சனி, 20 ஜூன், 2015

மத்திய அரசின் தந்திரம்... 100 நாள் வேலை..

மொகலாயர்களிடம் தோல்வியுற்று தலை மறைவாக இருந்துகொண்டு ஒவ்வொரு முறையும் தலை நகரத்தை தாக்கி கைப்பற்ற நினைத்து மீண்டும் மீண்டும் தோல்வியை தழுவிய மன்னன் சிவாஜி ஒரு நாள் பசியோடு சுற்றினாராம்... ஆப்பம் சுட்டு விற்றுக்கொண்டிருந்த ஒரு மூதாட்டியை கண்ட அவர் தன்னுடைய பசிக்கு ஆப்பம் சுட்டு தர கேட்டாராம்... மூதாட்டியும் சுட்டு தந்தாராம்.. பசியோடிருந்த சிவாஜி அந்த ஆப்பத்தை அதி வேகமாய் நடுவில் பிய்த்து தின்ன முயன்று சூடு தாங்காமல் துப்பினாராம்...

அதனை கண்ட அந்த மூதாட்டி "நீ அந்த சிவாஜி போல முட்டாளாக இருக்கிறாயே..." என்றாராம்...(சாப்பிட வந்தவர் தான் சிவாஜி என்பது அவருக்கு தெரியாது ) குழப்பமடைந்த சிவாஜி.." என்ன பாட்டி சொல்கிறாய்... புரியவிலையே.." என்று கேட்க..

"ஆமாம் மகனே... ஆப்பத்தின் நடுப்பகுதி தடிமனாக இருக்கும்.. அந்த இடத்தில் சூடு அதிகமாக இருக்கும்.. மெலிதான ஓரத்தில் சூடு குறைவாக இருக்கும்.. நீ முதலில் மெலிதான ஓரத்தை பிய்த்து சாப்பிட்டால் அதற்குள் தடிமனான நடுப்பகுதியும் ஆறி விடும்... அந்த சிவாஜி பாதுகாப்பு குறைவாக உள்ள பகுதிகளை தாக்கி தன்வசப்படுத்திக் கொள்ளாமல் நேரடியாக தலை நகரத்தையே கைப்பற்ற நினைத்து ஒவ்வொரு முறையும் தோற்கிறான்.." என்றாராம்....

அப்போதுதான் சிவாஜிக்கு உரைத்தது.. அதன் பின்னர் தம்முடன் இருந்த சிறு படையின் உதவியோடு சிறு சிறு நகரங்களை தாக்கி கைப்பற்றி தன்னுடைய பலத்தை பெருக்கிக்கொண்ட சிவாஜி.. பின்னாளில் பெரும் பலம் பெற்று தலை நகரத்தையும் கைப்பற்றி ஒரு மாபெரும் சாம்ராஜ்யத்தை உருவாக்கி சத்ரபதி சிவாஜியானார் என்பது வரலாறு...

பன்னாட்டு பண முதலைகள், கார்பொரேட் கம்பெனிகள் இந்தியாவை ஒட்டு மொத்தமாய் தங்கள் ஆதிக்கத்தின் கீழ் எடுக்க அந்த பாட்டியின் உபதேசத்தை கையிலெடுத்திருக்கிறார்கள்...


ஆம்... அந்த பாட்டி சுட்ட ஆப்பத்தின் ஓரங்கள் போல் இருப்பவர்கள் தான் இன்றைய சிறு குறு விவசாயிகள்... சிறுதொழில் செய்பவர்கள் முதலில் அவர்களை ஒழிக்க வேண்டும்... 


அதற்கான வேலைகளை மத்திய / மாநில அரசுகள் மூலமாகவே செயல்படுத்தவும் தொடங்கி இருக்கிறார்கள்...

தண்ணீர், இடுபொருட்கள், விதைகள், மின்சாரம் எல்லாவற்றிலும் பிரச்சனைகளை உருவாக்கி வ்விசாயிகளையும், சிறுதொழில் செய்பவர்களையும் ஒழிக்கும் முயற்சியில் பன்னாட்டு பணமுதலைகளின் கூலிப்படையாய் செயல்படும் மத்திய மாநில அரசுகள் , கடைசியாய் கையிலெடுத்திருப்பது வேலைக்கு ஆள் கிடைக்காமல் செய்யும் தந்திரம்... 

அதுதான் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம்...

ஏற்கெனவே பல பிரச்சினைகள் மூலம் ஓரளவுக்கு வியசாயிகள்- சிறு குறு தொழில் செய்தவர்களை ஒழித்தவர்கள் இப்போது இதன் மூலம் ஆட்கள் கிடைக்காத பிரச்சினையை உருவாக்கி எஞ்சி இருப்போரையும் ஒழிக்க பார்கிறார்கள்...

விவசாயமோ சிறு தொழில்களோ செய்ய முடியாது என்ற நிலை வரும்போது அவர்கள் தங்களிடம் இருக்கும் காக்காணி அரைக்காணி நிலங்களை விற்க முன்வருவார்கள்...

அப்போது தங்களிடம் இருக்கும் பணபலத்தை பயன் படுத்தி இந்த நிலங்களை முதலில் கைப்பற்றுவார்கள்... பின்னாளில் கொஞ்சம் கொஞ்சமாய் விஸ்தரித்து மொத்த இந்தியாவையும் அவர்கள் கட்டுக்குள் கொண்டு வந்து கார்பொரேட் பண்ணைகள் அமைத்து விவசாயம் செய்வார்கள்... 

விவசாயம் இருக்கும்... ஆனால் அது பண முதலைகளின் பிடியில் இருக்கும் 

நவீன கருவிகளின் மூலம் நாட்டின் மொத்த உணவு உற்பத்தியையும் அவர்களே கையிலெடுத்துக்கொள்வார்கள்.. இன்றைய சிறு குறு விவசாயிகள்- தொழிலாளிகள் அவர்களிடம் கூலிக்கு வேலை செய்ய வேண்டி வரும். அவர்களுக்கு சம்பளம் வேண்டுமானால் ATM அட்டைகளின் மூலம் கிடைக்கலாம்... அதை வைத்து பசி தீர்க்க முடியாதே.... கொடுப்பதுபோல் கொடுத்து சேமிக்க வழி இல்லாமல் மொத்தத்தையும் உணவுத்தேவைகாகவே செலவழிக்கவும் வைப்பார்கள்...அவர்களுக்கு எதிராக உணவு பாதுகாப்பு சட்டமோ.... நில உச்சவரம்பு சட்டமோ வேலை செய்யாது... கோடிகளை கொட்டிக்கொடுத்து அவற்றை செயல்படவிடாமல் முடக்கி உணவுப்பொருட்களுக்கான விலையை அவர்கள் மட்டுமே நிர்ணயிப்பார்கள்....

அவர்களுக்கு தான் நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக அரசுகள் பம்பரமாய் சுழன்று வேலை செய்கின்றன...

இன்று வேலை செய்யாமல், வலிக்காமல் 120 ரூபாய் கிடைக்கிறது என்று அரசு வீசும் எலும்பு துண்டுகளை பொறுக்கிக்கொண்டு அவர்களுடன் கூட்டு சேர்ந்து சிறு குறு விவசாயிகளை அழிக்கும் எல்லோருடைய சந்ததியும் அடிமைகளாய் அழியும்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக