சனி, 9 மே, 2015

வேஷ்டி- சட்டை...


என்னை பொருத்தவரைக்கும் உலகத்துலையே கம்பீரமாவும் கம்ஃபோர்ட்டாவும் இருக்கிறது இந்த காஸ்டியூம் தான்... அப்பாவோட முழங்கால் அளவு உயரமா இருந்த போதே இந்த வேட்டிமேலான காதல் வந்துடிச்சு... அப்பாவோட துண்ட எடுத்து மூணு சுத்து சுத்தி இடுப்புல சொருகிட்டு அத மடிச்சுகட்டிகிட்டப்போதான் அந்த காதல் வெளிப்பட்டிச்சு...

வேஷ்டி.... அதுவும் வெள்ள வெளேர்னு தும்பைப்பூ கலர்ல கஞ்சி போட்டு மடமடன்னு கட்டிக்கிட்டு ஊர்ல இருக்க அப்பா அண்ணமாரெல்லாம் நடக்கும்போது நம்மையும் அறியாம ஒரு மரியாதையும். பயமும் பத்திக்கும்.. கட்சிக்காரங்க தன்னோட கட்சி விசுவாசத்தையோ- பெருமையையோ வேஷ்டி மூலமாத்தான் காட்டுவாங்க..


நானும் வளந்து மொதமொதலா வாங்கின வேஷ்டி.. அப்போ என்னோட மனச கவர்ந்திருந்த ரெண்டுகலர் கட்சி கரை போட்ட வேஷ்டிதான்... அத கட்டிக்கிட்டு நடந்தாலே ஒரு ராஜ நடை வரும்.. ஆனா அதே நடை லுங்கி கட்டினாலோ- பேண்ட் போடும்போதோ எங்கயோ போய் ஒளிஞ்சுக்கும்...


பண்னண்டாம் வகுப்பு படிச்சு முடிச்சு (??) பரீட்சை எழுத ஹால் டிக்கெட் வாங்க வர சொல்லி இருந்தாங்க அப்போ எங்க பட்டுக்கோட்டை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில தலைமை ஆசிரியரா இருந்த தேவாசீர்வாதம்.. சினிமால வர வில்லன் மாதிரியே இருப்பார்... அடியும் அப்படித்தான் இருக்கும்.. கண்ணு மண்ணு தெரியாம அடிப்பார்... அவர்தான் ஹால் டிக்கெட் விநியோகம் பண்ணார்... அந்த ஹால்டிக்கெட் வாங்க நான் நம்ம கம்பீர ஆடையான கரை வேஷ்டி கட்டிட்டு போயிருந்தேன்... எல்லோரும் வரிசைல நின்னு வாங்கினோம்... எனக்கு முன்னாடி வரிசைல பத்து பேருக்கு முன்னாடி நின்ன ஒரு பையன் வேஷ்டியோட இருந்தான்.... அட அட... நம்ம ஆசீர்வாதம் சார் அவன் உடம்புல மூங்கில் குச்சியால ஆடினாரு பாருங்க ஒரு கதகளி ... இத்தனைக்கும் அது ஊதாகலார்ல கரை போட்ட வேஷ்டி... கேக்கவா வேணும்.. நமக்கு உள்ளுக்குள்ள ஈரக்கொலை எல்லாம் நடுங்கி போச்சு.. அந்த வேஷ்டிக்கே இந்த அடி அடிக்கிறாரே கரைவேஷ்டி கட்டிட்டு போன என்னோட நிலைமை.??? ஹால் டிக்கெட்டாவது... பரீட்சையாவது.... உயிர் முக்கியம்டா செந்திலுன்னு எனக்கு நானே சொல்லிக்கிட்டு நைசா நழுவிட்டேன்.. அப்புறம் வயித்து வலி சார்னு சொல்லி மறுநாள்தான் ஹால் டிக்கெட் வாங்க போனேன் .. ஆனாலும் வேஷ்டி மீதான அந்த காதல் மட்டும் குறையவே இல்ல 


அதுக்கப்புறம் கல்லூரி- வெளிநாடுன்னு ஓடிட்டே இருந்ததுல வேஷ்டி கட்டுறதுக்கான சந்தர்ப்பங்கள் குறைச்சு போனாலும் கூட ஊருக்கு விடுமுறையில் வரும் நேரத்தில் எல்லாம் வேஷ்டிதான் என்னோட ஆஸ்தான வஸ்திரம்... கஞ்சி போட்டு மடமடன்னு கட்டி.. பச்சை பெல்ட (பெல்ட்)போட்டு இருக்க கட்டி.. ஒரு தலைப்ப தூக்கி பிடிச்சுகிட்டு நடந்தா.... நாட்டாமையாவது... சின்னகவுண்டராவது.. எல்லா அவதாரமும் நமக்குள்ள கிளம்பும்...


வேஷ்டில கரை பட்டுடுமோன்னு வசதியான இடம் இல்லன்னா உட்காராம கூட நின்னுகிட்டே இருப்பேன்... அதே வேஷ்டி சில நேரங்கள்ல போர்வையா கூட ஆகும்... என்னதான் சொல்லுங்க..வேஷ்டி வேஷ்டிதான்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக