வியாழன், 20 செப்டம்பர், 2018

பாரம்பரிய உணவும் ஆபத்தே...

பாரம்பரிய உணவுகள் உண்பது தற்போது பேஷனாகி வருகிறது... இதை இப்போது பேஷனாக்கும் அதே கும்பல் தான் சில-பல வருடங்கள் முன்பு பீட்சாவையும், பர்க்கரையும் அறிமுகம் செய்து கேழ்வரகு கூழ், கம்பஞ்சோறு உண்பவனை எல்லாம் "காட்டான்"களாக அடையாளப்படுத்தியது...

சரி... விஷயத்திற்கு வருவோம்... நம் முன்னோர்கள் உணவாக கொண்ட கம்பு, கேழ்வரகு, குதிரை வாலி, திணை, சாமை போன்ற சிறுதானிய உணவுகளை அதிகம் எடுத்துக்கொண்டார்கள்... இதிலிருந்து கிடைக்கும் அபரிமிதமான சக்தியை கொண்டே நாள் முழுதும் கடின உழைப்பை மேற்கொண்டார்கள்..

ஏர் உழுதல், வரப்பு வெட்டுதல், களை எடுத்தல், நடவு நடுதல், கதிர் அறுத்தல், அம்மி, ஆட்டுக்கல்லில் மசாலா/மாவு அரைத்தல், கிணற்றில் தண்ணீர் இறைத்தல், வெகு தொலைவில் இருந்து தலை-இடுப்பு-கை என மூன்று குடங்களில் தண்ணீர் கொண்டு வருதல்.... வெகுதூரம் நடை பயணம் மேற்கொள்ளுதல்... அப்புறம்.. சைக்கிள் ஒட்டுதல்.... இவை எல்லாம் அன்றாட வேலைகளாக இருந்தது.... இப்படியாகப்பட்ட கடின உழைப்பிற்கு தேவையான சக்தியை அந்த சிறுதானியங்கள் கொடுத்தது....

ஆனால்.... இன்று விவசாயமற்றுப்போன நிலையில் .. அல்லது.. இயந்திரங்களை முன்னிறுத்தி விவசாயம் செய்கின்ற நிலையில்.... , மிக்சி, கிரைண்டர், ஓவர்ஹெட் வாட்டர் டாங்க், கார்/மோட்டார் சைக்கிள்.. என எல்லா வேலைகளுமே மனித உடலை கொஞ்சம் கூட அலட்டாத வகையில் வாழ பழக்கி இருக்கிறது....
மேலும்... நவீன தலைமுறை உடலுழைப்பை துறந்து புத்தியை வைத்து சம்பாதிக்கும் பழக்கத்திற்கும் வந்து விட்டது...

இந்த நிலையில்.... ஒரு நாள் முழுதும் உடலுழைக்க சக்தியை கொடுத்த அந்த சிறுதானியங்கள் , இந்நாளைய உடலுழைப்பட்ற வாழ்க்கைக்கு எவ்விதம் பொருந்தும்??




அந்த சிறுதானியங்களில் பெறப்படும் அபரிமிதமான சக்தி "எரிக்கப்பட" இன்று உடல் உழைப்பில்லாத நிலையில்... அப்படி கிடைத்த சக்தி என்னவாகும்?? கொழுப்பாக மாற்றி உடலில் சேமிக்கப்படும் தானே?? இது உடலிற்கு நல்லதா??? இது கெடுதல் ஏற்படுத்தாதா??

நாம் எப்படி பழைய உழைப்பிற்கு தயாராக இல்லையோ.... அதே போல பழைய உணவும் நமக்கு பொருந்தாத உணவாகி விட்டது...

பர்க்கரையும், பீட்சாவையும் எப்படி நாகரீகம் என்று நம்ப வைத்து அறிமுகம் செய்தார்களோ... அந்த முட்டாள் தனத்திற்கு சற்றும் குறைந்ததல்ல இன்று பாரம்பரிய உணவு என்பதும்....

இறைவன் படைப்பு நியதியில் அந்தந்த பகுதியில் வாழும் மக்களுக்கேற்ற உணவே அந்தந்த பகுதியில் விளையவும், அதற்கு தேவையான அளவு அந்த மக்கள் உழைக்கவும் வாய்ப்பிருந்தது.... மனிதன் எப்போது தங்கள் வாழிடங்கள், உணவு முறைகள் எல்லாவற்றையும் மாற்றிக்கொண்டானோ.... அப்போதே அந்த நியதி உடைந்து விட்டது...

இப்போது "நான் பாரம்பரிய காவலன்" என்பது சுத்த கோமாளித்தனம்... ஆபத்தை வேறொரு பரிமாணத்தில் வரவழைக்கும் முட்டாள்தனம்...

எல்லோருக்கும் தெரிஞ்சதுதான்

சமகால அரசியல் தலைவர்களின் பித்தலாட்டங்கள்... கொள்கை-ஒழுக்க பிறழ்வுகள் தெரியாதவர்கள்தான் அவர்கள் நடத்தும் கட்சிகளில் இருகிறார்களா??

கிராம-ஒன்றிய-வட்ட-நகர-மாவட்ட பொறுப்பில் இருப்பவர்கள் என எல்லோருமே முட்டாள்களா என்ன?? தங்கள் கட்சி தலைமை/இரண்டாம் கட்ட/ மூன்றாம் கட்ட என அடுத்தடுத்த நிலை தலைவர்கள் அவர்களின் சக்திக்கேற்ற பித்தலாட்டங்களை செய்வதை அறியாத அளவிற்கு ஞானமற்றவர்களா என்ன??

அதுதான் இல்லை..... இவர்கள் நம்மை எல்லாம் விட பெரிய சிந்தனையாளர்கள், அறிவாளிகள்...

இவர்களது தலைவர்களை பற்றிய மோசமான செய்திகள் நமக்கு எவ்வளவு தெரியுமோ... அதை விட பன்மடங்கு கூடுதலாக தெரிந்தவர்கள்.... ஆனால் அவை எல்லாம் தெரிந்தும் சம்மந்தப்பட்டவரை "தலைவா.... வாழ்க.." என்று இவர்களால் கோஷம் போட முடிகிறதென்றால்... நம் நாட்டில் வாழ்க்கை முறை அவ்வளவு கேவலமாக இருக்கிறதென்றும்.... அந்த கேவலமான வாழ்க்கை முறையை தம் வசதிக்கேற்ற திருப்ப இவர்களுக்கு தெரிந்திருக்கிறது என்றும் தான் பொருள்...

ஆம்.... ஒரு பொதுவான கருத்தை உரக்க பேச வேண்டுமென்றால்... இங்கே அரசியல் பின்புலம் தேவையாயிருக்கிறது.... தொழில் செய்ய அரசியல் பின்புலம் தேவையாயிருகிறது.... சட்டத்தை மீறவும், குற்றங்களை செய்துவிட்டு தப்பிக்கவும் அரசியல் பின்புலத்தால் முடிகிறது... இதை எல்லாம் விட சமயங்களில் சாலையில் நடக்கவே அரசியல் பின்புலம் தேவையாக இருக்கிறது....

இப்படி ஒரு பின்புலத்தை தனி மனிதனால் / நம்மால் ஏற்படுத்திக்கொள்ள முடியாது.... அதற்கு ஒரு பெரிய அறிமுகம் தேவையாயிருக்கிறது....

தமிழ் வியாபாரம் செய்தோ, சினிமாவில் நடித்தோ, ஜாதி மக்களை ஒருங்கினைத்தோ கிடைத்த பரவலான அறிமுகத்தை/பிரபல்யத்தை வைத்து யாரோ ஒருவர் ஏற்படுத்தி வைத்திருக்கும் அரசியல் கட்சி என்ற பின்புலத்தை கொண்டு இயங்கும்போது இயல்பாக ஒரு பாதுகாப்போ, சம்பாதிப்பதற்கான வழியோ கிடைக்கிறது....

அதனால் தான் அவர்கள் "தலைவன் வாழ்க" என்று போலியாக குரல் கொடுத்தாவது அந்தந்த கட்சியில் இருக்கிறார்கள்..

மற்றபடி அவர்களுக்கு எல்லாம் தெரியும்...

என்ன.... இதற்காக அவர்கள் மனச்சாட்சியை அடகு வைத்திருக்கிறார்கள்.... அவ்வளவுதான்...

நமக்கு அம்மாதிரியான பின்புல அவசியம் இல்லாததால் மனச்சாட்சிக்கு விரோதமாக எந்த அரசியல்வாதியையுமே தலைவனாக ஏற்க முடியவில்லை...

துக்க மண்டபங்களும் சாத்தியம்தான்

திருமண,பெண்-மாப்பிள்ளை அழைப்பு , காதுகுத்து, பூப்புனித நீராட்டு போன்ற நல்ல விசேஷங்கள் பெரும்பாலும் வீட்டு வாசலில் பந்தலிட்டு, வாழை மரம் -தோரணங்கள் கட்டி, மின்விளக்கு அலங்காரங்கள் செய்தது, சாப்பாட்டிற்கென தனி பந்தல் அமைத்து, சமைக்க தனி கொட்டகை அமைத்து நடத்தப்பட்டன..

இதற்கென பந்தல்கால் நடுதல், சமையல் பாத்திரங்கள் எடுத்தல், நாற்காலி - மேஜைகள் ஏற்பாடு செய்தல்... பந்தலின் உட்புறம் வேட்டி கட்டுதல், அலங்கார தோரணங்கள் அமைத்தல், மின்விளக்கு அலங்காரம் செய்தல் என்று அல்லோகோலப்படும்... இவைகள் எல்லாம் ஒரு திருவிழா போல பரபரப்பாக இருக்கும்...

முன்பு இருந்த இந்த வழக்கம் தற்போது மண்டபங்களை நோக்கி நகர்த்தப்பட்டு விட்டது... மண்டபங்கள் என்றால் தனியான அலங்காரங்கள் தேவையில்லை... தனியான இருக்கைகள் எடுக்க வேண்டியதில்லை... சமையல் பாத்திரங்கள் ஏற்பாடு செய்ய வேண்டியதில்லை... சாப்பாட்டு பந்தலில் மேஜை-நாற்காலிகள் அமைக்கப்பட்டிருக்கும்...
பழைய காலம் மாதிரி பந்திப்பாய் விரிச்சு கீழ எல்லாம் உட்கார்ந்து சாப்ப்பிட முடியாது... சாப்பிடவும் கூடாது.... அது அசிங்கம்... நாமள்லாம் படிச்சவங்க... டீசண்டா பிகேவ் பண்ணனும்.... என்ற எண்ணமும்....

கூடவே...கொஞ்சம் செலவானாலும் அலைச்சல் மிச்சம்.... வண்டி பிடிக்க வேண்டாம்... ஆள் திரட்ட வேண்டாம்... அதோடு... விசேஷத்திற்கு வருபவர்களுக்கு போக்கு வரத்து வசதிக்கும் நன்றாக இருக்கும்...

இப்படியான மக்கள் மனநிலை மாற மாற... குக்கிராமங்களிலும் கூட திருமண மண்டபங்கள் பெருகி விட்டன...

சமகாலம் வரை நல்ல விசேஷங்களுக்கு மட்டுமே மண்டபங்களை நாடுகிறோம்... 



ஆனால்... சமகாலம் வரை மரணம் என்பது தொடர்பான சடங்குகள் எல்லாமே வீடுகளிலேயே நடத்தப்படுகிறது.. எதிர்காலத்தில் மக்கள் இதற்காகவும் மண்டபங்களை நாடக்கூடும் என்பது என் எண்ணம்...
(இது தற்காலத்தில் ஆட்சியாளர்களுக்கும், பெருந்தலைவர்களுக்கும் மட்டுமே நடைமுறையில் உள்ளது.... உதாரணம்- ராஜாஜி ஹால் )

யாரேனும் இறந்துவிட்டால் பூத உடலை ஒரு மண்டபத்தில் வைத்துவிட்டால் வருகிறவர்களுக்கு போக்கு வரத்து வசதி, இருக்கை வசதிகள் தனியாக ஏற்பாடு செய்ய வேண்டிய அவசியமில்லை என்றாலும்....

அதை எல்லாம் விட மிக முக்கியமாக......இது நம்ம கவுரைதைய காட்டுற விஷயமில்லையா... நாம எவ்ளோ டீசண்டான ஆளுங்க... கொஞ்சம் யோசிங்க மக்கா...

சராசரி குடும்பஸ்தன் பயம்

இதோ தெரிகிறது சென்னை... எப்போதுமே எனக்கு மிரட்சியை தரும் சென்னை இப்போது பறவைப்பார்வையில்... முன்னிரவில் எங்களூர் ஏரிக்கரையில் இருக்கும் கருவேலமரத்தில் அடர்ந்து அமர்ந்திருக்கும் மின்மினி பூச்சிகள் மாதிரி வெளிச்ச புள்ளிகள்... நெருங்க நெருங்க.... வெளிச்சம் விரிகிறது...

அந்த இண்டிகோ நிறுவன இயந்திர பறவை எங்களையும் சுமந்துகொண்டு தாழ... தாழ..... இன்னும் தாழவென தரையிறங்குவதற்கான முஸ்தீபுகளில் இருக்கிறது... அதோ..... மெரீனா கடற்கரை.... அதோ.... அண்ணா சாலை.... அதோ... அந்நாளில் என்னுடன் அன்பாய் பழகி மாரடைப்பால் காலமான அன்புசிவன் அண்ணா வேலை செய்த ஸ்பிக் டவர்...அதோ.... கிண்டி மேம்பாலம்... ஹா... அதோ மீனம்பாக்கம் வானூர்தி நிலையம்... அதோ விமான ஓடுபாதை.....

மடியில் அமர்ந்திருக்கும் ஆதிக்கு எதுவும் புரியாவிட்டாலும் நான் முணுமுணுக்கிறேன்... இருவரும் கண்ணாடி வழியே வேடிக்கை பார்த்துக்கொண்டே இருக்கிறோம்.... இன்னும் சில வினாடிகளில் இந்த விமானம் தரை தொட்டு ஓடும்... என்ற எங்கள் எண்ணம் அடுத்த வினாடியே மாறியது...

ஆம்.... ஓடுபாதையை தொடப்போகும் சமயம் மீண்டும் விமானம் மேல் நோக்கி எழும்பி பறக்க ஆரம்பித்தது... ஏன்... என்னாச்சு.... எதுவும் பிரச்சினையா... விமான பயணிகளின் முகங்களில் பயம், பீதி, கலவரம் , சந்தேகம்... எதிர்பார்ப்பு என கலந்துகட்டிய பாவங்கள்...

மேலெழும்பிய விமானம் மீண்டும் வங்காள விரிகுடாவின் மீதும்... சென்னை நகர் மீதும் சற்றேறக்குறைய இருபது நிமிடங்கள் வட்டமிட.... மீண்டும்.... அதோ..... மெரீனா கடற்கரை.... அதோ.... அண்ணா சாலை.... அதோ... அந்நாளில் என்னுடன் அன்பாய் பழகி மாரடைப்பால் காலமான அன்புசிவன் அண்ணா வேலை செய்த ஸ்பிக் டவர்...அதோ.... கிண்டி மேம்பாலம்..

ஆனால்... அரை மணி நேரம் முன்பாக இருந்த அந்த ஆச்சர்ய மகிழ்ச்சி இம்முறை சற்று குறைந்திருந்தது... இன்னும் சொல்லப்போனால் இல்லாமலே இருந்தது....



ஏதேனும் இயந்திரக் கோளாறாய் இருக்குமோ... விமானத்தின் சக்கரம் வெளியில் வராமல் சிக்கி இருக்குமோ.... ரன்வே கிளியர் இல்லை என்றால் விமானிக்கு சிக்னல் கிடைத்திருக்காதே..... பிறகெப்படி அவர் ஓடுபாதை வரை வருவார்.... இல்லை... எதோ பிரச்சினைதான்... பார்க்கலாம்... எப்போதுமே மூன்றாவது கோணத்திலேயே யோசித்து பழகிய மனசு... இப்போதும் அப்படியே....

பொதுவாக விமான , ரயில் பயணங்களில் காப்பீடு செய்யாமல் பயணிப்பதில்லை என்றாலும்... இம்முறை குடும்பத்துடன் இதே விமானத்தில்... காப்பீட்டை என்ன செய்ய...

அட்ரினல் சுரப்பிகள் அதி வேகமாய் வேலை செய்தன...

அடுத்த இருபது நிமிடத்தில் ஒரு பெரிய குலுங்கலுடன் அந்த அல்லாய் பறவை ஓடுபாதையை தொட்டு உலா வந்து இளைப்பாறியது....
அப்ப்பாடா.... தப்பிச்சோம்டா....

மீண்டும் அதே இண்டிகோ... காப்பீடு செய்திருக்கிறேன்... இப்போது தனி... அதனால் கவலை இல்லை...

கவனம் தேவை கதாசிரியர்களே -- மெர்சல்

தமிழ் சினிமாவின் கதைக்களம் என்று எடுத்துக்கொண்டால்... ஆரம்ப காலகட்டங்களில் பெரும்பாலும் புராண- இதிகாச கதைகளாகவும், கதை மாந்தர்களாகவுமே இருந்தார்கள்... பிறகு அது கொஞ்சம் மாற்றமடைந்து வரலாற்று கதாபாத்திரங்கள், மன்னர்கள் பக்கம் திரும்பியது...... இடையிடையே சுதந்திர போராட்டம் போன்றவற்றின் கதாநாயகர்களும் திரையில் மின்னி மறைந்தார்கள்...



புராண-இதிகாச கதாப்பாத்திரங்களில் சம்பவங்கள் எல்லாம் புராணங்கள்-இதிகாசங்களில் இருந்து எடுக்கப்பட்டாலும் வசனங்கள், காட்சி அமைப்புகள், கதை மாந்தர்கள் , இடங்கள் எல்லாம் கதாசிரியர்-இயக்குனர்களின் விருப்பப்படியும், கற்பனை திறனுக்கேற்பவும்தான் இருந்தன....

இது வரலாற்று புருஷர்களை குறிக்கும் விதமாக மாறியபொழுது அவைகளை பற்றிய/ அவர்களை பற்றிய பற்பல தேடல்கள் மூலம் முழுக்க முழுக்க உண்மையில்லை என்றாலும் ஆதரங்களுடனே தான் அந்த பாத்திரங்கள் உருவாக்கப்பட்டது... இவைகளில் ஏதேனும் தவறான தகவல்கள் இருபினும் அவைகளை பற்றிய தெளிந்த அறிவு உரிய சிலரால் மட்டுமே அந்த குறைகள் கண்டறியப்பட்டது... ஆனாலும் அதற்கு பெரிய எதிர்வினைகள் எதுவும் ஏற்பட வில்லை...

அதன் பிறகு தனிமனித வாழ்வியல், ஜாதீய வாழ்வியல், பூகோள வாழ்வியல் முறைகள் கதைக்களங்களாக உருவெடுத்தது... இதில் சில எதிர்ப்புகள் வந்தாலும் தனிமனித அனுபவம் சார்ந்த, சமகால கதாபாத்திரங்கள் உருவாக்கப்பட்டதால் இந்த பார்முலா வெற்றி பெற்றது...

ஸ்ரீதரின் கதைக்களமான மேல்தட்டு வர்க்க வாழ்வியல், விசு இயக்கிய குடும்ப கதைகள், கமல் நடித்த பதினாறு வயதினிலே , ரஜினி நடித்த ஆறிலிருந்து அறுபது வரை போன்ற படங்கள் எல்லாம் சமகால மனிதர்கள்.... அவர்களை போல் எல்லோரும் இல்லாவிட்டாலும் எங்கோ வாழும் நிஜ பாத்திரங்கள்....

மேலே குறிப்பிட்ட எல்லாம்.. நம் முன்னோர்களின் கற்பனைகள், நாம் பார்த்தறியாத பாத்திரங்கள்.... இவர்களை பற்றிய புனைவுகள் ரசிப்பதோடு நிறுத்திக்கொள்ளப்பட்டது....

சமகாலத்தில், ஆளும் ஆசையுடன் இருக்கும் சிலர் தங்களின் ஆளுமையை காட்டுவதாக நினைத்து அதற்கேற்ப கதைக்களங்களை தேடுகிறார்கள்... இதனை உணரும் கதாசிரியர்கள்/இயக்குனர்கள் இவர்களின் கால்சீட் வாங்குவதற்காக இவர்களை தேவலோக புருஷர்களையும், ஆளப்பிறந்தவர்களாயும் உருவகப்படுத்தி கதை சொல்ல நினைக்கிறார்கள்.. இதற்காக இவர்கள் சமகால பொது விஷயங்களை சேர்த்துக்கொள்கிறார்கள்...

பெருகிவிட்ட ஊடக தொடர்புகள், தெளிவான /தெளிவில்லாத அரசியல் அறிவு, தான் நினைத்ததை, அறிந்ததை உடனடியாக உலகத்தோரிடம் பகிர்ந்துகொள்ளும் வசதி என எல்லாம் பெற்ற சமகால சந்ததிகள், இப்படியான சமகால நடப்புகளை வைத்து சொல்லப்படும் கதைகளின் உண்மை தன்மையை உடனடியாய் அறிந்துகொள்வதால் வெகுவான விமர்சன கணைகளை தொடுக்க தொடங்கிவிடுகிறார்கள்...

தலைவனாக வேண்டும் என்ற விஜயின் ஆசை... விஜய் அவர்களை வைத்து படமெடுக்க வேண்டும் என்ற அட்லியின் ஆசை, இந்த இருவர் கூட்டணியை பயன்படுத்தி சம்பாதித்துவிட வேண்டும் என்ற தயாரிப்பாளரின் ஆசை.... இந்த மூன்று ஆசைகளும் கைகோர்த்து சமகால விஷயங்களை கலந்து சமைக்க முற்படும்பொழுது கூடுதல் கவனமாக இருந்திருக்க வேண்டும்....

புராண-இதிகாச-வரலாற்று தகவல்களை வைத்து படமெடுத்தவர்கள் எல்லாமே நிறைய தேடல்களுடன், பல்வேறு ஆய்வுகளுடன் படமெடுத்தார்கள்.... ஆனால் இந்த கூட்டணியோ.... வாட்ஸ் ஆப் வசனங்கள், டீக்கடையில் பேசிக்கொண்டிருந்தவர்களிடம் கிடைத்த தகவல்களை வைத்து அதை உண்மையாக நினைத்தபொழுது....

செம்ம அடி வாங்கி இருக்கிறார்கள்....

இனிமேலாவது மிக சரியான தகவல்களுடன், தேவைப்பட்டால் நிரூபிக்கும் ஆதாரங்களுடன் சமகால நடப்புகளை பற்றிய கதைக்களங்களை உருவாக்க வேண்டும்... இல்லை என்றால்... பேய்-ஆவி கதைகள், நாட்டாமை பொண்ண வேலைகாரன் லவ் பண்ற கதைகள் போன்ற சமூக சீர்திருத்த படங்களோடு நின்றுவிடுதல் நலம்...

இப்போது எல்லா இடங்களிலும் ஆட்கள் இருக்கிறார்கள்... அவர்கள் மிகுந்த புரிதல்களுடன் விபரமாய் வேறு இருக்கிறார்கள்... ஜாக்கிரதை...

இது சாமான்யனின் எச்சரிக்கை...!!..

டெங்கு பீதி

சில நேரங்களில் சில விஷயங்களை மக்களிடம் இருந்து மறைக்க வேண்டியது பொறுப்புள்ள அரசாங்கத்தின் கடமை.... சமீபத்திய விஷயம் "டெங்கு மரணங்கள்" 



சமீபத்திய ஊடக செய்திகள் எங்கெங்கு டெங்கு மரணம் நிகழ்ந்தாலும் தேடிப்பிடித்து படமாக்கி ஒளிபரப்பி ஜனநாயக கடமையாற்றிக்கொண்டிருக்கின்றன... நிஜமாகவே நிலைமை சற்று சீரியஸ்தான்... வந்த டெங்குவை ஒழிக்கவும், மேலும் பரவாமல் தடுக்கவும், இனிமேல் வராமல் பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டாலும்... பொதுமக்கள் ஒத்துழைப்பின்றி அந்த முயற்சி வெற்றி பெறாது....

நிலைமை கட்டுக்கடங்காமல் இருக்கிறது.... என்று நிச்சயம் எந்த ஒரு அரசும் ஒப்புக்கொள்ளாது... இதற்கு இரண்டு காரணங்கள் .... ஒன்று அரசின் கையாலாகாத தனத்தை அவர்களே ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.... அதே நேரம்... அரசு "ஆமாம்.... நிலைமை கவலைக்கிடமாகத்தான் இருக்கிறது... கட்டுப்படுத்த முடியாத அளவு பரவிக்கொண்டிருகிறது..." என்று சொன்னால்..... நிலைமை என்னாகும்?? மக்கள் பீதிக்குள்ளாவார்கள்.... அதை சமூக விரோதிகள் வதந்திகளை கிளப்பி மேலும் பயப்படுத்துவார்கள்.... சட்டம் ஒழுங்கு பிரச்சினை வரும்.... அதை தொடர்ந்த தனியார்/அரசு பொருளிழப்புகள் ஏற்படும்.... இன்னும் பற்பல இன்னல்கள் உருவாகும்... ஆகவே அரசு ஒப்புக்கொள்ளவே ஒப்புக்கொள்ளாது...

அதே நேரம்... இல்லை.... டெங்கு கட்டுக்குள்தான் இருக்கிறது... அப்படி இப்படி என்று மைக் கிடைத்தவர்கள் எல்லாம் உளறிக்கொண்டிராமல்... சம்மந்தப்பட்ட அமைச்சகம் ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை முடுக்கிவிட வேண்டும்.... தரமான மருந்துகள், போதுமான மருத்துவர்கள், செவிலியர்கள், கொசு ஒழிப்பு பணியாளர்கள், அதற்கான வாகன வசதிகள் என எல்லாவற்றையும் போர்க்கால அடிப்படையில் ஏற்படுத்த வேண்டும்...

அதே நேரம்.. இதெல்லாம் அரசின் கடமை... நமக்கு குறை சொல்வது மட்டுமே வேலை.... என்று இருந்துவிடாமல்.... ஆங்காங்கே இருக்கும் இளைஞர்/மகளிர் குழுக்கள், நற்பணி மன்றங்கள் மூலமாக அந்தந்த பகுதிகளில் தண்ணீர் தேங்கி இருக்கும் பிளாஸ்டில் டப்பா, தேங்காய் சிரட்டை, டயர்கள் இன்னும் பற்பல கொள்கலன்களை உடனடியாக நீரின்றி பார்த்துக்கொள்ள வேண்டும்... (ஏரி- குளங்கள்-ஆறுகளில் மட்டும் நீர் இல்லாமல் பார்த்துக்கொள்ள மணல் மாபியாக்களும் , ரியல் எஸ்டேட் தாதாக்களும் இருக்கிறார்கள்... )

மேலும்.... நிலவேம்பு கஷாயம், பப்பாளி இலைச்சாறு போன்ற நம் முன்னோர்கள் விட்டுச்சென்ற... டெங்கு வைரஸ்க்கு எதிரான , இரத்ததட்டுக்களை பெருக்க கூடிய மூலிகை மருந்துகளை பொதுமக்களுக்கு வழங்க முன் வர வேண்டும்...

எல்லா செய்தியையும் பிரேக்கிங் நியூசாக்கி பீதியை கிளப்புவதை வாடிக்கையாக கொள்ளாமல்... ஊடகங்கள் இம்மாதிரி விஷயங்களில் அரசுக்கு துணை நின்று மக்களிடம் ஒரு பாதுகாப்பான நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்...

வேறென்ன சொல்ல..... சாமான்யன் அவ்ளோதான் சொல்ல முடியும்....

"நல்ல வாயன் சம்பாதிச்சத நாற வாயன் திங்கணுமா..."


சமகால போராளிகள் கேட்கும் கேள்வி... அதிலும் குறிப்பாக தொப்புள் கொடி வார்த்தைகளை வைத்து அரசியல் பிழைப்பு நடத்தும் தமிழ் தேசிய போராளிகள்...

அவர்கள் கேட்கும் கேள்வி.... இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (இத இங்கிலீஸ் ல ஜி டி பி ன்னு சொல்லி நம்மாளுங்க நாங்களும் பொருளாதார மேதைகள்தான்னு காட்டிக்குவாங்க ... ஆஹா... அண்ணாச்சி என்னென்னவோ பேசுறாக.... வெவரமான ஆளுதான்னு நாமளும் கைதட்டுவோம்...) பெரும்பகுதியை தென்னிந்தியாவின் நான்கு மாநிலங்களும் (புதுச்சேரியையும் சேர்த்தா அஞ்சு ) வடக்க நாலஞ்சு மாநிலங்களும் தான் உற்பத்தி செய்யுது... நாங்க உற்பத்தி செய்யுறத ஏன் மத்தவங்களுக்கு ஷேர் பண்ணனும்....?

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை.... எங்க முப்பாட்டன் திருவள்ளுவன் சொன்னது.... அப்புறம்... கூடி வாழ்ந்தால் கோடி நன்மை... யாதும் ஊரே ... யாவரும் கேளீர்ன்னு எங்க பாட்ட முப்பாட்டன் எல்லாம் ஆளுக்கொன்னா சொல்லி எங்க பண்பாட்டையும் நாகரீகத்தையும் வெளக்கு வெளக்குன்னு வெளக்கி இருக்காங்கன்னு மேடைபோட்டு பேசுவோம்.... சரி... இப்போ அத விட்டுடலாம்... அத இன்னொரு நாளைக்கு பேசலாம்...

இந்த கிராஸ் டொமெஸ்டிக் ப்ராடக்ட் ன்னு சொல்ற மொத்த உள்நாட்டு உற்பத்தியில அவங்க சொல்ற மாதிரி ஒட்டுமொத்த இந்தியாவுல முழு தென்னிந்தியாவும், வடக்க ஒரு அஞ்சாறு மாநிலங்களும் தான் இருக்கு..இது முழு உண்மை இல்லன்னாலும்.... ஒரு குறிப்பிட்ட முக்கிய பங்கு இருக்கு..... இதுக்கு காரணம் என்னன்னா.... இங்க இருக்கவன் எல்லாம், அறிவாளி, உழைப்பாளி, நேர்மையானவான்... அங்க இருக்கவனெல்லாம் சோம்பேறி... முட்டாள் ன்னு அர்த்தம் இல்ல...

இந்த மாநிலங்கள் அமைந்திருக்க கூடிய பூகோள அமைப்பு.... ஒவ்வொன்னா பார்க்கலாம்..

திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை, ஆவடி டாங்கி தொழிற்சாலை, பெல் நிறுவனங்கள், நெல்லையிலும், ஸ்ரீஹரிகேட்டாவிலும் அமைந்திருக்க கூடிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்கள், அணு மின் நிலையங்கள், சேலம் இரும்பு உருக்காலை... அப்படி இப்படின்னு நிறைய மத்திய அரசு நிறுவனங்கள் தென்னிந்தியப்பகுதியில் அமையப்பெற்ற காரணம்.... பூகோள அமைப்பில் இருக்கும் உறுதி செய்யப்பட பாதுகாப்பு.... என்னதான் இன்று கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்க கூடிய ஏவுகணைகள் வந்துவிட்டாலும், இவைகள் ஆரம்பிக்கப்பட்ட காலங்களில் பாகிஸ்தான், சீனா போன்ற எதிரி நாடுகள் எளிதில் தாக்கி விடாதபடிக்கு தூரமான இடம்... சுற்றளவு மொத்தமும் இந்தியா மட்டுமே ஆதிக்கம் செலுத்த கூடிய கடல்.... இடையில் இருக்கும் இலங்கைக்கு இந்தியாவை தவிர்த்து வேறெங்கும் போக முடியாத நிர்பந்தம்... ஆக.... வட இந்திய மாநிலங்களை காட்டிலும் ரிஸ்க் ஃபேக்டர் குறைந்த தென்னிந்திய பகுதிகளில் இப்படியான தொழிற்சாலைகளை அமைக்க மத்திய அரசு முடிவெடுத்தது....
மேலும்... இயற்கையாகவும், செயற்கையாகவும் அமைந்த துறைமுகங்கள், நிலக்கரி படிமம், சுண்ணாம்பு கற்கள், தங்க படிமங்கள்...போன்ற கனிம வளங்கள் இங்குதான் அமையப் பெற்றிருக்கிறது.... வைகை, காவிரி, தாமிரபருணி , பாலாறு, கிருஷ்ணா போன்ற வற்றாத நதிகளின் போக்கும் இங்குதான் இருக்கிறது.... இந்த இயற்கை வளங்கள், பாதுகாப்பு காரணங்களால் மத்திய அரசின் தொழிற்சாலைகள்.. எல்லாம் சேர்ந்துதான் தென்னிந்தியாவில் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்த முதலீடு செய்யப்பட்டது.... அப்படி மேம்படுத்தப்பட்ட உட்கட்டமைப்பு வசதிகளின் காரணமாக மேலும் மேலும் நிறைய தொழிலகங்கள் உருவானது....
ஆனால்...... இப்படி பாதுகாப்போ, இயற்கை வளங்களோ இல்லாத இடங்களை அதிக கவனம் எடுத்துக்கொள்ளாமல் இருப்பது இயல்பான விஷயம்.. அம்மாதிரியான இடங்களில் முதலீடும் இருக்காது என்பதுதான் எதார்த்தம்.... இயற்கை வளங்கள் நிறைந்ததால் ஏற்படுத்தப்பட்ட உட்கட்டமைப்பு வசதிகளை கொண்டு மட்டுமே இந்த மாநிலங்கள் ஜிடிபி யில் முக்கிய பங்காற்றுகிறதே தவிர.... இங்கு இருக்கும் மக்கள் மட்டுமே அறிவாளிகள், உழைப்பாளிகள் என்பதனால் இல்லை என்பதை இந்த பிரிவினைவாதிகளுக்கு யார் புரியவைப்பது...

ஒன்றாய் பிறந்த அண்ணன் தம்பிகளில் ஒருவர் ஊனமாக இருந்தால் அது அவர் தவறல்ல.... ஆனாலும்... இந்த பிரிவினைவாதிகள் உடன் அம்மாதிரி யாராவது பிறந்துவிட்டால்.... சம்பாதிக்கும் வயது வரும்வரை மொத்த குடும்பத்துடன் இருந்துவிட்டு, சம்பாதிக்க முடிந்த உடன் தான் சம்பாதிப்பது எனக்கு மட்டும்தான் என்ற குறுகிய நோக்கத்துடன் மட்டுமே வளர்ந்தவர்கள்....

ஒருவேளை இவர்கள் கேட்பதுபோல தனி நாடு கொடுத்துவிட்டால்.... இவர்களின் வழித்தோன்றல்கள் அடுத்த அரசியல் பிழைப்புக்கு என்ன செய்வார்கள்? தஞ்சாவூர் காரன் வெளைய வைக்கிற நெல்லை எல்லாருக்கும் கொடுக்கனுமா.... மதுர மல்லிய ஏன் சேலத்துக்காரனுக்கு கொடுக்கணும்... திருநெல்வேலி அல்வாவ ஏன் காஞ்சிபுரத்துகாரனுக்கு கொடுக்கணும்.... காஞ்சிபுரம் பட்ட ஏன் ராமநாதபுரத்துக்கு கொடுக்கணும்னு கெளம்புவானுங்க.... ஏன்னா இவனுங்க வளர்ந்த விதம் அப்படி...
இவர்களை எல்லாம் திருத்துவது நம் நோக்கமல்ல என்றாலும்... இந்த பொருளாதார மேதைகளின் உண்மை நோக்கத்தை சாமான்யர்களுக்கு புரியவைப்பதே இந்த சாமான்யனின் இந்த நீண்ட கட்டுரை...
நன்றி...

புகைப்படம் இணையத்திலிருந்து... புரிதலுக்காக மட்டும்

இலவசத்திற்கு அலையும் மக்கள்

எங்கள் பகுதியில் திருமண நாளின் முதல் நாள் பெண் அழைப்பு... அதற்கும் முந்தின நாள் மூன்றான் தண்ணீர் ஊற்றுதல்.. என்றொரு சடங்கு நடக்கும்... (இது பெரும்பாலான வட தமிழக மாவட்டங்களில் திருமண நாளின் முந்தின இரவில் நலங்கு வைத்தல் என்று நடத்தப்படுகிறது...)
இந்த மூன்றாம் தண்ணீர் ஊற்றுதல் என்ற நிகழ்வில், ஊரில் இருக்கும் சுமங்கலி பெண்களை அழைத்து மாப்பிள்ளை/ பெண் (அவரவர் வீட்டில்) இருவருக்கும் எண்ணெய் தேய்க்க சொல்வார்கள்... எல்லோரும் எண்ணெய் தேய்ப்பதில்லை என்றாலும்.. வயது முதிர்ந்த சுமங்கலிப்பெண்கள் எண்ணெய் தேய்த்து ஆசி கூறுவார்கள்...

அவர்கள் இணையப்போகும் திருமண வாழ்க்கை அமோகமாய் அமைந்து, குழந்தை செல்வங்களை பெற்று அவர்கள் நன்றாக வாழ்வதற்கும், அதுவரை அவர்களை பிடித்திருந்த பீடைகள் ஒழிந்து அவர்கள் வாழ்வில் அமைதியும், பொறுப்பும் வரவும் வேண்டும் என்பதற்கான ஆசி கூறும் வைபவம் அது... (அடுத்த இரண்டு நாட்களில் ஜென்மசனி பிடிக்கும் என்பது நிதர்சனம் )
சரி... விஷயத்திற்கு வருவோம்...

முன்னெல்லாம் இம்மாதிரி விசேஷங்களுக்கு அழைக்கப்படும் பெண்களுக்கு கொஞ்சம் பூ, கொஞ்சம் வெற்றிலை -பாக்கு, கொஞ்சம் சர்க்கரை-பொட்டுக்கடலை... என்று கொடுப்பார்கள்... பின்னாளில் வலிக்காமல் வந்த வருமானம் கூட கூட.... தங்களின் செல்வ வாளிப்பை பறை சாற்றும் விதமாக எவர் சில்வர் தட்டு, சொம்பு போன்ற அன்பளிப்புகளை வழங்குவதை வாடிக்கையாக்கி விட்டார்கள்...
இதுதான் சொல்ல வந்த விஷயமா.. என்றால்.... இதுவும் இல்லை.... மேற்கொண்டு படிக்கவும்...

ஒரு வீட்டில் இரண்டு மருமகள்கள், ஒரு மாமியார் என மூன்று பேர் இருக்கும் பட்சத்தில்.... ஊரில்/உறவில் யாராவது இறந்தால்... மருமகள்களில் எவளாவது ஒருத்தி துக்கம் விசாரிக்க போகட்டும் என்று மாமியாரும்..... இந்த கெழட்டு முண்டம் சும்மாத்தான கெடக்கு.... எழவுக்கு போயிட்டு வரட்டும் என்று மருமகள்களும் ஒதுங்கிக்கொள்வார்கள்..... நாங்கல்லாம் ஒரே குடும்பம் தானே.... ஒரு ஆள் போனா போதும்....

ஆனால்... மேலே குறிப்பிட்ட மூனாம் தண்ணி விசேஷத்திற்கு மாமியார் தனியாகவும்... மருமகள்கள் தனியாகவும் செல்வார்கள்... மூன்று பேர் போனால் மூணு தட்டு கிடைக்கும்.. நாங்கல்லாம் தனித்தனியால்ல காச்சி குடிக்கிறோம்....

இதில் வசதியானவர், வசதி குறைந்தவர் என்ற பாகுபாடெல்லாம் கிடையாது... நம்மிடம் கோடி அளவு வசதி இருந்தாலும்.. இலவசமாய் கிடைக்கும் எவர் சில்வர் தட்டை விட்டுவிட்டால் ஜென்மமே வீண் என்ற மனநிலை...

இது எங்கள் பகுதி நடைமுறை என்றாலும்.... எங்கள் பகுதியில் மட்டும் இருக்கும் மனோநிலை அல்ல... ஒட்டு மொத்த தமிழகத்தையும் திராவிட சகதிகள் (சகதிகள் - எழுத்து பிழை அல்ல) இப்படித்தான் மாற்றி வைத்திருக்கின்றன....

இதை கழுவி களையப்போவது யார்... என்பதே மில்லியன் டாலர் கேள்வி....

ஏமாறப்பிறந்தவர்கள்

கன்னியாக்குமரியில் நிதி நிறுவனம் நடத்தியவர் கோடிக்கணக்கில் மோசடி செய்தவர் தலை மறைவு... முதலீட்டாளர்கள் போராட்டம்... அரசு உடனடியாய் தலையிட்டு எங்கள் பணத்தை வாங்கித்தர வேண்டும் என்று கோரிக்கை..

இப்போ நாம யாரையாச்சும் குறை சொல்லணுமே.... சாட்டையை சுழற்றுவோமா...



ஒரு மாநகராட்சி-நகராட்சி- ஊராட்சியில் எந்த தொழில் தொடங்குவதென்றாலும் சம்மந்தப்பட்ட நிர்வாகத்திடம் உரிமம் பெற வேண்டும் என்பது விதி.. அப்படி உரிமமில்லாமல் தொடங்கப்படும் நிறுவனம்/கடைகளை பூட்டும் அதிகாரம் சம்மந்தப்பட்ட நிர்வாகத்திற்கு உண்டு... டீக்கடை வைக்கிறவன், பொட்டிக்கடை வைக்கிறவன் எல்லாம் இப்படி உரிமம் பத்தி எல்லாம் கவலை படுறதில்ல... இங்க பெரிசா ஒன்னும் நடந்துடாது... பெரும்பாலும் கடன் சொல்லி சொல்லி டீ குடிச்சுட்டு, ஐநூறு ரூபா ஏறினதும் இருநூறு ரூபாய கொடுத்து, இத வரவு வச்சுக்கோ.... பேலன்ஸ் சீக்கிரம் கொடுத்துட்றேன்னு சொல்லி அவனை நம்பவச்சு கூடுதலா முன்னூறு ரூபாய் கடன் வாங்கி கணக்க அறுநூறா ஏத்தி நாமதான் அவனுங்கள ஏமாத்துவோம்.... அதனால அத விட்டுடலாம்... ஆனா... லட்சக்கணக்குல முதல் போட்டு தொழில் பண்றவன் கண்டிப்பா உரிமம் வாங்கணும்.. வரி கட்டனும்... அதுலயும் இந்த சிட் பண்ட்ஸ், பினான்ஸ், பாண் புரோக்கர் போல பொதுமக்கள் கிட்ட நேரடியா கொடுக்கல்-வாங்கல் வியாபாரம் பண்றவங்க கண்டிப்பா இந்த உரிமம் வாங்கியே ஆகணும்....

மேற்கொண்டு... இந்த சீட்டு நிறுவனம் பெரிய ஆபீசா போட்டு தான் கடை நடத்தி இருக்கான்... இதெப்படி அரசு நிர்வாகத்துக்கு தெரியாம போச்சு.... லைசன்ஸ் கொடுக்கும்போது அவனோட ப்ராஜெக்ட் ரிப்போர்ட் என்ன... அத அவன் எப்படி இம்ப்ளீமென்ட் பண்ண போறான்... அது ஆர் பி ஐ வரைமுறைகளுக்குட்பட்டதா... லொட்டு, லொசுக்கு ன்னு எல்லாத்தையும் செக் பண்ணித்தான் லைசன்ஸ் கொடுத்திருக்கணும்....

அதோட மட்டுமில்லாம... ஆண்டுக்கொருமுறை "படித்த" ஆடிட்டரை வைத்து வருமான வரி கணக்கு தாக்கல் பண்ணும்போது, வரிய மட்டும் வாங்கிட்டு சலாம் போட்டு அனுப்பாம (அதுலயே நிறைய வரி ஏய்ப்பு செஞ்சு வருமான வரித்துறையையும் ஏமாத்தி இருப்பான்றது வேற விஷயம் ) அவன் என்ன பண்றான்னு ஒழுங்கா செக் பண்ணாம விட்டது யாரோட தப்பு?? உடனே ஆட்சியாளர்கள் மேல குத்தம் சொல்ல வேண்டாம்... ஏழாவது ஊதிய கமிஷன் பரிந்துரைய உடனே அமல் செய்யனும்னு கிளம்பி போராட தெரியுது... ஏன்னா 25% சம்பள உயர்வு கிடைக்குமாம்.... ஆனா தன்னோட கடமையை ஒழுங்கா செய்யனும்னு எந்த அரசு ஊழியருக்கும் தோணவே இல்ல... இவனுங்கள என்ன பண்ணலாம்...??

சரி விடுங்க.... அவனுங்க என்னிக்குதான் செஞ்சாய்ங்க ,... இன்னிக்கு செய்ய??

நாம என்ன பண்றோம்....?? கந்து வட்டி வசூல் பண்றவன ஒருபக்கம் திட்டி மண்ணை வாறி தூத்திகிட்டே எவனாவது அதிகமா வட்டி கொடுக்கிறேன்னு சொன்னதும் என்ன... ஏது.... நீ ஒழுங்கா லைசன்ஸ் வாங்கித்தான் கடை போட்டிருக்கியா.... அதிகமா வட்டி கொடுக்கிறேன்னு சொல்றியே.... எப்படி கொடுப்ப......ன்னு எதை பத்தியும் கேக்காம, பக்கத்து வீட்டுக்காரன்கிட்ட கூட சொல்லாம நம்ம கிட்ட இருக்க காச கொண்ட கொட்டிடுவோம்.... பக்கத்து வீட்டுக்காரனுக்கு சொன்னா அவனும்ல முதலீடு பண்ணி ரொம்ப சம்பாதிச்சிடுவான்....

வங்கிகள், மியூச்சுவல் பண்ட்ஸ், காப்பீட்டு நிறுவனங்கள் இன்னும் என்னென்ன புண்ணாக்கோ இருந்தாலும் அவன் எல்லாம் வட்டி கம்மியா தரான்... நாங்க நிறைய சம்பாதிச்சு சீக்கிரம் பணக்காரனாகனும்னு போயிடறது... அப்புறம் அவன் பொட்டிய கட்டிக்கிட்டு கிளம்பிட்டான்னா தலைல துண்ட போட்டுக்கிட்டு நேரா போலீஸ்காரன் தாலிய அறுக்க கிளம்பிட்றது.....

எத்தன ஈமு, தேக்கு, முதலாளி இல்லாத முதல் உலகம்னு டைப்பு டைப்பா ஏமாந்திருந்தாலும் நீங்க திருந்தவே போறதில்ல.... சனியன் புடிச்சவனுங்களா.... செத்து தொலைங்கடா..

ஓவர் ஆக்டிங்

சரவணா ஸ்டோர் சரவணன் விளம்பரப்படங்களில் நடிப்பதை பற்றி மூண்டு விதமான கருத்துக்கள் நிலவுவது நாம் அறிந்ததே,...
ஒன்று.... ங்கொய்யால இவன் மூஞ்சிக்கு ஹன்சிகா கேக்குதா.... ஆஞ்சநேயர் தம்பி மாதிரி இருந்துகிட்டு இதுக்கு ஏன் இந்த வேலை...

இரண்டு.... ஹ்ஹ்மம்ம்ம்ம்..... கொடுத்து வச்சவன்... அதான்யா... பணக்காரன் நினைச்
சா என்ன வேணா செய்யலாம்.... என்று பெருமூச்சு...



மூன்று.... ஏன்... அவருக்கு என்ன குறைச்சல்.... எம்பியே படிச்சிருக்கார்... நிறைய சாதிக்கணும்னு ஆர்வம் இருக்கு.. அதை செயல்படுத்தி பணம் பண்ண கத்து வச்சிருக்கார்.... அவர் ஏன் நடிக்க கூடாது....

சரவணனை விடுங்கள்.... ஆனால்.. இந்த கருத்து சொல்லும் மூன்று விதமானவர்களை பற்றி இருக்கும் உளவியல் விஷயத்தை பார்க்கலாம்...
முதலாவது வகையினர் மிகவும் இயல்பானவர்கள்... தன்னுடைய ஆதங்கத்தை .. கவனிக்கவும்... பொறாமை அல்ல.... ஆதங்கம்.... தன்னால் இப்படி பணக்காரனாக முடியவில்லையே.. என்றோ.... ஹன்ஷிகா போன்ற அழகிகளுடன் கை கோர்க்க முடியவில்லையே... என்றோ ஏங்குபவர்கள்.. அவர்கள் ஏக்கத்தை இப்படி விமர்சனமாக வெளிப்படுத்தி தீர்த்துக்கொள்பவர்கள்.... இவர்கள் இயல்பானவர்கள்...

இரண்டாவது வகை... சாமான்யர்கள்.... மற்றவர்களின் நிலைக்கு தன்னால் வர முடியவில்லையே.. என்று தன்னைத்தானே நொந்துகொண்டு அதை ஒரு பெருமூச்சாய் உதிர்த்து விட்டு தன்னுடைய வாழ்க்கைக்கு தேவையான விஷயங்களில் கவனத்தை திருப்பி விடுவார்கள்... இவர்கள்தான் சாமான்யர்கள்..

மூன்றாவது வகை தான் கொஞ்சம் வில்லங்கம்.... இவர்கள் தங்களை தாங்களே பெருமையாய் நினைத்துக்கொண்டு... அடடா.. பாருங்கள்.. என்னால் எல்லாவற்றையும் இயல்பாய் எடுத்துகொள்ள முடியும்.. எனக்கு யார் மீதும் பொறாமையோ-ஏக்கமோ இல்லை.... பாருங்கள்.. நான் எல்லோரையும் மதிக்கிறேன்... அவர்களின் திறமையை மதிக்கிறேன்... நான் நேர்மையாளன்.. என்று தம்பட்டம் அடித்துக்கொள்ள முயலும் ஆயாசக்காரர்கள்... இவர்கள் என்னதான் பெரிய மனதுக்காரர்கள் போல நடித்தாலும்.. உடன் இருந்து கவனிப்பவர்களால் மட்டுமே இவர்களது வக்கிர எண்ணத்தை உணரவும், அனுபவிக்கவும் முடியும்..

#ரொம்ப சீன் போடாதீங்கடே.... இயல்பா இருங்
கடே...