சனி, 20 ஜூன், 2015

புதைந்த ரகசியங்கள்... தோண்ட ஆளில்லை.....



ஜனவரி 24 ம் தேதியிட்ட புதிய தலைமுறை வார இதழ் கொஞ்சம் தாமதமாக கிடைத்தது... அதில் அதன் ஆசிரியர் திரு மாலன் அவர்கள் "என் ஜன்னலுக்கு வெளியே... " என்ற தலைப்பிலான ஒரு கட்டுரையில்  ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த பெண் புலவர்  காக்கை பாடினியார் தன்னுடைய ஒரு பாடலில் வட்டத்தின் பரப்பளவறியும் சூத்திரத்தை சொல்லி இருப்பதாக எழுதி இருந்தார்... 

இந்த சூத்திரத்தில் பயன் படும் "PI  ("பை" 22/7) பதினெட்டாம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டு புழக்கத்தில்  வந்ததாக பள்ளிக்கூடங்களில் சொல்லித்தரப்படுவதாக சொல்லி இருந்தார்... ( எங்க வாத்தியார் இப்படி எதுவும் சொன்னதா ஞாபகம் இல்லை.. அவர் சொல்லி இருப்பார்.. நாம என்னிக்கு கவனிச்சோம்...)

அப்போது எனக்கு ஒரு எண்ணம் தோன்றியது... தமிழில் எண்ணற்ற இலக்கியங்கள்... எல்லாம் தமிழில் இருந்தாலும் தமிழர்களுக்கு புரியாமலேயே இருக்கிறதே... என்ன காரணம்...  தொல்காப்பியம்.. பதினென்கீழ் கணக்கு, மேல் கணக்கு, எல்லா நூல்களுமே சாமான்ய தமிழனுக்கு புரியாமலேயே இருக்கிறதே...  ஏன் அப்படி...

இலக்கணம் என்று எடுத்துக்கொண்டால். எல்லோருக்கும் புரியும் வார்த்தைகளில் இலக்கணம் இல்லையா. .. எல்லோருக்கும் புரியும் படி எழுதினால் அது இலக்கியம் இல்லையா??

காக்கை பாடினியார் இவ்வளவு பெரிய விஷயத்தை ஆறாம் நூற்றாண்டில் சொல்லியும் கூட அது இருபத்தோராம் நூற்றாண்டு வரையிலும் சாம்மான்ய தமிழனுக்கு புரியவே இல்லையே..  இப்படி எத்தனை தகவல்கள் புரியாமலேயே ஒளிந்திருக்கும்...??

ஒரு வேளை  அப்போது வாழ்ந்த தமிழர்கள் அந்த வார்த்தைகளை தான் புழக்கத்தில் வைத்திருந்தார்களா..?? அவர்களுக்கு புரிந்திருக்குமோ...??

நான் கண்டுபிடித்த, கற்றுக்கொண்ட விஷயங்களை மற்றவர்களுக்கு புரியாமல் சொல்லும்போதோ.. எழுதி வைக்கும் போதோ அந்த கண்டுபிடிப்புக்கு என்ன பலன்..?? என்ன பயன்..??

லியார்னாடொ  டாவின்சி வரைந்த மோனாலிசா ஓவியத்தின் கண்களை பெரிதுபடுத்தி பார்க்கும் பொது அதில் சில குறியீடுகள் இருக்கிறதாம். அதில் ஏதோ ரகசியம் புதைந்திருக்கிறது என்று ஆய்வு செய்கிறார்களாம்... 
அதுபோல் தமிழ் இலக்கியங்களை ஏன் யாரும் ஆராய்ச்சி பார்வையில் பார்க்கவில்லை,...
இந்த காலத்தில் தமிழ் தமிழ் என்று சொல்லிக்கொண்டு மொழிக்கு வண்ணமெல்லாம் கொடுத்துக்கொண்டு மேடை தோறும் முழங்கும் இலக்கிய வியாதிகள்  அடுக்கு மொழியிலும் வசனங்களும் பேசி மக்களை மயக்கியும் அவர்களிடம் ஒட்டாமல் விலகியும் நிற்பதை போலதான் அன்றைய இலக்கியவாதிகளும் புலவர்களும் இருந்தார்களா...??

அப்படியாயின்... அந்த இலக்கியங்களால் என்ன பயன்..?? ஒன்று ஆராய்ந்து அதில் இருக்கும் அன்றாட வாழ்க்கைக்கும் வளர்ச்சிக்கும் உதவும் தகவல்களை கண்டுபிடித்து உலகிற்கு சொல்ல வேண்டும்... அப்படி இல்லை என்றால் எல்லாவற்றையும் தீயிட்டு கொழுத்திவிட்டு அமெரிக்கா காரன் பேடண்ட் வாங்கிவிட்டான் என்று சொல்லிவிட்டு மஞ்சள் பொருட்களுக்கு ராயல்டி கொடுக்க சம்மதித்து வாழ பழக வேண்டும்...

கஞ்சி  கஞ்சி  என்றால் பானை நிறையாது.. சிந்தித்து முன்னேற வேணுமடி...
என்று எம் பட்டுக்கோட்டையார் எல்லோருக்கும் புரியும் படி சொல்லிவிட்டார். விளக்க உரை எழுதி யாரும் யாருக்கும் புரியவைக்கவேண்டிய அவசியமின்றி...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக