சனி, 20 ஜூன், 2015

வாலெட்


ஒரே நாளில்
நிறைமாத கர்ப்பம்..
தவணை முறையில்
பிரசவம்...



நடுத்தர வர்க்கத்தின் வாலெட் பற்றிய நான்கு வரிகள் தான் மேலுள்ளது...



நாகாரீக வர்க்கத்தால் "வாலெட்" என்றும் சாமான்யர்களால் மணி பர்ஸ் எண்டும் சொல்லப்படுகின்ற பண பெட்டகம் இன்று கடன் அட்டை பெட்டகமாகத்தான் மாறிப்போயிருக்கிறது... பதினான்காம் நூற்றாண்டில் இருந்து இந்த வாலெட் பயன்பாட்டில் இருக்கிறது... தோல், ரெக்சின், மற்றும் துணிகளாலும் இவைகள் தயாரிக்கப்படுகின்றன..

இது கிபிசிஸ் ( kipisis ) ன்ற கிரேக்க வார்த்தையி அமெரிக்க ஆங்கில மொழிமாற்றாக வாலெட் (wallet ) என்று சொல்லப்படுகிறது..இதன் அர்த்தம் ."flat case for carrying paper currency"

இந்த வாலெட் உபயோகிக்க தொடங்கினாலே பெரிய மனிதனாகிவிட்ட ஒரு கர்வம் தோன்றும்.. பணத்தால் நிரம்பி இருக்கிறதோ இல்லையோ... மனைவி- குழந்தைகள் புகைப்படமோ, தாய் தந்தையர் புகைப்படமோ. அல்லது தமக்கு பிடித்த நடிக- நடிகையர் புகைப்படமோ கூட கட்டாயம் இடம் பெற்றிருக்கும்...


மாத சம்பளக்காரர்கள் வாலெட் மாதத்தின் ஆரம்பத்தில் நிறைமாத கர்ப்பமாகவும், மாத இறுதி வரை... பெரும்பாலானோருக்கு முதல் இரண்டு வாரத்திலோ கூட தவணை முறையில் பிரசவித்து வெற்று வயிற்றுடனும் காணப்படும்..


என்னுடைய தந்தையார் உபயோகித்த வாலெட் எனக்கு கிடைத்த போது நான் கல்லூரி செல்ல தொடங்கி இருந்தேன்.. அதில் 50 ரூபாய்க்கு அதிகமாய் இருந்ததாய் நினைவில் இல்லை, ஆனாலும் அந்த வாலெட்டில் இருந்து பணம் எடுத்து பேருந்து பயண சீட்டு வாங்கும் போதோ... அல்லது வேறு எதுவும் வாங்கும் போதோ ஒரு கர்வம் குடியேறுவதை மறுக்க முடியாது...

நாளடைவில் வங்கி அட்டைகள், அடையாள அட்டைகள், ஓட்டுனர் உரிமம், உடல் நல அட்டை, வருமானவரிக்கணக்கு அட்டை என கொஞ்சம் கொஞ்சமாய் கனமேறியது... இதற்கிடையில் சில பல புதிய வாலெட் மாறிவிட்டது.. இந்திய மதிப்பில் அறுநூறு ரூபாய் கொடுத்து வாங்கிய வாலேட்டில் ஒரு மாத சம்பளம் வாங்கி வைத்து அடுத்த வாரத்திற்கும் அது காணாமல் போனதால் அந்த வாலெட் ராசி இலாத முத்திரை குத்தப்பட்டு ஓரம் கட்டப்பட்டது... ஒரு சில வாலெட்டுகளோ மாதத்தின் கடைசி நாள்வரை ஓரிரு ரூபாய் நோட்டுக்களை தக்கவைத்துக்கொள்ளும்.. அப்படியான வாலெட்டுகள் கிழிந்த பின்னும் பாதுகாக்கப்படும்.. ராசியான "பர்ஸ்"..


ரூபாய் நோட்டுக்கள் திராமாகவும், ரியாலாகவும், டாலராகவும் மாறி இருக்கிறது... ஆனால் அதில் எப்போதுமிருக்கும் அம்மாவின் புகைப்படமும், நண்பனின் புகைப்படமும்.. இப்போது மனைவியின் புகைப்படமும் மாறாமலிருக்கிறது ...


எங்காவது யாராவது வாலெட்டை எடுத்து பிரிக்கும் போது அதில் நிரம்பி வழியும் பல்வேறு வங்கி அட்டைகளை பார்க்கும்போது பொறாமையாக இருக்கும்.. அந்த வங்கி கடன் அட்டைகள் இந்த வாலெட்டில் வந்த நாள் முதல் அடுத்த இரண்டு மாத சம்பளமோ- அடுத்த இரண்டு வருட சம்பளமோ கூட கடனாய் செலவு செய்யப்பட்டு கவுரவ கடன்காரர்களாய் உலாவரும் விஷயம் தெரிந்த உடன்.. எனது கடனில்லா பர்சை பார்க்க பெருமையாயிருக்கும்..


திடீரென ஒருவரிடமிருந்து பர்சை வாங்கி அதில் என்ன என்ன இருக்கிறது என்று கேட்டால் நிறைய பேருக்கு பதில் தெரியாது... ஆனால் அத்தியாவசிய அட்டைகள் எல்லாவற்றையுமே அதில் வைத்திருப்பார்.. குறைந்த பட்சம் அதில் என்ன இருக்கிறது என்பதை மாதம் ஒரு முறையாவது சோதித்தால் நல்லது.. சிலர் வெறும் காகிதங்களால் நிறைத்து வைத்திருப்பார்...


தினசரி வீட்டிற்கு வந்த உடன் அதில் இருக்கும் சில்லறை காசுகளை தங்கள் பிள்ளைகளிடம் கொடுத்து உண்டியலில் சேகரிக்க செய்வதன் மூலம் அவர்களுக்கு சேமிக்கும் பழக்கத்தை அறிமுகம் செய்வதுடன் நமது வாலெட்டின் ஆயுளையும் நீட்டிக்கலாம்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக