வியாழன், 29 ஜூன், 2017

சும்மா ஒரு ஞாபகம்


பணி நிமித்தமாக செய்யாறு சென்றுவிட்டு உறைவிடமான காஞ்சிபுரத்திற்கு மோட்டார் சைக்கிளில் திரும்பிக்கொண்டிருந்தேன்.... முன்னிரவு ஏழரை-எட்டுமணி இருக்கலாம்... செய்யாறு காவல் எல்லை முடியும் இடத்தில் அமைக்கப்பட்டிருக்கும் சோதனை சாவடியில் காவலர்கள் சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்கள்
Image may contain: motorcycle and outdoor
வழக்கம் போல பைக்கை நிறுத்தியதும் முதல் வேலையாக சாவியை உருவிக்கொண்டார்கள்... என்னிடம் ஓட்டுனர் உரிமம் இல்லாத நிலையில் எதுவும் சொல்லாமல் ஓரமாக கொஞ்ச நேரம் நின்றபிறகு அருகில் வந்த காவலர் ஓட்டுனர் உரிமமோ- வாகன சான்றிதழ்களோ- காப்பீட்டு சான்றிதழோ கேட்கவில்லை... மாறாக.."கொடுத்துட்டு கிளம்பு.." என்றார்...

சார்... என்கிட்டே வெறும் இருபது ரூபாதான் இருக்கு... வண்டி அல்ரெடி ரிசர்வ்லதான் வருது... காஞ்சிபுரம் போய் சேருமா தெரியல.. அப்படி போயிட்டா இந்த இருபது ரூபாக்கு தான் பெட்ரோல் போடணும்.. என்று உண்மையை சொன்னேன்...
என் முகத்தில் இருந்த நேர்மையை கண்ட அந்த காவலர் “சரி சரி.. அத கொடுத்துட்டு கிளம்பு.... இதுக்கப்புறம் வேற எங்கயாச்சும் போலீஸ் மடக்கினா இங்க கொடுத்த விஷயத்த சொல்லாத” (என்ன காரணமோ தெரியல) என்றார்...

கையில் இருந்த இருபது ரூபாயை கொடுத்துவிட்டு , வண்டி வழியில் பெட்ரோல் இல்லாமல் எங்கேயும் நிற்க கூடாது என்று குல தெய்வத்தை வேண்டிக்கொண்ட படியே பயணத்தை தொடர்ந்தேன்...

குலதெய்வம் கைவிடவில்லை... உறைவிடம் வந்துவிட்டேன்..

இந்த சம்பவம் நடந்து ஓரிரு மாதங்கள் பிறகு.. அதே நேரம்.. அதே பயணம்... வானம் மேகமூட்டத்துடன் கருத்து இருந்தது... சற்று நேரத்தில் மழை வந்து விடலாம்...
இந்த முறை கொஞ்சம் புத்திசாலித்தனமாக அந்த சோதனை சாவடியை அடையும் முன்பாக மாற்றுப்பாதையை தேர்ந்தெடுத்தேன்... "அங்க இன்னிக்கும் நின்னா அவனுக்கு அம்பது-நூறு அழனும்... " எனக்குள்ளே சொல்லிக்கொண்டபடியே மாற்றுப்பாதையில் பயணிக்க தொடங்கிய வேளையில் எதிர்பாத்தபடியே மழை கொட்ட ஆரம்பித்தது....
மின்சார விளக்கற்ற மிகக்கொடிய இரவில் முன்னெப்போதும் பயணித்தறியாத பாதையில் தொடர்ந்த அந்த பயணம் மிக நீண்டு நெடிந்தது... எங்கே போகிறோம்..... எப்படி போகிறோம்.. என்றே தெரியவில்லை.... சாலை சென்ற பக்கமெல்லாம் நீண்டது என் பயணம்... ஓட்டை விழுந்த பானையில் இருந்து கொட்டும் நீராய் கொட்டிய மழை , நேரம் ஆக ஆக உடைந்த பானையிலிருந்து கொட்டும் நீராய் மாறியது.... பைக்கின் முகப்பு விளக்கின் வெளிச்சத்திற்கு சவால் விடும் இரவு... சாலை தெரியாத அளவு அடைமழை... அடடா... அங்கே போலீஸ்காரர்கள் மடக்கி இருந்தால் ஐம்பது ரூபாயோடு போயிருக்குமோ... அதுவும் இந்த அடைமழையில் அவர்கள் நிற்பதற்கான வாய்ப்பும் இல்லை... நாம் எடுத்த புத்திசாலித்தனமான முடிவு மிக முட்டாள்த்தனமாக போய்விட்டதோ.... என்ற சிந்தனை வான் மின்னலுக்கு ஈடாக எனக்குள் அவ்வப்போது மின்னி மறைந்தது.. 

நிலா-நட்சத்திரம்-மின்மினி-தெருவிளக்கு என எந்த வெளிச்சமுமற்ற இரவில் என் பைக்கின் வெளிச்சமும், அவ்வப்போது மின்னல் வெளிச்சமும் மட்டுமே.... திடீரென வேறொரு வாகனம் வரும் வெளிச்சம் எதிரில் தெரிய.... நன்னம்பிக்கை முனையை அடைந்த வாஸ்கோடகாமா போல மகிழ்ந்தேன்.... என் வண்டியை நிறுத்தி அந்த வாகனம் என் அருகில் வரும் வரை காத்திருந்தேன்... நான் இப்போது எங்கே இருக்கிறேன்.... எந்த பக்கம் போனால் காஞ்சிபுரம் செல்லும் சாலையை அடைய முடியும் என கேட்பதே என் நோக்கம்... அந்த வாகனம் என் அருகில் வந்ததும் “அண்ணே...” என்று குரல் கொடுத்தேன்.... என் குரல் கேட்டதும் அதிவேகமாக என்னை கடந்த அந்த பைக் பயணியோ .. இன்னும் அதிவேகமாக திராட்டிலை முறுக்கி பயணிக்க... நானோ, கண்ணில் கண்ட ஒரு மனிதனையும் தவறவிட்டு விட கூடாது என்ற எண்ணத்தில் என்னுடைய வண்டியை திருப்பி அவரை துரத்த ஆரம்பித்தேன்... 
நான் துரத்த துரத்த... அவர் இன்னும் அதிவேகமாக பயணித்தார்.... சிறிது நேரத்தில் சில வீடுகள் தென்பட்ட கிராமத்திற்குள் அவர் செல்ல.... சட்டென எனக்கும் பொறி தட்டியது.... நிச்சயம் இந்த மனிதன் இந்த கிராமத்தை சேர்ந்தவராக இருக்க வாய்ப்புள்ளது.... ஒருவேளை அவர் சட்டென “திருடன் என்னை துரத்துகிறான்” என்று கூச்சலிட்டுவிட்டால்.... சத்தம் கேட்டு கூடுபவர்களின் தாக்குதலில் இருந்து தப்பிக்கவே முடியாது... அடித்து துவைத்து விட்டுத்தான் விளக்கம் கேட்பார்கள்.... ஏழாம் அறிவு கூச்சலிட்டது.... வேண்டாம்... உடனே திரும்பி விடு....

ஏழாம் அறிவின் கட்டளையை ஏற்று.... இப்படியான ஒரு பயத்தை மக்கள் மனதில் விதைத்திருக்கும் திருடர்களை சபித்தபடி.... என் நெடிய பயணத்தை தொடர்ந்தேன்...

என்னிடம் இருந்து தப்பிக்க (??!!) ஓடிய மனிதன் மறுநாள் “ஒரு வழிப்பறி திருடன் என்னை வேகமாக துரத்தினான்... அவனிடம் இருந்து தப்பிக்க நான் அதிவேகமாக வண்டியை ஒட்டி வந்தேன்” என்று தன மனைவி, சொந்தக்காரர்கள், நண்பர்களிடம் சாகசமாய் விவரித்திருக்க கூடும்...


ஒருவழியாக ஒரு மெயின் ரோட்டை அடைந்து, பிறகு கொஞ்ச தூரம் போனதும் அங்கிருந்த பெயர்பலகையை படித்த பின்பு கண்டுபிடித்தேன்... காஞ்சிபுரம் செல்வதற்கு பதிலாக, காஞ்சிபுரத்திலிருந்து வேறொரு ஊருக்கு செல்லும் திசையில் பயணித்துக்கொண்டிருபதை....

சரிதான்... இரவு.... மழை... எரியாத மின்விளக்கு... கையூட்டுக்காகவே வழிமறிக்கும் காவல்துறை.... நிற்காமல் சென்ற அந்த பயந்த மனிதன்... அவருக்குள் அப்படியோர் பயத்தை விதைத்திருக்கும் வழிப்பறி கொள்ளைக்காரர்கள்... என எல்ல்லோரையும் சபித்தபடி.... பாதுகாப்பாக வீடு வந்து சேர்ந்தேன்...


# எங்கோ ஞாபக நினைவடுக்கில் பதிந்திருந்த சம்பவத்தை கிளறிய பொழுது சுவாரஸ்யமாய் சொல்ல இந்த விஷயம் கிடைத்தது.... அவ்வளவுதான்....
இதனால் எங்களுக்கு என்ன பயன்.... என நீங்கள் கேட்டால்.... ஹா... ஹா... ஹா.... இதுவரைக்கும் ஸ்க்ரோல் பண்ணிட்டே இருந்தீங்களே... எத்தனை பதிவு உங்களுக்கு பயனுள்ளதாய் இருந்தது....??? சும்மா பொழுதுபோக்கா படிச்ச லிஸ்ட் ல இதையும் சேர்த்துக்குங்கோ.... 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக