கால் நூற்றாண்டுக்கு முன்னான கனவாக இருக்கிறது கூட்டுக்குடித்தன வாழ்க்கை... சுற்றிலும் அறைகள் வைத்துக்கட்டப்பட்டும் வெய்யிலும் மழையும் நடுபகுதியில் விழுமாறும் கட்டப்பட்ட சுத்துக்கட்டு வீடுகளோ. உள்ளே செல்லவும் வெளியேறவும் ஒரே ஒரு வழியும் நீளமாய் ஒரு கூடமும் மட்டும் இருக்கும் சிறிய வீடுகளோ.. தாத்தா பாட்டியும்,அம்மா அப்பாவும், சித்தப்பா பெரியப்பாக்களும், அண்ணன் தம்பிகளும் அக்காள் தங்கைகளுமென ஒரு உறவுச்சங்கிலி ஒரு வீட்டில் வசித்த பேரானந்தமிக்க பொழுதுகள் அவை...
இந்த கூட்டுக்குடித்தனகளில் ஒருவருக்கு தலை வலி என்றாலும் கஷாயம் வைக்க இரண்டு மூன்று பேர் தயாராவார்கள்.. பெரும்பாலும் இவர்கள் விவசாயம் /நெசவு/ மற்றும் பாரம்பரியம் சார்ந்த தொழில்களில் அதிகம் உடலுழைப்பு செய்பவர்களாயிருந்தார்கள் குறைவான கல்வி அறிவை பெற்றிருந்தாலும் விசாலமான சமூக அறிவும் மனித நேயமும் விட்டுக்கொடுக்கும் பண்புகளும் கூடுதலாய் பெற்றிருந்தார்கள்
ஒரு வீட்டின் மூத்த மகனுக்கு வாழ்க்கைப்பட்டு வரும் மருமகள்கள் மிக எளிதாய் அந்த குடும்பத்தில் ஒருத்தியாய் ஒட்டிக்கொண்டார்கள்.. ஒரு தாய்க்கான பொறுப்பை அந்த மூத்த மருமகள்கள் எந்தவித முக சுழிப்புமின்றி ஏற்றுக்கொண்டார்கள் ..அக்கம் பக்கம் வசித்தவர்களுடன் நல்லுறவு பேணினார்கள் .
எனக்கு தெரிந்து ஒரு கிராமத்து வீட்டில் காலையில் ஆறு மணிவரை அந்த வீட்டிலிருக்கும் நபர்களில் யாரோ ஒருவர் கூட எழுந்து வெளியில் வரவில்லை என்றால் பக்கத்து வீட்டில் இருக்கும் ஒருவர் வந்து கதவை தட்டும் பெருந்தன்மை இருந்தது.. வழக்கமான கோழி சண்டை.. "உங்க மாடு நேத்து எங்க வீட்டு மாங்கண்ண தின்னுடிச்சு" போன்ற சில கருத்து வேறுபாடுகளால் பேசிக்கொள்ளா விட்டாலும் அதுவழியே போகும் ஒருவரிடம் சொல்லியாவது கதவை தட்டி என்னவென்று பார்க்கச்சொல்வார்கள்
கல்வி அறிவும் தகவல் தொடர்பும் வளர வளர உலகமென்னவோ கிராமமாய் சுருங்கியது.. ஆனால் பவுர்ணமி நிலவில் அக்கம் பக்கமிருப்போர் ஒன்று கூடி குழம்பும் கூட்டும் பரிமாறிக்கொண்டு மகிழ்ந்து குலாவிய கிராமமோ மாபெரும் உலகமாய் மாறத்தொடங்கியது...
தொலைகாட்சி பெட்டி ஒவ்வொரு வீட்டின் முற்றத்திலும் உட்கார ஆரம்பித்த நாளில் பக்கத்து வீடுகளில் பேசுவது குறைந்து போனது...அக்கம் பக்கத்தவர்களே அன்னியமாகிப்போனார்கள்
கூட்டுக்குடித்தன காலத்தில் ஒரே கூடத்தில் படுத்திருக்கும் பெரியவர்கள்- குழந்தைகளுக்கு மத்தியில் புதுமண தம்பதிகளின் இல்லறமும் இயல்பாய் நடந்தது.. அவர்களுக்கு பேசிக்கொள்ள அதிக விஷயமிருந்தாலும் பேசிக்கொள்ள இடமோ நேரமோ இல்லாததால் அவர்கள் அறுபதாண்டுகாலம் சேர்ந்து வாழ்ந்தாலும் பேசிக்கொள்ள விஷயம் மிச்சமிருந்தது..
ஆளுக்கொரு அலைபேசி கையில் புழங்க ஆரம்பித்த நாளில் பேசுவதற்கான விஷயம் குறைய ஆரம்பித்தது.. அறுபதாண்டுகாலம் சேர்ந்து வாழ்ந்த தம்பதிகள் பேசி முடிக்காத விஷயங்களை திருமணத்திற்கு முன்போ அல்லது திருமணமான சில மாதங்களிலேயோ பேசி முடித்துவிட்ட புதிய தலைமுறை.."அப்புறம்..........." என்ற வார்த்தையோடு அல்லாடுகிறது..
தன் இணையோடு பேச வேண்டிய விஷயங்கள் தீர்ந்துவிட்டதாய் நினைத்து "அப்புறம்.." என்ற வார்த்தைக்கு மேல் நகரத்தெரியாத புதிய தலைமுறை.. பேசுவதற்கு புதிதாய் விஷயங்களை தேடாமல் தன்னுடைய இணையுடன் பேசி முடித்த விஷயங்களை திரும்ப பேச புதிதாய் ஆட்களை தேடி அலைய ஆரம்பிக்கிறது.
இதனால் முறைதவறிய காதல் போன்ற சமூக அவலங்கள்
கல்வி அறிவுடன் சேர்த்து சுயநலத்தையும் வளர்த்துக்கொண்ட புதிய தலைமுறை .. நாகரீகமென்று தவறாய் புரிந்துகொண்ட விஷயத்தை செயல்படுத்த, மூத்த தலைமுறை இடைஞ்சலாய் இருப்பதாய் கருத ஆரம்பித்ததன் விளைவு. தனிக்குடித்தன கலாச்சாரம்... எத்தனை காலம் உழைத்தும் தம்மால் பெரிய அளவில் வசதியாய் வளர முடியவில்லை என்று கருதிய பெற்றோர், விவசாயம், நெசவு, மீன்பிடி தொழில் போன்ற தம்முடைய பாரம்பரிய தொழில்களில் தம்முடைய பிள்ளைகள் வரவேண்டாம் என்று கருதி அவர்களை படிக்கவைத்து அழகு பார்த்தனர் ஆனால் படித்த குழந்தைகளோ.. பெற்றோரை விட்டு விலகுவதுதான் தம்முடைய முதல் முன்னேற்றமென நினைக்க தொடங்கினர்
இதில் கூடத்தில் வந்தமர்ந்த தொலைகாட்சி பெட்டிக்கு முக்கிய பங்கு இருக்கிறது.. இதில் ஒளிபரப்பாகும் விஷயங்கள் எல்லாமே தவறான கலாச்சாரத்தை மெல்லக்கொல்லும் விஷமாய் மனதிற்குள் செலுத்த ஆரம்பித்து அதில் இப்போது ஓரளவு வெற்றியும் பெற்றுவிட்டன இதற்கு தூபம் போட்டு வளர்க்கின்றன பன்னாட்டு நிறுவனகள்.ஆம்.. ஒரு கூட்டுக்குடித்தனமென்றால் ஒரு தொலைகாட்சி பெட்டி போதும்.. ஒரு குளிர்பதன பெட்டி போதும். அதே நான்கு குடித்தனமாகும் போது நான்கு தொலைகாட்சி பெட்டிகளையும் நான்கு குளிர்பதன பெட்டிகளையும் விற்க இயலும்.
நவீன தலைமுறை மருமகள்களால் மாமியாரோடு அவ்வளவு எளிதாய் ஒத்துப்போக முடிவதில்லை.. பழைய மாமியாரோ.. நவீன மருமகள், தன் மகனை தன்னிடமிருந்து பிரிக்க வந்த சக்தியாகவே நினைக்க ஆரம்பித்து விடுகிறார்... அந்த கால மாமியார் மருமகள்-இருவருமே படிக்காதவர்கள். விசால மனம் கொண்டவர்கள் ஆனால் இந்த கால படித்த மருமகளும் மாமியாரும் இருவேறு துருவங்கள். ஒரு பெண் அம்மாவாக இருக்கும் போது தன்னுடைய மகள் வாழ்க்கைப்பட்டு போகுமிடத்தில் ராணி மாதிரி அதிகாரத்தோடும் உரிமையோடும் இருக்க வேண்டுமென நினைக்கிறார். ஆனால் தன வீட்டு மருமகளோ அடிமையாய் இருக்கவேண்டுமெனவும் நினைக்கிறார்... இந்த அம்மா-மாமியார்களின் இருவேறு மனோநிலை.. தனிக்குடித்தனத்திற்கு இன்னுமொரு முக்கிய காரணம்..
சரி. தனிக்குடித்தனம் வந்தாயிற்று.. அப்போதாவது நிம்மதியாக கணவன்-மனைவி -குழந்தைகள் என எல்லோரும் ஒன்றாய் இருக்கிறார்களா என்றால்.. அதையும் கபளீகரம் செய்யத்தொடங்கி இருக்கின்றன சமூக வலைத்தளங்கள். ஒரு கிராமத்தை தனித்தனி வீடுகளில் முடக்கியது தொலைக்காட்சி என்றால் ஒரு குடும்பத்தில் ஒவ்வொரு மனிதனையும் தனித்தனியாய் முடக்கி இருக்கின்றன அலை பேசியும் சமூக வலைத்தளங்களும்.
உலகின் எங்கோ ஒரு மூலையில் இருக்கும் வேறு வேறு நபர்களுடன் இணைய தளத்தில் (இதில் இன்னும் வேதனையானது அவர் ஆணா - பெண்ணா உயரமா -குட்டையா.... கருப்பா-சிவப்பா என்று எந்த தகவலும் தெரியாது ) சமூக வலைத்தளங்களில் நட்பு கொள்வது இப்போது சகஜமாகி வருகிறது .. தனிக்குடித்தன தவம் பெற்றுத்தந்த சாபங்கள் இவை..
இதை எல்லாம் எப்படியாவது மாற்ற இயலுமா என்றால்.. கொஞ்சமல்ல.. நிறையவே யோசிக்க வேண்டி இருக்கிறது... ஒரு குடும்பத்திற்கு திருமணமாகி வரும் மருமகளை மாமியார் , தன் மகள் புகுந்த வீட்டில் எப்படி வசிக்கவேண்டுமென ஆசைப்படுகிறாரோ அப்படி நடத்த வேண்டும்... வரும் மருமகள்.. தன்னுடைய கணவன் என்று மட்டும் நினைக்காமல் தன்னுடைய மாமியாருக்கு முதலில் மகன்.. அப்புறம்தான் நமக்கு கணவன் என்று நினைக்க வேண்டும்.. ஏதோ ஒரு காரணத்திற்காக தம்முடைய கணவனை குறித்து மாமியாரிடம் பேசும்போது.."அவங்க.." என்று சொல்லாமல்"உங்க மகன்" என்று அழுத்தமாய் உச்சரிக்க வேண்டும். இதன் மூலம் எங்கே என் மகனை என்னிடமிருந்து இவள் பிரித்து விடுவாளோ என்ற எண்ணம் அந்த மாமியாரின் எண்ணம் கொஞ்சம் கொஞ்சமாய் மறையத்தொடங்கும்
கூடுமானவரை திருமணத்திற்கு முன்னோ அடுத்துவரும் சில காலமோ வெறித்தனமாய் மணிக்கணக்கில் நீளும் உரையாடலை குறைக்க வேண்டும்.. அப்படி குறைக்கும் பொழுதில் ஆயுள் முழுக்க பேச விஷயமிருக்கும்
அதே நேரம் ஒரு கணவன் தன்னுடைய அலுவலகம் தொடர்பான, அல்லது நாட்டு நடப்பு தொடர்பான கருத்துக்களை மனைவியிடமோ.. அல்லது மனைவி கணவனிடமோ பகிர்ந்துகொள்வதில்லை. நாட்டின் அரசியல் நிகழ்வு பற்றி நண்பர்களிடம் மணிகணக்கில் பேசுபவர்கள் கூட மனைவியிடம் /கணவனிடம் இது போன்ற விஷயங்களை பகிர்ந்து கொள்வதில்லை .. அப்படி பகிர ஆரம்பித்தால் தினசரி பேச புதிய விஷயங்கள் இருந்துகொண்டே இருக்கும்...
சாப்பிட்டுவிட்டு கையை கழுவிக்கொண்டு நகரும் கணவனை விட குழம்பு நல்லா இருக்கு என்று ஒரு வார்த்தை சொல்லும் மூன்றாவது மனிதன் முக்கியமாவதும்.. வெளியிலிருந்து வீடுவரும் கணவனை திரும்பி கூட பார்க்காமல் தொலைகாட்சி நெடுந்தொடர்களில் மூழ்கிப்போயிருக்கும் மனைவியை விட எங்கோ இருந்துகொண்டு இவரின் வருகைக்காக ஆன்லைனில் காத்திருக்கும் பெண் முக்கியமாவதும் ஒருவித மன வெளிப்பாடுதான் . மனதின் தேவைகள் இவைதான்... இவை கிடைக்காத பட்சத்தில் தான் புதிய அங்கீகாரம் அவசியமென மனது நினைக்க தொடங்குகிறது..
தினசரி நடக்கின்ற விஷயம் தானே என்று நினைக்காமல் ஒவொருவரும் மற்றவரை அங்கீகரிக்க வேண்டும்.. சின்ன சின்ன பாராட்டுகளில் நெருக்கம் பலப்படும்.
இந்த கட்டுரையில் பெரும்பாலும் பெண்களை மட்டும் குறித்து அதிகம் எழுதப்பட்டிருப்பதாக தோன்றலாம் ஆனால் ஒரு குடும்பம் கூட்டுக்குடும்பமாக நிலைத்திருப்பதும் தனிக்குடித்தனங்களாக சிதறிப்போவதும் பெரும்பாலும் பெண்களை சார்ந்திருக்கிறதென்பதை மறுக்க முடியாது. அது மாமியாராகவோ மருமகளாகவோ இருக்கலாம்..
கூட்டுக்குடித்தனமென்ற கூண்டிலிருந்து பறக்கும் ஆவலில் வெளிவந்த பட்டாம்பூச்சிகள் மீண்டும் தனிக்குடித்தனத்தில் தனித்தனியாய் கூட்டுக்குள் முடங்கிய கூண்டுப்புழுக்கலான சோகமென்று சொல்வதைக்காட்டிலும் வேறெப்படி சொல்ல...???
இதே நிலைமை நீடிக்குமெனில் இதுதான் நாகரீகம்... இதுதான் நவீனம்.. இதுதான் வளர்ச்சி என்று சொல்லி "லிவ்விங் டுகெதர் " கலாச்சாரம் பன்னாட்டு நிறுவன விளம்பர யுக்திகள் மூலம் அடுத்த தலைமுறை மனதில் விதிக்கப்படும்.. அதற்கடுத்த தலைமுறையில் அநாதை குழந்தைகள் அதிகமிருக்கும்...
என் சிற்றறிவுக்கெட்டிய வரை பிரச்சினைகளையும் சொல்லி இருக்கிறேன் தீர்வையும் சொல்லி இருக்கிறேன்..
நடைமுறைப்படுத்த முனைவோமே கூட்டுக்குடித்தனங்களை நமது பிள்ளைகள் காலத்திலாவது மீட்டெடுக்கலாம்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக