வியாழன், 20 செப்டம்பர், 2018

நம் கை கோர்த்திருந்து கரைந்து போனவர்கள்

ஒரு துயர சம்பவத்தின் வீடியோவை ஏற்கெனவே பலதடவை பார்த்திருந்தபோதும்... மீண்டும் ஒருமுறை பார்க்கலாம் என்று தோன்ற.... பார்க்க ஆரம்பித்தேன்...



சுய சோகங்களை ஒருபுறம் நகர்த்தி வைத்துவிட்டு.. அந்த காணொளியில் நடமாடும் மனிதர்களை கவனித்தேன்.... அடடா.. இதில் உயிரோடு நடமாடும் எத்தனை மனிதர்கள் இப்போது நம்மோடு இல்லை...

அதோ... கீழ வீட்டு ஆறுமுகம் மாமா... அதோ... கருத்தாண்டி வீட்டு அய்யா அண்ணன்... அதோ இந்திரஜித் அத்தான்... அதோ அருணாமூட்டு சங்கர் அத்தான்... அதோ.... என்னை தூக்கி வளர்த்த பாப்பாத்தி அம்மா.... அதோ என் மாமியார்...அதோ உமாபதி.... அதோ.... ஜெகன்னாத காலிங்கராயர்....

இன்னும் நிறைய நிறைய பேர்.... என் வாழ்வில் ஒரு அங்கமாய் நான் அடிக்கடியோ.. தினசரியோ சந்தித்த நபர்கள்... இவர்களை பற்றி நினைக்கும் போது ஒவ்வொருவருக்கும் தனித்தனியாய் நிறைய சம்பவ நினைவுகள்...

இவர்கள் எல்லாம் என் வாழ்வின் எதோ ஒரு நிமிடத்தில்... எதோ ஒரு மணியில்.... எதோ ஒரு நாளில் என்னுடன் பயணித்தவர்கள்.... இவர்களை எல்லாம் அந்த தீ தின்று தீர்த்துவிட்டது.... புகைப்படத்தில் மட்டுமே சிரிக்கிறார்கள் இப்போது...

வருடம் ஒரு முறை இதில் சிலருக்கு திவசம் என்ற நினைவுநாள் நினைவுகூறல் நிகழும்... சிலருக்கு அதுவும் சாத்தியமில்லை....

எங்கிருந்து வந்தோம் நாம்...எதை நோக்கி பயணிக்கிறோம் நாம்... என்னவாக போகிறோம்... இந்த பயணப்பாதையில் நம்மோடு சேர்ந்தது எது.. நாம் உதிர்த்தது எது... இப்படி எல்லாம் நிறைய தோன்றினாலும்... லௌதீக வாழ்வில் இயல்பான ஒரு பிரஜையாய் நாமும் கலந்துவிட்டபடியால்... இந்த சிந்தனைகளை அங்கேயே கத்தரித்துவிட்டு..... மீண்டும் அவர்களை பற்றிய நினைவுகளுக்குள் மூழ்கிக் கொண்டிருந்த பொழுது...

அந்த காணொளி முடிந்து வெகுநேரம் ஆகி இருந்தது...

மீண்டும் என்றாவது ஒருநாள் அந்த துயர சம்பவ வீடியோவை காண ஆவல் எழும்... அப்போது நம்மிடையே இல்லாமல் போன அந்த இருந்தவர்களின் நினைவுகள் மீண்டும் கிளர்த்தெழும்....

எத்தனையோ இலைகள் சருகுகளாய் உதிர்கிறது.... எத்தனயோ விதைகள் முளைக்கிறது....அதுதானே வாழ்க்கை...

உங்களில் நிறைய பேருக்கும் பிடிபட்டிருக்கும்... ஏனென்றால்... அதுபோல ஒரு துயர சம்பவம் உங்கள் வாழ்விலும் நடந்திருக்கும்... அதேதான்... என் திருமண காணொளி தான் அது...

ஆட்டுக்கறி- அத்தனை ஆபத்தானது அல்ல

எங்கள் பகுதியில் ஆலத்தூர் என்ற கிராமத்தில் இருக்கும் வீரனார் கோவில் பிரசித்தி பெற்றது... கிடா வெட்டி நேர்த்திக்கடன் செலுத்துவது இங்கு முக்கிய வழிபாட்டு முறை... ஆலத்தூர் மட்டுமல்லாது அக்கம் பக்கம் இருக்கும் கிராமத்தவர்களும் இந்த கோயிலுக்கு வருகை தந்து வழிபடுதல் வழக்கம்...

முன்பெல்லாம் வாரத்திற்கு இரண்டு நாட்கள் மட்டுமே நடந்து வந்த இந்த வழிபாட்டு முறை, பக்தர்கள் எண்ணிக்கை.. அதிலும் வசதியான பக்தர்களின் எண்ணிக்கை (ஒரு கிடாவெட்டு நேர்த்திக்கடனுக்கு குறைந்தது 50,000 முதல் ஒரு லட்சம் வரை செலவாகும் ) கூட கூட இரண்டு என்பது மூன்றாகி, நான்காகி.. தற்போது ஐந்து நாட்களும் இந்த கிடா வெட்டும் நேர்த்திக்கடன் வழிபாடு தொடர்கிறது...

இதில் இன்னொரு விஷயம்... இந்த கோயிலுக்கு நேர்ந்து வெட்டும் கிடாவை அங்கேயே சமைத்து சாப்பிட்டு விட்டுத்தான் வர வேண்டும்... ஆனால் தற்போது பெருமைக்கு எருமை மேய்த்தே பழகிய எம்மக்கள் அந்த கிடாக்கறியுடன் கூடுதலாய் கோழி வறுவல், முட்டை அவியல்,மீன் வறுவல் என்று அசத்துகிறார்கள்... (அலட்டுகிறார்கள் என்பதே சரி )

இவர்களின் அலட்டலை குறிப்பதல்ல இந்த பதிவின் நோக்கம்... இப்படியாக நேர்த்திகடன் விருந்தில் யார் வேண்டுமானாலும் வந்து சாப்பிடலாம் ..... ஆகவே அந்த கோயிலுக்கு அருகில் இருப்பவர்களும் கலந்துகொள்வார்கள்.. குறைந்தபட்சம் வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு கறி விருந்தில் இவர்கள் கலந்துகொள்வார்கள்....

எனக்குள் ஒரு கேள்வி எழுந்தது.... "ஆட்டுக்கறி சாப்பிட்றதையே நான் நிறுத்திட்டேன்.... கொலஸ்ட்ரால் கூடிப்போச்சு..." "ஆட்டுக்கறி அதிகமா சாப்பிடாதே.... " போன்ற பெருமைகளையும், அறிவுரைகளையும் அடிக்கடி கேட்டிருப்பதால்...

ஆமாம்.... இவர்கள் வாரத்திற்கு மூன்று-நான்கு முறை கிடாக்கறி சாபிடுகிறார்களே... இவர்களுக்கு கொலஸ்ட்ரால் பற்றிய பயம் இல்லையா??

உள்ளபடியே அது அவர்களை கேட்டால் தான் தெரியுமென்றாலும்... இந்த சமூகத்தை உற்று நோக்கும் பழக்கமிருப்பதால் ஒரு உண்மையை புரிந்துகொள்ள முடிந்தது... அப்படி அங்கு வந்து சாப்பிடுபவர்கள் எல்லோருமே உடல் உழைப்பாளிகள்... அவர்களுக்கு அந்த கிடாக்கறி உழைப்பதற்கான சக்தியை தான் தருமே தவிர... அது நிச்சயம் உயிர் குடிக்கும் கொழுப்பாய் மாறாது என்பதுதான் அந்த உண்மை...

மேலும்.... நம் கிராம பகுதியில் வளர்க்கப்படும் ஆடுகள் நூற்றுக்கு நூறு இலை-தழைகளை மட்டுமே உணவாக கொள்கின்றன.... எவ்வித ரசாயன ஊக்க மருந்துகளும் இவைகளுக்கு கொடுக்கப்படுவதில்லை....

உள்ளபடியே பார்த்தால் எல்லோரும் பயப்படுத்தும் அளவிற்கு ஆட்டுக்கறி ஒன்றும் அபாயகரமானதல்ல.... பிராய்லர் கோழிகளை விட பாதுகாப்பானது... ரசாயன பயமில்லாதது....

என்ன.... கொஞ்சம் உடலை வருத்தி வேலை செய்யணும்... வியர்க்க வைக்கணும்.... அவ்ளோதான்...

குறிப்பு: - தங்களின் கிடா விருந்து அழைப்புகள் இவ்விடம் அன்புடன் ஏற்றுக்கொள்ளப்படும்...

விஷ வேர்கள்

பெரும்பாலும் கையூட்டு வாங்கும் அலுவலர்கள் (!!??) சொல்லும் காரணம்.... "நான் எவ்ளோ செலவு பண்ணி இந்த வேலைக்கு வந்திருக்கேன் தெரியுமா...??"
அதாவது இவர் தற்போது வகிக்கும் பதவிக்கு வருவதற்காக இவர் ஒரு பெருந்தொகையை கையூட்டாக கொடுத்து இருக்கிறார்... அந்த தொகையை ஈடுகட்டத்தான் இவர் கையூட்டு வாங்குகிறாராம்....



இதே போல மருத்துவ கல்வி கற்க இடம் வாங்க பெருந்தொகைகளை கொடுத்துவிட்டு பிறகு அவர் கல்லூரியில் இடம் வாங்கித்தராமல் ஏமாற்றி விட்டார் என்று ஒருவர் மீது ஒரு கும்பல் புகார் தெரிவித்து பிறகு சம்மந்தப்பட்டவர் கைது செய்யப்பட்டதும் நினைவிருக்கலாம்...

நான் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி சொல்கிறேன்... இப்படி கையூட்டு வாங்குபவர்களை மட்டும் கைது செய்தால் போதாது.... கையூட்டு கொடுப்பவர்களையும் கைது செய்ய வேண்டும்.... இன்று கையூட்டு கொடுத்து பதவிக்கு வருபவர் பின்னாளில் இதே காரணத்தை சொல்லி பெரிய அளவில் கையூட்டு வாங்குவார் என்பது மிக நிச்சயம்.... மேலும்.... இவரிடம் பணம் இருக்கும் ஒரே காரணத்தால் தகுதியான யாரோ ஒருவருக்கு போக வேண்டிய வாய்ப்பை இவர் தட்டிப்பறித்திருக்கிறார் என்பதும் உறுதியாகிறது....

இவர்களை முளையிலேயே கிள்ளாவிட்டால் பின்னாளில் இவர்களால் பொது நிர்வாகம் சீரழியும்.....

பாரம்பரிய உணவும் ஆபத்தே...

பாரம்பரிய உணவுகள் உண்பது தற்போது பேஷனாகி வருகிறது... இதை இப்போது பேஷனாக்கும் அதே கும்பல் தான் சில-பல வருடங்கள் முன்பு பீட்சாவையும், பர்க்கரையும் அறிமுகம் செய்து கேழ்வரகு கூழ், கம்பஞ்சோறு உண்பவனை எல்லாம் "காட்டான்"களாக அடையாளப்படுத்தியது...

சரி... விஷயத்திற்கு வருவோம்... நம் முன்னோர்கள் உணவாக கொண்ட கம்பு, கேழ்வரகு, குதிரை வாலி, திணை, சாமை போன்ற சிறுதானிய உணவுகளை அதிகம் எடுத்துக்கொண்டார்கள்... இதிலிருந்து கிடைக்கும் அபரிமிதமான சக்தியை கொண்டே நாள் முழுதும் கடின உழைப்பை மேற்கொண்டார்கள்..

ஏர் உழுதல், வரப்பு வெட்டுதல், களை எடுத்தல், நடவு நடுதல், கதிர் அறுத்தல், அம்மி, ஆட்டுக்கல்லில் மசாலா/மாவு அரைத்தல், கிணற்றில் தண்ணீர் இறைத்தல், வெகு தொலைவில் இருந்து தலை-இடுப்பு-கை என மூன்று குடங்களில் தண்ணீர் கொண்டு வருதல்.... வெகுதூரம் நடை பயணம் மேற்கொள்ளுதல்... அப்புறம்.. சைக்கிள் ஒட்டுதல்.... இவை எல்லாம் அன்றாட வேலைகளாக இருந்தது.... இப்படியாகப்பட்ட கடின உழைப்பிற்கு தேவையான சக்தியை அந்த சிறுதானியங்கள் கொடுத்தது....

ஆனால்.... இன்று விவசாயமற்றுப்போன நிலையில் .. அல்லது.. இயந்திரங்களை முன்னிறுத்தி விவசாயம் செய்கின்ற நிலையில்.... , மிக்சி, கிரைண்டர், ஓவர்ஹெட் வாட்டர் டாங்க், கார்/மோட்டார் சைக்கிள்.. என எல்லா வேலைகளுமே மனித உடலை கொஞ்சம் கூட அலட்டாத வகையில் வாழ பழக்கி இருக்கிறது....
மேலும்... நவீன தலைமுறை உடலுழைப்பை துறந்து புத்தியை வைத்து சம்பாதிக்கும் பழக்கத்திற்கும் வந்து விட்டது...

இந்த நிலையில்.... ஒரு நாள் முழுதும் உடலுழைக்க சக்தியை கொடுத்த அந்த சிறுதானியங்கள் , இந்நாளைய உடலுழைப்பட்ற வாழ்க்கைக்கு எவ்விதம் பொருந்தும்??




அந்த சிறுதானியங்களில் பெறப்படும் அபரிமிதமான சக்தி "எரிக்கப்பட" இன்று உடல் உழைப்பில்லாத நிலையில்... அப்படி கிடைத்த சக்தி என்னவாகும்?? கொழுப்பாக மாற்றி உடலில் சேமிக்கப்படும் தானே?? இது உடலிற்கு நல்லதா??? இது கெடுதல் ஏற்படுத்தாதா??

நாம் எப்படி பழைய உழைப்பிற்கு தயாராக இல்லையோ.... அதே போல பழைய உணவும் நமக்கு பொருந்தாத உணவாகி விட்டது...

பர்க்கரையும், பீட்சாவையும் எப்படி நாகரீகம் என்று நம்ப வைத்து அறிமுகம் செய்தார்களோ... அந்த முட்டாள் தனத்திற்கு சற்றும் குறைந்ததல்ல இன்று பாரம்பரிய உணவு என்பதும்....

இறைவன் படைப்பு நியதியில் அந்தந்த பகுதியில் வாழும் மக்களுக்கேற்ற உணவே அந்தந்த பகுதியில் விளையவும், அதற்கு தேவையான அளவு அந்த மக்கள் உழைக்கவும் வாய்ப்பிருந்தது.... மனிதன் எப்போது தங்கள் வாழிடங்கள், உணவு முறைகள் எல்லாவற்றையும் மாற்றிக்கொண்டானோ.... அப்போதே அந்த நியதி உடைந்து விட்டது...

இப்போது "நான் பாரம்பரிய காவலன்" என்பது சுத்த கோமாளித்தனம்... ஆபத்தை வேறொரு பரிமாணத்தில் வரவழைக்கும் முட்டாள்தனம்...

எல்லோருக்கும் தெரிஞ்சதுதான்

சமகால அரசியல் தலைவர்களின் பித்தலாட்டங்கள்... கொள்கை-ஒழுக்க பிறழ்வுகள் தெரியாதவர்கள்தான் அவர்கள் நடத்தும் கட்சிகளில் இருகிறார்களா??

கிராம-ஒன்றிய-வட்ட-நகர-மாவட்ட பொறுப்பில் இருப்பவர்கள் என எல்லோருமே முட்டாள்களா என்ன?? தங்கள் கட்சி தலைமை/இரண்டாம் கட்ட/ மூன்றாம் கட்ட என அடுத்தடுத்த நிலை தலைவர்கள் அவர்களின் சக்திக்கேற்ற பித்தலாட்டங்களை செய்வதை அறியாத அளவிற்கு ஞானமற்றவர்களா என்ன??

அதுதான் இல்லை..... இவர்கள் நம்மை எல்லாம் விட பெரிய சிந்தனையாளர்கள், அறிவாளிகள்...

இவர்களது தலைவர்களை பற்றிய மோசமான செய்திகள் நமக்கு எவ்வளவு தெரியுமோ... அதை விட பன்மடங்கு கூடுதலாக தெரிந்தவர்கள்.... ஆனால் அவை எல்லாம் தெரிந்தும் சம்மந்தப்பட்டவரை "தலைவா.... வாழ்க.." என்று இவர்களால் கோஷம் போட முடிகிறதென்றால்... நம் நாட்டில் வாழ்க்கை முறை அவ்வளவு கேவலமாக இருக்கிறதென்றும்.... அந்த கேவலமான வாழ்க்கை முறையை தம் வசதிக்கேற்ற திருப்ப இவர்களுக்கு தெரிந்திருக்கிறது என்றும் தான் பொருள்...

ஆம்.... ஒரு பொதுவான கருத்தை உரக்க பேச வேண்டுமென்றால்... இங்கே அரசியல் பின்புலம் தேவையாயிருக்கிறது.... தொழில் செய்ய அரசியல் பின்புலம் தேவையாயிருகிறது.... சட்டத்தை மீறவும், குற்றங்களை செய்துவிட்டு தப்பிக்கவும் அரசியல் பின்புலத்தால் முடிகிறது... இதை எல்லாம் விட சமயங்களில் சாலையில் நடக்கவே அரசியல் பின்புலம் தேவையாக இருக்கிறது....

இப்படி ஒரு பின்புலத்தை தனி மனிதனால் / நம்மால் ஏற்படுத்திக்கொள்ள முடியாது.... அதற்கு ஒரு பெரிய அறிமுகம் தேவையாயிருக்கிறது....

தமிழ் வியாபாரம் செய்தோ, சினிமாவில் நடித்தோ, ஜாதி மக்களை ஒருங்கினைத்தோ கிடைத்த பரவலான அறிமுகத்தை/பிரபல்யத்தை வைத்து யாரோ ஒருவர் ஏற்படுத்தி வைத்திருக்கும் அரசியல் கட்சி என்ற பின்புலத்தை கொண்டு இயங்கும்போது இயல்பாக ஒரு பாதுகாப்போ, சம்பாதிப்பதற்கான வழியோ கிடைக்கிறது....

அதனால் தான் அவர்கள் "தலைவன் வாழ்க" என்று போலியாக குரல் கொடுத்தாவது அந்தந்த கட்சியில் இருக்கிறார்கள்..

மற்றபடி அவர்களுக்கு எல்லாம் தெரியும்...

என்ன.... இதற்காக அவர்கள் மனச்சாட்சியை அடகு வைத்திருக்கிறார்கள்.... அவ்வளவுதான்...

நமக்கு அம்மாதிரியான பின்புல அவசியம் இல்லாததால் மனச்சாட்சிக்கு விரோதமாக எந்த அரசியல்வாதியையுமே தலைவனாக ஏற்க முடியவில்லை...

துக்க மண்டபங்களும் சாத்தியம்தான்

திருமண,பெண்-மாப்பிள்ளை அழைப்பு , காதுகுத்து, பூப்புனித நீராட்டு போன்ற நல்ல விசேஷங்கள் பெரும்பாலும் வீட்டு வாசலில் பந்தலிட்டு, வாழை மரம் -தோரணங்கள் கட்டி, மின்விளக்கு அலங்காரங்கள் செய்தது, சாப்பாட்டிற்கென தனி பந்தல் அமைத்து, சமைக்க தனி கொட்டகை அமைத்து நடத்தப்பட்டன..

இதற்கென பந்தல்கால் நடுதல், சமையல் பாத்திரங்கள் எடுத்தல், நாற்காலி - மேஜைகள் ஏற்பாடு செய்தல்... பந்தலின் உட்புறம் வேட்டி கட்டுதல், அலங்கார தோரணங்கள் அமைத்தல், மின்விளக்கு அலங்காரம் செய்தல் என்று அல்லோகோலப்படும்... இவைகள் எல்லாம் ஒரு திருவிழா போல பரபரப்பாக இருக்கும்...

முன்பு இருந்த இந்த வழக்கம் தற்போது மண்டபங்களை நோக்கி நகர்த்தப்பட்டு விட்டது... மண்டபங்கள் என்றால் தனியான அலங்காரங்கள் தேவையில்லை... தனியான இருக்கைகள் எடுக்க வேண்டியதில்லை... சமையல் பாத்திரங்கள் ஏற்பாடு செய்ய வேண்டியதில்லை... சாப்பாட்டு பந்தலில் மேஜை-நாற்காலிகள் அமைக்கப்பட்டிருக்கும்...
பழைய காலம் மாதிரி பந்திப்பாய் விரிச்சு கீழ எல்லாம் உட்கார்ந்து சாப்ப்பிட முடியாது... சாப்பிடவும் கூடாது.... அது அசிங்கம்... நாமள்லாம் படிச்சவங்க... டீசண்டா பிகேவ் பண்ணனும்.... என்ற எண்ணமும்....

கூடவே...கொஞ்சம் செலவானாலும் அலைச்சல் மிச்சம்.... வண்டி பிடிக்க வேண்டாம்... ஆள் திரட்ட வேண்டாம்... அதோடு... விசேஷத்திற்கு வருபவர்களுக்கு போக்கு வரத்து வசதிக்கும் நன்றாக இருக்கும்...

இப்படியான மக்கள் மனநிலை மாற மாற... குக்கிராமங்களிலும் கூட திருமண மண்டபங்கள் பெருகி விட்டன...

சமகாலம் வரை நல்ல விசேஷங்களுக்கு மட்டுமே மண்டபங்களை நாடுகிறோம்... 



ஆனால்... சமகாலம் வரை மரணம் என்பது தொடர்பான சடங்குகள் எல்லாமே வீடுகளிலேயே நடத்தப்படுகிறது.. எதிர்காலத்தில் மக்கள் இதற்காகவும் மண்டபங்களை நாடக்கூடும் என்பது என் எண்ணம்...
(இது தற்காலத்தில் ஆட்சியாளர்களுக்கும், பெருந்தலைவர்களுக்கும் மட்டுமே நடைமுறையில் உள்ளது.... உதாரணம்- ராஜாஜி ஹால் )

யாரேனும் இறந்துவிட்டால் பூத உடலை ஒரு மண்டபத்தில் வைத்துவிட்டால் வருகிறவர்களுக்கு போக்கு வரத்து வசதி, இருக்கை வசதிகள் தனியாக ஏற்பாடு செய்ய வேண்டிய அவசியமில்லை என்றாலும்....

அதை எல்லாம் விட மிக முக்கியமாக......இது நம்ம கவுரைதைய காட்டுற விஷயமில்லையா... நாம எவ்ளோ டீசண்டான ஆளுங்க... கொஞ்சம் யோசிங்க மக்கா...

சராசரி குடும்பஸ்தன் பயம்

இதோ தெரிகிறது சென்னை... எப்போதுமே எனக்கு மிரட்சியை தரும் சென்னை இப்போது பறவைப்பார்வையில்... முன்னிரவில் எங்களூர் ஏரிக்கரையில் இருக்கும் கருவேலமரத்தில் அடர்ந்து அமர்ந்திருக்கும் மின்மினி பூச்சிகள் மாதிரி வெளிச்ச புள்ளிகள்... நெருங்க நெருங்க.... வெளிச்சம் விரிகிறது...

அந்த இண்டிகோ நிறுவன இயந்திர பறவை எங்களையும் சுமந்துகொண்டு தாழ... தாழ..... இன்னும் தாழவென தரையிறங்குவதற்கான முஸ்தீபுகளில் இருக்கிறது... அதோ..... மெரீனா கடற்கரை.... அதோ.... அண்ணா சாலை.... அதோ... அந்நாளில் என்னுடன் அன்பாய் பழகி மாரடைப்பால் காலமான அன்புசிவன் அண்ணா வேலை செய்த ஸ்பிக் டவர்...அதோ.... கிண்டி மேம்பாலம்... ஹா... அதோ மீனம்பாக்கம் வானூர்தி நிலையம்... அதோ விமான ஓடுபாதை.....

மடியில் அமர்ந்திருக்கும் ஆதிக்கு எதுவும் புரியாவிட்டாலும் நான் முணுமுணுக்கிறேன்... இருவரும் கண்ணாடி வழியே வேடிக்கை பார்த்துக்கொண்டே இருக்கிறோம்.... இன்னும் சில வினாடிகளில் இந்த விமானம் தரை தொட்டு ஓடும்... என்ற எங்கள் எண்ணம் அடுத்த வினாடியே மாறியது...

ஆம்.... ஓடுபாதையை தொடப்போகும் சமயம் மீண்டும் விமானம் மேல் நோக்கி எழும்பி பறக்க ஆரம்பித்தது... ஏன்... என்னாச்சு.... எதுவும் பிரச்சினையா... விமான பயணிகளின் முகங்களில் பயம், பீதி, கலவரம் , சந்தேகம்... எதிர்பார்ப்பு என கலந்துகட்டிய பாவங்கள்...

மேலெழும்பிய விமானம் மீண்டும் வங்காள விரிகுடாவின் மீதும்... சென்னை நகர் மீதும் சற்றேறக்குறைய இருபது நிமிடங்கள் வட்டமிட.... மீண்டும்.... அதோ..... மெரீனா கடற்கரை.... அதோ.... அண்ணா சாலை.... அதோ... அந்நாளில் என்னுடன் அன்பாய் பழகி மாரடைப்பால் காலமான அன்புசிவன் அண்ணா வேலை செய்த ஸ்பிக் டவர்...அதோ.... கிண்டி மேம்பாலம்..

ஆனால்... அரை மணி நேரம் முன்பாக இருந்த அந்த ஆச்சர்ய மகிழ்ச்சி இம்முறை சற்று குறைந்திருந்தது... இன்னும் சொல்லப்போனால் இல்லாமலே இருந்தது....



ஏதேனும் இயந்திரக் கோளாறாய் இருக்குமோ... விமானத்தின் சக்கரம் வெளியில் வராமல் சிக்கி இருக்குமோ.... ரன்வே கிளியர் இல்லை என்றால் விமானிக்கு சிக்னல் கிடைத்திருக்காதே..... பிறகெப்படி அவர் ஓடுபாதை வரை வருவார்.... இல்லை... எதோ பிரச்சினைதான்... பார்க்கலாம்... எப்போதுமே மூன்றாவது கோணத்திலேயே யோசித்து பழகிய மனசு... இப்போதும் அப்படியே....

பொதுவாக விமான , ரயில் பயணங்களில் காப்பீடு செய்யாமல் பயணிப்பதில்லை என்றாலும்... இம்முறை குடும்பத்துடன் இதே விமானத்தில்... காப்பீட்டை என்ன செய்ய...

அட்ரினல் சுரப்பிகள் அதி வேகமாய் வேலை செய்தன...

அடுத்த இருபது நிமிடத்தில் ஒரு பெரிய குலுங்கலுடன் அந்த அல்லாய் பறவை ஓடுபாதையை தொட்டு உலா வந்து இளைப்பாறியது....
அப்ப்பாடா.... தப்பிச்சோம்டா....

மீண்டும் அதே இண்டிகோ... காப்பீடு செய்திருக்கிறேன்... இப்போது தனி... அதனால் கவலை இல்லை...

கவனம் தேவை கதாசிரியர்களே -- மெர்சல்

தமிழ் சினிமாவின் கதைக்களம் என்று எடுத்துக்கொண்டால்... ஆரம்ப காலகட்டங்களில் பெரும்பாலும் புராண- இதிகாச கதைகளாகவும், கதை மாந்தர்களாகவுமே இருந்தார்கள்... பிறகு அது கொஞ்சம் மாற்றமடைந்து வரலாற்று கதாபாத்திரங்கள், மன்னர்கள் பக்கம் திரும்பியது...... இடையிடையே சுதந்திர போராட்டம் போன்றவற்றின் கதாநாயகர்களும் திரையில் மின்னி மறைந்தார்கள்...



புராண-இதிகாச கதாப்பாத்திரங்களில் சம்பவங்கள் எல்லாம் புராணங்கள்-இதிகாசங்களில் இருந்து எடுக்கப்பட்டாலும் வசனங்கள், காட்சி அமைப்புகள், கதை மாந்தர்கள் , இடங்கள் எல்லாம் கதாசிரியர்-இயக்குனர்களின் விருப்பப்படியும், கற்பனை திறனுக்கேற்பவும்தான் இருந்தன....

இது வரலாற்று புருஷர்களை குறிக்கும் விதமாக மாறியபொழுது அவைகளை பற்றிய/ அவர்களை பற்றிய பற்பல தேடல்கள் மூலம் முழுக்க முழுக்க உண்மையில்லை என்றாலும் ஆதரங்களுடனே தான் அந்த பாத்திரங்கள் உருவாக்கப்பட்டது... இவைகளில் ஏதேனும் தவறான தகவல்கள் இருபினும் அவைகளை பற்றிய தெளிந்த அறிவு உரிய சிலரால் மட்டுமே அந்த குறைகள் கண்டறியப்பட்டது... ஆனாலும் அதற்கு பெரிய எதிர்வினைகள் எதுவும் ஏற்பட வில்லை...

அதன் பிறகு தனிமனித வாழ்வியல், ஜாதீய வாழ்வியல், பூகோள வாழ்வியல் முறைகள் கதைக்களங்களாக உருவெடுத்தது... இதில் சில எதிர்ப்புகள் வந்தாலும் தனிமனித அனுபவம் சார்ந்த, சமகால கதாபாத்திரங்கள் உருவாக்கப்பட்டதால் இந்த பார்முலா வெற்றி பெற்றது...

ஸ்ரீதரின் கதைக்களமான மேல்தட்டு வர்க்க வாழ்வியல், விசு இயக்கிய குடும்ப கதைகள், கமல் நடித்த பதினாறு வயதினிலே , ரஜினி நடித்த ஆறிலிருந்து அறுபது வரை போன்ற படங்கள் எல்லாம் சமகால மனிதர்கள்.... அவர்களை போல் எல்லோரும் இல்லாவிட்டாலும் எங்கோ வாழும் நிஜ பாத்திரங்கள்....

மேலே குறிப்பிட்ட எல்லாம்.. நம் முன்னோர்களின் கற்பனைகள், நாம் பார்த்தறியாத பாத்திரங்கள்.... இவர்களை பற்றிய புனைவுகள் ரசிப்பதோடு நிறுத்திக்கொள்ளப்பட்டது....

சமகாலத்தில், ஆளும் ஆசையுடன் இருக்கும் சிலர் தங்களின் ஆளுமையை காட்டுவதாக நினைத்து அதற்கேற்ப கதைக்களங்களை தேடுகிறார்கள்... இதனை உணரும் கதாசிரியர்கள்/இயக்குனர்கள் இவர்களின் கால்சீட் வாங்குவதற்காக இவர்களை தேவலோக புருஷர்களையும், ஆளப்பிறந்தவர்களாயும் உருவகப்படுத்தி கதை சொல்ல நினைக்கிறார்கள்.. இதற்காக இவர்கள் சமகால பொது விஷயங்களை சேர்த்துக்கொள்கிறார்கள்...

பெருகிவிட்ட ஊடக தொடர்புகள், தெளிவான /தெளிவில்லாத அரசியல் அறிவு, தான் நினைத்ததை, அறிந்ததை உடனடியாக உலகத்தோரிடம் பகிர்ந்துகொள்ளும் வசதி என எல்லாம் பெற்ற சமகால சந்ததிகள், இப்படியான சமகால நடப்புகளை வைத்து சொல்லப்படும் கதைகளின் உண்மை தன்மையை உடனடியாய் அறிந்துகொள்வதால் வெகுவான விமர்சன கணைகளை தொடுக்க தொடங்கிவிடுகிறார்கள்...

தலைவனாக வேண்டும் என்ற விஜயின் ஆசை... விஜய் அவர்களை வைத்து படமெடுக்க வேண்டும் என்ற அட்லியின் ஆசை, இந்த இருவர் கூட்டணியை பயன்படுத்தி சம்பாதித்துவிட வேண்டும் என்ற தயாரிப்பாளரின் ஆசை.... இந்த மூன்று ஆசைகளும் கைகோர்த்து சமகால விஷயங்களை கலந்து சமைக்க முற்படும்பொழுது கூடுதல் கவனமாக இருந்திருக்க வேண்டும்....

புராண-இதிகாச-வரலாற்று தகவல்களை வைத்து படமெடுத்தவர்கள் எல்லாமே நிறைய தேடல்களுடன், பல்வேறு ஆய்வுகளுடன் படமெடுத்தார்கள்.... ஆனால் இந்த கூட்டணியோ.... வாட்ஸ் ஆப் வசனங்கள், டீக்கடையில் பேசிக்கொண்டிருந்தவர்களிடம் கிடைத்த தகவல்களை வைத்து அதை உண்மையாக நினைத்தபொழுது....

செம்ம அடி வாங்கி இருக்கிறார்கள்....

இனிமேலாவது மிக சரியான தகவல்களுடன், தேவைப்பட்டால் நிரூபிக்கும் ஆதாரங்களுடன் சமகால நடப்புகளை பற்றிய கதைக்களங்களை உருவாக்க வேண்டும்... இல்லை என்றால்... பேய்-ஆவி கதைகள், நாட்டாமை பொண்ண வேலைகாரன் லவ் பண்ற கதைகள் போன்ற சமூக சீர்திருத்த படங்களோடு நின்றுவிடுதல் நலம்...

இப்போது எல்லா இடங்களிலும் ஆட்கள் இருக்கிறார்கள்... அவர்கள் மிகுந்த புரிதல்களுடன் விபரமாய் வேறு இருக்கிறார்கள்... ஜாக்கிரதை...

இது சாமான்யனின் எச்சரிக்கை...!!..

டெங்கு பீதி

சில நேரங்களில் சில விஷயங்களை மக்களிடம் இருந்து மறைக்க வேண்டியது பொறுப்புள்ள அரசாங்கத்தின் கடமை.... சமீபத்திய விஷயம் "டெங்கு மரணங்கள்" 



சமீபத்திய ஊடக செய்திகள் எங்கெங்கு டெங்கு மரணம் நிகழ்ந்தாலும் தேடிப்பிடித்து படமாக்கி ஒளிபரப்பி ஜனநாயக கடமையாற்றிக்கொண்டிருக்கின்றன... நிஜமாகவே நிலைமை சற்று சீரியஸ்தான்... வந்த டெங்குவை ஒழிக்கவும், மேலும் பரவாமல் தடுக்கவும், இனிமேல் வராமல் பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டாலும்... பொதுமக்கள் ஒத்துழைப்பின்றி அந்த முயற்சி வெற்றி பெறாது....

நிலைமை கட்டுக்கடங்காமல் இருக்கிறது.... என்று நிச்சயம் எந்த ஒரு அரசும் ஒப்புக்கொள்ளாது... இதற்கு இரண்டு காரணங்கள் .... ஒன்று அரசின் கையாலாகாத தனத்தை அவர்களே ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.... அதே நேரம்... அரசு "ஆமாம்.... நிலைமை கவலைக்கிடமாகத்தான் இருக்கிறது... கட்டுப்படுத்த முடியாத அளவு பரவிக்கொண்டிருகிறது..." என்று சொன்னால்..... நிலைமை என்னாகும்?? மக்கள் பீதிக்குள்ளாவார்கள்.... அதை சமூக விரோதிகள் வதந்திகளை கிளப்பி மேலும் பயப்படுத்துவார்கள்.... சட்டம் ஒழுங்கு பிரச்சினை வரும்.... அதை தொடர்ந்த தனியார்/அரசு பொருளிழப்புகள் ஏற்படும்.... இன்னும் பற்பல இன்னல்கள் உருவாகும்... ஆகவே அரசு ஒப்புக்கொள்ளவே ஒப்புக்கொள்ளாது...

அதே நேரம்... இல்லை.... டெங்கு கட்டுக்குள்தான் இருக்கிறது... அப்படி இப்படி என்று மைக் கிடைத்தவர்கள் எல்லாம் உளறிக்கொண்டிராமல்... சம்மந்தப்பட்ட அமைச்சகம் ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை முடுக்கிவிட வேண்டும்.... தரமான மருந்துகள், போதுமான மருத்துவர்கள், செவிலியர்கள், கொசு ஒழிப்பு பணியாளர்கள், அதற்கான வாகன வசதிகள் என எல்லாவற்றையும் போர்க்கால அடிப்படையில் ஏற்படுத்த வேண்டும்...

அதே நேரம்.. இதெல்லாம் அரசின் கடமை... நமக்கு குறை சொல்வது மட்டுமே வேலை.... என்று இருந்துவிடாமல்.... ஆங்காங்கே இருக்கும் இளைஞர்/மகளிர் குழுக்கள், நற்பணி மன்றங்கள் மூலமாக அந்தந்த பகுதிகளில் தண்ணீர் தேங்கி இருக்கும் பிளாஸ்டில் டப்பா, தேங்காய் சிரட்டை, டயர்கள் இன்னும் பற்பல கொள்கலன்களை உடனடியாக நீரின்றி பார்த்துக்கொள்ள வேண்டும்... (ஏரி- குளங்கள்-ஆறுகளில் மட்டும் நீர் இல்லாமல் பார்த்துக்கொள்ள மணல் மாபியாக்களும் , ரியல் எஸ்டேட் தாதாக்களும் இருக்கிறார்கள்... )

மேலும்.... நிலவேம்பு கஷாயம், பப்பாளி இலைச்சாறு போன்ற நம் முன்னோர்கள் விட்டுச்சென்ற... டெங்கு வைரஸ்க்கு எதிரான , இரத்ததட்டுக்களை பெருக்க கூடிய மூலிகை மருந்துகளை பொதுமக்களுக்கு வழங்க முன் வர வேண்டும்...

எல்லா செய்தியையும் பிரேக்கிங் நியூசாக்கி பீதியை கிளப்புவதை வாடிக்கையாக கொள்ளாமல்... ஊடகங்கள் இம்மாதிரி விஷயங்களில் அரசுக்கு துணை நின்று மக்களிடம் ஒரு பாதுகாப்பான நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்...

வேறென்ன சொல்ல..... சாமான்யன் அவ்ளோதான் சொல்ல முடியும்....

"நல்ல வாயன் சம்பாதிச்சத நாற வாயன் திங்கணுமா..."


சமகால போராளிகள் கேட்கும் கேள்வி... அதிலும் குறிப்பாக தொப்புள் கொடி வார்த்தைகளை வைத்து அரசியல் பிழைப்பு நடத்தும் தமிழ் தேசிய போராளிகள்...

அவர்கள் கேட்கும் கேள்வி.... இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (இத இங்கிலீஸ் ல ஜி டி பி ன்னு சொல்லி நம்மாளுங்க நாங்களும் பொருளாதார மேதைகள்தான்னு காட்டிக்குவாங்க ... ஆஹா... அண்ணாச்சி என்னென்னவோ பேசுறாக.... வெவரமான ஆளுதான்னு நாமளும் கைதட்டுவோம்...) பெரும்பகுதியை தென்னிந்தியாவின் நான்கு மாநிலங்களும் (புதுச்சேரியையும் சேர்த்தா அஞ்சு ) வடக்க நாலஞ்சு மாநிலங்களும் தான் உற்பத்தி செய்யுது... நாங்க உற்பத்தி செய்யுறத ஏன் மத்தவங்களுக்கு ஷேர் பண்ணனும்....?

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை.... எங்க முப்பாட்டன் திருவள்ளுவன் சொன்னது.... அப்புறம்... கூடி வாழ்ந்தால் கோடி நன்மை... யாதும் ஊரே ... யாவரும் கேளீர்ன்னு எங்க பாட்ட முப்பாட்டன் எல்லாம் ஆளுக்கொன்னா சொல்லி எங்க பண்பாட்டையும் நாகரீகத்தையும் வெளக்கு வெளக்குன்னு வெளக்கி இருக்காங்கன்னு மேடைபோட்டு பேசுவோம்.... சரி... இப்போ அத விட்டுடலாம்... அத இன்னொரு நாளைக்கு பேசலாம்...

இந்த கிராஸ் டொமெஸ்டிக் ப்ராடக்ட் ன்னு சொல்ற மொத்த உள்நாட்டு உற்பத்தியில அவங்க சொல்ற மாதிரி ஒட்டுமொத்த இந்தியாவுல முழு தென்னிந்தியாவும், வடக்க ஒரு அஞ்சாறு மாநிலங்களும் தான் இருக்கு..இது முழு உண்மை இல்லன்னாலும்.... ஒரு குறிப்பிட்ட முக்கிய பங்கு இருக்கு..... இதுக்கு காரணம் என்னன்னா.... இங்க இருக்கவன் எல்லாம், அறிவாளி, உழைப்பாளி, நேர்மையானவான்... அங்க இருக்கவனெல்லாம் சோம்பேறி... முட்டாள் ன்னு அர்த்தம் இல்ல...

இந்த மாநிலங்கள் அமைந்திருக்க கூடிய பூகோள அமைப்பு.... ஒவ்வொன்னா பார்க்கலாம்..

திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை, ஆவடி டாங்கி தொழிற்சாலை, பெல் நிறுவனங்கள், நெல்லையிலும், ஸ்ரீஹரிகேட்டாவிலும் அமைந்திருக்க கூடிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்கள், அணு மின் நிலையங்கள், சேலம் இரும்பு உருக்காலை... அப்படி இப்படின்னு நிறைய மத்திய அரசு நிறுவனங்கள் தென்னிந்தியப்பகுதியில் அமையப்பெற்ற காரணம்.... பூகோள அமைப்பில் இருக்கும் உறுதி செய்யப்பட பாதுகாப்பு.... என்னதான் இன்று கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்க கூடிய ஏவுகணைகள் வந்துவிட்டாலும், இவைகள் ஆரம்பிக்கப்பட்ட காலங்களில் பாகிஸ்தான், சீனா போன்ற எதிரி நாடுகள் எளிதில் தாக்கி விடாதபடிக்கு தூரமான இடம்... சுற்றளவு மொத்தமும் இந்தியா மட்டுமே ஆதிக்கம் செலுத்த கூடிய கடல்.... இடையில் இருக்கும் இலங்கைக்கு இந்தியாவை தவிர்த்து வேறெங்கும் போக முடியாத நிர்பந்தம்... ஆக.... வட இந்திய மாநிலங்களை காட்டிலும் ரிஸ்க் ஃபேக்டர் குறைந்த தென்னிந்திய பகுதிகளில் இப்படியான தொழிற்சாலைகளை அமைக்க மத்திய அரசு முடிவெடுத்தது....
மேலும்... இயற்கையாகவும், செயற்கையாகவும் அமைந்த துறைமுகங்கள், நிலக்கரி படிமம், சுண்ணாம்பு கற்கள், தங்க படிமங்கள்...போன்ற கனிம வளங்கள் இங்குதான் அமையப் பெற்றிருக்கிறது.... வைகை, காவிரி, தாமிரபருணி , பாலாறு, கிருஷ்ணா போன்ற வற்றாத நதிகளின் போக்கும் இங்குதான் இருக்கிறது.... இந்த இயற்கை வளங்கள், பாதுகாப்பு காரணங்களால் மத்திய அரசின் தொழிற்சாலைகள்.. எல்லாம் சேர்ந்துதான் தென்னிந்தியாவில் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்த முதலீடு செய்யப்பட்டது.... அப்படி மேம்படுத்தப்பட்ட உட்கட்டமைப்பு வசதிகளின் காரணமாக மேலும் மேலும் நிறைய தொழிலகங்கள் உருவானது....
ஆனால்...... இப்படி பாதுகாப்போ, இயற்கை வளங்களோ இல்லாத இடங்களை அதிக கவனம் எடுத்துக்கொள்ளாமல் இருப்பது இயல்பான விஷயம்.. அம்மாதிரியான இடங்களில் முதலீடும் இருக்காது என்பதுதான் எதார்த்தம்.... இயற்கை வளங்கள் நிறைந்ததால் ஏற்படுத்தப்பட்ட உட்கட்டமைப்பு வசதிகளை கொண்டு மட்டுமே இந்த மாநிலங்கள் ஜிடிபி யில் முக்கிய பங்காற்றுகிறதே தவிர.... இங்கு இருக்கும் மக்கள் மட்டுமே அறிவாளிகள், உழைப்பாளிகள் என்பதனால் இல்லை என்பதை இந்த பிரிவினைவாதிகளுக்கு யார் புரியவைப்பது...

ஒன்றாய் பிறந்த அண்ணன் தம்பிகளில் ஒருவர் ஊனமாக இருந்தால் அது அவர் தவறல்ல.... ஆனாலும்... இந்த பிரிவினைவாதிகள் உடன் அம்மாதிரி யாராவது பிறந்துவிட்டால்.... சம்பாதிக்கும் வயது வரும்வரை மொத்த குடும்பத்துடன் இருந்துவிட்டு, சம்பாதிக்க முடிந்த உடன் தான் சம்பாதிப்பது எனக்கு மட்டும்தான் என்ற குறுகிய நோக்கத்துடன் மட்டுமே வளர்ந்தவர்கள்....

ஒருவேளை இவர்கள் கேட்பதுபோல தனி நாடு கொடுத்துவிட்டால்.... இவர்களின் வழித்தோன்றல்கள் அடுத்த அரசியல் பிழைப்புக்கு என்ன செய்வார்கள்? தஞ்சாவூர் காரன் வெளைய வைக்கிற நெல்லை எல்லாருக்கும் கொடுக்கனுமா.... மதுர மல்லிய ஏன் சேலத்துக்காரனுக்கு கொடுக்கணும்... திருநெல்வேலி அல்வாவ ஏன் காஞ்சிபுரத்துகாரனுக்கு கொடுக்கணும்.... காஞ்சிபுரம் பட்ட ஏன் ராமநாதபுரத்துக்கு கொடுக்கணும்னு கெளம்புவானுங்க.... ஏன்னா இவனுங்க வளர்ந்த விதம் அப்படி...
இவர்களை எல்லாம் திருத்துவது நம் நோக்கமல்ல என்றாலும்... இந்த பொருளாதார மேதைகளின் உண்மை நோக்கத்தை சாமான்யர்களுக்கு புரியவைப்பதே இந்த சாமான்யனின் இந்த நீண்ட கட்டுரை...
நன்றி...

புகைப்படம் இணையத்திலிருந்து... புரிதலுக்காக மட்டும்