சனி, 9 மே, 2015

மானுட தீவிரவாதம்

நினைக்கவே பதறும் ஒரு காரியத்தை செய்து இருக்கிறது ஒரு ராட்சஷ கும்பல். ஓடும் பேருந்தில் ஒரு துணையுடன் வந்த பெண்ணை அந்த துணையை அடித்துப்போட்டு தனிமை படுத்தி தமது காம இச்சையை தீர்த்துக்கொண்டிருக்கிறது... ஊடகங்களை பொருத்தவரை இது ஒரு பரபரப்பான செய்தி.... அரசியல் வாதிகளை பொருத்தவரை அவர்கள் ஆளும்கட்சியே இருந்தால் ஒரு தலை வலி. எதிர்கட்சியாக இருந்தால் ஆளும் கட்சியை தூற்ற கிடைத்த ஒரு சந்தர்ப்பம்..

ஆனால் கசக்கி சாலையில் எறியப்பட்ட அந்த பூவின் நிலை???





உலகத்திற்கே கலாச்சாரத்தை கற்றுக்கொடுத்த நாட்டின் தலைநகரத்தில் அரங்கேறி இருக்கும் இந்த கொடூரம் நாட்டில் இருக்கும் சாமானிய மக்களின் வயிற்றில் புளியை கரைக்கிறது.. இதற்கு முன் இப்படியான பாலியல் வன்கொடுமைகள் நிகழாமல் இல்லை. ஆனாலும்.. ஒரு பரபரப்பான நகரத்தின் பரபரப்பான சாலையில் இப்படி ஒரு சம்பவம் அதுவும் 9.00 மணி முன்னிரவில்..


யார் இந்த தைரியத்தை கொடுத்தது??? கொஞ்சம் நிதானமாக யோசித்தால் எவ்வளவு பெரிய கலாச்சார சீரழிவில் இந்த நாடு சிக்கி சீரழிந்து சின்னாபின்னமாகிக்கொண்டிருக்கிறது என்பது விளங்கும்..


முதலில் இதை பெண்களுக்கு எதிரான விஷயமாக பார்ப்பதை தவிர்த்து மானுடத்திற்கு எதிரான விஷயமாக பார்க்க வேண்டும். அந்த ராட்சசர்கள் யாரும் சோதனை குழாயில் உருவானவர்களோ- அல்லது இரண்டு ஆண்களுக்கு பிறந்தவர்களோ அல்ல... நிச்சயம் அவர்களும் ஒரு பெண்ணின் வயிற்றில் பிறந்தவர்கள்.. ஒரு சகோதரியோ அல்லது மனைவியோ அல்லது மகளோ எதோ ஒரு பெண்ணுடன் தொடர்புடையவர்கள்.. 


ஆனால் இந்த சம்பவத்தில் அவர்கள் ஒரு பெண்ணை ஒரு மனுஷியாக கூட பார்க்க தவறியது எப்படி.. அந்த மனித தன்மை அவர்களுக்குள் அறவே இல்லாமல் போனதெப்படி?


முதலில் பெண்ணியவாதிகளும் , பெண்களுக்கான அமைப்புகளும் இதற்காக போராடுவதே என்னை பொருத்தவரை ஒரு அவமானமான செயல். இதில் மனிதனாக பிறந்த ஒவ்வொருவருமே பாதிக்கப்படும் பாலியல் தீவிரவாதம் . தீவிர வாதம் எந்த வடிவில் வந்தாலும் அதை இரும்புக்கரம் கொண்டு அடக்குவோம் என உலகிற்கு அறைகூவல் விடுப்பதில் ஒன்றும் பலனில்லை . இந்த மானுட தீவிரவாதத்தை ஒழிப்பதில் காட்டவேண்டும் 


மத்திய உள்துறை அமைச்சர் திரு சுஷில் குமார் ஷிண்டே அவர்கள் இதற்கான சட்ட திருத்தம் கொண்டு வரப்படும் என்று மக்களவையில் அறிவிப்பது எவ்வளவு மெத்தனமான செயல்.?? 
ஒரு இடத்தில் குண்டு வைத்தவனையோ மும்பை தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதி அஜ்மல் கசாப்பையோ கூட பிடித்து வைத்து விசாரிக்கலாம் அவர்களின் பின்னணி என்ன.. அவர்களை யார் தூண்டுகிறார்கள் அவர்களின் எதிர்கால திட்டங்கள் என்னென்ன என்பதை தெரிந்துகொள்ளும் நோக்கம் இருக்கிறது... அதற்காக அப்பாவி மக்களின் வரிப்பணம் ரூபாய் முப்பது கோடி செலவு செய்ததை கூட மன்னிக்க தயாராக இருக்கிறோம்..
ஆனால் இப்படி ஒரு படுபாதக செயலை செய்தவர்களிடம் விசாரிக்க என்ன இருக்கிறது...???


இப்படிப்பட்டவர்களை பொது இடத்தில் தூக்கிலிடுவதன் மூலமே இது போன்ற ஒரு எண்ணம் கூட மனதில் முளைக்காமல் இருக்க காரணமாயிருக்குமே தவிர சட்ட திருத்தமோ , விசாரணையோ பலன் தராது.


வழக்கமாக தீவிரவாதிகளை தூக்கிலிடும்போது மட்டும் கூக்குரலிடும் மனித உரிமை அமைப்புகள் இப்போது எங்கே போயிருக்கிறது?? 
இந்த ராட்சஷர்களை இன்னும் மூன்று நான்கு ஆண்டுகள் சிறையில் வைத்து ஆமை வேக விசாரணையில் தூக்கு தண்டனை கொடுக்க முன்வந்தால் அப்போது இந்த பரபரப்பெல்லாம் ஆறிப்போயிருக்கும் .. அப்போது மனித உரிமை அமைப்பு "மரணதண்டனையா அதெல்லாம் கூடவே கூடாது" என்று கிளம்பி வருவார்கள் .


கடவுள் இப்போதெல்லாம் மனிதர்களை படைப்பதில் சில பங்கை சாத்தானுக்கும் கொடுத்திருக்கிறார் போல இருக்கிறது... சாத்தானின் படைப்புகள்தான் இந்த தீவிரவாதிகளெல்லாம். அவர்கள் குண்டு வைப்பவர்களாயினும் சரி இதுபோன்ற பாலியல் தீவிரவாதிகளா யினும் சரி... இந்த சாத்தானின் படைப்புகளை களை எடுப்பதில் எந்தவித மெத்தனமும் காட்ட கூடாது.. மனித உரிமை ஆர்வலர்கள் முதலில் மனிதனை இனம்காணும் திறனை வளர்த்துக்கொண்டு பிறகு போராட வர வேண்டும்.. ராட்சஷர்களுக்காக போராடுவதை கைவிட வேண்டும்..


அதே நேரம் மேலை நாட்டு கலாச்சாரம்.. என் உரிமை என்றெல்லாம் சில பல வாழ்க்கையில் தோற்றவர்களும் கார்பொரேட் நிறுவனங்களும் உசுப்பி விடும் ஆடை கலாச்சாரம்.. புரிந்துகொள்ளாத பெண்ணுரிமை இதை எல்லாம் தூக்கிப்போட்டுவிட்டு நம் கலாச்சாரம் கற்றுக்கொடுத்திருக்கும் அடிப்படை நாகரீகத்தை பின்பற்ற பெண்களும் முன் வர வேண்டும்.

என்னுடைய சுதந்திரம் என்று கவர்ச்சியான ஆடை அணிந்து செல்லும் ஒரு பெண் இதுபோன்ற உணர்சிகளை அடக்க முடியாத ராட்சஷ ஜென்மங்களின் பாலியல் சிந்தனைகளை தூண்டி விட்டு செல்கிறார்கள்... அவர்களை பொருத்தவரை அது அவர்களுக்கான உரிமை.. சுதந்திரம்.. ஆனால் அதன் பின் விளைவு எதிர்க்க இயலாத ஒரு குழந்தையின் மீதோ- ஒரு பலமற்ற பெண்ணின் மீதோ சில நேரம் அது ஒரு வயதான பெண்மணியின் மீதோ கூட பாலியல் வன்முறையாய் பிரயோகிக்கப்படும்... சமூக காரணங்களோ- பொது இடங்களில் பயமோ இப்படிப்பட்ட பெண்கள் உசுப்பி விடும் இச்சைகளை தீர்க்க இன்னொரு பெண்ணினம் தான் பலியாக வேண்டும்... பெண்கள் இதை உணர வேண்டும் என்பது என் தாழ்மையான கருத்து

ரத்தத்துல ஊறினது

எனது பாட்டமுப்பாட்டனார் திரு அடைக்கலம் , எனது முப்பாட்டனார்... திரு. அண்ணாமலை.. எனது பாட்டனார்.. திரு.முத்துசாமி.., எனது தகப்பனார் திரு .நடேசன்... இப்படி வழி வழியாக வந்த தொப்புழ்கொடி உறவில் கடத்திவரப்பட்ட மரப்பணு க்களில் எங்களின் குலத்தொழிலான விவசாய அறிவு கலந்தே வந்திருக்கிறது...

ஒரு விவசாய கல்லூரியில் பயின்று வந்த தச்சு தொழிலாளியின் மகனை விட, ஒரு சலவை தொழிலாளியின் மகனை விட. ஒரு முடி திருத்துபவரின
் மகனை விட என்னால் விவசாயத்தை திறம்பட செய்ய முடியும்... ஏனென்றால் மூன்று அல்லது நான்கு ஆண்டுகள் படித்து பட்டதாரியான அவர்களை விட மரபணுக்கள் மூலம் கொண்டுவரப்பட்ட என்னுடைய அனுபவ அறிவு மிக உயர்ந்தது...

ஆனால் வானம் பொய்த்துவிட்டதாலும்... ஏரி குளங்களை எல்லாம் கயவர்கள் திருடி விட்டதாலும், தண்ணீர், தொழிலாளர்கள் பற்றாக்குறையாலும், இடுபொருட்களின் விலை ஏற்றத்தாலும் ,முதலீட்டை விடவும் வருமானம் குறைந்துபோனதாலும் என்னால் அந்த தொழிலை தொடர முடியாமல் போய் விட்டது...

எனவே அப்போது மரபணுக்கள் வழியாக கடத்தப்பட்ட அடிப்படை விவசாய அறிவையும் வைத்துக்கொண்டு என்னுடைய தலைமுறையில் நான் என்னுடைய சிறுவயது தொட்டு சுமார் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக கொஞ்சம் கொஞ்சமாய் கற்று வந்திருந்த கணிப்பொறி, ஆங்கிலம், இன்னபிற விஷயங்களை பயன்படுத்தி வருமானத்திற்கு வழி செய்திருக்கிறேன்..இதிலும் என்னுடைய நிபுணத்துவத்தை காட்ட நினைக்கிறன்..
அதே நேரம் விவசாயத்துறையில் என்னுடைய மரபணு வழி நிபுணத்துவத்தை பயன்படுத்தி என்னுடைய குலத்தொழிலை என்னால் செய்ய முடியுமானால்... அதற்கான வசதி வாய்ப்புகள் கிடைக்குமானால் நிச்சயமாக அதை நவீனப்படுத்தி 
என் பாட்டன் முப்பாட்டனை விட மிக திறமையாய் செய்ய முடியும்...

ஆனால் எனக்கு முற்றிலும் அறிமுகமே இல்லாத ஒரு விஷயத்தில் இரண்டு மூன்றாண்டுகளில் படித்து என்னால் நிபுணத்துவமடைய முடியுமா???
ஆகவே.. உங்கள் மரபணுக்களின் வழி கடத்திவரப்பட்ட திறமைகளை நவீனப்படுத்தும் வாய்ப்பு உங்களுக்கு கிடைக்குமானால் அதில் கவனம் செலுத்துங்கள்.. அதனை தவிர்த்து புலியை பார்த்து சூடுபோட்டுக்கொண்டால் பூனை புலி ஆக முடியாது..!!!

தலைமுறை அஞ்சல் ஓட்டம் (RELAY RACE )

தடகள போட்டியில் தொடர் ஓட்டம்/அஞ்சல் ஓட்டம் (RELAY RACE ) என்றொரு விளையாட்டு இருக்கும்.. ஒரு நானூறு மீட்டர் சுற்றளவுள்ள வட்டமான ட்ராக்கில் ஒவ்வொரு நூறு மீட்டருக்கும் ஒரு நபர் வீதம் நான்கு பேர் கொண்டது ஒரு அணி... முதலில் தொடங்குபவர் ஓடி சென்று  தன்னுடைய கையில் இருக்கும் ஒரு குச்சியை இரண்டாவதாய் நிற்கும் தன அணியினரிடம் சேர்க்க வேண்டும்.. இப்படியாக அடுத்தவர்- அடுத்தவர் என்று அந்த குச்சியை தொடங்கிய இடத்திற்கே சேர்க்க வேண்டும்... இதில் யாரொருவர் வேகம் குறைந்தாலும் அடுத்தடுத்து இருப்பவர்கள் அந்த வேகத்தை ஈடு செய்ய வேண்டும்.. அதே நேரம் நம் கையில் குச்சி வந்தவுடன் அடுத்த நபரிடம் அந்த குச்சியை கொண்டு சேர்க்கும் முனைப்போடு ஓட வேண்டும்... மாறாக அந்த குச்சியை வாங்கிக்கொண்டு மெதுவாக நடந்து சென்றாலோ.. இல்லை.... தமக்கு முன்னால் நிற்பவர் ஓடிவந்து வாங்கிக்கொண்டு செல்ல வேண்டும் என்று நினைத்தாலோ.. ஒருவரின் தவறில் ஒட்டுமொத்த அணியும் தோல்வியைத்தழுவ வேண்டும்...

வாழ்க்கையும் இப்படித்தான்... அடுத்தடுத்த இடங்களில் நிற்பவர்கள் உங்களின் அடுத்தடுத்த தலைமுறை... உங்களது பொறுப்பில் ஒரு குடும்பம் வந்த உடன் அதனை நல்ல முறையிலும், நேர்மையான வழியிலும் , முன்னேற்றப்பாதையிலும் வழிநடத்தி உங்களின் அடுத்த தலைமுறையிடம் ஒப்படைத்தால்தான் உங்கள் குடும்பம் சீரான வளர்ச்சியுடன் வெற்றி பெற்ற நிலையை அடைய முடியும்.. மாறாக.. உங்கள் தந்தையார் சம்பாதித்து வைத்திருக்கிறார் என்று நீங்கள் நிதானமாய் நடை போட்டால்.. உங்கள் தந்தையார் வேகமாய் ஓடிய ஓட்டமும் வீண்..... உங்கள் மகன் எவ்வளவுதான் ஓடினாலும் வெற்றிக்கோட்டை அடையவே முடியாது...

புகைபிடிப்பதை அறவே விட வேண்டும் - ரஜினிகாந்த்

புகைபிடிப்பதை அறவே விட வேண்டும் - திரு.ரஜினிகாந்த் அவர்கள்.

# இவர் நிஜமாகவே மனச்சாட்சி உள்ள நபரென்றால் புகையால் பாதிக்கப்பட்டோருக்காக 
ஒரு அறக்கட்டளை நிறுவ வேண்டும்.. 
ஏனென்றால் தமிழ்நாட்டில் எண்பதுகள் முதற்கொண்டு இன்று வரை சுமார் கால்நூற்றாண்டு
காலம் சிகரெட் பிடிப்பதை ஒரு ஸ்டைல் என்று வளரிளம் பருவ இளைஞர்களின் 
மனதில் விதைத்தவர் இவர்.. இவரை பார்த்து சிகரெட் பிடிக்க பழகியவர்கள் ஏராளம்.. 
இவர் எவ்வளவு நல்ல விஷயங்களை சொல்லி இருந்தாலும் கூட நல்ல விஷயத்தை விட 
கேட்ட விஷயம் தான் மக்கள் மனதில் பதியும்.. அந்த வகையில் இவர் உணராமல் 
மானுடத்திற்கே ஒரு பெரிய பாவத்தை செய்திருக்கிறார்... அறியாமல் செய்த பாவத்தை 
மன்னிக்கலாம் என்றாலும்.. அறிந்த உடன் அதற்கு தகுதியும், வசதியும் 
இருக்கும்பட்சத்தில் அதற்கு பிராயசித்தம் தேடுவது மனித குணம்..

ஜப்பானில் அணுகுண்டு வீசிய விமானி /ராணுவ அதிகாரி.. மேலிடத்தின் கட்டளையின் 
பேரில்தான் அதனை செய்தாரென்றாலும்.. அவரது கடைசி காலம் எப்படி இருந்தது என்பதை 
அவர் அவசியம் படிக்க வேண்டும்.

இவர் தமிழனா - கன்னடனா- என்பதெல்லாம் ஒதுக்கி இவர் முதலில் 
மனிதனாக நடந்தால் நலம்..

பேர்ல் ஹார்பர்

இரண்டாம் உலக யுத்தத்தின் போது அமேரிக்கா ஜப்பான் மீது ஹைட்ரஜன் அணுகுண்டுகளை வீசியதும்.. அதனால் கொத்து கொத்தாக அப்பாவிமக்கள் செத்தொழிந்ததும் அதன் பாதிப்பு இன்றளவும் இருப்பதையும் எல்லோருமே அறிவோம்... ஆனால் அமேரிக்கா பொழுது போகாமல் இந்த நடவடிக்கையை எடுக்கவில்லை...

பேர்ல் ஹார்பர் ( முத்து துறைமுகம்) என்றொரு பகுதியில் இருந்த அமெரிக்க ராணுவ முகாமை எந்தவித முன்னறிவுப்புமின்றி இரவோடு இரவாக யுத்த தர்மங்க
ளை எல்லாம் மீறி துவம்சம் செய்தது அப்போதைய இரண்டாம் உலக போரின் முக்கிய பங்குதாரராய் இருந்த ஜப்பான்... அதற்கான பழிவாங்கும் நடவடிக்கையாகவே அமேரிக்கா இதனை செய்ய துணிந்தது... இது மிகப்பெரிய குற்றமென்றாலும் அதை செய்ய தூண்டியது ஜப்பான் தான்....

நம்மை விட வலிமையா இருக்கும் சும்மா இருக்கவன சொரிஞ்சு விட்டா அடிதான் வாங்கணும்.. அதுவும் மரண அடி...

அப்பா..

அவர் பேரு நடேசன்...  கை கால்ல  நகக்கண் முளைச்ச காலத்துல இருந்து குடும்பத்துக்காக உழைச்சவராம்.. எனக்கும் அவருக்கும் பெரிசா சொல்லிக்கிற மாதிரி ஒன்னும் பேச்சு வார்த்தை  இருந்ததில்ல.
ஆனா அவர் பாசம் சொல்லாம இருக்கற விஷயமில்ல...  மாமா வீட்ல அம்மாயி இறந்து போயிட்டப்புறம் அம்மாதான் மாமா மூணு பேரையும் வளத்தாங்களாம் .. அதனால அம்மாவுக்கு மாமாங்க மேல தான் பாசம் பொங்கும்..  அக்கா  ரெண்டு பெரும் நானும் பள்ளிக்கூடம் போயிடுவோம்.. அம்மா மாமா வீட்டுக்கு போயிடுவாங்க. ஒவ்வொரு நாள் அவங்க அங்க தங்கிடுவாங்க. அன்னிக்கு அப்பா தான் சமையல்... வயல் வேலைய முடிச்சிட்டு இருட்டோட வீட்டுக்கு வந்து "இவ இன்னும் வரலையா நாளைக்கு வரட்டும்.. மொத்தமா அடிச்சு தொரத்திட்றேன்..."அப்படின்னு அம்மாவ நாலு திட்டு திட்டிட்டு சமைக்க ஆரம்பிச்சிடுவார்.. மொளகா ,மல்லி,மஞ்சள் ,சீரகம் எல்லாம் மெஷின்ல  அடிச்சு மாவாக்குற பழக்கமெல்லாம் இல்ல அப்போ.. எல்லாமே அப்படியே இருக்கும் அம்மில வச்சிதான் அரைக்கணும்.. "ரெடிமேட்  கொழம்பு வப்பமா.." ன்னு சொல்லிகிட்டே  மசாலா அரப்பார்... மறுநாள் அம்மா வெள்ளன  எந்திரிச்சு வீட்டுக்கு வந்துடுவாங்க. அப்பாவுக்கு ராத்திரி புள்ளைங்கள பார்த்ததும் வந்த கோபம் காணாம போயிருக்கும்..

எங்க ஊர்ல எல்லோருக்குமே விவசாயம் தான் பொழப்பு. எல்லோருக்கும் சொந்த நிலம் இருக்கும்.. சிலருக்கு நிறைய. சிலருக்கு கொஞ்சம்... ஆனா கண்டிப்பா எல்லோருக்குமே சொந்தமா பயிர்வைக்க  நிலமிருக்கும். எங்களுக்கும் இருந்துச்சு... கவனிங்க.. இருந்துச்சு...ஒன்னரை ஏக்கர். அதுல வரப்பு வெட்டுறது.. ஒழவு ஓட்டுறது.. சேரடிச்சு நாத்து விடறது.. உரம்போட்றது.. களை  எடுக்கிறது.. எல்லாமே அப்பா தான்.. நடவு நடுறது.. கதிர் அறுக்கிறது மாதிரியான பெரிய வேலைகளுக்கு தான் அப்பா ஆள் கூப்பிடுவார்...

காலைல எல்லோரும் டீக்கடைல டீய குடிச்சிட்டு ஒழவு ஓட்ட   மாட்ட புடிச்சுகிட்டு வயக்காட்டுக்கு போகும் போது அப்பா நூறு குழி நிலம் ஒரு ஓட்டு ஓட்டி முடிச்சிருப்பார்... ஒன்னரை ஏக்கருக்கும் ஒரே நாள்ல வரப்பு வெட்டுவார்... ஒரு பதினோரு மணி வாக்குல அம்மா டீ  வச்சி கொடுக்கும்.. அத எடுத்துகிட்டு சைக்கிள்ல  போனா ஏரிக்கரைல சைக்கிள நிறுத்தும்போதே அப்பா ஏர  நிறுத்தி மாட்ட இழுத்து கலப்பைல கட்டி வச்சிட்டு வந்துடுவார்.. டீய வாங்கி வச்சுகிட்டு "வெய்யில் சுடும்.. நீ போ.. நான் வரும்போது கூஜாவ எடுத்துட்டு வரேன்" அப்படிம்பார்... ஆனா அப்போ அது ஜாலியா இருக்கும்... ஆனா விவசாயிங்க பொழப்பு எல்லோருக்கும் தெரிஞ்சதுதான.. உழுவுறவன் கணக்கு பாத்தா உழக்கு கூட மிஞ்சாதுன்னு சும்மாவா சொல்லி வச்சாங்க... ஒன்னும் மிஞ்சல.. கிட்டத்தட்ட ஒரு பதினைஞ்சு வருஷ மெனக்கெடு... எங்கபக்கத்துல பெரும்பாலும் எல்லோருமே வெளிநாட்டு தொடர்போட இருந்தாங்க. ஆனா அப்பாவுக்கு மட்டும் அந்த வாய்ப்பு கிட்டவே இல்ல... எங்க ஆளுங்கள்ள  வரதச்சினை கொஞ்சம் அதிகம் ரெண்டு லட்சம் மூனுலட்சம் ரொக்கம்.. அப்புறம் நக நட்டு. பாத்திரம் பண்டம்.. அப்படி இப்படின்னு ஒரு தொகை ஆயிடும். ரெண்டு பொண்ண வச்சிருக்கோமே எப்படி கட்டிக்கொடுகிறதுன்னு பெரிய கவலை.. அப்படி இப்படி கெஞ்சி கூத்தாடி துபாய்ல இருந்த மாமா ஒரு விசிட் விசா வாங்கி கொடுத்தார். அப்பாவுக்கு பெரிய நிம்மதி.. எப்படியும் பொண்ணுங்கள கட்டி கொடுக்க காசு சம்பாதிசிடலாம்னு... அந்த நம்பிக்கையோட  அவரு பிளேன் ஏறினப்போ அவருக்கு வயசு நாப்பத்தஞ்சிக்கும் மேல ஆச்சு.. கொட்டி வழுக்கையா போனது போக மிச்சமிருந்ததுல முக்காவாசி முடி நரைச்சு போச்சு... தமிழ தவிர வேற பாஷை தெரியாது... தட்டு தடுமாறி ஒரு அஞ்சு வருஷம்.. துபாய்ல இருந்தார்...ஒரு பர்மனென்ட் விசாவும் கிடைக்கல..பெரிசா ஒன்னும் சம்பாதிக்கவும்  முடியல... ஒரு தோத்துப்போன மனுஷனா ஊருக்கு வந்து சேர்த்தார் . வந்தப்புறம் மனசுக்குள்ள ஏதோ ஒரு விரக்தியோ- ஏமாற்றமோ.இல்லை சுய பச்சாதாபமோ...அதிகமா யார்கிட்டவும் பேசல.. 
இதுக்கு நடுவுல நானும் சென்னை பக்கம் வந்தாச்சு .. பொங்க தீபாவளிக்கு ஊருக்கு போவேன்... நம்ம ஊருக்கு பஸ்செல்லாம் வராது.. எந்த பக்கம் வந்தாலும் மூணு கிலோமீட்டர் நடந்துதான் போகணும்.. அப்பா அப்போ சைக்கிள எடுத்துட்டு வருவார் அழைச்சிட்டு போக... அப்போ கூட இந்த பாவி மகன்.. அவர ஓட்ட சொல்லி உட்கார்ந்துகிட்டு போவேன்.... "வந்துட்டியாப்பா... நல்லா  இருக்கியா" என்பார்... ஓரிரு நாளில் மீண்டும் சென்னை கிளம்பும்போது.."கிளம்பவாப்பா?" என்று நான் சொன்னால் "ரெண்டு நாள் இருந்துட்டு போகக்கூடாதா.... பத்திரமா போ..." என்பார்.. இதுதான் எனக்கும் அவருக்குமான மணிரத்னம் ஸ்டைல் உரையாடல்கள் 
 
இதுக்கு நடுவுல இருந்த நிலத்துல  பாதிக்கும் மேல வித்து அக்கா ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணியாச்சு.. சின்னக்கா வீட்டுக்காரர் துபாய்ல இருந்தார்... அப்பா விட்ட போராட்டத்த நான் தொடங்கினேன் ஆமா வெளிநாட்டு போராட்டம்.. ஆனா அதுக்கான வாய்ப்பு மட்டும் கிடைக்காமையே இருந்துச்சு.. ஒரு வழியா எனக்கும் ஒரு விசிட் விசா... எங்க சின்னக்கா வீ ட்டுக்காரர் வாங்கித்தந்தார்  அப்பா எங்க தோத்துப்போய் வெளியேறினாரோ... அதே  இடத்துல நான் ஜெயிக்கணும்னு வெறி... அப்பா கொண்டுவந்து மெட்ராஸ் ஏர்போட்டுல விட்டுட்டு போனாங்க அவரோட எந்த செயல்ல்யுமே பாசம் மட்டும்தான் தெரியுமே தவிர வார்த்தையா எதுவுமே இருக்காது .நானும் துபாய் வந்தேன் போராடினேன்... ஒரு வழியா ஜெயிக்க ஆரம்பிச்சேன் ஊருல இருந்து தகவல் வந்துச்சு அப்பாவுக்கு ரொம்ப உடம்பு முடியலன்னு நானும் என்னமோ சாதாரணமாத்தான் இருக்கும்னு நினைச்சேன் ஆனா.. அப்புறம்தான் தெரிஞ்சுது அது சாதா ரணம் இல்ல ... சரிபண்ண முடியாத  ரணம்னு .. ம்ம்.... அப்பாவுக்கு கேன்சர் .. இப்போதான் பையன் ஓரளவுக்கு செட்டிலாகி இருக்கான்.. அவன்கிட்ட இப்போ சொல்ல வேணாம்னு மறைச்சுட்டாங்க... அப்புறம் அங்க பாத்தாங்க .. இங்க பாத்தாங்கன்னு  பாத்துகிட்டே இருந்தாங்க.. ஆனா கேன்சர் விடல.. ஒருநாள் சின்னக்கா போன்ல அழுதா. சின்னக்கா எதுக்கும் கலங்க மாட்டா... அவ அழுத ஒடனே எனக்கு பிரச்சினை ரொம்ப பெரிசா போச்சுன்னு தெரிஞ்சிடுச்சு. அப்புறம் நான் கிடந்து அழ.. துபாய்க்கு வந்த எட்டே மாசத்துல கொண்டு வந்த பொட்டியோட ஊருக்கு கிளம்பினேன் ..எட்டு மாசத்துக்கு முன்னாடி மலை  மாதிரி ஏர்போர்ட்டுல விட்டுட்டு போன அப்பா நைஞ்சு போன துணி மாதிரி கிடந்தார்... எல்லா டாக்டரும் கைவிட்ட நிலைமைல கண்ணுல மட்டும் உயிரை வச்சுகிட்டு எலும்புக்கூடா கிடந்தார்...  நான் ஊருக்கு வரேன்னு தெரிஞ்ச உடனே.. காலைல இருந்தே ரெண்டு கையையும் கூப்பி சாமிய கும்பிட்டுகிட்டே கிடந்தாராம்.. எம்பையன் வரவரைக்கும் நான் உயிரோட இருக்கணும்னு வேண்டி இருக்கலாம். அப்புறம் நானும் ஊருக்கும் வந்துட்டேன், நான் அவர்மேல சாஞ்சும்  அவர் என்கையா புடிச்சுகிட்டும் அழுது தீர்த்தோம்... ஒரு பதினாலு நாள்... நான் அவர் கூட இருந்தேன்... கிராமத்துல சொல்லுவாங்க. தீந்த பாடும் இல்ல.. தெளிஞ்ச பாடும் இல்லன்னு... அப்படித்தான் அவரும் கிடந்தார்... அவரோட வேதனைகள சொல்ல முடியாது... நம்மளோட பையன இப்படி தவிக்க விட்டுட்டோமேன்னு அவரோட மனசுக்குள்ள ஓடுனத அவரோட கண்ணீர் சொல்லிட்டே இருந்துச்சு... அந்த பதினாலு நாளும்.. ஒரு புள்ளையா நான்  செய்ய முடியுமோ.. அதெல்லாம் செஞ்சேன்.. வாந்தி எடுத்ததோ.. மலம் கழிச்சதோ.. எனக்கு எந்த அருவருப்பும் தரல ...எனக்கு எல்லாமே எங்கப்பாவுக்கு நான் சேவை பண்ண கிடைச்ச கடைசி வாய்ப்பா நினைச்சு செஞ்சேன்... 

எல்லா சொந்தக்காரங்க. ஊர் காரங்க எல்லோருமே சொன்னாங்க "நீ போயி இப்போதான் ஒரு நிலைமைக்கு வர முயற்சி பண்ணிட்டிருக்க. இப்போ இப்படி வந்து தங்கிட்டா இத்தன வருஷம் மெனக்கெட்டது வீணாயிடும்.. அதுக்குமேல கடவுள்கிட்ட பாரத்த விட்டுட்டு நீ கிளம்பு"ன்னாங்க.. பொருளாதாரம் மனுஷனுக்கு மனிதாபிமானத்தையோ பாசத்தையோ எப்படி அவனுக்குள்ளையே பொதைக்க வைக்குதுன்னு கண்கூடா உணர்ந்த தருணம் அது... நானும் கிளம்பி துபாய் வந்துட்டேன்... நான் வந்த நாலாவது நாள்.. அப்பா சாமிகிட்ட போயிட்டார்..  ஊர்ல ஒரே ஒருத்தர் கூட கெட்டவர்னு சொல்லாத அளவு எல்லோருக்கும் நல்லவரா இருந்த அப்பாவ மரணத்துக்கும் சீக்கிரம் பிடிச்சு போச்சு...

நான் துபாய்ல... இது மனுஷத்தனமா...?. பணம்தான் பெரிசான்னு இப்போ கேக்கலாம் ஆனா பிராக்டிகல் வாழ்க்கை வேற... நான் மறுபடியும் ஊருக்கு போறதுன்னா குறைந்த பட்சம் அம்பதாயிரம் ரூபா ஆகும் அதுக்கும் மேல நான் போயி அரைமணி நேரம் கூட அப்பாவ வீட்ல வச்சிருக்க மாட்டாங்க சோ... போகல.... ஒரு மகனா அப்பாவுக்கு செய்ய வேண்டிய எல்லாம் அந்த பதினாலு நாள்ல செஞ்சேன்.. அத அவர்  ஃபீல் பண்ணார்... அது போதும். இங்க இருந்து இத்தன செலவு பண்ணிக்கிட்டு போய்... "அந்த பையன் அப்படி அழுதான் இப்படி அழுதான்"னு..ஊருக்காரங்க வேணும்னா உச்சுகொட்டி மெச்சுக்குவாங்களே    தவிர அது அப்பாவுக்கு தெரியாது... ஆனா அந்த செலவுக்கு கடன் கொடுத்தவங்க பாவம் பாத்ததெல்லாம் தள்ளுபடி பண்ண மாட்டாங்க.

ஒரே மகனா அவருக்கு கடைசி கடமையா கொள்ளி போட  முடியாம போச்சேன்னு ஒரு உறுத்தல் இருந்தாலும்  கொள்ளி போட்டுத்தான் அவரோட மகன்னு சொல்ல வேண்டியதில்லையே.... அத விட நம்ம மகன் நம்மள தூக்கினான்... பார்த்தான்....எடுத்தான்னு அவர் உணர்ந்தார்.. அப்படிங்கற திருப்தி இருக்கு....

இதுதான் பிராக்டிகல்.. அதுக்கப்புறம் காரு.. வசதி... ஒரு பெரிய போஸ்டிங்.. எல்லாம் கிடைச்சாலும் அன்னிக்கு தளிக்கோட்டை பாலத்துல வந்து நின்னு சைக்கிள்ள மிதிக்க முடியாம மிதிச்சு கூட்டிட்டு போன அப்பாவ நான் பைக்லையோ.. கார்லயோ கூட்டிட்டு போகமுடியலன்ற வலி.. மனசு முழுக்க ஆறாத ரணமா என்னிக்கும் உறுத்தும்...

சமூக வலைத்தளங்களில் குடும்பதலைவிகள்

அக்கம்பக்கத்தில் பேச்சை குறைத்து  மக்களை.. குறிப்பாய் பெண்களை  வீட்டுக்குள்ளயே முடக்கின   காட்சி ஊடகங்கள் , இதன்  அடுத்த கட்டம்..இப்பொழுது படித்தவர்கள்  மத்தியில பிரபலமாகிகொண்டு  வரும்  சமூக வலைத்தளங்கள்... எத்தனயோ நல்ல விஷயங்கள் இருந்தாலும்.. ஒரு குடம் பாலில்  விழுந்த விஷம்  மொத்த நல்லதையும் நாசம் பண்ணுவது  மாதிரி..சில விஷயங்கள்...

இந்த காட்சி ஊடகங்களுக்கு பிறகு மனிதர்கள் வீட்டில் பேசிக்கொள்வதே குறைந்து போய் விட்டது..... யாரும் மனசு விட்டு பேசிக்கொள்வதில்லை  .. கணவனோ- மனைவியோ தங்களின் இணையுடன் பேசுவதில்லை.. பெற்றோர்கள் பிள்ளைகளிடமோ.. பிள்ளைகள் பெற்றோரிடமோ பேசுவதில்லை... ஆனால் பேசாமல் இருந்தால்தான் நாமெல்லாம் செத்துப்போவோமே..வாராது வந்த மாமணியாய் நம்ம கம்ப்யூட்டர் மூலமாகவோ...மொபைல் மூலமாவோ பக்கத்து வீட்டுக்காரன் /வீட்டுக்காரிய..பக்கத்து ஊரு காரன்  / ஊருக்காரிய... பக்கத்து நாட்டுக்காரன் / நாட்டுக்காரிய யாருக்கும் தெரியாம ரகசியமா படுக்கை அறை  வரை கூட்டிக்கொண்டு வர ஒரு வாசல் கதவு திறந்து வைத்து விட்டோம்  

பெரும்பாலானவர்கள் அதிலும் குறிப்பாக குடும்பத்தலைவிகள்.. இதில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்  அவர்களை சொல்லியும் தப்பு இல்ல... பிள்ளைகள்  தலை முறை இடைவெளின்னு ஒதுங்கி விடுகிறார்கள்.புருஷனோ.. இந்த உலகமே தன்னுடைய  தலை மேலதான் நின்று  சுற்றுவது மாதிரி ஒரு நிநைப்புடனே இருக்கிறார்..... இவர்கள் யாரிடம் பேசுவார்கள்...???. சுவருடன்  பேச முடியாது... பக்கத்து வீட்டுக்காரர்களுக்கும் பேச நேரமில்லை ... அவர்களுடைய எண்ணங்களையும்.. அவர்களின் இருப்பையும் அங்கீகரிக்க சமூக வலைத்தள நட்புகள் தான் சரி என்று நினைக்க தொடங்குகிறார்கள்.. அதற்கு தூபம் போடுவது போல இந்த வலைதளங்களில் வலை விரித்து காத்திருக்கும் தந்திர நரிகள் "காலை வணக்கம்" என்று ஒரு நிலை தகவலை பதிந்தால் பலாப்பழத்தில் மொய்க்கும் ஈக்களாய் ஓடி வந்து பதில் வணக்கம் பதிகிறார்கள். கண்டுகொள்ளாத கணவன்.... தலைமுறை இடைவெளியில் விலகும் பிள்ளைகள்.. இப்படிப்பட்ட ஒரு மன உளைச்சல் பின்னணியில் உழன்றவர்களுக்கு இது மாபெரும் அங்கீகாரமாக தெரிகிறது... 

அந்த குடும்பத்தலைவிகளை பொறுத்த வரை இது ரகசியமானது... தான் முன் பின் பார்த்திராத ஒரு ஆணுடன் பேசிக்கொண்டிருப்பது பக்கத்து வீட்டுக்கு கூட தெரியாது..  இதில் தொடுகையோ- வேறெந்த பாலியல் இடற்பாடுகளோ இல்லை... தேவை இல்லை என்றால் விலகி விடலாம் என்றும் நினைக்கிறார்கள்.. அதில் சிலர் இந்த நிலையையும் தாண்டி நேரடி சந்திப்பு.. தனிமை சந்திப்பு என்ற அடுத்த கட்ட நடவடிக்கைக்கு செல்லும் போது சிக்கலில் தாமே போய் மாட்டிக்கொண்டு மீள முடியாமல் போகிறார்கள்.. அப்படி மீள முடியாமல் சிலர் காவல் துறைக்கும்.. சிலர் தற்கொலைக்கும் போகிறார்கள்..

சமூக வலைத்தளங்களில் நண்பர்களை தேர்ந்தெடுப்பவர்கள் மிக கவனமாய் இருத்தல் அவசியம்... எதிராளியின் நோக்கம் என்ன என்பதை புரிந்து கொள்ள  வேண்டும்.. குறிப்பாக பெண்கள் ஒன்றை மிக தெளிவாய் புரிந்துகொள்ள வேண்டும்... தனக்கு தெரிந்த ராக்கெட் தொழில் நுட்பத்தை உங்களுக்கு கற்றுக்கொடுப்பதற்காகவோ..... உலகம் அமைதி பெற உங்களிடம் யோசனை கேட்பதற்காகவோ உங்கள் நட்பை யாரும் தேடவில்லை அவர்களின் நோக்கம்... ..................... சொல்லித்தெரிய வேண்டிய விஷயமில்லை 

உங்கள் கணவரோ பிள்ளைகளோ உங்களை அங்கீகரிக்க வில்லை என்று நினைப்பவர்கள் தான் பாதுகாப்பாய் அமர்ந்திருக்கும் வீடு... தன்னுடைய அடிப்படை தேவைகள்... வண்டி வாகனங்கள் .. நகை நட்டுக்கள்.... இதோ.. இந்த கட்டுரையை படிக்க உங்கள் எதிரிலோ கையிலோ இருக்கும் இணைய சாதனங்கள்.. எல்லாம் தந்தது அவர்கள் என்பதை மறக்க வேண்டாம்... உங்களுக்கு காலையில் கலை வணக்கம் சொல்வதையோ... உங்களை தினசரி பாராட்டுவதையோ.. உங்கள் எண்ணங்களுக்கு செவி சாய்ப்பதையோ அவர்கள் ஒரு சாதாரண நிகழ்வாய் எடுத்துக்கொண்டு தவிர்த்திருக்கலாம் ஆனால் நீங்கள் இல்லை எனில் அவர்கள் ஒரு பூஜ்ஜியம்... அது அவர்களுக்கு தெரியும்... அங்கீகரிக்க வில்லை என்று கவலை படாதீர்கள்.. நான் இல்லை என்றால் என் கணவனோ மக்களோ.. ஒரு நாள் கூட நிம்மதியாய் வாழ மாட்டார்கள் என்று கர்வப்படுங்கள்..

உங்களை அங்கீகரிக்கவில்லை என்று ஆதங்கப்படும் உங்கள் கணவனோ பிள்ளைகளோ... உங்களுக்கு அரணானவர்கள்.. உங்களை ஆஹா ஓஹோ... என்று புகழ்ந்தும் நீங்க அழகோ அழகு என்றும் அறிவோ அறிவு என்றும் புழுக்களை வைத்து தூண்டிலுடன் காத்திருப்பவர்கள் உங்கள் வாழ்க்கையை சிதைக்குமளவு முரணானவர்கள்..

சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதில் தவறில்லை.. அதனை ஆக்க பூர்வமான வேலைகளுக்கும் தகவல் தெரிந்து கொள்ளவும்... தங்களின் மன ஓட்டங்களை பகிர்ந்துகொள்ளவும்  உபயோகிப்பதை வரவேற்கிறேன்.. ஆனால் அதை ஒரு செருப்பு மாதிரி அதன் எல்லையோடு நிறுத்த வேண்டும் இல்லை எனில் வீடு நாற்றமெடுக்கும்.

வேஷ்டி- சட்டை...


என்னை பொருத்தவரைக்கும் உலகத்துலையே கம்பீரமாவும் கம்ஃபோர்ட்டாவும் இருக்கிறது இந்த காஸ்டியூம் தான்... அப்பாவோட முழங்கால் அளவு உயரமா இருந்த போதே இந்த வேட்டிமேலான காதல் வந்துடிச்சு... அப்பாவோட துண்ட எடுத்து மூணு சுத்து சுத்தி இடுப்புல சொருகிட்டு அத மடிச்சுகட்டிகிட்டப்போதான் அந்த காதல் வெளிப்பட்டிச்சு...

வேஷ்டி.... அதுவும் வெள்ள வெளேர்னு தும்பைப்பூ கலர்ல கஞ்சி போட்டு மடமடன்னு கட்டிக்கிட்டு ஊர்ல இருக்க அப்பா அண்ணமாரெல்லாம் நடக்கும்போது நம்மையும் அறியாம ஒரு மரியாதையும். பயமும் பத்திக்கும்.. கட்சிக்காரங்க தன்னோட கட்சி விசுவாசத்தையோ- பெருமையையோ வேஷ்டி மூலமாத்தான் காட்டுவாங்க..


நானும் வளந்து மொதமொதலா வாங்கின வேஷ்டி.. அப்போ என்னோட மனச கவர்ந்திருந்த ரெண்டுகலர் கட்சி கரை போட்ட வேஷ்டிதான்... அத கட்டிக்கிட்டு நடந்தாலே ஒரு ராஜ நடை வரும்.. ஆனா அதே நடை லுங்கி கட்டினாலோ- பேண்ட் போடும்போதோ எங்கயோ போய் ஒளிஞ்சுக்கும்...


பண்னண்டாம் வகுப்பு படிச்சு முடிச்சு (??) பரீட்சை எழுத ஹால் டிக்கெட் வாங்க வர சொல்லி இருந்தாங்க அப்போ எங்க பட்டுக்கோட்டை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில தலைமை ஆசிரியரா இருந்த தேவாசீர்வாதம்.. சினிமால வர வில்லன் மாதிரியே இருப்பார்... அடியும் அப்படித்தான் இருக்கும்.. கண்ணு மண்ணு தெரியாம அடிப்பார்... அவர்தான் ஹால் டிக்கெட் விநியோகம் பண்ணார்... அந்த ஹால்டிக்கெட் வாங்க நான் நம்ம கம்பீர ஆடையான கரை வேஷ்டி கட்டிட்டு போயிருந்தேன்... எல்லோரும் வரிசைல நின்னு வாங்கினோம்... எனக்கு முன்னாடி வரிசைல பத்து பேருக்கு முன்னாடி நின்ன ஒரு பையன் வேஷ்டியோட இருந்தான்.... அட அட... நம்ம ஆசீர்வாதம் சார் அவன் உடம்புல மூங்கில் குச்சியால ஆடினாரு பாருங்க ஒரு கதகளி ... இத்தனைக்கும் அது ஊதாகலார்ல கரை போட்ட வேஷ்டி... கேக்கவா வேணும்.. நமக்கு உள்ளுக்குள்ள ஈரக்கொலை எல்லாம் நடுங்கி போச்சு.. அந்த வேஷ்டிக்கே இந்த அடி அடிக்கிறாரே கரைவேஷ்டி கட்டிட்டு போன என்னோட நிலைமை.??? ஹால் டிக்கெட்டாவது... பரீட்சையாவது.... உயிர் முக்கியம்டா செந்திலுன்னு எனக்கு நானே சொல்லிக்கிட்டு நைசா நழுவிட்டேன்.. அப்புறம் வயித்து வலி சார்னு சொல்லி மறுநாள்தான் ஹால் டிக்கெட் வாங்க போனேன் .. ஆனாலும் வேஷ்டி மீதான அந்த காதல் மட்டும் குறையவே இல்ல 


அதுக்கப்புறம் கல்லூரி- வெளிநாடுன்னு ஓடிட்டே இருந்ததுல வேஷ்டி கட்டுறதுக்கான சந்தர்ப்பங்கள் குறைச்சு போனாலும் கூட ஊருக்கு விடுமுறையில் வரும் நேரத்தில் எல்லாம் வேஷ்டிதான் என்னோட ஆஸ்தான வஸ்திரம்... கஞ்சி போட்டு மடமடன்னு கட்டி.. பச்சை பெல்ட (பெல்ட்)போட்டு இருக்க கட்டி.. ஒரு தலைப்ப தூக்கி பிடிச்சுகிட்டு நடந்தா.... நாட்டாமையாவது... சின்னகவுண்டராவது.. எல்லா அவதாரமும் நமக்குள்ள கிளம்பும்...


வேஷ்டில கரை பட்டுடுமோன்னு வசதியான இடம் இல்லன்னா உட்காராம கூட நின்னுகிட்டே இருப்பேன்... அதே வேஷ்டி சில நேரங்கள்ல போர்வையா கூட ஆகும்... என்னதான் சொல்லுங்க..வேஷ்டி வேஷ்டிதான்...

என்னுள் புதைந்த வாசனைகள்..

ஒருநாள் விகடனில் ராஜூ முருகனின் வட்டியும் முதலும் படித்தேன்... என்ன ஆச்சர்யம்... சில நாட்களுக்கு முன்தான் நானும் இதை பற்றி சிந்தித்து கிடந்தேன்.. எனக்குள் புதைந்த வாசனைகள் பற்றி...


அம்மாவின் புடவையில் இருக்கும் மசாலா... ஈரம் கலந்த ஒரு வாசம்... அது தமிழ்நாட்டில் இருக்கும் எல்லா கிராமத்து அம்மாக்களுக்கும் இருக்கும் ஒரு வினோத வாசம்...


அப்பாமீது எப்போதுமே வெற்றிலை வாசமும் வியர்வை வாசமும் படிந்துகிடக்கும்... எனக்கு கதை சொல்வதற்காகவே சிறுவர்மலரை படித்துவிட்டு நிலா வெளிச்சத்தில் கோரைப்பாயில் படுத்துக்கொண்டு தூங்கும் வரை கதை சொல்லும் சித்தப்பாவின் வாசம் இன்றும் மாறாமல்தான் இருக்கிறது...


புதினா வாசம் எனக்கு முதன் முதலாய் ஒரு பற்பசையில்தான் அறிமுகமாகி இருந்தது... அதற்கு பிறகு புதினா சட்னியோ- புதினா தொகையலோ சாப்பிட நேர்ந்தால் அது அந்த பற்பசை சாப்பிடும் உணர்வையே ஏற்படுத்தியது...


காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் குங்குமம் தருவார்களே.. அந்த குங்குமத்தில் மஞ்சள்வாசனை வீசும்.. ஆனால் எனக்கு அந்த வாசனை முன்னாலேயே அறிமுகமாகி இருந்தது... ஆம்... மஞ்சள் பொசிய என் மனைவியின் பின்கழுத்து.... காமாட்சி அம்மன் கோயில் பிரசாதம் என் மனைவியின் வாசனையை கொண்டு வந்ததே தவிர எனக்கு பக்தியை கொண்டுவரவில்லை என்பதை சொல்ல நான் வெட்கப்படவில்லை..


தாய்ப்பால் குடிக்காமல் யாருமே வளர்ந்திருக்கமுடியாது என்றாலும்.. அந்த வாசனையை நம்மால் உணரமுடியும்போது நிச்சயம் அம்மாவாகவோ- அப்பாவாகவோ அவதாரம் எடுத்திருப்போம்.. எனக்கும் அப்படித்தான். என்மகளை தூக்கி உச்சி முகர்ந்தபோது பால்வாசனையும் ஜான்சன் பவுடர் வாசனையும் பதிந்துபோனது.... அந்த பதிவுதான் எனக்கும் என் மகளுக்குமான நெருக்கமாய் இன்று வரை என் ஞாபக அடுக்குகளில் நிலைத்து கிடக்கிறது...


எனக்கான வாசனைகளை தொலைத்துவிட எத்தனையோ வாசனாதி திரவியங்களை பூசினாலும் எனக்கெண்டு இருக்கும் பிரத்தியோக வாசனையும்... காமம் கிளரும் என்னவளின் அக்குள் வாசனையும் பகிரங்கமாய் சொல்ல முடியா ரகசியமானவை..


கல்யாண மாலையில் இருந்த சம்பங்கி பூவாசனை திருமணம் நடந்த மண மேடையையும்... ரோஜா வாசனை .. அகால மரணமடைந்த நண்பனை தூக்கிக்கொண்டு சுடுகாட்டுக்கு சென்றதையும் நினைவில் கொண்டுவரும் பூவாசனைகள்...


புது துணி வாங்கிய உடன் அதனை மூக்கில் வைத்து ஆழமாய் உள்ளிழுக்கும் அந்த வாசனை நிரந்தரமாய் தங்குவதில்லை என்றாலும்.. அதை எல்லோருமே செய்கிறார்கள்.. 
இரண்டு சக்கரவாகனங்கள் அரிதாய் இருந்த காலத்தில் அது கடந்து சென்ற பின்னும் சில நேரம் காற்றில் கலந்திருக்கும் பெட்ரோல் புகை வாசனை..... ரசாயனங்கள் அதிகமாய் கலக்காத காலத்தில் பக்கத்து ஊரில் மழை பெய்வதை காற்றில் கொண்டுவரும் மண்வாசனை. . 
நிறைய வாசனைகளை நிகழ்வில் இழந்திருந்தாலும் நினைவில் இருந்து அனுபவிக்கமுடிகிறது... 

வெளிநாட்ல எனக்கென்ன வேலை..??

நானும்... என்ன மாதிரி ஆயிர, லட்சக் கணக்கானோரும் ஏன் பொண்டாட்டி, புள்ள, சொந்தம், பந்தம், தேரு, திருவிழா, தீவாளி, பொங்கல்னு எல்லாத்தையும் விட்டுட்டு இப்படி வந்து வெளிநாடுகள்ள கஷ்டப்படறோம்.... யோசிச்சு பார்த்து காரணம் கண்டுபிடிக்க சுதந்திர போராட்ட காலத்துக்கு முன்னாடி போகணும்... வாங்களேன்.. போயிட்டுத்தான் வருவோம்...


தண்ணி பஞ்சம் இல்ல... ஏரி குளமெல்லாம் நெறஞ்சுகிடக்குமாம். எல்லோருக்குமே விவசாயம் தான் பொழப்பு.. முப்போகம் விவசாயம்... ஒரு பவுனு பத்து ரூபாயோ பன்னெண்டு ரூபாயோதானாம்.. எரநூறு ரூபா செலவு பண்ணா கல்யாணம் பண்ணிபுடலாமாம்... அதே ஐநூறு ஆயிரம் செலவு பண்ணா தடபுடலா பண்ணிபுடலாமாம்... எல்லோருமே அப்போ கேப்பை கூழுதான் குடிப்பாங்களாம் .. வாரத்துக்கு ஒருமுறையோ ரெண்டு முறையோதான் நெல்லு சோறு...
அப்படிப்பட்ட ஊருல கண்டிப்பா ரெண்டொரு ஏழை ஜனங்க இருப்பாங்க தானே... அந்த கூழு கூட குடிக்க முடியாத வறுமைல கொஞ்சபேறு இருந்தாங்களாம் ... அப்போ இந்தியாவுல இருந்து சிங்கப்பூர்.. பர்மா. மலேசியா... இலங்கை போல நாடுகளுக்கு கப்பல் போக்குவரத்து போகுமாம்... ஆறு மாசத்துக்கொருமுறை இலவசமா ஆளுங்கள ஏத்திட்டு போய் சிங்கபூர்ல இறக்கி விடுவாங்களாம். ஆனா கப்பல்ல போனா உயிர் போயிடும்னு நினைக்கிற அளவுக்கு பயம்... யாரும் அதுக்கு மெனெக்கெடுறது இல்ல...
தவிரவும்.. அவங்களோட தேவைகள் எல்லாம் இங்கயே கிடைச்சதால வெளில போக வேண்டிய அவசியம் யாருக்கும் ஏற்படல...
அந்த சமயத்துல தான் இங்கதான் கூழுகுடிக்க கூட வழி இல்லாத வறுமையா இருக்கே... சரி.. செத்தாலும் பரவாயில்லன்னு சில பேர் துணிஞ்சு கப்பல்ல சிங்கபூர் கிளம்பினாங்களாம் ... ஊர் கூடி ஒப்பாரி வச்சாலும் அந்த வயசு பசங்க துணிஞ்சு கிளம்பிட்டாங்களாம் ... போனவங்க போனவங்கதான்.... அப்படி போன சில பேரு நேதாஜியோட இந்திய தேசிய ராணுவத்துல சேர்ந்து சுதந்திரத்துக்காக போராட வந்துடாங்களாம் ... சிலபேரு சிங்கபூர்லையே தங்கிட்டாங்களாம் ...


அதோட அவங்கள பத்தி ஊரு மறந்து போச்சு...ஒரு பத்து வருஷம் பதினைஞ்சு வருஷம் கழிச்சு அப்படி போன ஏழை இளைஞர்கள் ஊருக்குள்ள வந்தாங்களாம்... சும்மா இல்ல.. பணக்காரங்களா.... ஊரு மூக்குமேல விரல் வைக்குதாம்.... கூழு குடிக்க கூட வசதி இல்லாம உயிரை பணயம் வச்சு போனவங்க.. இவ்ளோ பணத்தோட வந்துட்டாங்களேன்னு... அத பாத்துட்டு அடுத்தடுத்து வசதி இல்லாதவங்களும் கிளம்ப ஆரம்பிச்சாங்களாம்... அங்க போய் யாரும் ராஜாவா வாழலன்னாலும் காசு கிடைக்குதுல்ல... அத வச்சு நிலம் நீச்சு.. பொன் பொருளுன்னு வாங்கலாம்ல... அப்படி சம்பாதிக்க போன இடத்துல எப்படி இருந்தாலும்.. ஊருக்கு வந்ததும் தேங்காப்பூ துண்டும்.. மல்லிகப்பூ செண்டுமா வளைய வரலாம்ல...


ஒன்ன பாத்து இன்னொன்னு... இன்னொண்ண பாத்து இன்னொன்னு... பத்திகிச்சு... எல்லோரும் கிளம்ப ஆரம்பிச்சிட்டாங்க... இங்க வந்து நாயா பேயா சாப்பிட நேரம் இல்லாம ஓடி ஓடி சம்பாதிச்சாலும் எதையும் அனுபவிக்க முடியாது... ரெண்டு வருஷமோ- மூணு வருஷமோ கழிச்சு ஊருக்கு வந்தா.. இவ்வளவுகாலமும் அடக்கி வச்சு அனுபவிக்க முடியாத விஷயங்களை எல்லாம் அனுபவிக்கிற வெறில காசு கண்ணு மண்ணு தெரியாம கரையும்... ஆனா அவங்க அடக்கி வச்சு மொத்தமா கரைக்கிற ஆசைகள்... எங்கள மாதிரி இருந்தவங்க மனசுல வந்து விதையா முளைச்சு விருச்சமா வளைந்து.. நாமளும் வெளிநாட்டுக்கு போகணும்னு முயற்சி பண்ணி... 
இதோ..... இங்கன வந்து உட்கார்ந்தாச்சு.... ஆசைப்படலாம்.... காசு இருக்கும்.. ஆனா வாங்கி வைச்சுக்க யோசிக்கணும்.. திடீர்னு ரூம் மாறனும்... இல்லன்னா விசாவ கேன்சல் பண்ணி ஊருக்கு தொரத்திட்டா எல்லாத்தையும் அள்ளிகிட்டு போக பிளேன் காரன் ஒத்துக்க மாட்டான்.. அதுக்கு பயந்தே ஆசப்பட்டாலும் வாங்க முடியாது... ரெண்டுமாசம் லீவு கொடுத்து ஊருக்கு போயிட்டு வான்னு அனுப்பினா அப்போ டிவி, டேப்பு ரேடியோ, கை லைட்டு , தேங்காப்பூ துண்டு...அப்படின்னு எதையாச்சும் வாங்கிட்டு ஊருக்கு வந்து ஒரு ஆட்டம் போடணும்...


எங்களோட பக்கத்துல இருந்து பார்த்தா இது அனுபவிக்காம அடக்கி வச்ச ஆசைகளோட மொத்த வெளிப்பாடு.. ஆனா எங்களுக்கு முன்னாடி வெளிநாட்டு சம்பாத்தியக்காரங்க எங்க மனசுக்குள்ள விதைச்ச அதே விதைய எனக்கே தெரியாம ஊருக்குள்ளயே இருக்க நாலஞ்சு பேரோட மனசுலயாச்சும் விதைச்சிட்டு பிளேன புடிச்சு ஓடியாந்துடுவோம்...... அங்க அந்த பசங்க பாஸ்போர்ட் ஆபீசுல போய்தான் முட்டிக்கிட்டு நிப்பாய்ங்க....