சனி, 20 ஜூன், 2015

நம்மை சுட்டும் விரல்கள்...

ஒரு உயரிய நோக்கத்திற்காக கொஞ்சம் கொஞ்சமாய் உயிரை மாய்த்துக்கொண்டிருக்கும் திரு. சசி பெருமாள் அவர்களை ஊடகங்கள் புறக்கணித்ததை விட கேவலம் மக்கள் கண்டுகொள்ளாதது... ஏனென்றால் ஊடகங்கள் எதை செய்தாலும் லாப நோக்கின்றி செய்வதில்லை... ஆனால் மக்கள்...??



எங்களுக்கு இலவசங்கள் வேண்டாம்.. மதுக்கடைகளை மூடுங்கள் என்று ஒரு சாரர் சொல்வதாக செய்திகள் வந்தாலும் அவர்கள் எந்த அளவு அதை மனதிலிருந்து சொல்கிறார்கள்.?? எத்தனை பேர் அவர்கள் இதுவரை வாங்கிய இலவச பொருட்களை அரசின் முகத்தில் வீசி எறிந்து போராட தயாராயிருகிரார்கள்..??
தமிழ்நாட்டில் சுமார் ஒரு கோடி பேர் குடிபழக்கத்திற்கு ஆளாகி இருக்கிறார்கள் .. இந்த மூலம் அரசுக்கு கிடைக்கும் வருவாய் சற்றேறக்குறைய இருபத்து ஒன்பதாயிரம் கோடி என்றும் சில புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன..


ஒரு குடிகாரர் ஒரு கால் போத்தல் மதுவை ரூபாய் என்பது(80.00 ) என்ற விலையில் தினசரி வாங்கும் போது அவரின் ஒரு ஆண்டு கொள்முதல் தொகை ரூ.29200.00. ஒருகோடி பேர் என்றால் ரூ.292000000000.00 ஆனால் இலவசங்கள் என்ற பெயரில் அரசு கொடுக்கும் பொருட்களின் மதிப்பு பதினாறாயிரம் ரூபாய் தானாம்...
இதற்கு அரசை மட்டும் எந்த விதத்திலும் குற்றம் சாட்டி விரல் நீட்ட முடியாது.. ஏனென்றால் அரசை நோக்கி ஒரு விரல் நீட்டும் போது மூன்று விரல்கள் நம்மை நோக்கி நீட்டுவதை தவிர்க்க முடியாது...

ஒரு அரசு என்பது மக்களின் வரிப்பணத்தில், பொது துறை நிறுவனங்கள் மூலமாக மக்களிடமிருந்து பெரும் வருமானத்தில் இயங்குவது தான்... பெருகி வரும் உற்பத்தி செலவு, நிர்வாக செலவு, உலக பொருளாதார காரணிகளால் ஏற்படும் பன்னாட்டு சந்தை பொருட்களின் கணிசமான விலையேற்றம் ஆகிவற்றால் அரசு தள்ளாடாமல் நடக்க வேண்டுமென்றால் அந்த அரசுக்கு போதிய வருமானம் அவசியம்...



இன்றைய நிலவரத்தில் நிர்வாகத்தை நடத்தவே சிரமப்பட்டு, பொது துறை நிறுவனகள் நஷ்டத்தில் இயங்கும் நிலையில் இலவசங்கள் எப்படி சாத்தியம்..
(நிர்வாகத்தில் ஊழல் என்ற பகுதிக்குள் செல்ல நாம் விரும்பவில்லை )
ஒரு நிர்வாகத்தை தள்ளாடாமல் நடத்த எந்த ஆட்சியாளரும் தன்னுடைய பாக்கெட்டிலிருந்து செலவழிக்க மாட்டார்... நிர்வாகம் நடத்தவே பாக்கெட்டில் இருந்து செலவழிக்காத ஆட்சியாளர்கள் இலவசங்களை கொடுக்க எப்படி பாக்கெட்டிலிருந்து எடுப்பார்கள்..??
கடை தேங்காயை கூட இல்லை.. நமது தலையை தடவி நமது வீட்டு சொத்தை, நமது உழைப்பை சுரண்டி நமக்கு இலவசமாக கொடுக்கிறோம் என்று ஒருவர் சொன்னதும் பல்லை இளித்துக்கொண்டு அவரை ஆட்சியில் அமரவைத்து அழகு பார்த்தவர்கள் நாம்... அதன் தொடர்ச்சியாகவே அடுத்த தேர்தல் காலங்களில் அரசியல் வாதிகள் அதையே நடைமுறையாக்கி விட்டனர்...


இப்படி இலவசமாக கொடுக்க வேண்டாம்... நிர்வாகத்தை ஒழுங்காக நடத்த என்ன செய்ய போகிறீர்கள் என்று கூட கேட்கவில்லை... நிர்வாக சிக்கல்களுக்காக, அரசின் வருமானத்தை உயர்த்தும் நோக்கில் புதிய வரிகளோ- கட்டண உயர்வுகளோ செய்தால்.... எதையாவது செய்து மக்களின் மனதில் இருந்தால் தான் அடுத்த ஆட்சி கட்டிலில் நமக்கும் இடம் கிடைக்கும் என்ற நோக்கில் உசுப்பி விடும் எதிர் மற்றும் எதிரி கட்சிகளின் தூண்டுதலில் போராட போய் விடுவோம் நாம்...


புதிய வரிகளோ- கட்டண உயர்வோ கூடாது... இலவசங்களை அள்ளி தர வேண்டும்... இதுதான் நம் நோக்கம். 
நமக்கு எப்படியாவது வருமானம் வேண்டும்.. ஆட்சி அதிகாரம் வேண்டும் என்று நினைக்கும் அரசியல் வாதிகள் இதற்காக கண்டு பிடித்த அட்சய பாத்திரம் தான் மது கடைகள்... 
இந்த மதுக்கடைகளை மூட சொல்லும் நாம் இலவசங்களை மறுப்பதற்கும்... விலையேற்றம், புதிய வரிகள் ஆகியவற்றை ஏற்க தயாராகவும் இருக்கும் பட்சத்தில் மதுக்கடைகளை மூட சொல்லி அரசை வற்புறுத்த உரிமை இருக்கிறது..


அப்படி இல்லை என்றால்...
தமிழ்நாட்டின் 7 கோடி மக்கள் தொகையில் 3 கோடி பேர் குழந்தைகள். அவர்கள் மட்டும் போனால் போகட்டும்.. மீதமிருக்கும் நான்கு கோடி பேர்களும் குடிக்க வேண்டும் என்ற இலக்கு வைத்து.. அப்படி குடிக்க வைக்க பெண்களுக்கான தனி மதுக்கடைகள்..., குடும்பத்தோடு குடிப்பதற்கான தனி மதுக்கடைகள் போன்ற புரட்சி திட்டங்களை ஏற்படுத்தி விற்பனை இலக்கை 29 ஆயிரம் கோடியிலிருந்து 1 லட்சத்து 10 ஆயிரம் கோடி என்று உயர்த்தவும்  அரசு தயங்காது..


நம் இன்றைய இதே மனநிலையில் இலவசங்களுக்காக ஏங்கி தவித்தால் அரசுக்கு இதை தவிர வேறு வழி இல்லை... ஏனென்றால் தொலைக்காட்சி பெட்டி, எரிவாயு அடுப்பு, அரவை இயந்திரங்கள் , மின் விசிறி.. இவைகள் தான் கிடைத்திருக்கிறது நமக்கெல்லாம்...
இன்னும் ஹோம் தியேட்டர், செல்ஃபோன் , வாட்டர் ஹீட்டர், ஹேர் ட்ரையர் என்று சந்தையில் நிறைய இருக்கிறது...அவைகளையும் அரசு தானே இலவசமாக கொடுக்க வேண்டும்..??


(புகைப்படங்கள் : இணையத்திலிருந்து )

பிள்ளையார் பிடிக்க போய் குரங்காகிபோன 100 நாள் வேலை

மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் மத்திய அரசு கிராம பகுதிகளில் இருக்கும் வயது வந்தோருக்கு ஒரு வருடத்திற்கு 100 நாட்கள் வேலை கொடுத்து அந்த வேலைக்கு கூலியாக தினசரி ரூபாய் 120.00 வழங்குவதும் எல்லோரும் அறிந்த விஷயம்...




இந்த நூறு நாள் வேலை திட்டம் வந்த பிறகு பெரும்பாலான கிராமங்களில் விவசாய தொழில் மற்றும் இன்ன பிற சார்பு தொழிலில் ஈடுபட்ட ஆண்களும் பெண்களும் வயது வித்தியாசமின்றி இந்த 100 நாள் வேலைவாய்ப்பை பெற்று வருகிறார்கள்...
இது ஒரு பாராட்டப்பட வேண்டிய திட்டம்.. அதில் மாற்றுக்கருத்து இல்லை..

ஆனால் இந்த திட்டத்தின் கீழ் வேலை வாய்ப்பு பெறுவோர் நியாயமாக தங்கள் பெரும் கூலிக்கு வேலை செய்கிறார்களா. என்றால் பதில் சொல்ல சற்று யோசிக்கத்தான் வேண்டி இருக்கிறது... 
இவர்களுக்கான பணி இடங்களாக கிராம சாலை வடிநீர் வாய்க்கால்கள்... குளம் குட்டைகள்தான்... இந்த மண் சாலைகள் செப்பனிடும் பணி .. வாய்க்கால் தூர் வாரும் பணி .. குளம் குட்டைகளின் கரைகளை செப்பனிடும் பணி மற்றும் அவற்றின் உட்பகுதியில் சுத்தப்படுத்தும் பணி ஆகியவையே செய்யப்படுகிறது...
இதற்கு காலை 10.00 மணிக்கு போய் அங்கு கொஞ்ச நேரம் வேலை... நிறைய நேரம் பேச்சு என்ற கொள்கையின் அடிப்படையில் வேலை செய்தும்,  வேலை செய்வதாய் காட்டிக்கொண்டும் 2.00 மணி வரையோ.. அல்லது 2.30 மணி வரையோ இருந்துவிட்டு வந்துவிட்டால் அந்த 120 ரூபாய் கூலி என்பது நிச்சயம்...

எந்த கட்டாயமும் இல்லை... இத்தனை மணிக்குள் முடிக்க வேண்டும் என்ற இலக்கும் இல்லை... ஏன் செய்யவில்லை என்று கேட்க ஆளும் இல்லை... ( இந்த "ஏன் செய்யவில்லை" என்று கேட்கும் இடத்தில் இருக்கும் நபர் பெரும்பாலும் சொந்தக்காரர்களாக இருப்பதாலோ.. அல்லது அவர்களுக்கான பங்குத்தொகோ சென்று விடுவதாலோ அவர் கேட்க மாட்டார்.. )


இப்படியாக எந்த கட்டுப்பாடுமின்றி... கட்டாயமுமின்றி ஒரு வேலை.. அதற்கு 120 ரூபாய் கூலி என்ற நிலை வந்த உடன் விவசாய தொழிலாளிகள் எல்லாம் விவசாயத்தை புறக்கணித்து இந்த நூறு நாள் வேலையில் ஆர்வம் காட்ட தொடங்கினார்கள்.. இதனால் விவசாயத்திற்கு ஆள் பற்றாக்குறை ஏற்பட அதனால் வரலாறுகாணாத கூலி உயர்வு... ஏற்கெனவே இயற்கை, இடு பொருள், நீர், இப்படி எல்லா காரணிகளாலும் நோடித்துப்போயிருந்த விவசாய தொழில் மேலும் நசிவுற்று போனது... தொழிலாளர்கள் பற்றாகுறையால் விவசாயத்தை துறந்து கட்டிட வேலைகளுக்கும் நகரங்களில் தொழிற்சாலை வேலைகளுக்கும் போன விவசாயிகள் ஏராளம்...


மதிய அரசின் வேலை வாய்ப்பு உறுதி திட்டம் பிள்ளையார் பிடிக்க போய் குரங்காகி ..... சிரிப்பாய் சிரிக்கிறது...
இந்த தொழிலாளர்களை சொல்லி குற்றமில்லை.. ஏனென்றால் இந்த மனித சக்தியை முறையாக பயன்படுத்த அரசுக்கு தெரியவில்லை... இவர்களுக்கான பணி இடங்கள் உற்பத்தி கூடங்களில்லை... ஒரு கிராமத்தில் இருக்கும் வாய்க்காலை எத்தனை பேர் எத்தனை நாளுக்கு தான் வெட்ட இயலும்... அவர்கள் இப்படி தான் செய்வார்கள்...
ஆனால் திட்டம் கொண்டு வந்த அரசுக்கு அதை முறைப்படுத்தும் வகை ஏன் தெரியாமல் போனது...???
இந்தியா கிராமபுறங்கள் நிறைந்தது... இந்திய பொருளாதாரம் விவசாயம் சார்ந்தது... விவசாயிகளை ஒழித்துவிட்டு பொருளாதார புரட்சி எப்படி சாத்தியம்..??


இந்த வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தை பயன்படுத்தி விவசாயிகளுக்கு ஓரளவாவது உதவலாம் . கிராமங்களின் நிர்வாக அலுவலகத்தில் விவசாயிகள் தங்களுக்கு இத்தனை பணியாளர்கள் தேவை என்று பதிவு செய்யலாம்... நூறு நாள் வேலைக்கு பதிவு செய்த பணியாளர்களை அந்த நிர்வாக அதிகாரியே "தேவை"  என்று பதிவு செய்தோருக்கு பிரித்து அனுப்பலாம்... அதற்கு கூலியாக பதிவு செய்தோரிடம் ஒரு தொகையை வாங்கி அதனுடன் அரசின் பங்களிப்பையும் சேர்த்து கொடுக்கலாம்... இதன் மூலம் வீணாகும் மனித சக்தியை பயன் படுத்தலாம்... விவசாய தொழிலாளர் பற்றாக்குறையை ஈடு செய்து விவசாயத்தை பெருக்கலாம்...

இதன் மூலம் விளைச்சலை விட அதிகமாய் கூலியாய் கொடுக்கும் நிலை மாறும். விவசாய கூலி முறை படுத்தப்பட்டு பாரம் குறையும் போது தொழிலாளர் பற்றாகுறையால், கூலி உயர்வால் பாதிக்கப்பட்டு பயந்து விவசாயத்தை புறக்கணித்தோர் மீண்டும் விவசாயத்திற்கு திரும்புவார்கள்..


கடலில் கலந்து வீணாகும் நதிகளை இணைத்து பயன்படுத்தும் திட்டங்களுக்கு கோடி கோடி ரூபாய் முதலீடு செய்வதை பற்றி யோசிக்கும் அரசாங்கத்திற்கு ஒரே ஒரு சட்டத்தின் மூலம் விரயமாகும் மனித சக்தியை பயன் படுத்தி நலிவடையும் விவசாயத்தை காத்து உற்பத்தியை பெருக்கவேண்டும் என்று ஏன் தோன்றவில்லை..??

தாவணி...

தாவணி...

(இன்றைய என் பதிவு.. நாளைய வரலாறு)

கண்காட்சியகத்திலாவது காண கிடைக்குமா என ஏங்க செய்யும்
எங்கள் பாரம்பரிய ஆடைகளில் ஒன்று... ஒரு பெண் பருவமடைந்த உடனோ.. 
அல்லது பாலின அடையாளங்களை சுமக்க தொடங்கும் நாட்களிலோ இந்த ஆடை 
அணிய தொடங்குவார்கள். ஒரு சிலர் திருமணத்திற்கு முன்பு வரை 
இதை அணிந்து இருப்பார்.. திருமணத்திற்கு பின் சேலைக்கு மாறி விடுவர்... 
ஒரு சிலர் திருமணத்திற்கு பின்னாலும் இதை அணிந்துகொண்டிருப்பர்..

தாவணி அணியும் பழக்கம் சுமார் 17ம் நூற்றாண்டுகளில் தொடங்கி இருக்கலாம்
என்று சரித்திர ஆய்வாளர் (??) செந்தில் கே நடேசன் தெரிவிக்கிறார்.

இந்த தாவணி உடை என்பது உள்ளாடைகளை தவிர்த்து டிசைனர் பாவாடை ,
சட்டை(Blouse ) மற்றும் ஒரு முழு சேலையின் பாதி அளவு இருக்கும் ஒரு துணி.
(இதுதான் பிரதான தாவணி). 
இந்த மூன்றையும் உள்ளடக்கியது..டிசைனர் பாவாடையின் நிறத்திலேயே 
சட்டையும் இருக்கும்.. அல்லது தாவணியின் நிறத்திலேயே இருக்கும்.. 
அவரவர் ரசனைக்கு ஏற்ப இருக்கும்.












இது பட்டு, டெரிகாட்டன், பாலியெஸ்டர் , உள்ளி உள்ளி, பூனம் , ஷிபான் போன்ற துணி 
வகைகளில் கிடைக்கும்.. பண்டிகை காலங்களிலோ, உறவினர்களின் 
திருமண வைபவங்களிலோ பெரும்பாலும் பட்டு பாவாடை, 
மற்றும் பட்டு சட்டை ஆகியவற்றுடன் தாவணிகள் அணியப்படும்.. 
இது ஒருவித அழகையும் கம்பீரத்தையும் கூடிய தோற்றம் தரவல்லது..

பெரும்பாலான வருமானம் குறைந்த குடும்பங்களில் பிறந்த பெண் குழந்தைகள் 
வளர வளர அவர்களுக்கு மாற்று தாவணி வாங்கி கொடுக்க வசதி இல்லாத தாய்மார்கள் 
தம்முடைய சேலையை இரண்டாக கிழித்து தன்னுடைய மகளுக்கு 
இரண்டு தாவணியாய் அணிவித்து அழகு பார்ப்பார்,,

















இதை அணியும் முறை..

பாவாடை மற்றும் சட்டையை அணிந்த பிறகு நீளமாக இருக்கும் தாவணியின் 
ஒரு மூலையை இடது கையால் வயிற்று பகுதியில் செருக வேண்டும்.. 
அதை அப்படியே பின்புறமாக எடுத்து வலது புறத்தில் மேலே கொண்டுவந்து 
இடது தோள் பட்டையின் வழியாக முதுகு புறம் விட வேண்டும்.. 
இப்படி முதுகு புறம் இடும் தாவணியின் முனை பனை ஓலை போல் மடிப்புகளுடன் 
அமைய வேண்டும்.. அவ்வாறு தோள்பட்டை வழியாக பெண் எடுக்கும் தாவணி முனை 
நழுவி விடாமை இருக்க அதனை தோள்பட்டை பகுதியில் சட்டையுடன் சேர்த்து 
ஊக்கு என்னும் கருவியால் இணைக்க வேண்டும்..

நேர்த்தியாக அணியப்படும் தாவணியை பின் புறமிருந்து பார்த்ததால் மிக சரியாக 
அளவெடுத்து வரையப்பட்ட தலைகீழ் முக்கோணத்தின் தோற்றம் தரும்.

(ஒரு வரலாற்று தகவலை பதிவிடும் நோக்கத்துடனும். 
என் எதிர்கால சந்ததிகள் தெரிந்துகொள்ள வேண்டியும் தொலைநோக்கு 
பார்வையுடன் மட்டுமே இந்த கட்டுரை எழுதப்படுகிறது...)

ஆதரிப்போம்.. பூரண மதுவிலக்கை..

திரு வை கோ அவர்களின் அனேக போராட்டங்களின் மீதும், திரு ராமதாஸ் அவர்களின் அனேக கருத்துக்கள் மீதும் நமக்கு சில முரண்பாடுகள் இருந்தாலும்... 
மதுவுக்கு எதிரான அவர்களின் போராட்டத்தை பாராட்டவும் ஆதரிக்கவும் தான் வேண்டும்..

வழக்கம் போல என் தலைவன் சொல்லிவிட்டார் என்றோ தலைவி சொல்லிவிட்டார் என்றோ சொம்பை தூக்கி கொண்டு திரியாமல் இந்த போராட்டத்திற்கு ஆதரவளியுங்கள்... இல்லையேல்.. குறைந்த பட்சம் மௌனமாவது கடை பிடியுங்கள்...

மதுவிலக்கை அமல் படுத்தினால் கள்ளச்சாராயம் பெருகும் .. அதனால் கள்ளச்சாராய சாவுகள் நிகழும் என்று சப்பை கட்டு கட்டுவது அரசின் கையாலாகாத தனத்தையே காட்டுகிறது...
அப்படி என்றால் கற்பழிப்புகள் பெருகுகிறது என்று விபசார விடுதிகளை திறக்க தயாரா?? சட்டத்திற்கு முரணான செயல்களை தடுக்க துப்பில்லாத அரசு..... சட்டத்திற்கு முரணான காரியங்களை அரசே ஏற்று நடத்தும் என்று அறிவிக்குமா??
பாண்டிச்சேரிக்கு போய் குடிப்பார்கள்... ஆந்திரா- கர்நாடகாவிற்கு போய் குடிப்பார்கள் என்று சொல்லுகிறீர்களே... அப்படி போய் குடித்துத்தான் ஆக வேண்டும் என்று நினைப்பவன் இந்த பூமிக்கு பாரம்.. சாகட்டும் விடுங்கள்...

பொங்கல் வியாபாரம் 300 கோடி... தீபாவளி வியாபாரம் 200 கோடி என்று புள்ளி விபரங்கள் சொல்பவர்கள் இது நிகர லாபமா .. இல்லை மொத்த வியாபாரமா என்று சொல்வதில்லை .. மொத்த வியாபாரம் என்றால் அவற்றின் கொள்முதல் விலை எவ்வளவு... இது யாருக்கு போகிறது...??
நிகர லாபம் என்றால் மொத்த விற்பனை எவ்வளவு... ஒரு மது பாட்டிலின் தயாரிப்பு செலவு 25 ரூபாய் என்றும் விற்பனை விலை 240 ரூபாய் என்றும் புள்ளி விபரங்கள் கூறுகின்றன..

இப்படி ஓரிரு குடும்பங்களை வாழவைக்க தமிழக தாய்மார்களின் தாலி அறுந்து போக வேண்டுமா..?? அவர்களின் பிள்ளை குட்டிகள் நடுத்தெருவில் நிற்க வேண்டுமா...
இவற்றை மறைக்க இலவசமாய் தூக்கி எரியும் எலும்புத்துண்டுகளை பொறுக்கி திருப்தியடையும் நாய்களாகத்தான் எம் தமிழ் சமூகத்தின் பரிணாம வளர்ச்சி இருக்கிறதா???

இந்த போராட்டத்தில் திரு வை கோ அவர்களுக்கும் திரு. ராமதாஸ் அவர்களுக்கும் ஆதரவளியுங்கள்... கட்சிகளை கடந்து.. அவர்களுக்கு நீங்கள் ஒட்டு எல்லாம் போட வேண்டாம்...

பெயர்- ஒரு பாரம்பரிய அடையாளம்..

மலேஷியாவில் ஒருக்கும் ஒரு செராமிக் நிறுவனத்தில் ஏற்றுமதி பகுதியின் பொறுப்பில் இருக்கும் ஒரு பெண்ணுக்கு அலுவலக தொடர்பான ஒரு மின்னஞ்சல் செய்தேன்... செந்தில் குமார் நடேசன் என்ற என்னுடைய பெயரை பார்த்துவிட்டு கண்டிப்பாக நான் தமிழனாகத்தான் இருக்க வேண்டும் என்று தொலைபேசியில் அழைத்து தமிழில் பேசினார்.. 
"உங்க பேர பார்த்த உடனே நினைச்சேன்.. நீங்க தமிழாத்தான் இருக்கும்னு.. எந்த ஊர்.. எவ்வளவு நாளா அங்க இருக்கீங்க.. நல்லா இருக்கீங்களா. வீட்டுக்கு ஃபோன் பண்ணீங்களா.. எல்லோரும் நல்லா இருக்காங்களா." என்றெல்லாம் அன்போடு விசாரித்தார்.. மேலும் தம்முடைய முன்னோர்கள் (மூன்றாவது தலைமுறை இவர்) பரமக்குடியை சேர்ந்தவர் என்றும்.. பூர்வீக உறவினர்கள் அங்கு இருக்கிறார்கள் என்றும் சொன்னார்..

ஒரு பெயர் என்பது எப்படி ஒரு மொழியின் அடையாளமாக இருக்கிறது என்பதை எனக்கு உணர்த்திய நிகழ்ச்சி இது... தமிழர்களின் பெயர்களை இன்னும் உற்று நோக்கி ஆராய்ந்தால் அவர்களது பூர்வீகம் , அவர் சார்ந்த பாரம்பரியம் எல்லாவற்றையுமே உணர்த்துவதாய் இருக்கும்...
ஆனால் நாகரீக தொட்டிலில் நீந்த வந்த சிலர் தம்முடைய அடையாளத்தை மறைத்து புதிது புதிதாய் பெயர்வைப்பதன் மூலம் தமக்கு மரியாதை வந்துவிட்டது என்றும்.. நம்முடைய பாரம்பரிய பெயர்களை வைத்தால் அது கேவலம் என்றும் நினைக்கிறார்கள்.. என்னத்த சொல்ல..??

வாலெட்


ஒரே நாளில்
நிறைமாத கர்ப்பம்..
தவணை முறையில்
பிரசவம்...



நடுத்தர வர்க்கத்தின் வாலெட் பற்றிய நான்கு வரிகள் தான் மேலுள்ளது...



நாகாரீக வர்க்கத்தால் "வாலெட்" என்றும் சாமான்யர்களால் மணி பர்ஸ் எண்டும் சொல்லப்படுகின்ற பண பெட்டகம் இன்று கடன் அட்டை பெட்டகமாகத்தான் மாறிப்போயிருக்கிறது... பதினான்காம் நூற்றாண்டில் இருந்து இந்த வாலெட் பயன்பாட்டில் இருக்கிறது... தோல், ரெக்சின், மற்றும் துணிகளாலும் இவைகள் தயாரிக்கப்படுகின்றன..

இது கிபிசிஸ் ( kipisis ) ன்ற கிரேக்க வார்த்தையி அமெரிக்க ஆங்கில மொழிமாற்றாக வாலெட் (wallet ) என்று சொல்லப்படுகிறது..இதன் அர்த்தம் ."flat case for carrying paper currency"

இந்த வாலெட் உபயோகிக்க தொடங்கினாலே பெரிய மனிதனாகிவிட்ட ஒரு கர்வம் தோன்றும்.. பணத்தால் நிரம்பி இருக்கிறதோ இல்லையோ... மனைவி- குழந்தைகள் புகைப்படமோ, தாய் தந்தையர் புகைப்படமோ. அல்லது தமக்கு பிடித்த நடிக- நடிகையர் புகைப்படமோ கூட கட்டாயம் இடம் பெற்றிருக்கும்...


மாத சம்பளக்காரர்கள் வாலெட் மாதத்தின் ஆரம்பத்தில் நிறைமாத கர்ப்பமாகவும், மாத இறுதி வரை... பெரும்பாலானோருக்கு முதல் இரண்டு வாரத்திலோ கூட தவணை முறையில் பிரசவித்து வெற்று வயிற்றுடனும் காணப்படும்..


என்னுடைய தந்தையார் உபயோகித்த வாலெட் எனக்கு கிடைத்த போது நான் கல்லூரி செல்ல தொடங்கி இருந்தேன்.. அதில் 50 ரூபாய்க்கு அதிகமாய் இருந்ததாய் நினைவில் இல்லை, ஆனாலும் அந்த வாலெட்டில் இருந்து பணம் எடுத்து பேருந்து பயண சீட்டு வாங்கும் போதோ... அல்லது வேறு எதுவும் வாங்கும் போதோ ஒரு கர்வம் குடியேறுவதை மறுக்க முடியாது...

நாளடைவில் வங்கி அட்டைகள், அடையாள அட்டைகள், ஓட்டுனர் உரிமம், உடல் நல அட்டை, வருமானவரிக்கணக்கு அட்டை என கொஞ்சம் கொஞ்சமாய் கனமேறியது... இதற்கிடையில் சில பல புதிய வாலெட் மாறிவிட்டது.. இந்திய மதிப்பில் அறுநூறு ரூபாய் கொடுத்து வாங்கிய வாலேட்டில் ஒரு மாத சம்பளம் வாங்கி வைத்து அடுத்த வாரத்திற்கும் அது காணாமல் போனதால் அந்த வாலெட் ராசி இலாத முத்திரை குத்தப்பட்டு ஓரம் கட்டப்பட்டது... ஒரு சில வாலெட்டுகளோ மாதத்தின் கடைசி நாள்வரை ஓரிரு ரூபாய் நோட்டுக்களை தக்கவைத்துக்கொள்ளும்.. அப்படியான வாலெட்டுகள் கிழிந்த பின்னும் பாதுகாக்கப்படும்.. ராசியான "பர்ஸ்"..


ரூபாய் நோட்டுக்கள் திராமாகவும், ரியாலாகவும், டாலராகவும் மாறி இருக்கிறது... ஆனால் அதில் எப்போதுமிருக்கும் அம்மாவின் புகைப்படமும், நண்பனின் புகைப்படமும்.. இப்போது மனைவியின் புகைப்படமும் மாறாமலிருக்கிறது ...


எங்காவது யாராவது வாலெட்டை எடுத்து பிரிக்கும் போது அதில் நிரம்பி வழியும் பல்வேறு வங்கி அட்டைகளை பார்க்கும்போது பொறாமையாக இருக்கும்.. அந்த வங்கி கடன் அட்டைகள் இந்த வாலெட்டில் வந்த நாள் முதல் அடுத்த இரண்டு மாத சம்பளமோ- அடுத்த இரண்டு வருட சம்பளமோ கூட கடனாய் செலவு செய்யப்பட்டு கவுரவ கடன்காரர்களாய் உலாவரும் விஷயம் தெரிந்த உடன்.. எனது கடனில்லா பர்சை பார்க்க பெருமையாயிருக்கும்..


திடீரென ஒருவரிடமிருந்து பர்சை வாங்கி அதில் என்ன என்ன இருக்கிறது என்று கேட்டால் நிறைய பேருக்கு பதில் தெரியாது... ஆனால் அத்தியாவசிய அட்டைகள் எல்லாவற்றையுமே அதில் வைத்திருப்பார்.. குறைந்த பட்சம் அதில் என்ன இருக்கிறது என்பதை மாதம் ஒரு முறையாவது சோதித்தால் நல்லது.. சிலர் வெறும் காகிதங்களால் நிறைத்து வைத்திருப்பார்...


தினசரி வீட்டிற்கு வந்த உடன் அதில் இருக்கும் சில்லறை காசுகளை தங்கள் பிள்ளைகளிடம் கொடுத்து உண்டியலில் சேகரிக்க செய்வதன் மூலம் அவர்களுக்கு சேமிக்கும் பழக்கத்தை அறிமுகம் செய்வதுடன் நமது வாலெட்டின் ஆயுளையும் நீட்டிக்கலாம்..

காற்று வியாபாரம்.....

மனித உடலை இயக்கம் தலையாய உறுப்பான மூளையை செயல்படவைப்பது ஆக்ஸிஜன் வாயு .. வளிமண்டலத்தில் 19.5 முதல் 23.5 விழுக்காடு (%) ஆக்ஸிஜன் கலந்திருக்கிறது. நமது நுரையீரல் ,நாம் சுவாசிக்கும் காற்றில் இருக்கும் ஆக்ஸிஜனை தனியே பிரித்து இரத்தத்தின் வழியாக மூளைக்கு அனுப்புகிறது.. (இதை பற்றிய விரிவான தகவல்களுக்கு ஒரு மருத்துவரையோ- அல்லது ஒரு உயிர் வேதியல் வல்லுனரையோ (BIO -CHEMIST ) தொடர்புகொள்ளுதல் நலம்..)



பூமியின் அட்ச ரேகைகளிலும் தீர்க்க ரேகைகளிலும் கூட கதிரியக்கத்தை கலந்துவிட்டு காற்றை மாசாக்கி வைத்திருக்கும் மானுட விஞ்ஞானம் மனித நுரையீரல் ஆக்ஸிஜனை பிரித்தெடுப்பதையே ஒரு சவாலாக்கி வைத்திருக்கிறது... கரியமில வாயுக்கள் நிரம்பிய வளிமண்டல காற்றை சுவாசித்தாலே போதும்.. வேறு எந்த கெட்டப்பழக்கமுமே தேவை இல்லை.. எல்லா நோய்களும் வருவதற்கான சாத்திய கூறுகள் நிரம்பி வழிகின்றன..


அதிகாலையில் 3 லிருந்து 5 மணிவரை (பிரம்ம முஹூர்த்தம்) காற்றில் இந்த ஆக்ஸிஜன் அளவு அதிகமாக இருக்கும்.. அதனாலேயே நம் முன்னோர்கள் "பிராணயாமம்" செய்ய கற்று தந்தார்கள்... காற்று மாசுபடாத காலத்திலேயே ஆக்ஸிஜனின் அதிகபட்ச உபயோகம் மூளையையும், உடலையும் சுறுசுறுப்பாக வைக்கும் என்று கண்டறிந்திருந்த முன்னோர்கள் நீண்ட , ஆரோக்கியமான வாழ்வை பெற்று வந்திருக்கின்றனர்..

காற்று மாசுபட்டு நுரையீரல் ஆக்ஸிஜனை கண்டறியவே சிரமப்படும் இந்த காலத்தில் வசிப்பவர்கள் நாம்.. நம்மால் எப்படி நீண்ட ஆயுளுடன் வாழ முடியும்?


இதற்காகவே மேலை நாடுகளில் சுத்தமான ஆக்ஸிஜனை சுவாசிக்கத்தரும் மையங்கள் வியாபார நோக்கில் செயல்படுகின்றன...இந்த வணிக மையங்களில் ஆக்ஸிஜனுடன் நறுமணங்களும் சேர்க்கப்பட்டு ஒரு நிமிடத்திற்கு ஒரு அமெரிக்க டாலர் என்ற முறையில் குறைந்தபட்சம் 20 நிமிடங்கள் என்ற அளவில் வெற்றிகரமாக செயல் படுகிறது..


இந்தியாவில் சென்னை, மும்பை, டெல்லி போன்ற பெருநகரங்களில் இதற்கான வணிக வாய்ப்பு கொட்டிக்கிடப்பதாகவே தெரிகிறது... வாகனங்கள் மற்றும் குளிர்சாதனங்களால் கரியமில வாயு கலந்துவிட்ட காற்றை சுவாசித்தலும், தொடர் வேலை பளுவும் கூடி ஒரு வித மனோ அழுத்தத்தில் துவண்டுகொண்டிக்கும் நகரத்து மாந்தர்கள் இதுபோன்ற நிலையங்களை நிச்சயம் அணுகுவார்கள்.. உயர் வட்ட சம்பளக்காரர்களுக்கும் , தொழில் முனைவோருக்கும் இதுபோன்ற ஆக்ஸிஜன் மையங்கள் ஒரு வரப்பிரசாதமாகவே திகழும்.
நிச்சயம் இந்தியாவில் இதற்கான உற்பத்தி செலவும் மிக குறைவு.. ஆகவே இதனை குறைந்த விலையிலும் கூட வழங்க முடியும்...


இதெல்லாம் பணக்காரர்களுக்கு... நம் போன்ற சாமானியர்கள் என்ன செய்வது..?? அதற்கும் வழி இருக்கிறது...
சில-பல மரங்களை நடுவோம்... தொட்டிச்செடிகளை வளர்ப்போம்... தாவரங்கள் பகலில் நமக்கு தேவை இல்லாத, நமக்கு ஆபத்தான கரியமிலவாயுவை கிரகித்துக்கொண்டு சுத்தமான ஆக்ஸிஜனை தருகிறது...


வணிக மையங்களில் ஒரு மாஸ்க்கை மாட்டிக்கொண்டு தமக்கு மட்டும் சுவாசிக்க போகும் சுயநல பணக்கார்களை விட ஒரு மரம் நடுவதன் மூலம் நமக்கும் சமூகத்திற்கும் இலவசமாய் ஆக்ஸிஜன் வழங்குவோம்...


(குறிப்பு.. வீட்டிற்குள் வளர்க்கும் தொட்டிசெடிகளை இரவில் வெளியிலும் பகலில் வீட்டிற்குள்ளும் வைத்தல் நலம்.. தாவரங்கள் இரவில் கரியமில வாயுவை வெளியிடும்)

புதைந்த ரகசியங்கள்... தோண்ட ஆளில்லை.....



ஜனவரி 24 ம் தேதியிட்ட புதிய தலைமுறை வார இதழ் கொஞ்சம் தாமதமாக கிடைத்தது... அதில் அதன் ஆசிரியர் திரு மாலன் அவர்கள் "என் ஜன்னலுக்கு வெளியே... " என்ற தலைப்பிலான ஒரு கட்டுரையில்  ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த பெண் புலவர்  காக்கை பாடினியார் தன்னுடைய ஒரு பாடலில் வட்டத்தின் பரப்பளவறியும் சூத்திரத்தை சொல்லி இருப்பதாக எழுதி இருந்தார்... 

இந்த சூத்திரத்தில் பயன் படும் "PI  ("பை" 22/7) பதினெட்டாம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டு புழக்கத்தில்  வந்ததாக பள்ளிக்கூடங்களில் சொல்லித்தரப்படுவதாக சொல்லி இருந்தார்... ( எங்க வாத்தியார் இப்படி எதுவும் சொன்னதா ஞாபகம் இல்லை.. அவர் சொல்லி இருப்பார்.. நாம என்னிக்கு கவனிச்சோம்...)

அப்போது எனக்கு ஒரு எண்ணம் தோன்றியது... தமிழில் எண்ணற்ற இலக்கியங்கள்... எல்லாம் தமிழில் இருந்தாலும் தமிழர்களுக்கு புரியாமலேயே இருக்கிறதே... என்ன காரணம்...  தொல்காப்பியம்.. பதினென்கீழ் கணக்கு, மேல் கணக்கு, எல்லா நூல்களுமே சாமான்ய தமிழனுக்கு புரியாமலேயே இருக்கிறதே...  ஏன் அப்படி...

இலக்கணம் என்று எடுத்துக்கொண்டால். எல்லோருக்கும் புரியும் வார்த்தைகளில் இலக்கணம் இல்லையா. .. எல்லோருக்கும் புரியும் படி எழுதினால் அது இலக்கியம் இல்லையா??

காக்கை பாடினியார் இவ்வளவு பெரிய விஷயத்தை ஆறாம் நூற்றாண்டில் சொல்லியும் கூட அது இருபத்தோராம் நூற்றாண்டு வரையிலும் சாம்மான்ய தமிழனுக்கு புரியவே இல்லையே..  இப்படி எத்தனை தகவல்கள் புரியாமலேயே ஒளிந்திருக்கும்...??

ஒரு வேளை  அப்போது வாழ்ந்த தமிழர்கள் அந்த வார்த்தைகளை தான் புழக்கத்தில் வைத்திருந்தார்களா..?? அவர்களுக்கு புரிந்திருக்குமோ...??

நான் கண்டுபிடித்த, கற்றுக்கொண்ட விஷயங்களை மற்றவர்களுக்கு புரியாமல் சொல்லும்போதோ.. எழுதி வைக்கும் போதோ அந்த கண்டுபிடிப்புக்கு என்ன பலன்..?? என்ன பயன்..??

லியார்னாடொ  டாவின்சி வரைந்த மோனாலிசா ஓவியத்தின் கண்களை பெரிதுபடுத்தி பார்க்கும் பொது அதில் சில குறியீடுகள் இருக்கிறதாம். அதில் ஏதோ ரகசியம் புதைந்திருக்கிறது என்று ஆய்வு செய்கிறார்களாம்... 
அதுபோல் தமிழ் இலக்கியங்களை ஏன் யாரும் ஆராய்ச்சி பார்வையில் பார்க்கவில்லை,...
இந்த காலத்தில் தமிழ் தமிழ் என்று சொல்லிக்கொண்டு மொழிக்கு வண்ணமெல்லாம் கொடுத்துக்கொண்டு மேடை தோறும் முழங்கும் இலக்கிய வியாதிகள்  அடுக்கு மொழியிலும் வசனங்களும் பேசி மக்களை மயக்கியும் அவர்களிடம் ஒட்டாமல் விலகியும் நிற்பதை போலதான் அன்றைய இலக்கியவாதிகளும் புலவர்களும் இருந்தார்களா...??

அப்படியாயின்... அந்த இலக்கியங்களால் என்ன பயன்..?? ஒன்று ஆராய்ந்து அதில் இருக்கும் அன்றாட வாழ்க்கைக்கும் வளர்ச்சிக்கும் உதவும் தகவல்களை கண்டுபிடித்து உலகிற்கு சொல்ல வேண்டும்... அப்படி இல்லை என்றால் எல்லாவற்றையும் தீயிட்டு கொழுத்திவிட்டு அமெரிக்கா காரன் பேடண்ட் வாங்கிவிட்டான் என்று சொல்லிவிட்டு மஞ்சள் பொருட்களுக்கு ராயல்டி கொடுக்க சம்மதித்து வாழ பழக வேண்டும்...

கஞ்சி  கஞ்சி  என்றால் பானை நிறையாது.. சிந்தித்து முன்னேற வேணுமடி...
என்று எம் பட்டுக்கோட்டையார் எல்லோருக்கும் புரியும் படி சொல்லிவிட்டார். விளக்க உரை எழுதி யாரும் யாருக்கும் புரியவைக்கவேண்டிய அவசியமின்றி...!!!

கோபிநாத்துக்கு ஒரு குட்டும்.. என் சந்ததிக்கு ஒரு ஆதாரமும்..

லாப நோக்கமில்லாத சமூக சீர்திருத்தத்தை மட்டுமே முன்னிறுத்தி (????!!) ஒளிபரப்பாகும் விஜய் தொலைக்காட்சியில் இரு பாலினத்தவர்கள், இருவேறு சமூகத்தவர்கள்.. இரு வேறு மதத்தினர்களை கொம்பு சீவி விடும் அற்புற சமூக போராளி திரு நீயா நானா புகழ் கோபிநாத் அவர்கள் எல்லா நிகழ்ச்சிகளிலும் இவரது மனோநிலைக்கு ஒத்தில்லாத கருத்தை பேசுபவரிடம் கேட்டும் அதி புத்திசாலித்தனமான கேள்வி "என்ன ஆதாரம்.... எங்க இருக்கிறந்து அந்த ஆதாரம்...?"

தெரியாமல் தான் கேட்கிறேன்... ஆதாரம் என்பது என்ன??? எத்தனையோ நூற்றாண்டுகளாய் நமது முன்னோர்கள் பாரம்பரியமாய் சொல்லி வந்தார்களே மஞ்சள் ஒரு நோய் நிவாரணி.. கிருமி நாசினி என்று... வேம்பு ஒரு மருத்துவ குணம் நிறைந்தது என்று... அதற்கெல்லாம் என்ன ஆதாரம்...??? எல்லாவற்றையுமே கண்கூடாக பார்த்தவர்கள் நாம்.. அனுபவித்து உணர்ந்தவர்கள் நாம்... ஆனால் அமெரிக்கா காரன் அதற்கு பேடன்ட் ரைட் வாங்கி வைத்துக்கொண்டிருப்பதும்... அவர்களது ஆய்வு கூடத்தில்.."மஞ்சள் மருத்துவ குணம் நிறைந்தது" என்று யாரோ ஒரு ஆய்வாளர் வழங்கிய சான்றிதழும்தான் ஆதாரமா..? அதைதான் இவர் ஏற்றுக்கொள்வாரா..???


எந்த ஒரு கருத்தையும் நம்ப வேண்டுமானால் அதற்கு இணையத்திலிருந்து சில இணைப்புகளை கொடுப்பதை வாடிக்கையாக்கி கொண்டிருக்கின்றனர் சில அறிவாளிகள்.. இணையத்தில் எழுதி வைத்தது யார்... அவரும் என்னை போன்ற.. உங்களை போன்ற ஒரு மனிதர் தானே..அவர் பத்து வருடங்களுக்கு முன்போ.. இல்லை நேற்று க்கொடவோ எழுதியது உங்களுக்கு இன்று ஆதாரமென்றால் நான் இப்போது எழுதுவது நாளைக்கு ஆதாரம்... நாளை என்னுடைய சிந்தனையை ஏற்றுக்கொள்பவர்களுக்கு நான் ஆராதத்தை விட்டு செல்கிறேன்..
பதிவு செய்யப்படாத விஷயங்கள் எல்லாமே பொய்யாகி விடுமா என்ன???

பெற்றோரின் வலி

அப்பனாத்தா கட்டி வச்ச வீடு வேணும்... அவுக சேத்துவச்ச சொத்து வேணும்... அவுக வாங்கி வச்சிருக்குற நல்ல பேரு வேணும்... சோறு போடணும்... துணிமணி எடுத்து கொடுக்கணும்... படிக்க வைக்கணும்.. செலவுக்கு காசு கொடுக்கணும்... ஊர்ல போய் ஏதாவது ஏழரைய கூட்டிட்டு வந்து நின்னா பெத்த பாவத்துக்கு பஞ்சாயத்துல கை கட்டி நிக்கணும்...

ஆனா "நீ இல்லன்னா செத்து போயிடுவேன்..." அப்படின்னு டிராமா பண்றவன/பன்றவள நம்பி ஓடிடுவ...... அப்பனாத்தா கவுரவத்த குழி தோண்டி பொதச்சுடுவ ....

நீ கருவா உருவான காலத்துல இருந்து உனக்கு என்ன வேணும்னு பாத்து பாத்து பண்ணின அப்பனாத்தாவுக்கு உனக்கு கல்யாணம் மட்டும் பண்ணி வைக்க தெரியாதான்னு கேட்டு... அப்படி ஏதாவது நடந்தா ஒரு ஆத்துரத்துல "வெட்டி போட்டுடுவேன்"ன்னு சொல்ற அப்பன ஊரு நடுவுல மன்னிப்பு கேட்டு தலைகுனிஞ்சு நிக்கணும்... வெளங்குவியா நீ??

உன்ன பெத்ததுக்கு உண்டான பலன அந்த ஒரு நொடில அனுபவிச்சுடறாங்க அந்த அப்பனாத்தா......

அவங்கள வெட்டி போட நீ யாருன்னு கேக்கற எந்த...... ங்கியும் வரல.. உனக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்ட... உனக்கு துணி மணி வாங்கி தர.. உனக்கு நல்லது கெட்டது பண்ண... உனக்கு உடம்பு சரியில்லாம போனா வயித்துல நெருப்ப கட்டிக்கிட்டு கடன ஒடன வாங்கி செலவு பண்ணி டாக்டர் கால்ல விழுந்து கதற....

எல்லாம் அன்னிக்கு அவுகதான் செஞ்சாக... எத்தன எடத்துல கைகட்டி நின்னிருப்பான்..?எத்தனை இடத்துல வயித்த கட்டி புள்ளைக்கின்னு மடில கட்டி கொண்டு வந்திருப்பா....
எத்தன ராத்திரி "ஐயோ... புள்ளைக்கு எறும்பு கடிச்சிருக்குமோ... வயிறு கியிறு வலிக்குமோ... என்னன்னு தெரியலையே"ன்னு நீ எதுக்கு அழுவுறன்னு தெரியாம கெடந்து தவிச்சிருப்பாக...


அமெரிக்காவுல இல்லையாம்.. ஐரோப்பாவுல இல்லையாம்.. காதலுக்கு இத்தன பெரிய பிரச்சினை... ஆமா.. அது சரிதான்... அங்க அப்பன் சொத்து சேர்த்து வைக்கிறதில்ல... நல்லது கெட்டதுக்கு கூடிக்கிற சொந்த பந்தம் இல்ல... நான் சம்பாதிச்சு நான் சாப்பிட்டுக்குவேன்.. நீ சம்பாதிச்சு நீ சப்பிட்டுக்கோன்னு போயிடறான்...

அது மாதிரி உன் அப்பனாத்தா இருந்திருந்தா நீ இன்னிக்கு குண்டிய பைக்க விட்டு எறக்காம சுத்த முடியுமா..?? ஒரு வேளை இங்க அப்படி ஒரு நிலைமை வந்தா யாரவேனா காதல் பண்ணி எவன்/எவள் கூட வேணா ஓடிப்போ...

அப்படி எனக்கு இந்த புள்ளைய/பொண்ண புடிச்சிருக்கு... இவ/இவங்கூட வாழ்ந்தா நல்லா இருக்கும்னு நெனைச்சா அப்பனாத்தாகிட்ட 
சொல்லு... அவுக முடிவு பண்ணட்டும்...

இங்க யாரும் சுயம்பா வளரல... இன்னிக்கு நீ வளர்ந்திருக்கறதுக்கு பின்னால ஒரு சமுதாயத்தோட , உன் சொந்தக்காரங்களோட... உன் மக்க மனுஷாளோட உழைப்பு இருக்கு .. கனவு இருக்கு... இன்னிக்கு உனக்காக இந்த சமுதாயம் செஞ்சது கடன்.. எதுவும் ஓசி இல்ல... அத வட்டியும் மோதலுமா உனக்கடுத்து வரப்போற சந்ததிக்கு நீ திருப்பி செய்யணும்...
இன்னிக்கு உனக்கு ஒரு பொண்ணையோ /பையனையோ புடிச்சுருக்குன்னு அவுக பின்னாடி போறதுக்கு முன்னாடி... நீ அவுககிட்டல்லாம் வாங்கின கடனுக்கு வழிய சொல்லிட்டு போ....
அந்த கடன கொடுக்காம ஓடினா நீ என்ன மனுஷ ஜென்மம்..??
உன் இஷ்டம் போல ஓடிக்கோ... ஆனா அப்படி ஓடனும்னா அப்பனாத்தா கொடுத்த எல்லாத்தையும் விட்டுட்டு போ... யாரு வேணாம்னா...??

உன்னோட உயிரும் அந்த அப்பனாத்தா கொடுத்ததுதான்...!!!

## பல அப்பாவி அப்பனாத்தாவின் உள்ள குமுறல்..!!!