திருவிழா காலத்தில் தெரு முனைகளில் அந்த பாட்டுக்கார பெண்மணிகள் பாட ஆரம்பித்தார்கள்... வழி வழியாய், வாய் மொழியாய் கடத்தப்பட்ட வரலாறுகளை பாடல் வழியாய் அவர்கள் பரப்பிக்கொண்டிருந்தார்கள்.
பாட்டுக்கார பெண்மணிகள் பாடிய வரலாறு.. ஒரு தாசியின் கதை... "ஒரு தாசிக்கு கோயில் கட்டுவதா..?" என்ற ஆத்திரம் செல்வ சீமான்களுக்கு ஏற்பட்டது... ஏனென்றால் அந்த செல்வ சீமான்களை அந்த தாசி தன்னுடைய செயலால் செருப்பால் அடித்தவள்.. அந்த ஆத்திரம் அவர்களுக்கு... சிலை செய்ய வந்த சிற்பியை விலைக்கு வாங்கி "சிலை செய்ய கூடாது.. செய்ய முடியாது" என்று சொல்ல வைத்தனர்... பாடிக்கொண்டிருந்த பெண்மணிகளுக்கு தானியங்களை அள்ளிக்கொடுத்து மௌனமாக்கினர்...
அந்த தாசி.. மரணம் வரை அள்ளிக்கொடுத்தவள்... மக்கள் மனதிலிருந்து அழிக்கும் செல்வ சீமான்களின் முயற்சியில் கூட தானியங்களை அள்ளிக்கொடுத்தவள்...
பாட்டுக்கார பெண்மணிகள் தானியங்களை வாங்கிக்கொண்டு அந்த தாசியை பாட மறந்தனர்.. நாளடைவில் கொஞ்சம் கொஞ்சமாய் அந்த தாசி மக்கள் மனதிலும் மறைந்தே போனாள்....
யார் அந்த தாசி...?? மக்கள் கோயில் கட்டும் அளவிற்கு அவள் என்ன செய்தாள்..??? செல்வந்தர்கள் அவளை ஏன் வெறுத்து மறைத்தனர்...?? கேள்வி எழுகிறதுதானே....??? விடை தேடி நாம் 18 ம் நூற்றாண்டின் இறுதிக்கு பயணிப்போமா...??
குஞ்சரம்மாள்....
கூடல் நகரின் ஆவணி வீதியில் இருந்தது அவள் வீடு... சுந்தரேஸ்வரருக்கு பொட்டு கட்டிய தாசி அவள்... செல்வந்தர்களும் ஜமீன்களும் மைனர்களும் அவளுடன் ஒரு இரவை கழிக்க ஆயிரக்கணக்கில் செலவழிக்க தயாராக இருந்த பேரழகி.... அவளை ஒரு முறை பார்க்காவிட்டால் இந்த ஜென்மமே வீணென நினைக்க வைத்த சுந்தரி... அவள் இல்லத்தின் வாசலில் சுற்றுப்பட்டு ஜமீன்களின் கூண்டு வண்டிகளும் கோச் வண்டிகளும் தவமிருக்கும்... ஆவணி வீதியின் இரண்டு பங்களாக்களையும், அணிகலன்களில் எத்தனை வகை உண்டோ அத்தனையும் அவள் சொந்தமாக்கிக்கொண்டிருந்தாள
அது ஆங்கிலேயர்களின் ஆட்சி.... சில பல தந்திரங்கள்-அடக்குமுறைகளை கையாண்டு நகர நிர்வாகத்தை ஓரளவுக்கு முழுமையாய் கட்டுக்குள் கொண்டு வந்திருந்தார்கள்... மக்களை அடக்க தெரிந்த அவர்களால் இயற்கையை எதுவும் செய்ய முடியவில்லை... வானம் பொய்த்தது.... அதுவரை அனுபவித்திராத பஞ்சம் கோரத்தாண்டவமாடியது.. எலும்புக்கும் தோலுக்கும் இடைவெளி குறைந்து ஒன்றை ஒன்று உறவாடி களித்தன... நடக்கவே ஜீவனற்ற மக்கள் ஒரு பிடி கம்மங்களிக்கோ.. ஒரு குவளை கேப்பை கூழுக்கோ எதையும் செய்யலாம் என்ற நிலைமையில் தள்ளப்பட்டனர்...
வணிகர்களும் வசதிக்காரர்களும் தங்களிடம் இருந்த உணவுப்பொருட்களை பதுக்கி வைத்து அவர்கள் தேவைக்கும் ஆசைக்கும் பயன்படுத்தினர்.. ஆட்சியில் இருந்த ஆங்கில துரைகளோ.. கொண்டாட்டங்களிலும் கேளிக்கைகளிலும் காலம் கடத்தினர்...
தனியொரு ஆளாய் களமிறங்கினாள் தாசி குஞ்சரம்மாள்.. அவள் வீட்டில் அடுப்பை பஞ்சத்திற்கெதிராய் பற்றவைத்தாள்.. தேடி வந்தவர்களுக்கெல்லாம் கஞ்சி ஊற்றினாள்.. பஞ்சப்பசியோடு அலைந்த சனமெல்லாம் அவள் வீட்டு வாசலில் தஞ்சமடைந்தது... ஆவணி வீதியில் தாசி வீட்டில் கஞ்சி ஊற்றுகிறார்கள் என்ற செய்தி காற்றோடு கலக்க கலக்க குஞ்சரம்மாள் வீட்டு வாசல் வரை நின்ற கூட்டம் தெருவெல்லாம் நிறைந்தது... கூட்டம் நிறைய நிறைய... பஞ்சத்தில் துடித்த உயிர்களின் வயிற்று ஈரத்தால் உயிரை போக விடாமல் இழுத்து நிறுத்த நிறுத்த... குஞ்சரம்மாளின் சொத்துக்கள் கரைய கரைய..... கஞ்சி ஊற்றிக்கொண்டே இருந்தாள்... இயற்கையை எதிர்த்து யாரால் போராட முடியும்....?? ஓராண்டுகளுக்குள் குஞ்சரம்மாள் மச்சு வீட்டில் இருந்து குச்சு வீட்டுக்கு குடி பெயர்ந்தாள்....
இந்த தாசியின் செயல் செல்வந்தர்களை செருப்பால் அடித்தது.. ஜமீன்களை குற்ற உணர்ச்சி பீடித்தது.. அரசாங்கத்தை அவமானப் படுத்தியது... அதன் பிறகு அரசே சில இடங்களில் கஞ்சித் தொட்டியை திறக்க ஆரம்பித்தது....
வாராது வந்த மாமழையால் கொஞ்சம் பஞ்சம் தெளிந்தது... ஒரு நாள் இரவில் உறங்கச்சென்ற குஞ்சரம்மாள் எழவே இல்லை... கடைசியில் மரணம் அவளை அள்ளி எடுத்து அணைத்துக்கொண்டது.... தகவலறிந்த சனமெல்லாம் அதை தங்கள் வீட்டு இழவாய் கருதியது.. தங்கள் ஊணிலும் உயிரிலும் குஞ்சரம்மாள் கலந்திருந்ததால் கண்ணீரால் அவளை குளிப்பாட்டினர்...
இந்த பூமியில் நிலைகொள்ள தன்னையே அற்பணித்த தாசிக்கு நன்றிக்கடன் என்ன செய்வதென யோசித்தனர்... தங்கள் வீட்டு குலதெய்வப் படையலில் சலங்கைகளை வைத்தனர்... ஆம்.. அந்த சலங்கைதான் குஞ்சரம்மாள்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக