சனி, 20 ஜூன், 2015

பிள்ளையார் பிடிக்க போய் குரங்காகிபோன 100 நாள் வேலை

மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் மத்திய அரசு கிராம பகுதிகளில் இருக்கும் வயது வந்தோருக்கு ஒரு வருடத்திற்கு 100 நாட்கள் வேலை கொடுத்து அந்த வேலைக்கு கூலியாக தினசரி ரூபாய் 120.00 வழங்குவதும் எல்லோரும் அறிந்த விஷயம்...




இந்த நூறு நாள் வேலை திட்டம் வந்த பிறகு பெரும்பாலான கிராமங்களில் விவசாய தொழில் மற்றும் இன்ன பிற சார்பு தொழிலில் ஈடுபட்ட ஆண்களும் பெண்களும் வயது வித்தியாசமின்றி இந்த 100 நாள் வேலைவாய்ப்பை பெற்று வருகிறார்கள்...
இது ஒரு பாராட்டப்பட வேண்டிய திட்டம்.. அதில் மாற்றுக்கருத்து இல்லை..

ஆனால் இந்த திட்டத்தின் கீழ் வேலை வாய்ப்பு பெறுவோர் நியாயமாக தங்கள் பெரும் கூலிக்கு வேலை செய்கிறார்களா. என்றால் பதில் சொல்ல சற்று யோசிக்கத்தான் வேண்டி இருக்கிறது... 
இவர்களுக்கான பணி இடங்களாக கிராம சாலை வடிநீர் வாய்க்கால்கள்... குளம் குட்டைகள்தான்... இந்த மண் சாலைகள் செப்பனிடும் பணி .. வாய்க்கால் தூர் வாரும் பணி .. குளம் குட்டைகளின் கரைகளை செப்பனிடும் பணி மற்றும் அவற்றின் உட்பகுதியில் சுத்தப்படுத்தும் பணி ஆகியவையே செய்யப்படுகிறது...
இதற்கு காலை 10.00 மணிக்கு போய் அங்கு கொஞ்ச நேரம் வேலை... நிறைய நேரம் பேச்சு என்ற கொள்கையின் அடிப்படையில் வேலை செய்தும்,  வேலை செய்வதாய் காட்டிக்கொண்டும் 2.00 மணி வரையோ.. அல்லது 2.30 மணி வரையோ இருந்துவிட்டு வந்துவிட்டால் அந்த 120 ரூபாய் கூலி என்பது நிச்சயம்...

எந்த கட்டாயமும் இல்லை... இத்தனை மணிக்குள் முடிக்க வேண்டும் என்ற இலக்கும் இல்லை... ஏன் செய்யவில்லை என்று கேட்க ஆளும் இல்லை... ( இந்த "ஏன் செய்யவில்லை" என்று கேட்கும் இடத்தில் இருக்கும் நபர் பெரும்பாலும் சொந்தக்காரர்களாக இருப்பதாலோ.. அல்லது அவர்களுக்கான பங்குத்தொகோ சென்று விடுவதாலோ அவர் கேட்க மாட்டார்.. )


இப்படியாக எந்த கட்டுப்பாடுமின்றி... கட்டாயமுமின்றி ஒரு வேலை.. அதற்கு 120 ரூபாய் கூலி என்ற நிலை வந்த உடன் விவசாய தொழிலாளிகள் எல்லாம் விவசாயத்தை புறக்கணித்து இந்த நூறு நாள் வேலையில் ஆர்வம் காட்ட தொடங்கினார்கள்.. இதனால் விவசாயத்திற்கு ஆள் பற்றாக்குறை ஏற்பட அதனால் வரலாறுகாணாத கூலி உயர்வு... ஏற்கெனவே இயற்கை, இடு பொருள், நீர், இப்படி எல்லா காரணிகளாலும் நோடித்துப்போயிருந்த விவசாய தொழில் மேலும் நசிவுற்று போனது... தொழிலாளர்கள் பற்றாகுறையால் விவசாயத்தை துறந்து கட்டிட வேலைகளுக்கும் நகரங்களில் தொழிற்சாலை வேலைகளுக்கும் போன விவசாயிகள் ஏராளம்...


மதிய அரசின் வேலை வாய்ப்பு உறுதி திட்டம் பிள்ளையார் பிடிக்க போய் குரங்காகி ..... சிரிப்பாய் சிரிக்கிறது...
இந்த தொழிலாளர்களை சொல்லி குற்றமில்லை.. ஏனென்றால் இந்த மனித சக்தியை முறையாக பயன்படுத்த அரசுக்கு தெரியவில்லை... இவர்களுக்கான பணி இடங்கள் உற்பத்தி கூடங்களில்லை... ஒரு கிராமத்தில் இருக்கும் வாய்க்காலை எத்தனை பேர் எத்தனை நாளுக்கு தான் வெட்ட இயலும்... அவர்கள் இப்படி தான் செய்வார்கள்...
ஆனால் திட்டம் கொண்டு வந்த அரசுக்கு அதை முறைப்படுத்தும் வகை ஏன் தெரியாமல் போனது...???
இந்தியா கிராமபுறங்கள் நிறைந்தது... இந்திய பொருளாதாரம் விவசாயம் சார்ந்தது... விவசாயிகளை ஒழித்துவிட்டு பொருளாதார புரட்சி எப்படி சாத்தியம்..??


இந்த வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தை பயன்படுத்தி விவசாயிகளுக்கு ஓரளவாவது உதவலாம் . கிராமங்களின் நிர்வாக அலுவலகத்தில் விவசாயிகள் தங்களுக்கு இத்தனை பணியாளர்கள் தேவை என்று பதிவு செய்யலாம்... நூறு நாள் வேலைக்கு பதிவு செய்த பணியாளர்களை அந்த நிர்வாக அதிகாரியே "தேவை"  என்று பதிவு செய்தோருக்கு பிரித்து அனுப்பலாம்... அதற்கு கூலியாக பதிவு செய்தோரிடம் ஒரு தொகையை வாங்கி அதனுடன் அரசின் பங்களிப்பையும் சேர்த்து கொடுக்கலாம்... இதன் மூலம் வீணாகும் மனித சக்தியை பயன் படுத்தலாம்... விவசாய தொழிலாளர் பற்றாக்குறையை ஈடு செய்து விவசாயத்தை பெருக்கலாம்...

இதன் மூலம் விளைச்சலை விட அதிகமாய் கூலியாய் கொடுக்கும் நிலை மாறும். விவசாய கூலி முறை படுத்தப்பட்டு பாரம் குறையும் போது தொழிலாளர் பற்றாகுறையால், கூலி உயர்வால் பாதிக்கப்பட்டு பயந்து விவசாயத்தை புறக்கணித்தோர் மீண்டும் விவசாயத்திற்கு திரும்புவார்கள்..


கடலில் கலந்து வீணாகும் நதிகளை இணைத்து பயன்படுத்தும் திட்டங்களுக்கு கோடி கோடி ரூபாய் முதலீடு செய்வதை பற்றி யோசிக்கும் அரசாங்கத்திற்கு ஒரே ஒரு சட்டத்தின் மூலம் விரயமாகும் மனித சக்தியை பயன் படுத்தி நலிவடையும் விவசாயத்தை காத்து உற்பத்தியை பெருக்கவேண்டும் என்று ஏன் தோன்றவில்லை..??

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக