு



எம் தமிழ் சமூக பெண்களிடையே வட இந்திய பண்டிகையான "ரக்ஷா பந்தன் " என்பது பற்றி பொதுவாகவே ஒரு தவறான புரிதல் நிலவுகிறது...
Image may contain: one or more people and jewelry
ரக்ஷா பந்தன் என்பது ஒரு ஹிந்தி வார்த்தை.... ரக்ஷா என்றால் பாதுகாப்பு (Defence) என்றும்... பந்தன் என்றால்... பிணைப்பு ... அதாவது சொந்தம் என்றும் அர்த்தம் வரக்கூடிய சொல்...

அதாவது, பெண்கள் தங்களுடைய பாதுகாப்புக்காக இருக்கும் சொந்தங்களுக்கு நன்றி சொல்வதாகவோ - அல்லது பாதுகாப்புக்கென புதிய பிணைப்புகளை (சொந்தங்களை) உருவாக்கிக்கொள்ளவோ உருவாக்கப்பட்ட, கொண்டாடப்படுகின்ற ஒரு பண்டிகை....

அந்நாளில் அலங்கரிக்கப்பட்ட ஒரு கையிற்றை ஒரு ஆணின் கையில் கட்டுவார்கள்... பெண்ணுடன் பிறந்த ஆண் மகனோ... அந்த பெண்ணை சகோதரியாக நினைக்கும் ஆணோ தான் அவ்வாறான பாதுகாப்பை கொடுக்க முடியும் என்பது ஒரு பொதுவான கருத்தென்றாலும்.... அந்த சகோதரன் மட்டும் தான் அப்படியான பாதுகாப்பை கொடுக்க முடியும் என்பது உண்மை அல்ல...

ஒரு பெண்ணுக்கு கணவனிடம் பாதுகாப்பு இல்லையா என்ன??

இவன் தன்னை பாதுகாப்பான் என்ற நம்பிக்கையை எந்த ஆண் மீது ஒரு பெண் வைக்கிறாளோ..... எந்த ஆணுடன் இருந்தால் பாதுகாப்பாக, நிம்மதியாக இருக்கிறோம்.. என்று ஒரு பெண் உணர்கிறாளோ.... அந்த ஆணுக்கெல்லாம் "ராக்கி " கட்டலாம்....

அது கணவனாக இருந்தாலும் சரி... காதலனாக இருந்தாலும் சரி...

# வாங்க செல்லங்களா.... நீங்க எத வேணா கட்டுங்க.... நாங்க அப்படித்தான்....

ஸ்ட்ரெயிட்டா சி எம் தானா ?



உங்க உழைப்பு... நீங்க சம்பாதிக்கிறீங்க..... அத நீங்க எவனுக்கும் கொடுக்கணும்னு அவசியமே இல்ல..... நீங்க ஏன் அந்த விஷயத்துல உதவல.... இந்த விஷயத்துல உதவல.... மக்களுக்கு என்ன செஞ்சீங்க.... உங்களுக்கு சேவை மனப்பான்மை இல்ல.... இப்படி எல்லாம் யாரும் யாரையும் கேக்க முடியாது.... ஏன்னா ... நம்ம சம்பாதிச்ச காச எடுத்துக்கொண்டு போய் எவனுக்கும் உதவித்தான் ஆகணும்னு கட்டாயம் இல்ல.... அது உங்க உரிமை.. உங்க விருப்பம்.... செஞ்சாலும் செய்யலாம்.... செய்யாட்டியும் இருக்கலாம்... எவனும் சம்பாதிச்சு கொண்டுவந்து நம்மகிட்ட கொடுக்கல.... அப்புறம் எப்படி "நீ அத செஞ்சியா... இத செஞ்சியா"ன்னு கேள்வி கேக்க முடியும்??

சரிதானே ரஜினி/கமல்.... நான் சொல்றது....??
Image may contain: 2 people, people smiling, beard
கண்டிப்பா இத நீங்க மறுக்கவே மாட்டீங்க.... ஆனா... ஆனா...

அப்படி நீங்க சம்பாதிச்சதோட மூடிகிட்டு உங்க வேலைய பார்த்துகிட்டு, உங்க குடும்பத்த பார்த்துகிட்டு இருந்திருந்தா மட்டும் தான் மேல உள்ளது பொருந்தும்.... எப்போ நீங்க முதலமைச்சர் நாற்காலிய குறிவச்சு, இப்போ எவனும் இல்ல.... நம்மோட பாப்புலாரிட்டிய யூஸ் பண்ணி நாமளும் தான் கொஞ்ச நாள் அதிகாரம் பண்ணி பார்ப்போமேன்னு அரசியல் பக்கம் வர துடிக்கிறீங்களோ அப்போவே முதல் பாரால சொல்லி இருக்கிற விஷயத்துல இருந்து நீங்க அவுட் ஆயிட்டீங்க....

ஓட்டுரிமை இருக்கிற/இல்லாத ஒவ்வொரு தமிழ்நாட்டு குடிமகனும் உங்கள கேள்வி கேப்பான்... நீங்க சம்பாதிச்சதுல இருந்து பங்கு கொடுக்கலன்னு பிச்சக்காரத்தனமா எல்லாம் கேக்கல..... எங்க பிரச்சினைகள் என்னன்னு உங்களுக்கு தெரியுமா?? எங்களோட எத்தனை அன்றாட/ வாழ்வாதார பிரச்சினைகள்ள எங்க கூட நின்னிருக்கீங்க??? இதுவரை எங்களுக்காக என்ன கிழிச்சீங்க... இப்போ எங்களை ஆள துடிக்கிறீங்க ??

மொதல்ல இறங்கி வெளில வாங்க.... ஊர் உலகத்துல என்ன நடக்குதுன்னு பாருங்க.... மக்களோட பிரச்சினைகள் என்னன்னு தெரிஞ்சுக்குங்க.... மக்களோட மக்களா கொஞ்ச நாள் நின்னு பாருங்க..... கதிராமங்கலம், நெடுவாசல் விவசாயிகள் பிரச்சினைகள்... காவிரி, முல்லை-பேரியாறு , கிருஷ்ணா போன்ற விவசாய - குடிநீர் ஆதார பிரச்சினைகள் என்னன்னு அவங்களோட நின்னு தெரிஞ்சுக்குங்க... மீனவர்கள் பிரச்சினை என்ன்னன்னு அவங்களோட நின்னு தெரிஞ்சுக்குங்க.... சென்னை மக்களோட குடிநீர் பிரச்சினைகள்... சாலைப்பிரச்சினைகள்ள அவங்க கூட நின்னுங்க....

அதுக்கான தீர்வுகள் என்னன்னு உங்களுக்கு தெரிஞ்சத சொல்லுங்க.... அத செயல்படுத்த நீங்க என்ன திட்டம் வச்சிருக்கீங்க... நிர்வாக கட்டமைப்புகளை உருவாக்கி வச்சிருகீங்கன்னு சொல்லுங்க....

இதெல்லாம் செஞ்சப்புறம் நாங்க முடிவு பண்றோம்..... நீங்க அந்த நாற்காலிக்கு தகுதியானவரா... இல்லையான்னு...

அத விட்டுட்டு....தமிழ்நாடு என்னமோ உங்க பாட்ட- முப்பாட்டன் சொத்து மாதிரி நாலு விசிலடிச்சான் குஞ்சுங்க உங்க போஸ்டர்க்கு பாலூத்தின உடனே முதலமைச்சர் கனவு காண்ட்றீங்க......

எங்களை எல்லாம் பார்த்தா சொம்பு மாதிரி தெரியுதா என்ன ???

வரலாற்றை திரிக்காதீர்கள்

ஒரு விறகு வெட்டி ஆற்றங்கரையில் விறகு வெட்டும் பொழுது அவனது கோடரி தண்ணீரில் வழுந்துவிட்டதாகவும்... உடனே ஒரு தேவதை வந்து தங்க, வெள்ளி, இரும்பு கோடரிகளை கொடுக்க... தங்க-வெள்ளிக்கு ஆசைபடாத விறகு வெட்டிக்கு மூன்று கோடரிகளையும் அந்த தேவதை கொடுத்துச்சென்றதாகவும் நான் சிறுவயதில் பள்ளிக்கூடத்தில் படிக்கும் பொழுது ஒரு கதை இருந்தது...

பின்னாளில் அது நவீன வளர்ச்சி பெற்று வேறுமாதிரியாய் சொல்லப்பட்டது.... அதே விறகுவெட்டி மற்றுமொருநாள் அதே ஆற்றங்கரையில் உட்கார்ந்து அழுதுகொண்டிருக்க.... அதே தேவதை வந்து "ஏன் அழுகிறாய்" என கேட்டதாம்.... உடனே விறகு வெட்டி... என்னுடைய மனைவி ஆற்றில் விழுந்துவிட்டாள்.. என்றானாம்...

நீரில் மூழ்கிய தேவதை கையில் அனுஷ்காவை தூக்கிக்கொண்டு வந்ததாம்..... இவளா உன் மனைவி என தேவதை கேட்க.... விறகுவெட்டி , சற்றும் யோசிக்காமல் ஆமாம் ஆமாம்... என்றானாம்....



எல்லாமறிந்த தேவதைக்கு இவன் பொய் சொல்வதும் தெரிந்துவிட்டது.... அடே பாவி... தங்க, வெள்ளிக்கு கூட ஆசைப்படாத நீ.... ஒரு அழகான பெண்ணுக்கு ஆசைப்பட்டு இவள்தான் என் மனைவி என்று பொய் சொல்கிறாயே.... என கேட்டதாம்....
Image may contain: 1 person, smiling, closeup
உடனே விறகுவெட்டி.... அப்படி எல்லாம் இல்லை.... நீ முதலில் இவளை காட்டுவாய்... பிறகு நயன்தாராவை காட்டுவாய்... மூன்றாவதாக என் மனைவியை கொண்டுவருவாய்..... நான் இவள்தான் என் மனைவி என்ற உடன்... இந்தா.... மூன்றையுமே வைத்துக்கொள்... என கொடுத்துவிட்டு சென்று விடுவாய்.... ஒருத்தியிடம் சிக்கி சீரழிந்தே சமாளிக்க முடியாமல் விழித்துக்கொண்டு இருக்கிறேன்.... இதில் இன்னும் இரண்டு பெண்களை என்ன செய்ய... அதனால்தான் நான் முதலில் நீ ஒரு பெண்ணை காட்டியதும் இவள்தான் என் மனைவி என்று சொல்லிவிட்டேன்... என்றானாம்....


நகைச்சுவைக்காக ஒரு பழைய கதை புதிதாக எடிட் செய்யப்பட்டது... நாமும் ரசித்தோம்.... அது வெறும் கதை..... ஆனால்... சமகால இணைய எழுத்தாளர்கள் தங்கள் ஜாதியில் பிறந்த தலைவர்களை தூக்கிப்பிடிப்பதாய் நினைத்துக்கொண்டு ( கவனிக்கவும்... ஜாதித்தலைவர்கள் இல்லை... ஜாதியில் பிறந்த தலைவர்கள் ) வரலாற்று தகவல்களை எடிட் செய்து வெளியிடுகிறார்கள்....

இன்று காலை அப்படி ஒரு தகவலை காண நேர்ந்தது.... நேதாஜி ஹிட்லரை காண ஜெர்மன் சென்றிருந்தபொழுது அங்கு வந்து நேதாஜியின் தோளில் கை வைத்ததை உணர்ந்த நேதாஜி... திரும்பி பார்க்காமல்... "ஹவ் ஆர் யு ஹிட்லர்" என்று கேட்டதாகவும்... ஒரிஜினல் ஹிட்லர் வரும் முன்பே ஹிட்லரின் தோற்றத்தில் வேறு சிலர் இருந்தாலும் கூட ஒரிஜினல் ஹிட்லரை எப்படி கண்டுபிடித்தீர்கள் என்று கேட்டதாகவும், அதற்கு நேதாஜி "என் தோளில் கை வைத்து பேசக்கூடிய தைரியம் ஹிட்லர் ஒருவருக்கு மட்டுமே உண்டு... ஹிட்லர் தோற்றத்தில் இருந்தவர்கள் எல்லாம் என்னுடன் கை குலுக்கினார்கள்... உண்மையான ஹிட்லர் மட்டுமே என் தோளில் கை வைத்து பேசினார்..." என்றாராம்...

Image may contain: 1 person
இப்படி ஒரு தகவலை சில காலத்திற்கு முன்பே சில இடங்களில் நான் படித்திருக்கிறேன்.... இன்று காலையில் படித்த தகவலில் இந்த தகவல் மேலும் எடிட் செய்யப்பட்திருந்தது... கூடவே நேதாஜி... ஒரிஜினல் ஹிட்லரை தவிர என் தோளில் யார் கைவைத்திருந்தாலும் என் பாதுகாவலன் முத்துராமலிங்க தேவர் அவனை சும்மா விட்டிருக்க மாட்டார்... என்று நேதாஜி சொன்னதாகவும்... ஹிட்லர் உடனே முத்துராமலிங்க தேவரை பற்றி நீண்ட நேரம் விசாரித்துவிட்டு... இதுபோல ஒரு பாதுகாவலன் எனக்கில்லையே... என வருந்தியதாகவும் நீண்டிருந்தது... அந்த செய்தி...

தங்கள் ஜாதியை சேர்ந்த தலைவரை தூக்கிப்பிடிப்பதாய் நினைத்து குப்பற தள்ளி இருந்தார் அந்த அன்பர்...

உங்களின் கற்பனை திறனை நான் மெச்சுகிறேன்... அதை கதை எழுதுவதில் காட்டுங்கள்..... உண்மைச்சம்பவங்களை திருத்திகாட்ட நினைக்காதீர்கள்.... நீங்கள் தூக்கி பிடித்துதான் முத்துராமலிங்க தேவர் அவர்களின் புகழ் உயர வேண்டும் என்ற அவசியமே இல்லை.....இப்படி திருத்தப்பட்ட செய்திகளின் மூலம் நிஜமான ஒரு தலைவனை பற்றிய மற்றனைத்த நிஜத்தகவல்களும் கூட சந்தேகக்கண்ணுடன் பார்க்கப்பட்டு, நகைச்சுவை ஆகி விடும்...

அன்புட்டுதேன்...


திங்கள், 14 ஆகஸ்ட், 2017

பொதுஜனத்தின் கடமை



சமீப கால ஊடகத்தீனி கமல்.... ஆகவே சமூக ஊடகவியலாளர் ஆகிய சாமான்யனாலும் கமலை தவிர்த்துவிட முடியாது... அதே நேரம் கமர்ஷியல் ஊடகங்களுக்கு அறவே இல்லாமல் போன பத்திரிகை தர்மம் , லாபநோக்கமில்லாத நமக்கு இருக்கிறது... ஆகவே சாமான்யனுடைய பார்வை சற்று வேறுவிதமாய் இருக்கிறது..
முதலில் , கமல் தரப்பின் நியாயங்களை எடுத்துக்கொண்டால்... ஒரு பொது மனிதனாக அவர் தமிழக அரசின் மீது வைக்கும் விமர்சனங்களுக்கு தகுந்த பதில் சொல்ல வேண்டியது ஆட்சியாளர்களின் கடமை... அதை தவிர்த்து "நீ முதலில் அரசியலுக்கு வா... பிறகு கேள்வி கேட்கலாம்" என்றும்.. அவர் நடிகர்... இந்திப்படங்களில் நடித்தவர்... திருமணமாகாமல் ஒரு பெண்ணுடன் சேர்ந்து வாழ்ந்தவர் என்பது போன்றெல்லாம் அவரின் தொழில் மற்றும் தனி மனித வாழ்க்கையை விமர்சிப்பது மிகவும் மோசமான நடவடிக்கை...
Image may contain: 1 person
ஜனநாயக நாட்டில் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் அதிகாரம் இருக்கிறது.. கேள்விகள் கேட்கும் உரிமை இருக்கிறது... நம்மை போல சாமான்யனாக இல்லாமல் வெகு ஜனங்களுக்கு தெரிந்த முகமாக இருப்பதனால் கமலஹாசன் என்ற பொதுஜனத்தின் கேள்வி சற்று உரக்க ஒலிக்கிறது.... அந்த கேள்வி ஊடகங்களால் பரப்பப்பட்டு வெகுஜனங்களுக்கு தெரிய வைக்கப்படுகிறது... நீங்களும், நானும் ஏற்கெனவே பலஆயிரம் முறை கேட்ட விஷயங்கள்தான் என்றாலும் அது நம் அருகில் இருப்பவரையோ- நம் நண்பர்கள் பட்டியலில் இருப்பவர்களையோ தாண்டி வேறெங்கும் கேட்கவில்லை... ஆனால் இந்த பிரபல முகமூடியை அணிந்திருப்பதால் கமல் என்ற பொதுஜனத்தின் கேள்வி ஆட்சியாளர்களை அசைக்கிறது...

கமலின் தனிமனித வாழ்க்கையை விமர்சிக்கும் இவர்களில் எத்தனை பேரின் தனிமனித வாழ்க்கை ஒழுக்கமாக இருக்கிறது என்று அவர்களுக்கே தெரியும்... அவர் இந்திப்படத்தில் நடித்தவர் என்று சொல்கிறார் தமிழக நிதி அமைச்சர்... இந்த கேள்வி ஆரம்ப பள்ளியை தாண்டாத ஒரு மாடு மேய்ப்பவனின் கேள்வியை விட மோசமாக இருக்கிறது... தொழில்முறையில் அவர் இந்திப்படங்களில் நடித்தார்... தமிழக அரசு பல வெளிநாட்டு நிவனங்களுடன் ஒப்பந்தம் செய்கிறதே... அதுபோலத்தான்...
நம்மை பொறுத்தவரை கமலஹாசன் என்பவர் நம்மை போன்ற ஓட்டுரிமை உடைய, வரி கட்டுகிற ஒரு பொதுஜனம்.. ஆட்சியாளர்களை கேள்வி கேட்கும் உரிமை இவருக்கு இருக்கிறது... பதில் சொல்லியே ஆக வேண்டும்...

அடுத்தது... நிகழ்வில் இருக்கும் மற்ற அரசியல்வாதிகள்...

இவர்கள் எல்லாம் அரசியல் நடத்தவும், ஆட்சி செய்யவும் அவதரித்தவர்கள் போலவும்... மற்றவர்கள் எலாம் வேறொன்றும் தெரியாமல் இவர்கள் கொடுக்கும் ஆயிரத்திற்கும், ஐநூறுக்கும், இலவச பொருட்களுக்காகவும் ஓட்டுப்போட மட்டுமே பிறந்தவர்கள் என்பது போலவும் கொதிக்கிறார்கள்...?? நிகழ்வில் இருக்கும் பல அரசியல்வாதிகளை விடவும், அமைச்சர்களை விடவும் சட்டமன்ற உறுப்பினர்களை விடவும் அறிவார்ந்து சிந்திக்கக்கூடிய, திட்டமிட கூடிய, செயல்பட கூடிய பொதுஜனங்கள் லட்சங்களை தாண்டி உள்ளனர்... தமிழிசையாக இருக்கட்டும், பொன் ராதாகிருஷ்ணனாக இருக்கட்டும், எடப்பாடி பழனிச்சாமி, ஜெயக்குமார், தங்கமணி, சி வி சண்முகம் என யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும்... இவர்கள் எல்லாம் பல்கலை கழகங்களில் அரசியலை கற்றுத்தேர்ந்து தமிழக/இந்திய அரசியலை காப்பாற்ற வர வில்லை....

நிகழ்வில் இருக்கும் பெரும்பாலான அரசியல்வாதிகளின் பின்னணியை தோண்டிப்பார்த்தால் ரவுடியிசம், கட்டபஞ்சாயத்து, கள்ளச்சாராயம், வெட்டு-குத்து, விபச்சாரம் போன்ற விஷயங்கள்தான் இருக்கும்... இவர்கள் கமலை பார்த்து கேள்விகேட்கிறார்கள்... "இவருக்கு என்ன தகுதி இருக்கிறது.." என்று.... ஒருவேளை இவர்கள் "தகுதி" என நினைப்பது அவர்களின் பின்னனியை தான் போலும்...

கேள்விகள் கேட்கவும் ... .... வாய்ப்பு கிடைத்தால் ஆட்சிக்கட்டிலில் அமரவும் கூட கமலஹாசனுக்கு உரிமை இருக்கிறது... அதற்கான தகுதியும் இருக்கிறது.... இதை அவர் ஒரு சினிமா கதாநாயகன் என்பதற்காக சொல்லவில்லை... ஒரு விபரமறிந்த பொதுஜனம் என்பதற்காக சொல்கிறோம்..

அதே நேரம்... கமலஹாசன் ஒரு பொதுமனிதன் என்பதை தாண்டி .. பலருக்கு அறிமுகமான சினிமா கதாநாயகன் என்ற தோரணையில் அவரது அறிக்கைகள் மற்றும் ட்வீட்களில் "நான்" என்று முடிக்கிறார்.. என் துறையில் இருக்கும் ஊழலை நான் சொல்கிறேன் என்கிறார்... தைரியமான சினிமாக்காரர்கள் என்னோடு சேர்ந்து சொல்லட்டும் என்கிறார்... இப்போதும் கூட அவர் சினிமாவிற்கான தணிக்கை துறை, கேளிக்கை வரிவிலக்கு போன்ற அரசு அனுமதிக்கான இடங்களில் நிகழும் கையூட்டு பற்றி மட்டுமே பேசுகிறாரே தவிர.... "தமிழில் பெயர் வைத்தால் கேளிக்கை வரி விலக்கு " என்ற ஒற்றை அரசாணையை முன்னிறுத்தி எத்தனை தயாரிப்பாளர்கள் பலனடைந்தார்கள்..?? தியேட்டர்களில் திரைப்படங்கள் வெளியான ஒரே நாளில் இத்தனை கோடி வசூல் என்று விளம்பரம் செய்தார்களே.... அரசு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தில் டிக்கெட் விற்றுத்தான் அந்த கோடிகள் வசூலானதா?? நடிகர் சங்க கட்டிடம் கட்ட ஒரு தெருவே ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது.. என்று வழக்கு தொடுத்தார்களே.. அந்த பகுதிவாசிகள்... இப்படி திரைத்துறை அத்துமீறல்களின் போதும் கமலஹாசனுக்கும் இருக்கும் "பொதுஜனம்" வெளிப்பட்டிருக்கலாமே... என்பதுதான் என் போன்ற சாமான்யனின் ஆதங்கம்...

இப்போதும் ஒன்றும் கெட்டுப்போய் விட வில்லை... கமல் வெறும் நடிகனாக "நான் உண்டு.. என் வேலை உண்டு" என்று நினைத்தால் அவர் சினிமாவோடு நிறுத்திக்கொள்ளட்டும்.... சினிமாக்காரன் என்ற முகமூடி களைந்து நானும் ஒரு பொதுஜனம் என்ற உரிமையில் ஆட்சியாளர்களை கேள்வி கேட்க முனைந்தால்.... அந்த கேள்வி சாட்டை எல்லாபக்கமும் சுழலட்டும்... எங்களின் பிரதிநிதியாக கொண்டாடி நாங்களும் உடனிருக்கிறோம்....

அவ்வளவுதான்... அவ்வளவே தான்...

குறிப்பு:- எங்களுக்கும் இருக்கு.... நாங்களும் முறுக்குவோம்...

கேரக்டர் எனப்படுவது யாதெனின்...


இப்படித்தான் நினைக்க சொல்லி கற்றுக்கொடுத்திருக்கிறது நவீன சமூகம்..

கேரக்டர் என்பது பாலியல் உறவோ- ஊர் சுற்றுவதோ குடிப்பதோ மட்டும் இல்லை.... அது பல விஷயங்கள் தொடர்புடையது...

*பழகும் தன்மை
*அன்பு காட்டுதல்
*மற்றவர்களுக்கு துன்பமிழைக்காமை
*அரவணைத்தல்
*சம்பாதித்தல்
*சேமித்தல்
*திட்டமிடல்
*சுத்தம் பேணுதல்
*வீண் வம்புக்கு போகாமை
*புறம் பேசாமை
*பொய் கூறாதிருத்தல்
*கள்ளுண்ணாமை
*சுய ஒழுக்கம்
* ஈகோ இல்லாமை
* தாழ்வு/உயர்வு மனப்பான்மை இல்லாமை
*நேர்மை
No automatic alt text available.
இன்னும் நிறைய நிறைய விஷயங்கள் சம்மந்தப்பட்டது.... இவைகளில் எந்த ஒரு குணமோ- சில குணங்களோ அல்லது இவற்றில் எதுவுமே இல்லாமலோ இருந்தால் கூட அது "கேரக்டர் சரியில்லை" என்ற பதத்திற்குள் தான் அடங்கும்...

இந்த எல்லா விஷயங்களும் இருந்து பாலியல் ரீதியாக நூறு சதவிகிதம் ஒழுக்கத்தோடு இருந்தாலும் அது "கேரக்டர் சரி இல்லை" பத்திற்குள்தான் வரும்...

உங்களிடம் யாரோ ஒருவரை பற்றி "அவர் கேரக்டர் சரி இல்லை " என்றால் உடனே அவரது பாலியல் தொடர்புகளை பற்றி மட்டும் நினைக்காதீர்கள்...
கேரக்டர் என்பது உங்களின் தன்மையே தவிர ஒழுக்கம் மட்டும் அல்ல...

அடைக்கோழிகள்

கிலோ கடலை புண்ணாக்கு கொடு மரைக்காயரே.." என்பார் அப்பா....

இருவரும் ஒன்றாக அமர்ந்து வெற்றிலை போட்டுக்கொண்டே சில கதைகளை பேசிவிட்டுத்தான் பிறகு அவர் எடை போட்டுக்கொடுப்பார்..... அப்பாவும் வாங்கிக்கொண்டு நகர்வார்....

பிறகு அப்பா காலமாகி விட்டார்.... நெற்பயிர் விவசாயம் தண்ணீர் பற்றாக்குறை- கூலியாள் பற்றாக்குறை- என்னால் அங்கு இருந்து விவசாயத்தை தொடரமுடியா நிலை என பல்வேறு காரணிகளால்... நெல் நடவு செய்த வயல்கள் எல்லாம் தென்னந்தோப்புகளாக மாறிவிட்டன....
இப்போது .. மாடுகள் கட்டப்பட்டிருந்த இடத்தில் ஒரே ஒரு மாடு இருக்கிறது....

நான் ஊருக்கு போகும் நேரத்தில் அரிசி வாங்கவும், அந்த ஒரு பசுமாட்டிற்கு புண்ணாக்கு, தவிடு வாங்கவும் அதே பூரான் மரைக்காயர் கடைக்கு செல்வது வழக்கம்....

இப்போது "வா நடேசு மகனே..." என்று அதே அன்புடன் அழைத்து நலம் விசாரித்து, தந்தையுடனான சில நினைவுகளை அசை போட்டு.... அப்புறம் நம் தேவைக்கு கேட்பதை கொடுப்பார்...

தலைமுறைகள் கடந்து வரும் இந்த நட்பை- உறவை.... ஊடகங்களால் சிதைக்க முடியாது....
Image may contain: 1 person, food
பக்கத்து வீட்டில் யார் இருக்கிறார்கள் என்றுகூட தெரியாத வெற்று அடைகோழிகள்.... இந்தியா முழுக்க இந்து முஸ்லிம் கலவரம் என்பதை போல நம்பிக்கொண்டு "மாட்டுக்கறி தின்பவனை கொன்று விடுகிறார்களாம் " என்பதுபோல சமூக ஊடகங்களில் ஆக்ரோஷமாய் ஸ்டேடஸ் போடுவதை பார்த்து சிரிப்புதான் வருகிறது....

எங்கள் ஊரில் முட்டையிட்டு முடிந்து வெகுகாலம் வரை தவிட்டு சாக்கில் ஓடிப்போய் உட்கார்ந்துகொள்ளும் செல் பிடித்த வெற்று அடைக்கோழிகளை சாணியை கரைத்து அதில் முக்கி துரத்தி அடிப்பார்கள்...

குறிப்பு:- புகைப்படத்தில் இருப்பவர் அல்ல கட்டுரையில் வரும் பூரான் மரைக்காயர்
புகைப்படம் : இணையத்தில் இருந்து

புதன், 5 ஜூலை, 2017

"நான் யார் பக்கம்" - உருவாகும் மன நோயாளி

பெரும்பாலான ஆண்கள் சந்திக்கும் உளவியல் ரீதியான பிரச்சினை “தாய்/சகோதரிகள்  பக்கம் ஆதரவாக இருக்க வேண்டுமா... மனைவி பக்கம் ஆதரவாக இருக்க வேண்டுமா...??
தாய்/சகோதரிகளுக்கு ஆதரவாக நின்றால்....  “அதெப்படி.. உன்னையே நம்பி வந்தவள்... உன் குழந்தைகளை சுமந்தவள்.. உனக்காக அல்லும்  பகலும் சிந்திப்பவள்... உன்னில் பாதி... உன் எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்பவள்...  அவளை எப்படி புறக்கணிக்கலாம்... என்று கேட்கும் சமூகம்...
அதே ஆண்... மனைவி பக்கம் நின்றால்...  “பாவி... பார்த்தியா... முந்தாநாள் ஒருத்தி வந்ததும் பெத்த அம்மாவையும் கூடப்பொறந்த சகோதரிகளையும் உதறி தள்ளிட்டான்... துரோகி.. நன்றி கெட்டவன்...”  என்றெல்லாம் வசைபாடும்...
இருவர் பக்கமும் ஆதரவாக பேசினால்... இருவராலுமே “இவன் எல்லார்கிட்டையும் நடிச்சு  நல்ல பேர் வாங்கிக்க பார்க்கிறான்” என்று வசை பாடப்படுவான்..
தாய்-சகோதரிகள்-மனைவி மூவரும் நல்ல புரிதலுடன்  ஒற்றுமையாக வாழும் பட்சத்தில் அந்த மூவர் தொடர்புடைய ஆணை விட அதிஷ்டசாலி-பாக்கியவான் இந்த உலகத்திலேயே இல்லை  எனலாம்... கூட்டுக்குடும்பம்- சொந்தபந்தங்கள் என்ற சங்கிலிப் பிணைப்புடன் இருக்கும் இந்திய கலாச்சாரத்தில் சிக்கி சின்னாப்ப்பின்னப்படும்  ஆணின் சோகம் சொல்லி மாளாது...  மேற்கத்திய-அமெரிக்க கலாச்சாரத்தில் இருக்கும் ஆணுக்கு இப்படி சிக்கல் இருப்பதாய் செய்திகள் எதுவும் இல்லை..
Related image
அப்படியானால்  தாய்-சகோதரி-மனைவி ஆகிய மூவரும் ஒத்துப்போய் விடலாமே.... என்றால்..  அதற்கு பூமி கிழக்கிலிருந்து மேற்கு நோக்கித்தான் சுற்ற வேண்டும்... அப்படியும் கூட அந்த அதிசயம் நடந்து விடாது..
சரி... இவர்களுக்கும் பிரச்சினைகள் எழ முதல் முக்கிய காரணம் என்னவென்று பார்த்தால்... சம்மந்தப்பட்ட ஆண்தான்... அவனை, அவன் சொத்துக்களை, அவன் பாசத்தை உரிமை கொண்டாடுவதிலே தான் பிரச்சினை எழுகிறது.... தாய்-சகோதரி-மனைவி என அனைவருக்குமே அவன் பகிர்ந்து கொடுக்க தயாராக இருந்தாலும்.... அந்த “பகிர்தலை” ஏற்க அந்த பெண்கள் தயாரில்லை... முழுமையாய் எனக்கே வேண்டும்.. என்பதே பிரச்சினையின் அடிநாதம்... 
இந்த போராட்ட முடிவில் பெரும்பாலும் மனைவிகளே வெற்றிபெறுகிறார்கள்... ஆனால் அந்த மனைவியின் வெற்றியின் மறைவில் இருக்கும் அந்த ஆணின் இழப்பு, கெட்ட பெயர், மன உளைச்சல், சுயபச்சாதாபம், ஏமாற்றம்  என எண்ணற்ற காரணிகள் இருக்கும்..  அதுபற்றி இதுவரையில் எந்த மனைவியும் அலட்டிக்கொண்டதாக எந்த ஆவணமும் இல்லை..
அதே நேரம்... அப்படி வெற்றி பெரும் மனைவிகளில் இருவேறு வழிகளை பின்பற்றும் இருசாரார் உண்டு...
முதல் வகை....  கணவனின் தாய்/சகோதரிகளை விட அதிக அர்ப்பணிப்பு, அதிக ஒத்துழைப்பு, அதிக பகிர்தல், அதிக நம்பிக்கை, அதிக கவனம், அதிக ... அதிக.. என பல  அதிகங்களை கொட்டி கொட்டி கணவனை மெல்ல மெல்ல தன்பக்கம் திருப்புபவர்கள்...  இதற்கு வெகுகாலம் எடுக்கும்...  இப்படி திரும்பும் ஆணுக்கு சில நேரங்களில் தாய்/சகோதரிகள் மீது பச்சாதாபமும், தாம் நன்றிகெட்டு நடந்துகொள்வதாய் சுய வெறுப்பும் ஏற்படும்... 

அதே நேரம்.. மனைவி இவ்வாறு நடந்துகொள்கையில்.. எங்கே தன் மகனை/சகோதரனை “வந்தவள்” முழுமையாய் அபகரித்துக்கொள்வாளோ என்ற எண்ணத்தில்  அந்த தாய்/சகோதரிகள் , மனைவியாகப்பட்டவள் மீது வெறுப்பை உமிழ்ந்து கொடுமைகள் செய்ய , அது மனைவிக்கு சாதகமாகி, அந்த பச்சாதாபம் கூட இல்லாமல் போய் விடும்..

இரண்டாம் வகை... தன்னுடைய உரிமையை காட்டி, அதிகாரத்தை மைய்யப்படுத்தி “நான் சொல்வதைத்தான் நீ கேட்க வேண்டும்...” என தொடர்ந்து சண்டையிட்டு தன் கணவனை தன பக்கம் திருப்புபவர்கள்... இவர்கள் இதெற்கென கையிலெடுக்கும் ஆயுதங்கள் உரிமை/பிள்ளைகள்/சட்டம்/நீதிமன்றம்.. போன்றவை... 
இப்படி வெற்றிபெற்ற மனைவியுடன் வசிக்கும் கணவன்மார்கள் ... முடிந்தவரை சண்டையிட்டு – போராடி.... “இவ இவ்ளோதான்.... நாம இப்படியே இருந்தா பின்னாடி நம்ம பிள்ளைங்கதான் நடுத்தெருவுல நிக்கணும் “ என்று தன்னைத்தானே சமாதானம் செய்துகொண்டு அமைதியாக இருந்து விட்டாலும்... அடி மனதில் ஊறிய வெறுப்பு ஒட்டவும் முடியாமல்- விலகவும் முடியாமல் ஒரு திரிசங்கு நரகத்தில் தள்ளப்பட்டு வாழ்க்கையை கழிக்க வேண்டி இருக்கும்...

ஆக... கொடுக்கும் இடத்தில் இருக்கும் ஆண்கள் பகிர்ந்தளிப்பதை சந்தோஷமாக செய்தாலும்... அதை வாங்கிக்கொள்ளும் இடத்தில் இருக்கும் பெண்கள் “எனக்கே எனக்கு” என்று கட்டம் கட்டி விடுவதால் அந்த ஆண்  நிம்மதி அற்ற மனநோயாளி ஆகிறான்... 
இதை எந்த ஆணும் சொல்வதில்.... சொன்னாலும் அதை புரிந்துகொள்ள எந்த பெண்ணும் தயாராக இல்லை....
கொஞ்சம் யோசியுங்கள் பெண்களே.... உங்கள் கணவன்/மகன்/சகோதரன் உலகிலேயே ஆசீர்வதிக்கப்பட்டவனாக ஆகா வேண்டுமா ??? உங்களுக்குள் அன்பை பரிமாறிக்கொள்ளுங்கள்... விட்டுக்கொடுத்துக்கொள்ளுங்கள்...
வேரில் நீரிரைத்தால் இலைகள் தளிர்ப்பதை போல..... நீங்கள் அன்போடிருந்தால் ஆண்கள் வீட்டிலேயே சிறைபட தயாராக இருக்கிறார்கள்...

வியாழன், 29 ஜூன், 2017

தனியார் மயமாகும் பொதுத்துறை நிறுவனங்கள்- காரணகர்த்தா???



  ஏர் இந்தியா நிறுவனத்தை தனியாருக்கு தாரைவார்க்க மத்திய அரசு முடிவு செய்திருக்கிறதாம்... அதற்கு அமைச்சரவை ஒப்புதலும் கிடைத்து விட்டதாம்...

பொதுவாக இந்த விமான நிறுவனங்களை பொறுத்தவரை கட்டணங்களில் எந்த விதமான கட்டுப்பாடும் கிடையாது... பயணக்கட்டணம், எரிபொருள் செலவு, சேவைக்கட்டணம் எல்லாமே பயணிகள் தலையிலேயே விடியும்... பண்டிகை காலங்கள், வெளிநாடுகளில் பள்ளி விடுமுறை காலங்கள் போன்ற நேரங்களில் கட்டண உயர்வு சொல்லி மாளாது.... அப்படி அப்படி இருக்கும் பொழுது ஏர் இந்தியா நிறுவனம் எப்படி 52 ஆயிரம் கோடி நஷ்டத்தில் இயங்குகிறது??? இதில் இன்னொரு விஷயம்... மத்திய அரசு இந்த நிறுவனத்தை தூக்கி நிறுத்த சுமார் 30 ஆயிரம் கோடிகளை கொட்டியும் கூட அது நிற்பதாயில்லை...



இதற்கு காரணம் என்னவாக இருக்கும்?? பொறுப்பற்ற நிர்வாகமும், தன கடைமையை சரி வர செய்யாத அதன் ஊழியர்க்களும்தான்....

அவர்கள் மட்டும் முறையான திட்டமிடுதலும், ஒழுங்கான பராமரிப்பும்-சேவையும் செய்திருந்தால்... பெரும்பாலான விமான நிறுவனங்களை போல ஏர் இந்தியா நிறுவனமும் லாபத்துடனே செயல்பட்டிருக்கும்...

இவ்வளவு நஷ்டத்தில் இயங்கும் ஒரு விமான நிறுவனத்தை தனியார் கையகப்படுத்த எப்படி முடியும்?? அவர்களால் மட்டும் எப்படி லாபத்தில் இயக்கி விட முடியும்...??

இந்திய அரசு ஊழியர்களை (மத்திய/மாநில) பொறுத்தவரை , வேலையில் சேர்ந்துவிட்டால் போதும்.. உடனே கொம்பு முளைத்து விடும்... 58/60 வயது வரை அவர்களின் வேலை உறுதி செய்யப்பட்டு விடும்... பணியில் இருக்கும் போது இறந்துவிட்டால் வாரிசுக்கும் வேலை உறுதி... வயதாகி ரிட்டயர்டு ஆனால் பென்ஷன் ....

அவர்கள் கடமையை செய்யாவிட்டாலும், ஊழல் செய்தாலும் அவர்கள் பணி புரியும் நிறுவனத்திற்கு நேர்மையாக இல்லாவிட்டாலும், அவர்களின் வேலைக்கான நோக்கத்தில் இருந்து விலகினாலும் பெரிதாக ஒரு பிரச்சினையும் இல்லை.... அதிகபட்சம் இடமாற்றம் அல்லது விசாரணை கமிஷன் அல்லது இடைநீக்கம்.... அவ்வளவுதான்....

பிரதமரே நேரடியாக நாட்டுமக்களுக்கு அறிவித்த 1000/500 ரூபாய் நோட்டு விவகாரத்தில் கூட விதிகளுக்கு புறம்பாக பணத்தை மாற்ற உதவிய வங்கி ஊழியர்களுக்கு கூட அதிகபட்ச தண்டனை "இடமாற்றம்" என்பது சமகால உதாரணங்கள்...

நோட்டுக்களை மாற்ற அரசு விதித்த கெடு முடிந்த ஆறு மாதம் கழித்தும் பழைய பணத்தை மாற்ற உதவிய ஒரு காவல்துறை ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டதுதான் அதிகபட்ச தண்டனை.... இது சமீபத்திய செய்தி...

அதையும் மீறி ஒருவேளை நடவடிக்கை எடுக்கப்பட்டால் "அரசு ஊழியர் சங்கங்கள்" வேலை நிறுத்தம் அறிவிப்பார்கள்... அதற்கு எதிர்கட்சிகள் குடை பிடிப்பார்கள்...

இப்படி இருக்கும் நிலையில் எவன் ஒழுங்காக வேலை செய்வான்....?? பொதுத்துறை நிறுவனங்கள் எப்படி லாபத்தில் இயங்கும்??? (பெரும்பாலான பொதுத்துறை நிறுவனங்கள் லாப நோக்கம் அற்றவை என்று சிலர் சொல்வார்கள்... ஆனால் நிர்வாகத்துறை வேறு... சேவைத்துறை வேறு.... உற்பத்தித்துறை வேறு.... நிர்வாகத்துறையில் லாபமே இருக்காது... சேவைத்துறையில் லாபம் வேண்டுமானால் இல்லாமல் இருக்கலாம்.. ஆனால் நஷ்டம் இருக்க கூடாது.... உற்பத்தி துறை நிச்சயம் லாபத்தோடுதான் இருக்க வேண்டும் )

இவளோ நாள் எவன் எல்லாம் ஏமாத்தி, கடமையை ஒழுங்காக செய்யாமல், ஊழல் புரிந்து அந்த நிறுவனத்தை நஷ்டப்படுத்தினானோ அவனுக்கு எல்லாம் புதிதாக அந்த நிறுவனத்தை ஏற்று நடத்தப்போகும் தனியார் நிறுவனம் ஆப்பை செதுக்கி அடிக்கப்போகிறான்..

ஏர் இந்தியா நிறுவனத்தில் தற்போது பணியில் இருக்கும் ஊழியர்களின் பாதுகாப்பிற்கு மத்திய அரசு உறுதியளிக்கும் என மத்திய அமைச்சர் சொல்லி இருப்பதாக செய்திகள் வருகின்றன...
No automatic alt text available.
அதனை அந்த தனியார் நிறுவனம் ஏற்றுக்கொள்ளலாம்.... ஆனால் ஊழல் செய்வதற்கோ- பணியை ஒழுங்காக செய்யாமல் இருப்பதற்கோ அந்த தனியார் நிறுவனம் நிச்சயம் அனுமதிக்காது..... அதை அனுமதிக்க சொல்லி அரசும் நிர்பந்திக்க முடியாது.... ஏனென்றால்.... அந்த தனியார் நிறுவனம் மக்கள் வரிப்பணத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனம் அல்ல.... எவன் வேண்டுமானாலும் தின்னுவிட்டு போகட்டும்... நமக்கு நாம் ஆட்சியில் இருந்தால் போதும் என்று நினைக்க....

இது ஒரு எச்சரிக்கை மணி... அரசு ஊழியர்கள் தங்கள் கடைமையை சரி வர செய்ய வேண்டும்.... அரசு அதனை கண்காணிக்க வேண்டும்.... இல்லை என்றால்... இப்படி எல்லா நிறுவனங்களும் நஷ்டத்தில் கணக்கு காட்டி காட்டி.... பின்னாளில் அவைகள் தனியார் மயமாக்கப்பட்டு.... பிறகு தனியார் சொல்லும் விலைக்கு எல்லாவற்றையுமே வாங்கும் அவல நிலைக்கு பொதுமக்கள் ஆளாகப்போவது உறுதி...

அந்த "பொதுமக்களில்" இந்த அழிவுகளுக்கெல்லாம் காரணமான தற்போதைய அரசு ஊழியர்களும், அவர்கள் குடும்பமும் உள்ளடங்கும்...

சும்மா ஒரு ஞாபகம்


பணி நிமித்தமாக செய்யாறு சென்றுவிட்டு உறைவிடமான காஞ்சிபுரத்திற்கு மோட்டார் சைக்கிளில் திரும்பிக்கொண்டிருந்தேன்.... முன்னிரவு ஏழரை-எட்டுமணி இருக்கலாம்... செய்யாறு காவல் எல்லை முடியும் இடத்தில் அமைக்கப்பட்டிருக்கும் சோதனை சாவடியில் காவலர்கள் சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்கள்
Image may contain: motorcycle and outdoor
வழக்கம் போல பைக்கை நிறுத்தியதும் முதல் வேலையாக சாவியை உருவிக்கொண்டார்கள்... என்னிடம் ஓட்டுனர் உரிமம் இல்லாத நிலையில் எதுவும் சொல்லாமல் ஓரமாக கொஞ்ச நேரம் நின்றபிறகு அருகில் வந்த காவலர் ஓட்டுனர் உரிமமோ- வாகன சான்றிதழ்களோ- காப்பீட்டு சான்றிதழோ கேட்கவில்லை... மாறாக.."கொடுத்துட்டு கிளம்பு.." என்றார்...

சார்... என்கிட்டே வெறும் இருபது ரூபாதான் இருக்கு... வண்டி அல்ரெடி ரிசர்வ்லதான் வருது... காஞ்சிபுரம் போய் சேருமா தெரியல.. அப்படி போயிட்டா இந்த இருபது ரூபாக்கு தான் பெட்ரோல் போடணும்.. என்று உண்மையை சொன்னேன்...
என் முகத்தில் இருந்த நேர்மையை கண்ட அந்த காவலர் “சரி சரி.. அத கொடுத்துட்டு கிளம்பு.... இதுக்கப்புறம் வேற எங்கயாச்சும் போலீஸ் மடக்கினா இங்க கொடுத்த விஷயத்த சொல்லாத” (என்ன காரணமோ தெரியல) என்றார்...

கையில் இருந்த இருபது ரூபாயை கொடுத்துவிட்டு , வண்டி வழியில் பெட்ரோல் இல்லாமல் எங்கேயும் நிற்க கூடாது என்று குல தெய்வத்தை வேண்டிக்கொண்ட படியே பயணத்தை தொடர்ந்தேன்...

குலதெய்வம் கைவிடவில்லை... உறைவிடம் வந்துவிட்டேன்..

இந்த சம்பவம் நடந்து ஓரிரு மாதங்கள் பிறகு.. அதே நேரம்.. அதே பயணம்... வானம் மேகமூட்டத்துடன் கருத்து இருந்தது... சற்று நேரத்தில் மழை வந்து விடலாம்...
இந்த முறை கொஞ்சம் புத்திசாலித்தனமாக அந்த சோதனை சாவடியை அடையும் முன்பாக மாற்றுப்பாதையை தேர்ந்தெடுத்தேன்... "அங்க இன்னிக்கும் நின்னா அவனுக்கு அம்பது-நூறு அழனும்... " எனக்குள்ளே சொல்லிக்கொண்டபடியே மாற்றுப்பாதையில் பயணிக்க தொடங்கிய வேளையில் எதிர்பாத்தபடியே மழை கொட்ட ஆரம்பித்தது....
மின்சார விளக்கற்ற மிகக்கொடிய இரவில் முன்னெப்போதும் பயணித்தறியாத பாதையில் தொடர்ந்த அந்த பயணம் மிக நீண்டு நெடிந்தது... எங்கே போகிறோம்..... எப்படி போகிறோம்.. என்றே தெரியவில்லை.... சாலை சென்ற பக்கமெல்லாம் நீண்டது என் பயணம்... ஓட்டை விழுந்த பானையில் இருந்து கொட்டும் நீராய் கொட்டிய மழை , நேரம் ஆக ஆக உடைந்த பானையிலிருந்து கொட்டும் நீராய் மாறியது.... பைக்கின் முகப்பு விளக்கின் வெளிச்சத்திற்கு சவால் விடும் இரவு... சாலை தெரியாத அளவு அடைமழை... அடடா... அங்கே போலீஸ்காரர்கள் மடக்கி இருந்தால் ஐம்பது ரூபாயோடு போயிருக்குமோ... அதுவும் இந்த அடைமழையில் அவர்கள் நிற்பதற்கான வாய்ப்பும் இல்லை... நாம் எடுத்த புத்திசாலித்தனமான முடிவு மிக முட்டாள்த்தனமாக போய்விட்டதோ.... என்ற சிந்தனை வான் மின்னலுக்கு ஈடாக எனக்குள் அவ்வப்போது மின்னி மறைந்தது.. 

நிலா-நட்சத்திரம்-மின்மினி-தெருவிளக்கு என எந்த வெளிச்சமுமற்ற இரவில் என் பைக்கின் வெளிச்சமும், அவ்வப்போது மின்னல் வெளிச்சமும் மட்டுமே.... திடீரென வேறொரு வாகனம் வரும் வெளிச்சம் எதிரில் தெரிய.... நன்னம்பிக்கை முனையை அடைந்த வாஸ்கோடகாமா போல மகிழ்ந்தேன்.... என் வண்டியை நிறுத்தி அந்த வாகனம் என் அருகில் வரும் வரை காத்திருந்தேன்... நான் இப்போது எங்கே இருக்கிறேன்.... எந்த பக்கம் போனால் காஞ்சிபுரம் செல்லும் சாலையை அடைய முடியும் என கேட்பதே என் நோக்கம்... அந்த வாகனம் என் அருகில் வந்ததும் “அண்ணே...” என்று குரல் கொடுத்தேன்.... என் குரல் கேட்டதும் அதிவேகமாக என்னை கடந்த அந்த பைக் பயணியோ .. இன்னும் அதிவேகமாக திராட்டிலை முறுக்கி பயணிக்க... நானோ, கண்ணில் கண்ட ஒரு மனிதனையும் தவறவிட்டு விட கூடாது என்ற எண்ணத்தில் என்னுடைய வண்டியை திருப்பி அவரை துரத்த ஆரம்பித்தேன்... 
நான் துரத்த துரத்த... அவர் இன்னும் அதிவேகமாக பயணித்தார்.... சிறிது நேரத்தில் சில வீடுகள் தென்பட்ட கிராமத்திற்குள் அவர் செல்ல.... சட்டென எனக்கும் பொறி தட்டியது.... நிச்சயம் இந்த மனிதன் இந்த கிராமத்தை சேர்ந்தவராக இருக்க வாய்ப்புள்ளது.... ஒருவேளை அவர் சட்டென “திருடன் என்னை துரத்துகிறான்” என்று கூச்சலிட்டுவிட்டால்.... சத்தம் கேட்டு கூடுபவர்களின் தாக்குதலில் இருந்து தப்பிக்கவே முடியாது... அடித்து துவைத்து விட்டுத்தான் விளக்கம் கேட்பார்கள்.... ஏழாம் அறிவு கூச்சலிட்டது.... வேண்டாம்... உடனே திரும்பி விடு....

ஏழாம் அறிவின் கட்டளையை ஏற்று.... இப்படியான ஒரு பயத்தை மக்கள் மனதில் விதைத்திருக்கும் திருடர்களை சபித்தபடி.... என் நெடிய பயணத்தை தொடர்ந்தேன்...

என்னிடம் இருந்து தப்பிக்க (??!!) ஓடிய மனிதன் மறுநாள் “ஒரு வழிப்பறி திருடன் என்னை வேகமாக துரத்தினான்... அவனிடம் இருந்து தப்பிக்க நான் அதிவேகமாக வண்டியை ஒட்டி வந்தேன்” என்று தன மனைவி, சொந்தக்காரர்கள், நண்பர்களிடம் சாகசமாய் விவரித்திருக்க கூடும்...


ஒருவழியாக ஒரு மெயின் ரோட்டை அடைந்து, பிறகு கொஞ்ச தூரம் போனதும் அங்கிருந்த பெயர்பலகையை படித்த பின்பு கண்டுபிடித்தேன்... காஞ்சிபுரம் செல்வதற்கு பதிலாக, காஞ்சிபுரத்திலிருந்து வேறொரு ஊருக்கு செல்லும் திசையில் பயணித்துக்கொண்டிருபதை....

சரிதான்... இரவு.... மழை... எரியாத மின்விளக்கு... கையூட்டுக்காகவே வழிமறிக்கும் காவல்துறை.... நிற்காமல் சென்ற அந்த பயந்த மனிதன்... அவருக்குள் அப்படியோர் பயத்தை விதைத்திருக்கும் வழிப்பறி கொள்ளைக்காரர்கள்... என எல்ல்லோரையும் சபித்தபடி.... பாதுகாப்பாக வீடு வந்து சேர்ந்தேன்...


# எங்கோ ஞாபக நினைவடுக்கில் பதிந்திருந்த சம்பவத்தை கிளறிய பொழுது சுவாரஸ்யமாய் சொல்ல இந்த விஷயம் கிடைத்தது.... அவ்வளவுதான்....
இதனால் எங்களுக்கு என்ன பயன்.... என நீங்கள் கேட்டால்.... ஹா... ஹா... ஹா.... இதுவரைக்கும் ஸ்க்ரோல் பண்ணிட்டே இருந்தீங்களே... எத்தனை பதிவு உங்களுக்கு பயனுள்ளதாய் இருந்தது....??? சும்மா பொழுதுபோக்கா படிச்ச லிஸ்ட் ல இதையும் சேர்த்துக்குங்கோ....