அக்கம்பக்கத்தில் பேச்சை குறைத்து மக்களை.. குறிப்பாய் பெண்களை வீட்டுக்குள்ளயே முடக்கின காட்சி ஊடகங்கள் , இதன் அடுத்த கட்டம்..இப்பொழுது படித்தவர்கள் மத்தியில பிரபலமாகிகொண்டு வரும் சமூக வலைத்தளங்கள்... எத்தனயோ நல்ல விஷயங்கள் இருந்தாலும்.. ஒரு குடம் பாலில் விழுந்த விஷம் மொத்த நல்லதையும் நாசம் பண்ணுவது மாதிரி..சில விஷயங்கள்...
இந்த காட்சி ஊடகங்களுக்கு பிறகு மனிதர்கள் வீட்டில் பேசிக்கொள்வதே குறைந்து போய் விட்டது..... யாரும் மனசு விட்டு பேசிக்கொள்வதில்லை .. கணவனோ- மனைவியோ தங்களின் இணையுடன் பேசுவதில்லை.. பெற்றோர்கள் பிள்ளைகளிடமோ.. பிள்ளைகள் பெற்றோரிடமோ பேசுவதில்லை... ஆனால் பேசாமல் இருந்தால்தான் நாமெல்லாம் செத்துப்போவோமே..வாராது வந்த மாமணியாய் நம்ம கம்ப்யூட்டர் மூலமாகவோ...மொபைல் மூலமாவோ பக்கத்து வீட்டுக்காரன் /வீட்டுக்காரிய..பக்கத்து ஊரு காரன் / ஊருக்காரிய... பக்கத்து நாட்டுக்காரன் / நாட்டுக்காரிய யாருக்கும் தெரியாம ரகசியமா படுக்கை அறை வரை கூட்டிக்கொண்டு வர ஒரு வாசல் கதவு திறந்து வைத்து விட்டோம்
பெரும்பாலானவர்கள் அதிலும் குறிப்பாக குடும்பத்தலைவிகள்.. இதில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள் அவர்களை சொல்லியும் தப்பு இல்ல... பிள்ளைகள் தலை முறை இடைவெளின்னு ஒதுங்கி விடுகிறார்கள்.புருஷனோ.. இந்த உலகமே தன்னுடைய தலை மேலதான் நின்று சுற்றுவது மாதிரி ஒரு நிநைப்புடனே இருக்கிறார்..... இவர்கள் யாரிடம் பேசுவார்கள்...???. சுவருடன் பேச முடியாது... பக்கத்து வீட்டுக்காரர்களுக்கும் பேச நேரமில்லை ... அவர்களுடைய எண்ணங்களையும்.. அவர்களின் இருப்பையும் அங்கீகரிக்க சமூக வலைத்தள நட்புகள் தான் சரி என்று நினைக்க தொடங்குகிறார்கள்.. அதற்கு தூபம் போடுவது போல இந்த வலைதளங்களில் வலை விரித்து காத்திருக்கும் தந்திர நரிகள் "காலை வணக்கம்" என்று ஒரு நிலை தகவலை பதிந்தால் பலாப்பழத்தில் மொய்க்கும் ஈக்களாய் ஓடி வந்து பதில் வணக்கம் பதிகிறார்கள். கண்டுகொள்ளாத கணவன்.... தலைமுறை இடைவெளியில் விலகும் பிள்ளைகள்.. இப்படிப்பட்ட ஒரு மன உளைச்சல் பின்னணியில் உழன்றவர்களுக்கு இது மாபெரும் அங்கீகாரமாக தெரிகிறது...
அந்த குடும்பத்தலைவிகளை பொறுத்த வரை இது ரகசியமானது... தான் முன் பின் பார்த்திராத ஒரு ஆணுடன் பேசிக்கொண்டிருப்பது பக்கத்து வீட்டுக்கு கூட தெரியாது.. இதில் தொடுகையோ- வேறெந்த பாலியல் இடற்பாடுகளோ இல்லை... தேவை இல்லை என்றால் விலகி விடலாம் என்றும் நினைக்கிறார்கள்.. அதில் சிலர் இந்த நிலையையும் தாண்டி நேரடி சந்திப்பு.. தனிமை சந்திப்பு என்ற அடுத்த கட்ட நடவடிக்கைக்கு செல்லும் போது சிக்கலில் தாமே போய் மாட்டிக்கொண்டு மீள முடியாமல் போகிறார்கள்.. அப்படி மீள முடியாமல் சிலர் காவல் துறைக்கும்.. சிலர் தற்கொலைக்கும் போகிறார்கள்..
சமூக வலைத்தளங்களில் நண்பர்களை தேர்ந்தெடுப்பவர்கள் மிக கவனமாய் இருத்தல் அவசியம்... எதிராளியின் நோக்கம் என்ன என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.. குறிப்பாக பெண்கள் ஒன்றை மிக தெளிவாய் புரிந்துகொள்ள வேண்டும்... தனக்கு தெரிந்த ராக்கெட் தொழில் நுட்பத்தை உங்களுக்கு கற்றுக்கொடுப்பதற்காகவோ..... உலகம் அமைதி பெற உங்களிடம் யோசனை கேட்பதற்காகவோ உங்கள் நட்பை யாரும் தேடவில்லை அவர்களின் நோக்கம்... ..................... சொல்லித்தெரிய வேண்டிய விஷயமில்லை
உங்கள் கணவரோ பிள்ளைகளோ உங்களை அங்கீகரிக்க வில்லை என்று நினைப்பவர்கள் தான் பாதுகாப்பாய் அமர்ந்திருக்கும் வீடு... தன்னுடைய அடிப்படை தேவைகள்... வண்டி வாகனங்கள் .. நகை நட்டுக்கள்.... இதோ.. இந்த கட்டுரையை படிக்க உங்கள் எதிரிலோ கையிலோ இருக்கும் இணைய சாதனங்கள்.. எல்லாம் தந்தது அவர்கள் என்பதை மறக்க வேண்டாம்... உங்களுக்கு காலையில் கலை வணக்கம் சொல்வதையோ... உங்களை தினசரி பாராட்டுவதையோ.. உங்கள் எண்ணங்களுக்கு செவி சாய்ப்பதையோ அவர்கள் ஒரு சாதாரண நிகழ்வாய் எடுத்துக்கொண்டு தவிர்த்திருக்கலாம் ஆனால் நீங்கள் இல்லை எனில் அவர்கள் ஒரு பூஜ்ஜியம்... அது அவர்களுக்கு தெரியும்... அங்கீகரிக்க வில்லை என்று கவலை படாதீர்கள்.. நான் இல்லை என்றால் என் கணவனோ மக்களோ.. ஒரு நாள் கூட நிம்மதியாய் வாழ மாட்டார்கள் என்று கர்வப்படுங்கள்..
உங்களை அங்கீகரிக்கவில்லை என்று ஆதங்கப்படும் உங்கள் கணவனோ பிள்ளைகளோ... உங்களுக்கு அரணானவர்கள்.. உங்களை ஆஹா ஓஹோ... என்று புகழ்ந்தும் நீங்க அழகோ அழகு என்றும் அறிவோ அறிவு என்றும் புழுக்களை வைத்து தூண்டிலுடன் காத்திருப்பவர்கள் உங்கள் வாழ்க்கையை சிதைக்குமளவு முரணானவர்கள்..
சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதில் தவறில்லை.. அதனை ஆக்க பூர்வமான வேலைகளுக்கும் தகவல் தெரிந்து கொள்ளவும்... தங்களின் மன ஓட்டங்களை பகிர்ந்துகொள்ளவும் உபயோகிப்பதை வரவேற்கிறேன்.. ஆனால் அதை ஒரு செருப்பு மாதிரி அதன் எல்லையோடு நிறுத்த வேண்டும் இல்லை எனில் வீடு நாற்றமெடுக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக