புதன், 7 செப்டம்பர், 2016

எப்படி புரிய வைக்க??


ஒரு வீட்ல ஒரு குழந்தை செத்து போச்சு.... எல்லோரும் கூடி அழுது ஒப்பாடி வச்சு கதறினாங்க....

சத்தம் கேட்டு ஒரு பிறவி குருடர் அங்க வந்தார்... அவருக்கு காதும் அரைகுறையா தான் கேக்கும்.... என்னை மாதிரி கொஞ்சம் முட்டாள் ( உன்னை மாதிரின்னு சொன்ன... சரி... ஆனா கொஞ்சம னு சொல்றியே...... எப்படிப்பா..ன்னு நீங்க கேக்குறது நல்லாவே புரியுது.. கோபத்த கொஞ்சம் ஒதுக்கி வச்சுட்டு தொடர்ந்து படிங்க..)

அந்த பிறவி குருடருக்கும்- அங்க நின்னுகிட்டிருந்த இன்னொருத்தருக்கும் நடந்த உடையாடல கேப்போமா...

"என்ன ஆச்சு.. ஏன் நிறைய பேர் ஒரே நேரத்துல அழுவுறாங்க...?"

"குழந்தை செத்து போச்சுப்பா..."

"அய்யய்யோ... எப்படி.."

"பால் குடிக்கும்போது விக்கிகிச்சு.... செத்து போச்சு.."

"பாலா... அது என்னது...?"

"குழந்தைங்க பசிக்கு குடிக்கிறதுப்பா.. வெள்ளையா தண்ணி மாதிரி இருக்கும் "

"வெள்ளையாவா... வெள்ளைன்னா என்ன...."

"அட.. அது ஒரு கலருப்பா... கொக்கு இருக்கும்ல.. அந்த மாதிரி.."

"கொக்கா.. அது எப்படி இருக்கும்..."

நம்ம ஆள் கடுப்பாயிட்டார்.... தன்னோட கைய கொக்கு மாதிரி வளைச்சு காட்டி "இதோ இப்படி தான் இருக்கும்"ன்னு சொன்னார்...

அத தடவி பார்த்த அந்த குருடர் சொன்னார்.. "இத கொண்டு போய் குழந்தை வாயில கொடுத்தா விக்காம என்னய்யா பண்ணும்..."

# இப்படித்தாங்க நம்மல்ல சில பேர்... ஒரு விஷயத்த பத்தி அடிப்படை அறிவும் இருக்காது.. சொன்னாலும் புரிஞ்சுக்க மாட்டாங்க.... அதே நேரம் என்ன நடந்துதுன்னும் தெரியாது.. ஆனா கிளைமாக்ஸ் ல வந்து அவங்க என்ன நினைக்கிறாங்களோ அதை சொல்லி நம்மள கடுப்பேத்துவாங்க.... என்ன பண்றது.. எல்லாம் டிசைன் ல இருக்குன்னு போக வேண்டியது தான்...!!!

பூமிக்காதலன்...



ஒரு பெரிய பணக்காரர்.... நிறைய மக்கள் சுற்றுலா வர இடத்துல ஒரு நாலைஞ்சு விடுதி கட்டினார்... அதுல ஒரே ஒரு விடுதிய மட்டும் திறந்து, அங்க வரவங்கள இலவசமா தங்க வச்சார்... ஒரே ஒரு கண்டிஷன் தான் போட்டார்... "நீங்க வாடகை எதுவும் கொடுக்க வேண்டாம்... இந்த விடுதிய நான் இப்போ எப்படி உங்ககிட்ட ஒப்படைக்கிறேனோ... அதே மாதிரி வச்சுக்கணும்..."

நிறைய பேர் வருவாங்க... கொஞ்ச நாள் தங்குவாங்க... அப்புறம் போய்டுவாங்க... ஆனா வந்தவங்க யாருமே அவர் சொன்ன கண்டிஷன மதிக்கல... அங்க அங்க குப்பைய போடுவாங்க... செவத்துல கிறுக்கி வைப்பாங்க... டாய்லெட் போயிட்டு தண்ணி ஊத்த மாட்டாங்க... அழகுக்காக வச்சிருந்த பூச்செடிகள எல்லாம் உடைச்சு போடுவாங்க... அங்க இருந்த புல்வெளிகள், நீரூற்றுகள் எல்லாத்தையும் நாசம் பண்ணுவாங்க... அப்போ அப்போ அந்த பணக்காரர் வந்து சொல்லுவார்.. சமயத்துல கோபம் வரப்போ கரண்ட கட் பண்ணிடுவார்... இல்லன்னா பெட் எல்லாம் தண்ணி ஊத்தி விட்டுட்டு போய்டுவார்... ஆனாலும் அந்த இலவச சேவைய அவர் நிறுத்தல... கரென்ட் இல்லாத்தப்போவும், பெட்ல தண்ணி ஊத்தின அன்னிக்கும் மட்டும் ரொம்ப நல்லவங்க மாதிரி நடிப்பாங்க... மறுபடியும் கரென்ட் வந்துட்டாலோ, பெட்ல ஈரம் காய்ஞ்சுட்டாலோ வழக்கமான குசும்ப ஆரம்பிச்சிடுவாங்க....

இதுல இன்னும் கொஞ்ச பேர் பண்ணதுதான் பெரிய லொள்ளு... இலவசமா யூஸ் பண்ண கொடுக்காம மூடி வச்சிருந்த மத்த நாலு விடுதிகளையும் போய் ஜன்னல உடைச்சு உள்ள என்ன இருக்குன்னு பார்க்கிறது.... நாம அதுல போய் தங்கலாமான்னு பார்க்கிறது... அந்த அழுக்கான விடுதிய விட இந்த விடுதி சுத்தமா நல்லாதான இருக்கு.. இதையும் நமக்கு ஓசில கொடுத்தா என்னன்னு யோசிக்கிறது... இப்படி தான் இன்னிக்கு வரைக்கும் நடக்குது.. அந்த பணக்காரர் நிஜமாவே நல்லவர்ங்கிறதால பெரிசா ஒன்னும் பண்ணாம அப்போ அப்போ பெட்ல தண்ணி ஊத்துறது, கரெண்ட புடுங்கிட்டு அப்புறம் மறுபடியும் போனா போகுதுன்னு கனெக்ட் பண்ணி விடுறதுமா இருக்காரு...

ஆனா அவரும் மனுஷன் தான...?? அவருக்கும் கோபம் வரும்... என்னிக்கு மொத்தமா மூடிட்டு எல்லோரையும் தொறத்த போறாரோ தெரியல... பார்க்கலாம்...

# செவ்வாய் கிரக சுற்றுப்பாதையில் இந்தியாவின் மங்கள்யான் நிலை கொண்டது... செவ்வாயை சீண்டிய ரஷ்யா, அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் வரிசையில் நான்காவதாக இந்தியாவும் இணைந்தது...

ஒரு இந்தியனாய் மகிழ்ச்சியடைந்து விஞ்ஞானிகளை பாராட்டினாலும்... ஒரு பூமிக்காதலனாய் , அவளை சீரழிப்பதை தொடர்ந்துகொண்டே செவ்வாயை சீண்டும் செலவினம் தேவையா என்ற கேள்வியுடன்... - . செந்தில் கே நடேசன்..!!!

சுடிதார்- சல்வார்



ஏறக்குறைய அனைத்து இளம் பெண்கள் மற்றும் பெருவாரியான பேரிளம் பெண்களால் அணியப்படும் ஒரு ஆடையாகி விட்டது சுரிதார் மற்றும் சல்வார்...
சுரிதார் (இதனை சுடிதார் என்று சொல்வோரும் உண்டு.. ஆனால் சுரிதார் என்பதே சரி. இதற்கான பெயர்க் காரணம் பிறகு பார்க்கலாம்)

எல்லோராலும் அணியப்பட்டாலும் சுரிதார்- மற்றும் சல்வாருக்கிடையே என்ன வித்தியாசம் என்பது 70% பெண்களுக்கு தெரியாது என்பதே உண்மை... அவரவருக்கு அப்போது என்ன தோன்றுகிறதோ அதை சொல்வார்கள்.. அல்லது துணிக்கடையில் விற்பனையாளர் சொல்வதையே இவர்களும் சொல்வார்கள்...

இந்த சுரிதார் மற்றும் சல்வார் என்ற இரண்டு பெயர்களுமே குறிப்பது இடுப்புக்கு கீழ் அணியும் பேன்ட் போன்ற காலுறைகளை தான்...

முதலில் சல்வார் என்பதை பற்றி தெரிந்துகொள்வோம்...

இதன் மேற்பகுதி அகலமாகவும் சற்று லூசாகவும், கீழே செல்ல செல்ல குறுகலாகவும் இருக்கும்... அவரவர் உயரத்திற்கேற்ற சரியான அளவில் தைத்துக்கொள்ளலாம்... சல்வார் ஆண் - பெண் இருவருக்கும் பொதுவான உடை .. வட இந்திய ஆண்களால் சல்வார் அணியப்படுகிறது..

இப்போது சுரிதார் .... இது ஒரு இந்தி மொழியில் இருந்து வந்த வார்த்தை

இதுவும் பார்ப்பதற்கு சல்வார் போன்று இருந்தாலும் இது சற்று டைட் பிட்டிங் உடன் இருக்கும், பிருஷ்டம், தொடை, கெண்டைகால் பகுதிகளை சற்றே இறுக்கி பிடிப்பது போலவும் நீளம் சற்று அதிகமாகவும் இருக்கும்.. இந்த நீளம் அதிகமாக இருப்பதால் கணுக்கால் பகுதியில் சிறு சிறு மடிப்புகளுடன் காணப்படும்.. கால் மடக்கி உட்காரும்போது இந்த மடிப்புகள் நீண்டு வசதியாக அமர உதவும் ..இந்தி மொழியில் "சுரி" என்றால் வளையல்... "தார்" என்றால் .. மாதிரி... இந்த மடிப்புகள் வளையல்கள் போன்று இருக்கும்... இதனாலேயே இதற்கு சுரிதார் என்று பெயரிடப்பட்டது... இது பட்டு, பருத்தி, ஷிபான், ஜார்ஜெட்டி போன்ற துணிகளால் தைகப்படுகிறது.. (இதையே பின்னலாடையில் தைத்து அணிந்தால் அது லெக்கின்ஸ் என்று அறிக)

சுரிதார் மற்றும் சல்வாருக்கு மேலே அணியும் உடல் பகுதியை மூடும் பகுதிக்கு கமீஸ் என்று பெயர்.. சல்வார் மற்றும் சுரிதாருக்கு பெண்கள் கமீஸ் அணிவார்கள்.. ஆண்களுக்கான சல்வார் மேல் அணியும் உடல் பகுதி ஆடைக்கு குர்த்தா என்று பெயர்... கம்மீஸ் ஆண்களால் அணியப்படுவதிலை.. ஆனால் குர்த்தா பெண்களாலும் அணியப்படும்... இவைகள் பொதுவான அடையாளத்தில் "டாப்" என்று சொல்லப்படும்...

இந்த கம்மீஸ்-குர்தா பல்வேறு வடிவமைப்புகளாலும், ஜமிக்கி, மணி, எம்பிராய்டரி போன்ற வேலைகளாலும் அழகு படுத்தப்படுகிறது...

இதற்கு மேல் முன்பொரு காலத்தில் துப்பட்டா என்று சொல்ல கூடிய நீளமான ஒரு துணி அணியப்பட்டது.. அது தற்போது பெண் சுதந்திர போராளிகளால் தடை செய்யப்பட்டிருக்கிறது..

## ரொம்ப முக்கியமான ஒரு பதிவு போட்டிருக்கேன் மக்களே... பார்த்து செய்ங்க...

(இதுவரை இது பற்றி தெரியாமல் இருந்து இப்போது செந்தில் கே நடேசன் பதிவை படித்து அறிந்துகொண்ட இளம் பெண்கள் தங்களது நன்றியை இன்பாக்ஸில் பொழியவும்... குறிப்பு:- என்னுடைய இன்பாக்ஸ் , அண்ணன் என்ற அழைப்பு தடை செய்யப்பட பகுதி)

நிர்வாக சங்கிலி



நான் துபாய்ல வேலை செஞ்ச கம்பெனியோட (நீ வேலை செஞ்சியா.....???? அட நம்புங்க எசமான்... அப்போ எல்லாம் ராத்திரி எட்டு மணிக்கு மேலயும், லீவு நாள்லயும் தான் பேஸ்புக்ல வேலை) வேர்ஹவுஸ்ல ஒரு மெசனைன் ஃப்ளோர் பண்ணி இருந்தாங்க...

அதாவது வேர் ஹவுசோட அளவு 5000 சதுர அடி... உயரம் சுமார் அம்பது அடி இருக்கும்... தரைல இருந்து இருபது அடி உயரத்துக்கு இவங்க நடுவுல டெம்ப்ரவரியா ஒரு ஃ ப்ளோர் ரெடி பண்ணி அதையும் ஸ்டோரேஜ்க்கு பயன் படுத்தினாங்க... 5000 SQ FT வாடகைக்கு எடுத்து , 4000 SQ FT எக்ஸ்ட்ராவா ரெடி பண்ணி ஸ்டோரேஜ் பண்ணினாங்க... ( இப்போ புரிஞ்சுருக்குமே... கரெக்ட்... கம்பெனி ஓனர் இந்தியனே தான் )

ஒரு நாள் துபாய் முனிசிபாலிட்டில இருந்து ஒரு இன்ஸ்பெக்டர் வந்தார்... யாரையும் எதுவும் கேக்கல...நாலைஞ்சு போட்டோ எடுத்துகிட்டு போய்ட்டார்... ஓனர் வந்ததும் நான் தான் சொன்னேன்.. "இது மாதிரி இன்னாரு வந்தாங்க... போட்டோ எடுத்தாங்க.. போய்ட்டாங்க... "ன்னு...

"ஏதாவது சொன்னாரா அந்த ஆள்"ன்னு கேட்டார்...

"ஒன்னும் சொல்ல"ன்னு நான் சொன்னேன்..

ஒரு வாரம் அப்புறம் துபாய் முனிசிபாலிட்டில இருந்து ஒரு நோட்டீஸ் வந்துது...அதாகப்பட்டது..."நீங்க இப்படி இப்படி டெம்ப்ரவரி வேலை பண்ணி இருக்கீங்க.. அதுக்கு முனிசிபாலிட்டி அப்ரூவல் இல்ல... அதனால அதுக்கு அப்ரூவல் வாங்குங்க.."ன்னு...

அந்த லெட்டரை கொண்டு போய் நான் ஓனர்கிட்ட கொடுத்தேன்.. அவரும் அத வாங்கி தூக்கி போட்டுட்டார்... அப்புறம் அடுத்த வாரம் ஒரு ரிமைண்டர் நோட்டிஸ் வந்துது.. அதையும் தூக்கி போட்டாச்சு... ஒரு நாள் திடீர்னு கரெண்டு நின்னு போச்சு... துபாய் ல கரென்ட் கட்டா.... என்னடா இதுன்னு போய் பார்த்தா.. அங்க DEWA (Dubai Electricity & Water Authority) ஊழியர் ஒருத்தர் நம்ம கம்பெனிக்கு வர லயனோட பீச புடுங்கிட்டு நிக்கிறார்.... அவர என்ன சங்கதின்னு கேட்டா எனக்கு தெரியாது.. ஆபீஸ்ல சொன்னாங்க.. நான் புடுங்கிட்டேன்னார்... அவர் பீச புடுங்கினதுக்கு மொத நாளு நம்ம கம்பெனிக்கு DEWA இருந்து ஒரு நோட்டிஸ் வந்திருக்கு.. அன்னிக்கு யாரும் போஸ்ட் பாக்ஸ் செக் பண்ணாததால அந்த நோட்டீஸ் விஷயம் தெரியல... அப்புறம் அத பிரிச்சு படிச்சா "இந்த மாதிரி நீங்க முனிசிபாலிட்டில அப்ரூவல் வாங்காம என்னமோ பண்ணி இருக்கீங்க.. முனிசிபாலிட்டில இருந்து எங்களுக்கு கம்ப்ளைன்ட் வந்திருக்கு.. முனிசிபாலிட்டில இருந்து "அவங்க பிரச்சினை முடிஞ்சுது.. அவங்களுக்கு கரெண்டு கொடுங்க"ன்னு சொன்னா தவிர உங்களுக்கு கரண்டு தர மாட்டோம் " ன்னு...

ஆஹா... இப்போதான் நம்ம ஒன்றுக்கு நிலைமையோட தீவிரம் புரிய ஆரம்பிச்சுது... என்னை துரத்தினார்.. ஓடு.. ஓடு.. என்னன்னு பாருன்னு..... நேரா DEWA ஆபீஸ்க்கு ஓடினேன்... ரம்ஜான் நேரம் அது.... அந்த அதிகாரி "ஒரு மாசம் கிரேஸ் பீரியட்" தரோம்.. அதுக்குள்ளே வேலை முடிச்சுட்டு முனிசிபாலிட்டி அப்ரூவலோட வாங்க.. அதுக்கு முன்னாடி இப்போ கனெக்ட் பண்றதுக்கு 10000 திராம்ஸ் செக்யூரிட்டி டெபாசிட் கட்டுங்க ன்னு சொன்னார்.. அத கட்டி கரென்ட் கனெக்ஷன வாங்கிட்டு அப்புறம் பழைய நோட்டீஸ தூக்கிகிட்டு முனிசிபாலிட்டிக்கு ஓடினோம்.. அவங்க தெளிவா சொல்லிட்டாங்க... "எங்ககிட்ட அப்ரூவல் வாங்காம நீங்க இந்த வேலைய பண்ணி இருக்கீங்க.. எங்க அப்ரூவல் டிபார்ட்மென்ட்ல இருந்து அப்ரூவல் லெட்டர் வாங்கிட்டு வாங்க"ன்னு சொல்லிட்டாங்க... அது வேற இடம்... அங்க ஓடினா.. "மொதல்ல நீ பண்ணின எக்ஸ்ட்ரா வேலையோட டிராயிங் எடுத்துட்டு வா"ன்னாங்க.... ஏற்கெனவே எசெஞ்ச வேலைக்கு இப்போதான் டிராயிங் ரெடி பண்ணனும்.. அதுக்கு ஒரு தனியார் கம்பெனிய புடிச்சா... அவன் ஒரு டிராயிங் ரெடி பண்ணி கொடுத்தான்.... அத எடுத்துகிட்டு மறுபடியும் முனிசிபாலிட்டி அப்ரூவல் டிபார்ட்மென்ட் க்கு போனோம்... முதல்ல இத CIVIL DEFENSE ல ( உள்நாட்டு பாதுகாப்பு- தீயணைப்புத்துறை) காட்டி அப்ரூவல் வாங்கிட்டு வான்னு சொன்னாங்க....

நேரா அங்க ஓடினோம்... "இதுக்கு அப்ரூவல் கொடுக்கணும்னா Fire Alarm , Smoke detector, sprinkler எல்லாம் வச்சு அத யார் வச்சு கொடுத்தாங்களோ அவங்க கிட்ட இருந்து ஒரு செர்டிபிகேட் வாங்கிட்டு வா" ன்னு சொன்னாங்க ...

ஷ்.... ஷப்பா.... ஒரு அம்பது வரி சேந்தாப்ல படிக்கவே கண்ண கட்டுதே.... இதை எல்லாம் நிஜமா செஞ்சவனுக்கு எப்படி இருக்கும்... எனக்கு அப்படி தான் இருந்துச்சு.. ஏன்னா மேல சொன்ன எல்லா இடத்துக்கும் போனவன் நான் தான்... அப்புறம் ஒரு பயர் பைட்டிங் எக்யூப்மென்ட் கம்பெனிய புடிச்சு அந்த வேலைய முடிச்சு, அப்புறம் மறுபடியும் civil defense , municipality, அப்புறம் DEWA ன்னு ஆன்டி கிளாக்வைஸ் ல அப்ரூவல் வாங்கி கரென்ட் கொண்டு வரும்போது அபராதம் சேர்த்து ஆன செலவு ஒருலட்சத்து அம்பதாயிரம் திராம்ஸ்...

இதே நம்மூர்ல நடந்திருந்தா என்ன ஆயிருக்கும்??? விசிடிங் வந்த இன்ஸ்பெக்டர் அவங்க டிபர்ட்மென்டக்கே சொல்லாமையோ, இல்ல மேலதிகாரிகளின் துணையுடனேயோ ஒரு அமவுண்ட வாங்கிகிட்டு யாருக்கும் சொல்லாம வீட்டுக்கு போய் இருப்பர்....

சரிடா.... காலைல துபாய் கவர்ன்மென்ட் தையும் தும்மலையும் லிங்க் பண்ண போறதா சொன்னியே.... இதுக்கும் தும்மலுக்கும் என்ன சம்பந்தம்...???

நம்ம மூச்சுக்குழல்ல அனுமதி இல்லாம ஏதாவது தூசு தும்பு புகுந்திடும்... அந்த மாதிரி நேரத்துல மூச்சுக்குழல் உடனே கம்ப்ளைன்ட் அனுப்பும் மூளைக்கு.... மூளை உடனே இதயம், நுரையீரல், கணையம், கிட்னின்னு உடம்புல இருக்க எல்லா டிபர்ட்மென்ட் க்கும் நோட்டீஸ் அனுப்பும் உடனே அந்த தூசுக்கு எதிரா எல்லா உறுப்புகளும் வேலை நிறுத்தம் செய்யும்... இது எல்லாம் மாசக்கணக்குல நடக்குறது இல்ல.... எல்லாமே மைக்ரோ செகன்ட் டைம்ல நடக்குறது... அடுத்து ஒரு தும்மல் வரும்.. அந்த அனுமதி இல்லாம உள்ள புகுந்த தூசிய வெளில அனுப்பிட்டு தான் மத்த வேலை... அப்படி தும்மும் ஆக்சன் நடக்கும் போது உடம்புல எந்த உறுப்பும் வேலை பண்ணாது.. கண்ணு கூட முடிக்கும்...அனுமதி இல்லாம நம்ம உடம்புல புகுந்தத வெளியேத்த நம்ம உடம்பு காட்டுற ஆர்வம் தான் துபாய் கவர்ன்மென்ட் மக்கள் நலனில் காட்டும் ஆர்வமும்...

நம்மூர் எப்ப சார் அப்படி ஆவும்?????

ஒரு யுத்தத்தின் பின் விளைவு



மிக கோரமான ஒரு யுத்தத்தின் முடிவில் , அந்த போரில் பங்கு கொண்ட ஒரு போர்வீரன் தன்னுடைய சொந்த தேசத்திற்கு திரும்புகிறான்...

ஐயோ... என்னுடைய தேசமா இது.. என்னுடைய ஊரா இது.... எப்படி இருந்த ஊர் இப்படி சீரழிந்து கிடக்கிறதே.. இங்கே சாலையின் நடுவில் அழகாய் இருந்த நீரூற்றுகள் எங்கே....
சாலையோரங்களில் தழைத்திருந்த பூச்செடிகளும் மரங்களும் எங்கே... பூங்காக்களில் விளையாடித்திரிந்த சிறுவர் சிறுமிகள் எங்கே... என பதைத்தபடியே நடந்துகொண்டிருந்தான்....

அவன் இருந்த தெருவிற்குள் நுழைந்தான்... அந்த தெருவின் வீடுகளில் விளக்குகளை ஏந்தியபடியே நின்ற பெண்கள் இவனை கண்டதும்.. "இன்றிரவு என் வீட்டில் தங்கி விட்டு செல்லலாமே" என்று அழைத்தார்கள்... ஆம்.. அவர்களின் வருமானமற்ற வயிற்று தேவை அவர்களை விபச்சாரத்தில் தள்ளி இருந்தது...

ஐயோ.... என்னுடன் பணி புரிந்து போரில் இறந்து போனவர்களின் மனைவிகள் அல்லவா இவர்கள்... என்று பதைத்தபடியே "இல்லை அம்மா.. எனக்காக அங்கே என்னவள் காத்திருக்கிறாள் " என்று சொல்லியபடி நடந்தான்...

கண்ணீர் வழிய வழிய நடந்த அவன் அந்த ஒரு வினாடியில் உடைந்து சுக்குநூறாகிப்போனான்.... ஆம்.. அவன் வீட்டு வாசலிலும் விளக்குடன் ஒரு பெண் நின்றுகொண்டிருந்தாள்...

# கனத்த மனதுடன் இந்த கதையின் முடிவில் சொல்லும் நீதி... போர்... அது எல்லாவற்றையும் இழக்க வைக்கும்...

புதியதோர் உலகம் செய்வோம்,..
கெட்ட போரிடும் உலகை வேரொடு சாய்ப்போம்...!!!

நாகரீக உணவுப்பழக்கம்



காலைல என்ன சாப்டீங்க....?

"கார்ன் பிளேக்ஸ் சாப்பிட்டேன்.."

இப்படி சொல்வதை நாகரீகம் என்று நம்பிய கூட்டம் கொடுத்த உற்சாகத்தில் அதனை தயாரிக்கும் நிறுவனம் இலக்கு நிர்ணயித்திருக்கிறது... இன்னும் ஆண்டுகளில் எல்லா மக்களையும் காலை உணவுக்கு எங்கள் தயாரிப்புகளை சாப்பிட வைப்போம் என்று...

இந்த இலக்கை நோக்கிய வளர்ச்சி.. 23 %... இதை பற்றி சொன்னால் அது சோளத்தில் தானே தயாராகிறது.... சோளம் நல்லது தானே... மருத்துவர்கள் அதில் நார்ச்சத்து இருக்கிறது.. வைட்டமின்கள் இருக்கிறது... புரதம் இருக்கிறது என்றெல்லாம் சொல்கிறார்களே... என்றெல்லாம் கேட்பார்கள்...
முதலில் அந்த விளம்பரங்களில் நடிப்பவர்கள் எல்லோரும் டாக்டர்களே இல்லை என்ற அடிப்படை உண்மையை தெரிந்துகொள்ள வேண்டும்... அப்படி நடிக்கும் டாக்டர்களும் காசுக்காக கொலை செய்ய கூடிய நல்ல மனம் படைத்தவர்கள்

இந்த கார்ன் ப்ளெக்ஸ் (சோள அவல் ) எப்படி தயாராகிறது தெரியுமா???

சோளத்தை 80° -120° வெப்ப நிலையில் வேக வைத்து, அதன் பிறகு சுமார் 16 டன் எடை உள்ள ஒரு கருவியால் அடித்து நசுக்கி அவலாக்கி மறுபடி 220° வெப்பத்தில் அதன் ஈரத்தை உலர்த்தி கிடைக்கும் சக்கையில் செயற்கை ரசாயனங்கள் மூலம் வைட்டமின்கள், மினரல்களை சேர்த்து, அது கேட்டுஒப்பாய் விடாமல் இருக்க சில ரசாயனங்கள் சேர்த்து, அதன் பிறகு மணம் மிக்கதாய் ஆக்க சில ரசாயனங்களையும் சேர்த்து....

இப்படி ரசாயனகளை சேர்த்து சேர்த்து சேர்த்து.. கடைசியில் அதனை அழகான கண் கவர் பாக்கெட்டில் அடைத்து , விளம்பரம் செய்து அதனை நம் தலையில் கட்டுவார்கள்...

நாமும் நம் தாத்தா- பாட்டி தலை முறை தலை முறையாய் கம்பு, சோளம், கேழ்வரகு என்று தானியங்களை பயிர் செய்து வந்த விவசாய நிலங்களை பிளாட் போட்டு விற்று விட்டு அந்த பாக்கெட் விஷத்தை சாப்பிட்டு விட்டு "நான் கார்ன் ப்ளெக்ஸ் சாப்பிட்டேன்.." என்று பெருமைப்படுகிறோம்...

நம்ம புத்திய எதால அடிக்கலாம்???

கணக்கு.



மில்லியன் கணக்கில் ட்ரான்சாக்ஷன் செய்ய கூடிய ஒரு தொழிலதிபர் ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் போய் , தனக்கு உடனடியாக 50000 டாலர் கடன் தேவைப்படுவதாகவும், அதற்கு ஈடாக தன்னுடைய பென்ஸ் காரை வைத்துக்கொள்ளும் படியும், தாம் அந்த பணத்தை வட்டியுடன் திருப்பி கட்டிவிட்டு தன்னுடைய காரை மீட்டுக்கொள்வதாகவும் சொன்னார்...

பென்ஸ் காரின் டாக்குமென்ட் எல்லாம் மிக சரியாகவே இருந்தது.. அந்த தனியார் நிதி நிறுவனமும் அந்த தொழிலதிபரின் காரை வைத்துக்கொண்டு டாலர்களை கடனாக கொடுத்தது.. வட்டி 1% என்ற விகிதத்தில்...

ஒரு மாதம் கழித்து வந்த அந்த தொழிலதிபர் வட்டித்தொகை 5௦௦ டாலர் மற்றும் அசல் 50000 சேர்த்து கட்டினார்... அப்போது அங்கிருந்த அந்த நிதி நிறுவன அதிகாரி...
"சார்... உங்களது கார் டாக்குமென்ட்களை வைத்து விசாரித்த பொழுது நீங்கள் மிகப்பெரிய தொழிலதிபர் என்றும் மில்லியன் கணக்கில் வங்கிகளில் பண பரிமாற்றம் செய்பவர் என்றும் அறிந்தோம்,... நீங்கள் கேட்டால் வட்டியே இல்லாமல் கடன் கொடுக்க அந்த வங்கிகள் தயாராக இருப்பதாகவும் அறிந்தோம்.. பிறகு ஏன் நீங்கள் எங்கள் நிறுவனத்தில் வெறும் 50000 டாலருக்கு தங்களின் விலை உயர்ந்த பென்ஸ் காரை அடமானமாக கொடுத்தீர்கள்..."

அப்போது அந்த தொழிலதிபர் சொன்னார்... இப்படியான கணக்குகளின் மூலமே என்னால் பெரிய தொழிலதிபராக வளர முடிந்தது.. எனக்கு 30 நாட்கள் வெளியூர் செல்ல வேண்டி இருந்தது... என்னுடைய காரை பார்க்கிங் ஏரியாவில் விட்டு சென்றால் ஒரு நாளைக்கு 30 டாலர் வீதம் 900 டாலர் கொடுக்க வேண்டும்.. அதோடு பப்ளிக் பார்க்கிங்கில் என்னுடைய காருக்கு பாதுகாப்பும் குறைவு... இப்போது உங்களிடம் வாங்கிய 50000 டாலருக்கு வட்டியாக நான் வெறும் 500 டாலர் மட்டுமே கொடுத்து இருக்கிறேன்.. எனக்கு 400 டாலர் மிச்சம்... அதோடு என்னுடைய காரையும் மிகவும் பாதுகாப்பாக பார்த்துக்கொண்டீர்கள்..."

## நாம எப்போ பணக்காரன் ஆவுறது???

நம்பிக்கை.... அதானே எல்லாம்...!!!



லண்டன்ல இருக்க கேம்பிரிட்ஜ் யுனிவெர்சிடி ல நேரு படிச்சுகிட்டிருந்தாராம்... வெளிநாட்டுல படிக்கிற பையனுக்கு செலவுக்கு பணம் அனுப்புவாராம் அவங்க அப்பா மோதிலால்...

என்னடா.. நாமளும் பணம் அனுப்பிகிட்டே இருக்கோம்... இந்த பய ஒன்னும் கணக்கு சொல்லவே மாட்டேன்றான்.... பய ஒழுங்கா படிக்கிறானா.. இல்ல ஊர் சுத்திகிட்டு வீணா செலவு பண்ணிக்கிட்டு திரியுரானான்னு ஒரு டவுட்டு வந்துச்சு மோதிலாலுக்கு...

ஒடனே ஒரு லெட்டர் எழுதினாராம்... "ஏம்பா... நானும் நீ கேக்க கேக்க பணம் அனுப்புறேன்.. ஒழுங்கா படிப்புக்கு செலவு பண்றியா... இல்ல.. எங்கயாச்சும் ஊர் சுத்துரியா.... ஒரு கணக்கும் சொல்ல மாட்டேன்ற...." அப்படின்னு...

ஒடனே நேரு .... "ஏம்பா..... உங்களுக்கு நம்ம புள்ள கண்டிப்பா கெட்டவழில செலவு பண்ணமாட்டான்னு எம்மேல நம்பிக்கை இருந்தா என்கிட்டே கணக்கு கேக்க மாட்டீங்க.... அப்படி எம்மேல நம்பிக்கை இல்லன்னா.... நான் என்ன கணக்கு சொன்னாலும் "இந்த பய பொய்கணக்கு சொல்றான்னுதான் நினைப்பீங்க... அப்புறம் எதுக்கு நான் செலவு கணக்கு சொல்லணும்??? " அப்படின்னு பதில் எழுதினாராம்....

நீங்க உங்க புள்ளைகிட்ட கணக்கு கேப்பீங்களா...?? கேக்க மாட்டீங்களா??

சமூக மாற்றம்





பூனை கண்ண மூடிகிட்டா பூலோகம் இருண்டு போச்சுன்னு நினைச்சுக்குமாம்....

இந்தியாவுல இருக்க நூத்து நுப்பது கோடி பேர்ல... சரி விடுங்க... தமிழ்நாட்டுல இருக்க எட்டுகோடி பேர்ல மிஞ்சிப்போனா அம்பது லட்சம் பேர் தான் ரெகுலரா பேஸ்புக் யூஸ் பண்ணுவாங்க... (குத்து மதிப்பா ஒரு கணக்குதான்... ) அதுலயும் இருபத்து நாலு மணி நேரமும் பேஸ்புக்கே கதின்னு கிடக்குறது.. நானும்.. இதோ... இத படிக்கிற நீங்களும் தான்...

நம்மள மாதிரி வெட்டி முண்டங்க (  ) என்ன ஒரு லட்சம் பேர் இருப்போமா??? இதுக்கு போய்.. இங்க ஸ்டேடஸ் போடுறவங்க எல்லாம் என்னமோ நாமதான் தமிழ்நாட்டோட அன்றாட நடவடிக்கைகள மாற்றி அமைக்கிறது மாதிரி பேசிகிட்டு கெடக்கோம்....

அட போங்கப்பா... நீங்களும் நானும் தமிழ்நாட்டோட அசைவுல ஒரு துரும்பை கூட நகர்த்தல... வயக்காட்டுல வேலை செய்ற விவசாயி, தொழிற் கூடங்கள்ள வேலை செய்யுற தொழிலாளி... சந்தைல வியாபாரம் பண்ற வியாபாரி... கடல்ல மீன் புடிக்கிற மீனவர்...இவங்கள மாதிரி ஆளுங்கதான் நாட்டோட நகர்வ தீர்மானிக்கிறவங்க...

இதுல பெரிய நகைச்சுவை என்னன்னா.... "நாம தமிழன்.. நம்ம தமிழ்தான் உலகத்துலேயே சிறந்த மொழி"ன்னு நம்மகிட்டே தமிழ் வியாபாரம் பண்ணி ஆட்சிக்கு வந்த கும்பல பார்த்து பார்த்து நாம கெட்டுப்போயிட்டோம்... வெட்டியா பேஸ்புக் ல பொழுத போக்கிட்டு "நாம தான் நாட்டோட நகர்வ தீர்மானிக்கிறோம்"னு பேஸ்புக் லையே ஸ்டேடஸ் போட்டு லைக் வாங்குறது... "என் தமிழ்தான் சிறந்த மொழி"ன்னு போய் ஒரு மலையாளிகிட்ட, தெலுங்கன் கிட்ட, ஒரு கன்னடன் கிட்ட, ஒரு இந்தி காரன் கிட்ட, ஒரு இங்கிலீஷ், பார்சி, அரபிக்காரன்கிட்ட சொல்லணும்.. அத விட்டுட்டு தமிழன்கிட்டயே வந்து "என் தமிழ்தான் உயர்ந்தது.. "அப்படின்னு அவன உசுப்பி விட்டு ஓட்டு வாங்கின மாதிரி.........

"பேஸ்புக் ல எழுதுற எங்கள மாதிரி ஆளுங்கதான் நாட்டோட அடுத்த கட்ட நகர்வ தீர்மானிக்கிறோம்"ன்னு வயக்காட்டுல வேலை செய்றவன்கிட்ட, கொல்லு பட்டறைல இரும்படிக்கிறவன், கடல்ல மீன் புடிக்கிறவன்கிட்ட எல்லாம் சொல்லணும்.. அதுதான் தில்லு... அத விட்டுட்டு. "நாமதான் அத கிழிக்க போறோம்.. நாமதான் இத கிழிச்சோம்"ன்னு பேஸ்புக் லையே ஸ்டேடஸ் போட்டுகிட்டிருந்தா என்ன அர்த்தம்???

(வேற மொழிக்காரன்கிட்ட போய் என் தமிழ் தான் உயர்ந்ததுன்னு சொல்றதும், நிஜமாவே உழைக்கிறவன் கிட்ட போய் நாங்கதான்(பேஸ்புக் யூசர்ஸ்) இந்த நாட்டோட தலை எழுத்த மாத்தப்போறவங்கன்னு சொல்றதும் ஒரே மாதிரி தான்... # மூஞ்சி மேலேயே குத்துவாங்க )

பகுத்தறிவு

பகுத்தறிவு என்பது மனிதனை விட மற்றவைகளுக்குத்தான் தான் அதிகம் என்பதை யாரும் சிந்திப்பதே இல்லை... ஒரு காகமோ, குருவியோ, எறும்போ.. தனக்கு தேவை இல்லாதவற்றை எக்காரணம் கொண்டும் சேர்த்து வைப்பதில்லை... ஒரு எறும்புக்கு அரிசிதான் உணவு என்றால் அது அரிசியை மட்டும் தான் எடுக்கும்.. அரிசி போலவே உருவ ஒற்றுமையுடன் தங்கம், வைரம் போன்ற விலை உயர்ந்த உலோகங்களிலோ, கல், களிமண் போன்ற பொருட்களிலோ செய்து அதனை அரிசியுடன் கலந்து வைத்தாலும் அது அரிசியை மட்டும் "பகுத்தறிந்து" எடுத்துச்செல்லும்.. பிறகெப்படி சொல்ல முடியும் அதற்கு பகுத்தறிவு இல்லை என்று??

எறும்புகள் தங்கள் மொழியில் பேசிக்கொண்டிருந்தன... மனிதன் பகுத்தறிவற்றவன் என்று.. எறும்புகள் மட்டுமல்... நாய் பூனை.. கோழி.. கொக்கு என எல்லா ஜீவராசிகளுமே இப்படி தான் தங்கள் மொழியில் பேசிக்கொண்டிருக்கும்.. மனிதன் பகுத்தறிவில்லாதவன்... அவனுக்கு தேவை இல்லாதவற்றை சேர்த்து வைத்துக்கொண்டு, பிறகு அதை காப்பதற்காகவும் , கவர்வதற்காகவும் போட்டி போட்டு வெட்டிக்கொண்டு சாகிறான்... நமக்கெல்லாம் ஏழு அறிவு.. எட்டு அறிவு இருக்கிறது.. ஆனால் மனிதனுக்கு ஆறு அறிவுதான் இருக்கிறது... அவனை பொறுத்தவரை ஆறாவது அறிவுதான் பகுத்தறிவாம்...



ஆனால் நம்மை பொறுத்தவரை தேவை இல்லாதவற்றை சேர்த்துவைத்து பின் அதனை காக்க போராடட வேண்டாம் என்ற ஏழாவது அறிவும்.. நாளைய நமது உணவை நிச்சயமாய் சம்பாதிக்க முடியும் என்ற நம்பிக்கையும்(எட்டாவது அறிவு) உண்டு...

அவைகள் பேசிக்கொள்வதிலும் ஏதோ ஒரு உண்மை இருப்பது போலத்தான் தெரிகிறது..!!!