வியாழன், 20 செப்டம்பர், 2018

துக்க மண்டபங்களும் சாத்தியம்தான்

திருமண,பெண்-மாப்பிள்ளை அழைப்பு , காதுகுத்து, பூப்புனித நீராட்டு போன்ற நல்ல விசேஷங்கள் பெரும்பாலும் வீட்டு வாசலில் பந்தலிட்டு, வாழை மரம் -தோரணங்கள் கட்டி, மின்விளக்கு அலங்காரங்கள் செய்தது, சாப்பாட்டிற்கென தனி பந்தல் அமைத்து, சமைக்க தனி கொட்டகை அமைத்து நடத்தப்பட்டன..

இதற்கென பந்தல்கால் நடுதல், சமையல் பாத்திரங்கள் எடுத்தல், நாற்காலி - மேஜைகள் ஏற்பாடு செய்தல்... பந்தலின் உட்புறம் வேட்டி கட்டுதல், அலங்கார தோரணங்கள் அமைத்தல், மின்விளக்கு அலங்காரம் செய்தல் என்று அல்லோகோலப்படும்... இவைகள் எல்லாம் ஒரு திருவிழா போல பரபரப்பாக இருக்கும்...

முன்பு இருந்த இந்த வழக்கம் தற்போது மண்டபங்களை நோக்கி நகர்த்தப்பட்டு விட்டது... மண்டபங்கள் என்றால் தனியான அலங்காரங்கள் தேவையில்லை... தனியான இருக்கைகள் எடுக்க வேண்டியதில்லை... சமையல் பாத்திரங்கள் ஏற்பாடு செய்ய வேண்டியதில்லை... சாப்பாட்டு பந்தலில் மேஜை-நாற்காலிகள் அமைக்கப்பட்டிருக்கும்...
பழைய காலம் மாதிரி பந்திப்பாய் விரிச்சு கீழ எல்லாம் உட்கார்ந்து சாப்ப்பிட முடியாது... சாப்பிடவும் கூடாது.... அது அசிங்கம்... நாமள்லாம் படிச்சவங்க... டீசண்டா பிகேவ் பண்ணனும்.... என்ற எண்ணமும்....

கூடவே...கொஞ்சம் செலவானாலும் அலைச்சல் மிச்சம்.... வண்டி பிடிக்க வேண்டாம்... ஆள் திரட்ட வேண்டாம்... அதோடு... விசேஷத்திற்கு வருபவர்களுக்கு போக்கு வரத்து வசதிக்கும் நன்றாக இருக்கும்...

இப்படியான மக்கள் மனநிலை மாற மாற... குக்கிராமங்களிலும் கூட திருமண மண்டபங்கள் பெருகி விட்டன...

சமகாலம் வரை நல்ல விசேஷங்களுக்கு மட்டுமே மண்டபங்களை நாடுகிறோம்... 



ஆனால்... சமகாலம் வரை மரணம் என்பது தொடர்பான சடங்குகள் எல்லாமே வீடுகளிலேயே நடத்தப்படுகிறது.. எதிர்காலத்தில் மக்கள் இதற்காகவும் மண்டபங்களை நாடக்கூடும் என்பது என் எண்ணம்...
(இது தற்காலத்தில் ஆட்சியாளர்களுக்கும், பெருந்தலைவர்களுக்கும் மட்டுமே நடைமுறையில் உள்ளது.... உதாரணம்- ராஜாஜி ஹால் )

யாரேனும் இறந்துவிட்டால் பூத உடலை ஒரு மண்டபத்தில் வைத்துவிட்டால் வருகிறவர்களுக்கு போக்கு வரத்து வசதி, இருக்கை வசதிகள் தனியாக ஏற்பாடு செய்ய வேண்டிய அவசியமில்லை என்றாலும்....

அதை எல்லாம் விட மிக முக்கியமாக......இது நம்ம கவுரைதைய காட்டுற விஷயமில்லையா... நாம எவ்ளோ டீசண்டான ஆளுங்க... கொஞ்சம் யோசிங்க மக்கா...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக