புதன், 7 செப்டம்பர், 2016

முளைப்பாரியும் ஃபேஸ்புக்கும் !!



ஆடி மாசம் மேட்டூர் அணை திறந்து ஆத்து நிறைய தண்ணி போவும்... ஆடி பதினெட்டு அன்னிக்கு ஊர்ல இருக்க பொண்டுக புள்ளைகளெல்லாம் பாலிய கொண்டு போய் அந்த ஆத்து தண்ணில பிச்சு கரைப்பாங்க... (பாலி- முளைப்பாரி என்று சொல்வார்கள்) 

ஆடிமாசம் பத்தாந்தேதி வாக்குல ஒரு தாம்பாளத்துல தொழு உரத்த நிரப்பி அதுல நவதானியங்கள போட்டு தண்ணி தெளிச்சு ஒரு கூடடைய போட்டு கவுத்து வெளிச்சம் படாம மூடி வைப்பாங்க... அப்புறம் தினம் தினம் அதிகாலைளையும் சாயங்காலமும் திறந்து தண்ணி தெளிச்சு உடனே மூடிடுவாங்க... அது நல்லா முளைச்சு வளரும்... சூரிய ஒளி படாம இருக்கறதால நல்ல உயரமா வளரும்.. அதே நேரம் இளமஞ்சள் நிறத்துல அழகா இருக்கும்...

பொண்டுக புள்ளைங்க அப்படி மொளைக்க வச்சு தூக்கிட்டு வந்த பாலிய எல்லாம் ஆத்துக்கரைல ஒரு திட்டாணி போட்டு, அதுல புள்ளையார் புடிச்சு வச்சு கும்மி அடிச்சு பாட்டு பாடி அப்புறம் ஆத்துல பிச்சு விடுவாங்க...

அப்படி கொண்டு வந்து எல்லா பாலியும் ஒரு இடத்துல வைக்கும் போது யாரோடது உயரமா இருக்குன்னும் , யாரோடது பச்சையா இல்லாம மஞ்சளா இருக்குன்னும் வயசுப் பொண்ணுங்களுக்குள்ள ஒரு போட்டி நடக்கும்... அப்படி கும்பலா வச்சிருக்க பாலிகள்ள ஒரு சிலது மட்டும் உயரம் குறைவா வளர்ந்திருக்கும்... நல்ல பச்சை கலரா இருக்கும்... அத வச்சு கிண்டல் பண்ணிக்குவாங்க...

அந்த பாலி ஏன் அடர் பச்சையா, உயரம் குறைவா வளர்ந்திருக்குன்னு பார்த்தா.. அந்த வீட்டுல இருக்க நண்டு சிண்டுகளோட , குஞ்சு குளுவான்களோட (அதாவது சின்ன பசங்க ) வேலைதான் அது... முளைக்க வச்ச அடுத்த நாள்ல இருந்து ஒரு நாளைக்கு அம்பது தடவை திறந்து திறந்து பாப்பாங்க.... முளைச்சிடுச்சா.. வளர்ந்துடுச்சான்னு... அப்படி அம்பது தடவை திறக்கும் போது சூரிய வெளிச்சம் கிடைக்கிறதால அந்த செடி வேகமா வளராது.. அடர் பச்சையாவும் ஆயிடும்...

இப்போ எதுக்குடா இந்த கதை???

அந்த சின்ன குழந்தைகளுக்கு இருக்க அதே ஆர்வ கோளாறுதான் நமக்கும்... ஒரு நாளைக்கு அம்பது தடவைக்கும் மேல பேஸ்புக் ஓபன் பண்ணி பண்ணி நோடிபிகேஷன் எல்லாம் பார்க்கிறேன்... நம்ம நோடிபிகேஷன் பாக்ஸ் அந்த அடர் பச்சை பாலி மாதிரி கொஞ்சமே கொஞ்சம் தான் வளர்ந்திருக்கும்...

ஒரு மூணு மணி நேர பிரேக்ல நூத்தம்பது நோடிபிகேஷன்... ஓவர் நைட் ல ஒலக பிரபலமாயிட்டோமோன்னு பரபரப்பாயிட்டேன்... அட... தம்பி முத்து ராஜ் நம்ம பழைய பதிவ எல்லாம் தோண்டி எடுத்து துடைச்சு பார்த்திருக்கான்....

என்னமோ போங்க....!!!! எதை எதோட எல்லாம் கோர்த்து கோர்த்து யோசிக்க வேண்டி இருக்கு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக