புதன், 7 செப்டம்பர், 2016

முளைப்பாரியும் ஃபேஸ்புக்கும் !!



ஆடி மாசம் மேட்டூர் அணை திறந்து ஆத்து நிறைய தண்ணி போவும்... ஆடி பதினெட்டு அன்னிக்கு ஊர்ல இருக்க பொண்டுக புள்ளைகளெல்லாம் பாலிய கொண்டு போய் அந்த ஆத்து தண்ணில பிச்சு கரைப்பாங்க... (பாலி- முளைப்பாரி என்று சொல்வார்கள்) 

ஆடிமாசம் பத்தாந்தேதி வாக்குல ஒரு தாம்பாளத்துல தொழு உரத்த நிரப்பி அதுல நவதானியங்கள போட்டு தண்ணி தெளிச்சு ஒரு கூடடைய போட்டு கவுத்து வெளிச்சம் படாம மூடி வைப்பாங்க... அப்புறம் தினம் தினம் அதிகாலைளையும் சாயங்காலமும் திறந்து தண்ணி தெளிச்சு உடனே மூடிடுவாங்க... அது நல்லா முளைச்சு வளரும்... சூரிய ஒளி படாம இருக்கறதால நல்ல உயரமா வளரும்.. அதே நேரம் இளமஞ்சள் நிறத்துல அழகா இருக்கும்...

பொண்டுக புள்ளைங்க அப்படி மொளைக்க வச்சு தூக்கிட்டு வந்த பாலிய எல்லாம் ஆத்துக்கரைல ஒரு திட்டாணி போட்டு, அதுல புள்ளையார் புடிச்சு வச்சு கும்மி அடிச்சு பாட்டு பாடி அப்புறம் ஆத்துல பிச்சு விடுவாங்க...

அப்படி கொண்டு வந்து எல்லா பாலியும் ஒரு இடத்துல வைக்கும் போது யாரோடது உயரமா இருக்குன்னும் , யாரோடது பச்சையா இல்லாம மஞ்சளா இருக்குன்னும் வயசுப் பொண்ணுங்களுக்குள்ள ஒரு போட்டி நடக்கும்... அப்படி கும்பலா வச்சிருக்க பாலிகள்ள ஒரு சிலது மட்டும் உயரம் குறைவா வளர்ந்திருக்கும்... நல்ல பச்சை கலரா இருக்கும்... அத வச்சு கிண்டல் பண்ணிக்குவாங்க...

அந்த பாலி ஏன் அடர் பச்சையா, உயரம் குறைவா வளர்ந்திருக்குன்னு பார்த்தா.. அந்த வீட்டுல இருக்க நண்டு சிண்டுகளோட , குஞ்சு குளுவான்களோட (அதாவது சின்ன பசங்க ) வேலைதான் அது... முளைக்க வச்ச அடுத்த நாள்ல இருந்து ஒரு நாளைக்கு அம்பது தடவை திறந்து திறந்து பாப்பாங்க.... முளைச்சிடுச்சா.. வளர்ந்துடுச்சான்னு... அப்படி அம்பது தடவை திறக்கும் போது சூரிய வெளிச்சம் கிடைக்கிறதால அந்த செடி வேகமா வளராது.. அடர் பச்சையாவும் ஆயிடும்...

இப்போ எதுக்குடா இந்த கதை???

அந்த சின்ன குழந்தைகளுக்கு இருக்க அதே ஆர்வ கோளாறுதான் நமக்கும்... ஒரு நாளைக்கு அம்பது தடவைக்கும் மேல பேஸ்புக் ஓபன் பண்ணி பண்ணி நோடிபிகேஷன் எல்லாம் பார்க்கிறேன்... நம்ம நோடிபிகேஷன் பாக்ஸ் அந்த அடர் பச்சை பாலி மாதிரி கொஞ்சமே கொஞ்சம் தான் வளர்ந்திருக்கும்...

ஒரு மூணு மணி நேர பிரேக்ல நூத்தம்பது நோடிபிகேஷன்... ஓவர் நைட் ல ஒலக பிரபலமாயிட்டோமோன்னு பரபரப்பாயிட்டேன்... அட... தம்பி முத்து ராஜ் நம்ம பழைய பதிவ எல்லாம் தோண்டி எடுத்து துடைச்சு பார்த்திருக்கான்....

என்னமோ போங்க....!!!! எதை எதோட எல்லாம் கோர்த்து கோர்த்து யோசிக்க வேண்டி இருக்கு...

கஞ்சித்தொட்டி - குஞ்சரம்மாள்



திருவிழா காலத்தில் தெரு முனைகளில் அந்த பாட்டுக்கார பெண்மணிகள் பாட ஆரம்பித்தார்கள்... வழி வழியாய், வாய் மொழியாய் கடத்தப்பட்ட வரலாறுகளை பாடல் வழியாய் அவர்கள் பரப்பிக்கொண்டிருந்தார்கள்... அவர்கள் பாட பாட மக்கள் சம்பவம் நடந்த காலத்திற்கே பயணித்தார்கள்... அழுதார்கள்.. சபித்தார்கள்.. கொண்டாடினார்கள்... பிறகு கோயில் கட்ட முனைந்தார்கள்...

பாட்டுக்கார பெண்மணிகள் பாடிய வரலாறு.. ஒரு தாசியின் கதை... "ஒரு தாசிக்கு கோயில் கட்டுவதா..?" என்ற ஆத்திரம் செல்வ சீமான்களுக்கு ஏற்பட்டது... ஏனென்றால் அந்த செல்வ சீமான்களை அந்த தாசி தன்னுடைய செயலால் செருப்பால் அடித்தவள்.. அந்த ஆத்திரம் அவர்களுக்கு... சிலை செய்ய வந்த சிற்பியை விலைக்கு வாங்கி "சிலை செய்ய கூடாது.. செய்ய முடியாது" என்று சொல்ல வைத்தனர்... பாடிக்கொண்டிருந்த பெண்மணிகளுக்கு தானியங்களை அள்ளிக்கொடுத்து மௌனமாக்கினர்...

அந்த தாசி.. மரணம் வரை அள்ளிக்கொடுத்தவள்... மக்கள் மனதிலிருந்து அழிக்கும் செல்வ சீமான்களின் முயற்சியில் கூட தானியங்களை அள்ளிக்கொடுத்தவள்...

பாட்டுக்கார பெண்மணிகள் தானியங்களை வாங்கிக்கொண்டு அந்த தாசியை பாட மறந்தனர்.. நாளடைவில் கொஞ்சம் கொஞ்சமாய் அந்த தாசி மக்கள் மனதிலும் மறைந்தே போனாள்....

யார் அந்த தாசி...?? மக்கள் கோயில் கட்டும் அளவிற்கு அவள் என்ன செய்தாள்..??? செல்வந்தர்கள் அவளை ஏன் வெறுத்து மறைத்தனர்...?? கேள்வி எழுகிறதுதானே....??? விடை தேடி நாம் 18 ம் நூற்றாண்டின் இறுதிக்கு பயணிப்போமா...??

குஞ்சரம்மாள்....

கூடல் நகரின் ஆவணி வீதியில் இருந்தது அவள் வீடு... சுந்தரேஸ்வரருக்கு பொட்டு கட்டிய தாசி அவள்... செல்வந்தர்களும் ஜமீன்களும் மைனர்களும் அவளுடன் ஒரு இரவை கழிக்க ஆயிரக்கணக்கில் செலவழிக்க தயாராக இருந்த பேரழகி.... அவளை ஒரு முறை பார்க்காவிட்டால் இந்த ஜென்மமே வீணென நினைக்க வைத்த சுந்தரி... அவள் இல்லத்தின் வாசலில் சுற்றுப்பட்டு ஜமீன்களின் கூண்டு வண்டிகளும் கோச் வண்டிகளும் தவமிருக்கும்... ஆவணி வீதியின் இரண்டு பங்களாக்களையும், அணிகலன்களில் எத்தனை வகை உண்டோ அத்தனையும் அவள் சொந்தமாக்கிக்கொண்டிருந்தாள்.. தாசி வீட்டில் தாதிப்பெண்கள் அகிலையும் சந்தனத்தையும் சாம்பிராணியையும் புகைத்து மெருகேற்றினர்...

அது ஆங்கிலேயர்களின் ஆட்சி.... சில பல தந்திரங்கள்-அடக்குமுறைகளை கையாண்டு நகர நிர்வாகத்தை ஓரளவுக்கு முழுமையாய் கட்டுக்குள் கொண்டு வந்திருந்தார்கள்... மக்களை அடக்க தெரிந்த அவர்களால் இயற்கையை எதுவும் செய்ய முடியவில்லை... வானம் பொய்த்தது.... அதுவரை அனுபவித்திராத பஞ்சம் கோரத்தாண்டவமாடியது.. எலும்புக்கும் தோலுக்கும் இடைவெளி குறைந்து ஒன்றை ஒன்று உறவாடி களித்தன... நடக்கவே ஜீவனற்ற மக்கள் ஒரு பிடி கம்மங்களிக்கோ.. ஒரு குவளை கேப்பை கூழுக்கோ எதையும் செய்யலாம் என்ற நிலைமையில் தள்ளப்பட்டனர்...

வணிகர்களும் வசதிக்காரர்களும் தங்களிடம் இருந்த உணவுப்பொருட்களை பதுக்கி வைத்து அவர்கள் தேவைக்கும் ஆசைக்கும் பயன்படுத்தினர்.. ஆட்சியில் இருந்த ஆங்கில துரைகளோ.. கொண்டாட்டங்களிலும் கேளிக்கைகளிலும் காலம் கடத்தினர்...

தனியொரு ஆளாய் களமிறங்கினாள் தாசி குஞ்சரம்மாள்.. அவள் வீட்டில் அடுப்பை பஞ்சத்திற்கெதிராய் பற்றவைத்தாள்.. தேடி வந்தவர்களுக்கெல்லாம் கஞ்சி ஊற்றினாள்.. பஞ்சப்பசியோடு அலைந்த சனமெல்லாம் அவள் வீட்டு வாசலில் தஞ்சமடைந்தது... ஆவணி வீதியில் தாசி வீட்டில் கஞ்சி ஊற்றுகிறார்கள் என்ற செய்தி காற்றோடு கலக்க கலக்க குஞ்சரம்மாள் வீட்டு வாசல் வரை நின்ற கூட்டம் தெருவெல்லாம் நிறைந்தது... கூட்டம் நிறைய நிறைய... பஞ்சத்தில் துடித்த உயிர்களின் வயிற்று ஈரத்தால் உயிரை போக விடாமல் இழுத்து நிறுத்த நிறுத்த... குஞ்சரம்மாளின் சொத்துக்கள் கரைய கரைய..... கஞ்சி ஊற்றிக்கொண்டே இருந்தாள்... இயற்கையை எதிர்த்து யாரால் போராட முடியும்....?? ஓராண்டுகளுக்குள் குஞ்சரம்மாள் மச்சு வீட்டில் இருந்து குச்சு வீட்டுக்கு குடி பெயர்ந்தாள்....

இந்த தாசியின் செயல் செல்வந்தர்களை செருப்பால் அடித்தது.. ஜமீன்களை குற்ற உணர்ச்சி பீடித்தது.. அரசாங்கத்தை அவமானப் படுத்தியது... அதன் பிறகு அரசே சில இடங்களில் கஞ்சித் தொட்டியை திறக்க ஆரம்பித்தது....

வாராது வந்த மாமழையால் கொஞ்சம் பஞ்சம் தெளிந்தது... ஒரு நாள் இரவில் உறங்கச்சென்ற குஞ்சரம்மாள் எழவே இல்லை... கடைசியில் மரணம் அவளை அள்ளி எடுத்து அணைத்துக்கொண்டது.... தகவலறிந்த சனமெல்லாம் அதை தங்கள் வீட்டு இழவாய் கருதியது.. தங்கள் ஊணிலும் உயிரிலும் குஞ்சரம்மாள் கலந்திருந்ததால் கண்ணீரால் அவளை குளிப்பாட்டினர்...

இந்த பூமியில் நிலைகொள்ள தன்னையே அற்பணித்த தாசிக்கு நன்றிக்கடன் என்ன செய்வதென யோசித்தனர்... தங்கள் வீட்டு குலதெய்வப் படையலில் சலங்கைகளை வைத்தனர்... ஆம்.. அந்த சலங்கைதான் குஞ்சரம்மாள்...

வரதட்சினை - ஒரு கவசம்



தகப்பனின் சொத்தில் பெண்களுக்கு பங்கு கொடுக்க தேவை இல்லை என்று சொன்ன நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை...

ஒரு வீட்டில் பிறந்த அண்ணன்-தம்பிகள் தந்தையின் சொத்தில் பாகம் பிரித்துக்கொள்வார்கள்... அதன் பிறகு.. அவர்கள் பங்காளிகள் மட்டுமே.. இவர் வீட்டு விசேஷத்திற்கு அவரும்.. அவர் வீட்டு விசேஷத்திற்கு இவரும் போய் கலந்துகொல்வதொடு சரி.. மற்றபடி கொடுக்கல் வாங்கல்கள் எதுவாக இருந்தாலும் அது கணக்கில் வைக்கப்படும்.. பின் வசூலிக்கப்படும்.. சமயங்களில் வட்டியுடன்...

ஆனால் பெண்களுக்கு பாகம் எதுவும் கொடுப்பது இல்லை... மாறாக கல்யாணத்திற்கு சீர் செய்வார்கள்.. நகை- நட்டு -பாத்திரம்- பண்டம்- வாகனம்- ரொக்கம் என இந்த பட்டியல் நீளும்... பாகம் பிரித்தால் கிடைக்கும் சொத்தின் மதிப்பை விட இந்த சீர் செனத்தியின் மதிப்பு அதிகமாக இருக்கும்... அதோடு விடுவது இல்லை... சீமந்தம், புள்ளை பேரு.. பெயர் சூட்டுதல் தொடங்கி... அந்த பெண்ணின் பிள்ளைகள் வளர்ந்து திருமணம் ஆகும் வரையில் தாய்மாமன் சீர் என்ற பெயரில் குடலை அறுத்தாவது கொடுத்தே ஆக வேண்டும்... அந்த உடன் பிறந்த சகோதரியின் மரணம் வரை உடன் பிறந்தவன் கூடவே வர வேண்டும்...

எல்லாவற்றையும் கணக்கு போட்டு பார்த்தால் பாகம் பிரித்திருந்தால் போயிருக்க கூடிய சொத்தின் அளவை விட பன்மடங்கு போயிருக்கும்...

இதை எந்த ஆணும் கணக்கு பண்ணி பார்த்து "இல்லை இல்லை... நான் எனக்கு கிடைத்த சொத்தின் அளவை விட கூடுதலாக உனக்கு கொடுத்து விட்டேன்.. இனிமேல் செய்ய முடியாது " என்று சொல்வதில்லை... இவன் கடன வாங்கியோ.. தமக்கு கிடைத்த சொத்தை விற்றோ கூட தங்கையின்-அக்காளின் நலனிற்காக அவர்களது தேவையை பூர்த்தி செய்வான்...

நியாயமாக வரதட்சிணைக்கு எதிராக போராட வேண்டியவன் ஆண் தான்... தந்தையின் சொத்தை பாகம் பிரிக்கையில் சகோதரிக்கும் ஒரு பாகத்தை கொடுத்துவிட்டு அதோடு நல்லது கெட்டதுக்கு நாம கலந்துக்குவோம்.. கோடுகள் வாங்கல் எதுவும் வேண்டாம்.. அப்படியே இருந்தாலும் அதை கணக்கில் வைத்து திரும்ப வாங்கிக்கொள்வோம்.. என்று நினைத்தால் அதன் பிறகு அவன் சம்பாதிக்கும் அனைத்துமே அவனுக்கே சொந்தம்... ஆனால் எந்த ஆணும் அப்படி சிந்திப்பது இல்லை...

வேறு வீட்டில் வாழப்போகும் பெண்ணுக்கு கடைசி வரை பாதுகாப்பும், ஆதரவும் இருக்க வேண்டும் என்பதற்காகவே நம் முன்னோர்கள் ஏற்படுத்திய வழிதான் சீர் செனத்தி எல்லாம்... அப்படி பாகமாய் சொத்தை பிரித்து கொடுத்துவிட்டுவிட்டால் அந்த பெண் ஆதரவற்று போவாள்... இவனும்.. எனக்கு தெரியாது என்று ஒதுங்கி விடுவான்... அதற்கு வழி கொடுக்காமல் அந்த உறவை பிணைத்து வைக்கவே பெண்களுக்கு சொத்துக்களை பாகமாய் பிரித்து கொடுக்காமல் முதலீடாய் சகோதரனிடமே விட்டுவிட்டு கடைசி வரை கொஞ்சம் கொஞ்சமாய் வசூலிக்கும் வாய்ப்பை பெண்களுக்கு ஏற்படுத்தி கொடுத்தார்கள்...

பெண்களுக்கு சொத்துரிமை உண்டு என்று அரசு அறிவாளியாய் யோசித்து கொண்டுவந்த சட்டம் அந்த உறவை முறிக்கும் முட்டாள்தனம் என்பது உணராத பெண்கள் தான் சொத்தில் பங்கு எங்கள் உரிமை என்று போராட கிளம்புகிறார்கள்... ( எங்கோ ஒரு சகோதரன் ஒன்றும் செய்யாமல் ஏமாற்றிவிட்டான் என்பதற்காக வழக்கு தொடுபவர்களை சொல்லவில்லை...)

நீயும் அவன் கூட தான பொறந்த... உனக்கு மட்டும் சொத்துல உரிமை இல்லையான்னு உசுப்பி விடுற அரசோ- போராளிகளோ கடைசி வரை கூட வர மாட்டாங்க.. உங்களுக்கு ஒண்ணுன்னா சகோதரன் தான் துடிப்பான்.. ஏன்னா அவன் தான் சக உதிரன்... !!!

புரிந்துகொள்ளுங்கள் பெண்களே.... ஆண்கள் போற்ற தகுந்தவர்கள்...!!!!

பிரத்யோக ஸ்பூன்




ஒருதடவை நாலைஞ்சு பேர் ஒரு ஹோட்டலுக்கு சாப்பிட போனோம்... ஆர்டர் கொடுத்ததெல்லாம் வந்ததும் சாப்பிட ஆரம்பிச்சோம்... கத்தி, போர்க், ஸ்பூனு எல்லாம் வச்சிருந்தாங்க... நான் அதை எல்லாம் தள்ளி ஓரமா வச்சுட்டு நமக்கு ஆண்டவன் கொடுத்த த்ரீ இன் ஒன் (கத்தி-போர்க்-ஸ்பூன்) கைல சாப்பிட ஆரம்பிச்சேன்...அப்போ பக்கத்து டேபிள் ல சாப்பிட்ட ஒரு ஆள் என்னை கேவலமா ஒரு பார்வை பார்த்தான்....

இதெல்லாம் நமக்கு ஒரு கேவலமா.. போடா போடா..... நாங்க இதை விட கேவலமான பார்வையை எல்லாம் சந்திச்சவங்கன்னு மனசுக்குள்ள சொல்லிகிட்டே நம்ம வேலைல கவனமா இருந்தேன்....

திடீர்னு மசாலோவோட சேர்ந்த ஒரு சிக்கன் துண்டு இன்னொரு ஆள் சட்டைல போய் விழுந்துது.... ஹா ஹா ஹா.. நம்மள கேவலமா பார்த்தவர் கத்தி வச்சு சிக்கன் துண்ட வெட்டும் போது பீங்கான் தட்டுல வழுக்கின சிக்கன் துண்டு வெட்டின போர்ஸ்ல இன்னொரு ஆள் சட்டைல விழுந்துது.... இப்போ நான் அந்த ஆள ரொம்ப ரொம்ப ரொம்ப கேவலமா பார்த்தேன்...

கடவுள் இருக்கான்டா கொமாரு....!!!

கூத்தியார் குண்டு.



திருமலை நாயக்கன் எதேச்சையாய் தான் அவளை சந்தித்தான்... அவள் ஒரு தேவதாசி... மன்னன் அவள் மீது மையல் கொண்டான்... அவளது கடமை.. இணங்கினாள்...

மன்னன் மீண்டும் மீண்டும் தேன்குடித்த வண்டு போல அவளை சுற்றி சுற்றி வந்தான்... இச்சை கொண்ட மன்னனை தன மார்புக் கச்சைக்குள் இறுக்கி முடிந்து வைத்திருந்தாள் அவள்...

இவ்வளவு தூரம் வந்து போக வேண்டாம் என்று நினைத்த மன்னன் அவளுக்கென ஒரு அரண்மனையை கட்டி அவளை குடியமர்த்தி தன்னுடனே வைத்திருக்க ஆசைப்பட்டான்.. ஆனால் அதற்க்கு அவள் சம்மதிக்கவில்லை... இந்த மண்ணை விட்டு வரப்போவதில்லை என்பதில் தீர்மானமாயிருந்தாள்..!!

மன்னன் கெஞ்சினான்.. கொஞ்சினான்.... அதன் பின் மிஞ்சுவான் என்பது தெரிந்த தோழிகள் அவளை மன்னனுடன் போகும் படி வற்புறுத்தினர்... வேறுவழியின்றி மன்னனுடன் போக சம்மதித்தாள்... பிரதியுபகாரமாய் நான் கேட்பதை செய்ய வேண்டும் என்ற வாக்கு பெற்றாள்..

ஊருக்கு நடுவில் ஒரு பெரிய குளம் வெட்டி அதை வைகையாற்றுடன் இணைக்க வேண்டுமென கேட்டாள் அவள்...... அவளின் மார்புக்கு மத்தியில் செத்து விட கூட தயாராயிருந்த மன்னன் அவள் கேட்டதை செய்தான்... அவன் காமம் வளர்ந்து வளர்ந்து வற்ற வற்ற... அந்த ஊருக்கு வைகை ஆற்று வெள்ளம் வந்து கொண்டே இருந்தது...

வானம் பார்த்த பூமியாய் கிடந்த அந்த கிராமம் வைகை பார்த்த பூமியாய் மாறியது... பயிர்கள் செழித்தன.. உயிர்கள் வளர்ந்தன... மன்னனுடன் கிளம்பிச்சென்ற அந்த தாசி திரும்ப வரவே இல்லை... ஆனால் மக்கள் மனதில் நிரந்தரமாய் குடியேறிய அவள் ஒவ்வொரு வீட்டிலும் தெய்வமானாள்... தங்களின் நிலங்களில் விளைந்த தானியங்களை அவளை நினைத்து சலங்கைக்கு படையளிட்டனர் மக்கள்... அந்த ஊரின் பெயர் மெல்ல மெல்ல மறைந்து கடைசியில் "கூத்தியார் குண்டு" என்றானது...

அந்த தாசியின் பெயர்.... "ராஜம்மாள்".. மதுரைக்கருகில் இருக்கும் கூத்தியார் குண்டு கதை இது...!!!

தந்தைப்பாசம்....!!



என் தந்தை என் மீது வைத்திருந்த பாசத்தில் எள்ளளவும் குறைவில்லாமலோ... சில நேரம் அதை விட சற்றே அதிகமாகவோ நான் என் பிள்ளை மீது பாசத்தை பொழிகிறேன்...

நான் என் தந்தை மீது வைத்திருந்த பாசத்தின் அதே அளவோ.. அதை விட சற்று கூடக்குறையவோ என் பிள்ளை என் மீது பாசம் காட்டுவானா...??

கேள்வியும் எதிர்பார்ப்பும் நிறைத்திருகிறது.. தலை முறை இடைவெளிக்கான வெற்றிடத்தை...!!!!

நிறக்குறிப்பு



முன் குறிப்பு:- இது அரசியல் பதிவு அல்ல...

இருளில் அதிக தூரம் ஊருருவும் சக்தி சிவப்பு வெளிச்ச கதிர்களுக்கு உண்டு... இதனாலேயே வாகனங்களில் எச்சரிக்கைக்கு சிவப்பு விளக்கு , சிக்னலில் சிவப்பு விளக்கு, விமானங்களில் சிவப்பு விளக்கு போன்றவை பயன் படுகிறது...

மேலும் இரத்தம் சிவப்பாக இருப்பதால் ஆதி காலம் தொட்டே சிவப்பு நிறத்தின் மீது ஒரு பயம் இருந்துகொண்டே இருக்கும்... இதனாலேயே எச்சிரிக்கை செய்யும் எந்தவிஷயமானாலும் சிவப்பு நிறமே பயன் படுத்தப்படுகிறது....
ரயில்வேயில் சிவப்புக்கொடி... பாலியல் தொழிலாளர்கள் வசிக்கும் பகுதிக்கு சிவப்பு விளக்கு என பெயரிட்டது.. போன்றவை உட்பட...

நடுக்குறிப்பு:- இது அரசியல் பதிவு அல்ல...

நூறு வெள்ளை நிறக்கார்கள்  - நூறு சிவப்பு நிறக்கார்கள் என்ற விகிதத்தில் எடுத்துக்கொண்டு ஒரு வெளிநாட்டு நிறுவனம் நடத்திய ஆய்வில் வெள்ளை நிற கார்களை விட சிவப்பு நிற கார்களின் விபத்து அளவு சுமார் 6 0 % குறைவாக இருந்தது.. சிவப்பு நிறத்தின் மீதான மக்களின் எச்சரிக்கை உணர்வே இதன் காரணம்...

இந்த அடிப்படையில் தான் காவல் நிலையங்களுக்கும் , குற்றவாளிகளை எச்சரிக்கை செய்யும் விதமாக சிவப்பு வர்ணம் கொடுக்கப்பட்டது.... இது முற்றிலும் மனோவியல் ஆராய்ச்சியின் அடிப்படையில் செய்யப்பட்டது...

(ஓவ்வொரு நிறத்திற்கும் ஒவ்வொரு குணாதிஸ்யம் உண்டு... உங்கள் வீட்டு படுக்கை அறையில் சுவர்களுக்கு இளநீல நிறத்தை பூசி வைத்தால்  அமைதியான தூக்கம் வரும்.. வரவேற்பறையில் இளம் சிவப்பு நிறத்தை பூசும்போது விருந்தினருக்கு மகிழ்வான மனோநிலை ஏற்படும்.. உணவறைக்கு பச்சை நிறம் பூசினால் அமைதியான சூழல் நிலவும்... படிக்கும் அறைக்கு வெள்ளை நிறம் பூசினால் சாந்தமான, கவனச்சிதறலற்ற மனோ நிலை அமையும்... இப்படியாக ஒவ்வொரு நிறத்திற்கும் ஒவ்வொரு குணாதிஸ்யம் )

பின் குறிப்பு: - இது அரசியல் பதிவே அல்ல...

புகைப்படம்:- வழக்கம் போல இணையத்தில் இருந்து

எல்லாம் தெரிஞ்சவர்..


கொஞ்சம் வில்லங்கமான கதை... ஆனா விவரமான கதை...!!!

ஒரு பாலைவனப்பகுதியில ஒரு ராணுவ முகாம் அமைஞ்சு இருந்துச்சு... அங்க புதுசா ஒரு மேலதிகாரி மாற்றலாகி வந்தார்... கேம்ப சுத்தி பார்த்தப்போ அங்க ஒரு ஒட்டகம் கட்டி இருந்துச்சு...


இந்த ஒட்டகம் எதுக்காக இங்க கட்டி இருக்கு?ன்னு கேட்டார்...

அப்போ உடன் வந்த இரண்டு வீரர்கள் சொன்னாங்க... " கேப்டன்.. இங்க சூடு கொஞ்சம் அதிகம்.. வீரர்களுக்கு அடிக்கடி பாலியல் வடிகால் தேவைப்படும்...."ன்னு சொன்னாங்க...

அவங்கள மேல பேச விடாம "ஓகே ஓகே .. போதும்... எனக்கு புரிஞ்சுடுச்சு.." என்ற படி அந்த வீரர்களை முழுதாக சொல்ல விடாமல் தடுத்துவிட்டார்...

ஓரிரு நாட்கள் கழிந்தபின் ஒரு நாள் இரவு புதிதாக வந்த கேப்டன் அந்த ஒட்டகம் கட்டி இருந்த பக்கம் இருந்து தன்னுடைய பேன்டின் ஜிப்பை இழுத்து விட்டபடியே வந்தார்...

முன்பு அவருடன் வந்த அந்த இரு வீரர்களும் அதை பார்த்ததும்.. கேப்டன் என்பதையும் மறந்து விழுந்து விழுந்து சிரித்தனர்...

"எதற்காக சிரிக்கிறீர்கள்...? "

"கேப்டன்... நம்முடைய வீரர்களுக்கு பாலியல் தேவை ஏற்படும்போது அந்த ஒட்டகம் மீதேறி அருகில் இருக்கும் பாலியல் தொழிலாளிகள் இருக்கும் இடத்திற்கு சென்று வருவார்கள் என்று சொல்ல வந்தோம்... ஆனால் எங்களை பேசவே விடாத நீங்கள் இப்போது அந்த ஒட்டகத்தையல்லவா புணர்ந்து இருக்கிறீர்கள்..."

# அரசு தரப்பில் ஒரு அறிக்கை வெளிவரும் போது அதை முழுவதும் தெரிந்துகொள்ளாமல் அரைகுறையாக தெரிந்து கொண்டு, தமக்கு எல்லாமே தெரியும் என்பது போல அந்த கேப்டன் மாதிரி சிலர் ஒட்டகங்களை பபுணர்ந்துகொண்டு திரிகிறார்கள்...

எதிர்க்கட்சி அரசியல்வாதிகளுக்கு எதையாவது கிளப்பி விட்டால் தான் பிழைப்பு ஓடும்... ஆனால் எந்த காரணமும் இல்லாமல் ஃபேஸ்புக்/ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் உடனே விமர்சன கனைகளை தூக்கிக்கொண்டு திரியும் சிலரை என்ன சொல்வது????

எது கல்வி..... எதற்காக கல்வி??



பெண்கள் இயல்பாகவே நேர்மையும், கடமையுணர்ச்சியும் மிக்கவர்கள்... ஒரு வேளை சமூகம் அவர்களுக்குள் திணித்து வைத்த பயம் கூட இதற்கு காரணமாக இருக்கலாம்...

ஒரு அரசு/தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் பெண் அலுவலரை ஏதேனும் ஒரு வேலைக்காக அணுகும் போது , அவருக்கு கொடுக்கப்பட்ட வழிகாட்டும் கையேடு என்ன சொல்கிறதோ அதை மட்டுமே செய்வார்... அதில் ஏதேனும் ஒன்று குறைந்தால் கூட நிராகரித்து விடுவார்...

சில சமயம் "அவர் வேலையை மிகச்சரியாக செய்கிறார்" என்று வாதிட்டாலும் கூட நடைமுறை சிக்கல்களை பற்றி அவர் யோசிக்க மாட்டார்.. அவருக்கு யோசிக்கவும் தெரியாது...

அதே வேலையை, அதே ஆவணங்களுடன் வேறொரு ஆண் அலுவலரிடம் ஒப்படைக்கும் போது கட்டாயமாக தேவைப்படும் ஆவணங்களை தவிர கூடுதல் பலத்திற்காக (Supporting Documents) இணைக்க வேண்டிய ஆவணங்கள் இல்லை என்றாலும் கூட வேலையை முடித்துக்கொடுப்பார்... (இது லஞ்சம் சம்பத்தப்பட்ட விஷயம் இல்லை)

உதாரணமாக ஒரே மாதிரியான இரண்டு செட் ஆவணங்கள் தேவைப்படும் போது, ஒன்றில் இருக்கும் கூடுதல் இணைப்பு மற்றொன்றில் இல்லை என்றால் கூட ஆண் அலுவலர் அதை ஏற்றுக்கொள்வார்.. ஆனால் பெண் அலுவலரோ.. நீங்கள் போய் இன்னொரு காப்பி எடுத்து வாருங்கள் என்று திருப்பி அனுப்பி விடுவார்... ஆனால் காப்பி எடுக்கும் இயந்திரம் மூன்று கிலோமீட்டர் சுற்றளவிற்கு எங்குமே இருக்காது...

இதற்கு காரணம் நமது கல்வி முறை... அதை பெண்கள் கற்கும் விதம்... நமது கல்வி முறை நடைமுறை வாழ்க்கையை கற்றுக்கொடுப்பதில்லை.. பாட புத்தகங்களில் இருப்பவற்றை படித்து எழுதிவிட்டால் அவர் தேர்ச்சி பெற்று விடுவதாக இருக்கிறது... சுய சிந்தனையுடன் எடுக்கும் (எழுதும்) முடிவை விட, பாடப் புத்தகத்தில் இருக்கும் விஷயத்தை அப்படியே மனப்பாடம் செய்து பேப்பரில் எழுதிவிட்டால் முழு மதிப்பெண் கிடைக்கும்... அந்த விஷயத்தை கெட்டியாக பிடித்துக்கொள்ளும் பெண்கள் ஒரு எழுத்து கூட மாறாமல் அப்படியே ஞாபகத்தில் பதிவேற்றம் செய்து.. அதனை தேர்வறையில் பதிவிறக்கம் செய்வார்கள்... கூடுதல் மதிப்பெண்ணுடன் தேர்ச்சியும் பெறுவார்கள்...

பெரும்பாலான பெண்கள் (கவனிக்கவும்.. எல்லா பெண்களும் அல்ல) பொது ஞானம் என்பதே அற்று போயிருப்பார்கள்.. சூழ்நிலை-வாழ்க்கை பற்றிய சரியான கணிப்போ.., அணுகு முறையோ.., சமயோசித ஆற்றலோ அவர்களுக்கு கிடையாது...இருக்காது..... ஆனால் அவர்கள் இந்திய கல்வி முறையில் பல பட்டங்களை வாங்கி இருப்பார்கள்.. சீனம் கட்டிய குதிரை மாதிரி நேர் பார்வை மட்டுமே பார்ப்பார்கள்....கிட்டத்தட்ட ஒரு புரோக்கிராம் செய்யப்பட்ட ரோபோ மாதிரி...

அதனால் தான் நடைமுறை சிக்கல்கள் பற்றி அவர்களால் யோசித்து ஒரு தெளிவான முடிவு எடுக்க முடிவதில்லை...

# இங்கே எழுத்துத் தமிழில் எழுதிய விஷயத்தை நான் என் மனைவியிடம் பேச்சுத்தமிழில் சொல்லிக்கொண்டிருந்தேன்.... அப்போது அவள் கேட்டாள்....

"நீங்க ரொம்ப பொது அறிவு உள்ளவரு.. உள்ளூர் அரசியல் முதல் உலக அரசியல் வரைக்கும் பேசுவீங்க.. அமெரிக்க பொருளாதாரம், ஐரோப்பிய நாகரீகம் பத்தி பேசுவீங்க.. கிரேக்க வரலாறு... சங்ககால மன்னர்கள் கதை எல்லாம் சொல்வீங்க... ஆனா இதுவரை கிழிச்சது என்ன...?????

எங்க பக்கத்து வீட்டு பொண்ணு MCA ல காலேஜ் பர்ஸ்ட் வந்தா.. உங்களுக்கு தெரிஞ்ச எதுவும் அவளுக்கு தெரியாதுதான்.. ஆனா அவ சென்னைல ஒரு ஐ டி கம்பெனில மாசம் நாலு லட்சம் சம்பாதிக்கிறா.... நீங்க சொன்ன வாழ்க்கை கல்வி படிச்சிருந்தா அவளும் உங்கள மாதிரி வியாக்கியானம் பேசிகிட்டு ஃபேஸ்புக்ல ஸ்டேடஸ் தான் போட்டிருப்பா...."

ஷ்ஷ்ஷ்ஷ்... இவ்ளோ நேரம் உயிரை கொடுத்து பேசினேனே டி.. இப்படி ஒரு நிமிஷத்துல பீச புடுங்கிட்டியே....
மாத்துறேன்... எல்லாத்தையும் மாத்துறேன்... இந்திய கல்வி முறைய மாத்துறேன்...

யப்பா.. புண்ணியவானே... புள்ளைங்களையும் கெடுக்காம அந்த பக்கம் போறியளா.....

புகைப்படம்:- இணையத்திலிருந்து

வெள்ளி, 18 செப்டம்பர், 2015

சூப்பர் கடுதாசி....

வலைப்பதிவர் திருவிழா-2015புதுக்கோட்டை- நிகழ்ச்சியில் நடைபெறும் கட்டுரை போட்டிக்கான  பதிவு 

போட்டி பிரிவு: சுற்றுச் சூழல் விழிப்புணர்வு 


எங்க ஊர்ல மாபெரும் பணக்காரங்ககிட்டதான் மழைக்கோட்டு இருக்கும்.. இத வச்சிருக்கும்  அந்த மாபெரும் பணக்கார வீட்டு படிச்ச  புள்ளைங்க அத  "ரெயின் கோட்டு " என்று சொல்வதே பெரிய ஆச்சர்யமா இருக்கும் .  பணக்காரங்க  வீட்ல தான் குடை இருக்கும்... அந்த வீட்டு வயசான மனுஷங்களோட பாதுகாப்புல நீளமா கருப்பு துணில வளைஞ்ச கைப்புடியோட இருக்கும்.. விரிச்சு புடிச்சா மூணு ஆளு நனையாம போவலாம் 


அப்போ எல்லாம் மழை பெய்யுறப்போ  மாட்ட அவுத்து கொட்டாயில கட்டவோ, கோழி கொடப்பு மூடவோ நமக்கெல்லாம் சணல்  சாக்குதான்... சமயத்துல வயலுக்கு யூரியா வாங்கிட்டு வந்த வெள்ள சாக்கு.. அந்த சாக்க தலைகீழா திருப்பி ஒரு முக்கத்த அப்படியே உள்ள அமுக்கி மறு முக்கத்துக்குள்ள நுழச்சுட்டா இப்போ அது பாதி சாக்கு மாதிரி ஆயிடும்.... அந்த பாதி சாக்க தலைல கவுத்துகிட்டா குடை ரெடியாயிடும்...


அதுலயும் எங்க  நடைய்யா இருக்காரே... தென்னங்கீத்துலையே ஒரு பெரிய  படப்பு செய்வாரு .. அது ஒரு தொன்னை மாதிரி  ஒருபக்கம் நீளமாவும் மேல் பக்கம் வளைவாவும் இருக்கும்.. கட்டைலேயே செஞ்ச செருப்பு  இருக்கும்.. அத மிரிலி கட்டை ன்னு சொல்லுவோம் எங்க ஊர்ல.. அந்த மிரிலி கட்டைல துளை அடிச்சிருக்கும்.. அதுல பனை நாருல  காது கட்டி வச்சிருப்பாரு.. அது ரெண்டையும் பொக்கிஷம் மாதிரி வச்சிருப்பாரு...மழை காலத்துல அந்த கீத்து படப்ப தலைல மாட்டிகிட்டு மிரிலி கட்டைய கால்ல மாட்டிகிட்டு வயலுக்கு போனா காத்து மழை, சேத்து புண்ணு  எல்லாத்துல இருந்தும் பாதுகாத்துக்கலாம்...


அந்த மாதிரி சமயத்துலதான் மதுக்கூரு  மரைக்காயர் கடைல சூப்பர் கடுதாசிய செவப்பு பச்சை மஞ்ச ஊதான்னு கலர்கலரா தொங்க விட்டு வித்தாங்க.பாக்க நல்ல அழகா.. இருக்கும்... அப்படியே கைக்குள்ள அடங்கற மாதிரி மடிச்சு அழகா எடுத்துட்டு போலாம்...


அப்போ வயலுக்கு நடவு நட போற  பொம்பளைங்க எல்லாம் ஆளுக்கொரு சணல் சாக்கோ வெள்ள சாக்கோதான் எடுத்துட்டு போவாங்க... அவங்களுக்காகவே வந்துச்சு இந்த கலர்கலரா வந்த சூப்பர் கடுதாசி.. இத ஊரு வழக்குல மழை காயிதம்னு சொல்லுவாங்க 


பெரட்டாசி(புரட்டாசி ) வந்தாலே மானம் முனுமுனுன்னு தூற  ஆரம்பிச்சிடும்..  வெய்யிலுக்கு கூட செத்த நேரம் வீட்டுல சாயலாம்.. மழைல ஓஞ்சு உக்கார முடியுமா... அப்போ ஒக்காந்துட்டா குடும்பமேல்ல ஒக்காந்துடும்...மழையோட மழையா நட்டாத்தான் ஆச்சு..


நடவுக்கு வார சனமெல்லாம் ஆளுக்கு ஒண்ணா தலைல மாட்டிகிட்டு வரும்.. "ஏ  பொன்னம்மா... அடியே ராக்கு... ஏட்டி நாழியாச்சு வாங்கடி...."  கூப்பிடுவா கங்காணி பொம்பள.. (கங்காணி - கண்காணிப்பாளர்- சூபர்வைசர்) கங்காணித்தான் அந்த குழு தலைவி... அவருக்கு கங்காணி சம்பளம் ரெண்டு ரூபா கூடுதலா கிடைக்கும்...


இன்னாருக்கு நடவு நட இத்தன ஆள் போங்கன்னு ஆள் பிரிச்சு விடறதும்.. சம்பளத்த வேளாமூட்டுவல்ல ( வேளாமூடு- வேளாண்மை  செய்பவர் வீடு  ) வாங்கி பங்கு பிரிச்சு தறதும் அவரோட வேலை... இந்த மேனேசுமெண்டு சோலி  பாக்குறதால  அவரு கொஞ்சம் வெரப்பாத்தான் இருப்பார்..


"ஏ .. பொன்னம்மா..." ன்னு கூப்புடுறப்போ அந்த அதிகாரம் கொஞ்சம் தெரியும்.. ஆளுக்கொரு மழைக்காகிதத்த தலைல கவுத்துகிட்டு ஒரு வாழ நாரையோ.. சணல் கயித்தையோ சுத்தி இடுப்போட சேத்து கட்டிபுட்டா  அந்திக்கு வீட்டுல வந்து அவுக்கலாம்.. அப்படியே இருக்கும்...


அதுக்கு பொறவு.. எல்லாத்துலையும் கொஞ்சம் கொஞ்சமா வந்துட்டு சூப்பர கடுதாசி... தாழ மட்டைல கூடு மாதிரி பின்னி இருக்க உமல் பொட்டி எடுத்துகிட்டுதான் சந்தைக்கு மீனு வாங்க போவாங்க... துணிக்கடைல கொடுக்குற மஞ்ச பை எடுத்துகிட்டுதான் சந்தைக்கு சாமான் வாங்க போவாங்க...இப்போ எல்லாம் காச மட்டும் எடுத்துகிட்டு கைய வீசிக்கிட்டு  கடத்தெருவுக்கு போனா அங்க இருந்து கேரிபேக்குலையே எல்லாத்தையும் வாங்கிகிட்டு வீட்டுக்கு வந்துடலாம்...கொஞ்சம் கொஞ்சமா எல்லாத்துலையும் நொழஞ்சிடுச்சு இந்த சூப்பர் கடுதாசி... 


நம்ம ஊருபக்கம் எதுக்காக மொதல்ல நொழஞ்சுச்சோ அந்த சூப்பர் கடுதாசி.. அந்த காரணமெல்லாம் காணாம போச்சு.. ஆனா சூப்பர் கடுதாசி மட்டும் தங்கிடிச்சு..இப்போ விவசாயம் பண்ண ஆள் இல்ல.. வேலை செய்ய கூலி ஆள் கிடைக்கல... மழை சரியான நேரத்துல பெய்யிரதில்ல ..   அடுத்த தலைமொறைல பொறந்த புள்ளைங்க எல்லாம் சேத்துல மட்டுமில்ல.. நாங்க சோத்துல கூட கைவைக்க மாட்டோம்னு என்னமோ பீசாவாமே.. அதையும் கே எப்பு சியையும் கரண்டில சாப்பிடுற நாகரிகத்த கத்துகிட்டாங்க...வயக்காடெல்லாம் தருசுக்காடா கெடக்கு..

ஆனா மழைக்காகிதமா உள்ள வந்த சூப்பரு கடுதாசி மட்டும்.. அந்த தரிசுலயும் கெடக்கு.. ரோட்டுலயும் கெடக்கு.. வீட்டுல கண்ட இடமெல்லாம் கெடக்கு..ஏ பொன்னம்மான்னு அடுத்த தெருவுல இருக்குற பொன்னம்மாவ சத்தம் போட்டு நடவுக்கு கூப்புட்டவங்க இப்போ  குனு குனுன்னு செல்லுல பேச தொடங்கிட்டாங்க..

அப்போ  எல்லாம் அழகா  பூ  பூவா  பின்னின  வயர் கூடை வச்சிருப்பாங்க.. கட-கன்னிக்கு போகனும்னா  அந்த கூடையத்தான் எடுத்துட்டு  போவாங்க.. அஞ்சாறு வருஷம் ஒரே கூடை பைதான்... மீன் வாங்கன்னு  தாழம் ஓலைல பின்னின  ஒரு பை வச்சிருப்பாங்க...அதுக்கு உமலு பொட்டின்னு பேரு..அதை எடுத்துகிட்டுதான்  மீன் வாங்க  போவாங்க... ஆட்டுக்கறி வாங்கினா  பச்சையா  வெட்டி வெயில்ல வதங்க போட்ட பனை மட்டை ல கட்டி தருவாங்க... 

ஆனா இப்போ  ஜனங்க என்ன வாங்க போனாலும் காசும், செல்போனும்  மட்டும் இருந்தா போதும்னு முடிவுபண்ணிட்டாங்க ... உமல் பொட்டி எடுத்துகிட்டு  மீன் வாங்க  போனா  கடைக்காரன் வேற்று கிரகத்துல  இருந்த வந்தவன  பார்க்கிற மாதிரி பார்க்கிறான்... காய்கறிக்கடைக்கு பை எடுத்துகிட்டு காய்கறி வாங்க  போனா   எங்க பக்கத்து  ஊரான லண்டன்ல (அட... அந்த எலிசபெத் ராணி  இருப்பாங்களே... அதே லண்டன்தான்) இருந்து காய்கறி வாங்க வந்தவன் நம்மள நக்கலா  பார்க்கிறான்..

மீன் வாங்கிட்டு வர வச்சிருந்த உமலு பொட்டியோ , கறி கட்டி வாங்கிட்டு வந்த பனை ஓலையோ கொஞ்ச நாள்லயே  கரையான் அரிச்சோ, மக்கியோ மண்ணோட மண்ணா  போய்டும்... ஆனா  பத்து வருஷத்துக்கு முன்னாடி வாங்கின பிளாஸ்டிக் கேரி பேக்கும், பிளாஸ்டிக் கொடமும்  இன்னமும் மக்காம அப்படியே கெடக்கு..

காய்கறி கழிவுகளையும், மாட்டு சாணத்தையும், வைக்கோலையும் போட்டு நிரப்பி இருந்த குப்பைக்குழில  இப்போ கலரு கலரா  கேரிபேக்குதான்  கெடக்கு... குப்பை குழில  தூண்டில் பொட்டு மீனு புடிக்க ஏரிக்கு போக குப்பை குழில மம்பட்டி எடுத்து ஒரு கொட்டு வெட்டினா  மம்புழுவா (மண்புழு) நெளியும்... இப்போ  மம்புழுவை பார்க்கிறதே  அரிதாகிப்போச்சு...

உமலு பொட்டிய  காணோம்..
முதலியார் ஜவளி கடைல கொடுக்கிற  மஞ்ச துணிப்பைய காணோம்..
பனை ஓலைய  காணோம்..
விசிறி மட்டைய  காணோம்..
மிரிலி கட்டைய  காணோம்..
கொடலை மட்டைய  காணோம்..
மண்புழுவ காணோம்... 
பாப்பா பூச்சிய  காணோம்..

இப்படி எத்தனை எத்தனை காணோம்கள்... ஆனா அத்தனையோட  இடத்துலயும் ஒரே ஒரு விஷயம் தான் நீக்கமற நிறைஞ்சி கெடக்கு..
எங்க  பாத்தாலும்  எதுல  பாத்தாலும்  கலரு கலரா  பிளாஸ்டிக் தான் தெரியுது..


ரோட்டுல காலைல அவுத்து விட்டா மேயப்போற மாடுங்க ரோட்டுல சாணி போட்டு வைச்சு அத கால்ல மிதிச்சுடோம்னு ஓடிப்போய் கழுவுன புள்ளைங்க நவீனமா கொண்டு வந்த சூப்பரு கடுதாசி மச்சும் போவாம மண்ணாவும் போவாம எங்க பாத்தாலும் கலர் கலரா எறஞ்சு கிடக்கு...

இயற்கையா  கிடைச்ச பொருட்களை  தினசரி உபயோகத்துக்கு  தேவையான பொருட்களா  மாற்றி  இயற்கையோடு இணைஞ்சு வாழ்ந்த  மக்களை.. நாகரீகம்னு நம்பவச்சு  மனித லுலத்தையும் இயற்கையையும் சீரழிக்கிற பிளாஸ்டிக் எமன பயன்படுத்த வச்சுட்டாங்க... அப்பாவி ஜனங்களும் அதோட அழிக்கும் சக்தி தெரியாம பயன்படுத்திகிட்டிருக்காங்க.. அதாவது  தன்னோட  விரலால  தன்னோட  கண்ண குத்திகிட்ட்டிருகாங்க.....

 சூப்பருன்னு பேரூ வச்சாலே நம்மூரு சனத்தோட மனசுல ஒட்டிக்கிடலாம்.. ஆனா சூப்பருன்னு பேருவச்ச எதாலையும் நமக்கு ஒரு புண்ணியமும் இல்ல...


மரைக்காயர் கடைல கலர் கலரா தொங்கவிட்டப்போ இருந்த ஆசை இல்ல இப்போ எல்லாம்.. அந்த கலார எங்க பாத்தாலும் பத்திகிட்டு வருது....