சனி, 20 ஜூன், 2015

அக்கா

பக்கத்து வீடுகளில் வசிக்கும் சித்தப்பா பெரியப்பா குடும்பத்துடன் பங்காளி தகராறு இருந்தபடியால் அவர்களோடு பேசுவதில்லை... சித்தப்பா- பெரியப்பா மகன்களான அண்ணன் தம்பிகள் சிறுவயது முதலே பங்காளிகளாகவே வளர்ந்தார்கள்...

விளையாட எனக்கு இருந்த இரு உறவுகள் என் பெரிய அக்கா சுமதியும்.. சின்ன அக்கா ராஜகுமாரியும் தான்... பெரிய அக்கா உள்ளூர் பள்ளிக்கூடத்திற்கு போக ஆரம்பித்த பிறகு ஒரே துணை சின்ன அக்கா மட்டும்...
அடுத்த வருடத்தில் அவளும் பள்ளிக்கு செல்ல தனிமரமானேன்.... 
விவசாய குடும்பமாகையால் அப்பாவும் அம்மாவும் கருக்கலில் வயற் காட்டுக்கு சென்று அந்தியில் தான் திரும்புவார்கள்... துணையற்று போன நான் பட்டுக்கோட்டை மகாராணி சில்க்ஸில் கொடுத்த ஒரு காது அறுந்து போன மஞ்சள் பையில் ஒரு சிலேட்டு பலகையை எடுத்துக்கொண்டு சின்ன அக்காவுடன் பள்ளிக்கு செல்ல தொடங்கினேன்..எனக்கும் அவளுக்கும் இரண்டு வயது வித்தியாசம்...



ஒன்றாம் வகுப்பு தரையிலிருந்து மூன்றங்குல உயரம் உள்ள பலகை போட்டிருப்பார்கள்.. அமர்வதற்காக... முறையான அட்மிஷன் இல்லாததால் எனக்கு அந்த பலகையில் அமரும் வாய்ப்பு நிராகரிக்கப்பட்டது.. எல்லோருக்கும் கடைசியில் சுவர் ஓரமாய் அமர்ந்திருப்பேன்.. இப்படியாக ஓராண்டுகள் கழிந்தது...

கோடை விடுமுறை கழிந்த பின் ஒன்றாம் வகுப்பில் படித்த சின்னக்கா இரண்டாம் வகுப்புக்கு சென்றாள் ... இரண்டாம் வகுப்பு சோமு வாத்தியார் ஒன்றாம் வகுப்பு தங்கவேல் வாத்தியார் போல .இல்லை.. அங்கே சுவர் ஓரம் அமர்வதற்கு கூட அவர் அனுமதிக்கவில்லை...

காதறுந்த மஞ்சள் பையை ஒரு கையிலும் நழுவ துடிக்கும் கால்சட்டையை மறுகையிலும் பிடித்தபடி, கண்ணீரும் கம்பலையுமாய் சிலம்பேந்தி மதுரைக்கு வந்த கண்ணகி மாதிரி நான் என் பெற்றோர் உளுந்து அறுவடை செய்து கொண்டிருந்த வயல் நோக்கி படை எடுத்தேன்... 

வெய்யிலில் வியர்வையும் உளுந்தஞ்செடியின் சுனை அரிப்புமாய் அறுவடை செய்து கொண்டிருந்த எடுத்துக்கொண்டிருந்த அப்பாவுக்கு அந்த எரிச்சலை விட அதிக எரிச்சலை தந்திருக்க வேண்டும் எனது அழுகை...

என்னை அழைத்துக்கொண்டு உள்ளூர் பள்ளிக்கூடத்திற்கு வந்தார்.. அங்கு தலைமை ஆசிரியர் பொறுப்பில் இருந்த திரு அய்யாவு வாத்தியாரிடம் (உள்ளூர் காரர்... மாமா முறை... அப்பா அவரை 'வாத்தியாரே..' என்றே அழைப்பார்) "என்ன வாத்தியாரே... இந்த பய ஒரு வேலை செய்யாவிட மாட்டேன்றான்.. இவனையும் சேர்த்துக்குங்க..." என்றார்...
அப்போது பர்த் சர்டிபிகேட் கேட்டு எல்லாம் அட்மிஷன் தருவதில்லை.. கையை தலைக்கு மேலாக உயர்த்தி மறுபுறம் காதை தொடுவதே பள்ளி அட்மிஷன் பெரும் தகுதி... அப்படி மறுபுறம் இருக்கும் காதை தொட ஐந்து வயது நிரம்பியவர்களாலும் நெருக்கத்தில் இருப்பவர்களாலும் தான் முடியும்.. ஆனால் நான்கு வயது மட்டுமே ஆகி இருந்த என்னால் மறுபுறம் உள்ள காதை தொட முடியவில்லை....

அப்பா விடவில்லை.... உள்ளூர் தலைமை ஆசிரியர் என்பதால் தன்னுடைய இன்ஃப்ளூயன்சை (???) பயன் படுத்தி என்னை ஒன்றாம் வகுப்பில் சேர்த்துவிட்டார்...

அன்று தொடங்கியது என் அறிவுக்கான தேடல்.. (??) 

(சரி சரி... இதுக்ககெல்லாமா டென்ஷன் ஆவாங்க... மேல படிங்க... மேல படிங்கண்ணா ஸ்க்ரோல் பண்ணி மேல படிக்க போயிடாதீங்க.. தொடர்ந்து படிங்க )

பள்ளிக்கூடம் போக என்றுமே அழுததாய் ஞாபகம் இல்லை.. 
எனக்கான புத்தக பை முதல் நான் உயர்நிலை பள்ளி சென்றடையும் வரை சாப்பாட்டு கூடையையும் சேர்த்து சுமந்தது என் சகோதரிகள் தான்...
சகோதர பாசத்தை வாழ்த்தும், நினைவு கூறும் இந்த நன்னாளில் அந்த சகோதரிகளை நினைவுகூர்வதில் நெஞ்சம் நெகிழ்கிறது...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக