சனி, 9 மே, 2015

கமலஹாசனுக்கு பின்னால் பத்தாண்டுகள் நாம்

சுவர் ஓவியர்களின் வாழ்வாதாரம் போனதாய் போராடினார்கள்... அதற்காக ப்ளெக்ஸ் போர்டுகள் வராமலில்லை... சுவர் ஓவியர்கள் யாரும் தற்கொலைசெய்துகொள்ளவில்லை... ( தற்கொலை செய்யவேண்டும் என்று எதிர்பார்த்தாயா.. என்று அதிபுத்திசாலித்தனமாய் கேட்கும் அளவிற்கு என் நண்பர்களில் யாரும் முட்டாளில்லை என்பது என் எண்ணம் )
அந்த தொழில்நுட்ப மாற்றத்தை நாம் ஏற்றுக்கொண்டோம்.. அந்த சுவர் ஓவியர்களும் வேறு வேலை செய்து பிழைக்க க
ற்றுக்கொண்டார்கள்..
இதில் இன்னும் கூடுதல் வளர்ச்சியே.. அந்த சுவர் ஓவியர்களே நண்பனின் திருமணத்திற்கோ- தாம் சார்ந்திருக்கும் கட்சியின் தலைவருக்கோ தங்களின் புகைப்படத்துடன் வாழ்த்து பதாகைகள் வைத்துக்கொண்டிருகிறார்கள்..

ஒருகாலத்தில் தெருக்கூத்துக்கள், பாவை கூத்துக்கள்,மேடை நாடகங்களை ஒழித்துத்தான் திரைப்படங்கள் வந்தது... திரையரங்குகள் வந்தது... இது தொழில் நுட்ப வளர்ச்சி என்றால்.... திருட்டு வி சி டி யாகவும்.. தொலைக்காட்சி பெட்டி வாயிலாகவும் அந்த திரைப்படங்கள் நம் வீட்டு கூடத்திற்கு வந்ததும் தொழில் நுட்ப வளர்ச்சிதான்.. இதன் அடுத்தகட்டம் தான் திரைப்படம் வெளியிடப்படும் அன்றே DTH ல் ஒளிபரப்பு செய்வதும்...

இதனை வரவேற்கத்தான் வேண்டும்... கமலஹாசன் சொல்வது எதுதான் நமக்கு உடனே புரிந்திருக்கிறது..?? அதற்கு நாம் இன்னும் பத்தாண்டுகளாவது வளரவேண்டும்..!!!

உடையும் தனிக்குடித்தனம்

நாம் எது நடக்க கூடாது என்று அலறிக்கொண்டிருக்கிரோமோ... எது நடந்துவிடும் என்று அஞ்சிக்கிடந்தோமோ அந்த விஷயம் மெல்ல தொடங்கி இருக்கிறது... 
நடுக்கூடத்திற்குள் வந்து உட்கார்ந்த நரகம் இந்த தொலைகாட்சி பெட்டிகள் வாயிலாக கூட்டுக்குடும்பத்தை கூறு போட்டு தனிக்குடும்பமாக்கி.... ஒரு குடும்பத்தை நான்கு குடும்பமாக்கி தன்னுடைய தயாரிப்புகளை ( டி வி, வாஷிங் மெஷின், ரெப்ரிஜிரேட்டர்... இத்யாதி.. இத்யாதி...) நான்கு மடங
்காய் உயர்த்திக்கொள்ள திட்டமிட்ட கார்பொரேட் கம்பெனிகள், கூட்டுக்குடித்தனம் என்னவோ சர்வதேச குற்றம் போல் ஒரு மாயையை ஏற்படுத்தி... இங்கே எலும்பு பொறுக்கி படைப்பாளிகளை வைத்து நெடுந்தொடர்களையும், விவாத நிகழ்ச்சிகளையும் ஊக்குவித்து அதில் ஓரளவு வெற்றியும் பெற்று விட்டன...
மாமியாருக்கு மருமகள் மீதும்.. மருமகளுக்கு மாமியார் மீதும் காழ்ப்புணர்ச்சியை வளர்த்ததன் மூலம் அவர்களை இரு வேறு துருவங்களாக்கி இருக்கின்றன.. தன்னால் நேரடியாக காட்டிக்கொள்ளமுடியாமல் சகிப்புத்தன்மை அறவே தொலைத்திருந்த குடும்பத்தலைவிகளுக்கு தூபம் போடும் வேலையை இன்றளவும் மிக ஆர்வமாய் செய்வதில் முனைப்பாயிருக்கின்றனர்.. அந்த எலும்பு துண்டு பொறுக்கி படைப்பாளிகளை ஊக்குவிப்பதில் மும்முரமாயிருக்கும் கார்பொரேட் நிறுவனங்கள் தமது அடுத்த கணையை தொடுக்க ஆரம்பித்திருக்கிறது...

சமீபகாலமாக ஒளிபரப்பாகும் எல் அன்ட் டி மியூச்சுவல் ஃபண்டு நிறுவன விளம்பரம் மூலமாக... கணவனையும் மனைவியையும் தனிக்குடித்தனமாக்கியவர்கள்.. இப்போது கணவனுக்காக சமைப்பது பெண்களின் அடிமைத்தனமெனவும்.. அதை சாப்பிடுவது ஆண்களின் அடிமைத்தனமெனவும் 
பொருள்ப்படும்படியாய் ஒரு விளம்பரத்தை முன்வைக்கிறார்கள்...

நமது செய்தி ஊடக துறையோ.. கலாச்சார பாதுகாப்புதுறையோ இதை எல்லாம் கவனிக்கப்போவதில்லை... ஈமு கோழிகள் தங்கத்தில் முட்டை இடும் என்பது போன்ற பொதுமக்களின் பணத்தை குறிவைத்த விளம்பரத்தையே கவனிக்காதவர்கள் தான் கலாச்சாரம் பற்றி கவலைப்பட போகிறார்களா...???
ஊதுற சங்க ஊதி வைப்போம்...!!!

ஒரு அசைவ கதை.... ஆனால் அர்த்தம் நிறைந்த கதை

ஒரு ராணுவ அதிகாரிக்கு தனக்கு எல்லாம் தெரியும் என்று ஒரு நினைப்பு... யார் என்ன சொன்னாலும் பாதி சொல்வதற்கு முன்பே இது எனக்கு தெரிந்த விஷயம் தான் என்று சொல்லி , விஷயத்தை சொல்ல வந்தவரின் மூக்கை உடைப்பதை வாடிக்கையாகவே வைத்திருந்தார்...
அவர் ஒரு முறை புதிய கேம்ப் ஒன்றிற்கு பொறுப்பெடுக்க வந்தார்.. அங்கு ஒரு பெண் குதிரை கட்டப்பட்டிருந்தது... அந்த குதிரை ஏன் என
விசாரித்தார் ராணுவ அதிகாரி.. அங்கிருந்த வீரன் சொன்னான்... "நமது வீரர்கள் மனைவியை பிரிந்து தனியாக இங்கே இருக்கிறார்கள்.. அவர்களுக்கு பாலியல் விருப்பங்கள் ஏற்படும் போது..." இதுவரை சொல்லும்போதே அந்த ராணுவ அதிகாரி இடை மரித்தார்..." சரி சரி.. எனக்கு விஷயம் புரிகிறது... நீ சொல்ல வேண்டாம் " என்றார்...

ஒரு நாளிரவில் அந்த ராணுவ அதிகாரி தன்னுடைய உள்ளாடைகளை கையில் எடுத்துக்கொண்டு அந்த குதிரையின் அருகில் இருந்து வந்தார்.. அதைக்கண்ட ராணுவ வீரன் (முதலில் விஷயத்தை சொன்னவன்) அதிர்ச்சி அடைந்து பின் பெரிதாக நகைத்தான்.... கோபப்பட்ட ராணுவ அதிகாரியோ... "ஏன் சிரிக்கிறாய்..." என கேட்டார்... " அய்யா.... நமது ராணுவ வீரர்களுக்கு பாலியல் ஆசை வரும்போது அந்த குதிரையில் ஏறி பக்கத்திலிருக்கும் சிவப்பு விளக்கு பகுதிக்கு சென்று வருவார்கள்... என நான் சொல்ல வந்ததை பாதியிலேயே சொல்ல விடாமல் தடுத்து இப்படி செய்து விட்டீர்களே ..." என்றான்..

நீதி :- எதையும் அரைகுறையாக கேட்டோ பார்த்தோ படித்தோ ஒரு முடிவுக்கு வந்து விடாதீர்கள்.. அது உங்களுக்கு பேராபத்தாக முடியலாம்...

(சுமார் 20-22 வருடங்கள் முன்பு பாக்யா வார இதழில் திரு,.பாக்யராஜ் அவர்கள் சொன்னது )

ஆடு நனைகிறதே என்று...

சுமார் ஒன்பது மாத உழைப்பில் ஒரு வாழைக்கன்றை நட்டு வளர்த்து அதில் சுமார் நூறு காய்களுடன் கூடிய ஒரு தார் விளைந்தது... அதனை வெட்டி எடுத்துக்கொண்டு அருகில் இருக்கும் சிறு நகரமான மதுக்கூருக்குச் சென்றேன்.. 

ஒரு நான்கைந்து கடைகளில் விசாரித்த போது 
"அட இதெல்லாம் யார் வாகுறாங்க தம்பி... நீங்க கொண்டு வந்துட்டீங்களேன்னு என்ன செய்றதுன்னு வேணும்னா வாங்கிக்கிறேன்.." என்று சொல்லிய படி ஒருவர் முப்பது ரூபாய் தருவதாகவும் . இன்னொருவர் நாற்பத்தந்து ரூபாய் தருவதாகவும் சொன்னார்கள்.. 

அதில் நாற்பத்தைந்து ரூபாய் தருவதாகச் சொன்னவரிடம் கெஞ்சிக் கூத்தாடி ஐம்பது ரூபாய்க்கு எடுத்துக்கொள்ளச் சொன்னேன்..
அவர் எதோ போனால் போகிறதென்று 
புண்ணியத்திற்கு வாங்கிக்கொள்வதுபோல் 
வாங்கிக் கொண்டார்..

கவனிக்கவும் .... அந்த வாழைத்தாரை விளைய வைக்க மின் மோட்டாரில் தண்ணீர் இறைத்த செலவு, இயற்கை எரு, என்னுடைய உழைப்பு, விளைந்த பின் அதனை விற்பனைக்கு எடுத்துச் செல்ல வாகனத்தின் பெட்ரோல் செலவு எல்லாம் தோராயமாக எவ்வளவு இருக்குமென்று கணக்கிட்டு கொள்ளுங்கள். 
ஆனால் அப்படிப் போனபின் அதனைத் திரும்ப எடுத்து வந்தால் எத்தனை நாளைக்கு என்னால் அதில் கூட்டு பொரியல் செய்ய முடியும்..?? அதை என்னால் ஒரு மாதம் வைத்திருக்க முடியுமா..?? விவசாயியின் அடிப்படைப் பிரச்சினைகள் இவை.. இனாமாகக் கொடுத்தால் வாங்கிக்கொள்ள தயாராயிருக்கும் அக்கம் பக்கத்தாரோ காசு என்றால் வேண்டாம் என்று சொல்லி விடுவார்கள் 

இதற்குப் பிறகுதான் இருக்கிறது முக்கியமான நிகழ்ச்சியே.. ... ஆம் .. ஐம்பது ரூபாயை அந்த கடைக்காரரிடம் வாங்கிக்கொண்டு வந்து ஒரு டீ கடையில் அமர்ந்து இருந்தேன்.. அப்போது என்னுடைய நண்பர் ஒருவர் வீட்டிற்கு காய்கறிகள் வாங்கிக்கொண்டு வந்தார்.. அதில் வாழைக்காயும் இருந்தது... தாய்க்கு தெரியாதா பிள்ளையை.... ஆம்.. அது நான் விற்பனை செய்துவிட்டு வந்த வாழைத்தாரின் காய்தான்... "எவ்ளோண்ணே கொடுத்தீங்க ..." "அட ஒரு காய் ரெண்டு ரூபாய்க்கு குறையலன்னுட்டான்யா... வாழக்காயே வரதில்லேன்னு சொல்றான்.." என்றார்...

சுமார் நூறு காய்கள் இருந்த அந்த வாழைத்தாரில் ஒரு காய் இரண்டு ரூபாய்.. ஆனால் என்னிடம் அவர் புண்ணியத்திற்காக சேர்த்து கொடுத்த ஐந்து ரூபாயும் சேர்த்து ஐம்பது ரூபாய்... 

இவர்கள் தான் அண்ணாச்சிகள்... 
இவர்கள் தான் விவசாயியும் உற்பத்தியாளர்களும் பாதிக்கப்பட்டு விடுவார்களோ என்று அந்நிய முதலீட்டை எதிர்க்கிறார்களாம்...

மனிதர்களை படிப்போம்..

பணி நிமித்த பயணமாக துபாய் செல்ல நேர்ந்தது.. நண்பர் தோஹா விமான நிலையத்தில் இறக்கிவிட்டு இனிமையான பயணத்திற்கு வாழ்த்தி விடை பெற்றார்.. குறைந்த பட்சம் இரண்டு மணி நேரமாவது காத்திருப்பு அறையில் இருக்கவேண்டுமென்பதால் உள் நுழையும் முன்பு ஒரு சிகரெட்டை பற்றவைத்து ஆழமாய் உள்ளிழுத்து நிதானமாய் புகைத்தேன்.. விமான நிலையத்தின் உட்பகுதியிலேயே புகைப்பதர்கென்று தனி இடம் ஒதுக்கி இருப்பதை அறிந்திருந்தாலும் அதற்குள் அமர்ந்து பலதரப்பட்ட பிராண்ட் சிகரெட் புகை மண்டலத்தில் மூச்சு திணறுமே தவிர ரசிக்கும் மனநிலை தவறிப்போய் விடுமென்பதால் அதனை அவ்வளவாய் விரும்புவதில்லை..
கடவுச்சீட்டு மற்றும் சுங்கச்சோதனையின் நீண்ட வரிசயில் காத்திருந்து அவைகள் முடிந்த உடன் காத்திருப்பு அறை நோக்கி நகர்ந்தேன்... 
என்னை ஏந்திச்செல்ல ஏதோ ஒரு அல்லாய் பறவை உள்ளே காத்திருக்கிறது..
ஒரு தோளில் உறுத்திய மடிக்கணினி பையையும் மற்றொரு புறம் உறுத்திய உடைகள் அடங்கிய பையையும் கீழிறக்கி ஆசுவாசப்படுத்திய பின் மடிக்கணினியை திறந்து முகநூல் பக்கத்தை திறந்தேன். திடீரென லேசாய் ஒரு ஞானம்.. இதைதான் தினசரி முறைத்துக்கொண்டு அமர்ந்திருக்கிறோமே.. இன்று வேறு எதையாவது செய்யலாம்..
தலையை நிமிர்த்தி சுற்றுமுற்றும் பார்த்தேன்.. பலதரப்பட்ட , பல்வேறு நாடுகளை சேர்ந்த மனிதர்கள்.. ஒவ்வொருவர் முகங்களிலும் ஒவ்வொரு விதமான உணர்ச்சி வெளிப்பாடுகள்.. மொழிகள் தொலைத்த அந்த முகங்கள் பேசியவை ஒரு மனிதனால் புரியக்கூடிய பாஷை..
எதைபற்றியும் கவலைப்படாமல் தன்னுடைய அண்ணனை துரத்தி பிடிக்க ஓடிக்கொண்டிருக்கும் சிறுமி.. அவர்களை கண்காணித்தபடியே பர்தாவின் உள்ளிருந்து கண்காணிக்கும் தாயின் கண்கள்.... பக்கத்திலிருக்கும் மனிதனை புறக்கணித்து உலகின் எங்கோ ஒரு மூலையில் இருக்கும் நண்பருடன், பெற்றோருடன், காதலி/காதலனுடன் வரி வடிவத்தில் கையிலிருக்கும் ஐ பேட்/ அலை பேசி/மடி கணினியில் வரிவடிவத்தில் உரையாடிக்கொண்டோ... இல்லை .. எதையும் தொலைக்காமல் ஏதோ ஒரு தேடலிலேயோ லயித்திருந்தார்கள்..
சில பல ஆண்டுகளுக்கு பிறகு பெற்றோரையோ- மனைவியையோ- அப்பா என்று உணரும் முன்பே விலகி வந்து விட்ட குழந்தையையோ பார்க்கபோகும் ஆர்வம் கொப்பளிக்க சிலர்..
தன்னுடைய- தான் வேலை செய்யும் நிறுவனங்களை பற்றிய சிந்தனையில் ஆழ்ந்திருந்த கோட் மனிதர்களின் தீவிர முகங்கள்..
பழுப்பேறிப்போன நாவல் புத்தகங்களில் தலை கவிழ்ந்திருந்த சிலர்..

நான் மனிதர்களை படித்துக்கொண்டிருக்கிறேன்.. ஆம்.. படிப்பதற்கு மனிதர்களை விட வேறு ஏதேனும் பெரிய விஷயம் இந்த உலகில் இருக்கிறதா என்ன???

கூண்டுப்புழுவாய் மாறும் பட்டாம் பூச்சிகள்

கால் நூற்றாண்டுக்கு முன்னான கனவாக இருக்கிறது கூட்டுக்குடித்தன வாழ்க்கை... சுற்றிலும் அறைகள் வைத்துக்கட்டப்பட்டும் வெய்யிலும் மழையும் நடுபகுதியில் விழுமாறும் கட்டப்பட்ட சுத்துக்கட்டு வீடுகளோ. உள்ளே செல்லவும் வெளியேறவும் ஒரே ஒரு வழியும் நீளமாய் ஒரு கூடமும் மட்டும் இருக்கும் சிறிய வீடுகளோ..  தாத்தா பாட்டியும்,அம்மா அப்பாவும், சித்தப்பா பெரியப்பாக்களும், அண்ணன் தம்பிகளும் அக்காள் தங்கைகளுமென ஒரு உறவுச்சங்கிலி ஒரு வீட்டில் வசித்த பேரானந்தமிக்க பொழுதுகள் அவை...

இந்த கூட்டுக்குடித்தனகளில் ஒருவருக்கு தலை வலி என்றாலும் கஷாயம் வைக்க இரண்டு மூன்று பேர் தயாராவார்கள்.. பெரும்பாலும் இவர்கள் விவசாயம் /நெசவு/ மற்றும் பாரம்பரியம் சார்ந்த தொழில்களில் அதிகம் உடலுழைப்பு செய்பவர்களாயிருந்தார்கள் குறைவான கல்வி அறிவை பெற்றிருந்தாலும் விசாலமான சமூக  அறிவும் மனித நேயமும் விட்டுக்கொடுக்கும் பண்புகளும் கூடுதலாய் பெற்றிருந்தார்கள் 

ஒரு வீட்டின் மூத்த மகனுக்கு வாழ்க்கைப்பட்டு வரும் மருமகள்கள் மிக எளிதாய் அந்த குடும்பத்தில் ஒருத்தியாய் ஒட்டிக்கொண்டார்கள்.. ஒரு தாய்க்கான பொறுப்பை அந்த மூத்த மருமகள்கள் எந்தவித முக சுழிப்புமின்றி ஏற்றுக்கொண்டார்கள் ..அக்கம் பக்கம் வசித்தவர்களுடன் நல்லுறவு பேணினார்கள் .

எனக்கு தெரிந்து ஒரு கிராமத்து வீட்டில் காலையில் ஆறு மணிவரை அந்த வீட்டிலிருக்கும் நபர்களில் யாரோ ஒருவர் கூட எழுந்து வெளியில் வரவில்லை என்றால் பக்கத்து வீட்டில் இருக்கும் ஒருவர் வந்து கதவை தட்டும் பெருந்தன்மை இருந்தது.. வழக்கமான கோழி சண்டை.. "உங்க மாடு நேத்து எங்க வீட்டு மாங்கண்ண  தின்னுடிச்சு" போன்ற சில கருத்து வேறுபாடுகளால் பேசிக்கொள்ளா விட்டாலும் அதுவழியே போகும் ஒருவரிடம் சொல்லியாவது கதவை தட்டி என்னவென்று பார்க்கச்சொல்வார்கள் 

கல்வி அறிவும் தகவல் தொடர்பும் வளர வளர உலகமென்னவோ கிராமமாய் சுருங்கியது.. ஆனால் பவுர்ணமி நிலவில் அக்கம் பக்கமிருப்போர் ஒன்று கூடி குழம்பும் கூட்டும் பரிமாறிக்கொண்டு  மகிழ்ந்து குலாவிய கிராமமோ மாபெரும் உலகமாய் மாறத்தொடங்கியது...
தொலைகாட்சி பெட்டி ஒவ்வொரு வீட்டின் முற்றத்திலும் உட்கார ஆரம்பித்த நாளில் பக்கத்து வீடுகளில் பேசுவது குறைந்து போனது...அக்கம் பக்கத்தவர்களே அன்னியமாகிப்போனார்கள் 

கூட்டுக்குடித்தன காலத்தில் ஒரே கூடத்தில் படுத்திருக்கும் பெரியவர்கள்- குழந்தைகளுக்கு மத்தியில் புதுமண தம்பதிகளின் இல்லறமும் இயல்பாய் நடந்தது.. அவர்களுக்கு பேசிக்கொள்ள அதிக விஷயமிருந்தாலும் பேசிக்கொள்ள இடமோ நேரமோ இல்லாததால் அவர்கள் அறுபதாண்டுகாலம் சேர்ந்து வாழ்ந்தாலும் பேசிக்கொள்ள விஷயம் மிச்சமிருந்தது..
ஆளுக்கொரு அலைபேசி கையில் புழங்க ஆரம்பித்த நாளில் பேசுவதற்கான விஷயம் குறைய ஆரம்பித்தது.. அறுபதாண்டுகாலம் சேர்ந்து வாழ்ந்த தம்பதிகள் பேசி முடிக்காத விஷயங்களை திருமணத்திற்கு முன்போ அல்லது திருமணமான சில மாதங்களிலேயோ பேசி முடித்துவிட்ட புதிய தலைமுறை.."அப்புறம்..........." என்ற வார்த்தையோடு அல்லாடுகிறது..

தன் இணையோடு பேச வேண்டிய விஷயங்கள் தீர்ந்துவிட்டதாய்  நினைத்து "அப்புறம்.." என்ற வார்த்தைக்கு மேல் நகரத்தெரியாத புதிய தலைமுறை.. பேசுவதற்கு புதிதாய் விஷயங்களை தேடாமல் தன்னுடைய இணையுடன்  பேசி முடித்த விஷயங்களை திரும்ப பேச புதிதாய் ஆட்களை தேடி அலைய ஆரம்பிக்கிறது.
இதனால் முறைதவறிய காதல் போன்ற சமூக அவலங்கள் 

கல்வி அறிவுடன் சேர்த்து சுயநலத்தையும் வளர்த்துக்கொண்ட புதிய தலைமுறை .. நாகரீகமென்று தவறாய் புரிந்துகொண்ட விஷயத்தை செயல்படுத்த,  மூத்த தலைமுறை இடைஞ்சலாய் இருப்பதாய் கருத ஆரம்பித்ததன் விளைவு. தனிக்குடித்தன கலாச்சாரம்...  எத்தனை காலம் உழைத்தும் தம்மால் பெரிய அளவில் வசதியாய் வளர முடியவில்லை என்று கருதிய பெற்றோர், விவசாயம், நெசவு, மீன்பிடி தொழில் போன்ற  தம்முடைய பாரம்பரிய தொழில்களில் தம்முடைய பிள்ளைகள் வரவேண்டாம் என்று கருதி அவர்களை படிக்கவைத்து அழகு பார்த்தனர் ஆனால் படித்த குழந்தைகளோ.. பெற்றோரை விட்டு விலகுவதுதான் தம்முடைய முதல் முன்னேற்றமென நினைக்க தொடங்கினர் 

இதில் கூடத்தில் வந்தமர்ந்த தொலைகாட்சி பெட்டிக்கு முக்கிய பங்கு இருக்கிறது.. இதில் ஒளிபரப்பாகும் விஷயங்கள் எல்லாமே தவறான கலாச்சாரத்தை மெல்லக்கொல்லும் விஷமாய் மனதிற்குள் செலுத்த ஆரம்பித்து அதில் இப்போது ஓரளவு வெற்றியும் பெற்றுவிட்டன இதற்கு தூபம் போட்டு வளர்க்கின்றன பன்னாட்டு நிறுவனகள்.ஆம்.. ஒரு கூட்டுக்குடித்தனமென்றால் ஒரு தொலைகாட்சி பெட்டி போதும்.. ஒரு குளிர்பதன பெட்டி போதும். அதே நான்கு குடித்தனமாகும் போது  நான்கு தொலைகாட்சி பெட்டிகளையும் நான்கு குளிர்பதன பெட்டிகளையும் விற்க இயலும்.

நவீன தலைமுறை மருமகள்களால் மாமியாரோடு அவ்வளவு எளிதாய் ஒத்துப்போக முடிவதில்லை.. பழைய மாமியாரோ.. நவீன மருமகள்,  தன்  மகனை தன்னிடமிருந்து பிரிக்க வந்த சக்தியாகவே நினைக்க ஆரம்பித்து விடுகிறார்... அந்த கால மாமியார் மருமகள்-இருவருமே படிக்காதவர்கள். விசால மனம் கொண்டவர்கள் ஆனால் இந்த கால படித்த மருமகளும் மாமியாரும் இருவேறு துருவங்கள். ஒரு பெண் அம்மாவாக இருக்கும் போது தன்னுடைய மகள் வாழ்க்கைப்பட்டு போகுமிடத்தில் ராணி மாதிரி அதிகாரத்தோடும் உரிமையோடும் இருக்க வேண்டுமென நினைக்கிறார். ஆனால் தன வீட்டு மருமகளோ அடிமையாய் இருக்கவேண்டுமெனவும் நினைக்கிறார்... இந்த அம்மா-மாமியார்களின் இருவேறு மனோநிலை.. தனிக்குடித்தனத்திற்கு இன்னுமொரு முக்கிய காரணம்..

சரி. தனிக்குடித்தனம் வந்தாயிற்று.. அப்போதாவது நிம்மதியாக கணவன்-மனைவி -குழந்தைகள் என எல்லோரும் ஒன்றாய் இருக்கிறார்களா என்றால்.. அதையும் கபளீகரம் செய்யத்தொடங்கி இருக்கின்றன சமூக வலைத்தளங்கள். ஒரு கிராமத்தை தனித்தனி வீடுகளில் முடக்கியது தொலைக்காட்சி என்றால் ஒரு குடும்பத்தில்  ஒவ்வொரு மனிதனையும் தனித்தனியாய் முடக்கி இருக்கின்றன அலை பேசியும் சமூக வலைத்தளங்களும்.
 உலகின் எங்கோ ஒரு மூலையில் இருக்கும் வேறு வேறு நபர்களுடன் இணைய  தளத்தில் (இதில் இன்னும் வேதனையானது அவர் ஆணா - பெண்ணா உயரமா -குட்டையா.... கருப்பா-சிவப்பா என்று எந்த தகவலும் தெரியாது ) சமூக வலைத்தளங்களில் நட்பு கொள்வது இப்போது சகஜமாகி வருகிறது .. தனிக்குடித்தன  தவம் பெற்றுத்தந்த சாபங்கள் இவை..

இதை எல்லாம் எப்படியாவது மாற்ற இயலுமா என்றால்.. கொஞ்சமல்ல.. நிறையவே யோசிக்க வேண்டி இருக்கிறது... ஒரு குடும்பத்திற்கு திருமணமாகி வரும் மருமகளை மாமியார் , தன்  மகள் புகுந்த வீட்டில் எப்படி வசிக்கவேண்டுமென ஆசைப்படுகிறாரோ அப்படி நடத்த வேண்டும்... வரும் மருமகள்.. தன்னுடைய கணவன் என்று மட்டும் நினைக்காமல்  தன்னுடைய மாமியாருக்கு முதலில் மகன்.. அப்புறம்தான் நமக்கு கணவன் என்று நினைக்க வேண்டும்..  ஏதோ ஒரு காரணத்திற்காக தம்முடைய கணவனை குறித்து மாமியாரிடம் பேசும்போது.."அவங்க.." என்று சொல்லாமல்"உங்க மகன்" என்று அழுத்தமாய் உச்சரிக்க வேண்டும். இதன் மூலம் எங்கே என் மகனை என்னிடமிருந்து இவள் பிரித்து விடுவாளோ என்ற எண்ணம் அந்த மாமியாரின் எண்ணம் கொஞ்சம் கொஞ்சமாய் மறையத்தொடங்கும் 

கூடுமானவரை திருமணத்திற்கு முன்னோ அடுத்துவரும் சில காலமோ வெறித்தனமாய் மணிக்கணக்கில் நீளும் உரையாடலை குறைக்க வேண்டும்.. அப்படி குறைக்கும் பொழுதில் ஆயுள் முழுக்க பேச விஷயமிருக்கும் 
அதே நேரம் ஒரு கணவன் தன்னுடைய அலுவலகம் தொடர்பான, அல்லது நாட்டு நடப்பு தொடர்பான கருத்துக்களை மனைவியிடமோ.. அல்லது மனைவி கணவனிடமோ பகிர்ந்துகொள்வதில்லை.  நாட்டின் அரசியல் நிகழ்வு பற்றி நண்பர்களிடம் மணிகணக்கில் பேசுபவர்கள் கூட மனைவியிடம் /கணவனிடம் இது போன்ற விஷயங்களை பகிர்ந்து கொள்வதில்லை .. அப்படி பகிர ஆரம்பித்தால் தினசரி பேச புதிய விஷயங்கள் இருந்துகொண்டே இருக்கும்...

 சாப்பிட்டுவிட்டு கையை கழுவிக்கொண்டு நகரும் கணவனை விட குழம்பு நல்லா இருக்கு என்று ஒரு வார்த்தை சொல்லும் மூன்றாவது மனிதன் முக்கியமாவதும்..  வெளியிலிருந்து வீடுவரும் கணவனை திரும்பி கூட பார்க்காமல் தொலைகாட்சி நெடுந்தொடர்களில் மூழ்கிப்போயிருக்கும் மனைவியை விட எங்கோ இருந்துகொண்டு இவரின் வருகைக்காக ஆன்லைனில் காத்திருக்கும் பெண்  முக்கியமாவதும் ஒருவித மன வெளிப்பாடுதான் . மனதின் தேவைகள் இவைதான்... இவை கிடைக்காத பட்சத்தில் தான் புதிய அங்கீகாரம் அவசியமென மனது நினைக்க தொடங்குகிறது.. 

தினசரி நடக்கின்ற விஷயம் தானே என்று நினைக்காமல் ஒவொருவரும் மற்றவரை அங்கீகரிக்க வேண்டும்.. சின்ன சின்ன பாராட்டுகளில் நெருக்கம் பலப்படும். 

இந்த கட்டுரையில் பெரும்பாலும் பெண்களை  மட்டும் குறித்து அதிகம் எழுதப்பட்டிருப்பதாக  தோன்றலாம் ஆனால் ஒரு குடும்பம் கூட்டுக்குடும்பமாக நிலைத்திருப்பதும் தனிக்குடித்தனங்களாக சிதறிப்போவதும் பெரும்பாலும் பெண்களை சார்ந்திருக்கிறதென்பதை மறுக்க முடியாது. அது மாமியாராகவோ மருமகளாகவோ இருக்கலாம்..

கூட்டுக்குடித்தனமென்ற கூண்டிலிருந்து பறக்கும் ஆவலில் வெளிவந்த பட்டாம்பூச்சிகள் மீண்டும் தனிக்குடித்தனத்தில் தனித்தனியாய் கூட்டுக்குள் முடங்கிய கூண்டுப்புழுக்கலான  சோகமென்று சொல்வதைக்காட்டிலும் வேறெப்படி சொல்ல...???

இதே நிலைமை நீடிக்குமெனில் இதுதான் நாகரீகம்... இதுதான் நவீனம்.. இதுதான் வளர்ச்சி என்று சொல்லி "லிவ்விங் டுகெதர் " கலாச்சாரம் பன்னாட்டு நிறுவன விளம்பர யுக்திகள் மூலம் அடுத்த தலைமுறை மனதில் விதிக்கப்படும்.. அதற்கடுத்த தலைமுறையில் அநாதை குழந்தைகள் அதிகமிருக்கும்...

என் சிற்றறிவுக்கெட்டிய வரை பிரச்சினைகளையும் சொல்லி இருக்கிறேன் தீர்வையும் சொல்லி இருக்கிறேன்..
நடைமுறைப்படுத்த முனைவோமே கூட்டுக்குடித்தனங்களை  நமது பிள்ளைகள் காலத்திலாவது மீட்டெடுக்கலாம்... 

ஒருங்கிணைந்த கொசு ஒழிப்பு- தீபாவளி

தமிழகத்தில் எத்தனையோ பண்டிகைகள் இருக்கும் போது ஏன் தீபாவளிக்கு மட்டும் பட்டாசு வெடிக்கும் பழக்கம் வைத்தார்கள்..???

தீபாவளி பண்டிகை ஐப்பசி மாதம் கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டின் பருவ மழை காலம் அது.. அந்த சமயத்தில் தான் கொசுக்களும் அதிகமா
க இருக்கும்.அங்காங்கே தங்கி நிற்கும் தண்ணீரில் கொசுக்கள் அதிகம் உற்பத்தியாகும்
இந்த கொசுக்களை அழிக்க தனித்தனியாய் முயற்சி செய்தால் அது பலனற்று போகும்.அப்போது வருகின்ற பண்டிகை நாளான தீபாவளி அன்று ஊரில் அனைவரும் பட்டாசுகளை வெடிக்கும் போது அதிலிருந்து வெளியாகும் கந்தக புகை அந்த கொசுக்களையும் முட்டைகளையும் அழிக்கும். இது ஒரு ஒருங்கிணைந்த கொசு ஒழிப்பு நடவடிக்கை.
இப்பொழுதும் கூட கிராமங்களில் இந்த சமயத்தில் கொசுக்கள் அதிகமிருப்பதையும் தீபாவளிக்கு பிறகு அது படிப்படியாக குறைவதையும் கண்கூடாக காண இயலும்..

நகரங்கள் நரகல் மனிதர்களால் நரகமாக்கிவிட்டதால் இது நகரங்களுக்கு பொருந்தாது..

அண்ணாச்சிகளும் அந்நிய முதலீடும்

ஒருமுறை என்னுடைய நண்பர் ஒருவர் சொந்த தொழில் துவங்கும் பொருட்டு கோதுமை மாவு தயாரிக்கும் சிறிய நிறுவனமொன்றின் ஏஜென்சி எடுத்து ( அவ்வளவாக பிரபலமாகாத ஆனால் தரம் கூடிய தயாரிப்பு அது ) சில்லறை விற்பனை கடைகளுக்கு விநியோகிக்க முடிவு செய்து அண்ணாச்சி கடைகளில் ஏறி இறங்கினார்.. சுமார் தொண்ணூறு சதவிகித அண்ணாச்சிகள் கேட்ட ஒரே கேள்வி.. டி வி யில் விளம்பரம் வருகிறதா...??

தெருக்களில் கடை வைத்திருக்கும் அண்ணாச
்சிகள் நினைத்தால் இது போன்ற சிறு குறு தொழில் நிறுவனங்களை வளர்க்க முடியும்.. தெருக்களில் இருக்கும் கடைகளில் பொருட்கள் வாங்கும் இல்லத்தரசிகள் விளம்பரங்களில் வரும் பொருட்களை கேட்டாலும் கூட அவர்களிடம் இது போன்ற பொருட்களின் தரத்தை எடுத்து சொல்லி விற்பனை செய்ய முடியும்.. 

ஆனால் அதற்கெல்லாம் அண்ணாச்சிகள் தயாராயில்லை.. ஏனென்றால்... அவர்களுக்கு அவர்களுடைய லாபம் மட்டுமே குறிக்கோள்... உள்ளூர் வியாபாரிகளோ தொழில் முனைவோர்களோ வளர்ந்தால் இவர்களுக்கென்ன லாபம்??
இந்த அண்ணாச்சிகள்தான் இன்று வால் மார்ட் வந்தால் நாங்கள் அழிவோம் என்று குதிக்கிறார்கள்..
அவன் அவனுக்கு அவன் அவன் ஆதாயம் தான் முக்கியம்.. தன வீடு எரியாதவரை அடுத்த வீடு எரிவது நமக்கு வேடிக்கை தான்...

புராணங்கள்- பொக்கிஷங்கள்

ஒரு ரிஷியும் அவரது பத்தினியும் மான் உருவம் எடுத்து உடலுறவில் ஈடுபட்டிருந்தனர். ( கவனிக்க.. மான்கள்  மிக நீண்ட நேரம் உடலுறவு சுகத்தை அனுபவிக்க வல்லது என்பது விஞ்ஞானம் ) அப்போது அவ்வழியாக வேட்டைக்கு வந்த பாண்டு மகா ராஜா தன்னுடைய அம்பை எய்து அந்த ஆண் மானை கொன்று விட்டான்.. 
இணையும் நேரத்தில் கணவன் இறந்து விழுந்ததும் அந்த ரிஷியின் மனைவி பாண்டு மகா ராஜாவுக்கு சாபம் கொடுத்தாள்..

"உன்னுடைய மனைவியுடன் 
நீ  உடலுறவு கொள்ளும் நேரத்தில் உன்னுடைய தலை சிதறி இறப்பாய்..." என்று..

தான் பெற்ற சாபத்தின் பலனாய் தாம் இறந்துவிடுவோம் என்று பயந்த பாண்டு மகாராஜா தன்னுடைய மனைவி குந்தி தேவியிடம் இதனை மறைத்து அவரோடு எந்த வித உடல் தொடர்பும் இல்லாமல் இருந்தார்.. ஆனால் பாண்டுவின் உறவினர்களோ வாரிசு வேண்டும் என்று வற்புறுத்தி இரண்டாவது திருமணமும் செய்து வைத்தனர்..
பின்னாளில் தம்முடைய மனைவிகளிடம் தாம் பெற்ற சாபத்தை சொல்லி பாண்டு மகாராஜா அழும்போது தான் குந்தி தேவி தன்னிடமிருந்த குளிகைகளை பற்றி சொன்னாள்.. பிறகு வாரிசு வேண்டி குந்தி மூன்று குளிகைகளையும், இன்னொரு பெண் இரண்டு குளிகைகளையும் சாப்பிட்டு தர்மன், அர்ச்சுனன், பீமன் ஆகியோரை குந்தி தேவியும், நகுலன் சகாதேவன் ஆகியோரை அந்த இரண்டாவது மனைவியும் பெற்றதாக இருக்கிறது கதை.

இதில் பாண்டுவிற்கும் குந்தி தேவிக்கும் திருமணமாகும் முன்பே குந்தி தேவிக்கு அந்த குளிகைகள் கிடைத்து அதனை சோதிக்கும் பொருட்டு கர்ணன் பிறந்தான் என்பதை எல்லோரும் படித்திருப்போம்.

இதை புராணமாகவோ- கடவுள் கதை என்றோ பார்க்காமல் அதனை எழுதியவரின் எழுத்தாளுமைக்காக எல்லோரும் படிக்க வேண்டும்.. ஒரு பெரிய காப்பியத்தில் சுமார் இருநூறுக்கும் மேற்பட்ட கிளைக்கதைகள்.. ஆனால் அந்த இருநூறுக்கும் மேற்ப்பட்ட கிளைக்கதைகளும் ஒவ்வொரு இடத்தில் ஆரம்பம் முதல் கடைவ்சிவரையில் எங்காவது ஒரு இடத்தில் வந்து மெயின் கதையுடன் இணையும்.. பின்னாளில் இணைவதற்கு காரணமாய்த்தான் அந்த கதையின் ஆரம்பம் இருக்கும்.

ஒவ்வொரு பாத்திரத்திற்கும் ஒவ்வொரு கதை.. பீஷ்மருக்கு ஒரு கதை, அர்ஜுனனுக்கு ஒரு கதை,,அபிமனுயுவுக்கு ஒரு கதை .., அஸ் வத்தாமனுக்கு ஒரு கதை, துரோணருக்கு ஒரு கதை, சிகண்டிக்கு ஒரு கதை, கர்ணனுக்கு ஒரு கதை, துரியோதனனுக்கு ஒரு கதை... யப்பா.... சொல்லிக்கொண்டே போகலாம்..

அந்த காப்பியத்தினை எழுதியவர்களை வியக்காமல் நாத்திகம் என்று சொல்லிக்கொண்டு அதனை புறக்கணிப்பதால் இழப்பு அவருக்கல்ல...

நாம் தரிசித்த கடவுள்

பத்துக்கு பத்து அளவுள்ள ஒரு கட்டிடத்தை கூட நாம் முழுவதுமாய் தரிசிக்க இயலாது... ஒரு பக்கம் பச்சை வண்ணமும், இன்னொரு பக்கம் மஞ்சள் வர்ணமும், இன்னொரு பக்கம் சிவப்பு வர்ணமும், வேறொரு பக்கம் வெள்ளை வண்ணமும் பூசப்பட்டிருக்கிரதென்றால் ஒரே நேரத்தில் ஒருவரால் எல்லா புறத்தையும் பார்க்க முடியாது... அதே நேரம் வெள்ளை வர்ணம் பூசப்பட்ட பக்கத்தை மட்டும் பார்த்துவிட்டு வந்து அந்த கட்டிடம் வெள்ளையாகத்தான் இருந்தது 
என்று பேசுவது புத்திசாலித்தனமில்லை..

ஒரு பத்துக்கு பத்து அளவுள்ள கட்டிடத்தையே நம்மால் முழுதாக தரிசிக்க முடியாத போது உலகெல்லாம் நிறைந்திருக்கும் இறைவனை என் மதம் சொல்வதுதான் கடவுள் என தயவு செய்து யாரும் விவாதிக்காதீர்கள்.

கடவுளின் எல்லா பக்கங்களையும் தரிசிக்க நமக்கு இந்த ஆயுள் பத்தாது... அதனால் உங்கள் பார்வையிளிருக்கும் ஒரு பக்கத்தையாவது முழுமையாய் தரிசியுங்கள்... அடுத்த பக்கத்தின் வர்ணத்தை விமர்சனம் செய்தோ.. அடுத்தொரு பக்கமே இல்லை என்றோ சொல்லி யாருடைய மனதையும் புண்படுத்தாதீர்கள்.

அவரவர் நம்பிக்கை அவரவர்க்கு சரி - கடவுள் விஷயத்தில்.