வியாழன், 20 செப்டம்பர், 2018

அந்நியமாகும் தாய்-தந்தை வாசனை

ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு பிரத்யோகமாக வாசனை உண்டு... அதை வியர்வை வாசனை என்றோ.. உழைப்பின் வாசனை என்றோ.. எதோ ஒரு பெயரில் சொல்லிக்கொள்ளலாம்....

பெண்களின் அக்குளில் இருந்து வரும் வாசனைக்கு ஆண்களின் பாலியல் ஹார்மோன்களை சுரக்க செய்யும் தன்மை உண்டு என்கிறது மருத்துவ விஞ்ஞானம்... காமம் ஆர்ப்பாட்டமாய் கிளர்த்தெழும் பதின் பருவ வயதை கடந்து... அது நிதானமடைந்து கரம்பற்றி மெல்ல நடைபோடும் காலத்தில் பாலியல் கூடலுக்கு இந்த வாசனை மிகவும் முக்கியம் என்றும் இந்த உடல்வாசனை ஒப்பாத தம்பதிகளால் கூடலில் ஈடுபாடுகொள்ள முடியாது என்றும் சொல்கிறது உளவியல் விஞ்ஞானம்...

மேற்பாரா ஒரு இடைச்செறுகள்தானே அன்றி.. பதிவு இதைப்பற்றியதில்லை...

அப்படி மனிதர்களுக்கான பிரத்யோக வாசனை பற்றி யோசிக்கையில்.. ஒவ்வொரு குழந்தைக்கும் தந்தை-தாயின் வாசனை மனதில் பதிந்த ஒன்று.. இருபதாம் நூற்றாண்டு குழந்தைகளுக்கு இந்த வாசனை அநேகம் சாத்தியப்பட்டது... வெளியூர் பயணம் செல்ல வேண்டும் என்றால்.. குறைந்த தூரமாக இருந்தால் கால் நடையாகவும், சற்றே தூரப்பயணம் என்றால் மரச்சக்கர மாட்டு வண்டியும் கட்டி பயணப்படும் விவசாய கிராம பின்னணி கொண்ட எனக்கும் அப்படித்தான்....

எல்லா ஆண் குழந்தைகளை போலவே எனக்கும் அப்பாவுடன் அதிக நெருக்கமில்லை என்றாலும்... எப்போதாவது பயணப்படும் வெளியூர் பயணங்களில் நடக்க முடியாமல் தவிக்கும் பொழுது என்னை தூக்கிக்கொண்டு நடக்கும் அப்பாவின் வாசனை இன்றும் என்னுள் பசுமையாயிருக்கிறது.... அருகில் இருந்து சாப்பிடும் போதோ... சைக்கிளில் பின் அமர்ந்து எங்காவது பயணப்படும்போதோ நுகந்த வாசனை இன்னும் நெஞ்சை விட்டு அகலவில்லை... அப்பா-அம்மாவை உணர்வதில் இந்த வாசனையின் பங்கு அளப்பரியது... அப்பா மரணித்து பத்தாண்டுகள் கழிந்துவிட்ட பிற்பாடும்.... நான் நாற்பதுகளின் தொடக்கத்தில் நுழைந்திருந்தாலும்.. என்றோ உணர்ந்த அப்பா வாசனை அப்படியேதான் இருக்கிறது...

அப்பாவிற்கு இருந்ததை போல எனக்கும் ஒரு வாசனை இருக்கும் தானே?? ஆனால்... எல்லா இருபத்தோராம் நூற்றாண்டு குழந்தைகளை போலவே.. என் மகனும் என் வாசனை அறியாதவனாய் தான் வளர்கிறான்....

அவனை பொறுத்தவரை அப்பாவின் வாசனை என்பது ராயல் மிரேஜ் லாவண்டர் வாசனையாகவோ, மோண்ட் ப்ளாங் இண்டிஜுவல் வாசனையாகவோ தான் இருக்கிறது.... அப்பா நெருக்கம் அன்னியப்பட்டு போயிருக்கிறது...

முதியோர் இல்லங்கள் பெருக இதுமாதிரியான "அன்னிய"த்தன்மையும் காரணமாயிருக்குமோ???

அள்ளிக்கொண்டு போகும் அரசு ஊழியர்கள்

இப்போ தான் எங்க பக்கம் எங்கிட்டு திரும்பினாலும் தென்னந்தோப்பு..... 30-35 வருஷம் முன்ன எல்லாம் யாரோ ஒருத்தர்-ரெண்டு பேர்தான் தென்னந்தோப்பு வச்சிருப்பாங்க... மத்த வீடுகள்ல வீட்டுக்கிட்ட ஒரு தென்னை மரமோ-ரெண்டு தென்னை மரமோதான் இருக்கும்....

எங்க பெரியப்பா வீட்டு வாசல்ல அப்படி ஒரு தென்னை மரம் நின்னுச்சு.... அதுல ஓவியமா ரெண்டே ரெண்டு தேங்கா காச்சிருந்துச்சு..... இப்போ தேங்காய் வெட்றவங்க அம்பது-அறுபதடி உயர மரமானாலும் வாங்கு கத்தி வச்சு அறுத்துடறாங்க... ஆனா... அந்த காலத்துல கால்ல தளதாடிய* கட்டிட்டு மரத்துல ஏறித்தான் தேங்கா பறிப்பாங்க.... அதுவும் ஒரு சில குறிப்பிட்ட ஆளுங்கதான் மரமேறுவங்க... பறிக்கிற தேங்காய்ல ஒரு தேங்காய் அவங்களுக்கு.. அதுதான் கூலி...

எங்க பெரியப்பா வீட்டு வாசல்ல நின்ன அந்த தென்னை மரத்துல ரெண்டே ரெண்டு தேங்கா இருந்துச்சுன்னு சொன்னேன்ல.... எங்க பெரியம்மா சாரதாம்பாள் , அப்படி மரமேறுற "ராமன்"ன்னு ஒரு ஆளை கூப்பிட்டு "ஏலே ராமா... இந்த தேங்காயை கொஞ்சம் பறிச்சு கொடுடா"ன்னு சொல்ல...

ராமனும் மரம் ஏறினான்... ரெண்டு தேங்காயை பறிச்சுப்போட்டுட்டு கீழ இறங்கிட்டான்... பறிச்சு போட்டதும் தான் தெரிஞ்சுது.. அந்த ரெண்டு தேங்காய்ல ஒன்னு ஒல்லி*...

ராமன் கீழ எறங்கி... அந்த ரெண்டு தேங்காய்ல நல்ல தேங்காய கூலியா எடுத்துகிட்டான்....

"ஏலே.. ஏலே... கொழம்பு வைக்கணும்டா... 5 ரூபா வாங்கிக்கோடா.... அந்த தேங்காய கொடுத்துட்டு போடா"ன்னாத்துக்கு..... "ம்ம்.... அதெல்லாம் முடியாது... எனக்கு தேங்காய்தான் வேணும்"னு எடுத்துட்டு போய்ட்டான்....

ஆக.... ரெண்டு தேங்கா.. ரெண்டுல ஒன்னு ஒல்லி.... அது எதுக்கும் உதவாது... பறிச்சவனுக்கு கூலியா இருந்த ஒரே ஒரு நல்ல தேங்காய அவன் கொண்டு போய்ட்டான்...

இப்படித்தான் இருக்கு நம்ம தமிழ்நாட்டோட நிலைமையும்.... ஏற்கெனவே அரசு ஊழியர்களுக்கு கூலியா , மாநிலத்தோட வருமானத்துல 80% போகுதுன்னு ஒரு பேச்சு இருக்கு... இதுல அகவிலைப்படி 2% உயர்வாம்....

இந்த தேங்காய் எப்போ பெரிசாகும்.. பெரிசாகும்ன்னு மரத்த வச்சு வளத்து பறிக்கலாம்னு காத்துக்கிட்டிருந்து... காய்ச்சதுல நல்ல தேங்காயை கூலியா கொடுத்துட்டு கொழம்பு வைக்க தேங்கா கிடைக்காம போன எங்க பெரியம்மா மாதிரித்தான் தமிழக மக்களும்...

வரிய கொடுத்துட்டு, ஓட்டையும் போட்டுட்டு "நமக்கு ஏதாவது நடக்கும்"ன்னு நம்பி உட்கார்ந்திருக்காங்க.... "நாங்க உங்களுக்காகத்தான் வேலை செய்றோம்"ன்னு இந்த அரசு ஊழியர்களும்.. ஆட்சியாளர்களும் மொத்தமாலவட்டிட்டு போய்டுறானுங்க...

ராமா... ராமா....

*தளதாடி - இரு கால்களையும் மாட்டிக்கொண்டு மரத்துடன் அணைந்து பற்றிக்கொள்ள உதவும் கயிறால் ஆன வளையம்

*ஒல்லி- தேங்காய் மாதிரியே இருக்கும்.. ஆனால் உள்ளே பருப்பு இருக்காது...

சுயநலத்தை கற்பிக்கும் கல்வி

ஒரு காக்காக்கு ரொம்ப தாகமா இருந்துச்சாம்... ஊரெல்லாம் அலைஞ்சும் காக்கா குடிக்கிற மாதிரி திறந்து வச்ச பாத்திரம் எதுலயும் தண்ணியே இல்லையாம்... கடேசியா ஒரே ஒரு குடத்துல அடில கொஞ்சமா தண்ணி இருந்துச்சாம்...

காக்கா பானை மேல உட்கார்ந்து குனிஞ்சு குடிக்க ட்ரை பண்ணுச்சாம்.. ஆனா தண்ணி எட்டலையாம்... ஒடனே காக்கா.... கீழ கெடந்த கூழாங்கல்ல எடுத்து எடுத்து அந்த பானைக்குள்ள போட்டுச்சாம்.... கல்லு பானைக்குள்ள நிறைய நிறைய.. தண்ணி கொஞ்சம் கொஞ்சமா மேல வந்துச்சாம்.. காக்கா குடிச்சுட்டு சந்தோஷமா பறந்து போச்சாம்...

நம் பிரச்சனைகளை தீர்க்க புத்திசாலித்தனமான உழைப்பு அவசியம்.. என்பதை விளக்கும் விதமாக இப்படி ஒரு கதையை நான் தொடக்கப்பள்ளி படிக்க ஆரம்பித்த காலங்களில் சொல்லிக்கொடுப்பதுண்டு.... பெரும்பாலான தாத்தா-பாட்டிகளும் கூட இந்த கதைகளை பேரக்குழந்தைகளுக்கு பெட்-டைம் ஸ்டோரியாக சொல்வது வழக்கம்...

நேற்றிரவு, கடந்த ஆண்டு அபி படித்து விட்டு போட்டிருந்த ஒன்றாம் வகுப்பு தமிழ் புத்தகத்தை எடுத்து பார்த்தேன்... அதிலும் இந்த கதை இருந்தது.... ஆனால்... சமகாலத்திற்கேற்ப அந்த கதை மாற்றம் பெற்றிருந்ததை கண்டு அதிர்ந்தேன்...





ஆம்... இந்த காக்கைக்கும் தாகம் எடுத்தது... தண்ணீர் தேடியது.. ஒரு பானையில் தண்ணீரை கண்டது... ஆனால்... இந்த காகம் கூழாங்கற்களை எல்லாம் தேடவில்லை... பானையின் அடிப்பகுதியில் தன்னுடைய அலகால் குத்தி துவாரமிட்டது... தண்ணீரை குடித்துவிட்டு பறந்து சென்றது...

அட பாவிகளா.... குழந்தைகளுக்கு நீங்கள் கற்றுக்கொடுக்கும் விஷயங்கள் இதுதானா??

பானைக்கு "வாய்" இருந்தாலும் கூட ஓட்டை போட்டு தண்ணீர் குடிக்கும் குறுக்கு வழியை கற்று தருகிறீர்கள்..

இருக்கும் நல்ல பானையை உடைத்து அது அடுத்து வருபவனுக்கு உபயோகம் இல்லாமல் போனாலும் பரவாயில்லை... நம் காரியம் ஆனால் சரி என்று கற்று தருகிறீர்கள்...

வன்முறையை பிரயோகித்து, அடுத்தவனுக்கு சொந்தமானதை உங்கள் தேவைக்காக எடுத்துக்கொள்ளலாம் என்று கற்று தருகிறீர்கள்..

உங்கள் தேவைக்கு குடித்தது போக மிச்சமுள்ளது வீணாக போனாலும் பரவாயில்லை என்று கற்று தருகிறீர்கள்...

# எது நாசமாய் போனாலும் பரவாயில்லை.. என் காரியம் நடக்க வேண்டும் என்று "சுயநலமாய்" மட்டுமே சிந்திப்பதுதான் புத்திசாலித்தனம் என்று கற்று தந்தால்...

"தீக்குளிக்கும்" போது செல்பியோ-வீடியோவோ எடுக்காமல் அவன் எப்படி காப்பாற்ற நினைப்பான்??

சபாஷ் கல்வி அமைச்சரே

இரண்டாம் உலக யுத்தம் முடிவுக்கு வர காரணம் ஜப்பானில் வீசப்பட்ட அமெரிக்காவின் "லிட்டில் பாய்" என்ற பெயரை உடைய ஹைட்ரஜன் அணுகுண்டு வீச்சு என்பது நம்மில் நிறைய பேருக்கு தெரியும்.. இதற்காக வரலாறும் நாமும் அமெரிக்காவை நிறைய திட்டி விட்டோம்... ஆனால்... அந்த அணுகுண்டு வீச்சுக்கு காரணமான , அதற்கு முந்தைய விஷயம்.... ஜப்பான் , அமெரிக்காவின் கடற்படை மீது நடத்திய படுபயங்கர தாக்குதல் என்பது நம்மில் சில பேருக்குத்தான் தெரிந்திருக்கும்.. "பேர்ல் ஹார்பர் அட்டாக்" என்று குறிப்பிடப்படும் அந்த தாக்குதலை விரிவாக காட்டிய ஒரு ஆங்கில திரைப்படம் "பேர்ல் ஹார்பர்"

அந்த திரைப்படத்தில் ஒரு காட்சி... அமெரிக்க ராணுவத்தில் பணிபுரியும் ஒரு கருப்பின இளைஞனை, அவனது மேலதிகாரியாக இருக்கும் வெள்ளைக்காரர் ஆயுத பிரயோகத்திற்கு அனுமதிக்கவே மாட்டார்... ராணுவ கப்பலின் சமையலறையில் தான் அவனுக்கு வேலை... அந்த கருப்பின இளைஞன் பலமுறை விண்ணப்பித்தும் அவனை சமையலறையிலேயே முடக்குவார் அந்த அதிகாரி...

இரண்டாம் உலக யுத்தத்தின் ஒரு நள்ளிரவில் சாரை சாரையாக வரும் ஜப்பானிய விமானங்கள் அந்த பேர்ல் ஹார்பர் மீதி கண்மூடித்தனமான தாக்குதல் நடத்த, அந்த உயரதிகாரியும் அடிபட்டு விழ... அப்போது இந்த கருப்பின இளைஞன் , தானும் ஆயுத தாக்குதல் செய்ய அனுமதிக்க வேண்டுமாய் கேட்பான்... அந்த அடிபட்டு விழுந்த வெள்ளை உயரதிகாரி, அப்போது தான் கண்ணசைவின் மூலம் அனுமதி கொடுப்பார்..

தன்னுடைய திறமையை எல்லாம் வெளிப்படுத்த நினைக்கும் அந்த கருப்பின இளைஞன் இருப்பதிலேயே பெரிய ஆயுதங்களாக பார்த்து , கையாண்டு எதிரி விமானங்களை சுட்டு வீழ்த்துவதாக அந்த கதைக்கள காட்சி அமைக்கப்பட்டிருக்கும்...

நிற்க...




தற்போதைய தமிழக அமைச்சர்களிலேயே அப்படியான ஒருவரை, மன்னார்குடி சதிகார கும்பலால் திறமையை பயன்படுத்த முடியாமல் நிராகரிக்கப்பட்ட ஒருவரை நம் கண்முன்னே நிறுத்துகிறது சமகால காட்சிகள்...

மரியாதை நிமித்தமாக சில பதவிகளுக்கேற்ப சில வார்த்தைகளை உச்சரிப்பது நம் வழக்கம்... "மேதகு" ஆளுநர்..., "வணக்கத்திற்குரிய" மேயர்... என்பது போலவே... "மாண்புமிகு" முதலமைச்சர்......

அப்படியான "மாண்புமிகு" என்ற வார்த்தையை கூட ஒழுங்காக உச்சரிக்க தெரியாத முதலமைச்சர், மற்ற அமைச்சர்கள் "மான்மிகு அம்மா அரசு... " என்று ட்ராமா போடும் வேளையில்.... அம்மாதிரி ட்ராமா எதுவும் போடாமல் , கிடைத்த வாய்ப்பை மிக அற்புதமாக பயன்படுத்தி கலக்குகிறார் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள்...

இன்று காலை, பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகளை பத்திரிக்கையாளர்கள் மூலம் மக்களுக்கு தெரிவித்த சந்திப்பில் அவர் "அம்மா அரசு என்றோ... அம்மாவின் வழியில் செயல்படும் அரசு" என்றோ சொல்லவில்லை.... ஏனென்றால்... இது அம்மாவின் அரசும் அல்ல... அம்மா வழியில் செயல்படும் அரசும் அல்ல என்பதை முழுமையாய் உணர்ந்து, தமக்கு கொடுக்கப்பட்ட அமைச்சருக்கான கடமையை மிகவும் திறம்படவும், தொலைநோக்கு பார்வையுடனும் செய்து கொண்டிருக்கும் நிதானம் அவரிடம் இருக்கிறது

ஹாட்ஸ் ஆப் திரு செங்கோட்டையன் அவர்களே....

முழு விடுமுறைக்கு அதிகாலை துயிலெழுச்சி

நாளைக்கு லீவுன்னா, இன்னிக்கு காலைல எழுந்துக்கும் போதே மனசுல ஒரு சந்தோசம் வரும்...
"நாளைக்கு காலைல இப்படி சீக்கிரம் எழுந்துக்க வேண்டாம்... அடிச்சு புடிச்சு ஓட வேண்டாம்..."அப்படின்னு ..

டெய்லிதான் அலாரம் வச்சு எழுந்துக்கிறோமே... இன்னிக்கு ஒருநாளாச்சும் அலாரம் அடிக்காம நல்லா தூங்கலாம்... என்று நினைத்து எட்டுமணி வரையோ, பத்துமணி வரையோ தூங்கி... பல்லு கூட தேய்க்காமல் அப்படியே டீ/காபி குடித்து... சோம்பல் முறித்து, மெதுவாக குளித்து, துணி துவைத்து, சமைத்து... சாப்பிட உட்காரும் போது... மணி இரண்டோ, மூன்றோ ஆகி இருக்கும்....

சாப்பிட்ட உடன் லேசாக கண்ணை சொக்கும்... ஒரு குட்டி தூக்கம் போட்டால் தேவலாம் போல இருக்கும்... தூங்கி விழித்து பார்த்தால்... நேரம் அஞ்சு மணியோ, ஆறு மணியோ ஆகி இருக்கும்... சோம்பலாய் இருக்கும்... அப்படியே டி வி முன்னாலோ, லாப்டாப்/மொபைலுடன் அமர்ந்தாலோ... அன்றைய தினம் முடிந்திருக்கும்.... மறுநாள் மீண்டும் அலாரம்... அவசர ஓட்டம்...



இந்த ஒரு நாள் விடுமுறைக்காக ஆறுநாள் காத்திருந்து, அந்த ஒரு நாளை எப்படி அனுபவித்தோம் என்று நினைத்தால்... ஒன்னுமே இருக்காது...

விடுமுறை தினம் முழுவதையும் அனுபவிக்க வேண்டும் என்றால்... முதலில் பத்துமணி, பதினோரு மணி என்று தூக்கம் தொடர்வதை விட்டு, எப்போதும் வேலைக்கு போக எழுந்திருக்கும் நேரத்திலயோ, அதற்கும் முன்பாகவோ எழுந்துவிட வேண்டும்...

பிறகு... நாம் எப்போதுமே அவசர அவசரமாக செய்யும் வேலைகளை, மிகவும் நிதானமாக, பரபரப்பில்லாமல்...ரசித்து செய்ய வேண்டும்... சம்பளத்திற்காக தினசரி செய்யும் அலுவலக பணிகள் எதுவுமே இல்லாமல்.... நமக்காக தினசரி அவசரம் அவரசமாக செய்யும் வேலைகளை.... நமக்கே நமக்காக செய்து கொள்கிறோம் என்ற நினைப்புடன்... நிதானமாக ரசித்து, அனுபவித்து செய்யும் பொழுது புரியும்... வாழ்வின் சுவை எத்தனை இனிது என்று.....

ஆறுநாள் காத்திருந்து கிடைத்த விடுமுறையை நொடி நொடியாய் அனுபவித்த திருப்தி கிடைக்கும்...

நீட்... புதிய அரசியல்..


கடந்த ஓரிரு வருடங்களாய் அல்ல-சில்லறைகளின் அரசியல் வாழ்விற்கு உதவியதில் நீட் முக்கிய பங்கு வகிப்பது சமகால சமூக நகர்வுகளை கவனிப்பவர்களுக்கு நன்றாக தெரியும்...



தற்போது புதிய சர்ச்சை... வெளிமாநிலங்களில் நீட் தேர்வு மையங்கள்....

தமிழக மாணவர்களுக்கு மட்டும் வெளிமாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறதா.... இல்லை.... வேறுபல மாநில மாணவர்களுக்கும் அவ்வாறு ஒதுக்கப்பட்டிருக்கிறதா.... என்ற தெளிவான தகவல் இல்லை...

இருந்தாலும்.... தேர்வு எழுதுவதற்காக , தேவு மையங்கள் அமைக்க கூடிய வசதிகளும், உள்கட்டமைப்பும் இல்லாத மாநிலங்களை பற்றி நாம் பேச தேவை இல்லை... ஆனால்.... வெகு நிச்சயமாக தமிழ்நாடு அத்தகைய உள்கட்டமைப்பை உருவாக்கி வைத்திருப்பது உறுதியான விஷயம்.. இந்நிலையில்... தமிழ்நாட்டில் படிக்கும் அனைவருக்கும் அந்த கல்வி ஆண்டின் இறுதி தேர்வை எழுதக்கூடிய உள்கட்டமைப்பை வைத்திருக்கும் தமிழகத்தில்.... அதில் ஒரு குறிப்பிட்ட சதவிகித மாணவர்கள் மட்டும் எழுத கூடிய நீட் தேர்வு மையங்களை உருவாக்க முடியாது என்பது ஏற்றுக்கொள்ள கூடிய வாதம் இல்லை..

இதுபற்றி நாம் பிறகு விவாதிக்கலாம்.... தீப்பற்றி எரியும் நேரத்தில் அதை அனைப்பதுதான் உடனடி தேவையே தவிர... எப்படி தீப்பிடித்தது என்பது பற்றிய விசாரணை அல்ல.... அதை பிறகு செய்து கொள்ளலாம்... முதலில் தீயை அணைப்போம்...

சரி.... ஆமாம்.... இந்நேரம் நமக்கு வேறு சில கேள்விகளும் எழுவது தவிர்க்க முடியாததாகிறது...

இன்று காலை , வெளிமாநிலத்திற்கு பயணித்து நீட் தேர்வு எழுதும் அளவிற்கு வசதி இல்லாததால்.... நீட் தேர்வு எழுத செல்லாத திருச்சி மாணவரை பற்றி ஒரு செய்தி தொலைக்காட்சியில் செய்தி ஒளிபரப்பானது.... ஆமாம்.... திருச்சியில் இருந்து எர்ணாகுளம் சென்று பரீட்சை எழுத கூட வசதி இல்லாத மாணவர் , திருச்சியிலேயே தேர்வு எழுதி பாஸ் செய்திருந்தாலும் கூட எப்படி அடுத்த ஐந்தாண்டுகள் மருத்துவ கல்லூரியில் பயில்வார்???

மருத்துவ படிப்பு என்பதன் பின்னணியில் விளையாடும் லட்சங்கள்-கோடிகள் பற்றி எல்லோருக்குமே தெரியும்.... எஸ் ஆர் எம் மருத்துவ கல்லூரியில் இடம் வாங்கித்தருவதாய் கோடிகளை வாங்கி ஏமாற்றிய வேந்தர் மூவிஸ் "மதன்" அவர்களை நாம் மறந்திருக்க முடியாது... முன்பெல்லாம் வெகு சில மாணவர்களே மார்க்கின் அடிப்படையில் மருத்துவ கல்வியில் சேர்ந்தார்கள்.. மிகப்பெரும்பாலானவர்கள் "பண பலத்தின் " காரணமாகவே மருத்துவ கல்லூரிகளில் இடம் பிடித்தார்கள்.... ஏழை-நடுத்தர குடும்பத்தில் பிறந்த மாணவர்களுக்கு மருத்துவ கல்வி என்பது எட்டாகனியாகத்தான் இருந்திருக்கிறது....

இந்நிலையில், எர்ணாகுளம் சென்று தேர்வு எழுதும் அளவிற்கு கூட வசதியற்ற ஒரு குடும்பத்தில் பிறந்த ஒரு மாணவனுக்கு "மருத்துவ கல்வி" மீதான நம்பிக்கையை விதைத்தது நீட் மட்டும் தான் என்பதை எப்படி வசதியாக மறந்துவிட்டோம்??

நிச்சயம் சமகாலத்தில் படிக்கும் மாணவர்களும் - மாணவர்களின் பெற்றோர்களும் மிக நன்றாகவே உணர்ந்திருகிறார்கள்..... நீட் தேர்வுகள் வந்த பிறகுதான் நாமும் மருத்துவ கல்வி பற்றி கனவு காண முடிந்திருக்கிறது.....என்ற உண்மையை..... சிற்சில நிர்வாக குளறுபடிகள் இருந்தாலும்... இவைகள் சீரமைக்கப்பட்ட பிறகு நிச்சயம் பல ஏழை, நடுத்தர குடும்பங்களை சேர்ந்த மாணவர்கள் மருத்துவ கல்விக்கான வாய்ப்பை பெறுவார்கள்...

ஆனால்... எப்போதும் போல... தமிழக மக்களை முட்டாளாக்கி வைத்திருந்தே அரசியல் ஆதாயம் அடைந்த தமிழக அரசியல்வாதிகளும்..... எரியும் தீயில் எண்ணெய் ஊற்றி மட்டுமே தன்னுடைய டி ஆர் பி ரேட்டிங்கை உயர்த்தி பழக்கப்பட்ட ஊடகங்களும் சேர்ந்து மாணவர்களின் அந்த நம்பிக்கையை உடைத்து குழப்ப பார்க்கிறார்கள்..

கடந்த வருடம் அனிதாவை பலி கொடுத்து தங்களின் அரசியல் இருப்பபை காட்டியவர்கள்... இவ்வருடம் வேறு யாரோ ஒரு அனிதாவை உருவாக்கவே முயல்கிறார்கள்....

ப்ளீஸ்...... எனதருமை
மாணவர்களே... நன்றாக படித்தால்.... உள்வாங்கி புரிந்துகொண்டு திறமையாய் படித்தால்... நிச்சயம் நீட் தேர்வுகளில் வெற்றி பெற முடியும்..... அதை செய்யுங்கள்..... இந்த தமிழக அரசியல்வாதிகளின் நரித்தனத்தை நம்பினால்...... ஒரு ஒரு கேள்விதான்....

"உங்களில் யார் அடுத்த அனிதா....??"

நம்மை ஆள எடப்பாடி எப்படி வந்தார்??

ஒரு கதை...

ஒரு தமிழன், ஒரு மலையாளி, ஒரு தெலுங்கன்.. ஒரு கன்னடன்.... நாலு பேரும் ஒன்னா தங்கி இருந்த இடத்துக்கு பக்கத்துல ஒரு "இயற்கை அன்னை" கோயில் பாழடைஞ்சு போய் இருந்தத பார்த்தாங்க....

தமிழனுக்கு மனசு கேக்கல.... உடனே அந்த கோயில சுத்தம் பண்ணி, கழுவி.. ஒரு அகல் விளக்குல எண்ணெய் ஊற்றி விளக்கு ஏத்தி வச்சான்....

மறுநாள் வந்து பார்த்தப்போ.... அந்த அகல் விளக்குல திரி மட்டும் அப்படியே இருக்கு... ஆனா... எண்ணெய் இல்ல.... இதே மாதிரி தினசரி நடக்குது...
ஆரம்பத்துல அத என்னமோன்னு கண்டுக்காம விட்டுட்ட தமிழன் யோசிக்க ஆரம்பிச்சான்...

அதெப்படி... நியாயமா மொத்த எண்ணெயும் எரிஞ்சிருந்தா திரியும் சேர்ந்து எரிஞ்சு சாம்பலா போயிருக்கும்... ஒருவேளை விளக்கேத்தின கொஞ்ச நேரத்துலையே காத்துல விளக்கு அனைஞ்சிருந்தா மிச்ச எண்ணெய் அப்படியே இருக்கணும்... இங்க திரியும் அப்படியே இருக்கு.. ஆனா எண்ணெய் மட்டும் காணோம்...

ஆஹா... இதுல என்னமோ தப்பு இருக்கு.. கண்டு பிடிக்கணும்னு நினைச்சு ஒருநாள் விளக்கேத்தி வச்சுட்டு அங்கேயே ஒரு இடத்துல மறைஞ்சு நின்னு மொபைல்ல ரேடியோ கேட்டுகிட்டே நின்னான்...

ரேடியோல நியூஸ் சொன்னாங்க.... விவசாயம் செய்ய தண்ணி இல்லாததால மனம் உடைஞ்ச தஞ்சை விவசாயி ஒருத்தர் தற்கொலை செய்து கொண்டார்... கேரளாவில் நல்ல மழை.... ஆந்திராவில் அணைகள் நிரம்பி இருப்பதால் தண்ணீர் பஞ்சம் இல்லை... கர்நாடகாவில் விளைச்சல் நல்லமுறையில் இருப்பதால் கர்னாடக விவசாயிகள் மகிழ்ச்சி.... இப்படியா நியூஸ் சொல்லிகிட்டிருக்காங்க ரேடியோவுல...

திடீர்னு.. இவன் கூட தங்கி இருந்த மலையாளி, கன்னடன், தெலுங்கன் மூணு பேரும் அங்க வந்தாங்க... இந்த தமிழன் ஏத்தி வச்சிருந்த விளக்க ஊதி அணைச்சுட்டு, அந்த அகல் சட்டில இருந்த எண்ணெய எடுத்து தலைல தேய்ச்சுகிட்டு போய்ட்டாங்க...

நம்மாளுக்கு காண்டாயிடுச்சு.... நேரா "இயற்கை அன்னை" சாமிகிட்ட போனான்...

"ஏ சாமி.... இருந்தாலும் உனக்கு இவ்ளோ எகத்தாளம் ஆகாது... பாழடைஞ்சு போய் கிடக்குறியேன்னு நான் உன் கோயில சுத்தம் பண்ணி விளக்கேத்தினா.... நீ என் தமிழக விவசாயிங்கள வஞ்சிச்சு மழை பெய்யாம சாவடிக்கிற... ஆனா.... நான் விளக்குல ஊத்தின எண்ணெய திருடி தலைல தேய்ச்சுகிற அந்த மலையாளி, தெலுங்கன், கன்னடனுக்கு எல்லாம் நல்ல மழை பெய்ய வச்சு அங்க இருக்க விவசாயிங்கள சந்தோஷமா வச்சிருக்க... உனக்கு மனச்சாட்சியே இல்லையான்னு கதறினான்....

இயற்கை அன்னை நேரடியாவே இவன் முன்னாடி வந்துட்டாங்க... " அட தமிழா.... உனக்கு ரொம்ப ரொம்ப கெட்ட நேரம் டா... உன்னோட இனமே அழிஞ்சு போற அளவுக்கு உனக்கு கெட்ட நேரம் நடக்குது.... ஆனா... அவனுங்களுக்கு நேரம் நல்லா இருக்கு..... நீ பண்ற புண்ணியம்தான் உன்னை இந்த அளவுக்காவது பாதுகாக்குது.... அவன் நேரம் நல்லா இருக்கிறதால..அவனுக்கு நிறைய நல்லது கிடைக்கணும்... ஆனா... அவன் பாவம் பண்ணிக்கிட்டு இருக்கதால கொஞ்சமா நல்லது மட்டும் கிடைக்குது.... " ன்னு சொன்னாங்க...

உடனே தமிழன்... "புரியலையே.." ன்னான்...

"அட பக்கிப்பயலே.... நியாயமா அந்த தெலுங்கன், கன்னடன், மலையாளிக்கு இருக்க நல்ல நேரத்துக்கு அவனுங்களுக்கு ராமனோ -புத்தரோ-நபியோ-ஏசுவோ அவதாரம் எடுத்துதான் முதலமைச்சரா வந்திருக்கணும்... ஆனா அவனுங்க பாவம் பண்றதால சித்தராமையாவும், பினராயி விஜயனும், சந்திரபாபு நாயுடுவும் முதலமைச்சரா வந்திருக்காங்க....

ஆனா...உனக்கு நடக்குற கெட்ட நேரத்துக்கு கருணாநிதியோ-ஸ்டாலினோ தான் முதலமைச்சரா வந்திருக்கணும்... நீ பண்ண புண்ணியம் தான் இந்த எடப்பாடியோட தப்பிச்ச....




ம்ம்... ஓங்கி அடிக்க வேண்டியத தாங்கி அடிச்ச இயற்கை அன்னையை வணங்குவோம்...

அதீத கற்பனை வேண்டாம்

எல்லா பெரிய தயாரிப்பு/சந்தைப்படுத்துதல் நிறுவனங்களிலும் ஆராய்ச்சி மற்றும் மேம்படுத்துதல் துறை என்று ஒன்று இருக்கும்... இவர்கள் தயாரிப்பு மற்றும் சந்தைப்படுத்துதலின் புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தவும், ஏற்கெனவே இருக்கும் பொருளின் தரத்தை, உபயோகத்தை, வசதியை மேம்படுத்தவுமான ஆராய்ச்சியில் ஈடுபட்டிருப்பார்கள்...



இவர்களின் பார்வை சற்றேறக்குறைய கால் நூற்றாண்டுகளை கடந்ததாக இருக்கும்...

ஆனால்... பூமியில், மானுடவியலில், வாழ்வியலில் நிகழும் எல்லா மாற்றங்களுமே இவர்களை சார்ந்ததாக இருக்காது... காக்கை உட்கார பனம்பழம் விழுந்த கதையாக.... இவர்களின் ஆராய்ச்சிக்கு உட்படாமல்.. எதார்த்தமாக நிகழும் பல மாற்றங்களை இவர்கள் தங்களுக்கு சாதகமாய் மாற்றிக்கொள்வதும் உண்டு...

சமகால சமூக வலைத்தள ஊடகவியலாளர்களும், "திடீர்" விஞ்ஞானிகளும், "குபீர்" ஆராய்ச்சியாளர்களும் மானுடவியலில், பூகோளவியலில், வாழ்வியலில் என்ன மாற்றம் நிகழ்ந்தாலும்... "இது கார்பொரேட்" சதி.... என்று அதற்கு பொருத்தமாக ஒரு கற்பனை கதையை இவர்களாகவே உருவாக்கி பரப்புகிறார்கள்....

"சென்னையில் இருந்து கோவைக்கு பஸ் கட்டணம் எவ்ளோ.... டிக்கெட் எடுக்காட்டி அதுக்கு பைன் எவ்ளோ.... சரி... நான் டிக்கெட் எடுக்க மாட்டேன்...இந்தா புடி... 500 ரூபா பைன்..." என்பது போன்ற அறிவார்ந்த மீம்ஸ்களை கண்டவுடன் பகிரும் பல ஆர்வக்கோளாறுகள் .. அதிவேகமாய் இம்மாதிரியான "கார்பொரேட்" சதிகளையும் பகிர்ந்து சமூக விழிப்புணர்ச்சி சேவை செய்துவிட்டதாய் திருப்தி அடைகிறார்கள்...

கொஞ்சம் யோசித்து பார்த்தால்... இம்மாதிரியான செய்திகளை படித்து, உள்வாங்கி,அதை அப்படியே நம்பி...அதை பலருக்கு பரப்பி... கடைசியில் எதையுமே நம்பாமல்... எல்லாவற்றையும் பார்த்து பயந்து... யாரோ நம்மை வஞ்சிப்பதாய் எப்போதுமே ஒரு கற்பனை உலகில் சிக்கி... மனநோயாளியாய் உருமாறிக்கொண்டிருக்கிறார்கள்..

இன்னும் சிலபல வருடங்களில் ஐயோ... என் சோத்துப்பானையை அபகரிக்க கார்பொரேட் சதி.... என்னை தூங்க விடாமல் கார்பொரேட் சதி.... எங்கள் வீட்டு ஜன்னல் வழியாக காற்று வராமல் கார்பொரேட் சதி என்று புலம்பி புலம்பி சாகப்போகிறார்கள்...

#கொஞ்சம் உஷாரா இருக்கிறது நல்லதுதான்... அதே நேரம் சில மாற்றங்களை ஏற்றும், சில மாற்றங்களை சகித்தும் வாழ்வதுதான் வாழ்க்கையே தவிர.... 24X7 உஷாரா இருக்கேன்னு வாழ்க்கையை தொலைத்து பைத்தியம் பிடித்து அலையாதீர்கள்..

மகளிர் தின வாழ்த்து

பெண்கள் உண்மையிலேயே மிகவும் திறமைசாலிகள்.. புத்திசாலிகள்... ஆனால்... அவர்களுக்குள் எப்போதும் ஒரு தயக்கம்.. சந்தேகம் இருந்துகொண்டே இருக்கிறது.... "நம்மால் இதை செய்ய முடியுமா.... நமக்கு இது தெரியுமா.." போன்ற ஆரம்பகால சந்தேகமும்... "நான் இதை செய்தால் மற்றவர்கள் நம்மை கேலி செய்வார்களோ.... நமக்கு இது அவசியமா... நாம் ஏன் ரிஸ்க் எடுக்க வேண்டும்.... ஒருவேளை தவறாக முடிந்துவிட்டால் என்ன செய்வது...." போன்ற தயக்கமும் பெண்களுக்குள் ஆழ வேரூன்றி இருக்கிறது...



"உனக்கு ஒன்னும் தெரியாது.... நீ பேசாம இரு.." என்று காலம் காலமாய் அவர்களை அடக்கி வைத்ததன் தொடர் விளைவுகள் தான் இவை.." என்பதை நானும் அறிவேன்...

என்னடா இது.. சாத்தான் வேதம் ஓதுதே.... என்ற ஏளனச்சிரிப்பு உங்கள் உதடுகளில் இப்போது தவழும் என்பது எனக்கு நன்றாக தெரியும்.... ஆயினும்... அது உங்களின் தவறான புரிதல் என்பதை இங்கே ஆணித்தரமாக பதிவு செய்ய விரும்புகிறேன்...

பெரும்பாலான என்னுடைய பதிவுகளில் பெண்களின் பாதுகாப்பு என்ற ஒன்றையே நான் முன்னெடுத்திருக்கிறேன்.... ஏனென்றால் பெண்கள் உலடளவில் பலவீனமானவர்கள்... இவர்களை மூர்க்கர்களால் எளிதில் பாதிப்படைய செய்துவிட முடியும்... ஆகவே பாதுகாப்பாக நிற்க சொல்லி இருக்கிறேனே தவிர..... நிற்கவே கூடாது என்று நான் என்றுமே சொன்னதில்லை....

மேலும்... ஆசிய பெண்கள் மிகவும் அழகானவர்கள்... குறிப்பாக இந்திய பெண்கள் பேரழகானவர்கள்... அதிலும் தாய்மை அழகை பெற்ற முப்பதுகள்-மற்றும் நாற்பதுகளில் இருக்கும் பெண்கள் மிக மிக பேரழகானவர்கள்... இவர்களின் உடலமைப்பு மிகவும் கிளர்ச்சியானது... கடற்கரை மணலில் இரண்டு துண்டு ஆடைகளுடன் முக்கால் நிர்வாணமாக சூரிய குளியல் நடத்தும் வெள்ளைக்கார பெண்ணை காட்டிலும்.... முழங்கால் தெரிய பாத்திரம் கழுவும் நம்மூர் பெண் பெரிய கிளர்ச்சியை ஏற்படுத்தி விட முடியும்... நாடா வைத்த , அகல முதுகு தெரியும் படியான ஜாக்கெட்டுகள் மாபெரும் கிளர்ச்சியை ஏற்படுத்தக்கூடியவை.... இயல்பாகவே ஆண்களின் ஹார்மோன்கள் கண்களால் பார்ப்பதாலும், காதுகளால் கேட்பதாலும் கூட வெகு விரைவில் சுரக்கும் உடலமைப்பை கொண்டது.... உங்களை போல வெகு அழகான பெண்கள் அகல முதுகு தெரியும் படியான ஜாக்கெட் அணிந்தோ... கவ்விப்பிடிக்கும் லெக்கின்ஸ் அணிந்தோ பொதுவெளியில் உலா வரும்போது.. அது பல ஆண்களை நிச்சயம் கிளர்ச்சி அடைய செய்யும்.... மனக்கட்டுப்பாடு இல்லாத சில ஆண்கள் அதை வேறு ஒரு பலவீனமான பெண்ணிடத்திலே வெளிப்படுத்த முயலக்கூடும்... ஆகவேதான் பெண்களின் ஆடை கலாச்சாரம் பற்றியும் பல இடங்களில் நான் சுட்டிக்காட்டுகிறேன்...

இவ்வளவு திறமையான, அழகான பெண்கள் வாழ்க்கையை ஜெயிக்க முன்வந்து அதற்கான முயற்சிகளை எடுக்கும் போது... நிச்சயம் அவர்களுக்கு ஆண்கள் பக்கபலமாக இருப்பார்கள்... இருக்கிறார்கள்..... ஆனால் துரதிஷ்டவசமாக.... சிலரின் தவறான போதனையில் மயங்கிய பெண்கள்... ஆண்களை ஜெயித்து விட நினைக்கிறார்கள்... அங்கேதான் அவர்கள் தோற்றுப்போகிறார்கள்...

நிச்சயம் நீங்கள் வாழ்க்கையை வெல்ல வேண்டும்.. அதற்கு நாங்கள் எப்போதுமே பக்க பலமாக இருப்போம்.... எங்களை ஜெயிக்க நினைத்து நாம் இருவருமே வாழ்க்கையில் தோற்க காரணமாகாதீர்கள்...

அன்பு மகளிர் அனைவருக்கும் இனிய மகளிர் தின நல் வாழ்

த்துகள்...

மோடி ஊதிய புகைமுட்டி

எங்கூர்ல நாங்க கடலை சாகுபடி செய்றப்போ.... (பார்த்தீங்களா..... உடனே கடலை சாகுபடின்னதும் யாரோ பொண்ணு கூட பேசிகிட்டிருந்த விஷயம்னு உங்களை எல்லாம் இந்த பாழா போன சம்முவம் நம்ப வச்சிருக்கு.... ) சரி... விஷயத்துக்கு வருவோம்..... கடலை சாகுபடி செய்றப்போ..... எலி அங்கங்க வளை பறிச்சு கடலை எல்லாம் கட் பண்ணி கொண்டு போய் பதுக்கிடும்.... அப்போ நாங்க என்ன செய்வோம் தெரியுமா....?? அந்த எலி வலைல புகை முட்டி வச்சு ஊதுவோம்... புகை முட்டி தெரியுமா.... உங்களுக்கு....??

ஒரு சிறிய மண் கலையத்திகுள் (சிறிய அளவிலான பானை) வைக்கோலை நிறைத்து.. பானையின் அடிப்பகுதியில் சிறிய துளை வைத்து... அதில் சில நெருப்பு கங்குகளை போட்டு... பின்புறமுள்ள துளை வழியாக காற்றை ஊதும்பொழுது... தீ கங்குகளின் சூட்டில் உள்ளே இருக்கும் வைக்கோல் மீதும் தீ பரவும்.... இது கனிந்த நெருப்பாக அடர்ந்த புகையை வெளியிடுமே தவிர.... நெருப்பாக எரியாது....

இந்த அடர் புகையை அந்த எலி வலைக்குள் நிரப்பும்பொழுது... உள்ளிருக்கும் எலிகள் தப்பிக்க முயலும்... சில எலிகள் புகையின் தாக்கத்தால் மயங்கி வலைக்குள்ளேயே சிக்கிக்கொள்ளும்.... சில எலிகள் வேறொரு பக்கம் வெளியேறி ஓடும்.... அப்படி ஓடும் அந்த எலிகளை கையில் குச்சியுடன் இருக்கும் வேறொருவர் ஒரே அடியில் வீழ்த்துவார்.... சில சமயம் அதையும் மீறி சில எலிகள் தப்பித்துவிடுவதும் உண்டு...


நிற்க....



விஜய் மல்லையா - எஸ் பி ஐ உள்ளிட்ட நிறைய வங்கிகள்..

நீரவ் மோடி - பஞ்சாப் நேஷனல் பேங்க்

குப்தா - பேங்க் ஆப் பரோடா...

# மேற்கண்ட நபர்கள் எல்லாம் பல ஆயிரம் கோடிக்கணக்கில் குறிப்பிடப்பட்டிருக்கும் வங்கியில் / வங்கி உதவியுடன் நிதி மோசடியில் ஈடுபட்டவர்கள்...

ஆமாம்..... இத்தனை ஆயிரம் கோடிகளை ஓரிரு மாதங்களிலோ .. ஓரிரு வருடங்களிலோவா ஏமாற்றி இருப்பார்கள்??

"சும்மா கத விட்றானுங்கப்பா.....இதெல்லாம் ரொம்பகாலமா நடந்திருக்கும்... இப்போதான் வெளில வருது...." என்று சொல்ல நீங்கள் பெரிய பொருளாதார மேதையாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை....

ஆனா இப்போ ஏன் திடீர் திடீர்னு கண்டு பிடிக்கிறாங்க .. அல்லது ஏமாத்தினவனே பிச்சுகிட்டு ஓடறான்???

இப்போ திரும்பவும் ஒரு தடவை "புகைமுட்டி" வேட்டையை நினைவில் கொள்க....

புகை முட்டி ஊதும் வேலையைத்தான் இப்போ மத்திய அரசு பண்ணுது.... இவ்வளவு காலமும் கேப்பாரும் இல்ல... மேய்ப்பாரும் இல்ல.... என்றபடி தேச பொருளாதாரத்தை சுரண்டி கொழுத்தவர்கள் வேறு வழி இல்லாமல் ஓட கூடிய கட்டாய சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்...

மோடி ஒழிக ன்னு எழுதலன்னா கண்டிப்பா இந்த கட்டுரை நிறைவடையாது....