புதன், 7 செப்டம்பர், 2016

கூத்தியார் குண்டு.திருமலை நாயக்கன் எதேச்சையாய் தான் அவளை சந்தித்தான்... அவள் ஒரு தேவதாசி... மன்னன் அவள் மீது மையல் கொண்டான்... அவளது கடமை.. இணங்கினாள்...

மன்னன் மீண்டும் மீண்டும் தேன்குடித்த வண்டு போல அவளை சுற்றி சுற்றி வந்தான்... இச்சை கொண்ட மன்னனை தன மார்புக் கச்சைக்குள் இறுக்கி முடிந்து வைத்திருந்தாள் அவள்...

இவ்வளவு தூரம் வந்து போக வேண்டாம் என்று நினைத்த மன்னன் அவளுக்கென ஒரு அரண்மனையை கட்டி அவளை குடியமர்த்தி தன்னுடனே வைத்திருக்க ஆசைப்பட்டான்.. ஆனால் அதற்க்கு அவள் சம்மதிக்கவில்லை... இந்த மண்ணை விட்டு வரப்போவதில்லை என்பதில் தீர்மானமாயிருந்தாள்..!!

மன்னன் கெஞ்சினான்.. கொஞ்சினான்.... அதன் பின் மிஞ்சுவான் என்பது தெரிந்த தோழிகள் அவளை மன்னனுடன் போகும் படி வற்புறுத்தினர்... வேறுவழியின்றி மன்னனுடன் போக சம்மதித்தாள்... பிரதியுபகாரமாய் நான் கேட்பதை செய்ய வேண்டும் என்ற வாக்கு பெற்றாள்..

ஊருக்கு நடுவில் ஒரு பெரிய குளம் வெட்டி அதை வைகையாற்றுடன் இணைக்க வேண்டுமென கேட்டாள் அவள்...... அவளின் மார்புக்கு மத்தியில் செத்து விட கூட தயாராயிருந்த மன்னன் அவள் கேட்டதை செய்தான்... அவன் காமம் வளர்ந்து வளர்ந்து வற்ற வற்ற... அந்த ஊருக்கு வைகை ஆற்று வெள்ளம் வந்து கொண்டே இருந்தது...

வானம் பார்த்த பூமியாய் கிடந்த அந்த கிராமம் வைகை பார்த்த பூமியாய் மாறியது... பயிர்கள் செழித்தன.. உயிர்கள் வளர்ந்தன... மன்னனுடன் கிளம்பிச்சென்ற அந்த தாசி திரும்ப வரவே இல்லை... ஆனால் மக்கள் மனதில் நிரந்தரமாய் குடியேறிய அவள் ஒவ்வொரு வீட்டிலும் தெய்வமானாள்... தங்களின் நிலங்களில் விளைந்த தானியங்களை அவளை நினைத்து சலங்கைக்கு படையளிட்டனர் மக்கள்... அந்த ஊரின் பெயர் மெல்ல மெல்ல மறைந்து கடைசியில் "கூத்தியார் குண்டு" என்றானது...

அந்த தாசியின் பெயர்.... "ராஜம்மாள்".. மதுரைக்கருகில் இருக்கும் கூத்தியார் குண்டு கதை இது...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக