வியாழன், 20 செப்டம்பர், 2018

ஆட்டுக்கறி- அத்தனை ஆபத்தானது அல்ல

எங்கள் பகுதியில் ஆலத்தூர் என்ற கிராமத்தில் இருக்கும் வீரனார் கோவில் பிரசித்தி பெற்றது... கிடா வெட்டி நேர்த்திக்கடன் செலுத்துவது இங்கு முக்கிய வழிபாட்டு முறை... ஆலத்தூர் மட்டுமல்லாது அக்கம் பக்கம் இருக்கும் கிராமத்தவர்களும் இந்த கோயிலுக்கு வருகை தந்து வழிபடுதல் வழக்கம்...

முன்பெல்லாம் வாரத்திற்கு இரண்டு நாட்கள் மட்டுமே நடந்து வந்த இந்த வழிபாட்டு முறை, பக்தர்கள் எண்ணிக்கை.. அதிலும் வசதியான பக்தர்களின் எண்ணிக்கை (ஒரு கிடாவெட்டு நேர்த்திக்கடனுக்கு குறைந்தது 50,000 முதல் ஒரு லட்சம் வரை செலவாகும் ) கூட கூட இரண்டு என்பது மூன்றாகி, நான்காகி.. தற்போது ஐந்து நாட்களும் இந்த கிடா வெட்டும் நேர்த்திக்கடன் வழிபாடு தொடர்கிறது...

இதில் இன்னொரு விஷயம்... இந்த கோயிலுக்கு நேர்ந்து வெட்டும் கிடாவை அங்கேயே சமைத்து சாப்பிட்டு விட்டுத்தான் வர வேண்டும்... ஆனால் தற்போது பெருமைக்கு எருமை மேய்த்தே பழகிய எம்மக்கள் அந்த கிடாக்கறியுடன் கூடுதலாய் கோழி வறுவல், முட்டை அவியல்,மீன் வறுவல் என்று அசத்துகிறார்கள்... (அலட்டுகிறார்கள் என்பதே சரி )

இவர்களின் அலட்டலை குறிப்பதல்ல இந்த பதிவின் நோக்கம்... இப்படியாக நேர்த்திகடன் விருந்தில் யார் வேண்டுமானாலும் வந்து சாப்பிடலாம் ..... ஆகவே அந்த கோயிலுக்கு அருகில் இருப்பவர்களும் கலந்துகொள்வார்கள்.. குறைந்தபட்சம் வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு கறி விருந்தில் இவர்கள் கலந்துகொள்வார்கள்....

எனக்குள் ஒரு கேள்வி எழுந்தது.... "ஆட்டுக்கறி சாப்பிட்றதையே நான் நிறுத்திட்டேன்.... கொலஸ்ட்ரால் கூடிப்போச்சு..." "ஆட்டுக்கறி அதிகமா சாப்பிடாதே.... " போன்ற பெருமைகளையும், அறிவுரைகளையும் அடிக்கடி கேட்டிருப்பதால்...

ஆமாம்.... இவர்கள் வாரத்திற்கு மூன்று-நான்கு முறை கிடாக்கறி சாபிடுகிறார்களே... இவர்களுக்கு கொலஸ்ட்ரால் பற்றிய பயம் இல்லையா??

உள்ளபடியே அது அவர்களை கேட்டால் தான் தெரியுமென்றாலும்... இந்த சமூகத்தை உற்று நோக்கும் பழக்கமிருப்பதால் ஒரு உண்மையை புரிந்துகொள்ள முடிந்தது... அப்படி அங்கு வந்து சாப்பிடுபவர்கள் எல்லோருமே உடல் உழைப்பாளிகள்... அவர்களுக்கு அந்த கிடாக்கறி உழைப்பதற்கான சக்தியை தான் தருமே தவிர... அது நிச்சயம் உயிர் குடிக்கும் கொழுப்பாய் மாறாது என்பதுதான் அந்த உண்மை...

மேலும்.... நம் கிராம பகுதியில் வளர்க்கப்படும் ஆடுகள் நூற்றுக்கு நூறு இலை-தழைகளை மட்டுமே உணவாக கொள்கின்றன.... எவ்வித ரசாயன ஊக்க மருந்துகளும் இவைகளுக்கு கொடுக்கப்படுவதில்லை....

உள்ளபடியே பார்த்தால் எல்லோரும் பயப்படுத்தும் அளவிற்கு ஆட்டுக்கறி ஒன்றும் அபாயகரமானதல்ல.... பிராய்லர் கோழிகளை விட பாதுகாப்பானது... ரசாயன பயமில்லாதது....

என்ன.... கொஞ்சம் உடலை வருத்தி வேலை செய்யணும்... வியர்க்க வைக்கணும்.... அவ்ளோதான்...

குறிப்பு: - தங்களின் கிடா விருந்து அழைப்புகள் இவ்விடம் அன்புடன் ஏற்றுக்கொள்ளப்படும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக