அவர் பேரு நடேசன்... கை கால்ல நகக்கண் முளைச்ச காலத்துல இருந்து குடும்பத்துக்காக உழைச்சவராம்.. எனக்கும் அவருக்கும் பெரிசா சொல்லிக்கிற மாதிரி ஒன்னும் பேச்சு வார்த்தை இருந்ததில்ல.
ஆனா அவர் பாசம் சொல்லாம இருக்கற விஷயமில்ல... மாமா வீட்ல அம்மாயி இறந்து போயிட்டப்புறம் அம்மாதான் மாமா மூணு பேரையும் வளத்தாங்களாம் .. அதனால அம்மாவுக்கு மாமாங்க மேல தான் பாசம் பொங்கும்.. அக்கா ரெண்டு பெரும் நானும் பள்ளிக்கூடம் போயிடுவோம்.. அம்மா மாமா வீட்டுக்கு போயிடுவாங்க. ஒவ்வொரு நாள் அவங்க அங்க தங்கிடுவாங்க. அன்னிக்கு அப்பா தான் சமையல்... வயல் வேலைய முடிச்சிட்டு இருட்டோட வீட்டுக்கு வந்து "இவ இன்னும் வரலையா நாளைக்கு வரட்டும்.. மொத்தமா அடிச்சு தொரத்திட்றேன்..."அப்படின்னு அம்மாவ நாலு திட்டு திட்டிட்டு சமைக்க ஆரம்பிச்சிடுவார்.. மொளகா ,மல்லி,மஞ்சள் ,சீரகம் எல்லாம் மெஷின்ல அடிச்சு மாவாக்குற பழக்கமெல்லாம் இல்ல அப்போ.. எல்லாமே அப்படியே இருக்கும் அம்மில வச்சிதான் அரைக்கணும்.. "ரெடிமேட் கொழம்பு வப்பமா.." ன்னு சொல்லிகிட்டே மசாலா அரப்பார்... மறுநாள் அம்மா வெள்ளன எந்திரிச்சு வீட்டுக்கு வந்துடுவாங்க. அப்பாவுக்கு ராத்திரி புள்ளைங்கள பார்த்ததும் வந்த கோபம் காணாம போயிருக்கும்..
எங்க ஊர்ல எல்லோருக்குமே விவசாயம் தான் பொழப்பு. எல்லோருக்கும் சொந்த நிலம் இருக்கும்.. சிலருக்கு நிறைய. சிலருக்கு கொஞ்சம்... ஆனா கண்டிப்பா எல்லோருக்குமே சொந்தமா பயிர்வைக்க நிலமிருக்கும். எங்களுக்கும் இருந்துச்சு... கவனிங்க.. இருந்துச்சு...ஒன்னரை ஏக்கர். அதுல வரப்பு வெட்டுறது.. ஒழவு ஓட்டுறது.. சேரடிச்சு நாத்து விடறது.. உரம்போட்றது.. களை எடுக்கிறது.. எல்லாமே அப்பா தான்.. நடவு நடுறது.. கதிர் அறுக்கிறது மாதிரியான பெரிய வேலைகளுக்கு தான் அப்பா ஆள் கூப்பிடுவார்...
காலைல எல்லோரும் டீக்கடைல டீய குடிச்சிட்டு ஒழவு ஓட்ட மாட்ட புடிச்சுகிட்டு வயக்காட்டுக்கு போகும் போது அப்பா நூறு குழி நிலம் ஒரு ஓட்டு ஓட்டி முடிச்சிருப்பார்... ஒன்னரை ஏக்கருக்கும் ஒரே நாள்ல வரப்பு வெட்டுவார்... ஒரு பதினோரு மணி வாக்குல அம்மா டீ வச்சி கொடுக்கும்.. அத எடுத்துகிட்டு சைக்கிள்ல போனா ஏரிக்கரைல சைக்கிள நிறுத்தும்போதே அப்பா ஏர நிறுத்தி மாட்ட இழுத்து கலப்பைல கட்டி வச்சிட்டு வந்துடுவார்.. டீய வாங்கி வச்சுகிட்டு "வெய்யில் சுடும்.. நீ போ.. நான் வரும்போது கூஜாவ எடுத்துட்டு வரேன்" அப்படிம்பார்... ஆனா அப்போ அது ஜாலியா இருக்கும்... ஆனா விவசாயிங்க பொழப்பு எல்லோருக்கும் தெரிஞ்சதுதான.. உழுவுறவன் கணக்கு பாத்தா உழக்கு கூட மிஞ்சாதுன்னு சும்மாவா சொல்லி வச்சாங்க... ஒன்னும் மிஞ்சல.. கிட்டத்தட்ட ஒரு பதினைஞ்சு வருஷ மெனக்கெடு... எங்கபக்கத்துல பெரும்பாலும் எல்லோருமே வெளிநாட்டு தொடர்போட இருந்தாங்க. ஆனா அப்பாவுக்கு மட்டும் அந்த வாய்ப்பு கிட்டவே இல்ல... எங்க ஆளுங்கள்ள வரதச்சினை கொஞ்சம் அதிகம் ரெண்டு லட்சம் மூனுலட்சம் ரொக்கம்.. அப்புறம் நக நட்டு. பாத்திரம் பண்டம்.. அப்படி இப்படின்னு ஒரு தொகை ஆயிடும். ரெண்டு பொண்ண வச்சிருக்கோமே எப்படி கட்டிக்கொடுகிறதுன்னு பெரிய கவலை.. அப்படி இப்படி கெஞ்சி கூத்தாடி துபாய்ல இருந்த மாமா ஒரு விசிட் விசா வாங்கி கொடுத்தார். அப்பாவுக்கு பெரிய நிம்மதி.. எப்படியும் பொண்ணுங்கள கட்டி கொடுக்க காசு சம்பாதிசிடலாம்னு... அந்த நம்பிக்கையோட அவரு பிளேன் ஏறினப்போ அவருக்கு வயசு நாப்பத்தஞ்சிக்கும் மேல ஆச்சு.. கொட்டி வழுக்கையா போனது போக மிச்சமிருந்ததுல முக்காவாசி முடி நரைச்சு போச்சு... தமிழ தவிர வேற பாஷை தெரியாது... தட்டு தடுமாறி ஒரு அஞ்சு வருஷம்.. துபாய்ல இருந்தார்...ஒரு பர்மனென்ட் விசாவும் கிடைக்கல..பெரிசா ஒன்னும் சம்பாதிக்கவும் முடியல... ஒரு தோத்துப்போன மனுஷனா ஊருக்கு வந்து சேர்த்தார் . வந்தப்புறம் மனசுக்குள்ள ஏதோ ஒரு விரக்தியோ- ஏமாற்றமோ.இல்லை சுய பச்சாதாபமோ...அதிகமா யார்கிட்டவும் பேசல..
இதுக்கு நடுவுல நானும் சென்னை பக்கம் வந்தாச்சு .. பொங்க தீபாவளிக்கு ஊருக்கு போவேன்... நம்ம ஊருக்கு பஸ்செல்லாம் வராது.. எந்த பக்கம் வந்தாலும் மூணு கிலோமீட்டர் நடந்துதான் போகணும்.. அப்பா அப்போ சைக்கிள எடுத்துட்டு வருவார் அழைச்சிட்டு போக... அப்போ கூட இந்த பாவி மகன்.. அவர ஓட்ட சொல்லி உட்கார்ந்துகிட்டு போவேன்.... "வந்துட்டியாப்பா... நல்லா இருக்கியா" என்பார்... ஓரிரு நாளில் மீண்டும் சென்னை கிளம்பும்போது.."கிளம்பவாப்பா?" என்று நான் சொன்னால் "ரெண்டு நாள் இருந்துட்டு போகக்கூடாதா.... பத்திரமா போ..." என்பார்.. இதுதான் எனக்கும் அவருக்குமான மணிரத்னம் ஸ்டைல் உரையாடல்கள்
இதுக்கு நடுவுல இருந்த நிலத்துல பாதிக்கும் மேல வித்து அக்கா ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணியாச்சு.. சின்னக்கா வீட்டுக்காரர் துபாய்ல இருந்தார்... அப்பா விட்ட போராட்டத்த நான் தொடங்கினேன் ஆமா வெளிநாட்டு போராட்டம்.. ஆனா அதுக்கான வாய்ப்பு மட்டும் கிடைக்காமையே இருந்துச்சு.. ஒரு வழியா எனக்கும் ஒரு விசிட் விசா... எங்க சின்னக்கா வீ ட்டுக்காரர் வாங்கித்தந்தார் அப்பா எங்க தோத்துப்போய் வெளியேறினாரோ... அதே இடத்துல நான் ஜெயிக்கணும்னு வெறி... அப்பா கொண்டுவந்து மெட்ராஸ் ஏர்போட்டுல விட்டுட்டு போனாங்க அவரோட எந்த செயல்ல்யுமே பாசம் மட்டும்தான் தெரியுமே தவிர வார்த்தையா எதுவுமே இருக்காது .நானும் துபாய் வந்தேன் போராடினேன்... ஒரு வழியா ஜெயிக்க ஆரம்பிச்சேன் ஊருல இருந்து தகவல் வந்துச்சு அப்பாவுக்கு ரொம்ப உடம்பு முடியலன்னு நானும் என்னமோ சாதாரணமாத்தான் இருக்கும்னு நினைச்சேன் ஆனா.. அப்புறம்தான் தெரிஞ்சுது அது சாதா ரணம் இல்ல ... சரிபண்ண முடியாத ரணம்னு .. ம்ம்.... அப்பாவுக்கு கேன்சர் .. இப்போதான் பையன் ஓரளவுக்கு செட்டிலாகி இருக்கான்.. அவன்கிட்ட இப்போ சொல்ல வேணாம்னு மறைச்சுட்டாங்க... அப்புறம் அங்க பாத்தாங்க .. இங்க பாத்தாங்கன்னு பாத்துகிட்டே இருந்தாங்க.. ஆனா கேன்சர் விடல.. ஒருநாள் சின்னக்கா போன்ல அழுதா. சின்னக்கா எதுக்கும் கலங்க மாட்டா... அவ அழுத ஒடனே எனக்கு பிரச்சினை ரொம்ப பெரிசா போச்சுன்னு தெரிஞ்சிடுச்சு. அப்புறம் நான் கிடந்து அழ.. துபாய்க்கு வந்த எட்டே மாசத்துல கொண்டு வந்த பொட்டியோட ஊருக்கு கிளம்பினேன் ..எட்டு மாசத்துக்கு முன்னாடி மலை மாதிரி ஏர்போர்ட்டுல விட்டுட்டு போன அப்பா நைஞ்சு போன துணி மாதிரி கிடந்தார்... எல்லா டாக்டரும் கைவிட்ட நிலைமைல கண்ணுல மட்டும் உயிரை வச்சுகிட்டு எலும்புக்கூடா கிடந்தார்... நான் ஊருக்கு வரேன்னு தெரிஞ்ச உடனே.. காலைல இருந்தே ரெண்டு கையையும் கூப்பி சாமிய கும்பிட்டுகிட்டே கிடந்தாராம்.. எம்பையன் வரவரைக்கும் நான் உயிரோட இருக்கணும்னு வேண்டி இருக்கலாம். அப்புறம் நானும் ஊருக்கும் வந்துட்டேன், நான் அவர்மேல சாஞ்சும் அவர் என்கையா புடிச்சுகிட்டும் அழுது தீர்த்தோம்... ஒரு பதினாலு நாள்... நான் அவர் கூட இருந்தேன்... கிராமத்துல சொல்லுவாங்க. தீந்த பாடும் இல்ல.. தெளிஞ்ச பாடும் இல்லன்னு... அப்படித்தான் அவரும் கிடந்தார்... அவரோட வேதனைகள சொல்ல முடியாது... நம்மளோட பையன இப்படி தவிக்க விட்டுட்டோமேன்னு அவரோட மனசுக்குள்ள ஓடுனத அவரோட கண்ணீர் சொல்லிட்டே இருந்துச்சு... அந்த பதினாலு நாளும்.. ஒரு புள்ளையா நான் செய்ய முடியுமோ.. அதெல்லாம் செஞ்சேன்.. வாந்தி எடுத்ததோ.. மலம் கழிச்சதோ.. எனக்கு எந்த அருவருப்பும் தரல ...எனக்கு எல்லாமே எங்கப்பாவுக்கு நான் சேவை பண்ண கிடைச்ச கடைசி வாய்ப்பா நினைச்சு செஞ்சேன்...
எல்லா சொந்தக்காரங்க. ஊர் காரங்க எல்லோருமே சொன்னாங்க "நீ போயி இப்போதான் ஒரு நிலைமைக்கு வர முயற்சி பண்ணிட்டிருக்க. இப்போ இப்படி வந்து தங்கிட்டா இத்தன வருஷம் மெனக்கெட்டது வீணாயிடும்.. அதுக்குமேல கடவுள்கிட்ட பாரத்த விட்டுட்டு நீ கிளம்பு"ன்னாங்க.. பொருளாதாரம் மனுஷனுக்கு மனிதாபிமானத்தையோ பாசத்தையோ எப்படி அவனுக்குள்ளையே பொதைக்க வைக்குதுன்னு கண்கூடா உணர்ந்த தருணம் அது... நானும் கிளம்பி துபாய் வந்துட்டேன்... நான் வந்த நாலாவது நாள்.. அப்பா சாமிகிட்ட போயிட்டார்.. ஊர்ல ஒரே ஒருத்தர் கூட கெட்டவர்னு சொல்லாத அளவு எல்லோருக்கும் நல்லவரா இருந்த அப்பாவ மரணத்துக்கும் சீக்கிரம் பிடிச்சு போச்சு...
நான் துபாய்ல... இது மனுஷத்தனமா...?. பணம்தான் பெரிசான்னு இப்போ கேக்கலாம் ஆனா பிராக்டிகல் வாழ்க்கை வேற... நான் மறுபடியும் ஊருக்கு போறதுன்னா குறைந்த பட்சம் அம்பதாயிரம் ரூபா ஆகும் அதுக்கும் மேல நான் போயி அரைமணி நேரம் கூட அப்பாவ வீட்ல வச்சிருக்க மாட்டாங்க சோ... போகல.... ஒரு மகனா அப்பாவுக்கு செய்ய வேண்டிய எல்லாம் அந்த பதினாலு நாள்ல செஞ்சேன்.. அத அவர் ஃபீல் பண்ணார்... அது போதும். இங்க இருந்து இத்தன செலவு பண்ணிக்கிட்டு போய்... "அந்த பையன் அப்படி அழுதான் இப்படி அழுதான்"னு..ஊருக்காரங்க வேணும்னா உச்சுகொட்டி மெச்சுக்குவாங்களே தவிர அது அப்பாவுக்கு தெரியாது... ஆனா அந்த செலவுக்கு கடன் கொடுத்தவங்க பாவம் பாத்ததெல்லாம் தள்ளுபடி பண்ண மாட்டாங்க.
ஒரே மகனா அவருக்கு கடைசி கடமையா கொள்ளி போட முடியாம போச்சேன்னு ஒரு உறுத்தல் இருந்தாலும் கொள்ளி போட்டுத்தான் அவரோட மகன்னு சொல்ல வேண்டியதில்லையே.... அத விட நம்ம மகன் நம்மள தூக்கினான்... பார்த்தான்....எடுத்தான்னு அவர் உணர்ந்தார்.. அப்படிங்கற திருப்தி இருக்கு....
இதுதான் பிராக்டிகல்.. அதுக்கப்புறம் காரு.. வசதி... ஒரு பெரிய போஸ்டிங்.. எல்லாம் கிடைச்சாலும் அன்னிக்கு தளிக்கோட்டை பாலத்துல வந்து நின்னு சைக்கிள்ள மிதிக்க முடியாம மிதிச்சு கூட்டிட்டு போன அப்பாவ நான் பைக்லையோ.. கார்லயோ கூட்டிட்டு போகமுடியலன்ற வலி.. மனசு முழுக்க ஆறாத ரணமா என்னிக்கும் உறுத்தும்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக