வியாழன், 20 செப்டம்பர், 2018

அந்நியமாகும் தாய்-தந்தை வாசனை

ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு பிரத்யோகமாக வாசனை உண்டு... அதை வியர்வை வாசனை என்றோ.. உழைப்பின் வாசனை என்றோ.. எதோ ஒரு பெயரில் சொல்லிக்கொள்ளலாம்....

பெண்களின் அக்குளில் இருந்து வரும் வாசனைக்கு ஆண்களின் பாலியல் ஹார்மோன்களை சுரக்க செய்யும் தன்மை உண்டு என்கிறது மருத்துவ விஞ்ஞானம்... காமம் ஆர்ப்பாட்டமாய் கிளர்த்தெழும் பதின் பருவ வயதை கடந்து... அது நிதானமடைந்து கரம்பற்றி மெல்ல நடைபோடும் காலத்தில் பாலியல் கூடலுக்கு இந்த வாசனை மிகவும் முக்கியம் என்றும் இந்த உடல்வாசனை ஒப்பாத தம்பதிகளால் கூடலில் ஈடுபாடுகொள்ள முடியாது என்றும் சொல்கிறது உளவியல் விஞ்ஞானம்...

மேற்பாரா ஒரு இடைச்செறுகள்தானே அன்றி.. பதிவு இதைப்பற்றியதில்லை...

அப்படி மனிதர்களுக்கான பிரத்யோக வாசனை பற்றி யோசிக்கையில்.. ஒவ்வொரு குழந்தைக்கும் தந்தை-தாயின் வாசனை மனதில் பதிந்த ஒன்று.. இருபதாம் நூற்றாண்டு குழந்தைகளுக்கு இந்த வாசனை அநேகம் சாத்தியப்பட்டது... வெளியூர் பயணம் செல்ல வேண்டும் என்றால்.. குறைந்த தூரமாக இருந்தால் கால் நடையாகவும், சற்றே தூரப்பயணம் என்றால் மரச்சக்கர மாட்டு வண்டியும் கட்டி பயணப்படும் விவசாய கிராம பின்னணி கொண்ட எனக்கும் அப்படித்தான்....

எல்லா ஆண் குழந்தைகளை போலவே எனக்கும் அப்பாவுடன் அதிக நெருக்கமில்லை என்றாலும்... எப்போதாவது பயணப்படும் வெளியூர் பயணங்களில் நடக்க முடியாமல் தவிக்கும் பொழுது என்னை தூக்கிக்கொண்டு நடக்கும் அப்பாவின் வாசனை இன்றும் என்னுள் பசுமையாயிருக்கிறது.... அருகில் இருந்து சாப்பிடும் போதோ... சைக்கிளில் பின் அமர்ந்து எங்காவது பயணப்படும்போதோ நுகந்த வாசனை இன்னும் நெஞ்சை விட்டு அகலவில்லை... அப்பா-அம்மாவை உணர்வதில் இந்த வாசனையின் பங்கு அளப்பரியது... அப்பா மரணித்து பத்தாண்டுகள் கழிந்துவிட்ட பிற்பாடும்.... நான் நாற்பதுகளின் தொடக்கத்தில் நுழைந்திருந்தாலும்.. என்றோ உணர்ந்த அப்பா வாசனை அப்படியேதான் இருக்கிறது...

அப்பாவிற்கு இருந்ததை போல எனக்கும் ஒரு வாசனை இருக்கும் தானே?? ஆனால்... எல்லா இருபத்தோராம் நூற்றாண்டு குழந்தைகளை போலவே.. என் மகனும் என் வாசனை அறியாதவனாய் தான் வளர்கிறான்....

அவனை பொறுத்தவரை அப்பாவின் வாசனை என்பது ராயல் மிரேஜ் லாவண்டர் வாசனையாகவோ, மோண்ட் ப்ளாங் இண்டிஜுவல் வாசனையாகவோ தான் இருக்கிறது.... அப்பா நெருக்கம் அன்னியப்பட்டு போயிருக்கிறது...

முதியோர் இல்லங்கள் பெருக இதுமாதிரியான "அன்னிய"த்தன்மையும் காரணமாயிருக்குமோ???

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக