வியாழன், 20 செப்டம்பர், 2018

கவனம் தேவை கதாசிரியர்களே -- மெர்சல்

தமிழ் சினிமாவின் கதைக்களம் என்று எடுத்துக்கொண்டால்... ஆரம்ப காலகட்டங்களில் பெரும்பாலும் புராண- இதிகாச கதைகளாகவும், கதை மாந்தர்களாகவுமே இருந்தார்கள்... பிறகு அது கொஞ்சம் மாற்றமடைந்து வரலாற்று கதாபாத்திரங்கள், மன்னர்கள் பக்கம் திரும்பியது...... இடையிடையே சுதந்திர போராட்டம் போன்றவற்றின் கதாநாயகர்களும் திரையில் மின்னி மறைந்தார்கள்...



புராண-இதிகாச கதாப்பாத்திரங்களில் சம்பவங்கள் எல்லாம் புராணங்கள்-இதிகாசங்களில் இருந்து எடுக்கப்பட்டாலும் வசனங்கள், காட்சி அமைப்புகள், கதை மாந்தர்கள் , இடங்கள் எல்லாம் கதாசிரியர்-இயக்குனர்களின் விருப்பப்படியும், கற்பனை திறனுக்கேற்பவும்தான் இருந்தன....

இது வரலாற்று புருஷர்களை குறிக்கும் விதமாக மாறியபொழுது அவைகளை பற்றிய/ அவர்களை பற்றிய பற்பல தேடல்கள் மூலம் முழுக்க முழுக்க உண்மையில்லை என்றாலும் ஆதரங்களுடனே தான் அந்த பாத்திரங்கள் உருவாக்கப்பட்டது... இவைகளில் ஏதேனும் தவறான தகவல்கள் இருபினும் அவைகளை பற்றிய தெளிந்த அறிவு உரிய சிலரால் மட்டுமே அந்த குறைகள் கண்டறியப்பட்டது... ஆனாலும் அதற்கு பெரிய எதிர்வினைகள் எதுவும் ஏற்பட வில்லை...

அதன் பிறகு தனிமனித வாழ்வியல், ஜாதீய வாழ்வியல், பூகோள வாழ்வியல் முறைகள் கதைக்களங்களாக உருவெடுத்தது... இதில் சில எதிர்ப்புகள் வந்தாலும் தனிமனித அனுபவம் சார்ந்த, சமகால கதாபாத்திரங்கள் உருவாக்கப்பட்டதால் இந்த பார்முலா வெற்றி பெற்றது...

ஸ்ரீதரின் கதைக்களமான மேல்தட்டு வர்க்க வாழ்வியல், விசு இயக்கிய குடும்ப கதைகள், கமல் நடித்த பதினாறு வயதினிலே , ரஜினி நடித்த ஆறிலிருந்து அறுபது வரை போன்ற படங்கள் எல்லாம் சமகால மனிதர்கள்.... அவர்களை போல் எல்லோரும் இல்லாவிட்டாலும் எங்கோ வாழும் நிஜ பாத்திரங்கள்....

மேலே குறிப்பிட்ட எல்லாம்.. நம் முன்னோர்களின் கற்பனைகள், நாம் பார்த்தறியாத பாத்திரங்கள்.... இவர்களை பற்றிய புனைவுகள் ரசிப்பதோடு நிறுத்திக்கொள்ளப்பட்டது....

சமகாலத்தில், ஆளும் ஆசையுடன் இருக்கும் சிலர் தங்களின் ஆளுமையை காட்டுவதாக நினைத்து அதற்கேற்ப கதைக்களங்களை தேடுகிறார்கள்... இதனை உணரும் கதாசிரியர்கள்/இயக்குனர்கள் இவர்களின் கால்சீட் வாங்குவதற்காக இவர்களை தேவலோக புருஷர்களையும், ஆளப்பிறந்தவர்களாயும் உருவகப்படுத்தி கதை சொல்ல நினைக்கிறார்கள்.. இதற்காக இவர்கள் சமகால பொது விஷயங்களை சேர்த்துக்கொள்கிறார்கள்...

பெருகிவிட்ட ஊடக தொடர்புகள், தெளிவான /தெளிவில்லாத அரசியல் அறிவு, தான் நினைத்ததை, அறிந்ததை உடனடியாக உலகத்தோரிடம் பகிர்ந்துகொள்ளும் வசதி என எல்லாம் பெற்ற சமகால சந்ததிகள், இப்படியான சமகால நடப்புகளை வைத்து சொல்லப்படும் கதைகளின் உண்மை தன்மையை உடனடியாய் அறிந்துகொள்வதால் வெகுவான விமர்சன கணைகளை தொடுக்க தொடங்கிவிடுகிறார்கள்...

தலைவனாக வேண்டும் என்ற விஜயின் ஆசை... விஜய் அவர்களை வைத்து படமெடுக்க வேண்டும் என்ற அட்லியின் ஆசை, இந்த இருவர் கூட்டணியை பயன்படுத்தி சம்பாதித்துவிட வேண்டும் என்ற தயாரிப்பாளரின் ஆசை.... இந்த மூன்று ஆசைகளும் கைகோர்த்து சமகால விஷயங்களை கலந்து சமைக்க முற்படும்பொழுது கூடுதல் கவனமாக இருந்திருக்க வேண்டும்....

புராண-இதிகாச-வரலாற்று தகவல்களை வைத்து படமெடுத்தவர்கள் எல்லாமே நிறைய தேடல்களுடன், பல்வேறு ஆய்வுகளுடன் படமெடுத்தார்கள்.... ஆனால் இந்த கூட்டணியோ.... வாட்ஸ் ஆப் வசனங்கள், டீக்கடையில் பேசிக்கொண்டிருந்தவர்களிடம் கிடைத்த தகவல்களை வைத்து அதை உண்மையாக நினைத்தபொழுது....

செம்ம அடி வாங்கி இருக்கிறார்கள்....

இனிமேலாவது மிக சரியான தகவல்களுடன், தேவைப்பட்டால் நிரூபிக்கும் ஆதாரங்களுடன் சமகால நடப்புகளை பற்றிய கதைக்களங்களை உருவாக்க வேண்டும்... இல்லை என்றால்... பேய்-ஆவி கதைகள், நாட்டாமை பொண்ண வேலைகாரன் லவ் பண்ற கதைகள் போன்ற சமூக சீர்திருத்த படங்களோடு நின்றுவிடுதல் நலம்...

இப்போது எல்லா இடங்களிலும் ஆட்கள் இருக்கிறார்கள்... அவர்கள் மிகுந்த புரிதல்களுடன் விபரமாய் வேறு இருக்கிறார்கள்... ஜாக்கிரதை...

இது சாமான்யனின் எச்சரிக்கை...!!..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக