வியாழன், 20 செப்டம்பர், 2018

இலவசத்திற்கு அலையும் மக்கள்

எங்கள் பகுதியில் திருமண நாளின் முதல் நாள் பெண் அழைப்பு... அதற்கும் முந்தின நாள் மூன்றான் தண்ணீர் ஊற்றுதல்.. என்றொரு சடங்கு நடக்கும்... (இது பெரும்பாலான வட தமிழக மாவட்டங்களில் திருமண நாளின் முந்தின இரவில் நலங்கு வைத்தல் என்று நடத்தப்படுகிறது...)
இந்த மூன்றாம் தண்ணீர் ஊற்றுதல் என்ற நிகழ்வில், ஊரில் இருக்கும் சுமங்கலி பெண்களை அழைத்து மாப்பிள்ளை/ பெண் (அவரவர் வீட்டில்) இருவருக்கும் எண்ணெய் தேய்க்க சொல்வார்கள்... எல்லோரும் எண்ணெய் தேய்ப்பதில்லை என்றாலும்.. வயது முதிர்ந்த சுமங்கலிப்பெண்கள் எண்ணெய் தேய்த்து ஆசி கூறுவார்கள்...

அவர்கள் இணையப்போகும் திருமண வாழ்க்கை அமோகமாய் அமைந்து, குழந்தை செல்வங்களை பெற்று அவர்கள் நன்றாக வாழ்வதற்கும், அதுவரை அவர்களை பிடித்திருந்த பீடைகள் ஒழிந்து அவர்கள் வாழ்வில் அமைதியும், பொறுப்பும் வரவும் வேண்டும் என்பதற்கான ஆசி கூறும் வைபவம் அது... (அடுத்த இரண்டு நாட்களில் ஜென்மசனி பிடிக்கும் என்பது நிதர்சனம் )
சரி... விஷயத்திற்கு வருவோம்...

முன்னெல்லாம் இம்மாதிரி விசேஷங்களுக்கு அழைக்கப்படும் பெண்களுக்கு கொஞ்சம் பூ, கொஞ்சம் வெற்றிலை -பாக்கு, கொஞ்சம் சர்க்கரை-பொட்டுக்கடலை... என்று கொடுப்பார்கள்... பின்னாளில் வலிக்காமல் வந்த வருமானம் கூட கூட.... தங்களின் செல்வ வாளிப்பை பறை சாற்றும் விதமாக எவர் சில்வர் தட்டு, சொம்பு போன்ற அன்பளிப்புகளை வழங்குவதை வாடிக்கையாக்கி விட்டார்கள்...
இதுதான் சொல்ல வந்த விஷயமா.. என்றால்.... இதுவும் இல்லை.... மேற்கொண்டு படிக்கவும்...

ஒரு வீட்டில் இரண்டு மருமகள்கள், ஒரு மாமியார் என மூன்று பேர் இருக்கும் பட்சத்தில்.... ஊரில்/உறவில் யாராவது இறந்தால்... மருமகள்களில் எவளாவது ஒருத்தி துக்கம் விசாரிக்க போகட்டும் என்று மாமியாரும்..... இந்த கெழட்டு முண்டம் சும்மாத்தான கெடக்கு.... எழவுக்கு போயிட்டு வரட்டும் என்று மருமகள்களும் ஒதுங்கிக்கொள்வார்கள்..... நாங்கல்லாம் ஒரே குடும்பம் தானே.... ஒரு ஆள் போனா போதும்....

ஆனால்... மேலே குறிப்பிட்ட மூனாம் தண்ணி விசேஷத்திற்கு மாமியார் தனியாகவும்... மருமகள்கள் தனியாகவும் செல்வார்கள்... மூன்று பேர் போனால் மூணு தட்டு கிடைக்கும்.. நாங்கல்லாம் தனித்தனியால்ல காச்சி குடிக்கிறோம்....

இதில் வசதியானவர், வசதி குறைந்தவர் என்ற பாகுபாடெல்லாம் கிடையாது... நம்மிடம் கோடி அளவு வசதி இருந்தாலும்.. இலவசமாய் கிடைக்கும் எவர் சில்வர் தட்டை விட்டுவிட்டால் ஜென்மமே வீண் என்ற மனநிலை...

இது எங்கள் பகுதி நடைமுறை என்றாலும்.... எங்கள் பகுதியில் மட்டும் இருக்கும் மனோநிலை அல்ல... ஒட்டு மொத்த தமிழகத்தையும் திராவிட சகதிகள் (சகதிகள் - எழுத்து பிழை அல்ல) இப்படித்தான் மாற்றி வைத்திருக்கின்றன....

இதை கழுவி களையப்போவது யார்... என்பதே மில்லியன் டாலர் கேள்வி....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக