வியாழன், 20 செப்டம்பர், 2018

"நல்ல வாயன் சம்பாதிச்சத நாற வாயன் திங்கணுமா..."


சமகால போராளிகள் கேட்கும் கேள்வி... அதிலும் குறிப்பாக தொப்புள் கொடி வார்த்தைகளை வைத்து அரசியல் பிழைப்பு நடத்தும் தமிழ் தேசிய போராளிகள்...

அவர்கள் கேட்கும் கேள்வி.... இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (இத இங்கிலீஸ் ல ஜி டி பி ன்னு சொல்லி நம்மாளுங்க நாங்களும் பொருளாதார மேதைகள்தான்னு காட்டிக்குவாங்க ... ஆஹா... அண்ணாச்சி என்னென்னவோ பேசுறாக.... வெவரமான ஆளுதான்னு நாமளும் கைதட்டுவோம்...) பெரும்பகுதியை தென்னிந்தியாவின் நான்கு மாநிலங்களும் (புதுச்சேரியையும் சேர்த்தா அஞ்சு ) வடக்க நாலஞ்சு மாநிலங்களும் தான் உற்பத்தி செய்யுது... நாங்க உற்பத்தி செய்யுறத ஏன் மத்தவங்களுக்கு ஷேர் பண்ணனும்....?

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை.... எங்க முப்பாட்டன் திருவள்ளுவன் சொன்னது.... அப்புறம்... கூடி வாழ்ந்தால் கோடி நன்மை... யாதும் ஊரே ... யாவரும் கேளீர்ன்னு எங்க பாட்ட முப்பாட்டன் எல்லாம் ஆளுக்கொன்னா சொல்லி எங்க பண்பாட்டையும் நாகரீகத்தையும் வெளக்கு வெளக்குன்னு வெளக்கி இருக்காங்கன்னு மேடைபோட்டு பேசுவோம்.... சரி... இப்போ அத விட்டுடலாம்... அத இன்னொரு நாளைக்கு பேசலாம்...

இந்த கிராஸ் டொமெஸ்டிக் ப்ராடக்ட் ன்னு சொல்ற மொத்த உள்நாட்டு உற்பத்தியில அவங்க சொல்ற மாதிரி ஒட்டுமொத்த இந்தியாவுல முழு தென்னிந்தியாவும், வடக்க ஒரு அஞ்சாறு மாநிலங்களும் தான் இருக்கு..இது முழு உண்மை இல்லன்னாலும்.... ஒரு குறிப்பிட்ட முக்கிய பங்கு இருக்கு..... இதுக்கு காரணம் என்னன்னா.... இங்க இருக்கவன் எல்லாம், அறிவாளி, உழைப்பாளி, நேர்மையானவான்... அங்க இருக்கவனெல்லாம் சோம்பேறி... முட்டாள் ன்னு அர்த்தம் இல்ல...

இந்த மாநிலங்கள் அமைந்திருக்க கூடிய பூகோள அமைப்பு.... ஒவ்வொன்னா பார்க்கலாம்..

திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை, ஆவடி டாங்கி தொழிற்சாலை, பெல் நிறுவனங்கள், நெல்லையிலும், ஸ்ரீஹரிகேட்டாவிலும் அமைந்திருக்க கூடிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்கள், அணு மின் நிலையங்கள், சேலம் இரும்பு உருக்காலை... அப்படி இப்படின்னு நிறைய மத்திய அரசு நிறுவனங்கள் தென்னிந்தியப்பகுதியில் அமையப்பெற்ற காரணம்.... பூகோள அமைப்பில் இருக்கும் உறுதி செய்யப்பட பாதுகாப்பு.... என்னதான் இன்று கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்க கூடிய ஏவுகணைகள் வந்துவிட்டாலும், இவைகள் ஆரம்பிக்கப்பட்ட காலங்களில் பாகிஸ்தான், சீனா போன்ற எதிரி நாடுகள் எளிதில் தாக்கி விடாதபடிக்கு தூரமான இடம்... சுற்றளவு மொத்தமும் இந்தியா மட்டுமே ஆதிக்கம் செலுத்த கூடிய கடல்.... இடையில் இருக்கும் இலங்கைக்கு இந்தியாவை தவிர்த்து வேறெங்கும் போக முடியாத நிர்பந்தம்... ஆக.... வட இந்திய மாநிலங்களை காட்டிலும் ரிஸ்க் ஃபேக்டர் குறைந்த தென்னிந்திய பகுதிகளில் இப்படியான தொழிற்சாலைகளை அமைக்க மத்திய அரசு முடிவெடுத்தது....
மேலும்... இயற்கையாகவும், செயற்கையாகவும் அமைந்த துறைமுகங்கள், நிலக்கரி படிமம், சுண்ணாம்பு கற்கள், தங்க படிமங்கள்...போன்ற கனிம வளங்கள் இங்குதான் அமையப் பெற்றிருக்கிறது.... வைகை, காவிரி, தாமிரபருணி , பாலாறு, கிருஷ்ணா போன்ற வற்றாத நதிகளின் போக்கும் இங்குதான் இருக்கிறது.... இந்த இயற்கை வளங்கள், பாதுகாப்பு காரணங்களால் மத்திய அரசின் தொழிற்சாலைகள்.. எல்லாம் சேர்ந்துதான் தென்னிந்தியாவில் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்த முதலீடு செய்யப்பட்டது.... அப்படி மேம்படுத்தப்பட்ட உட்கட்டமைப்பு வசதிகளின் காரணமாக மேலும் மேலும் நிறைய தொழிலகங்கள் உருவானது....
ஆனால்...... இப்படி பாதுகாப்போ, இயற்கை வளங்களோ இல்லாத இடங்களை அதிக கவனம் எடுத்துக்கொள்ளாமல் இருப்பது இயல்பான விஷயம்.. அம்மாதிரியான இடங்களில் முதலீடும் இருக்காது என்பதுதான் எதார்த்தம்.... இயற்கை வளங்கள் நிறைந்ததால் ஏற்படுத்தப்பட்ட உட்கட்டமைப்பு வசதிகளை கொண்டு மட்டுமே இந்த மாநிலங்கள் ஜிடிபி யில் முக்கிய பங்காற்றுகிறதே தவிர.... இங்கு இருக்கும் மக்கள் மட்டுமே அறிவாளிகள், உழைப்பாளிகள் என்பதனால் இல்லை என்பதை இந்த பிரிவினைவாதிகளுக்கு யார் புரியவைப்பது...

ஒன்றாய் பிறந்த அண்ணன் தம்பிகளில் ஒருவர் ஊனமாக இருந்தால் அது அவர் தவறல்ல.... ஆனாலும்... இந்த பிரிவினைவாதிகள் உடன் அம்மாதிரி யாராவது பிறந்துவிட்டால்.... சம்பாதிக்கும் வயது வரும்வரை மொத்த குடும்பத்துடன் இருந்துவிட்டு, சம்பாதிக்க முடிந்த உடன் தான் சம்பாதிப்பது எனக்கு மட்டும்தான் என்ற குறுகிய நோக்கத்துடன் மட்டுமே வளர்ந்தவர்கள்....

ஒருவேளை இவர்கள் கேட்பதுபோல தனி நாடு கொடுத்துவிட்டால்.... இவர்களின் வழித்தோன்றல்கள் அடுத்த அரசியல் பிழைப்புக்கு என்ன செய்வார்கள்? தஞ்சாவூர் காரன் வெளைய வைக்கிற நெல்லை எல்லாருக்கும் கொடுக்கனுமா.... மதுர மல்லிய ஏன் சேலத்துக்காரனுக்கு கொடுக்கணும்... திருநெல்வேலி அல்வாவ ஏன் காஞ்சிபுரத்துகாரனுக்கு கொடுக்கணும்.... காஞ்சிபுரம் பட்ட ஏன் ராமநாதபுரத்துக்கு கொடுக்கணும்னு கெளம்புவானுங்க.... ஏன்னா இவனுங்க வளர்ந்த விதம் அப்படி...
இவர்களை எல்லாம் திருத்துவது நம் நோக்கமல்ல என்றாலும்... இந்த பொருளாதார மேதைகளின் உண்மை நோக்கத்தை சாமான்யர்களுக்கு புரியவைப்பதே இந்த சாமான்யனின் இந்த நீண்ட கட்டுரை...
நன்றி...

புகைப்படம் இணையத்திலிருந்து... புரிதலுக்காக மட்டும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக