வியாழன், 20 செப்டம்பர், 2018

சுயநலத்தை கற்பிக்கும் கல்வி

ஒரு காக்காக்கு ரொம்ப தாகமா இருந்துச்சாம்... ஊரெல்லாம் அலைஞ்சும் காக்கா குடிக்கிற மாதிரி திறந்து வச்ச பாத்திரம் எதுலயும் தண்ணியே இல்லையாம்... கடேசியா ஒரே ஒரு குடத்துல அடில கொஞ்சமா தண்ணி இருந்துச்சாம்...

காக்கா பானை மேல உட்கார்ந்து குனிஞ்சு குடிக்க ட்ரை பண்ணுச்சாம்.. ஆனா தண்ணி எட்டலையாம்... ஒடனே காக்கா.... கீழ கெடந்த கூழாங்கல்ல எடுத்து எடுத்து அந்த பானைக்குள்ள போட்டுச்சாம்.... கல்லு பானைக்குள்ள நிறைய நிறைய.. தண்ணி கொஞ்சம் கொஞ்சமா மேல வந்துச்சாம்.. காக்கா குடிச்சுட்டு சந்தோஷமா பறந்து போச்சாம்...

நம் பிரச்சனைகளை தீர்க்க புத்திசாலித்தனமான உழைப்பு அவசியம்.. என்பதை விளக்கும் விதமாக இப்படி ஒரு கதையை நான் தொடக்கப்பள்ளி படிக்க ஆரம்பித்த காலங்களில் சொல்லிக்கொடுப்பதுண்டு.... பெரும்பாலான தாத்தா-பாட்டிகளும் கூட இந்த கதைகளை பேரக்குழந்தைகளுக்கு பெட்-டைம் ஸ்டோரியாக சொல்வது வழக்கம்...

நேற்றிரவு, கடந்த ஆண்டு அபி படித்து விட்டு போட்டிருந்த ஒன்றாம் வகுப்பு தமிழ் புத்தகத்தை எடுத்து பார்த்தேன்... அதிலும் இந்த கதை இருந்தது.... ஆனால்... சமகாலத்திற்கேற்ப அந்த கதை மாற்றம் பெற்றிருந்ததை கண்டு அதிர்ந்தேன்...





ஆம்... இந்த காக்கைக்கும் தாகம் எடுத்தது... தண்ணீர் தேடியது.. ஒரு பானையில் தண்ணீரை கண்டது... ஆனால்... இந்த காகம் கூழாங்கற்களை எல்லாம் தேடவில்லை... பானையின் அடிப்பகுதியில் தன்னுடைய அலகால் குத்தி துவாரமிட்டது... தண்ணீரை குடித்துவிட்டு பறந்து சென்றது...

அட பாவிகளா.... குழந்தைகளுக்கு நீங்கள் கற்றுக்கொடுக்கும் விஷயங்கள் இதுதானா??

பானைக்கு "வாய்" இருந்தாலும் கூட ஓட்டை போட்டு தண்ணீர் குடிக்கும் குறுக்கு வழியை கற்று தருகிறீர்கள்..

இருக்கும் நல்ல பானையை உடைத்து அது அடுத்து வருபவனுக்கு உபயோகம் இல்லாமல் போனாலும் பரவாயில்லை... நம் காரியம் ஆனால் சரி என்று கற்று தருகிறீர்கள்...

வன்முறையை பிரயோகித்து, அடுத்தவனுக்கு சொந்தமானதை உங்கள் தேவைக்காக எடுத்துக்கொள்ளலாம் என்று கற்று தருகிறீர்கள்..

உங்கள் தேவைக்கு குடித்தது போக மிச்சமுள்ளது வீணாக போனாலும் பரவாயில்லை என்று கற்று தருகிறீர்கள்...

# எது நாசமாய் போனாலும் பரவாயில்லை.. என் காரியம் நடக்க வேண்டும் என்று "சுயநலமாய்" மட்டுமே சிந்திப்பதுதான் புத்திசாலித்தனம் என்று கற்று தந்தால்...

"தீக்குளிக்கும்" போது செல்பியோ-வீடியோவோ எடுக்காமல் அவன் எப்படி காப்பாற்ற நினைப்பான்??

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக