சனி, 9 மே, 2015

ஆடு நனைகிறதே என்று...

சுமார் ஒன்பது மாத உழைப்பில் ஒரு வாழைக்கன்றை நட்டு வளர்த்து அதில் சுமார் நூறு காய்களுடன் கூடிய ஒரு தார் விளைந்தது... அதனை வெட்டி எடுத்துக்கொண்டு அருகில் இருக்கும் சிறு நகரமான மதுக்கூருக்குச் சென்றேன்.. 

ஒரு நான்கைந்து கடைகளில் விசாரித்த போது 
"அட இதெல்லாம் யார் வாகுறாங்க தம்பி... நீங்க கொண்டு வந்துட்டீங்களேன்னு என்ன செய்றதுன்னு வேணும்னா வாங்கிக்கிறேன்.." என்று சொல்லிய படி ஒருவர் முப்பது ரூபாய் தருவதாகவும் . இன்னொருவர் நாற்பத்தந்து ரூபாய் தருவதாகவும் சொன்னார்கள்.. 

அதில் நாற்பத்தைந்து ரூபாய் தருவதாகச் சொன்னவரிடம் கெஞ்சிக் கூத்தாடி ஐம்பது ரூபாய்க்கு எடுத்துக்கொள்ளச் சொன்னேன்..
அவர் எதோ போனால் போகிறதென்று 
புண்ணியத்திற்கு வாங்கிக்கொள்வதுபோல் 
வாங்கிக் கொண்டார்..

கவனிக்கவும் .... அந்த வாழைத்தாரை விளைய வைக்க மின் மோட்டாரில் தண்ணீர் இறைத்த செலவு, இயற்கை எரு, என்னுடைய உழைப்பு, விளைந்த பின் அதனை விற்பனைக்கு எடுத்துச் செல்ல வாகனத்தின் பெட்ரோல் செலவு எல்லாம் தோராயமாக எவ்வளவு இருக்குமென்று கணக்கிட்டு கொள்ளுங்கள். 
ஆனால் அப்படிப் போனபின் அதனைத் திரும்ப எடுத்து வந்தால் எத்தனை நாளைக்கு என்னால் அதில் கூட்டு பொரியல் செய்ய முடியும்..?? அதை என்னால் ஒரு மாதம் வைத்திருக்க முடியுமா..?? விவசாயியின் அடிப்படைப் பிரச்சினைகள் இவை.. இனாமாகக் கொடுத்தால் வாங்கிக்கொள்ள தயாராயிருக்கும் அக்கம் பக்கத்தாரோ காசு என்றால் வேண்டாம் என்று சொல்லி விடுவார்கள் 

இதற்குப் பிறகுதான் இருக்கிறது முக்கியமான நிகழ்ச்சியே.. ... ஆம் .. ஐம்பது ரூபாயை அந்த கடைக்காரரிடம் வாங்கிக்கொண்டு வந்து ஒரு டீ கடையில் அமர்ந்து இருந்தேன்.. அப்போது என்னுடைய நண்பர் ஒருவர் வீட்டிற்கு காய்கறிகள் வாங்கிக்கொண்டு வந்தார்.. அதில் வாழைக்காயும் இருந்தது... தாய்க்கு தெரியாதா பிள்ளையை.... ஆம்.. அது நான் விற்பனை செய்துவிட்டு வந்த வாழைத்தாரின் காய்தான்... "எவ்ளோண்ணே கொடுத்தீங்க ..." "அட ஒரு காய் ரெண்டு ரூபாய்க்கு குறையலன்னுட்டான்யா... வாழக்காயே வரதில்லேன்னு சொல்றான்.." என்றார்...

சுமார் நூறு காய்கள் இருந்த அந்த வாழைத்தாரில் ஒரு காய் இரண்டு ரூபாய்.. ஆனால் என்னிடம் அவர் புண்ணியத்திற்காக சேர்த்து கொடுத்த ஐந்து ரூபாயும் சேர்த்து ஐம்பது ரூபாய்... 

இவர்கள் தான் அண்ணாச்சிகள்... 
இவர்கள் தான் விவசாயியும் உற்பத்தியாளர்களும் பாதிக்கப்பட்டு விடுவார்களோ என்று அந்நிய முதலீட்டை எதிர்க்கிறார்களாம்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக